Advertisement

6

பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தான் அரவிந்த்… தான் வனஜாவை திருமணம் செய்வதா. திருமணம் என்றதுமே அவன் முன் கீர்த்தியின் முகம் மின்னி மறைந்தது.

அவன் உணர்ந்தான், கீர்த்தியை அவனுக்குப் பிடித்திருந்ததை. ஆனால் அது சரி வருமா என்று தெரியவில்லை. அவளுக்கு தன்னைப் பிடிக்குமா தெரியவில்லை.

கீர்த்தியை அவனுக்கு மிகவும் பிடித்தது. அது திடீரென்று இப்போதுதான் தோன்றியது. முன்பெல்லாம் அவன் இதைப்பற்றி யோசிக்கக்கூட இல்லை.

என்ன செய்வது எப்படி இதை நடத்திக் கொள்வது. அதுவும் உயிர் நண்பனின் தங்கை வேறு.

வனஜாவை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது… வீட்டில் ஒத்துக் கொள்வார்களா, இரவு முழுவதும் இதே யோசனைகள் ஆக்கிரமித்தன.

கீர்த்தியிடம் சென்று உன்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்வதா, தண்டபாணியிடம் சொல்வதா அல்லது தன் தந்தையிடம் சொல்வதா அவனுக்குத் தெரியவில்லை.

தந்தையிடம் சொல்லி… கீர்த்தி வேண்டாம்.. என்று மறுத்துவிட்டாலும் பிரச்சனை. கீர்த்தியிடம் சொல்லி, தந்தை வேண்டாம் என்று மறுத்து விட்டாலும் பிரச்சனை.

யார் ஒத்துக் கொண்டாலும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் கீர்த்தி ஒத்துக் கொள்ள வேண்டுமே. மனதில் ஒரு இனம் புரியாத அவஸ்தையை உணர்ந்தான்.

இரவு முழுவதும் இப்படி பலதும் யோசித்துக் கொண்டிருந்ததால் காலையில் எழுவதற்கே மிகுந்த நேரமாகி விட்டது.

அவன் அம்மாவும் எழுப்பவில்லை. எழும்போதே மணி ஒன்பது.

எழுந்தவுடனேயே அவன் அப்பா கேட்டார். “என்னடா என்ன முடிவு பண்ணியிருக்க… நீ என்ன முடிவு பண்ணியிருக்கன்னு சொன்னாதான் நான் பொண்ணு வீட்ல பேச முடியும்.”

“அவசரப்பட வேண்டாம் அப்பா பொறுமையா யோசிச்சுச் செய்வோம்” என்றான் பணிவாக.

இப்படி பணிவாகப் பேசும் மகனை ஆச்சரியமாக பார்த்தார் சிதம்பரம். இது அவன் இயல்பு அல்லவே. ஏன் இப்படி பேசுகிறான். காதல் கீதல் என்று எதிலேயாவது மாட்டி விட்டானா என்று முதன் முறையாகத் தோன்றியது.

அவனையே பார்த்தார். அவர் பார்வையைச் சந்திக்காமல் வேறு திக்கில் பார்த்தான். இப்படி அவன் இருந்ததே இல்லை. தப்பு செய்தாலும் தைரியமாகச் செய்வான், அதையே சொல்வான். என்றும் கண்களைப் பார்த்துப் பேசத் தயங்கியதில்லை. என்னவாயிற்று இவனுக்கு என்று அவனையே கவனித்தார்.

அவரிடம் பேசியவன், அவர் தன்னையே கேள்வியாகப் பார்ப்பதை உணர்ந்து ரூமிற்குள் புகுந்து கொண்டான். அவனுக்கு அவனே என்ன செய்வது என்றறியாமல் ரெஸ்ட்லெஸ்ஸாக உணர்ந்தான்.

அவனுக்கு கீர்த்தியை பிடித்திருக்கிறது என்று உணர்ந்த பிறகு அவளைப் பார்க்க வேண்டும் போலத் தோன்ற… அவசரமாகக் குளித்துவிட்டுக் கிளம்பினான்.

அவன் ஷோரூமில் நுழையும்போதே… அவனுக்கு முன்னே அவன் தந்தை இருந்தார். இவர் எதுக்கு இன்னைக்கு இங்க காலையிலேயே வந்திருக்கார் என்று எரிச்சலாக மனதிற்குள் நினைத்தபடி அவரைப் பார்த்தான்.

அவர் மும்முரமாக கீர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தார். அவன் பார்வை கீர்த்தியை சிறையெடுத்தது பொறாமையாக. அவன் கண்களுக்குப் புதிதாய் தெரிந்தாள். புத்தம் புதிதாய். அப்போதுதான் கீர்த்தியின் அழகே அவன் கண்களில் பட்டது.

இத்தனை நாட்கள் கீர்த்தியைப் பார்த்திருக்கிறான். ஏன் சில சமயம் அவளை ரசித்தும் இருக்கிறான் தான். ஆனால் அவள் அழகை உணர்ந்து பார்த்ததில்லை. சராசரிக்கும் சற்று உயரமாக, அளவான உடற்கட்டில், நல்ல முகட்டில் அழகாகத் தோன்றினாள்.

இப்படி அழகாக இருப்பவளை எப்படி தான் இவ்வளவு நாட்கள் கவனிக்காமல் போனோம் என்று நினைத்தான். அவனை அவன் தந்தை கவனித்து விட்டார். உள்ளே அவன் வேகமாக நுழைந்ததையும், தன்னை பார்த்து சட்டென்று வேகம் குறைந்ததையும், பின்பு கீர்த்தியையே அவன் கண்கள் அளவெடுப்பதையும் பார்த்தார்.

இதையெல்லாம் கீர்த்தி உணரவில்லை. அவனை பார்த்தவள் அவனுக்கு விஷ் செய்துவிட்டு, தன் வேலையைப் பார்க்க போய்விட்டாள்.

இதைப் பார்த்த சிதம்பரம் நிமிடத்தில் உணர்ந்தார், எதுவாகினும் பிரச்சனை தன் மகனிடமே என்று. கீர்த்தி அவனைச் சற்றும் கண்டு கொள்ளவில்லை என்று அன்று மற்றொரு ஷோ ரூமிற்கு போகாமல் அங்கேயே அமர்ந்து கொண்டார்.

தினமும் சிறிது நேரமே இருக்கும் சார் ஏன் இன்று இங்கேயே அமர்ந்து கொண்டார் என்று கீர்த்திக்குப் புரியவில்லை. ஆனால் அரவிந்த் தன் தந்தை எதையோ உணர்ந்து விட்டார். அதனால் தன்னை நோட்டம் விடுவதற்காகவே இங்கே அமர்ந்து கொண்டார் என்று அரவிந்த் கண்டு கொண்டான்.

கண்டு கொண்டவன் அதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் கீர்த்தியைப் பார்க்கத் துவங்கினான்.

இந்த விளையாட்டு அரவிந்திற்குப் பிடித்திருந்தது. என்னவோ கண்டு பிடிக்கிற மாதிரி தன் தந்தை தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், அப்படியே தான் கீர்த்தியை விரும்புவதை தெரிந்து கொள்ளட்டும் என்று அவளையே விடாமல் பார்க்க துவங்கினான்.

அவன் விடாமல் கீர்த்தியை பார்க்கத் துவங்கியவுடனே அவன் தந்தை கண்டு கொண்டார். அவன் ஏதோ முடிவெடுத்து விட்டான் என்று. அதை தனக்கு உணர்த்துவதற்காகவே அவன் விடாமல் பார்க்கிறான் என்றும் கண்டு கொண்டார்.

இப்பொழுது என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. அவனை ஏதாவது கேட்கலாம் என்றால், அவர் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவன் எல்லாம் செய்வது போலத் தோன்றியது. இவர்களின் பார்வை பரிமாற்றங்களை உணராத கீர்த்தி, கஸ்டமர்களிடம் மிகவும் பிஸியாக இருந்தாள். அவள் கஸ்டமர்களிடம் பிஸியாக இருப்பதை பார்த்த அரவிந்த், தன் தந்தையிடம் வந்தான்.

“என்ன அப்பா இன்னும் கிளம்பாம இருக்கீங்க…”

“இன்னைக்கு எனக்கு பதிலா நீ அந்த ஷோரூம் போறயா.”

“ஏன் அப்பா தினமும் நீங்க தானே போவீங்க.”

“ஒரு சேஞ்ச்க்கு நீ போ அரவிந்த்.”

“எனக்கு எந்த சேஞ்சும் வேண்டாம்பா. நான் எதையும் சேஞ்ச் பண்ணற மாதிரி இல்லை” என்றான் பூடகமாக.

“எதை சேஞ்ச் பண்ணற மாதிரி இல்லை அரவிந்த்.”

“நீங்க எதைக் கேக்கறீங்க அப்பா.”

“நீ எதைச் சொல்ற.”

“அப்பா” என்றான் சின்ன சிரிப்போடு.

“உங்களுக்கு ஏதாவது கேட்கணும்னா நேரடியா கேளுங்க… ஏன சுத்தி வளைக்கறீங்க.”

“அதே தான் அரவிந்த் உனக்கும் நீ ஏதாவது சொல்லணும்னா சொல்லு… நீயும் சுத்தி வளைக்காத.”

“நீங்க தான் என்னை ஆராய்ச்சி பார்வை பார்த்தீங்களே நீங்க என்ன கண்டு பிடிச்சீங்க” என்றான்.

“பச் அரவிந்த் சொல்ல வர்றதை தெளிவா சொல்லு” என்று அவர் கோபப்பட.

“நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதுதான்பா” என்றான் தீர்மானமாக…

“என்ன விஷயம்” என்று நேரடியாகப் பேசிக் கொள்ளாமலேயே ஒரு அனுமானத்திற்கு இருவரும் வந்தனர்.

“வனஜாவோட கல்யாணம் பேசாதீங்கப்பா… ஏதாவது சொல்லி தட்டி விடுங்க. இவளோட என் கல்யாணம் நடக்குதோ இல்லையோ அது வேற விஷயம், எங்கப்பா அம்மாவும், அவ அப்பா அம்மாவும் அவளும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம்.”

“ஆனா வனஜாவோட என் கல்யாணம் சரி வராதுப்பா… சின்ன வயசுல இருந்தே அவளைப் பார்த்திருக்கேன். அவ எனக்கு நல்ல ப்ரெண்ட் கூட. அது சரி வராதுப்பா.”

“நான் சொல்றபடி எல்லாம் நடக்கமாட்டேன்னு நினைக்காதீங்கப்பா… புரிஞ்சுக்கோங்க. எனக்கும் வனஜாவுக்கும் கட்டாயம் சரி வராது.”

“என்னை நீங்க வெளிநாடு அனுப்பறீங்களோ, இல்லையோ தனிச்சு முடிவெடுங்க… என் கல்யாணத்தோட அதை சேர்க்காதீங்கப்பா… ப்ளீஸ்பா என்னைப் புரிஞ்சுக்கோங்க” என்றான் மன்றாடியபடி.

தன்னுடைய மகன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடன் மனம் விட்டுப் பேசுகிறான் என்பது புரிந்தது. இவ்வளவு தெளிவாக வனஜாவை திருமணம் செய்ய மாட்டேன் என்று சொல்லுபவனிடத்தில் என்ன பேசுவது என்றும் தெரியவில்லை.

வேறு யாராவது இருந்தால் தட்டிக் கழித்து விடலாம். இவர்கள் சம்மந்தி வீட்டினராய் வேறு இருக்கிறார்கள். என்ன செய்வது என்று அவருக்கே தெரியவில்லை.

பேசாமல் மகளிடமே ஆலோசனை கேட்போம் என்று நினைத்தார்.

மகன் தன்னுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது. என்ன இருந்தாலும் ஒரே மகன். அவன் இஷ்டப்படி வாழ வைக்காவிட்டால் தான் இவ்வளவு சம்பாதித்து என்ன பயன்.

ஏற்கனவே வெளிநாட்டு வேலையை மிகவும் ஆசைப்பட்டவனுக்கு அதை தட்டி விட்டாயிற்று. இதில் திருமணத்தையும் தட்டிப் பேசினால், அவன் வீணாக போய்விட்டால் என்ன செய்வது என்று லேசான பயம் எட்டிப் பார்த்தது.

எது எப்படியோ, ஒரு மூன்று மாதம் அவன் இஷ்டப்படி முதலில் வெளிநாடு போய் வரட்டும், பின்பு திருமணத்தை பற்றிப் பேசலாம் என்று நினைத்தவர். அதையே அவனிடம் சொன்னார்.

“முதல்ல நீ ஒரு மூணு மாசம் எங்கயோ போகணும்னியே  போயிட்டு வா வந்ததுக்கு அப்புறம் பேசலாம். அதுவரைக்கும் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார்.

இந்த அளவில் இறங்கி வந்தாரே என்று நினைத்தவன் “சரிங்க அப்பா” என்றான்.

இருவரும் இருவருக்கும் சாதகமான விஷயத்தையே பேசி இருந்தாலும்… இருவர் மனதிலும் சந்தோஷமில்லை.

என்ன ஏது என்று தெரியாதிருக்கும் பட்சத்தில் இதைப் பற்றி கீர்த்தியிடம் பேசவும் மனம் விழையவில்லை.

ஆனால் இவன் ஊருக்குப் போய் வருவதற்குள் அவள் வாழ்க்கையில் புதிதாக யாராவது வந்து விட்டால் என்ன செய்வது என்று பயமாகவும் இருந்தது. இதுவரை அவள் வாழ்வில் யாரும் இல்லை என்பது அவனுக்கு நிச்சயமே. இனிமேல் யாராவது வந்து விட்டால்… கீர்த்தியா… அவன் நீண்ட நாள் கனவான வெளிநாட்டு பயணமா.

இரண்டும் நடக்க வேண்டும் என்றால் அவன் கீர்த்தியிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

கீர்த்தி தந்தைக்கும் மகனுக்கும் ஏதோ வாக்குவாதம் என்ற அளவிற்குப் புரிந்தது. இருவர் முகங்களும் ஏதோ யோசனையில் இருப்பது தெரிந்தது. ஆனால் அந்த பிரச்சனைக்கு மூலக்காரணம் அவள் என்று கீர்த்தி சிறிதளவும் நினைக்கவில்லை.

மதியமாக அவன் தந்தை சென்ற பிறகும் எங்கும் வெளியில் செல்லாமல் ஷோரூமிலேயே இருந்தான் அரவிந்த். கஸ்டமர்களை கவனித்துக் கொண்டே அவனையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் கீர்த்தி.

சிறிது நேரத்திலேயே அவளை தன் கேபினுக்கு அழைத்தான் அரவிந்த்.

வந்தவளிடம், “உட்காரு கீர்த்தி” என்றான்.

கீர்த்தி உட்கார்ந்திருந்தாள், “சாப்டிட்டியா கீர்த்தி.”

“இல்லை சார், இனிமே தான் சாப்பிடணும்” என்றாள் யோசனையாக, இவன் இப்படியெல்லாம் என்றுமே தன்னிடம் கேட்டதில்லையே என்பதை மனதில் வைத்து,

“நம்ம லஞ்சுக்குப் போலாமா.”

“என்ன” என்று கேட்டு விழித்தாள் கீர்த்தி.

“நம்ம லஞ்சுக்கு போலாமான்னு கேட்டேன்.”

“இல்லை, அது… நான் யாரோடயும் அப்படியெல்லாம் போனதில்லை.”

“யாரோடையும் போனதில்லைன்னா பரவாயில்லை. என்னோட வா.”

“ஏன் நீ மட்டும் என்ன ஸ்பெஷல்” என்று கேள்வி கேட்க வாய் வரை வந்தது. இருந்தாலும் கேட்கவில்லை…

“ஏன் சார் திடீர்னு லஞ்செல்லாம் கூப்பிடுறீங்க. என்ன ஸ்பெஷல்” என்றாள் இலகுவாகவே…

“எனக்கு உன்னோட கொஞ்சம் பேசணும்.”

“பேசணும்னா இங்கயே பேசுங்களேன். அதுக்கு எதுக்கு லஞ்ச் போகணும்.”

“கொஞ்சம் பர்சனலா பேசணும்.”

“பேசுங்களேன்” என்றாள் என்ன வரப் போகிறதோ என்று பயந்தவாறே.

அவள் பயந்தது போலவே அரவிந்த்… “எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு கீர்த்தி… நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்” என்றான்.

எதையும் மறைத்தோ, சுற்றி வளைத்தோ பேசத் தெரியாத அரவிந்த்…

சற்று அதிர்ந்தாள் கீர்த்தி… இந்த மாதிரி சொல்வான் என்று சிறிதளவு கூட என்றுமே நினைத்ததில்லை கீர்த்தி.

அப்படியே அமர்ந்து விட்டாள்…

“கீர்த்தி… நீ என்ன சொல்றியோ, நான் அதை வச்சுதான் தண்டபாணிகிட்ட பேசணும்.”

“இல்லை, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. நான் அந்த மாதிரி உங்களை நினைச்சதேயில்லை.”

“ஏன், வேற யாரையாவது நினைச்சிருக்கியா…”

“இல்லல்ல” என்றாள் அவசரமாக… “நான் யாரையும் அப்படி நினைச்சதேயில்லை. என் அப்பா அம்மா எப்படி சொல்றாங்களோ அப்படித்தான்.”

“இனிமே நினைச்சுப் பாரேன் கீர்த்தி… இதுவரைக்கும் நினைக்கலைன்னா பரவாயில்லை.”

அவனை பயத்தோடு பார்த்தாள் கீர்த்தி. என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அவளின் பயந்த பார்வையைப் பார்த்தான் அரவிந்த்.

தைரியமான கீர்த்தியிடம் அவன் அந்தப் பார்வையை எதிர்பார்க்கவில்லை.

காதல் என்ற வார்த்தையே கீர்த்திக்கு இனம் புரியாத பயத்தைக் கொடுத்தது.

என்னதான் மனிதர்கள் தைரியசாலிகளாய் இருந்தாலும், சில விஷயங்களில் அவர்களை அறியாமல் பயம் தோன்றும்.

அப்படிதான் கீர்த்திக்கு காதல் என்ற வார்த்தையை கேட்டதுமே தோன்றிற்று.

தன் வாழ்க்கையில் கீர்த்தி காதல் என்ற ஒன்றை விளையாட்டு போல கூட நினைத்துப் பார்த்ததில்லை. அது எப்படி வரும். தானாய் வருமா? நமக்கு மட்டும் பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் அவர்களின் குறைதான் தெரிகிறதே! வேறு தெரிவதில்லையே! அப்புறம் எப்படி காதல் வரும் என்று சிலமுறை சிந்தித்துகூட பார்த்திருக்கிறாள்.

எல்லாமாக சேர்ந்து கொள்ள… “எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. நான் உங்களை அந்த மாதிரி நினைச்சுப் பார்த்ததில்லை. உங்களை மட்டுமில்லை வேற யாரையும் நினைச்சுப் பார்த்ததில்லை. அதனால எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை” என்று பரிதாபமாகப் பார்த்தாள்.

“நான் உங்க அண்ணன்கிட்ட பேசறதுக்கு முன்னாடி உன்கிட்ட இதைப்பத்தி பேசிடணும்னு நினைச்சுதான் பேசினேன். உங்க அண்ணன் கிட்ட பேசவா.”

“அண்ணா என்னை தப்பா நினைச்சுட்டான்னா.”

“இதுல உன்னைத் தப்பா நினைக்க என்ன இருக்கு… நான் தானே உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லப் போறேன்.”

அவள் முகம் தெளிவாகவேயில்லை. “இதுல பயப்பட ஒண்ணுமில்லை கீர்த்தி. நான் பேசறேன். உங்க அண்ணாவோட. உங்க அப்பா அம்மாவோட எங்க அப்பா அம்மாவைப் பேச வைக்கறேன். நீ டென்ஷன் இல்லாமல் இரு” என்று அவளுக்கு நிறைய டென்ஷன் ஏற்படுத்திக் கொடுத்தான்.

“நீ போய் சாப்பிடு. உனக்குத் தெரியாம உன்னைப் பத்தி எதுவும் நடக்க வேண்டாம்னு தான் முதல்ல உன்கிட்ட சொன்னேன்” என்று அவளிடம் சொல்லி அனுப்பினான்.

அவளுக்கு நிறைய டென்ஷன் ஆகிவிட்டது. சாப்பாடு இறங்கவேயில்லை. சாப்பாட்டை அளந்து கொண்டே இருந்தவள் பின்பு அதனை மூடியே வைத்து விட்டாள்.

அவளுக்கு எப்போது தண்டபாணி அழைப்பான் இதைப் பற்றி சொல்வோம் என்று இருந்தது.

நேரம் ஆக ஆக ஏதோ தவறு செய்து விட்ட மாதிரியே கீர்த்திக்குத் தோன்ற… அவளே தண்டபாணிக்கு அழைத்தாள்.

Advertisement