Advertisement

8

தன்னுடைய தந்தையே இவ்வளவு சப்போர்ட் செய்கிறார் என்றால் நிச்சயம் நல்ல பொண்ணாகத்தான் இருப்பாள் என்று நளினிக்குத் தோன்றியது. அதனால் அவளை பார்க்கும் ஆர்வமும் பெருகியது.

“உங்களுக்கு ஓ.கே. வாப்பா” என்றாள் நளினி.

“பெரிசா ஒண்ணும் அப்ஜக்ஷன் இல்லைம்மா. நம்ம ஆளுங்க தான்னு எனக்கு நிச்சயம் தெரியும். வேலைக்கு எடுக்கும்போதே அதைப் பார்த்துதான் எடுத்தேன். ஹே… குடும்பம், அவங்களுக்கு எல்லாம் சரி வந்தா முடிச்சிடலாம்னு பார்க்கறேன். நீ என்னம்மா சொல்ற.”

“நான் என்ன அப்பா சொல்றதுக்கு இருக்கு. உங்களுக்குத் தெரியாததா… அம்மாவும் நீங்களுமே முடிவு பண்ணுங்கப்பா… நீங்க என்ன சொல்றீங்க” என்று கணவனையும் துணைக்கு அழைத்தாள்.

“அப்படியே செய்யலாம்” என்று மாதவனும் ஆமோதிக்க…

பிறகு பெண்ணிடம் பேசி, பெண் வீட்டிலும் பேசுவது என்பது முடிவானது.

“இதைச் சொல்ல மறந்துட்டேனேம்மா… அவன் வெளிநாடு போறதுக்கும் சரின்னு சொல்லியிருக்கேன்மா ஒரு மூணு மாசம் இல்லை ஆறு மாசம் டூரிஸ்ட் விசால போயிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கான்மா.”

“அப்பா! நீங்க வெளிநாடு போக சம்மதம் சொல்லிட்டீங்களா, என்னப்பா அதிர்ச்சி மேல அதிர்ச்சியா குடுக்கறீங்க.”

“வேற என்னம்மா பண்றது, ரொம்ப பிடிவாதமா இருக்கான்… வேற எந்த வேலையும் உருப்படியா செய்ய மாட்டேங்கறான். அதான் இந்த முடிவு” என்றார் பெருமூச்சை வெளியேற்றி…

“விடுங்கப்பா எல்லாம் நல்லாவே நடக்கும்” என்று அவருக்கு சமாதானம் சொன்னாள் அவரின் மகள்.

பிறகு, “ஆனா அப்பா கல்யாணம்” என்றாள் நளினி.

“அனேகமா போயிட்டு வந்து தான்மா பண்ணிக்குவான்னு நினைக்கிறேன்.”

“நான் போகும்போது சும்மா அப்படியே ஷோரூம் போற மாதிரி போயிட்டு போறேன்பா… எனக்கு அந்தப் பொண்ணைப் பார்க்கணும் போல இருக்கு.”

“சும்மா மட்டும் பாரும்மா… இதைப்பத்தி எல்லாம் பேசாத இன்னும் எதுவும் சரியா முடிவாகலை.”

“சரிப்பா” என்றாள்.

“நானும் போகட்டாங்க” என்றார் ராணி.

“நீயுமா சரி போ” என்றார் சிதம்பரம்.

மூவரும்… ராணி, நளினி, மாதவன் கிளம்பினர் ஷோரூம்க்கு பெண்ணைப் பார்க்க…

இவர்கள் போன நேரம் ஷோரூமில் அரவிந்த் இல்லை. அவன் விசா அப்ளை செய்வதற்காக எம்பஸிக்குச் சென்றிருந்தான்.

இவர்களை யார் என்று தெரியாததால் மற்ற ஸ்டாப்கள் கஸ்டமர்களை கவனிப்பது போல இவர்களையும் கவனிப்பார்கள் என்று ஒரு பார்வை பார்த்து கீர்த்தி வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அங்கே நீண்ட நாட்களாக வேலை பார்க்கும் ஒருவன் அவளிடம் வந்து சொன்னான்… “இது தாங்க நம்ம ஐயாவோட அம்மா, அவங்க பொண்ணு, மாப்பிள்ளை” என்று.

பிறகே அவர்களை எழுந்து வந்து மரியாதை நிமித்தம் வரவேற்றாள்.

“வாங்க மேடம், வாங்க சார்” என்று.

“என்ன விஷயமா வந்திருக்கீங்க” என்று கேட்க முடியாததால் அமைதியாகவே அவர்களின் அருகில் நின்றாள் கீர்த்தி…

“தெரிஞ்சவங்க சோபா வேணும்னு கேட்டாங்க. அதான் என்ன மாடல் இருக்குன்னு பார்க்க வந்தோம்” என்றார்கள்.

அவர்களைப் பார்த்தால், சோபா பார்க்க வந்தது போல தோன்றவில்லை கீர்த்திக்கு. இவ்வளவு நாள் வராதவர்கள் இப்போது திடீரென்று குடும்பத்தோடு வந்து நின்றார்கள் என்றால் நேற்று அரவிந்த் பேசியதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ தோன்றியது.

அவள் நினைத்தது போல அவர்கள் சோபாவைப் பார்க்காமல் அவளையே அளவிடும் பார்வையில் பார்த்தனர்.

கீர்த்திக்கு ஏனோ எரிச்சலாக வந்தது. தன் அனுமதியில்லாமல் இந்த மாதிரி எல்லாம் அவர்கள் நடந்து கொள்வது, ஒரு வகையான அத்து மீறல் போலத் தோன்றியது கீர்த்திக்கு.

ஆனால் அதை அவர்கள் முன் காட்ட முடியாமல், சிரித்த முகமாகவே நின்றிருந்தாள்.

கீர்த்தியை இன்னும் அதிகம் சோதிக்க வைக்காமல், அரவிந்த் அங்கே வர, “சார் வந்துட்டாங்க மேம்” என்று சொல்லி அவர்களை அவனிடத்தில் ஒப்படைத்து வேறு ஒரு கஸ்டமரைப் பார்ப்பது போல நகர்ந்து கொண்டாள்.

“பரவாயில்லை அவங்க ஏதாவது கேட்கறதுக்கு முன்னாடி இவன் வந்து நின்னுட்டான்” என்று தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

இவர்கள் மூவரையும் ஷோரூமில் பார்த்த அரவிந்த் ஆச்சரியப்பட்டான். “என்ன மாமா திடீர்னு கடை வரைக்கும் வந்திருக்கீங்க” என்று ஆச்சரியம் மறையாமல் கேட்க…

“ம்! நீங்க என்ன பண்ணிட்டு இருக்கேன்னு பார்த்துட்டுப் போக வந்தோம்” என்று கண்களால் கீர்த்தியைப் பார்த்துக் கொண்டே அவனிடம் நொடித்தார் ராணி.

அப்பா எல்லோரிடமும் விஷயத்தைப் பரப்பி விட்டார் என்று உணர்ந்தான் அரவிந்த்.

“ஸாரி அம்மா, உங்ககிட்ட தான் முதல்ல சொல்லணும்னு நினைச்சேன், ஆனா அப்பாவே கண்டு பிடிச்சிட்டார்” என்றான்.

“சும்மா கதை விடாத, இதை சொல்றதுக்குக் கூட நீ என்னை மதிக்கலை” என்று கோபப்பட…

“அப்படியில்லைம்மா, நேத்து காலையில தான் நானே முடிவு பண்ணினேன். நான் முடிவு பண்ணி இங்க வந்தவுடனே நான் சொல்லாமலே அப்பா கண்டு பிடிச்சிட்டார். நான் என்ன பண்றது அப்பா இவ்வளவு ஷார்ப்பா இருந்தா” என்று குறைபட…

“என்ன நேத்து காலையில தான் முடிவு பண்ணியா” என்று ஒருங்கே ராணியும், நளினியும் கேட்டனர்.

“ஆமாம் அம்மா, நேத்து அப்பா கல்யாண விஷயமா பேசுனப்போ தான இவளைக் கல்யாணம் பண்ணிட்டா நல்லா இருக்கும்னு தோணிச்சு. அதை அப்பாவும் கண்டு பிடிச்சிட்டார். இன்னும் அவளுக்கு கூடத் தெரியாதும்மா” என்றான் வேண்டுமென்றே…

“என்ன அவளுக்குத் தெரியாதா” என்றாள் நளினி ஆச்சரியமாக…

“இல்லை… அம்மாகிட்டயே நான் சொல்லலையா… அதனால இன்னும் சொல்லலை” என்று ஒரு பிட்டைப் போட்டான்.

நளினி நம்பாமல் பார்க்க… “நம்பு நளினி நம்பு” என்றான்…

இவ்வளவு இலகுவாக தன் மகன் பேசியே நெடுநாட்களாயிற்று என்று ராணி உணர்ந்தார். அதனால்தான் சிதம்பரமும் சம்மதித்து இருப்பார் என்று தோன்றியது.

தன் மகனை கூட்டுக்குள் இருந்து வெளிக்கொண்டு வந்த கீர்த்தியை பார்வையால் அளவெடுத்தார்.

நல்ல திருத்தமான முகம்… பேசும் கண்கள்… அளவான உடம்பு… மொத்தத்தில் அழகாக இருந்தாள். தம் மகனுக்கு நல்ல பொருத்தமாக இருப்பாள் என்று தோன்றியது. ஆனால் குணம் எப்படி தெரியவில்லையே என்று சற்று பயமாக இருந்தது.

இறைவனின் மேல் பாரத்தைப் போட்டார். வசதி வாய்ப்பு வேறு எப்படி என்று தெரியவில்லையே என்று அது வேறு கவலையாக இருந்தது.

கீர்த்தியைப் பார்த்தான் அரவிந்த். இப்படி திடீரென்று எல்லோரும் வந்து நிற்கிறார்களே எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று. அவள் முகத்தைப் பார்க்க… அவள் முகம் இறுகியிருந்தது. தான் சொல்லித்தான் இவர்கள் வந்திருப்பார்கள் என்று தப்பாக நினைத்துக் கொண்டாள் போல என்று எண்ணினான்.

மூவரும் விடைபெற்று கிளம்பப் போக… “அம்மா ப்ரொசீட் பண்ணட்டா” என்றான்.

அவன் கீர்த்தியை தான் கேட்கிறான் என்று புரிந்த ராணி… “முதல்ல பொண்ணு ப்ரொசீட் பண்ணனும்டா” என்று கிண்டலடிக்க…

“போம்மா நீ வேற எனக்கே அந்த பயம் தான்” என்று பதிலுக்கு நக்கலடித்தான் அரவிந்த்.

அவர்கள் எல்லோரும் ஒரு நிறைவை உணர, கீர்த்தி கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன நினைச்சிட்டு இருக்கான். இவன் சொன்னா நான் ஒத்துக்கணுமா. வீட்ல இருந்து வேற எல்லோரையும் கூட்டிட்டு வந்து என்னை காட்டிட்டு இருக்கான்” என்று மனசுக்குள் பொருமினாள்.

நேற்று அவள் எடுத்த முடிவான அவனே பண்றதுன்னா பண்ணிக்கட்டும் எல்லாம் ஞாபகத்திற்கு வரவில்லை. “அவன் இஷ்டம்தானா எல்லாம். என் இஷ்டம் எதுவுமில்லையா. என்ன தைரியம் அவனுக்கு” என்று மனதிற்குள் காய்ச்சி எடுத்தாள்.

அவர்கள் மூவரும் வந்து கீர்த்தியிடம் விடைபெற்றுக் கிளம்பினர். முகம் மாறாமல் காக்க மிகவும் சிரமப்பட்டாள் கீர்த்தி.

இதை எதுவும் உணராத அவர்கள்… சந்தோஷமாகவே கீர்த்தியிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.

அவர்கள் போனவுடனே கீர்த்தி அரவிந்தை பார்த்த பார்வையே அனல் கக்கியது. ஆனால் எதுவும் கேட்கவுமில்லை, பேசவுமில்லை முறைத்துப் பார்த்து நின்றிருந்தாள்.

அவளைக் கவனிக்காதவன் போல் உள்ளே சென்று அவளை உள்ளே அழைத்தான் அரவிந்த். மற்ற வேலை பார்ப்பவர்கள் முன் எதுவும் ரசாபாசமாகி விடக்கூடாதே என்று.

உள்ளே வந்தவள் கோபமாக “என்ன நடக்குது” என்றாள்.

“எனக்குத் தெரியாது கீர்த்தி இவங்க இங்கே வர்றது” என்றான்.

“அவங்க எதுக்கு வந்தாங்க. என்னைப் பார்க்கவா வந்தாங்க” என்றாள் கலவரமாக… அவளுக்குத் தெரிந்த விஷயம்தான் இருந்தாலும் உறுதிபடுத்திக் கொள்ள விரும்பினாள்.

“எனக்கு அவங்க வர்றது தெரியாது கீர்த்தி” என்றான் மறுபடியும் அரவிந்த்.

“அப்போ என்னைப் பார்க்கத்தான் வந்திருக்காங்க. எப்படி என் சம்மதமில்லாம இதெல்லாம் பண்றீங்க எனக்கு பிடிக்கலை” என்றாள் கோபமாக.

“இது எதிர்பாராம நடந்ததுதான். எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா தவிர்த்திருப்பேன்.”

“எல்லாரும் என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாங்க… நான் உங்களைப் பிடிக்கும்னு எப்போ சொன்னேன்.”

“ஒண்ணும் நினைச்சிருக்க மாட்டாங்க கீர்த்தி… உனக்கு எதுவும் தெரியாதுன்னுதான் சொல்லியிருக்கேன்.”

அவனை நம்பாத பார்வை பார்த்தாள்… “நம்பு கீர்த்தி நம்பு” என்றான் அவளையும் பார்த்து… இந்த டைலாக்கை நான் இன்னும் எத்தனை பேர்கிட்ட சொல்லணுமோ என்று எண்ணிக் கொண்டே,

“நான் தான் சொன்னேன் இல்லை. நான் பார்த்துக்கறேன்னு.”

“என்னை நான் பார்த்துக்கறேன். இது என் விஷயம். அப்படி அடுத்தவங்க எல்லாம் பார்க்க முடியாது.”

“சரி அப்போ நீ பார்க்கறியா… நான் உங்களைப் பிடிச்சிருக்குன்னு இன்னும் சொல்லவேயில்லை. அதுக்குள்ள நீங்க என்ன இப்படி பண்றீங்க.”

“சரி இப்போ சொல்லு என்னை பிடிச்சிருக்குன்னு” என்று மறுபடியும் கூலாகச் சொல்ல… எரிச்சலானாள் கீர்த்தி.

“எனக்குப் பிடிச்சிருந்தா தானே பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியும்.”

“அப்போ பிடிக்கலையா” என்றான் கண்களில் எதிர்பார்ப்போடு.

“எனக்குத் தெரியலை… உங்களைப் பிடிச்சிருக்கா, இல்லையான்னு தெரியலை. அது தெரியறதுக்கு முன்னாடியே நீங்க இப்படி பண்றது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலை. இப்படி உரிமை எடுத்து எல்லோரும் வந்து பார்க்கறது பிடிக்கலை. எங்க அப்பா அம்மாக்குத் தெரிஞ்சா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க… அவங்களுக்குத் தெரியாம என் வாழ்க்கையில எதுவும் நடக்கறதை நான் விரும்பலை” என்றாள் கோபமாக.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று அரவிந்திற்கே தெரியவில்லை. அவளையே நேர் பார்வை பார்த்தபடி நின்றான்.

அவளும் திருப்பி பதில் பார்வை பார்த்தாள். அவனை குற்றம் சாட்டும் பார்வை, தைரியமான பார்வை, கோபமான பார்வை. நேற்று போல் பயந்த பார்வை இல்லை.

“கீர்த்தி” என்று அரவிந்த் ஆரம்பிக்கும்போதே…

“நான் போய் வேலையைப் பார்க்கிறேன்” என்று கோபமாகச் சொல்லிச் சென்று விட்டாள்.

அவள் செல்லுமிடமெல்லாம் அரவிந்தின் பார்வை தொடர்ந்தது. அதை கீர்த்தியும் உணர்ந்துதான் இருந்தாள். சிறிதும் கண்டு கொள்ளவில்லை.

“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்னை. கீர்த்தி என்றால் அவ்வளவு ஈஸியா! இடியட். நேற்று இவனை வாங்கு வாங்கியிருந்தாள் இவனுக்கு இவ்வளவு தைரியம் வந்திருக்காது. விட்டுவிட்டேன். ஏன் விட்டேன்?” என்று அவளை அவளே இஷ்டத்திற்கு திட்டிக் கொண்டாள்.

அவள் மனதில் என்ன போராட்டம் நடக்கிறது என்று அரவிந்திற்குத் தெரியா விட்டாலும், அவள் முகத்தை வைத்Nது ஏதோ போராடிக் கொண்டிருக்கிறாள் என்று நன்கு புரிந்தது. அவள் முகம் அவ்வளவு கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.

இவளிடம் சம்மதம் வாங்குவது பெரும் பாடாக இருக்கும் போல இருக்கிறதே என்று அரவிந்திற்குத் தோன்றியது…

ஆயாசமாக இருந்தது. அவன் பார்வை மட்டுமே அவளை தொடர்ந்தபடி இருந்தது. மீண்டும் பேச முயற்சிக்கவில்லை. தண்டபாணியிடம் பேசிய பிறகு எதுவாக இருந்தாலும் முடிவு செய்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

நேரில் பேசினால் தானா. அவன் பார்வையே கீர்த்திக்கு பல செய்திகளைச் சொன்னதே.

வீட்டிலும் அவன் தந்தையிடம் சொல்லி விட்டான், “அவசரப்படாதீங்க அப்பா… நான் வெளிநாடு போறது என்ன ஏதுன்னு பார்த்துட்டு அப்புறமா அவகிட்டயும், அவங்க வீட்லயும் பேசலாம்பா. முதல்ல அவ அண்ணன் கிட்ட பேசணும். அவன் என் க்ளோஸ் ப்ரெண்;;ட்பா. அவன் கிட்ட பேசாம வேற யார் கிட்ட பேசினாலும் அது சரியில்லை.”

அவளின் அண்ணன் இவனுக்கு ப்ரெண்ட் என்பது அவன் தந்தைக்கு புதிய செய்தி “என்ன ப்ரெண்டா” என்றார்.

“ஆமாம் அப்பா… அவ இங்க வந்து ஜாயின் பண்ணறதுக்கு முன்னாடியே அவளை எனக்குத் தெரியும்…

இது என்னோட கம்பெனின்னு தெரியாம தான் அவ இங்க வந்து ஜாயின் பண்ணினா. அதுக்கப்புறம் தான் எனக்கும் தெரியும்… அவளுக்கும் தெரியும்…”

“அதனால அப்பா முதல்ல நான் அவ அண்ணன் கிட்ட பேசறேன். அப்புறமா என்ன பண்றதுன்னு முடிவு பண்ணலாம்” என்று விட்டான்.

“சரி எப்போடா அவ அண்ணன்கிட்ட பேசப்போற… அதுக்கு ஏன் நாள் கடத்தற.”

“அவன் இங்க இல்லைப்பா லண்டன்ல இருக்கான்… அவன இருக்கிற இடத்துக்கு தான் விசா அப்ளை பண்ணியிருக்கேன். இன்னும் ஒரு வாரத்துல தெரிஞ்சுடும். அப்படி விசா கிடைச்சதுன்னா நேர்ல போகும் போது பேசிக்கறேன் அப்பா.”

அவன் தந்தை அவனை யோசனையாகப் பார்க்க… “உங்களுக்குத் தெரியாம எதுவும் பண்ண மாட்டேன். என்னை நம்புங்க அப்பா” என்றான் இவரிடமும் அந்த நம்புங்க என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டி வந்துவிட்டதே என்று நினைத்துக் கொண்டே…

மனதிற்கு சிறிது கஷ்டமாக இருந்தது. நம்புங்க என்ற வார்த்தையை தன் தங்கையை நோக்கிச் சொன்னான், தன் தந்தையை நோக்கியும் சொல்லிவிட்டான். இனி யாரை நோக்கி இதை சொல்ல வேண்டி வருமோ என்ற யோசனை அவனையறியாமல் ஓடியது.

இப்படியே வாரம் ஓடியது. அதன் பிறகு அவன் கீர்த்தியிடம் அதைப் பற்றி நேரடியாக எதுவும் பேசவில்லை… ஆனால் ஒரு சொந்தமான, உரிமையான, பார்வையைப் பார்த்து வைத்தான்.

ஆபீஸ் விஷயமாகப் பேசும்போது அதில் ஒரு உரிமை தொனிக்கும். அவன் அந்த விஷயத்தை விட்டுவிடவில்லை என்று கீர்த்திக்கு ஏதோ ஒரு செய்கை மூலம் புரிய வைத்துக் கொண்டே இருந்தான்.

தண்டபாணியிடம் தொலைபேசியில் உரையாடும் போதும் வேறு பல விஷயங்களை பேசினானே தவிர இதைப்பற்றி எதுவும் பேசவில்லை.

கீர்த்தியும் அவன் அண்ணன் தொலைபேசியில் உரையாடும்போது எல்லாம் இது பற்றி ஏதாவது பேசுவானா என்று எதிர்பார்த்துக் காத்திருக்க, அரவிந்த் பேசியிருந்தால் தானே தண்டபாணி அதைப் பற்றி பேசுவான், அரவிந்த் எதுவும் பேசவேயில்லையே.

“என்ன அண்ணா, உன் பிரெண்ட் உன்கிட்ட வர்றான் போல, இங்க ஷோரூம்ல ஒரே பேச்சா இருக்கு” என்றாள் கீர்த்தி வேண்டுமென்றே தண்டபாணியிடம் தொலைபேசியில்.

“விசா ப்ராஸஸ் ஆகிடிச்சுன்னு நினைக்கிறேன் கீர்த்தி… கைல கிடைச்சவுடனே கிளம்பிடுவேன்னு சொல்லியிருக்கான்” என்றான் சீரியஸாக தண்டபாணி.

“ஓ! உன்னைப் பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கிறானா” என்றாள் நக்கலாக கீர்த்தி.

“ஏன் கீர்த்தி கிண்டல் பண்ற, அவனோட ரொம்ப நாளைய ஆசை பாரின் போகணும்றது. அது நிறைவேறப் போகுது இல்லையா அந்த சந்தோஷம் தான் அவனுக்கு.”

“வேற எதுவும் உன்கிட்ட பேசலையாண்ணா.”

“எதைப் பத்தி கீர்த்தி.”

“என்னைப் பத்தி, ஐ மீன், என் வேலையைப் பத்தியெல்லாம் ஏதாவது பேசுவானா.”

“சே! சே! நானா கேட்டாதான் கீர்த்தி உன்னைப் பத்தி பேசுவான். இல்லைன்னால்லாம் அவன் பேச மாட்டான். அவன் பொண்ணுங்களைப் பத்தியெல்லாம் பேசவே மாட்டான் கீர்த்தி… ரொம்ப நல்லவன்.”

“பொண்ணுங்களைப் பத்தி பேசலைன்னா நல்லவனா” என்று கீர்த்தி எரிச்சல் பட…

“உனக்கு ஏன் கீர்த்தி இவ்வளவு கோபம்” என்று சமாதானத்திற்கு இறங்கி வந்தான் தண்டபாணி.

Advertisement