Advertisement

24

மறுநாள் கீர்த்தி, அரவிந்தின் திருமண நாள். இருவருக்குமே அது நன்கு ஞாபகம் இருந்தது. ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசிக் கொள்ளாமல் அமைதியாக உறங்க முற்பட்டனர் இருவரும்.

அம்மு ஓடி ஓடிக் களைத்து விட்டதால்… அன்று சீக்கிரமே உறங்கி விட்டாள். அவளை ஒர ஓரமாகப் போட்டு, புதிதாக முளைத்தப் பழக்கமாக… கீர்த்தி அரவிந்தின் அருகில் படுக்க… சிறிது நேரம் அமைதியாக படுத்திருந்தனர்.

அரவிந்த் தான் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான். “நாளைக்கு என்ன ப்ளான் கீர்த்தி” என்றான்.

அப்படியே அவனருகில் எழுந்தமர்ந்த கீர்த்தி “ப்ளானா என்ன ப்ளான்.”

“அப்போ நாளைக்கு நம்ம வெட்டிங் டேக்கு ஒண்ணும் ஸ்பெஷல் இல்லையா.”

“என்ன ஸ்பெஷல் ஒண்ணும் ஸ்பெஷல் இல்லை. அப்படி ஏதாவது ஸ்பெஷல்ன்hன நீங்கதான் சொல்லணும்.”

“நானா… நான் என்ன சொல்றது. நீயே சொல்லு.”

“நீங்களே சொல்லுங்க.”

“நீயே சொல்லு.”

“அச்சோ நீங்க… என்ன பிடிவாதம்… கோயிலுக்குப் போகலாம்… எங்கயாவது வெளில சாப்பிடலாம்… போதுமா…”

“அவ்வளவுதானா.”

“அவ்வளவு தானான்னா… வேற என்ன.”

“வேற என்னவா… இப்படிக் கேட்டா நான் என்ன சொல்லுவேன்.”

“நீங்க என்ன அம்முவா… உங்களுக்கு என்னன்னு சொல்லாமயே தெரியறதுக்கு… உங்களுக்கு என்ன வேணும்னு நீங்கதான் சொல்லணும். நீங்கதான் நடத்திக்கணும்” என்றாள் தெளிவாக.

“உனக்கு என் மேல கோபம் எதுவும் இல்லையே கீர்த்தி.” அவனையே சிறிது நேரம் பார்த்தவள்… “கோபம் எல்லாம் எதுவும் இல்லை… முன்ன இருந்திச்சு… இப்போ இல்லை… ஆனா கொஞ்சம் வருத்தமிருக்கு… நாள்பட சரியாகிடும் நினைக்கிறேன்.” என்றாள் சற்று புன்னகைத்தவாறே…

“எப்போ சரியாகும்.”

“எப்போன்னு அதெல்லாம் சொல்ல முடியுமா… இப்போவே கூட சரியாகும். இல்லை இன்னும் நிறைய நாள் ஆகலாம். எதுவேணா நடக்கும். எனக்கு இதை பேசிப் பேசி போர் அடிக்குது. தூங்கட்டா” என்றாள் கறாராக.

“ம்” என்று மனமில்லாமல் தலையசைத்தான்.

கீர்த்திக்கு சிரிப்பு வந்தது… “உனக்கு வேணும்னா நீதான் நடத்திக்கணும் பாலிஷ்டா சொல்லிட்டேன். இன்னும் சும்மா பார்த்துப் பார்த்தே டைம் வேஸ்ட் பண்ணறான். இவனை என்ன  பண்றது தெரியலை” என்று சற்று சுத்தமாக முணுமுணுத்தவாறே கீர்த்தி படுக்க…

இப்போது படுக்கையில் இருந்து எழுந்தமர்ந்த அரவிந்த்… “என்ன? என்ன சொன்ன” என்றான்.

“ம், சொன்னேன் சுரக்காய்க்கு உப்பில்லைன்னு” என்றாள் சலிப்பாக…

“இல்லையில்லை நீ வேற என்னமோ சொன்ன” என்றான் சீரியஸாக…

கீர்த்திக்கு அவன் சொன்ன விதத்தில் பயங்கரமாக சிரிப்பு வந்தது. வாய்விட்டுச் சிரித்தவள், “ஒண்ணுமில்ல தூங்கங்க” என்று சொல்லி படுத்துக் கொண்டாள்.

“இவ என்னடா நம்மள வெச்சு காமெடி, கீமடி எல்லாம் பண்றா போல” என்று சத்தமாகச் சொல்லி அரவிந்த் படுக்க… கீர்த்தி சிரிப்பு வந்தாலும்… “ரொம்ப பண்ணாதடி. அப்புறம் எரிஞ்சு விழுவான்” என்று அவளுக்கு அவளே நினைத்துக் கொண்டு அமைதியாக படுத்துவிட்டாள்.

மறுநாள் பொழுது இனிதாகவே புலர்ந்தது. கீர்த்தி முதலிலேயே விழித்து விட்டாள். அரவிந்தை பார்க்க அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ‘நான் முழிச்சுட்டு இருக்கேன்… நீ தூங்கறியா’ என்று அவள் நினைக்கும் போதே அம்மு சிணுங்க… அம்முவை தூக்கி, அரவிந்த் மேல் விட்டாள்.

அம்மு அவன் மேல் இரண்டு கால்களையும் போட்டு அமர்ந்து கொண்டு, அவன் முகத்தை வருட, கண் விழித்தான். கண் விழித்தவன் பார்வையில் அம்முபட, “அம்மும்மா என்ன பண்ணறீங்க…” என்றான் மலர்ந்த முகத்தோடு.

அம்மு திரும்பி அவன் அம்மாவைப் பார்க்க… அப்போதுதான் கீர்த்தியைப் பார்த்தான். அவன் பார்ப்பதற்காகவே காத்திருந்தவள், ஹேப்பி வெட்டிங் ஆன்னிவர்ஸரி” என்று மலர்ந்த முகத்தோடு சொன்னவள்… அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

அரவிந்திற்கு இனம் புரியாத மகிழ்ச்சி பொங்கியது. அம்முவை தூக்கிக் கொண்டு எழுந்தவன்… கீர்த்தியின் நெற்றியில் முத்தமிட்டு “ஹேப்பி வெட்டிங் ஆன்னிவர்ஸரி” என்றான் பதிலுக்கு…

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டனர்.

“எங்க போலாம் கீர்த்தி செலிபரேட் பண்ண” என்றான் உற்சாகமாக அரவிந்த்…

“நீங்க எங்க கூப்பிட்டாலும், நானும் அம்முவும் வருவோம்” என்றாள் சற்றும் குறையாத உற்சாகத்துடன் கீர்த்தி.

“காலைல கோயிலுக்கு நம்ம மூணு பேரும் போகலாம். அப்புறம் வீட்டுக்கு வந்து அம்முவை அம்மாகிட்ட விட்டுட்டு நாம மட்டும் எங்கயாவது போகலாமா” என்று அவளிடம் சம்மதம் கேட்டான்.

“அம்முவை விட்டுட்டா நம்ம மட்டுமா… அம்மு தேடுவாளே” என்றாள் கீர்த்தி.

“ஒரு அரை நாள் ஒண்ணும் ஆகாது, நம்ம ரெண்டு பேர் மட்டும்தான் போறோம். நான் அம்மாகிட்ட சொல்றேன். அம்முவை அம்மா பார்த்துப்பாங்க.”

“சரி” என்பது போல் அரை மனதாக தலையாட்ட…

“அம்மும்மா நானும் அம்மாவும் வெளியே போறோம். நீங்க பாட்டிகிட்ட சமத்தா இருப்பீங்களாம்” என்று அம்முவிடம் பேசிக் கொண்டே ராணியிடம் சொல்வதற்காக வெளியே போனான்.

ராணியிடம் சென்று சொல்லி, “போகவா” என்று சம்மதம் கேட்க… “தாராளமா போயிட்டு வாங்க, நான் பாத்துக்கறேன் என் தங்கத்தை” என்று சந்தோஷமாகச் சொன்னார் அவர்.

அரவிந்த் தீர்மானித்தபடியே காலை கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கினர். இருவர் மனதுமே ஒருவருக்காக ஒருவர் பிரார்த்தனை செய்தது. இருவருமே தங்கள் திருமண வாழ்வு என்றும் சிறப்புற்று பல ஆண்டுகள் தொடர மனமுருக வேண்டினர்.

பிறகு வீட்டிற்கு வந்து அம்மாவிடம் அம்முவை விட்டுச் சாப்பிட்டுக் கிளம்ப… அம்மு சமத்தாக அவள் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் டாட்டா கொடுத்தது. அதைப் பார்த்துதான் சற்று நிம்மதியாக அரவிந்தோடு, கீர்த்தி கிளம்பினாள்.

“உன் பொண்ணை நான் பத்திரமா பார்த்துக்கறேன்… நீ என் பையனை கவனி” என்று ராணிகூட கிண்டலடித்து கீர்த்தியையும், அரவிந்தையும் வழியனுப்பினார்.

அரவிந்த் அவளை அழைத்துக் கொண்டு காரிலேயே கிளம்பினான். “எங்கே போறோம் நம்ம” என்று கீர்த்தி கேட்டதற்கு கூட பதில் சொல்லாமல் சிரித்தான்.

அவன் கார் கிழக்கு கடற்கரை சாலையில் பறக்க, அதற்கு மேல் கீர்த்தியும் கேட்கவில்லை… அவனோடான பயணத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.

காரில் இளையராஜாவின் இன்னிசை பாடல்…

“மலரே மலரே உல்லாசம்

உன்தன் நினைவே நினைவே சங்கீதம்

உன்னைத்தான் சந்தித்தால்

உள்ளத்தில் தித்தித்தால்

இதயம் எழுதும் கவிதை நீ…”

என்ற பாடல் வரிகள் ஒலிக்க… அதன் இனிமையையும், பொருளையும் உணர்ந்து ரசித்து… இருவருமே அந்த பயணத்தை அனுபவித்தனர்.

ஏறக்குறைய அவர்கள் இடத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள முட்டுக்காடு படகு ஸ்தலத்தை அடைந்தனர். மதிய நேரம் அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. அதனால் கூட்டம் அதிகம் இல்லை.

சில்லென்ற காற்று மேனியைத் தழுவ… “ஸ்” என்று சிலிர்த்த கீர்த்தி புடவை தலைப்பை இழுத்துப் போர்த்தினாள். வெயிலுக்கு வெயிலும் அடித்தது… இதமான காற்றும் வீசியது.

‘என் மனநிலையைப் போலே இங்கே இயற்கையும் குழப்பி அடிக்கிறது’ என்று கீர்த்தி எண்ணிக் கொண்டாள்.

எதுவும் பேசாமல் அரவிந்த் தன் மனைவி செய்யும் அத்துணை செயல்களையும் இதமான பார்வையால் வருடி ரசித்தான் அரவிந்த்.

“என்னடா இவங்க இப்படிப் பார்க்கறாங்க” என்று தவித்தாள் கீர்த்தி. சிறிது நேரம் பொறுத்தவள், பின்பு “என்ன” என்பது போல அரவிந்திடம் ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க… அவனும் பதில் பேசாமல் பார்வையாலேயே, “ஒன்றுமில்லை” என்றான்.

“ஏன் இப்படிப் பார்க்கறீங்க… எனக்கு அன்ஈஸியா இருக்கு” என்றாள் கீர்த்தி… வாயைத் திறந்து.

“நீதானே நான் பார்த்துப் பார்த்Nது டைம் வேஸ்ட் பண்றேன்னு சொன்ன, அதான் பார்த்துட்டு இருக்கேன்” என்றான் சின்ன சிரிப்போடு…

அப்போதுதான் கீர்த்திக்கு உரைத்தது, நேற்று பேசியதை இவன் கேட்டு விட்டான் என்று… முகம் சிவக்க வேறுபுறம் திரும்பினாள்…

“அப்பா! என்ன வாய் என்ன வாய்… வேலைக்கொன்னும் ஆகலைன்னாலும் வாய் மட்டும் குறைச்சல் இல்லை” என்று அவளைச் சீண்டினான் அரவிந்த்.

“என்ன? என்ன? வேலைக்கு ஆகலை” என்று சிலுப்பினாள் கீர்த்தி…

“அதானே என்ன? என்ன? வேலைக்கு ஆகலை. அதையும் தான் இன்னைக்குப் பாத்துடலாம்” என்று அவளை ஒட்டியே சேம் சைட் கோல் போட்டான் அரவிந்த்.

கீர்த்தி அவனை முறைத்துப் பார்க்க முயன்று முடியாமல் தோற்றாள். அந்தத் தோல்வியும் அவளுக்குப் பிடித்தது.

பின்பு இருவரும் அந்த படகுத் துறையிலேயே அமர்ந்து விட்டனர். அமைதியாக அந்த நீரின் அழகை ரசித்தபடி, அங்கு வந்து போகும் பறவைகளை ரசித்தபடி… படகில் பயணிக்கும் இளம் ஜோடிகளை ரசித்தபடி அமர்ந்திருந்தனர்.

இருவர் மனமுமே உல்லாசமாக இருந்தது. ஒருவரின் அருகாமையை மற்றொருவர் விரும்பினர். அந்த மோன நிலையைக் கலைக்க விருப்பமில்லாமல் எல்லோரையும் வேடிக்கைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தனர்.

வெகுநேரம் கழித்து கீர்த்தி அரவிந்திடம், “நம்மளும் போட்ல போகலாமா” என்றாள். அவள் கேட்பதற்காகவே காத்திருந்தவன் போல உடனே எழுந்தான் அரவிந்த்.

அவன் போய் ஒரு போட்டை புக் செய்து, கீர்த்தியை அழைக்க… அவனோடு போட்டில் பயணிப்பது அவளின் உல்லாசமான மனநிலையை அதிகரித்தது தண்ணீரில் கையை அளந்தபடி சுற்றி இருக்கும் இடங்களைப் பார்வையிட்டபடியே வந்தவள்… “அது என்ன? இது என்ன?” என்று சுற்றியிருப்பவை பற்றியும், இயற்கையைப் பற்றியும் ஆயிரம் கேள்விகள் கேட்டாள் கீர்த்தி…

“இந்த ஒரு வருஷமா என்கிட்ட அதிகம் பேசாததை ஒNரு நாள்ல பேசித் தீர்த்துருவா போல இருக்காளே” என்று அரவிந்தை நினைக்க வைத்தாள். திருமணத்திற்கு முன் தண்டபாணியுடன் பார்த்த கீர்த்தியைப் போல உற்சாகமாக இருந்தாள்.

திடீரென்று, “ஆயிரத்தி ஒண்ணாவது கேள்வி கேட்கட்டா” என்றாள் கீர்த்தி… அரவிந்த் விழிக்;க…

“இல்ல உங்க மனசாட்சி நான் இப்படி ஆயிரம் கேள்வி கேட்கறேன்னு உங்க கிட்ட சொன்ன மாதிரி என் காதுல விழுந்தது. அதான் ஆயிரத்தி ஒண்ணாவது கேள்வி கேட்கறேன் என்று அவனை அறுவையால் கடிக்க…

“கீர்த்தி, நிஜமாவே என்னால தாங்க முடியலை. உன் அறுவையை கொஞ்சம் நிறுத்தறேன்” என்றான் பாவமாக…

“நிறுத்திக்கறேன், எல்லாத்தையும் நிறுத்திக்கறேன்” என்று அதற்கும் சினிமா டயலாக் அடித்தாள் கீர்த்தி.

“போதும், கீர்த்தி போதும்” என்று அவளை மாதிரியே அரவிந்தும் சொல்ல… இருவருக்கும் சம்மந்தமில்லாமல் சிரிப்பு வர… வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்தனர்.

வீட்டிற்கு வந்தும் அந்த உல்லாசமும், உற்சாகமும் அப்படியே இருந்தது. இரவு படுக்கையிலும் அதை நீட்டிக்க விரும்பி, அரவிந்த் முன்னேற… கீர்த்தி மறுப்பெதுவும் சொல்லாமல் அவனுக்கு இசைந்து கொடுக்க… அதற்குள் விடிந்து விட்டதா என்று இருவருக்குமே இருந்தது.

அரவிந்த் மேல் தான் கொண்டிருந்த சஞ்சலங்களை எல்லாம் ஒரே இரவில் மறக்கடித்து விட்டானேர் என்று தோன்றியது கீர்த்திக்கு. அந்த எண்ணம் எப்பொழுதும் அவள் முகத்தில் புன்னகையை தவழ விட… அவளைப் பார்க்க பார்க்க அரவிந்திற்குக் காதல் பொங்கியது.

அது அவர்களது காதல் வாழ்க்கைக்கு நல்லதொரு ஆரம்பத்தைக் கொடுத்தது…

நாட்கள் வேகமாக நகர ஆரம்பிக்க… அம்முவும் வேகமாக வளர்ந்தாள். அவள் வளர்வதைப் போல கீர்த்தியும் அரவிந்தும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலும் வேகமாக வளர்ந்தது.

கீர்த்தியின் மேல் அரவிந்த் கொண்ட காதல்… அம்மு மேல் அவன் வைத்த பாசம்… அரவிந்தின் பொறுப்பற்ற தனங்களை விட வைத்து… அவனை பொறுப்புள்ள மனிதனாக்கியது.

இப்போதெல்லாம் தொழிலை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்… அது தொழிலில் நல்ல வளர்ச்சியையும், நிறைய லாபத்தையும் கொடுத்தது. வருமானம் பெருகப் பெருக… தனக்குள் நல்ல தன்னிறைவை உணர்ந்தான் அரவிந்த்.

எல்லாம் கீர்த்தி வந்த நேரம், அரவிந்தை பொறுப்புள்ளவனாக மாற்றி விட்டாள் என்று ராணியும், சிதம்பரமும் கீர்த்தியை சிலாகித்தனர்.

நிஜமும் அதுவே கீர்த்தி வந்த பிறகுதான் அவன் தொழிலை சற்று ஊன்றி கவனிக்க ஆரம்பித்தான். முதலில் கீர்த்தி இருக்கிறாள் என்பதற்காக தினமும் ஷோரூம் வந்த அரவிந்த்… பின்பு அவனாகவே ஈடுபாட்டுடன் தொழிலை கவனிக்க ஆரம்பித்து விட்டான். பணம் வரும்போது அதை வேண்டாம் என்பவர் எவர் இவ்வுலகில்.

“அருளிள்ளார்க்கு அவ்வுலகமில்லை… பொருளிளார்க்கு இவ்வுலகமில்லை” என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அரவிந்த் பொருள் பின்னோடும் சற்று ஓட… கீர்த்தியையும், அம்முவையும் கவனிக்கும் நேரம் கூட சற்று குறைந்தது.

லிசாவின் டாக்-ஷோ நன்றாக ஹிட் ஆக… அவள் லண்டன் முழுக்கத் தெரிந்த ஒரு முகமானாள். ஹரிஷ{ம் எவ்வளவு நாட்களானாலும் அவள்தான் தன் வாழ்க்கையில் என்று பொறுமையாகக் காத்திருந்தான்.

அரவிந்திற்கும், கீர்த்திக்கும் ஆரம்பத்தில் சற்று பயமாக தான் இருந்தது. எங்கே லிசா வந்து குழந்தையை கேட்டு விடுவாளோ என்று, ஆனால் லிசாவின் வாழ்க்கை முறையே வேறு அவள் வரமாட்டாள் என்று சீக்கிரமே உணர்ந்து கொண்டனர். லிசா டாக்-ஷோ மூலம் ஒரு பக்கம் பிரபலமாக… இன்னொரு பக்கம் மக்கள் தொண்டிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள்.

போதைக்கு அடிமையான சிறுவர்களை மீட்கும் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டாள்.

அது அவளுக்கு நல்ல பேரை ஈட்டித் தந்தது மட்டுமல்லாமல், அவளின் டாக்-ஷோ இன்னும் பிரபலமானது. என்ன ஹரிஷின் காத்திருப்பு மட்டும் லிசாவின் மனதில் ஓர் ஓரமாக உறுத்திக் கொண்டே இருந்தது. ஹரிஷ{ம் பொறுமையாக அவளுக்காகக் காத்திருந்தான். வருடங்கள் மறைந்தன…

Advertisement