Advertisement

7

அவளே தண்டபாணிக்கு அழைத்தாள். இந்த நேரத்தில் அழைக்க மாட்டாளே என்று பதறிய தண்டபாணி அவனே அழைத்தான்.

“என்ன கீர்த்தி” என்று பதட்டத்தோடு கேட்க…

“ஒண்ணுமில்லை அண்ணா” என்றாள் அவசரமாக… “உன்கிட்ட பேசணும் போல தோணிச்சு அண்ணா.”

“என்ன விஷயம் சொல்லுடா” என்றான் வாஞ்சையாக…

அழைத்ததென்னவோ அரவிந்த் ப்ரபோஸ் செய்ததைப் பற்றிக் கூறத்தான்… ஆனால் மனம் அதைச் சொல்ல கூச்சமாக உணர்ந்தது.

“ஒண்ணுமில்லை அண்ணா… உன் கூடப் பேசணும்னு தோணிச்சு. அதான்” என்றாள் மறுபடியும்.

“சரி பேசு! என்ன பேசணும்?”

“நீ பேசு நான் கேட்கறேன்” என்றாள்.

இந்த அரவிந்த் டூரிஸ்ட் விசால லண்டன் வர்றேன்னு சொன்னான். உனக்கு ஏதாவது தெரியுமா.”

இது அவளுக்குப் புதிய செய்தியே…

“எனக்குத் தெரியாதே தண்டு” என்றாள். இப்போது தானே நம்மிடம் உருகி உருகிப் பேசினான். ஒன்றும் சொல்லவில்லையே என்று தோன்றிற்று கீர்த்திக்கு.

“இப்போதான் கீர்த்தி கூப்பிட்டான். ஜஸ்ட் ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.”

அப்போ தன்னிடம் பேசிய பிறகுதான் பேசியிருக்கிறான் என்று உணர்ந்த கீர்த்தி… “வேற என்ன பேசினான்” என்றாள்.

 “வேற ஒண்ணும் பேசலை… விசாக்கு அப்ளை பண்ணப் போறேன்… கிடைச்சா உடனே கிளம்பிடுவேன்னு சொல்லி, நான் இருக்கிற இடம்… மத்த விஷயங்கள் எல்லாம் கேட்டான். இங்க வர்றதுல சீரியஸா இருப்பான் போல இருக்கு.”

தன்னிடம் இதைப்பற்றி அவன் ஒன்றும் சொல்லவில்லையே என்று இருந்தது கீர்த்திக்கு.

பிறகு அதை விடுத்து வேறு ஏதேதோ பேசினான் தண்டபாணி. ஆனால் எதுவும் கீர்த்திக்கு மூளையில் ஏறவில்லை… அரவிந்த் லண்டன் போவதைப் பற்றியே சிந்தித்தது. அதே சமயம் அரவிந்த் தன்னை திருமணம் செய்யக் கேட்டதையும் அண்ணனிடம் சொல்லவில்லை என்று உணர்ந்தாள்.

“சரி, அண்ணா வச்சிடறேன்” என்று தண்டபாணி பேசிக் கொண்டிருக்கும்போதே போனை வைத்துவிட்டாள்.

மாலை வேளைகயில ஷோ-ரூம் வராத அரவிந்த், அன்று மாலையும் வந்தான்… கீர்த்தியை பார்ப்பதற்காகவே.

கீர்த்தியை அவன் பார்வை தழுவ… கீர்த்தியும் அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஏதோ குற்றச் சாட்டு இருப்பது போலத் தோன்ற… அவளிடம் தனிமையில் பேச சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்து இருந்தான்.

சந்தர்ப்பம் கிடைக்கவும்… “என்ன கீர்த்தி” என்றான்.

பதில் பேசா ஒரு மௌனமான பார்வையே பார்த்தாள்.

“என்ன கீர்த்தி, என்ன விஷயம்” என்றான்.

எந்த உரிமையில் அவள் கேள்வி கேட்பாள். கேள்வி கேட்டு அதை அரவிந்த் தன் மீது அவள் எடுக்கும் உரிமையாக நினைத்து விட்டால் அது இன்னும் பிரச்சனையாக அவள் நினைத்தாள்.

ஆனால் அவன் கேள்வி கேட்கிறானே… “ஒண்ணுமில்லை, என்ன விஷயம் எதைப் பற்றி கேட்கறீங்க?” என்று பதில் கேள்வி கேட்க…

“இல்லை நீ ஏதோ என்னைக் கேட்க பிரியப்படற மாதிரி தோணிச்சு அதான்.”

எப்படி தன் பார்வையை வைத்தே தன்னைக் கண்டு கொள்கிறான் என்று நினைத்தவள்… “ஒண்ணும் கேட்கலையே” என்றாள்.

என்னவாக இருக்கும் என்று அவனே யோசித்தவன்… “தண்டபாணியோட பேசினியா” என்றான்.

“ஆமாம்” என்பது போல் கீர்த்தி தலையசைக்க…

“ஓ! நான் லண்டன் போறதைப் பத்திச் சொல்லலைன்னு கோபமா.”

“கோபமா எனக்கு எதுக்கு உங்க மேல கோபம்” என்றாள் தருவித்த அலட்சியத்தோடு.

“சரி கோபமில்லை, ஆனால் சொல்லலைன்னு நினைச்சியா இல்லையா.”

“இல்லையே.”

“சரி நம்பிட்டேன்!” என்றான் புன்னகையுடன்.

“பெரிய புன்னகை மன்னன்… சிரிக்கிறான்…” என்று அதற்கும் கீர்த்தி மனதிற்குள் வசைபாட…

அரவிந்த் அவளையே பார்த்திருந்தான்.

இந்தப் பார்வை தனக்கு சரிப்படாது என்று நினைத்த கீர்த்தி…

“நான் கிளம்பறேன்… நீங்க பார்த்துக்கங்க” என்று சட்டென்று சொல்லி கிளம்பி விட்டாள்…

அவளுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது.

நிறைய யோசிக்க வேண்டும் என்று நினைத்தாள் தான் ஆனால் என்ன யோசிப்பது என்று தெரியவில்லை.

அரவிந்த் பேசியதை நினைத்து அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தால், அவளுக்கு பதில் ஒன்றும் தெரியவில்லை.

அரவிந்தை தனக்குப் பிடிக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் பிடிக்காமல் இருப்பது போல் இல்லை. இந்த வார்த்தைகளின் குழப்பம் தான் அவள் மனதிலும்.

பிறகு அவளாகவே ஒரு முடிவுக்கு வந்தாள், நமக்கென்ன அவன் தான் நடத்திக் கொள்கிறேன் என்கிறானே, வேண்டுமென்றால் நடத்திக் கொள்ளட்டும் என்று. அதற்கு பிறகு தான், அவளால் நிம்மதியாக உறங்கவே முடிந்தது.

அரவிந்தும் தன் மனதை உரைத்திருந்ததினால், அவனும் நிம்மதியாகவே உறங்கினான். அவன் நேற்று வரை கூட கீர்த்தியை அப்படி நினைத்ததில்லை. இது திடீரென்று தோன்றிய உணர்வு தான். திருமணம் என்றவுடன் அவள் நினைவிற்கு வந்தாள்.

வந்த பிறகு அவளை இன்னும் மிகவும் பிடித்து விட்டது.

ஆனால் பிடித்திருக்கிறது என்று கூறியவுடனே கீர்த்தியின் கண்களில் தோன்றிய பயம் அது, பிடிக்கவில்லை தான். இருந்தாலும் சற்று விட்டுதான் பிடிக்க வேண்டும் என்று தோன்றியதால் அமைதியாக இருந்து விட்டான்.

இப்படியாக கீர்த்தியும், அரவிந்தும் நிம்மதியாக உறங்க, நிம்மதியில்லாமல் உறங்காமல் இருந்த ஜீவன் அரவிந்தின் அப்பா சிதம்பரம்.

அவருக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டதில் இருந்து அவரின் நிம்மதி தான் குலைந்தது.

அரவிந்த் தன் மனதைத் தெளிவாக உரைத்துவிட்டான். கீர்த்தியோடு நடக்கிறதோ இல்லையோ அது பிறகு ஆனால் வனஜாவுடன் நடக்காது என்று தெளிவாகச் சொல்லி விட்டான்.

அவன் அவ்வளவு தெளிவாகச் சொல்லிய பிறகு சம்மந்தி வீட்டில் சொல்லாமல் இருப்பது நல்லதல்ல. அவர்கள் வேறு இடம் பார்ப்பார்கள்.

அரவிந்தைப் பற்றி நன்கு தெரிந்தவர் அவன் தந்தை. அவனிடம் கட்டாயப்படுத்தி எந்த ஒரு செயலையும் செய்ய வைக்க முடியாது.

அவரின் தற்போதைய ஒரே நிம்மதி கீர்த்திதான். அவளை கைகாட்டியதால் தான் சற்று நிம்மதியாக உள்ளார். அவளை கடந்த வருடமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். தப்பு சொல்ல முடியாத நல்ல பெண். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறாள்.

எத்தனை பேரிடம் பழகினாலும் அனைவரையும் ஒரு எல்லைக்குள்ளே தான் வைத்திருக்கிறாள். அதையும் மீறி நெருங்க விடுவதில்லை.

அவள் குடும்பம் அதைப் பற்றி எல்லாம் அறிந்தவரல்ல. அவள் நல்ல பெண். அரவிந்த் யாரையாவது இழுத்து வந்து இவளைத் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லியிருந்தாலும் தான் ஒன்றும் செய்திருக்க முடியாது என்று தெரியும். அது வரையில் ஒரு நல்ல பெண்ணை காட்டியிருக்கிறானே என்று சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டியது தான் என்பதே அவர் எண்ணமாக இருந்தது.

காலையில் எழுந்தவுடன், இதைப்பற்றி தன் மனைவியிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே படுத்தார்.

காலையில் அரவிந்த் கிளம்பும் வரை பொறுமையாக இருந்தவர்… அவன் கிளம்பியவுடனே தன் மனைவியிடம் பேச விழைந்தார்.

ராணி, “அரவிந்த் ஒரு பொண்ணை விரும்பறேன்னு சொல்றான்” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் சிதம்பரம்.

பதறிவிட்டார் ராணி, “ஐய்யய்யோ என்ன சொல்றீங்க” என்று அவர் பதறிய பதறலில் சிதம்பரத்திற்கே டென்ஷன் ஏறிவிட்டது.

“என்னடி இவ்வளவு பதட்டப்படற, உடம்புக்கு ஏதாவது வந்து தொலையப்போகுது.”

“வந்தா வரட்டுமே இப்படி ஒரு புள்ளைய பெத்து வச்சதுக்கு வராம என்ன செய்யும். நான் நளினி வீட்ல என்ன சொல்லுவேன். அந்த பொண்ணு வனஜா வேற கண் முன்னாடி நிக்கறாளே” என்று அழவே ஆரம்பித்து விட்டார்.

“ராணி நீயே இப்படிச் சொன்னா, சம்மந்தி வீட்ல நாம என்ன சொல்லி சமாதானப்படுத்தறது” என்றான்.

“அப்ப முடிவே பண்ணிட்டீங்களா அந்தப் பொண்ணையே அரவிந்துக்கு கல்யாணம் பண்றதுன்னு.”

“முடிவெல்லாம் பண்ணலை, உன்னைக் கேட்காம நான் எந்த முடிவு எடுத்திருக்கேன், ஆனா யோசிச்சேன், இல்லைன்னு சொல்லலை.”

“யாரோ, என்னவோ? யோசிச்சேன்னு அசால்டா சொல்றீங்க.”

“உனக்குத் தெரியாதுடி பொண்ணை, எனக்குத் தெரியும். நம்ம ஷோரூம்ல தான் ஒரு வருஷமா வேலை பார்க்குது.”

“உங்களை யாரு பொண்ணுங்களையெல்லாம் வேலைக்கு வெக்கச் சொன்னா” என்று அவர் மேல் பாய்ந்தார் ராணி.

“நாயென்ன இப்படி ஆகும்னு கண்டனா, பொண்ணு படிச்சிருந்தா, திறமைசாலியா இருந்தா அதான் செலக்ட் பண்ணினேன்.”

“நல்ல திறமைசாலிதான் நம்ம பையனையே மயக்கிட்டாளே.”

“தப்பா பேசாத ராணி, நல்ல பொண்ணு. உன் பையன் பண்ற கூத்து, இன்னும் அந்த பொண்ணுக்குத் தெரியுமோ என்னவோ.”

“அது எப்படி தெரியாம இருக்கும். அவ்வளவு பெரிய கைகாரியா அவ.”

“இப்போ தானே சொன்னேன் தப்பா பேசாதன்னு, உனக்கு பேசணுமா உன் பையன பேசு. அவன என்னவோ பெரிய உத்தமன் மாதிரி பேசற. எனக்குப் புரிஞ்சவரைக்கம் இது உன் பையனோட வேலைதான்.”

“நீங்களே நம்ம பையனை பத்தி இப்படிப் பேசுனா எப்படி.”

“உண்மையை கண்டு ஓடக்கூடாது ராணி, ஒத்துக்கணும்.”

“ஒத்துக்கிட்டு என்ன பண்ணச் சொல்றீங்க. அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்றீங்களா.”

“ஏன பண்ணினா என்ன தப்பு, பொண்ணை பொறுத்த வரைக்கும் ஒரு பிரச்சனையுமில்லை, நல்ல பொண்ணு. என்ன குடும்பத்தைப் பத்திக் கொஞ்சம் விசாரிக்கணும். நம்ம அளவு வசதியில்லைன்னாலும் பரவாயில்லை. என் கவலையெல்லாம் பொண்ணு வீட்ல ஒத்துக்கணும், பொண்ணு ஒத்துக்கணும். ஏன்னா உன் பையன் எவ்வளவு தெண்டமா சுத்திட்டு இருக்கான்னு பொண்ணுக்கு நல்லா தெரியும்.”

“நீங்களே நம்ம பையன கீழ இறக்கி பேசறீங்களே.”

“உண்மையத்தானே சொல்றேன். அவன் எந்த நேரம் என்ன பேசுவான் என்ன செய்வான்னு யாருக்குத் தெரியுது.”

“அவன் இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணறானோ இல்லையோ, வனஜாவை பண்ண முடியாதுன்னு சொல்லிட்டான். முதல்ல நளினிகிட்ட சொல்லிட்டு, முடிஞ்சா நம்மளே நேர்ல ஒரு வார்த்தை போய் சொல்லிட்டு வந்துடலாம். அவங்க அந்தப் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளையாவது பார்ப்பாங்க.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நளினி தன் கணவன் மாதவனுடன் வீட்டிற்கு வந்தாள்.

அவளைப் பார்த்து முகம் மலர்ந்த அவளின் பெற்றோர், “என்ன நளினி உள்ளூர்ல இருக்கன்னு பேர்தான். ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் தான் வீட்டுப் பக்கம் எட்டிப் பாக்குற… ஒரு வாரம் வந்து இருந்துட்டுப் போயேன்” என்றார் ராணி.

“அதுதான் வந்துட்டேன் இல்லைம்மா. அப்பறம் என்ன. வீட்ல வேலை சரியா இருக்கு.”

“வந்தது தான் வந்த… குழந்தைங்களை கூட்டிட்டு வரக்கூடாது.”

“இதுக்காக ஸ்கூல் லீவ் போடச் சொல்றீயா. நீ வா எங்க வீட்டுக்கு வந்து குழந்தைங்களை பார்த்துட்டுப் போ.”

“என்ன பேசினாலும் ஒரு பதில் வச்சிரு.”

“என்ன பதில் வச்சிரு… வீட்டுக்குள்ளயே ஏன் அம்மா அடைஞ்சி கிடக்கற.”

“எனக்கு இது தாண்டி பிடிச்சிருக்கு.”

“என்னவோ போ… நீயும் எல்லாத்துக்கும் பதில் வச்சிரு” என்று ராணியைப் போலவே கூறி சிரித்தாள்.

“நான் பாரு பேசிட்டே இருக்கேன். முதல்ல மாப்பிள்ளைக்கு காபி போட்டுட்டு வரேன்” என்று உள்ளே போகப் போக…

“இருக்கட்டும் அத்தை… இப்போதான் சாப்பிட்டு வந்தோம், கொஞ்சம் நேரம் போகட்டும் நீங்க உட்காருங்க” என்றான் மாதவன்.

“நாங்களே உங்களை வந்து பார்க்கணும்னு இருந்தோம். மாப்பிள்ளை அரவிந்த் கல்யாண விஷயமா” என்று சிதம்பரம் ஆரம்பிக்க…

“நாங்களும் அது விஷயமா தான் வந்தோம் மாமா” என்றான் மாதவன்.

“என்னங்க மாப்பிள்ளை.”

“எங்க அப்பா சொந்தத்துல இருந்து ஒரு நல்ல வரன் வந்திருக்கு… வீட்ல எல்லோருக்கும் திருப்தி. வனஜாக்கும் பிடிச்சிருக்கு. சின்ன வயசுல இருந்தே அரவிந்த பார்த்துப் பழகினதால கல்யாணம் பண்ற எண்ணம் எனக்கு இல்லைங்கறா. இந்த மாப்பிள்ளைய தான் பிடிச்சிருக்குன்றா. அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டு என்ன செய்யலாம்னு முடிவு பண்ணலாம்னு அப்பா சொன்னாரு. அதான் கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம்.”

“அதுக்கென்ன மாப்பிள்ளை, நல்ல வரன், நம்ம பொண்ணுக்கும் பிடிச்சிருக்குன்னா தாராளமா பாருங்க.” என்றார் கவலையகன்றவராக சிதம்பரம்.

“நீ என்ன அம்மா சொல்ற” என்ற நளினி தன் அன்னையைப் பார்த்துக் கேட்க…

“நான் சொல்லி என்ன நளினி ஆகப்போகுது… பொண்ணுக்குப் பிடிச்சா முடிச்சிடுங்க” என்றார் அவரும் மகனை மனதில் வைத்து…

இவ்வளவு சீக்கிரம் தன் பெற்றோர் தங்கள் சம்மதத்தை தெரிவிப்பார்கள் என்று நளினியே எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் நீண்ட நாட்களாக இந்த திருமணப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது.

“என்ன அம்மா, என்ன விஷயம் இவ்வளவு சீக்கிரம் சம்மதிச்சிட்டீங்க…”

சிதம்பரமும், ராணியும் அமைதியாகவே இருந்தனர். “என்ன அப்பா பேசாம இருக்கீங்க என்ன விஷயம்” என்று மறுபடியும் கேட்டாள் நளினி.

நிமிஷத்தில் ஏதோ விஷயமிருக்கிறது என்று யூகித்த தங்களின் மகளின் புத்திசாலித்தனத்தை அவளின் பெற்றோர் மனதிற்குள்ளேயே மெச்சிக் கொண்டனர்.

“அவன் ஒரு பொண்ணை விரும்பறேன். அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்றான் நளினி” என்றார் ராணி.

“என்ன அம்மா சொல்றீங்க” என்றாள் ஆச்சரியமாக நளினி. அவள் அண்ணன் ஒரு பெண்ணை விரும்புகிறானா. இது மிகவும் ஆச்சரியமான விஷயம் தான் நளினிக்கு ஏனென்றால் அவள் அண்ணன் பெண்களின் புறம் திரும்பக்கூட மாட்டான். அவன் ஒரு பெண்ணை விரும்புகிறானா.

“அவன் பொண்ணுங்க பக்கம் திரும்பக்கூட மாட்டானே அப்பா, அவன் அப்ப ஒரு பொண்ணை விரும்பறது பெரிய விஷயம்தான். யார் அம்மா அது?”

“எனக்கெதுவும் தெரியாது. எல்லாம் உங்க அப்பாவைக் கேளு அவர்கிட்ட தான் சொல்லியிருக்கான்” தன்னிடம் மகன் எதுவும் சொல்லாத ஆதங்கம் அவர் பேச்சில் நன்றாகத் தெரிந்தது.

“யார்ப்பா அது.”

“அது நம்ம ஷோரூம்ல வேலை பார்க்கற பொண்ணு தான்மா பேரு கீர்த்தி, குடும்ப விவரம் சொல்லியிருக்கு. ஆனா எனக்கு சரியா ஞாபகம் இல்லை. எம்.பி.ஏ. படிச்சிருக்கு. நம்ம ஷோரூம்ல மேனேஜரா இருக்கு. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நல்ல பொண்ணு. இந்த விஷயமே அந்த பொண்ணு சைட்ல இருந்து வந்து இருக்காதுன்றது என் அபிப்ராயம் அனேகமா உன் அண்ணன் தான் ஆரம்பிச்சிருப்பான்” என்றார் சிதம்பரம்.

Advertisement