Advertisement

 

23

வீட்டிற்கு வந்தவர்களை பார்த்த ராணி, “என்னடா அதுக்குள்ள வந்துட்டீங்க… அம்மு ரொம்ப படுத்திட்டாளா” என்று கேட்க…

“இல்லை, உன் மருமகதான் படுத்தினா” என்று வெளியே சொல்லவா முடியும். “இல்லைம்மா கீர்த்தி சீக்கிரம் செலக்ட் பண்ணிட்டா” என்று சொல்லி காட்டினான்.

எடுத்த துணிகளை எல்லாம் காட்ட… “உனக்கெங்கடா” என்றார் அன்னையாக ராணி.

அப்போதுதான் அவனுக்கெடுக்காதது கீர்த்திக்கு உரைத்தது. ‘ஐயோ! மறந்துட்டோமே… இன்னைக்கு என்ன கீர்த்தி இப்படி மாத்தி மாத்தி சொதப்பிட்டே இருக்க’ என்று மனதிற்குள் அவளை அவளே கடிந்து கொண்டு பரிதாபமாக அரவிந்தைப் பார்த்தாள்.

“நான்தான்மா இன்னொரு நாள் எடுத்துக்கலாம்னு கூட்டிட்டு வந்துட்டேன்.”

“ஏன்டா, போனதுதான் போனீங்க… இன்னைக்கே எடுத்துட்டு வந்திருக்கக் கூடாது… அம்முக்கு இன்னும் நகை வேற வாங்கலாம்ன்னு இருக்கோம், நானும் அப்பாவும்… அதுக்கு வேற ஒரு நாள் போகணுமேடா” என்றார் ராணி.

“போகலாம்மா” என்று சலிப்பாகச் சொல்லிவிட்டுப் போனான் அரவிந்த்… அவனின் குரலில் பேதம் ராணி கவனிக்கவில்லை என்றாலும் கீர்த்திக்கு நன்கு தெரிந்தது.

அம்முவை அவள் அத்தையினிடத்தில் கொடுத்து விட்டு அரவிந்தின் பின்னேயே அவன் ரூமிற்குள் சென்றவள்…

“சாரி மறந்துட்டேன்… அதிகமா நம்ம வெளியவே போனதேயில்லையா… அதான் சொதப்பிட்டேன்” என்றாள் அசடு வழிந்து…

“பரவாயில்லை, அட்லீஸ்;ட் சொதப்பிட்டேன்னாவது நினைக்கிறா” என்று மனதிற்குள் நினைத்தாலும், அவளை ஒரு வெற்று பார்வையே பார்த்து வைக்க…

“அதான் மறந்துட்டேன்னு சொல்றேன்ல, கொஞ்சம் சிரிச்சாதான் என்னவாம்” என்று கேட்க…

அவளிடம் விளையாடிப் பார்க்க ஆசை வந்து, அரவிந்த் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி… வேண்டுமென்றே எல்லாப் பற்களும் தெரியுமாறு வாயை இழுத்துப் பிடிக்க…

“அம்மாடியோ! இதுக்கு நீங்க சிரிக்காமலேயே இருந்திருக்கலாம்…

பரவாயில்லை… அம்முவை நான் அத்தை கிட்டயே விட்டுட்டு வந்துட்டேன்… இல்லைன்னா பயந்திருப்பா” என்று அவனைப் பார்த்து வாயடிக்க…

அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அவளை இழுத்த அரவிந்த்… “இவ்வளவு பேசற உன் வாயை என்ன செய்யறேன் பாரு” என்று அவள் இதழ்களை தன் இதழ்களால் சிறை செய்தான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத கீர்த்தி, முதலில் திமிறினாலும் பின்பு அவனுள் அடங்கி… இசைந்து கொடுத்தாள்.

அதற்குள் ராணி, “கீர்த்தி… அம்முக்கு இப்போ பால் குடிக்க வைக்கட்டுமா இல்லை இட்லி ஊட்டட்டுமா” என்று குரல் கொடுக்க…

அவளை விலக்க மனமில்லாமல் விடுவித்தான் அரவிந்த். கீர்த்தி அவன் முகம் பார்க்க வெட்கியவளாக ஓடியே போனாள்.

முன்பு இருந்த வெறுமையான மனநிலை நிமிடத்தில் அரவிந்திற்கு மாறி விட்டது.

“டேய் தண்டபாணி பண்ற குறும்பைப் பார்க்க” என்று சம்மந்தமில்லாமல் தண்டபாணியின் ஞாபகம் அவனை அதிகமாகத் தாக்கியது. உற்ற நண்பன் அல்லவா… அடிக்கடி அவனையறியாமல்… தண்டபாணியின் ஞாபகங்கள் அவனைத் தாக்கத்தான் செய்தன.

தனக்கே இப்படி இருக்கிறதே… லிசா என்ன செய்வாள் என்று லிசாவைப் பற்றிய நினைவும் அன்று அரவிந்திற்கு அதிகமாக இருக்க… ஹரிஷை அழைத்தான் அரவிந்த்.

“ஹாய் ஹரிஷ் எப்படியிருக்கே.”

“நல்லாயிருக்கேன்… வாட் எ சர்ப்ரைஸ் ரொம்ப நாள் கழிச்சு போன் பண்ணியிருக்க அரவிந்த்…”

“சும்மாதான் போன் பண்ணினேன்… நீ அந்தளவுக்கு முன்னேறியிருக்கன்னு தெரிஞ்சுக்கத் தான்.”

“இப்போ தான் ஐ லவ் யூ சொல்ற அளவுக்கு முன்னேறி இருக்கேன்.”

“அப்பா… சொல்லிட்டியா… லிசா என்ன சொன்னா…”

“அவளா… அவ எங்க சரி சொல்லுவா. இருந்தாலும் நான் விடாம சொல்லிட்டுதான் இருப்பேன்.”

“லிசா எப்படி இருக்கா… இப்போ என்ன பண்ணறா.”

மாடலிங் மூலமா இப்போ அவளுக்கு ஒரு டாக்-ஷோ வாய்ப்பு கிடைச்சிருக்கு… இப்போ அது மூலமா லண்டன்ல இருக்கிற வி.ஐ.பி. கூட எல்லாமே இனிமே ஷ_ட் பண்ணப் போறா” என்றான்.

“வாவ்… இது ரொம்ப பெரிய விஷயம்… நான் அவளை கூப்பிட்டு கங்க்ராஜுலேட் பண்ணவா.”

“அதுக்கு எதுக்கு அரவிந்த் என்னை கேட்கற, தாராளமா பண்ணு.”

“இல்லை, நான் கூப்பிட்டா அவளுக்குக் குழந்தை ஞாபகம் வந்துடுச்சுன்னா…”

“வர மாதிரி இருந்தா, இந்நேரம் வந்திருப்பா அரவிந்த்… இப்போதைக்கு அவளோட எண்ணம் எல்லாம் டாக்-ஷோ தான். நீ கூப்பிட்டு பேசு… ஒண்ணுமில்லை. அப்படியே என் பெருமைகளையும் சொல்லு.”

“உன் ப்ரெண்டுக்கு தெரியாத பெருமையை நான் என்ன சொல்லப் போறேன். நான் சொன்னா உதைப்பா… அவளா ஏதாவது உன்னைப் பத்தி சொன்னா சொல்றேன்” என்று சொல்லிச் சிரித்தான் அரவிந்த்.

“ஏதோ ஒண்ணு பண்ணு, ஆனா ஏதாவது பண்ணு” என்று சொல்லி அவன் போனை வைக்க… அரவிந்த் தான் வியந்தான்… “இவன் என்னடா தமிழ்நாட்ல இருக்கிறவனைவிட அதிகமா டைலாக் பேசுறான்” என்று.

அரவிந்த் ஹரிஷிடம் போன் பேசி வைத்தவுடனேயே லிசாவை அழைத்தான். இவன் என்னைப் பார்த்ததும் உடனே எடுத்த லிசா, “என்ன அர்வி, ஏதாவது முக்கியமான விஷயமா” என்றாள்.

“இல்லை லிசா… உன்கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சேன்னு தான் கூப்பிட்டேன்” என்றான்.

“இப்போ நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் அர்வி…நான் உன்னை அப்புறம் கூப்பிடட்டா” என்றாள்.

“சரி” என்று போனை வைத்தான் அரவிந்த்…

இரவு அம்முவை அருகில் போட்டு படுக்க வைத்து… தானும் உறங்க அப்போதுதான் ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

கீர்த்தி என்ன செய்கிறாள் என்று பார்த்தும் பார்க்காத மாதிரி அங்கேயே தான் இருந்தான் அரவிந்தும். சரியாக அந்த நேரம் பார்த்து அழைத்தாள் லிசா. போன் மணியடிக்கும்போதே யாரது இந்த நேரத்தில் கூப்பிடுவது என்று கவனிக்க ஆரம்பித்தாள் கீர்த்தி.

அதற்குத் தகுந்த மாதிரி… போனை எடுத்ததுமே அரவிந்தும் “சொல்லி லிசா” என… அவன் பேசுவதையே கவனிக்க ஆரம்பித்தாள் கீர்த்தி.

“எப்படியிருக்க அர்வி.”

“நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்கே.”

“ஓஹ் ஐ அம் ஃபைன்.”

“கங்க்ராஜுலேஷன்ஸ்.”

“எதுக்கு?”

“நீ ஒரு டாக்-ஷோ சைன் பண்ணியிருக்கியாமே.”

“அதுக்குள்ள உனக்கு யார் சொன்னா.”

“ஹரிஷ் சொன்னான்.”

“என் கிட்ட பேசாம அவன் கிட்ட மட்டும் பேசறியா நீ.”

“இல்லை லிசா… இன்னைக்கு தான் அவன்கிட்டயும் பேசினேன்.”

“தேங்கயூ ஃபார் த கங்க்ராட்ஸ். அதைவிட இந்து எப்படி இருக்கா… நல்லா இருக்காளா.”

“நல்லா இருக்கா… கீர்த்தி அவளை நல்லா பார்த்துக்கறா.”

“கீர்த்தி எப்படி இருக்கா.”

“நான் அவகிட்ட பேசினதே இல்லை. நீதான் பேசவிடவே மாட்டேங்கறியே.”

“அப்படி இல்லை. இப்போகூட பக்கத்துல தான் இருக்கா பேசறியா…”

“நீ ஸ்கைப்ல வா, நான் பேசறேன்.”

“சரி நீயும் வா” என்று சொன்ன அரவிந்த்… சென்று கம்ப்யூட்டரை ஆன் செய்ய… எல்லாவற்றையும் மௌனமாக பார்த்திருந்தாள் கீர்த்தி.

ஸ்கைப்பில் லிசா வந்தவுடனே, “இந்து எங்கே” என்றுதான் முதல் கேள்வி கேட்டாள்.

“இந்து தூங்கறா லிசா” என்ற அரவிந்த்… கீர்த்தியைப் பார்த்து… “அவ தூக்கம் கலையாம தூக்கிட்டு வாயேன் கீர்த்தி” என்று அவளைப் பணித்தான்.

“நீயே தூக்கிக்கோ” என்பது போல கீர்த்தி சைகை செய்ய… கண்களாலேயே அவளிடத்தில் கெஞ்சினான்.

பிறகே கீர்த்தி இந்துவை தூக்கி கம்ப்யூட்டர் முன்னால் வர… அங்கே முதன் முறையாக லிசாவைப் பார்த்தாள்.

பார்த்தாள்… பார்த்தாள்… பார்த்துக் கொண்டே இருந்தாள். இவ்வளவு அழகான பெண்ணா என்று.

லிசாதான் கீர்த்தியிடத்தில் முதலில் பேசியது…

“ஹாய் கீர்த்தி எப்படியிருக்கே…”

“நல்லாயிருக்கேன்.”

“தண்டு எப்பவுமே உன்னைப் பத்திதான் பேசுவான். சின்னச் சின்ன விஷயத்துக்குக் கூட உன்னை தான் ஞாபகப்படுத்துவான்” என்றாள் லிசா…

சற்று நேரம் தண்டபாணியின் நினைவில் லிசாவுக்கும் பேச்சு வரவில்லை… கீர்த்திக்கும் பேச்சு வரவில்லை.

இருவரும் தண்டபாணியை நினைக்கிறார்கள் என்றுணர்ந்த அரவிந்த்… இந்துவை லிசா பாhக்கும்படி செய்தான்.

பிறகு “இப்போல்லாம் நிறைய குறும்பு பண்ணறா அம்மு” என்று லிசாவிடம் பேச்சை மாற்றினான்.

“நடக்கறாளா” என்று லிசா விசாரிக்க…

“கொஞ்ச தூரம் கைவிட்டு நடக்கறா” என்று கீர்த்தி அதற்கு பதிலளித்தாள்.

கீர்த்தியே பிறகு லிசாவிடம்… “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…” என்றாள்.

“ஓஹ்! தேங்க்யூ கீர்த்தி” என்ற லிசா… “இந்து ரொம்ப குறும்பா” என்றாள்.

“ரொம்பக் குறும்பு தான்… ஆனாலும் பிரச்சனையில்லை. எல்லாக் குறும்பும் ரசிக்கும்படியாதான் இருக்கும். அதட்டவே மனசு வராது” என்றாள்.

“ஸம் டைம்ஸ் நீங்க ரெண்டு பேரும் இந்துவை தூக்கிட்டு லண்டன் வாங்களேன். நான் தான் வர முடியாது. நீங்களாவது வாங்களேன்” என்றாள்.

“இப்போ முடியாது லிசா… இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம். உன் லைப்ல ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி வந்தா சொல்லு. கட்டாயம் வர்றோம்.” என்றான் அரவிந்த்.

“என் வாழ்க்கைல என்ன முக்கியமான நிகழ்ச்சி வரும். ஒண்ணும் வராது.”

“அப்படிச் சொல்லாதே லிசா… உனக்காக ஹரிஷ் வெயிட் பண்ணறான். ஒரு ஓரமா அதை ஞாபகத்துல வச்சிக்கோ” என்றான் அரவிந்த். இதற்கு எந்த பதிலும் சொல்லாத லிசா… பிறகு அரவிந்திடம் பேசுவதை விடுத்து… கீர்த்தியிடமே பேசிக் கொண்டிருந்தாள். அதில் அம்முவைப் பற்றிக் கேட்டுக் கொண்டது அதிகம். லிசாவின் பேச்சில் இன்னும் தண்டபாணியின் தாக்கம் அதிகம் இருந்தது. அது கீர்த்திக்கும் புரிந்தது.

தாலியில்லாமல் குடும்பம் நடத்தினாலும், லிசாவும் தண்டபாணியும் அன்னியோன்யமான தம்பதிகளாக வாழ்ந்திருப்பார்கள் என்று லிசாவின் பேச்சில் இருந்தே புரிந்தது.

வெகு நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகே சென்றாள் லிசா ஸ்கைப்பை விட்டு.

கம்ப்யூட்டரை ஆஃப் செய்தவுடனேயே கீர்த்தி அரவிந்திடம், “எவ்வளவு அழகா இருக்கா…” என்று சிலாகிக்க…

“ஸ்கைப்ல பார்த்துட்டே நீ இப்படி சொல்றியே… இன்னும் நேர்ல பார்த்தா என்ன சொல்லுவ… ரொம்ப ரொம்ப அழகா இருப்பா” என்றான்.

“அவளோட வாழ என் அண்ணனுக்குக் கொடுத்து வைக்கலியே.”

“கொஞ்ச நாளாவது அவளோட சந்தோஷமா வாழ்ந்தானேன்னு சந்தோஷப்படு கீர்த்தி” என்றான் அரவிந்த்.

தண்டபாணியின் நினைவுகள் மிகவும் கீர்த்தியை தாக்க… “அவனுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்… இந்த செல்லத்தைப் பார்க்கற பாக்கியம் கூட இல்லாம போச்சே” என்றாள் அம்முவை வருடிக் கொண்டே… அரவிந்திடம்.

“நடந்ததை நினைக்கறதால நமக்கு வருத்தத்தைத் தவிர எதுவும் மிஞ்சாது. அவன் கடைசி நிமிஷம் வரைக்கும் அவன் சந்தோஷமா இருந்து செத்திருக்கான். அதையே நினைச்சுக்கோ” என்று கீர்த்தியை சமாதானப்படுத்தினான் அரவிந்த்.

அரவிந்த் இல்லையென்றால் இந்த நேரம் அம்மு தங்கள் கைகளில் இருக்க வாய்ப்பே இல்லை என்று நன்கு உணர்ந்தே இருந்தாள் கீர்த்தி…

“ரொம்ப தேங்க்ஸ்… நீங்க இல்லைன்னா அம்மு நம்மளோட வந்திருக்க வாய்ப்பே இல்லை” என்றாள் உணர்ந்து.

அவளையே விடாது பார்த்தவன்… “உனக்கு நீயே தேங்க்ஸ் சொல்லிப்பியா என்ன?” என்றான்.

“இல்லை அது அப்படியில்லை… நீங்க… உங்களால தானே அம்மு இங்க வந்தா” என்று தடுமாறினாள்…

அவள் தடுமாறுவதைப் பார்த்தவுடன்… “இங்கே வா” என்பது போல தலையசைத்துக் கூப்பிட்டான்… அவள் அருகில் சென்றதும் கட்டிலில் அமர்ந்திருந்தவன் தள்ளி அவள் அமர்வதற்கு இடம் விட்டான்.

உட்காரலாமா… வேண்டாமா… என்று கீர்த்தி பட்டிமன்றம் நடத்த… அவள் கைபிடித்து இழுத்து அருகமர்த்திக் கொண்டான்.

“லிசா நல்ல பொண்ணு தான் கீர்த்தி… ஆனா அவளோட கலாச்சாரமே வேற… அவகிட்ட அம்மு வளர்றது எனக்கு என்னவோ… ஒத்துக்கவே முடியலை. நான் தப்பாகூட இருக்கலாம். இல்லைன்னு சொல்லலை.”

“தண்டபாணி இறந்தவுடனே லிசாவோட அம்மா குழந்தையை அழிச்சிடலாம்னு சொன்னாங்க… அப்போவே நான் குழந்தையை நம்மளோட கூப்டுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கு லிசா ஒரு வேளை ஒத்துக்காம கூட இருந்திருக்கலாம். இல்லைன்னு சொல்லலை… என்னவோ என்னால தண்டபாணியோட குழந்தையை அப்படி விட முடியலை.”

“லிசா என் கைல கொடுக்கற வரைக்கும்… குழந்தையை என் கைல வாங்கற வரைக்கும்… அவ கொடுப்பாளா மாட்டாளா எனக்கு சந்தேகம் தான். நம்பிக் கொடுத்துட்டா… அவகிட்ட இருக்கிறதை விட நம்மகிட்ட இன்னும் சிறப்பா வளரணும் அம்மு. அது உன் கைல தான் இருக்கு கீர்த்தி…”

“நீ கேட்கலாம்… ஏன் இங்கிலாந்துல குழந்தைங்க வளர்றது இல்லையான்னு… இவ சின்ன பொண்ணு… கல்யாணமாகாமயே தண்டபாணியோட குடும்பம் நடத்தியிருக்கா… அவளுக்கு கொஞ்சம்கூட அது தப்பான விஷயமே கிடையாது… இந்த மாதிரி ஒரு சூழல்ல அம்மு வளரக்கூடாதுன்னு நெனைச்சேன். அதான் அவளைப் பேசி… கொஞ்சம் எமோஷனலா தண்டபாணியோட குழந்தை… அவன் வாரிசு… அவன் குடும்பத்துக்கிட்ட சேரணும் அது இது பேசி கூட்டிட்டு வந்துட்டேன்.”

“அவ நான் தான் குழந்தையை வளர்ப்பேன்னு என்கிட்ட சொல்லியிருந்தா என்னால ஒண்ணும் பண்ணியிருக்க முடியாது… ஆனா அவளுக்கே இப்போதைக்கு ஒரு குழந்தையை ஏத்துக்கற அளவுக்கு மனப்பக்குவம் கிடையாது. நிறைய நேரங்கள்ள அவ கூட இருந்தபோது நான் உணர்ந்திருக்கேன். அதான் இந்த முடிவு. அதுல அவ என் குழந்தையா வளரணும்னு ஆசை… தகப்பன் இல்லாத குழந்தையா வளரக்கூடாதுன்ற வெறி… எல்லாமா சேர்ந்து அதை என் குழந்தையாக்கி… உன்கிட்டயும் என்னைப் பொய் சொல்ல வச்சிடுச்சு. அதைத் தவிர உன்னை நம்பாத தன்மை எல்லாம் கிடையாது. நீ என்னை நம்பணும் கீர்த்தி” என்று நீளமாகப் பேசி முடித்தான்.

கீர்த்திக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. “இவன் எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்” என்றே தோன்றியது.

அதைச் சொல்லிச் சொல்லி இனி ஆகப் போவது ஒன்றுமில்லை என்றுணர்ந்தவள்… அமைதியாகவே இருந்தாள்.

அரவிந்த் தன் பதிலுக்காக காத்திருப்பத புரிய… “எல்லாம் சரியாக்கிடலாம் விடுங்க” என்று தனக்கும் அவனுக்குமாய் சேர்த்து சொல்லிக் கொண்டாள்.

“ரொம்ப நேரமாகிடுச்சு தூங்கலாம்… காலைல உங்க பொண்ணு சீக்கிரம் முழிச்சு என்னைத் தூங்க விடமாட்டா… கிடைச்ச நேரம் தூங்கினாதான்” என்று அவனிடம் சொல்லிக் கொண்டே அம்மு பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

அரவிந்திற்கு அவனையறியாமல் ஒரு பெருமூச்சு வெளியேற… உறங்கும் தாயையும், மகளையும் பார்த்தவாறே உறங்க முற்பட்டான், “இவள் எப்போது என்னைப் புரிந்து கொள்வாள்” என்று எண்ணிக் கொண்டே…

கீர்த்தி உறங்குவது போல கண்ணை மட்டுமே மூடிக் கொண்டிருந்தாள்… உண்மையாக உறங்கவில்லை. திறந்திருந்த கண்கள் வழியாகப் பார்க்க… அவர்களையே அரவிந்த் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவளையறியாமல் உறக்கம் ஆட்கொள்ள, சிறிது நேரம் கழித்து கண் திறந்து பார்த்தால்… அப்போதும் அரவிந்த் அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

இப்போது அவனுக்கு, தன் துணை மிக அவசியம் என்றுணர்ந்தவள்… நன்றாக கண்ணைத் திறந்து பார்க்க… அரவிந்த் பார்வையைத் திருப்பினான்.

எழுந்தமர்ந்தவள்… “ஏன் தூக்கம் வரலியா” என்று அரவிந்தை கேட்க… “இல்லை” என்பது போல தலையாட்டினான்.

குழந்தையை ஒரு ஓரமாகப் போட்டவள்… மெதுவாக அவன் புறம் வந்து படுத்தவள்… அவன் கையை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள். “இப்போ தூங்குங்க” என்றவள் அவளும் தூங்கிப் போனாள்.

அரவிந்திற்கு நிம்மதியான உறக்கத்தைக் கொடுக்க அதுவே போதுமானதாக இருந்தது. அவளை அணைத்துக் கொண்டே நிம்மதியான உறக்கத்தைத் தழுவினான்.

பின்பு தினசரி அதுவே வழக்கமானது. கீர்த்தியும் சற்று அக்கறையெடுத்து அரவிந்தை கவனித்தாள். அவன் தேவைகளைப் பார்த்துப் பார்த்து செய்தாள். சற்று சகஜ மனப்பான்மை இருவருள்ளும் வந்திருந்தது.

அன்று அம்முவின் பிறந்தநாள். காலையில் அவளைத் தூக்கிக் கொண்டு இருவரும் கோவில் சென்று வந்தனர். காலையிலேயே ராஜேந்திரனும் இந்துமதியும் வந்து விட்டனர். அம்முவிற்குத் தங்கச் சங்கிலியை கழுத்தில் அணிவித்து ஆசீர்வதிக்க… சிதம்பரம் இன்னும் ஒரு படி மேலே போய் குட்டி காசு மாலையை அம்முவிற்கு பரிசளிக்க… ராணி அதை அவள் கழுத்தில் அணிவித்தார். நளினியும் வெகுநாள் கழித்து அவள் அம்மா வீட்டிற்கு வந்திருந்தவள்… அவளும் ட்ரெஸ், பொம்மைகள் என்று அம்முவிற்கு நிறைய வாங்கி வந்திருந்தாள்.

மொத்தத்தில் அன்று வீடே கலகலவென்று இருந்தது. அம்முவும் நிறைய குறும்புகள் செய்து எல்லோரையும் ரசிக்க வைத்துக் கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் நில்லாமல் நடந்து கொண்டே இருந்தாள். அதனால் அவள் அடிக்கடி தட்டுத் தடுமாறி விழ… உடனே அரவிந்த் அவளைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டான்.

எல்லோரும் சிரித்தனர். “அரவிந்த் குழந்தைங்க விழாம் நடக்க மாட்டாங்க. அவளைக் கீழே இறக்கி விடு” என்று ராணி எவ்வளவோ சொல்லியும் தூக்கி வைத்துக் கொண்டே திரிந்தான். அம்முவாக பொறுமை இழந்து அவன் கைகளில் இருந்த நழுவி கீழே இறங்கினாள். மறுபடியும் அவன் தூக்கவும், குழந்தை திமிறினாள். பிறகே விட்டான் அரவிந்த்.

கீர்த்தி அரவிந்தைப் பார்த்துச் சிரித்தவள்… “அவளை ஃப்ரீயா விடுங்க” என்று சொல்ல… அமைதியாக அமர்ந்தான்.

“இவ்வளவு நேரம் அம்மா சொன்னாங்க கேட்டியா நீ… எல்லாம் சொல்றவங்க சொன்னாதான் அடங்குற” என்று அவனை நளினி வேறு  ஓட்டி எடுத்தாள்.

ஒரு சந்தோஷமான மனநிலையில், மாலையில் எல்லோரும் குழுமியிருக்க… அந்த வீட்டின் பெண்ணரசியாகிய அம்மு, உறவுகள் புடைசூழ கேக்கை வெட்டினாள். சிறு கேக் துணுக்கை மட்டுமே அவள் வாயில் வைத்தாள் கீர்த்தி. நளினி “இன்னும் சொஞ்சம் ஊட்டலாமே அண்ணி” என்றதற்குக் கூட “வேண்டாம் அண்ணி சளி பிடிச்சிடும்” என்றாள்.

பிறகு முதல் துண்டை எடுத்து அம்மு கையால் அரவிந்த் வாயில்தான் வைத்தாள் கீர்த்தி. பிறகு எல்லோருக்கும் கேக் விநியோகம் நடக்க… அம்மு எல்லோருக்கும் மிகவும் பிரியமானவளாகிப் போனாள்.

Advertisement