Advertisement

3

அவனை கடுமையாகப் பார்த்தார் அவன் தந்தை. “டேய் நீ தேவையில்லைடா. நானே பார்த்துக்கறேன். உனக்கு மட்டும் இல்லை உன் பசங்களுக்கும் சேர்த்து சொத்து சம்பாதிச்சு வெச்சிருக்கேன். நீ இப்படி வெட்டியாவே சுத்திட்டு இரு. எனக்கு இனிமே அதைப்பத்தி கவலையில்லை. ஆனா நான் உயிரோட இருக்கற வரைக்கும் நீ வெளிநாடு போறதுன்றது நடக்காது.”

“ஆமா காலம் போன காலத்துல நான் வெளிநாடு போனா எவன் எனக்கு வேலை கொடுப்பான்.”

“எவன்டா உனக்கு வேலை கொடுக்கணும். நம்ம நாட்ல இல்லாதது அப்படி என்ன இருக்கு உனக்கு அங்க. இங்க வராத வருமானமா உனக்கு அங்க வரப் போகுது. நம்ம ஷோரூம் டர்ன்-ஓவர் உனக்குத் தெரியாததா என்ன? அப்புறம் ஏன்டா அடம் பிடிக்கிற.”

பதிலே பேசாமல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான். அவன் நேரே வந்த நின்ற இடம் தண்டபாணியின் வீடு. வாசலுக்கு வந்த பிறகு தான் வீட்டிற்கே வந்த விட்டதை உணர்ந்தான் அரவிந்த்.

தள்ளி நின்று அவனுக்கு தொலைபேசியில் அழைப்போம் என்று எண்ணி… வண்டியை திருப்பப் போக…

“ஹலோ” என்ற குரல் கேட்டது.

“யாரது” என்று திரும்பிப் பார்த்தாள்… “கீர்த்தி.”

“என்ன அண்ணனைத் தேடி வந்தீங்களா” என்றாள்.

“ஆமாம்” என்பது போலத் தலையசைத்தான்.

“வாயைத் தொறந்து பேசினா என்னவாம், பெரிய இவன் மாதிரி தலையை மட்டும் ஆட்டுறான்” என்று மனதிற்குள்ளேயே திட்டியவள்… வெளியில் சிரித்தாள்.

“வாங்களேன் உள்ள, அண்ணா இப்போ தான் குளிக்கப் போனான். அவன் குளிக்கப் போனா எப்படியும் லேட் ஆகும். அதுவரைக்கும் வெளிலயா நிப்பீங்க… வாங்க…”

“இல்லை பரவாயில்லை நான் வெயிட் பண்றேன்.”

“அட வாங்க சும்மா ரொம்ப பிகு பண்ணாதீங்க. எங்க வீட்ல இருக்கறவங்க யாரும் மனுசங்களை சாப்பிட மாட்டோம்” என்றாள் இலகுவாக.

ஏற்கனவே வீட்டிலிருந்து கடுப்பில் வந்த அரவிந்திற்கு இன்னும் கடுப்பாக இருந்தது. இவள் வேறு ஏன் உயிரை எடுக்கிறாள் என்று நினைத்தவன், “நான் வரலை இங்கயே நிற்கறேன்” என்றான் கடுமையாக.

அவன் கடுமை ஏனோ கீர்த்திக்கு சிரிப்பை கொடுக்க… “ஓகே, அஸ் யூ விஷ்” என்றாள்.

அந்தச் சிரிப்பும் அந்த அலட்சியமும் நிறைய கோபத்தைக் கொடுக்க… வண்டியை அப்படியே திருப்ப… அது சறுக்கி, அவன் சாய்ந்து, மேலேயே வண்டியும் சாய்ந்தது.

வண்டி சாய்ந்ததில் அவன் கால் எசகுபிசகாக மாட்டிக் கொண்டது. எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது.

“அண்ணா” என்று குரல் கொடுத்தபடியே, கீர்த்தி அவசரமாக கேட்டைத் திறந்து ஓடி வந்தாள் அவள். போட்ட சத்தத்தில், தண்டபாணியும், அவன் அம்மாவும் கூட விரைந்து வந்தனர்.

அரவிந்தால் காலை வெளியே எடுக்க முடியவில்லை. கீர்த்தி வந்து வண்டியை தூக்க முயல, அவளால் முடியவில்லை. அதற்குள் தண்டபாணி வந்திருந்தான். அவன் வந்து வண்டியைத் தூக்க…

அரவிந்திற்கு காலில் நல்ல வலி, கீர்த்தி அவனுக்கு கை கொடுக்க முற்பட, அவன் கையைப் பிடிக்கவில்லை. அவனே எழ முயற்சித்தான். அதற்குள் தண்டபாணி வந்து அவனையும் கை கொடுத்துத் தூக்க, மெதுவாக எழுந்து நிற்க முயற்சித்தான்.

கால் ஊன்றினாலே பயங்கரமாக வலித்தது. கீர்த்தி முன் கீழே விழுந்தது வேறு அவமானமாக இருந்தது. அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவன். அவள் அங்கே இருப்பது மாதிரியே கண்டு கொள்ளவில்லை.

கீர்த்திக்கு வேறு ஒரே குற்ற உணர்ச்சியாக இருந்தது. தன்னால் தான் இப்படியாகி விட்டதோ.

தண்டபாணி அவனை வீட்டிற்குள் அழைத்து வந்து அமர வைத்தான். பிறகுதான் அவன் அம்மாவிடம் கூட “அம்மா, இது என் ப்ரெண்ட் அரவிந்த்” என்று அறிமுகம் செய்து வைத்தான்.

“என்னடா ஆச்சு” என்று அரவிந்திடம் கேட்க,

“ஒண்ணுமில்லைடா வண்டியை கொஞ்சம் கவனிக்காம திருப்பிட்டேன் ஸ்லிப் ஆகிடுச்சு” என்றான்.

கீர்த்தியிடம் பேசியது மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை.

கீர்த்தியுமே அவன் விழுந்த பதட்டத்தில் இருந்ததால் ஒன்றும் சொல்லாமல் அமைதி காத்தாள்.

உடனேயே காலுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்க, வலி சற்று மட்டுப்பட்டது அரவிந்திற்கு.

கீர்த்தியின் அம்மா அரவிந்திற்கு ஒரு காபி கொடுத்து உள்ளே அகல… வேறு வழியில்லாமல் கீர்த்தியும் உள்ளே போக நேர்ந்தது.

கீர்த்தி உள்ளே சென்றாலுமே அவள் கண்ணும் காதும் ஹாலிலேயே இருந்தது.

“என்னடா காலையிலேயே இவ்வளவு டென்ஷன்” என்றான் தன் நண்பனை உணர்ந்தவனாக அரவிந்த்.”

“ப்ச், ஒண்ணுமில்லைடா.”

“ஒண்ணுமில்லாமையா என் வீடு வரைக்கும் வருவ சொல்லுடா.”

“காலையில வீட்ல அப்பாவோட சண்டை. நான் வெளிநாடு போறதுக்கு எப்பவும் போல் பர்மிஷன் கேட்டேன். அவர் ஷோரூம் வரச் சொல்லி கட்டாயப் படுத்தறார். அதுல சண்டை போட்டு உன்னைப் பார்க்கலாம்னு வந்தனா… வண்டியை நிறுத்தி திரும்பும்போது ஸ்லிப் ஆகி விழுந்துட்டேன்.”

கவனமாக கீர்த்தியிடம் பேசியது, அவள் அவனை எரிச்சல் படுத்தியது என்று எதுவும் சொல்லவில்லை. கீர்த்தியின் மேல் கோபம் இருந்தாலும் அதை தண்டபாணியிடம் சொல்லவில்லை. கீர்த்தியும் இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவன் தன்னைப் பற்றி அண்ணனிடம் சொல்லாதது புரிந்தது. “இவளைப் போய் விழுந்தா நானா பொறுப்பு. நான் என்ன பண்ணினேன் இவனை” என்றெண்ணினாள்.

தண்டபாணி உடை மாற்ற அவனை விட்டு வந்தபோது மெதுவாக அரவிந்த் இருக்குமிடம் சென்றவள், “சாரி” என்றாள். ஆனால் அதை அவன் கண்டு கொண்ட மாதிரியே தெரியாமல் போக… மறுபடியும் அவனை முறைத்துப் பார்த்து உள்ளே சென்றாள்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அரவிந்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கீர்த்திக்கு உடனடியாக கிடைக்கவில்லை. அவன் காலைப் பற்றி மட்டும் தண்டபாணியிடம் விசாரிப்பாள்.

“ஒரே ஒரு க்ரெப் பாண்டேஜ் மட்டும் போட்டுட்டு அப்படியே தான் கீர்த்தி அவன் சுத்துறான். கொஞ்சம் கூட அடங்கவேயில்லை” என்றான் அரவிந்தைப் பற்றி தண்டபாணி.

அவன் ஏன் தன்னிடம் அப்படி முகம் காட்டினான் என்று கீர்த்திக்குப் புரியவேயில்லை. அதே யோசனையாக இருந்தது.

முயன்று தன் யோசனைகளை ஒதுக்கி வைத்து தன் தோழிகளோடு அங்கே இங்கே என்று வெளியே சென்று வந்தாள்.

இதற்கிடையில் ஆளுடைய பரீட்சை முடிவுகளும் வர நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.

“அப்பா நான் வேலைக்கு ட்ரை பண்ணட்டா” என்று தயங்கித் தயங்கி தந்தையிடம் கேட்டாள்.

“வேண்டாம் கீர்த்திமா, நான் உனக்கு கல்யாணத்துக்கு பார்க்கலாம்னு இருக்கேன். வர்ற வரன் எப்படி வருதோ… உள்ளூர் வருதோ, இல்லை வெளியூர் வருதோ… அவசரப்பட்டு வேலைக்குப் போக வேண்டாம். முதல்ல நீ கல்யாணம் பண்ணிக்கோ. அதுக்கப்புறம் நீயும் உன் கணவரும் சேர்ந்து முடிவெடுங்க” என்றார் கறாராக…

“நீங்க எப்படி பண்றீங்களோ பண்ணுங்கப்பா, அதுவரைக்கும் டெம்ப்ரவரியாகவாவது நான் வேலைக்கு முயற்சி பண்றேன்” என்று மறுபடியும் மறுபடியும் கேட்க…

“சரி பக்கத்துலயே ஏதாவது வேலை தேடிக்கோ… பெரிய கன்சர்ன் எல்லாம் எதுவும் இப்பத்திக்கு வேண்டாம்” என்றார்.

அவளும் அப்பொழுதில் இருந்தே பேப்பரில் வரும் எல்லா வேலைக்கான விளம்பரத்தையும் பார்க்கத் துவங்கினாள்.

அதில் பார்த்தது தான் “ராணி பர்னிச்சர்ஸ்”க்கு மேலாளர் தேவை என்ற விளம்பரம். அவளுடைய வீட்டில் இருந்து வந்து போய்விடும் தூரம் தான். நடந்து போகும் அளவு தூரம் எல்லாம் கிடையாது. அதைவிட தூரம், ஆனால் வண்டியில் போனால், ட்ராபிக் இல்லாது இருந்தால் பத்து நிமிட ட்ராவல் தான்.

கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உடனே விண்ணப்பித்தாள். தண்டபாணி வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால், அவனிடம் ஆலோசனை எதுவும் கேட்கவில்லை, அப்பாவிடமும் சொல்லவில்லை.

ஆரம்பிக்கும் போதே அபசகுனமாக ஏதாவது சொல்லி விடுவர். கிடைத்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

அவள் விண்ணப்பம் அனுப்பி இரண்டு நாட்களிலேயே தொலைபேசி மூலமாக நாளை நேர்முகத் தேர்வு என்றனர்.

அதன் பிறகு தான் தன் தந்தையிடம் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்திருப்பதைப் பற்றித் தெரிவித்தாள்.

பெரிய மல்டிநேஷனல் கம்பெனி மாதிரி எதுவும் இல்லை, ஒரு ஷோரூம் தானே என்று அவள் தந்தையும் அனுமதி கொடுத்தார்.

இரண்டு நாட்களாக தண்டபாணி வேறு அவளை தொலைபேசியில் கூட அழைக்கவில்லை. அதனால் இவளும் கோபப்பட்டு அவனை கூப்பிட்டுச் சொல்லவில்லை.

தன் தந்தையிடமும் அன்னையிடமும் மட்டும் சொல்லி “ராணி பர்னிச்சர்ஸ்”க்கு நேர்முகத் தேர்வுக்கு சென்றாள். தண்டபாணியிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அது அரவிந்தின் ஷோரூம் என்று தெரிந்திருக்கும்.

ஆனால் சொல்லாததினால் யாருடைய பர்னிச்சர் ஷோரூம் என்று தெரியாமலேயே நேர்முகத் தேர்வுக்குச் சென்றாள்.

ஷோரூம் பிரம்மாண்டமாக இருந்தது. கொஞ்சம் பெரிய ஷோரூம் எதிர்பார்த்து தான் வந்தாள். ஆனால் இவ்வளவு பெரிய ஷோரூம் எதிர்பார்க்கவில்லை. இத்தனை பெரிய ஷோரூமிற்கு மேலாளர் என்றால் பெரிய வேலை தான் நினைத்தாள்.

அங்கே இருந்த நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். ஒரு வேளை இந்த வேலைக்கு சிறிய பெண்ணாகத் தெரிகிறோமோ என்று. பரவாயில்லை புடவையில் வந்திருக்கிறோம் என்று தன்னைத்தானே மெச்சிக் கொண்டாள்.

அவள் எண்ணங்களுக்கு தடை போடும் வகையில் அவள் இன்டர்வியூ ஹாலுக்குப் போக, அங்கே இவளைப் போலவே நான்கு இளைஞர்கள் இருந்தனர். அவர்களும் இன்டர்வியூவிற்கு வந்தவர்களைப் போல் தான் தெரிந்தனர்.

அவர்கள் ஐந்து பேரும் அமர வைக்கப்பட… அனைவரும் இளைஞர்கள் என்பதால் அறிமுகப்படுத்தி பேசிக் கொண்டிருக்க, இவள் தனித்து பெண் என்பதால் யாரோடும் பேசாமல், அந்த ஹாலில் என்ன என்ன பொருட்கள் இருக்கிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து ஒரு பெரியவர் வந்தார். அவர் அங்கே இருந்த பொருட்களைப் பற்றியே அதிக கேள்வி கேட்க… எல்லோரும் தடுமாறினர். ஆனால் கீர்த்தி ஓரளவு சரியான பதில்களே சொன்னாள்.

பின்னர் ஒருவர் ஒருவராக தனியாகக் கூப்பிட்டு கேள்விகள் கேட்டார் அந்தப் பெரியவர். அவர் மிஸ்டர். சிதம்பரம், அரவிந்தின் தந்தை. யாருடைய சிபாரிசும் இல்லாமலேயே, அது அரவிந்தின் கம்பெனி என்று தெரியாமலேயே… கீர்த்தி அங்கே மேலாளராகத் தேர்வு செய்யப்பட்டாள்.

கீர்த்தியை அவருக்கு முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. அதனாலேயே அவர் தேர்வு செய்தார். இத்தனை வருட காலத்தில் என்றுமே அவர் உள்ளுணர்வு பொய்த்ததில்லை.

அடுத்த நாளில் இருந்தே பணியில் சேருமாறு பணித்துவிட, கீர்த்திக்கு பயங்கர சந்தோஷம். சம்பளம் சிறிது குறைவு தான். மற்ற பெரிய பெரிய கம்பெனிகள் தரும் அளவிற்கு இல்லை. இருந்தாலும் அது ஒரு வேலையைத் தொடங்குபவர்களுக்கு நல்ல சம்பளமே.

இந்த சந்தோஷமான விஷயத்தை முதன் முதலில் தண்டபாணியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் போலத் தோன்ற அவனை அழைத்தாள்.

“அண்ணா எனக்கு வேலை கிடைச்சிடுச்சு” என்றாள் உணர்ச்சி மிகுந்த குரலில். “அப்படியா! என்ன வேலை எங்கே” என்று தண்டபாணி கேள்வி கேட்க…

“நம்ம ஏரியாக்கு பக்கத்துலயே தான் அண்ணா, “ராணி பர்னிச்சர்ஸ்”ல மேனேஜர் வேலை” என்றாள்.

“என்ன அங்கயா” என்றான் ஆச்சர்யத்தோடு தண்டபாணி.

“ஆமாம் தண்டு, உனக்குத் தெரியுமா.”

“ஏன் தெரியுமா, அதுதான் நம்ம அரவிந்தோட ஷோரூம்” என்றான்.

“என்ன அரவிந்த் ஷோரூமா” என்றாள் இந்த முறை அவள் அதிர்ந்து.

“ஆமாம் அது அரவிந்த் ஷோரூம் தான். ஆனா அவன் அங்க அதிகம் போக மாட்டான்.”

“வேற பிஸினெஸ் பண்றாங்களா?”

‘வேற பிஸினெஸ்ஸா? வெட்டியா சுத்திட்டு இருக்கான்” என்று மனதிற்குள் நினைத்தவன் அதை வெளியில் சொல்லவில்லை.

பேச்சை மாற்றி, “எப்போ இருந்து ஜாயின் பண்ணனும்.”

“நாளையில் இருந்து அண்ணா” என்றாள் உற்சாகமாக,

“ஆல் த பெஸ்ட் நான் வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும் பார்த்துக்கோ, பார்த்துப்போய், உன் விளையாட்டுத் தனமெல்லாம் விட்டு கொஞ்சம் சீரியஸாக இரு” என்று ஒரு ஐந்து நிமிடம் தொலைபேசியிலேயே அறிவுரை வழங்கிய பிறகு தான் விட்டான்.

“அண்ணா போதும்” என்று அவள் அலறிய பிறகே விட்டான்.

அவள் தந்தையிடமும், தாயிடமும் பகிர்ந்து கொண்டாள். தந்தையும் ஒன்றும் சொல்லாமல் சரி என்று விட்டார்.

கீர்த்தியினுடைய சற்று பிரச்சனையான ஜாதகம்.

நட்சத்திரம் வேறு மூல நட்சத்திரம். அதனால் ஜாதகம் அமைவது தட்டித் தட்டிப் போனது.

அமையும்போது அமையட்டும் அதுவரை அவள் வேலைக்காவது செல்லட்டும் என்று அவள் தந்தை விட்டுவிட்டார். ஆனால் மும்முரமாக வரன் தேடும் பணியில் ஈடுபட்டுதானிருந்தார்.

தண்டபாணி தன் தங்கை அரவிந்தின் பர்னிச்சர் ஷோரூமில் செலக்ட் ஆனதை, அரவிந்தை அழைத்துச் சொன்னான்.

அரவிந்த், “அப்படியா” என்பதோடு நிறுத்திக் கொண்டான். அதுதான் அரவிந்த். அவன் அப்படித்தான் சொல்லுவான் என்று தண்டபாணிக்கும் தெரியும். இருந்தாலும் அவனிடம் தெரிவிக்க வேண்டும் என்றே அவனை அழைத்து விஷயத்தைத் தெரிவித்தான்.

அன்று இரவு அரவிந்த் வீட்டிற்கு வந்தபோது, அவன் தந்தையும் வந்திருந்தார்.

“இந்தக் காலத்துல பொம்பள புள்ளைங்க எல்லாம் எவ்வளவு விவரமாகவும், புத்திசாலியாவும் இருக்கு, நீ இப்படி சும்மா சுத்திட்டு இருக்கியேடா” என்றார்.

ஒரு பார்வை பார்த்ததைத் தவிர அரவிந்த் பதில் ஏதும் பேசவில்லை. மீண்டும் அவரே, “நம்ம கம்பெனிக்கு மேனேஜரா ஒரு பொண்ணை செலக்ட் பண்ணியிருக்கேன். என்ன ஒரு புத்திசாலித்தனம் தெரியுமா நீயும் தான் இருக்கியே” என்று அவனை சாடிச் சென்றார்.

அவர் பேசியதை நினைத்து அவர் மேல் கோபம் வந்தாலும், அதையும் விட கீர்த்தி மேல் கோபம் வந்தது.

“பெரிய இவ இவ… இவளுக்கு ஊர் உலகத்துல கம்பெனியே கிடைக்கலியா என்ன? என் கம்பெனி தானா கிடைச்சது வேலை பார்க்க” என்று மனதிற்குள்ளேயே சலித்துக் கொண்டான்.

தண்டபாணி வேறு அவனை அழைத்து “டேய் பார்த்துக்கோடா” என்றிருந்தான். அது வேறு இன்னும் எரிச்சலாக இருந்தது.

‘அவளுக்கு இருக்கும் தைரியத்திற்கு அவளே பத்து பேரை பார்த்துக் கொள்ளுவாள் நான் அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமா’ என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டான்.

“இவள் நிஜமாகவே இவள் அண்ணன் சொன்னது போல் குட்டிப்பிசாசு தான். கொஞ்சமும் அசராத என்னையே சறுக்கி விழ வைத்து விட்டாளே” என்றிருந்தது.

“அவளைப் பார்த்த நாளில் இருந்து அடிக்கடி அவளை நினைக்கிறோம். ஏதாவது ஒரு வகையில் என்னை அவள் நினைக்க வைக்கிறாள். அதிகமாக கோபப்பட்டு தான் நினைக்கிறோம். ஆனாலும் என்ன நினைக்க வைக்கிறாளே” என்றிருந்தது.

“அவளும், அவள் பார்வையும்… என்னைப் பார்ப்பதே அலட்சியமாக, முறைத்து தான் பார்க்கிறாள். இதுவரை என்னை யாரும் அப்படிப் பார்த்ததில்லை” என்றும் இருந்தது. அவளைப் பற்றி யோசித்தவாறே தூங்கிப் போனான்.

Advertisement