Advertisement

5

அன்றிலிருந்து ஷோரூமிற்கு வந்தால், கீர்த்தியோடு பேசமாட்டான். வெறும் பார்வை பரிமாறல் மட்டுமே. கீர்த்தியும் அவனோடு பேச விழையவில்லை. அவளுக்கு நிச்சயமே, அவன் தவறு செய்கிறான், அந்த மாதிரியான நடத்தையால் என்று. அதனால் அவன் உணரட்டும் என்று அவளும் அவளிடத்தில் சற்று அலட்சியப் போக்கையே காட்டினாள்.

அந்த அலட்சியப் போக்கு, அவளை திமிர் பிடித்தவளாகவே அரவிந்திடம் உருவகப் படுத்தியது. அவனுக்கு ஏனோ கீர்த்தியின் அந்தப் பரிமாணம் மனதிற்கு பிடிக்கவேயில்லை.

என்ன மாதிரி கீர்த்தியை எதிர்பார்த்தான் என்று தெரியவில்லை. ஆனால் இந்த திமிர் பிடித்த, அவனை அலட்சியப் பார்வை பார்க்கும் கீர்த்தியை அவனுக்குப் பிடிக்கவில்லை.

தண்டபாணியும் கீர்த்தியிடம் கூறினான். “ஒரு நேரம் நல்லா நடந்துப்பான். ஒரு நேரம் எப்படி நடந்துப்பான்னு சொல் முடியாது கீர்த்தி, எதுக்கும் அவன் விஷயத்துல தலையிடாத” என்றான்.

“என்னவோ போ நல்ல ப்ரண்ட் பிடிச்சிருக்க, என்ன அவன் பிரச்சனை. ஏன் அவன் இப்படி இருக்கான்.”

“அவனுக்கு இந்த பர்னிச்சர் பிஸினஸ் பிடிக்கலை. அவன் கூட படிச்ச மத்த பசங்க மாதிரி வெளிநாடு போகணும் சம்பாதிக்கணும். அதை அவன் அப்பா அனுமதிக்க மாட்டேங்கறார். அவர் மறுக்க மறுக்க இவனுக்கு போகணும்ன்ற வெறி அதிகமாயிடுச்சு. நல்லவன் தான் நட்புக்காக என்ன வேணா செய்வான். அதே சமயம் பிடிக்கலைன்னாலும் பிடிக்கலைதான்” என்று தன் நண்பனைப் பற்றிக் கூறினான்.

“உனக்கு எப்போ அண்ணா கிளம்பணும்” என்றாள்.

“எனக்கு இன்னும் ஒரு வாரத்துல கிளம்பணும், லண்டன்” என்றான் சிரிப்போடு.

“அங்க காஸ்ட் ஆஃப் லிவ்விங் எல்லாம் ரொம்ப அதிகம் சொல்றாங்களே தண்டு, ஏதாவது மிச்சம் ஆகுமா, அதுக்காக நீ அவ்வளவு தூரம் போகணுமா.”

“போ கீர்த்தி! நல்ல ஆஃபர் இது. தனியாள் தானே. நிச்சயம் நிறையவே சேவ் பண்ணலாம்.”

“என்னவோ போ” என்று அமைதியாக அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவள் தண்டபாணியை நிறைய மிஸ் செய்வாள் என்று அவளுக்கும் தெரியும், தண்டபாணிக்கும் தெரியும். அதற்கு தான் இந்த பில்ட்-அப் என்றும் தெரியும்.

இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

“இந்தப் பிரிவு இனிமே நமக்குள்ள நிரந்தரம் தான் கீர்த்தி” என்றான் தண்டபாணி.

“ஏன் என்பதுபோல பார்த்தவளிடம், “நான் இப்போ ஊருக்குப் போறேன். நான் வரும்போது அப்பா எப்படியும் உன் கல்யாணத்துக்குப் பார்த்திருப்பார் இல்லை முடிச்சிருப்பார். ஸோ நமக்குள்ள இனிமே இப்படிதான். நாமே இனிமே சேர்ந்திருந்தாலும், அது ஒரு வாரமோ, பத்து நாளோ தான்” என்றான் கனத்த குரலில்…

தன் அண்ணன் வருந்துகிறான் என்பதை உணர்ந்து… “ப்ச், விடப்பா” என்று பேச்சை மாற்றினாள் கீர்த்தி.

“என் டார்ச்சர் இல்லாம இனிமே நீ ப்ரியா இருப்பன்னு சொல்லு.”

“என்ன சொல்லு, நீ எனக்கு டார்ச்சரா! போடி…” என்று நெற்றியில் தட்டினான்.

“இல்லையா, எப்போ இருந்து?”

“இப்போ இருந்து! இந்த நிமிஷம் இருந்து!” என்று தண்டபாணி சொல்ல, இருவரும் மலர்ந்து சிரித்தனர்.

அவர்கள் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டே வந்த அவர்களின் அன்னை, “என்ன? என்ன கொஞ்சல்ஸ் அண்ணனும், தங்கச்சியும்” என்று கேட்க…

“அது ஒண்ணுமில்லையம்மா! நான் போறதுக்குள்ள அவ கல்யாணத்தை நீங்க முடிப்பீங்கன்னு இவ நினைச்சாம்மா. நீங்க தான் ஒண்ணுமே பண்ணலை” என்றான் தன் தங்கையை சீண்டும் எண்ணத்தோடு.

“இல்லைம்மா அப்படி எல்லாம் எதுவும் இல்லை. இவன் சும்மா சொல்றான். டேய்” என்று அவனை அடிக்க வர… அவன் ஓட ஆரம்பித்தான்.

இந்த ஓடிப் பிடித்தல் விளையாட்டை, அவர்களின் தந்தை ராஜேந்திரனும் பார்க்க… அருகில் வந்த தாய் இந்துமதி… “என்னங்க இன்னும் அவ கல்யாணத்துக்கு எதுவும் அமைய மாட்டேங்குது” என்று குறைபட…

“இனமேலா இந்து பொறக்கப் போறான். எல்லாம் பொறந்திருப்பான். என்ன நம்ம கண்ல பட கொஞ்ச நாள் ஆகுது” என்றார் சலிப்பாக.

ஆமாம், அவருமே சற்று சலிப்பாக உணர்ந்தார். அவர் பெண் கீர்த்தி நன்றாக அழகாக இருக்கிறாள், படித்திருக்கிறாள். ஓரளவு வசதியானவர்களே. ராஜேந்திரனும் தன் பெண்ணிற்கு நிறையவே செய்வார். இருந்தாலும் வரன் அமையாமல் தட்டித் தட்டிச் சென்றது.

 அவருக்கும் அதில் மிகுந்த வருத்தம் தான். ஆனால் அமைய மாட்டேன் என்கிறதே.

கீர்த்தியின் அன்பையும், தந்தையும் அது தந்த மன உளைச்சலில் அப்படியே சிறிது நேரம் அமர்ந்து விட்டனர்.

இந்த கிரக தோஷங்கள், அவளுடைய பிறந்த மூல நட்சத்திரம் அவளையும், அவர்களையும் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது, எந்த வரனும் தகையாமல்.

இதற்குள் தண்டபாணி ஊருக்குச் செல்லும் நாளும் வர… அவனை சென்ட் ஆப் செய்ய… அவன் பெற்றோர், கீர்த்தி செல்ல… அங்கே அரவிந்தும் வந்து இருந்தான்.

கீர்த்திக்கு என்ன முயன்றும், தன் அண்ணனை பிரிவதை நினைத்து கண்களில் கண்ணீர் தேங்கியது.

அவளை தண்டபாணி சமாதானப்படுத்துவதைப் பார்த்த அரவிந்திற்கு சிரிப்பு வந்தது. எவ்வளவு தைரியமாக என்னையே அலட்சியப் பார்வை பார்க்கிறாள். அவள் அண்ணன் ஊருக்குப் போகும் போது இப்படி சின்னப் பெண் மாதிரி அழுகிறாள் என்று நினைத்து அவனுக்கு சிரிப்பு வர… அதை மறைக்காது முகத்தில் அவளைப் பார்த்து சிரிப்பைக் காட்டினான்.

இவன் தன்னைப் பார்த்து சிரிப்பதை உணர்ந்து,

“என்ன சிரிப்பு” என்று நேரடியாக அவனிடம் சண்டையில் இறங்கினாள்.

“இதென்ன வம்பா இருக்கு எனக்கு சிரிப்பு வருது. நான் சிரிக்கிறேன். ஏன் உன்கிட்ட பெர்மிஷன் வாங்கணுமா” என்றான் அரவிந்த் தண்டபாணியைப் பார்த்து சிரித்தவாறே, கீர்த்தியை நோக்கி.

“ஒண்ணும் என்கிட்ட பெர்மிஷன் வாங்க வேண்டாம், அதே சமயம் என்னைப் பார்த்துச் சிரிக்கவும் வேண்டாம்.”

“நீ சிரிக்கிற மாதிரி செஞ்சா சிரிக்காம, என்ன செய்வாங்க?” என்றான் அரவிந்த்.

தண்டபாணி இப்போது அரவிந்தை ஆச்சரியமாகப் பார்த்தான். இப்படி பெண்களிடத்தில் வாயடிப்பவன் அல்ல அரவிந்த். அமைதியாக இருவரையும் பார்வையிட்டான்.

“நான் என்ன சிரிக்கற மாதிரி செஞ்சேன்.”

“உங்க அண்ணன் ஊருக்குப் போறான். சின்ன பொண்ணு மாதிரி அழறியே.”

“வருது அழறேன்! உங்களுக்கு என்ன?”

“எனக்கும் சிரிப்பு வருது சிரிக்கறேன்.”

“சே! சே! உங்க கிட்ட போய் பேசினேன் பாரு” என்று முகத்தைத் திருப்பி பெற்றோர்களுடன் போய் அமர்ந்து கொண்டாள்.

அது இன்னும் அரவிந்திற்குச் சிரிப்பைக் கொடுத்தது. அதே சமயம் தன்னுடைய செய்கையை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு பெண்ணைத் தான் இவ்வளவு கிண்டல் செய்து பேசிக்கிறோமே என்று. பிறகு அமைதியாகி விட்டான்.

தண்டபாணி அரவிந்திடம் தன் தங்கை வேலையில் ஏதாவது சிறு பிள்ளைத்தனம் செய்தாலோ, அல்லது அவனிடம் வாயடித்தாலோ பொருத்துப் போகுமாறு சொன்னான். அப்படியே அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி… பெற்றோர்களிடத்திலும், தங்கையினிடத்திலும் விடைபெற்று லண்டன் செல்லும் விமானத்தில் ஏறினான்.

தன் அண்ணன் வீட்டில் இல்லாததை நிறைய மிஸ் செய்தாள் கீர்த்தி. அரவிந்தும் தன் நண்பன் இல்லாததால் அவனுக்குப் பொழுதே ஓடாத மாதிரி உணர்ந்தான். இருவரையும் ஒரு வகையான தனிமை தாக்கியது. அது இருவரையும் சற்றே நெருங்கி வர வைத்தது.

இப்போதெல்லாம் கீர்த்தியைப் பார்க்கும்போது ஒன்றிரண்டு வார்த்தை நின்று பேசிப் போனான் அரவிந்த். கீர்த்தியும் அரவிந்தினிடத்தில் தன்னுடைய பார்வைகளை சற்று மாற்றியிருந்தாள். முன்பு போல அலட்சியமான பார்வை எல்லாம் பார்ப்பதில்லை. சற்று மரியாதையோடு பார்க்கப் பழகியிருந்தாள்.

அரவிந்தும் முன்பு போல எல்லோரிடத்திலும் எரிந்து விழுவதில்லை. சற்று அடக்கியே வாசித்தான். அதனால் பெரிதாகப் பிரச்சனைகள் என்று அரவிந்துக்கும் கீர்த்திக்கும் வரவில்லை.

அரவிந்தின் தந்தையும் கீர்த்தி வந்த பிறகு அந்த ஷோரூம் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் இருந்தார். கீர்த்தியே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள்.

கீர்த்தியின் பெற்றோரும் தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில் இறங்கியிருந்தனர். ஆனால் மாப்பிள்ளை தான் அமைவதாகக் காணோம்.

இப்படியே தண்டபாணி போய் எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. மாப்பிள்ளைகள் வந்தனர் தான். இவர்களுக்கு சரி என்று பட்டால் அவர்களுக்கு சரி என்று படவில்லை. இவர்கள் வேண்டாம் என்று நினைக்கும் மாப்பிள்ளைகள் மோதினர் திருமணத்திற்கு.

கீர்த்தியின் பெற்றோர்களுக்கு அவள் திருமணம் பெருங்கவலையாகிப் போனது. நாட்கள் வேறு வேகமாக போகிறது என்ற கவலை ஏறிக் கொண்டே போனது.

அரவிந்தின் வீட்டில் வனஜாவுடன் திருமணத்திற்கு நச்சரித்துக் கொண்டே இருந்தனர். அரவிந்த் முடிவாக சொல்லி விட்டான், “என்னை ஒரு முறையாவது வெளிநாட்டிற்கு அனுப்பினால் தான் திருமணத்தைப் பற்றியே யோசிப்பேன்” என்று கூறிவிட்டான்.

அவன் தந்தை சிதம்பரமும் அவன் பிடிவாதத்தை பார்த்து செய்வதறியாது திகைத்தார்.

அன்று ஷோரூமில் அவரையுமறியாமல் கீர்த்தியிடமே புலம்பி விட்டார்.

“இவனை என்ன பண்ணறதுன்னே தெரியலையேம்மா. வெளிநாட்டு மோகம் இவனை இப்படி புடிச்சு வாட்டுது. எனக்கு எப்படி இப்படி ஒரு பையன் வந்து பொறந்தான் தெரியலையே” என்றார்.

கீர்த்தி அரவிந்துக்காக பரிந்து பேசினாள்…

“அவருக்கு அதுதான் ஆசைன்னா ஒரு வாய்ப்பு குடுத்து பாருங்களேன் சார். கண்டிப்பா அவர் நோக்கம் பணம் கிடையாது, ஏன்னா அதைவிட பல மடங்கு வருமானம் இங்க இருக்கு.”

“பணம் நோக்கமில்லாத பட்சத்துல வெளிநாட்டு மோகம் சீக்கிரம் தீர்ந்திடும் சார். ரொம்ப நாள் நிற்காது. நீங்க வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னா, போகணும்ன்ற பிடிவாதம் தான் அதிகம் ஆகும். யோசிங்க சார்” என்றாள்.

சிதம்பரத்தின் முகமும் யோசனைக்குப் போனது. அவரும் அதை மனதில் யோசித்துக் கொண்டுதானிருந்தார். வேலைக்கு அனுப்பாமல் சுற்றி பார்ப்பது மாதிரியாவது ஒரு ஆறு மாதமோ, மூன்று மாதமோ அனுப்பி வைக்கலாமா என்ற யோசனை ஓடிக் கொண்டுதான் இருந்தது.

அன்று மாலையே அரவிந்தை அழைத்த சிதம்பரம், “வேலைக்கு எல்லாம் அனுப்ப மாட்டேன்பா… ஒரு ஆறு மாசம் டூர் மாதிரி வேணா எங்கயாவது போயிட்டு வா. ஆனா வந்ததுக்கு அப்புறம் பிஸினெஸ். ஃபுல் சார்ஜ் எடுத்துக்கணும். அப்புறமும்; அதையும் இதையும் பேசி வெட்டியா சுத்திட்டு இருக்கக் கூடாது” என்றார்.

அரவிந்தும் சற்று இறங்கி வந்தான். அந்த மட்டிலுமாவது தன்னை அனுப்ப அவர் ஒத்துக் கொண்டாரே என்று… அந்த யோசனையை யோசிக்க ஆரம்பித்தான்.

அவன் யோசிப்பதைப் பார்த்ததும், அவன் தந்தை அவன் முன் ஒரு நிபந்தனை வைத்தார்.

“நீ அப்படி வெளிநாட்டுக்குப் போற மாதிரி இருந்தா, வனஜாவோட கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டு தான் போகணும்” என்று,

“அதெல்லாம் முடியாது” என்றான். “ஏன் முடியாது” என்றார் பதிலுக்கு அவன் தந்தை.

“நாங்க உன்னை ஊருக்கு அனுப்பறோம். நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கோ” என்று பேரம் பேசினார்.

எவ்வளவோ வாதாடிப் பார்த்தான் அரவிந்த். அவன் தந்தை, “நீயே யோசிச்சு ஒரு பதில் சொல்லு. நான் மாறமாட்டேன்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

Advertisement