Advertisement

4

மறுநாள் காலை, அன்று தான் புதிதாக கீர்த்தி வேலைக்குச் சேரும் தினம் சற்று படபடப்பாக உணர்ந்தாள். அதை விட படபடப்பாக உணர்ந்தான் அரவிந்த், ஏனென்றால் அவன் ஷோரூம் செல்வதே கிடையாது. இன்று தண்டபாணியிடம் கீர்த்தியை பார்த்துக் கொள்வதாக வாக்கு கொடுத்தாகி விட்டது.

அதற்காகவாவது சென்று தான் ஆக வேண்டும். ஏன் ஒத்துக் கொண்டோம் என்று அவன் மேலேயே அவனுக்குக் கோபம் வந்தது.

கீர்த்தி ஒன்பதரை மணிக்கு ஷோரூமை அடைந்து அதற்கு முன்னரே சிதம்பரம் வந்திருந்தார்.

“வணக்கம் சார்” என்று அவருக்கு முகமன் வைத்தாள்.

சிறு தலையசைப்போடு அதனை ஏற்றார்.

பின்பு வேலை சம்பந்தமாக, “என்ன என்ன செய்ய வேண்டும்” என்று அவளுக்கு விளக்கம் கொடுத்தார்.

கொடுத்தவர், “நீ இனிமே பார்த்துக்கோம்மா, எந்த சந்தேகம்னாலும் உடனே என்னைக் கூப்பிடு, நான் இன்னொரு ப்ராஞ்ச்சுக்கு போறேன்” என்று கிளம்பினார்.

அவர் கிளம்பும் சமயம் அரவிந்த் பிராஞ்சினுள் நுழைந்தான். அவனைப் பார்த்தவுடன் அவருக்கு மிகுந்த ஆச்சரியம். நிறைய நாட்களுக்குப் பிறகு அரவிந்த் ஷோரூம் வந்திருந்தான்.

“ஷோரூம் பார்த்துக்கோடா. நான் நேத்து புதுசா வந்த பொண்ணுகிட்ட தான் சொல்லியிருக்கேன். கோ-ஆர்டினேட் பண்ணிக்கோ” என்று சொல்லி, வேறு எதுவும் சொல்லாமல் அவன் வந்ததே சந்தோஷம் என்று நினைத்துச் சென்றுவிட்டார்.

அவருக்கு என்ன தெரியும், தண்டபாணிக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக அரவிந்த் ஷோரூம் வந்திருக்கிறான் என்று.

அவர் சென்று விட, அரவிந்த் உள்ளே நுழைந்தான். அவன் கண்கள் கீர்த்தியைத் தேட, அவள் அங்கிருந்த பொருட்களையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.

கண்கள் அவளை அளவெடுத்தது. பச்சை கலர் சுடிதாரில் எளிமையாக அழகாக இருந்தாள். ஒரு வசீகரம் தெரிந்தது அவளிடம். இதென்ன அவளின் உருவத்தை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று அவனுக்கு அவனே கடிந்தவன், எம்.டி. என்று எழுதப்பட்ட கேபின் உள் சென்று அமர்ந்து கொண்டான்.

அவன் உள்ளே செல்லும் போதுதான் அவனைப் பார்த்தாள் கீர்த்தி, “தெரிந்தவள் தானே நான். ஒரு நிமிடம் நின்று பேசி விட்டால் என்ன? இப்போது இவன் எம்.டி.யா, நான் சென்று இவனை விஷ் செய்ய வேண்டுமா” என்று கோபமாக நினைத்தாள்.

பிறகு விஷ் செய்வது தான் மரியாதை என்று நினைத்தவள் எம்.டி. கேபினுக்குள் சென்றாள்.

“குட்மார்னிங் சார்” என்றாள்.

அவனும் அவளை அன்று தான் புதிதாகப் பார்ப்பவன் போலத் தலையாட்டினான்.

மேலே என்ன பேசுவது என்று இருவருக்குமே தெரியவில்லை.

“சாரி அன்னைக்கு நடந்ததுக்கு” என்றாள் ஞாபகம் வந்தவளாக,

“எதுக்கு” என்றான் புரியாதவனாகவே…

“அது அன்னைக்குக் கீழே விழுந்ததுக்கு…”

“நான் விழுந்ததுக்கு நீ என்ன பண்ணுவ” என்றான். போய் வேலையைப் பார் என்று இருந்தது.

மேலே என்ன பேசுவது என்று தெரியாமல், “தாங்க்யூ சார்” என்று சொல்லி வெளியே வந்து விட்டாள்.

“கொஞ்சமாவது தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிறானா பாரேன்” என்று கீர்த்திக்கு வருத்தமாக இருந்தது.

அதற்குள் கஸ்டமர்கள் வர ஆரம்பிக்க, அதை அங்குள்ள பணியாளர்கள் கவனிக்கச் செல்ல, அதை மேற்பார்வை பார்க்க ஆரம்பித்தாள்.

மதியம் வரை இருந்தான். அரவிந்த் ஆனால் வேறு எதுவும் கீர்த்தியிடம் பேசவில்லை.

கீர்த்தியும் அதன் பிறகு அவனைப் பற்றி யோசனை செய்ய நேரமில்லாமல், கஸ்டமர்கள் வந்து கொண்டே இருக்க… அவர்களைப் பார்ப்பதிலேயே நேரம் போனது.

மதிய நேரத்தில் தண்டபாணி அவளை அழைக்க… அவனிடம் பொரிந்து தள்ளிவிட்டாள். “என்ன உன் பிரெண்ட் பெரிய பிரெண்ட், என்னைத் தெரிஞ்ச மாதிரி கூட காட்டிக்கலை. நீதான் உன் ப்ரெண்ட் ப்ரெண்ட்ன்னு உருகுற.”

“அவன் அப்படிதான் கீர்த்தி எப்பவுமே. ஆக்சுவலா அவன் ஷோரூம் பக்கமே தலையை வச்சி படுக்க மாட்டான். இப்போ என்கிட்ட சொல்லிட்டான். உன்னை பார்த்துக்கறேன்னு. அனேகமா அதுக்கு தான் வந்திருப்பான்” என்று சமாதானம் சொல்ல…

“என்னவோ போ, உன் ப்ரெண்டை பத்தி உனக்கு தான் தெரியும்” என்று பழிப்பு காட்டினாள்.

நாட்கள் வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. புது வேலை கீர்த்திக்கும் பிடித்தது. நிறைய புதுப் புது ஆட்களை அவள் தினமும் பார்ப்பதால் அவளுக்கு அது பிடித்துவிட்டது. தண்டபாணிக்கு, “நான் பார்த்துக்கறேன்” என்று சொன்னதினால் தினமும் காலையில் சிறிது நேரம் மட்டும் ஷோரூம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் அரவிந்த்.

ஆனால் வருவான், போவான். கீர்த்தியோடு அதிகம் பேச மாட்டான். “என்ன? ஏது” என்ற அளவிலேயே அவன் பேச்சுகள் நிற்கும்.

இப்போது கீர்த்திக்கும் அது பழகி விட்டது. அதற்கு மேல் அவளிடமிருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டாள் கீர்த்தி.

வரும்போது, போகும் போது எல்லாம் ரகசியமாக கண்கள், கீர்த்தியை அளவெடுக்கும். அரவிந்தினால் என்ன முயன்றாலும் தன்னைத் தானே தடுத்துக் கொள்ள முடியவில்லை.

அவள் கஸ்டமர்களை கன்வின்ஸ் பண்ணும் அழகை அவனையறியாமல் ரசித்துக் கொண்டிருப்பான். அவள் பேச்சில் எப்போதும் ஒரு போல்ட்நெஸ் இருக்கும். அவனையறியாமல் கீர்த்தியின் தைரியத்தை எப்போதுமே மெச்சுவான. அதையே தான் தினமும் செய்து கொண்டிருந்தான். ஆனால் அதற்கு மேல் எதுவும் யோசிக்கவில்லை.

கீர்த்தியும் அவள் சிறிது நேரமே வந்தாலும், அவளையறியாமல் அந்த நேரத்தில் கண்கள் அவனைத் தேடும். அவனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தாலும் கண்கள் அவனைத் தேடுவதை அவளால் தவிர்க்க முடியாது. மனம் அவனை நாடுவதையும்… அவளால் யோசிக்காமல் இருக்க முடியாது.

இதற்குள் தண்டபாணி வெளிநாடு செல்கிறான் என்றவுடன் மீண்டும் அவனும் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை தலைவிரித்தாட ஆரம்பித்து விட்டது.

அது அவனுள் இருக்கும் கோபத்தை தூண்டி விட, யார் மேல் கோபத்தைக் காட்டுவது என்று தெரியாமல், எல்லோரிடத்திலும் கோபத்தைக் காட்டினான்.

தந்தையிடம் பேசுவதைத் தவிர்த்தான். தாயிடம் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டான். அவனை எப்படி சமாளிப்பது என்று பெற்றோருக்கு பெருங்கவலை கொடுத்தான்.

ஷோரூமிலும் பணியாளர்களிடத்தில் எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்தான். எல்லோரும் அவனைப் பற்றி பேச… அதைக் கேட்க முடியவில்லை கீர்த்திக்கு.

அன்றுதான் சற்று அமைதியாக இருப்பது மாதிரி தோற்றமளித்தது கீர்த்திக்கு.

அவனோடு பேச வேண்டும் என்று நினைத்த கீர்த்தி அவன் கேபின் கதவைத் தட்டி உள்ளே போனாள்.

அவன் என்ன என்பது மாதிரியான ஒரு பார்வை மட்டுமே பார்த்தான். அவன் பார்வையை நன்கு அறிவாள் கீர்த்தி. அதில் தொக்கி நின்ற கேள்வியை உணராதது போல், அவன் அமரச் சொல்லாமலேயே அமர்ந்தாள்.

அவள் அமர்ந்தவுடன் சற்று ஆச்சரியத்தை அவன் பார்வை காட்டியது. இதுவரையில் வருவாள், என்ன கேட்க வேண்டுமோ, கேட்பாள். உடனே போய் விடுவாள். அமர்ந்தெல்லாம் அவனோடு பேசியதேயில்லை.

அவள் அமரவும் ஆச்சரியமாக, “எதற்கு” என்பது போலப் பார்த்தான்.

மெதுவாக அவனைப் பார்த்து சிறியதாக புன்னகைத்தாள். பதிலுக்கு அரவிந்த் புன்னகைக்கவேயில்லை.

ஆனாலும் அசராமல், “ஏன் இப்படி எல்லோர்கிட்டயும் எரிஞ்சு எரிஞ்சு விழறீங்க” என்றாள் தைரியமாக.

“நான் எரிஞ்சு விழுந்தா உனக்கென்ன, எரிஞ்சு விழலைன்னா உனக்கு என்ன?” என்பது போல பார்வை பார்த்தான்.

அவன் பார்வை நன்கு புரிந்தது கீர்த்திக்கு. இருந்தாலும் “இல்ல, அது வேலை செய்யறவங்ககிட்ட ஒரு அதிருப்தியை கொடுக்குது. அப்படிப் பேச வேண்டாமே” என்றாள்.

அதற்கும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“இப்படி பதில பேசாம இருந்தா, நான் என்னன்னு எடுத்துக்கறது, இனிமே விழ மாட்டீங்கன்னு எடுத்துக்கறதா, இல்லை விழுவீங்கன்னு எடுத்துக்கறதா.”

“பதில் தெரிஞ்சே ஆகணுமா” என்பது போல ஒரு பார்வை பார்த்தான். அவன் பார்வையை உணர்ந்தவள் “பதில் தெரிஞ்சா பரவாயில்லை” என்றாள்.

இப்போது அரவிந்தின் பார்வையில் ஒரு மெச்சுதல் தெரிந்தது. எப்படி தன் மனதில் இருப்பதை, தன் பார்வையை வைத்து இவள் எடை போடுகிறாள் என்று.

அவன் பார்வையின் மாறுதல்களையெல்லாம் உணர்ந்த கீர்த்தி, “என்ன பிரச்சனை என்கிட்ட சொல்றதுன்னா சொல்லுங்களேன்” என்றாள்.

“உன்கிட்ட எதுக்கு சொல்லணும்” என்ற வார்த்தை வாய் வரை வந்துவிட்டது, இருந்தாலும் அவளை வருத்தப்படச் செய்ய மனமில்லாமல், “உன்கிட்ட சொல்ற மாதிரி ஒண்ணுமில்லை” என்றான்.

“முடியாதுன்னா எரிஞ்சு விழறதை அட்லீஸ்ட் கொறச்சுக்கவாவது செய்யலாம்” என்றாள் விடாமல்.

அவனையறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது. “முயற்சி பண்றேன்” என்றான்.

இந்த வார்த்தையாவது வாயிலிருந்து வந்ததே என்று கீர்த்தியிடம் இருந்து ஒரு பெருமூச்சு வெளியேறியது.

இப்படி மாற்றி மாற்றிப் பெருமூச்சு தான் விட்டனரே தவிர மேலே இருவருமே பேசவில்லை. அரவிந்த் ஏதாவது பேசினால் பேச்சை வளர்க்கலாம் என்று கீர்த்தி நினைத்திருக்க… அவன் வாயே திறக்கவில்லை.

அவன் ஏதாவது பேசுவானா என்று இரண்டு நிமிடம் பார்த்தவள், அவன் எதுவும் பேச மாட்டான் என்றுணர்ந்து… “இது சொல்லதான் வந்தேன்” என்று சொல்லிச் சென்று விட்டாள்.

“எவ்வளவு தைரியம் இவளுக்கு, என்னிடமே வந்து எனக்கு அட்வைஸ் செய்கிறாள், என்ன பிரச்சனை என்று கேட்கிறாள்” என்று புன்னகை தோன்றியது. மனம் சற்று அமைதியாக உணர்ந்தது.

வீட்டில் அரவிந்துக்கும், வனஜாவுக்குமான திருமண பேச்சை மறுபடியும் ஆரம்பித்தனர்.

இந்த முறை நேரடியாக அவன் தந்தை அவனிடம் கேட்டார். “டேய் அரவிந்த் முகூர்த்த நாள் பார்க்கலாம்னு இருக்கோம்” என்றார்.

“யாருக்கு” என்றான்.

“என்னடா நக்கலடிக்கற உனக்கு தான்டா.”

“யாரோட”

“என்ன அரவிந்த் இப்படி கேட்கற நம்ம நளினியோட நாத்தனார் வனஜாவோட தான்” என்றார் அவன் அன்னை ராணி.

அப்படியே தணிந்தான் அரவிந்த். “அப்பா நீங்க எனக்கு வெளிநாடு போக பெர்மிஷன் குடுங்க. நீங்க யாரை சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்கறேன்.”

அவன் வழியிலேயே போய் தான் அவனை அணுக வேண்டும் என்று நினைத்த அவன தந்தை…

“நீ முதல்ல வனஜாவைக் கல்யாணம் பண்ணிக்கோ அப்புறம் அதைப் பத்தி யோசிக்கலாம்” என்றார்.

“நிஜமாவா அப்பா சொல்றீங்க” என்றான் முகம் மலர்ந்தது.

“முதல்ல நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுடா அப்புறம் பார்க்கலாம்.”

“நான் எப்படி உங்களை நம்பறது”

“நான் மட்டும் எப்படிடா உன்னை நம்பறது.”

இருவரும் வாக்குவாதத்தில் இறங்க… திருமணம் என்ன இவர்களுக்கு விளையாட்டா என்று அவன் அன்னை ராணி இருவரையும் பார்த்து விழி விரித்தார்.

“என்ன முட்டாள்தனம்; பண்றீங்க ரெண்டு பேரும்” என்று அதட்டினார். “இவன் வெளிநாடு போறதுக்கும் இவன் கல்யாணத்துக்கும் ஒரு சம்பந்தமும் இருக்கக் கூடாது…” என்று ஏறக்குறைய கர்ஜித்தார்.

“என்ன பேசறீங்க ரெண்டு பேரும் கல்யாணம் என்ன விளையாட்டா. உன் வாழ்க்கை மட்டுமில்லை… ஒரு பொண்ணோட வாழ்க்கையும் இதுல அடங்கியிருக்கு… யாரும் கல்யாணத்தை வச்சி எல்லாம் வெளிநாடு போறதைப் பத்தி பேச வேண்டாம்” என்றார் முடிவாக.

“அப்போ எனக்கு கல்யாணமும் வேண்டாம்” என்றான் அரவிந்த்.

“பிடிவாதம் பிடிக்காத அரவிந்த்” என்று கத்தினார் அவன் அன்னை. “உனக்கு வெளிநாடு போறதுன்னா போ…

போகலைன்னாலும் போ… ஆனா அதை கல்யாணத்தோட சம்பந்தப்படுத்தாத” என்று மிகவும் உட்ச பட்ச டென்ஷனில் கத்தினார்.

அவருக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து சிதம்பரமும் அரவிந்தை நோக்கிக் கத்தினார்… “டேய் எதுனாலும் அப்புறம் பேசலாம், சரின்னு சொல்லுடா” என்று…

“சரி நான் வெளிநாடு போறதையும், கல்யாணத்தையும் இணைக்கலை… ஆனா எனக்குக் கல்யாணத்துல இஷ்டமில்லை” என்றான்.

“ஏன்? இன்னும் எப்ப கல்யாணம் பண்ணலாம்னு இருக்க! இப்பவே இருபத்தி ஏழு வயசாகுது. இது தான் கல்யாணத்துக்கு சரியான வயசு. அதனால நீ கட்டாயம் கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்” என்றார் கோபமாக அவன் அன்னை.

“அம்மா! சும்மா கத்தாதீங்க… எதுவும் உங்க இஷ்டம் கிடையாது, எல்லாம் என் இஷ்டம் தான். நான் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்” என்றான் அடமாக…

“ரெண்டு பேரும் முதல்ல சத்தம் போடறதை நிறுத்துங்க” என்றார் அவன் தந்தை.

இருவரும் கத்திக் கொள்வதைப் பார்த்து பயந்த அவன் தந்தை, அவன் அன்னைக்கு ஏதாவது ஆகி விட்டாள் என்ன செய்வது என்று பேச்சை ஒத்திப் போட்டார்.

“எல்லாம் வேலையைப் பாருங்க அப்புறம் பேசலாம்” என்று விட்டார்.

அதே டென்ஷனோடு ஷோரூம் வந்தான். அவன் முகத்தைப் பார்த்தவுடனே கீர்த்திக்குத் தெரிந்து விட்டது.

அவன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான் என்று. அப்படி என்னதான் வீட்டில் தினமும் சண்டை போட்டு வருவானோ என்று எண்ணினாள். இவன் வீட்டு ஆட்களாவது இவன் குணம் தெரிந்து சற்று தணிந்து போகக் கூடாதா என்று இருந்தது கீர்த்திக்கு.

ஏதோ பணியாளன் வேறு அரவிந்திடம் மாட்டிக் கொண்டான். அவனிடம் ஏதோ சத்தம் போடப் போக… வேகமாக அங்கே விரைந்த கீர்த்தி… அந்த பணியாளனை அனுப்பினாள்.

“நீங்க போங்க” என்றவுடனே அவசரமாக அவன் அங்கே இருந்து அகன்றான்.

“இப்போ எதுக்கு அவனை அனுப்பின” என்று கோபத்தை நேரடியாக கீர்த்தி மேல் திருப்பினான் அரவிந்த்.

“ஏன் அனுப்பினா என்ன? அவன் இங்க இருந்தா நீங்க இப்போ கடிச்சுக் குதறி இருப்பீங்க… நேத்து தான் அவ்வளவு சொன்னேன். மறுபடியும் கத்தறீங்க” என்று பதிலுக்கு வாயடித்தாள்.

“ஏய்! நீ இங்க ஒரு மேனேஜர் மட்டும்தான். உனக்கு யாரும் என்னை அதிகாரம் பண்ற உரிமையை கொடுக்கலை.

யாரும் உங்களை இந்த அதிகாரம் பண்ணலை. அதுக்குன்னு நீங்க சும்மா சும்மா வொர்க்கர்ஸ கூப்பிட்டு திட்டுனா அதையெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது.”

“என்ன பண்ணுவ.”

“நான் என்ன பண்ணவன் நான் ஒண்ணும் பண்ணமாட்டேன். ஆனா வேலை பார்க்கறவங்க…”

“யாரும் ஒழுங்கா வேலை பார்க்க மாட்டாங்க, நஷ்டம் உங்களுக்குத்தான்.”

“என் நஷ்டத்தைப் பத்தி நீ ஒண்ணும் கவலைப்படாத.”

“நான் கவலைப்படாம வேற யார் படுவா” என்றாள் அவளையுமறியாமல்.

“நீ ஏன் கவலைப்படணும்” என்றான்.

இதற்கு என்ன பதில் கொடுக்க முடியும். “நான் வேலை செய்யற இடம் நல்லா இருக்க வேண்டாமா” என்றாள் சலிப்பாக…

அப்போது தான் சுற்றுப்புறத்தைப் பார்த்தான்… எல்லோரும் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

அவசரமாக அவள் கையைப் பற்றி இழுத்து கேபினுக்குள் சென்றான்.

“நீ என்ன தான் நினைச்சிட்டிருக்க உன் மனசுல… என்னைக் கேள்வி கேட்கற உரிமை யாரு உனக்குக் கொடுத்தா… தண்டபாணியோட தங்கச்சின்னு பாக்கறேன். இல்லை நடக்கறதே வேற” என்றான் மிகுந்த கோபமாக…

அவனையே விழி எடுக்காமல் பார்த்தவள்… “பேசி முடிச்சாச்சா நான் போகலாமா” என்றாள் சற்று அலட்சியமாக.

அப்படியே அவளை ஒரு அறை விட வேண்டும் போல ஆத்திரமாக வந்தது அரவிந்திற்கு… மிகவும் முயன்று அடக்கினான்… அப்படியும் முடியாமல், “போடி…” என்று சொல்லி வெளியே சென்று விட்டான்.

“நீ போடா பெரிய இவன் நீ… சும்மா எல்லார்கிட்டேயும் வள்ளு வள்ளுன்னு விழுந்துட்டு” என்று வாய்க்குள் முணுமுணுத்தவாறே வேலையைப் பார்க்கச் சென்றாள்.

எப்போதும் அவன் தங்கையைப் பற்றி தண்டபாணியிடம் அரவிந்த் பேச மாட்டான். இன்று நேரே அவன் இருக்குமிடம் வந்தவன், அவனையும் மீறி… “டேய், ஒரே டார்ச்சர்டா உன் தங்கச்சி… வீட்ல தான எங்கப்பன் தொல்லைன்னா… இவ தொல்லை ஷோரூம்ல… அப்படி வொர்க்கர்ஸ்கிட்ட பேசாதீங்க… இப்படி வொர்க்கர்ஸ்கிட்ட பேசாதீங்கன்னு கடுப்படிக்கிறாடா” என்றான்.

“அப்படியா” என்ற தண்டபாணி… “அவ வீட்டுக்கு வரட்டும் நான் பேசறேன்” என்றான். அது அவனுக்காக சொன்ன வார்த்தைகள்… அவனுக்கு தெரியும் கீர்த்தி. மிகவும் நியாயவாதி… அநியாயம் பொறுக்க மாட்டாள். இவன் தான் ஏதாவது கலாட்டா செய்திருப்பான் என்று தெரியும். இருந்தாலும் உடனே சொன்னால், அவன் கோபம் தான் அதிகமாகும் என்று தெரிந்தவன், எதுவும் சொல்லாமல் அமைதி காத்தான்.

அரவிந்த் அப்படித்தான். அவனுக்கு சரியென்று பட்டதை உடனே செய்ய வேண்டும். நியாய-அநியாயங்கள் பார்க்க மாட்டான். ஆனால் அவனுக்கு நேர் எதிர் கீர்த்தி, சின்ன விஷயத்திலும் நியாய அநியாயங்கள் பார்த்துதான் செய்வாள்.

ஆனால் இந்த விஷயங்களையும் மீறி அரவிந்த் நல்லவன். அது தண்டபாணிக்கு நன்கு தெரியும். அதனால் தான் இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு புரிதல் இழையோடியது.

அரவிந்தும் தண்டபாணிக்காக எதுவும் செய்வான். ஏனென்று கேட்டால்… அவனுக்கே தெரியாது. மிகவும் குறுகிய காலத்திற்குள் இருவருக்குள்ளும் இணைபிரியாத நட்பு உருவாகி இருந்தது.

Advertisement