Advertisement

9

“என்னவோ கோபம் போ… அதெல்லாம் சொல்ல முடியாது” என்றாள் குழந்தைதனமாக…

வேலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்கும்… நிறைய வேலை வாங்குகிறார்களோ என்னவோ… அதனால் கோபமாகப் பேசுகிறாள் போல என்று தான் தண்டபாணிக்குத் தோன்றியது.

விருப்பம், திருமணம் என்றெல்லாம் அவன் சிறிதளவு கூட யோசிக்கவில்லை. என்னை நம்புங்க என்று அரவிந்த் எல்லோரிடமும் சொல்லும் நம்பிக்கையை நிறைய அரவிந்த் மேல் தண்டபாணி வைத்திருந்தான்.

அதனால் தன் தங்கையை அரவிந்த் விரும்பக்கூடும் என்று சிறிதளவும் யோசிக்கவில்லை.

“என்ன கீர்த்தி, நிறைய வேலை வாங்கறானா… அவன் இங்க வரும்போது செமத்தியா கவனிச்சு அனுப்பறேன்” என்றான் மறுபடியும் அவளை சமாதானப்படுத்தும் விதமாக…

“போடா தண்டம்” என்று அவனைத் திட்ட…

“என்னையேண்டி திட்டுற…”

“சும்மாதான், கடுப்படிக்காத, போனை வை” என்று வைத்தாள் கீர்த்தி.

ஏனோ எல்லோர் மீதும் எரிச்சலாக வந்தது… காரணம் அரவிந்தின் நடவடிக்கை. கீர்த்திக்கு அவளது நடவடிக்கை அவளுக்கே புரியவில்லை. அரவிந்த் விருப்பத்தை சொன்னான் என்று கோபமா… இல்லை அதன் பிறகு அதைப் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறானே என்று கோபமா… அவளுக்கே தெரியவில்லை.

அவ்வளவு தூரத்தில் இருந்து பேசும் தண்டபாணியிடம் எரிந்து விழுகிறோமே என்று அவள் மீதே அவளுக்கு கோபமாக வர… அவனை மறுபடியும் தொலைபேசியில் அழைத்தாள்.

“ஸாரி அண்ணா” என்றாள்.

“ஹேய் எதுக்கு ஸாரி, விடு கீர்த்தி. என்ன, என் குட்டி தங்கச்சி அவ இயல்புக்கு மாறா ஸாரி எல்லாம் கேட்கறா அதுவும் என்கிட்ட. ஏதாவது பிரச்சனையா கீர்த்தி… அண்ணாகிட்ட சொல்லுடா” என்றான் வாஞ்சையாக.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணா” என்றாள் அவசரமாக கீர்த்தி.

“அப்புறம் என்னடா கோபம்” என்று கனிவாகக் கேட்க…

கீர்த்திக்கு அழுகை வரும்போல இருந்தது எதற்கென்று தெரியாமலேயே “ப்ச்! ஒண்ணுமில்லை அண்ணா. நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள். குரலில் அவளையும் மீறி அழுகை எட்டிப் பார்த்தது.

பதறினான். “என்ன கீர்த்தி? என்னம்மா?” என்றான் பதட்டமாக.

“உன்னைப் பார்க்கணும் போல இருக்கு அண்ணா” என்று சமாளித்தாள்.

“இன்னும் ஒரு வருஷம் தான்… அடுத்த வருஷம் லீவ் எடுத்துட்டு வருவேன்டா அதுவரைக்கும் இப்படியெல்லாம் ஃபீல் பண்ணக்கூடாது என்ன? அதுக்கு முன்னாடியே என் குட்டி தங்கச்சிக்குக் கல்யாணம் வந்தா எப்படியாவது வந்துடுவேன்” என்று சூழலை இலகுவாக்க முயன்றான்.

அதற்குள் சற்று தேறிக் கொண்ட கீர்த்தி மறுபடியும் “சாரி அண்ணா… உன்னைத் தொந்தரவு பண்றேன்… இல்லை” என்றாள்.

“இல்லை, நீ என்னைத் தொந்தரவு பண்ணலை” என்றான் தண்டபாணி.

“ஒண்ணும் பிரச்சனையில்லையே கீர்த்தி” என்று ஏழு தடைவ கேட்ட பிறகே தொலைபேசியை வைத்தான்.

அவன் வைத்த பிறகும் அழுகையாக வந்தது. அவள் போனை வைத்தவுடனே தண்டபாணி அரவிந்திற்கு போனை அடித்தான்.

“என்னடா” என்று அரவிந்த் கேட்டவுடனே… “நான் உன்னைக் கேட்கணும் என்னடான்னு… என்னடா நடக்குது… கீர்த்திக்கு நிறைய வேலை குடுக்கறீங்களா இல்லை ஏதாவது திட்டுனீங்களா… இவ்வளவு அப்செட்டா இருக்கா… அழறாடா… நான் உன்னை அவளை பார்த்துக்க சொன்னேனே… அவளை கவனிக்கறதே இல்லையா” என்று பொரிய…

“அவளை மட்டும்தானேடா நினைச்சுட்டு இருக்கேன் இப்போல்லாம்” என்று மனதிற்குள் நினைத்தவன் வெளியே அதை சொல்லாமல்… “ஏன்டா என்ன ஆச்சு இப்படிக் கத்தற… அழறாளா” என்றான் அதிர்ச்சியாக…

“ஆமாம் எனக்குக் குரல்லயே நல்லா தெரியுது… என்னன்னு பாருடா… அப்பா அம்மா கிட்ட சொன்னனா இன்னும் அப்சட் ஆவாங்க…”

“ஒண்ணும் பிரச்சனையில்லை நான் பார்;க்கறேன் என்னன்னு நீ கவலைப்படாத” என்று அவனிடம் சமாதானம் அரவிந்த் சொன்னாலும் அழுகிறாளா என்று மனம் பதைத்தது.

“நான் பார்த்துட்டுக் கூப்பிடறேன்” என்று போனை வைத்தான்.

அடுத்த நாள் காலை எப்போது வரும் என்று இருந்தது அரவிந்திற்கு கீர்த்தியைப் பார்க்க…

காலையில் அவள் வரும் முன்னே இவன் ஷோ-ரூம் சென்று விட்டான்… அவள் வந்ததுமே அவன் பார்வை அவளைத் தழுவியது… லெமன் யெல்லோ சுடிதாரில் அழகுப் பதுமையாக இருந்தாள். கண்களில் எப்போதும் காணப்படும் உற்சாகம் இல்லை. கண்கள் சோர்வாக இருந்தது.

அவளுக்கு முன்னேயே அரவிந்த் அங்கே அமர்ந்திருந்ததைப் பார்த்தாள். அந்த ஒரு பார்வை அரவிந்தைப் பார்த்ததுடன் சரி… பின்பு அவன் இருந்த புறம்கூட அவள் கண்கள் திரும்பவில்லை.

அரவிந்தும் ஒரு பதினைந்து நிமிடம் தன்னை திரும்பி பார்ப்பாளா… பார்ப்பாளா என்று பார்க்க… திரும்பவேயில்லை.

அவனே அவளை கேபினுக்குள் அழைத்தான். வந்தாள்… கூப்பிட்டு விட்டு வந்தவளிடம் எதுவும் பேசாமல் அவளையே பார்வையால் அளக்க… கீர்த்திக்கு காலையிலேயே எரிச்சல் மண்ட ஆரம்பித்தது. அவனை பதிலுக்கு முறைத்துப் பார்த்தாள்.

இவன் பார்வையால் அளந்து கொண்டிருக்க… அவள் பார்வையால் முறைத்துக் கொண்டிருக்க. இப்படியே நிமிடம் கரைந்தது.

அவன் பேச்சை ஆரம்பிக்கவில்லை என்றவுடனே… அப்படியே திரும்பிப் போக கீர்த்தி எத்தனிக்க…

“நில்லு கீர்த்தி” என்று அருகில் வந்தான்.

அவன் அருகில் வரவும் கீர்த்தி பின் போக எத்தனிக்க…

“என்ன பண்ணுவன்னு இப்படி பயந்து பின்னாடி போற” என்று கேட்டான்.

மௌனமாகவே நின்றாள் கீர்த்தி, பதில் எதுவும் பேச முயற்சிக்கவில்லை.

“எதுக்கு தண்டபாணி கிட்ட அழுத” என்றான்.

இவனுக்கு எப்படித் தெரியும் என்பது போல கீர்த்தி பார்க்க…

“உங்கண்ணன் போன் பண்ணினான்” என்றான் அரவிந்த்.

“எதுக்கு கீர்த்தி அழுத? என்ன பிரச்சனை… உங்க அண்ணா வேலைலதான் ஏதோ பிரச்சனைன்னு பயப்படறான்.”

இதற்கும் பதில் பேசாமல்தான நின்றாள் கீர்த்தி.

அவள் கண்களில் தெரிந்த சோர்வு, அரவிந்தை அசைத்தது.

இன்னும் அவள் அருகில் வந்தவன், “சொல்லு கீர்த்தி” என்றான் அவளை மிகவும் நெருங்கி…

அவன் நெருங்கி வர வர… அவளையறியாமல் கீர்த்தி பின் போய் சுவரோடு தட்டி நின்றாள்.

“இன்னும் பின்னாடி போக முடியாது சொல்லு” என்று அவள் நேர் எதிர் மிக அருகில் வந்து நின்று கேட்க…

“எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. தள்ளி நில்லுங்க. யாராவது வந்துடப் போறாங்க.”

“யாரும் வரமாட்டாங்க… நீ ஏன் அழுத மொதல்ல அதுக்கு பதில சொல்லு.”

“இதென்ன கேள்வி… அழுகை வந்துச்சு அழுதேன்.”

“அதான் ஏன் அழுகை வந்துச்சு.”

“தெரியலை.”

“நான் உன்னை கஷ்டப்படுத்தறேனா.”

“தெரியலை” என்றால் அதற்கும்,

“நான் சொன்ன விஷயம் யோசிச்சியா… பதில் என்ன?”

அதற்கும் “தெரியலை” என்றாள் அவள்.

“இப்படி எல்லாத்துக்கும் தெரியலைன்னா என்ன சொல்ல” என்று சொல்லியபடி இன்னும் நெருங்கி வந்தான். இன்னும் ஒரு அடி முன் வைத்தால் கூட அவளோடு மோதி தான் நிற்க வேண்டும் என்ற அளவில் நெருங்கி வந்தான்.

அவள் இப்போது கண்களில் மிரட்சியோடு பார்க்க… “எதுக்கு இப்படி பயத்தோட என்னைப் பார்க்கற… அன்னைக்கும் இப்படித் தான் என்னைப் பார்த்த… என்னைப் பார்த்தா பயமாவா இருக்கு” என்று கேட்டான்.

மந்திரத்திற்கு கட்டுண்டவள் போல, “இல்லை” என்று தலையசைத்தாள்.

அவள் கைகளைப் பற்றி தன் கைகளுக்குள் ஏந்தியது போல வைத்தான். அவள் உருவ முற்பட… “ப்ளீஸ், கீர்த்தி நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு” என்க…

அவள் அமைதியாகவே நின்றாள். அதையே சம்மதமாக எடுத்தவன்… “எனக்கு இதுதான் லவ்வா தெரியலை… உன் ஞாபகம் தான் எனக்கு இப்போல்லாம் அதிகமா இருக்கு. அப்பா கல்யாணத்தை பத்தி பேசினப்போ உன் முகம் மட்டும் தான் எனக்கு ஞாபகம் வந்தது. உன்னோட தான் என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது… ரொம்ப நாள் எல்லாம் நான் உன்னை நினைச்சிட்டு இருக்கலை… அப்பா கல்யாணத்தப் பத்தி பேசினப்போ தோணினது தான். அதுக்கு அப்புறம் வேற எதையுமே நினைக்க முடியலை.”

“வேற யாராவதா நீ இருந்தா… இன்னும் சட்டுன்னு உங்க வீட்ல பேசியிருப்பேன். ஆனா நீ தண்டபாணியோட தங்கச்சி… அவன்கிட்ட சொல்லாம உன்கிட்ட சொன்னதே தப்பு மாதிரி தான் ஃபீல் பண்றேன். ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் யூ டெஸ்பரெட்லி” என்றான் கண்களில் காதலைத் தேக்கியபடி.

“அதுதான் ரொம்ப வேகமா உன்கிட்ட எனக்குக் காதல்னு தோணின உடனே பேச வைச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.”

“நான் ஊருக்குப் போறேன். நான் வர்ற வரைக்கும் ப்ளீஸ் எனக்காக வெயிட் பண்ணு. நான் அங்கே அவன் கிட்ட பேசி நான் வந்தவுடனே நம்ம கல்யாணம் நடக்கற மாதிரி பார்த்துக்கலாம். என்ன சொல்ற?”

“எனக்குத் தெரியலை… அது அம்மாகிட்ட, அப்பா கிட்ட, தண்டுகிட்ட எல்லார்கிட்டயும் கேட்கணும்” என்றாள் குரலில் கலக்கத்தோடு.

அவள் கலக்கத்தை உணர்ந்தான் தான், ஆனால் அதை வெளிக்காட்டாமல்… “நம்ம கல்யாணத்துக்கு அவங்க எல்லார்கிட்டயும் கேட்கலாம்… ஆனால் என் காதலுக்கு நீதான் பதில் சொல்லணும்” என்றான் அவள் கைகளைப் பிடித்தது பிடித்தபடி விடாமல்.

“எனக்குத் தெரியலை” என்றாள் கைகளை உருவ முயன்றபடி… அவன் கண்களைப் பார்க்காமல்…

“என்னைப் பார்த்து பதில் சொல்லு” என்று மெதுவாக அதட்டினான்.

“அப்புறம் சொல்லவா” என்றாள் மறுபடியும் கலக்கத்தோடு…

“எப்புறம்” என்றான்.

“நீங்க தண்டுகிட்ட, அப்பா, அம்மாகிட்ட பேசினதுக்கு அப்புறம்” என்றாள் தயக்கத்தோடு.

“அது கல்யாணத்துக்கு அப்போ சரின்னு சொல்லு, இப்போ என் காதலுக்கு சொல்லு” என்றான் குறும்போடு…

“அதெல்லாம் சொல்ல முடியாது” என்றாள் பதிலுக்கு இப்போது சற்று தைரியமாக கீர்த்தி…

அவள் குரலில் எட்டிப் பார்த்த தைரியம் அரவிந்திற்கு சற்று உற்சாகத்தைக் கொடுக்க… அவள் கைகளை விட்டு அவள் இருபுறமும் கைகளை ஊன்றி நின்றான்.

“நீ சொல்லற வரைக்கும் நான் கை எடுக்க மாட்டேன்”

“நான் கத்துவேன்.”

“கத்து.”

“பச், கையை எடுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சலில் இறங்கினாள்.

“ஒரே ஒரு ஐ லவ் யூ சொல்லு விட்டுடறேன்.”

“முடியாது” என்றாள் தீர்மானமாக…

“முடியாது” என்றவன் அவள் எதிர்பார்க்காதபோது அவள் நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.

“சொல்லலைன்னா இப்படிதான் செய்வேன்.” டென்ஷனாகி விட்டாள் கீர்த்தி. அவனைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளியவள் ஒழுங்கா இருந்துக்கோ” என்றாள் மிரட்டலாக…

ஆனால் அது சிறிதும் அரவிந்தை அசைக்கவில்லை… “உன்கிட்ட இப்படித்தான் இருப்பேன்” என்றான் தைரியமாக.

அவள் நெற்றியை தேய்த்தாள். ஏதோ அப்பிவிட்டது போல… “பார்த்து தோல் கையோட பிச்சிட்டு வந்துடப் போகுது” என்றான் நக்கலாக…

“உன்கிட்ட எல்லாம் பேசறேன் பாரு” என்று அடிக்குரலில் சீறினாள் கீர்த்தி.

“எல்லாம் பேசாத கீர்த்தி, ஒரே ஒரு ஐ லவ் யூ மட்டும் பேசேன்” என்றான்.

“சே! சே! உன்னையெல்லாம் திருத்தவே முடியாது” என்று சொல்லி வேகமாக வெளியேறினாள் கீர்த்தி…

அவள் வெளியேறியதை ஒரு புன்னகையோடு பார்த்திருந்தான். மனதிற்குள் அவனுக்கு அவனே “டேய் மகனே, தூள் கிளப்புறடா, முத்தமெல்லாம் குடுத்துட்ட” என்று அவனுக்கு அவனே பாராட்டிக் கொண்டான்.

கீர்த்திக்கு அவனுக்கு நேர்மாறாக கொதித்துக் கொண்டிருந்தாள். “என்ன தைரியம் அவனுக்கு பேசிக் கொண்டு இருக்கும்போதே முத்தம் கொடுத்து விட்டான். என்ன திமிர். எப்படி என்னிடம் இருந்து ஐ லவ் யூ என்ற வார்த்தையை வாங்குகிறான் என்று பார்த்துக் கொள்கிறேன்” என்று மனதிற்குள்ளேயே கறுவிக் கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து அவள் இருக்கும் இடத்திற்கே வந்தவன், “நான் கேட்டதை நீங்க இன்னும் சொல்லவே இல்லை” என்று வேண்டுமென்றே சீண்டினான்.

அவளும், “எனக்குத் தெரியாததை எப்படிச் சொல்ல முடியும்” என்றாள் எல்லோரும் கவனிப்பார்கள் என்பதை மனதில் கொண்டு…

அவள் அருகில் வந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக, “பார்ப்போம் நீ எப்படிச் சொல்லாம போறேன்னு.”

“பார்ப்போம் நீங்க எப்படிச் சொல்ல வைக்கறீங்கன்னு” என்று பதிலுக்கு பதில் பேசினாள்.

அவள் சண்டைக் கோழியாக முறுக்கிக் கொண்டதில் அரவிந்திற்கு வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போல இருந்தது.

“அப்போ நமக்குக் கல்யாணமானாகூட ஐ லவ் யூ சொல்ல மாட்ட நீ…”

“ம்கூம் மாட்டேன்” என்றாள் வீம்பாக…

“அப்போ நம்ம கல்யாணம் கன்பார்மா நடக்கும் அப்படித்தானே” என்றான் சிரிப்போடு.

“ம்கூம் நான் அப்படிச் சொல்லலை” என்றாள் பாவமாக…

அவன் சிரிக்கத் துவங்க… ஏதோ வேலையிருப்பது போல நகர்ந்தாள், “இடியட்” என்று அவனை மனதில் திட்டிக் கொண்டே…

அதன் பிறகு இருவருக்கும் தனிமை நேரவில்லை… வேலை இருந்தது. அரவிந்திற்கு விசாவும் கன்பர்ம் ஆனது.

அன்று அவள் வீட்டிற்குக் கிளம்பும் முன் மறுபடியும் அவள் முன் வந்து நின்றவன்… “விசா கன்பர்ம் ஆகிடுச்சு கீர்த்தி… இன்னும் நாலஞ்சு நாள்ள கிளம்பிடுவேன் டிக்கெட் கிடைச்சா… உன் அண்ணன்கிட்ட… அவனைப் பார்க்கப் போறேன்” என்றான்.

அவன் முகத்தில் வெளிநாடு போகும் சந்தோஷத்தை விட தண்டபாணியைப் பார்க்கப்போகும் சந்தோஷம் இருந்தது… மிக நெருங்கிய நண்பர்கள் அல்லவா…

தன் அண்ணனை அவன் பார்க்கப் போகிறான் என்ற சந்தோஷம் கீர்த்தியையும் தொற்ற, மனதை மறையாமல், “வாழ்த்துக்கள்” என்றாள்.

“சொல்லு உங்க அண்ணன்கிட்ட என்ன சொல்லணும்” என்றான்.

“எனக்கு ஒண்ணும் சொல்ல வேணாம் நான் தினமும் வேணுன்னா கூட அவனோட பேசிடுவேன்.”

“ஆனா எனக்கு சொல்ல நிறைய நிறைய இருக்கே” என்று அவளைப் பார்த்து கண்ணடித்தவன், “புதுசா என் மச்சான் வேற ஆகப் போறான் இல்லையா… அதைப் பத்தி நிறைய பேசணும்.”

“என்ன புதுசா மச்சான்” என்று அவளுக்குத் தெரியாமல் கேட்டவள், பின்பு தான் தன்னோடான திருமணத்தை பேசுகிறான் என்று தெரிந்தவள்… என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனியாகி விட்டாள்.

“நிஜம் கீர்த்தி. நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம் ஐ அம் இன் லவ் வித் யூ. எனக்காக கட்டாயம் வெயிட் பண்ணு கீர்த்தி… உங்கண்ணன் சம்மதத்தோட வந்து உங்க வீட்ல பேசறேன். அதுக்கப்புறம் உன்கிட்ட கட்டாயம் ஐ லவ் யூ வாங்காம விடமாட்டேன்” என்றான் கர்வத்தோடு.

“நான் நாளைல இருந்து ஷோரூம் வருவனா தெரியாது… ஊருக்குப் போறதுக்கு அரேஞ்ச் பண்ணனும், டிக்கெட்ஸ் பார்க்கணும் நிறைய வேலை இருக்கு. அதான் அப்புறமா உன் கூடப் பேச முடியுமோ, முடியாதோ, இப்போவே பேசிடறேன். நான் ஞாபகத்துல இருப்பேன் இல்லயா?” என்று கண்களில் எதிர்பார்ப்பபோடு பேச…

தானாக தலை ஆடியது கீர்த்திக்கு… அதைப் பார்த்ததும் தான் அவன் கண்களில் அலைபுறுதல் நின்றது.

மீண்டும் அவளைச் சீண்டாமல் விடைபெற்றான்… எதுவோ குறைவது மாதிரி இருந்தது கீர்த்திக்கு… என்னவென்று அவளுக்கே சொல்லத் தெரியவில்லை…

வீடு வந்ததும்… அம்மாவிடம் தலைவலி என்று சொல்லி, உணவு உண்ணாமல் கூட படுத்து விட்டாள்.

அவன் முத்தமிட்ட நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்… அவள் கண்களில் ஒரு ரகசியப் புன்னகை தோன்றியது… அது அவள் எதிர்பாராமல் நடந்ததுதான்… நெற்றிக்கு பதிலாக இதழ்களில் முத்தமிட்டு இருந்தாலும் அவளால் ஒன்றும் செய்திருக்க முடியாதுதான்.

அவன் செய்தது தப்பென்றாலும்… அவன் தேர்ந்தெடுத்த இடம் பிடித்தது. வேறு எதுவும் செய்யாமல் விட்டானே என்று சற்று நிம்மதியாக இருந்தது. அந்த நினைவுகளோடே தூங்கிப் போனாள்…

தூக்கத்திலும் அரவிந்த் வந்து, “நீ என்னை பார்த்து ஐ லவ்யூ சொல்வியா மாட்டியா” என்று மிரட்டிக் கொண்டிருந்தான். தூக்கத்திலேயே அவள் முகத்தில் சிரிப்பு வர… அவள் உதடுகள் சத்தமாகவே உச்சரித்தது, “மாட்டேன் போ” என்று…

வீட்டில் அரவிந்த் விசா வந்ததைச் சொல்லி, இன்னும் நான்கைந்து நாட்களில் கிளம்பப் போகிறேன் என்று சொல்ல… “இவ்வளவு சீக்கிரமாகவா” என்றனர்… சிதம்பரமும் ராணியும்.

“ஆமாம் அப்பா” என்றான்.

“எங்கடா போவ, எங்க தங்குவ, என்ன பண்ணுவ” என்று சிதம்பரம் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க…

“தண்டபாணி இருக்கான்பா, எல்லாம் பார்த்துப்பான்” என்றான் அரவிந்த்.

“டேய் புது இடம், புது ஊரு நமக்குத் தெரிஞ்சவங்க வேற யாராவதும் இருக்காங்களா பார்ப்போம்டா…”

“தேவையேயில்லைப்பா, அவனை நம்பாம வேற யாரை நான் நம்பப் போறேன். எல்லாம் அவன் பார்த்துக்குவான் அப்பா” என்றான் மறுபடியும்.

“உன் கல்யாணப் பேச்சு…” என்று சிதம்பரம் இழுக்க…

“அவன்கிட்ட பேசி சம்மதம் வாங்குனதுக்கு அப்புறம் சொல்றேன்… இங்க பேசுங்கப்பா” என்றான் அரவிந்த்.

Advertisement