Advertisement

10

லண்டன் போவதற்கு நிறைய விஷயங்கள் அரேஞ்ச் செய்ய வேண்டி இருந்ததால்… ஷோரூம் பக்கம் எட்டிப் பார்க்கக் கூட நேரமில்லை அரவிந்திற்கு… அவன் கிளம்புவதற்கு முன் தினம் தான் அங்கே அவனால் வர முடிந்தது.

கீர்த்தியை கண்களில் நிரப்ப ஆரம்பித்தான். “நாளைக்குக் கிளம்பறேன் கீர்த்தி” என்றான் விடாமல் அவளையே பார்த்தவாறு.

“சரி” என்பது போலத் தலையசைத்தாள்.

வேறு என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை… கிளம்பும்போது “ஐ வில் மிஸ் யூ கீர்த்தி” என்று சொல்லிச் செல்ல… “மீ டூ” என்று கீர்த்தியின் உதடுகள் அவன் காதில் விழாதவாறு முணுமுணுத்தது.

அடுத்த நாள் அவனை வழியனுப்ப நாமும் போவோமா என்று எழுந்த உணர்வை அடக்க மிகவும் சிரமப்பட்டாள் கீர்த்தி. அவன் சென்ற பிறகு நாம ஒரு தரம் அவனிடம் சிரித்துப் பேசியிருக்கலாமோ என்று தோன்றியது. அவனை இன்னும் ஒரு தரம் நன்றாகப் பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது. ஏதேதோ எண்ணங்கள் அவளைச் சூழ்ந்தன.

இதற்கு பெயர்தான் காதலா என்று ஆராய ஆரம்பித்தாள். எப்போது இருந்து எனக்கு அவனைப் பிடிக்க ஆரம்பித்தது. அவனைப் பார்த்த போதேவா… இங்கு வந்த பிறகா… அவன் காதல் சொன்ன பிறகா… ஏதோ ஒன்று தெரியவில்லை.

ஆனால் உடனே அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கனன்றது. வீட்டிற்கு வந்து உணவு உண்டு உறங்கும் வரை அந்த எண்ணம் வலுப்பெற… அவன் போகும் முன் அவனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் போலத் தோன்ற ஆரம்பித்தது.

ஃப்ளைட் நாளைக் காலை எட்டு மணிக்கு. போய் அவன் அறியாமல் ஒரு முறை பார்த்து வருவோமா என்று தோன்றியது.

நேற்று தான் அவள் அன்னையிடம் சொன்னாள்… அரவிந்த் தண்டபாணி இருக்கும் இடத்திற்குப் போகிறான் என்று… அப்போதுதான் அவளுக்குத் தோன்றியது… அம்மா அவனுக்கு கொடுத்து அனுப்ப எதுவும் செய்ய வில்லையா என்று தோன்ற… அப்போதே போய் அம்மாவை எழுப்பினாள்… “அம்மா நீ ஒண்ணும் கொடுத்து அனுப்பலயா” என்று கேட்டாள்.

“இல்லை கீர்த்தி ஒண்ணும் வேணாம்னு, தண்டபாணி சொன்னான். அதனால ஒண்ணும் செய்யலையேம்மா” என்றார் அவளின் அம்மா.

“இங்கே ஒரு பெரிய கடைல எல்லாம் விக்குது அம்மா… இன்னும் கடை மூடியிருக்க மாட்டாங்க அம்மா… அப்பாவோட நான் போய் வாங்கிட்டு வந்துடறேன் அம்மா… என்ன என்னன்னு மட்டும் நீங்க சொல்லுங்க அம்மா… இங்க இருந்து போறாங்க அதுவும் அவன் இடத்துக்கே போறாங்க, குடுத்து அனுப்பலன்னா நல்லா இருக்காது அம்மா” என்று அவள் அம்மாவை உசுப்பேற்றி… அந்த நேரத்தில் தந்தையை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள்.

கடை மூடும் நேரம்… அவசரமாக உள்ளே சென்று பொருட்களை வாங்கினர். அண்ணனுக்குக் கொடுத்தனுப்பிய மாதிரியும் ஆயிற்று… அரவிந்தை சென்ட் ஆஃப் செய்த மாதிரியும் ஆயிற்று. அதன் பிறகு தான் அவள் மனம் உற்சாகம் அடைந்தது.

காலையில் ஆறு மணிக்கு சரியாக ஏர்போர்ட்டில் இருந்தாள். விடியற்காலை நேரம் என்பதால் அம்மாவையும் அப்பாவையும் வேண்டாம் என்று சொல்லி அரவிந்த் மட்டுமே வந்திருந்தான்.

அவன் சத்தியமாக கீர்த்தியை எதிர்பார்க்கவில்லை… கண்களை தேய்த்துவிட்டு பார்க்க… “ஓவரா சீன் போட வேண்டாம் நான் தான்” என்று அருகில் வந்தாள் கீர்த்தி.

“நான் உன்னை எதிர்பார்க்கவேயில்லை கீர்த்தி, தேங்க்ஸ் ஃபார் கம்மிங்” என்றான் சந்தோஷமாக.

“நான் ஒண்ணும் உங்களுக்காக வரலை… அண்ணாவுக்கு திங்க்ஸ் கொஞ்சம் கொடுத்தனுப்பணும் வந்தேன்” என்றாள் வீம்பாக…

“யாருக்காக இருந்தா என்ன… வந்தியே எனக்கு அதுவே ரொம்ப ரொம்ப சந்தோஷம்” என்றான் மலர்ந்த முகத்தோடு.

“என்ன நான் கேட்டதைத் தான் நீ சொல்லலை… டைம் இருந்தா இப்பவே சொல்ல வச்சிருப்பேன். இப்ப இல்லை… அதனால நான் வந்தவுடனே முதல் வேலை அதுதான்.”

“நீங்க முதல்ல பத்திரமா போயிட்டு வாங்க… எல்லாம் அப்புறம் பார்க்கலாம்” என்றாள் கீர்த்தி… மலரத்துடிக்கும் அவள் முகத்தை வெகு பிரயத்தனப்பட்டு மறைத்து.

“நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் கீர்த்தி” என்று மறுபடியும் சொல்லி, அவளை அணைத்து விடைபெற துடித்த மனதை வெகுவாக கட்டுப்படுத்தி செக்கின் செய்ய சென்றான்.

கீர்த்தி அவன் உள்ளே சென்று கண்களில் இருந்து மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். எப்படி ஒரே நாளில் நான் இவ்வளவு மாறிப் போனேன். மனம் இவனை இவ்வளவு தேடுகிறது என்று எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

பல மணி நேர பயணத்திற்குப் பிறகு லண்டன் வந்து இறங்க, அவனை அழைத்துப் போக விமான நிலையம் வந்திருந்தான் தண்டபாணி.

நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததில் மிகுந்த சந்தோஷம். அதுவாய் வார்த்தையாக வராமல் ஒரு இறுக்கமான அணைப்பின் மூலமாக வெளிப்பட்டது.

“வெல்கம் லண்டன்” என்றான் தண்டபாணி.

“ஆளே மாறிட்டடா” என்றான் அரவிந்த். ஏற்கனவே ஹேன்சம்-மாக இருக்கும் தண்டபாணியை இன்னும் ஹேன்சம்-மாக மாற்றியிருந்தது லண்டன். இன்னும் பொலிவோடு இருந்தான்.

“ப்ச்! நீ வேற ஏண்டா கலாய்க்கற” என்றான் தண்டபாணி.

“சொல்லவே இல்லடா நான் கலாய்க்கல உண்மையை தான் சொல்றேன் பாணி. நீ ஏற்கனவே அழகுதான்டா, இப்போ இன்னும் அழகா தெரியறடா” என்றான் உண்மையாக…

“வா! உன்னோட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

“என்னடா” என்றான் ஆர்வமாக…

“அது நம்ம இருக்கப்போற வீட்ல, நம்ம மட்டும் இல்லை, இன்னொருத்தரும் இருக்கிறாங்க… அதான்” என்றான்.

“யாருடா அது உன் கூட அபார்ட்மெண்ட்ல ஷேர் பண்றது.”

“நீ இதை சரியா எடுத்துக்கணும் அர்வி…” என்றான் யோசனையாக…

“என்ன சொல்லுடா, என்கிட்ட உனக்கு என்ன சொல்லு…”

“அது ஒரு பொண்ணு பேரு லிசா” என்றான்.

“என்ன பொண்ணா” என்றான் அதிர்ச்சியாக…

“ஆமா பொண்ணு தான்.”

“ஆனா ஏன்.”

“ஏன்னா… ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது… சேர்ந்து இருக்கோம்.”

அரவிந்த் அவனை ஆராய்ச்சிப் பார்வை பார்க்க…

“யெஸ் யூ ஆர் ரைட், நாங்க சேர்ந்து வாழறோம்…” என்றான்.

இதை நிச்சயமாக அரவிந்த் எதிர்பார்க்கவில்லை.

“ஏன் இப்படி” என்றான் அதிர்ச்சியாக…

“அவ ஒரு ஆங்கிலோ இண்டியன்… அப்பா இண்டியன். அம்மா இங்லண்ட்… அவளுக்கு கல்யாணத்துல நம்பிக்கையில்லை… ஆனா என்னைப் பிடிச்சிருக்குன்னா… எனக்கும் அவளை ரொம்பப் பிடிச்சிருந்தது. ஒரு கட்டத்துல பிரிஞ்சியிருக்க முடியாதுன்னு தோணிச்சு… நாங்க ரெண்டு பேருமே முடிவு பண்ணி சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டோம்” என்றான் தண்டபாணி.

இந்த மாதிரி ஒரு விஷயத்தை தண்டபாணியிடம் இருந்து அரவிந்த் எதிர்பார்க்கவில்லை.

இது ஒரு வகையான ஷாக் அவனிற்கு. அதிலிருந்து அவனால் வெளியே வர முடியவில்லை.

“டேய், என்னடா இது. நமக்கு இதெல்லாம் எப்படிடா சரி வரும்.”

“சரியா வரும்ன்னு தான் என் உள் மனசு சொல்லிச்சு.”

“ஊர்ல அப்பா அம்மாக்குத் தெரிஞ்சா என்ன சொல்வாங்க.”

“இப்பத்திக்கு கீர்த்தி கல்யாணம் முடியற வரைக்கும் அப்பா அம்மா கிட்ட சொல்லப் போறதில்ல.”

“அதுக்கப்புறம் சொல்லணும், சொல்லும்போது கல்யாணம் ஆகிடிச்சின்னு தான் சொல்வேன்.”

“பொய் சொல்லப் போறியா.”

“வேற வழி.”

“நான் சொல்லிடன்னா.”

“நீ சொல்ல மாட்ட எனக்குத் தெரியும். அதே மாதிரி உன்கிட்ட பொய் சொல்லவும் எனக்கு மனசு வரலை. அதான் சொல்லிட்டேன்.”

“நீ என் கிட்ட உண்மையைச் சொன்னது எனக்கு சந்தோஷமா இருந்தாலும்… சொன்ன விஷயம் சந்தோஷம் இல்லைடா.”

“லிசாவைப் பார்க்கிற வரை தான் இப்படிப் பேசுவ… பார்த்த பிறகு இப்படி பேச மாட்ட… எதுக்காகவும் அவளை என்னால மிஸ் பண்ண முடியாதுடா. தமிழ்ல சொல்லணும்னா நான் அவ மேல பைத்தியமாயிருக்கேன்னு சொல்லலாம்.”

இந்த விஷயம் தந்த அதிர்ச்சியில் இருந்து அரவிந்தால் வெளியே வர முடியவில்லை. அமைதியாக இருந்தான்.

“வா லிசாவைப் பார்த்தா இப்படி பேசமாட்டேன்” என்று அவன் லக்கேஜை எடுத்துக் கொண்டு அவனையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

அமைதியாகவே காரில் பயணித்தனர். தண்டபாணியும் அவனை அதிகம் தொந்தரவு பண்ணவில்லை. இந்த விஷயத்தை கிரகித்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டான்.

லண்டனின் செழுமை அரவிந்தை ஈர்த்தாலும்… அவன் கவனத்தில் பதிய மறுத்தது. தன் நண்பனிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை அவன் எதிர்பார்க்க வில்லை. இத்தனை நாட்கள் எதிர்பார்த் வெளிநாட்டு பயணம் கூட அத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்க வில்லை.

தன் நண்பனுக்கு இப்படி ஒரு வாழ்க்கை முறையா. தான் வேறு எப்படி எங்கே போய் தங்குவது. தன்னால் அங்கே போய் இருக்க முடியுமா. மனைவி என்ற ஒருத்தியோடு தன் நண்பன் இருக்கும்போது அவன் வீட்டில் இருப்பது வேறு… இப்படி சேர்ந்து வாழும் சூழலில் இருப்பது வேறு… எப்படி தன்னால் இருக்க முடியும்.

“இப்படியே திரும்பி ஊருக்குப் போய் விடலாமா” என்று இருந்தது அரவிந்திற்கு.

தன் நண்பனின் மனதைப் படித்தவன் போல தண்டபாணி, “லிசா ரொம்ப நல்லவடா. உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. அவளைப் பார்த்தா உனக்கே தெரியும்” என்றான் சமாதானமாக…

அவர்கள் அபார்ட்மெண்ட் சென்றபோது அது பூட்டியிருந்தது. தன்னிடம் உள்ள சாவியால் திறந்தான் தண்டபாணி.

“வெளில எங்கயாவது போயிருப்பா வந்துடுவா” என்றான் தண்டபாணி.

“என்னடா சாப்பிடற” என்று கேட்டவனிடம் “ஒண்ணும் வேண்டாம்டா, ஃப்ளைட்ல சாப்பிட்தெல்லாமே ஒரு மாதிரியா இருக்கு…”

“சரி கொஞ்சமா ஜூஸ் எடுத்துக்கோ” என்று எதையோ கலந்து கொடுத்தான்.

அவர்கள் பேசிக் குடித்துக் கொண்டிருக்கும்போதே… காலிங் பெல் சத்தம் கேட்டது.

லிசா வந்துட்டா என்று தண்டபாணி சென்று கதவை “ஹாய் ஹனி, உன் ப்ரெண்ட் வந்தாச்சா” என்று கேட்டபடியே உள்ளே வந்தவளைப் பார்த்தான் அரவிந்த்… பார்த்தான் அரவிந்த்… பார்த்துக்கொண்டே இருந்தான் அரவிந்த்.

மெழுகு சிலை… அழகி… இரண்டு வார்த்தை மட்டுமே அவன் ஞாபகத்தில் அப்பொழுது வந்தது… அவ்வளவு அழகு… இவ்வளவு அழகாக ஒரு பெண்ணை அவன் நேரில் இதுவரை பார்த்ததில்லை.

தண்டபாணிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா என்றிருந்தது. ஒரு நிமிடம் சுற்றுப்புறம் எல்லாவற்றையும் மறந்து அவளைப் பார்த்தான்.

அவள் இவனைப் பார்த்து, “ஹாய்” என்றதும் தான் நடப்புக்குத் திரும்பினான்.

பதிலுக்கு இவன், “ஹாய்” என்க…

“டிராவல் எல்லாம் கம்ஃபர்டபுளா இருந்ததா” என்று அந்த மெழுகு சிலை பேசியது.

“இருந்தது” என்றவன்… “இவங்களுக்கு தமிழ் தெரியுமா” என்று தண்டபாணியை பார்த்துக் கேட்க… “தெரியும், அவங்கப்பா தமிழர்” என்றான் தண்டபாணி.

லிசா இவனைப் பார்த்து ஸ்நேகமாய் புன்னகைக்க… பதிலுக்கு இவனும் புன்னகைத்தான்.

“ஏதாவது சாப்பிட பண்ணுனுனியா தண்டு” என்றாள்.

“இல்லை லிசா இப்போதான் வந்தோம்” என்றவன்… “ஒரு நிமிஷம் அரவிந்த்” என்று சொல்லி கிட்சனை நோக்கிப் போக… லிசாவும் பின்னே போனாள்.

இவ்வளவு அழகான பெண் மீது தண்டபாணி பைத்தியமானதில் தப்பே இல்லை என்றுதான் இப்போது அரவிந்திற்குத் தோன்றியது.

அரவிந்த் வருகிறான் என்று இரண்டு நாள் விடுப்பெடுத்திருந்தான் தண்டபாணி. லிசாவும் அவனோடு சகஜமாக பேசினாள். பதிலுக்கு அரவிந்திற்கு தான் திக்கியது.

அரவிந்த் பார்த்தது இருவருக்குள்ளும் இருந்த அன்னியோன்யம் தான். லிசாவும், தண்டபாணியும் அவ்வளவு அன்னியோன்யமாக இருந்தார்கள். தண்டபாணிக்கு வேண்டியவன் என்பதால் லிசாவும் அவனோடு நன்றாகப் பழகினாள்.

காலையிலிருந்து மாலை வரை தண்டபாணியும் லிசாவும் அலுவலகம் சென்றுவிட அரவிந்த் தனியாக வீட்டில் இருந்தான்.

மாலை வந்ததும் இரவு வரை அவனை எங்கேயாவது அழைத்துச் செல்வார்கள். சனி, ஞாயிறு பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்து அவ்வளவு பொறாமையாகக் கூட இருந்தது அரவிந்திற்கு. இதில் கீர்த்தி விஷயத்தை எப்படி தண்டபாணியிடம் ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்தான் அரவிந்த்.

நடுவில் ஒரே ஒருமுறை இவனாக கீர்த்திக்கு அழைத்துப் பேசினான். அவன் பேசியது அவளுக்கு சந்தோஷம் தான் என்று குரலிலேயே தெரிந்தது. ஆனால் ஏனோ தண்டபாணி விஷயத்தைச் சொல்ல மனம் வரவில்லை.

அவன் விஷயத்தை அவன் தான் சொல்ல வேண்டும் என்று அரவிந்த் அமைதியாகி விட்டான். அந்த குற்றவுணர்ச்சியில் கீர்த்தியிடம் இவன் சரியாகக் கூட பேசவில்லை. சீக்கிரம் போனை வைத்து விட்டான்.

அவன் லண்டன் வந்த பத்து நாட்களுக்கு மேல் ஆகி… விட்டது. இருவரின் காதலையும் பார்த்த அரவிந்த்… தண்டபாணியிடம், “நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது” என்றான்.

“எவ்வளவோ தடைவ கேட்டுப் பார்த்துட்டேன் அர்வி… அவ ஒத்துக் கொள்ளவே மாட்டேங்கறா.”

“எத்தனை நாள் இப்படியே இருக்க முடியும் பாணி.”

“தெரியலை… நாங்க சேர்ந்து வாழ அவ போட்ட ரெண்டு கண்டிஷன், ஒண்ணு கல்யாணத்துக்கு வற்புறுத்தக் கூடாது. இரண்டாவது இண்டியா வந்து இருக்க மாட்டேன்.”

“என்ன இந்தியாவும் வரமாட்டாளாமா.”

“ம்கூம்” என்று மண்டையை அப்படியும் இப்படியும் ஆட்டினான்.

“காதல், இப்படி கண்டிஷன் எல்லாம் போட்டா அது எப்படி உண்மையான காதல் ஆகும்.”

“நான் யோசிக்காம இருப்பேன்னு நினைக்கறியா… ஆனா இதையெல்லாம் விட அவளை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்காக அவளும் நிறைய மாறிட்டா… தழையத் தழைய புடவை கட்டுறான்னு சொல்ல முடியாது… ஆனா ஷார்ட் ட்ரெஸஸ் போடறது இல்லை… லாங் ஸ்கர்ட், பேண்ட்ஸ் இந்த மாதிரி தான் போடறா… எனக்காக அவ உடையில் நிறைய சேஞ்சஸ் கொண்டு வந்து இருக்கா… இங்க இருக்கிற கல்சர் ஃபாலோ பண்றது இல்லை. நிறைய நிறைய மாறியிருக்கா. ஆனா கல்யாணத்துக்கு மட்டும் ஏனோ ஓ.கே. சொல்ல மாட்டேங்கறா. அதுதான் அவ போட்ட கண்டிஷன்றதால நானும் அதிகம் வற்புறுத்துவது இல்லை. அடிக்கடி சொல்ல மட்டும் செய்வேன். பார்ப்போம். ப்யூச்சர்ல ஏதாவது மாற்றம் வருதான்னு” என்று தன் மனதில் இருந்ததை எல்லாம் நீளமாக பேசி முடித்தான்.

அரவிந்திற்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே லிசா வர அவளும் பேச்சில் இணைந்து கொண்டாள்.

“எப்படி இருக்கு அர்வி, எங்க லண்டன்.”

“ரொம்ப நல்லாயிருக்கு லிசா.”

“தட்ஸ் ஃபைன்… என்ன பேசிட்டு இருந்தாங்க தண்டு, ரொம்ப பேசுவாங்களே” என்றாள்.

“இதென்ன பேச்சில் மரியாதை எல்லாம் தூள் பறக்குது” என்றான் தண்டபாணி.

“நீதானே எனக்கு இப்படிப் பேசணும், அப்படிப் பேசணும், க்ளாஸ் எடுத்த… இப்போ கிண்டல் பண்றயா.”

“ஹேய் லிசா… உன் தமிழ் ரொம்ப நல்லாயிருக்கு… இவன் பேச்சைக் கேட்டு நீ எதுவும் கத்துக்காதே… சின்ன வயசுல இருந்தே தமிழ் பேசுவியா.”

“எஸ், அப்பா என்னோட தமிழ்லதான் பேசுவார்… எழுதப் படிக்கத் தெரியாது… ஆனா நல்லா பேசுவேன்.”

“இப்போ என்ன பண்றார் உங்கப்பா…”

“இப்போ இல்லை… எனக்கு ஒரு பதினேழு வயசாகும் போது இறந்துட்டார். ஹார்ட் அட்டாக்…”

“அப்பா போனவுடனே… அம்மா ரொம்ப அப்செட்… அதை மறக்க இன்னொரு கல்யாணம் பண்ணிட்டாங்க” என்றாள்.

“என்ன மறக்க முடியாம இன்னொரு கல்யாணமா” என்றான் வியப்பாக அரவிந்த்.

“யெஸ், அப்படிதான் அம்மா என்கிட்ட சொன்னாங்க, பட் என்னால அதை ஒத்துக்க முடியலை. மை ஃபாதர் வாஸ் சச் எ லவபிள் கை. அவரை என்னால மறக்க முடியலை… அம்மாவோட செய்கையை மன்னிக்கவும் முடியலை… அதனால அம்மாவும் நானும் பிரிஞ்சிட்டோம்.”

“நீங்க கூட நினைக்கலாம்… நானும் தண்டுவும் மேக் எ குட பேர்… நாங்க ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப விரும்பறோம்… ஆனா எனக்கு ஏனோ கல்யாணத்துல நம்பிக்கை இல்லை.”

“மே பி… எங்க அம்மானால கூட இருக்கலாம்… எங்க அப்பாவை அவ்வளவு லவ் பண்ணிட்டு எப்படி மாறினாங்க தெரியலை… அப்போ அந்தக் கல்யாணத்துக்கு அர்த்தமே இல்லை தானே.”

“அப்படிச் சொல்ல முடியாது லிசா” என்றான் தண்டபாணி… “இறந்தவங்களையே நினைச்சு காலத்தை ஓட்ட முடியாது… அப்புறம் வாழற வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கும்.”

“உங்கப்பா இறந்ததையே நினைச்சு உங்கம்மா காலத்தை ஓட்டணும்னு நினைக்கறது தவறு… நாளைக்கு நானே இறந்துட்டா கூட நீ ஒரு வாழ்க்கையை மறுபடியும் அமைச்சுக்க தான நான் விரும்புவேன்” என்று அவன் சொல்லிக்கூட முடிக்கவில்லை…

லிசா அவன் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை… “என்ன தைரியம் உனக்கு இப்படி பேச” என்று…

பொறி கலங்கியது தண்டபாணிக்கு… அரவிந்த் அதிர்ச்சியோடு பார்த்தான்.

“ஹேய் ஹனி இட் வாஸ் ஜஸ்ட் எ சேயிங்” என்றான் தண்டபாணி அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக…

“என்ன வார்த்தை அது உன் இஷ்டத்துக்கு சொல்லுவியா” என்றாள் கோபமாக…

அவளின் வார்த்தைகளே அவள் மிகவும் அப்செட் என்பது தண்டபாணிக்கும் அரவிந்திற்கும் காட்டிக் கொடுக்க…

அவளின் வார்த்தைகளைக் கொண்டே அவளை மடக்கினான்.

தண்டபாணி… “அப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ” என்றான். அரவிந்த் சொன்னதில் இருந்து அவனுக்கும் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே வலுப்பெற்றது. அதனால் சமயம் கிடைத்தவுடனே அதை சொல்லிக் காட்டினான்.

“நீ இப்படி ப்ளாக்மெயில் பண்ணினா நம்ம பிரிய வேண்டி வரும் தண்டு…”

“பரவாயில்லை, எப்போ நீ என்னை விட்டு போவியோன்னு பயந்துட்டே இருக்கிறதுக்கு இப்போவே பிரிஞ்சிடலாம்.”

“நீ என்ன சொல்ற, நான் உன்னை விட்டு போவேன்னு சொல்றியா” என்றாள் ஆவேசமாக.

“போக மாட்டேன்னா ஏன் கல்யாணத்தை வேண்டாம்னு சொல்ற…” என்றான் தண்டபாணியும் பதிலுக்கு ஆவேசமாக.

இருவரும் அரவிந்த் இருப்பதையே கண்டு கொள்ளவில்லை. அரவிந்த் தான் அவர்கள் இருவரும் மிகவும் பெர்சனலாகப் பேசுகிறார்கள் என்றுணர்ந்து அந்த இடத்தை விட்டு அகன்றான். பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று நினைத்தான்.

மேலும் மேலும் வழக்காடிக் கொண்டார்கள் லிசாவும், தண்டபாணியும்… வார்த்தைகள் தடித்தன.

Advertisement