Advertisement

22

ஒரு வழியாக அரவிந்தை சமாதானப்படுத்தி, மொட்டையடித்து, காது குத்துவது என்பது முடிவாக… யாரையும் அழைக்க வேண்டாம்… அவர் குடும்பமும் கீர்த்தியின் அம்மாவும், அப்பாவும் மட்டும் செல்வது என்று முடிவானது.

கீர்த்தி தான் யாரையும் அழைக்க வேண்டாம் என்று விட்டாள். “இன்னும் யாருக்கும் குழந்தையைப் பற்றித் தெரியாது. இப்போது அழைத்தால், யார் குழந்தை, என்ன என்பது மாதிரியான பேச்சுக்கள் எல்லாம் உறவுகளிடத்தில் வரும். இன்னும் ஒரு இரண்டு வருடம் தன் குழந்தையாக யாருக்கும் தெரியாமல் வளர்த்து விட்டால், பிறகு தங்கள் குழந்தையாகவே மாறிவிடும்” என்றாள்.

மற்றவர்களுக்கும் அது சரியாகவே தான் பட்டது. நளினியும், தானாகவே வரவில்லை என்று விட்டாள். தான் வந்தால் தன்னுடைய மாமனார், மாமியார் கூட வருவர். ஏதாவது பேச்சு வரும். அதனால் உங்கள் வீடு வரை செய்து கொள்ளுங்கள் என்று விட்டாள்.

நளினி வராதது அரவிந்த் வீட்டினருக்கு சற்று வருத்தம்தான், இருந்தாலும் அம்முவிற்காக சரி சரி என்று விட்டு விட்டனர்.

ஒரு அதிகாலையில் இன்னோவாவில் அரவிந்தின் குலதெய்வம் கோவிலுக்கு எல்லோரும் கிளம்பிச் சென்றனர்.

இன்னும் தனக்கு விஷயம் தெரியும், அம்மு தண்டபாணியின் குழந்தை என்று, என்ற விஷயத்தை ராஜேந்திரனிடம் கீர்த்தி சொல்லவில்லை. அரவிந்திடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டாள். இருப்பது, இருப்பது மாதிரியே இருக்கட்டும் என்று விட்டாள். அரவிந்திற்கே அவள் செய்கையைக் குறித்து ஆச்சரியம் தான். அவளே சொல்லும்போது, தனக்கென்ன என்று விட்டு விட்டான். கீர்த்தி என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையில் அரவிந்த் இருந்தான். அவளுடைய பார்வைக்காக அவ்வளவு ஏங்கிப் போயிருந்தான்.

கீர்த்தியை ஏன் பிடித்தது, எதற்குப் பிடித்தது… எதற்கும் அரவிந்திடத்தில் பதில் கிடையாது. திருமணம் என்று அவன் தந்தை சொன்னதுமே… அவன் மனக்கண்ணில் தோன்றியது கீர்த்திதான்.

நடுவில் தண்டபாணி இறந்தது… அம்முவை இங்கே கொண்டு வர வேண்டியிருந்தது… நடுவிலும் கீர்த்தியோடு தன் திருமணத்தை நடத்திக் கொண்டான்.

எங்கே தன் சொல்லப் போகும் காரணங்களால் அவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்று அன்றே ஒரு உறவையும் அவளோடு ஏற்படுத்திக் கொண்டான்.

இப்போது அவளின் அருகாமை, அவளின் நினைவுகள் அவனைக் கொன்றன. இதை எதையும் அறியாத கீர்த்தி, அவன் தன்னிடம் பொய்யுரைத்து விட்டான், காரணம் சொல்லவில்லை, உண்மையைச் சொல்லவில்லை என்று வீம்பு கொண்டு அவனைத் தள்ளியிருந்தாள்.

இன்னோவாவை ஓட்டிக் கொண்டிருந்த அரவிந்த் ரிவ்யூ மிர்ரர் வழியாக கீர்த்தியைப் பார்த்தவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

அன்று கோவிலுக்குப் போகிறோம் என்று கீர்த்தி வேறு தன்னை விசேஷமாக அலங்கரித்துக் கொண்டிருக்க… அரவிந்தால் அவள் மீது இருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை. அப்படியே அவளை மட்டும் அழைத்துக்கொண்டு ஒரு லாங் ட்ரைவ் போக மாட்டோமா என்று இருந்தது.

அரவிந்த் கீர்த்தியையே கண்ணாடி வழியாகப் பார்த்து வண்டி ஓட்டிக் கொண்டிருக்க… கீர்த்தி முதலில் அதை கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து சரியாக அரவிந்த் பார்க்கும்போது கீர்த்தி பார்த்துவிட… அப்போதுதான் அவன் கண்ணாடியை தன்னை நோக்கி வைத்திருப்பதைப் பார்த்தாள்.

தானாக அவள் முகம் சிறிது வெட்கத்தைப் பூசியது… அது இன்னும் அவளை அழகாக்கிக் காட்டியது. பிறகு கண்ணாடியை பார்க்காமல் வெகு சிரத்தையாய் அம்முவைப் பார்த்துக் கொண்டும். வெளியே பார்த்துக் கொண்டும் வந்தாள்.

அவள் தான் பார்ப்பதை உணர்ந்துதான் இப்படி செய்கிறாள் என்று அரவிந்தும் புரிந்து கொண்டும், பாதி நேரம் அவளைப் பார்த்தும், மீதி நேரம் ரோட்டைப் பார்த்தும் வண்டியை ஓட்டினான்.

கோவிலுக்கு வந்து வண்டியை பார்க் செய்து, “இரு கீர்த்தி” என்று அவளையும் இருக்க வைத்து அவளோடு சேர்ந்து தம்பதி சமேதராய் தான் கோவிலுக்குள் சென்றான். திருமணத்திற்கு பின் முதன் முதலில் குலதெய்வம் கோவிலுக்கு வருகிறான்.

மனைவியோடும், மனளோடும் இறைவன் சன்னதிக்குள் நுழைவது அரவிந்திற்கு, உற்சாகமான மனநிலையைக் கொடுத்தது.

“அம்மும்மாக்கு மொட்டையடிக்கப் போறோமே” என்று குழந்தையிடம் பேசியவாறே அவளைத் தூக்கிக் கொண்டு மொட்டையடிப்பவரை பார்க்க…

அரவிந்த் அவன் மடியிலேயே அம்முவை உட்கார வைத்துக் கொண்டான். யாரிடமும் கொடுக்கவில்லை. அம்முவும் பாதி மொட்டையடிக்கும் வரை அழவே இல்லை. பின்பு கடைசியாக தான் சற்று அழுதாள். அவள் தலையை அசையாமல் அரவிந்த் பிடித்துக் கொள்ள… அவள் கை கால்களை உதறாமல் கீர்த்தி பிடித்துக் கொண்டாள்.

ஒரு வழியாக அவளுக்கு மொட்டையடித்து, அவளை குளிக்க வைத்து, காது குத்துபவரிடம் அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரும் எல்லா வேலைகளையும் செய்வதை கண்டு பெரியவர்கள் நால்வரும் ஒதுங்கி நின்று கொண்டனர்.

கீர்த்தியும், அரவிந்திடத்தில் அம்முவின் பொருட்டு சற்று சகஜமாகப் பேசி எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள். காது குத்துவதற்குள் அம்மு திமிறு திமிறு என திமிற… கெட்டியாக அரவிந்த் ஒரு பக்கமும், கீர்த்தி ஒரு பக்கமும் பிடித்துக் கொள்ள ஒரு வழியாக காது குத்தி முடித்தனர்.

அம்முவைவிட அரவிந்தின் முகம் வலியின் வேதனையைக் காட்டியது. கீர்த்திக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவ்வளவு பாசத்தை இவனால் அம்முமேல் காட்ட முடிகிறது என்று. அம்முவை யாரிடமும் விடாமல் அரவிந்தே அணைத்துப் பிடித்து வைத்திருக்க… அம்முவும் அன்று பார்த்து அவள் அம்மாவைத் தேடாமல், அவள் அப்பாவிடமே செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

சாமிக்கு அபிஷேகம் ஆராதனை என்று ஏற்பாடு செய்திருந்தார்கள். கீர்த்தியாக அரவிந்திடம், “கொஞ்சம் நேரம் குடுங்க நான் வெச்சிருக்கேன்” என்று கேட்டு வாங்கி வைத்திருந்தாள்.

தலையில் முடியில்லாததை வேறு எல்லோரிடமும் அம்மு தொட்டுக்காட்டி தொட்டுக்காட்டி, அவர்கள் மனதையெல்லாம் கொள்ளை கொண்டு கொண்டிருந்தாள்.

பிறகு சற்று பால் குடிக்க வைத்தவுடன், அப்படியே கீர்த்தி மேல் உறங்கிவிட… மறுபடியும், “கொடு” என்று அம்முவை தான் வாங்கி வைத்துக் கொண்டான்.

எப்படி குழந்தையைத் தாங்குகிறான் என்று கீர்த்தி மட்டுமல்ல, அவன் பெற்றோரும், கீர்த்தியின் பெற்றோரும் நினைத்துக் கொண்டனர். அதுவும் ராஜேந்திரன் சொல்லவே வேண்டாம், தண்டபாணி இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக அம்முவைப் பார்த்துக் கொண்டிருப்பானா என்று நினைத்தார்.

எல்லோரும் சாமி தரிசனத்தைச் சிறப்பாக முடித்துக் கிளம்பினர். அரவிந்திடம் இருந்து அம்முவை வாங்கிய கீர்த்தி, மெதுவாக அவனிடம், “ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க” என்றாள்.

அவளைச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வர… அரவிந்தும் “ரோட்டைப் பார்க்காமல் யாரைப் பார்த்து ஓட்டினேன்” என்றான்.

அவனை முறைத்த கீர்த்தி… “நீங்க ரோட்டைப் பார்த்து ஓட்டின லட்சணத்தை தான் நானும் பார்த்தேனே, அப்புறம் சும்மா ஏன் கதை விடறீங்க… எனக்குக் கொஞ்சம் தூக்கம் வருது. நீங்க என்னையே பார்த்துட்டு இருந்தீங்கன்னா எனக்கு தூங்கவே முடியாது. காலைல சீக்கிரம் எழுந்தது. ஒழுங்கா ரோட்டை மட்டும் பார்த்து ஓட்டுங்க…” என்றாள் மிரட்டுவது போல சொல்ல முயன்று, முடியாமல்.

அவளையே அரவிந்த் பார்க்க… அவசரமாகப் பார்வையை திருப்பினாள். “இப்படிப் பார்த்துப் பார்த்தே இன்னும் எத்தனை நாள் ஓட்டணுமோ” என்ற பெருமூச்சை அவளையறியாமல் வெளியேற்றியவன், அமைதியாக நடக்கத் துவங்கினான்.

“நல்லாதானே பேசிட்டு இருந்தான், ஏன் இப்படி திடீரென்று மூட்-அவுட் ஆகிவிட்டான்” என்று யோசித்தவாறே பின் தொடர்ந்தாள் கீர்த்தி. அவன் மூட்-அவுட்டின் காரணம் தான் என்று அறியாமல்.

அம்மாவும், மகளும் ஏறின சற்று நேரத்திற்கெல்லாம் உறங்கிவிட… அவர்கள் தூக்கம் கலைந்து விடாமல் நிதானமாக ஒரே சீராக வண்டியை ஓட்டி வந்தான் அரவிந்த். முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கும் ரோட்டைப் போல அவன் பார்வையும் முடிவில்லாமல் அம்மாவையும் மகளையும் தழுவியது.

இப்போதெல்லாம் அரவிந்தின் பார்வை தன்னை அதிகம் தொடர்வதை கீர்த்தியும் உணர்ந்தே இருந்தாள். பார்வையின் வித்தியாசத்தையும்  உணர்ந்தே இருந்தாள். அவனோடு ஒன்றி வாழ்வதற்கு நாட்கள் எடுத்தாலும்… அவனோடு சகஜமாகவாவது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அரவிந்த் ஏதேதோ கோல்மால் செய்து பணம் கொடுத்து, கீர்த்தி அம்முவின் அம்மா என்றும் அரவிந்த் அவளுடைய அப்பா என்று, குழந்தை இந்தியாவில் பிறந்தது போல பர்த் சர்ட்டிபிகேட் வாங்கி விட்டான். வாங்கியவன் நேராக அதைக் கீர்த்தியிடம் கொண்டு வந்து காட்டினான்.

“என்னங்க இது, ஏன் மாத்திட்டீங்க, எப்படி வாங்குனீங்க.”

“நம்ம பொண்ணுன்னா, அவ முழுசா நம்ம பொண்ணா மாறிடணும் கீர்த்தி, பணம் செலவு பண்ணினேன், கொஞ்சம் சிரமம் தான். இருந்தாலும் வாங்கிட்டேன்” என்றான் எதையோ சாதித்துவிட்ட உணர்வுடன்.

“பின்னாடி ஏதும் பிரச்சனை வராதா, அதுவும் இவ பாஸ்போர்ட் எல்லாம் லிசா அம்மான்னு போட்டிருக்கு.”

“இவ பாஸ்போர்ட் நம்ம எதுக்குமே காட்டப் போறதில்ல. புது பாஸ்போர்ட் நம்ம அப்பா, அம்மான்னு போட்டு எடுத்திடலாம்.”

“அதுலயும் நீங்கதானே அப்பான்னு இருக்கீங்க.”

“ஒண்ணும் பிரச்சனை வராது கீர்த்தி, நம்ம அந்த ஆதாரங்களை எல்லாம் காட்டப் போறதேயில்லை.”

இருந்தாலும் கீர்த்திக்கு மனது சஞ்சலமாகவே இருந்தது. ஏதோ தப்பு செய்வதாகவே பட்டது. “கடவுளே எந்த பிரச்சனையும் கொடுத்துடாதப்பா” என்று கடவுளை வேண்டினாள்.

“அவ அம்மா, அவ அம்மா, ஒண்ணும் சொல்லமாட்டாளா.”

“நீதான் அவ அம்மா” என்றான் கண்டிப்புடன்.

“நான் லிசாவைக் கேட்டேன்.”

“தெரியலை. நான் அதிகமா அவகிட்ட தொடர்புல இல்லை. இப்போ பேசியே ரெண்டு மாசம் இருக்கும். அம்மு போட்டோஸ் கொஞ்சம் அனுப்பினேன். நான் அதிகமா தொடர்பு வெச்சிட்டா… அவளுக்கு குழந்தை ஞாபகம் வந்துட்டா என்ன பண்றதுன்னு அதிகம் தொடர்புல இல்லை. ஹரிஷ{ம் அப்படிதான் ஃபீல் பண்ணறான்.”

“யார் அது ஹரிஷ்.”

“அவளோட சின்ன வயசுல இருந்தே ப்ரண்ட். இப்போ அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறான். இந்தியன் தான். இவ தான் மாடலிங் அது, இது பிடிகொடுத்தே பேச மாட்டேங்கறா. எப்படியாவது அவ கல்யாணம் நடந்து… அவ இன்னொரு குழந்தைக்கு அம்மா ஆகிட்டா… அதைவிட வேற எனக்கொண்ணும் வேணாம். சில சமயம் ஏதாவது தப்பு பண்ணிட்டமோ, அம்மாவை குழந்தைகிட்ட இருந்து பிரிச்சன்னு ஒரே குற்ற உணர்ச்சியா இருக்கு” என்று மனம் விட்டு கீர்த்தியிடம் சொன்னான்.

அப்படி அவனும் குழந்தையை அம்மாவிடம் இருந்து பிரித்ததில் சந்தோஷமாக இல்லை. பெரும் மனபாரத்தை அவனும் சுமந்து கொண்டிருக்கிறான் என்று கீர்த்தி உணர்ந்து கொண்டாள். இதில் தான் வேறு அவனை… அவனிடம் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறோம் என்று அறிந்தவள்…

“விடுங்க… எல்லாம் சரியாகிடும்” என்று அவன் கையைப் பிடித்துச் சொல்ல… அது தான் சாக்கென்று அவளை இழுத்து அப்படியே அணைத்துக் கொண்டான். கீர்த்தி விலக முற்பட்டாலும் விடவில்லை. “ப்ளீஸ் கீர்த்தி, கொஞ்ச நேரம், நான் வேற ஒண்ணும் பண்ண மாட்டேன்” என்று கேட்க… கீர்த்தியும் விலகாமல் நின்றாள்.

வெகு நேரம் கழித்தே அவளை விடுவித்தவன், “தேங்க்யூ கீர்த்தி” என்று சொல்லிச் சென்றான்.

‘இதுக்கெல்லாமா தேங்க்ஸ் சொல்லுவாங்க, லூசுப் பய’ என்று மனதிற்குள்ளேயே கீர்த்தி திட்டினாலும் அவன் தன் அருகாமைக்காக மிகவும் ஏங்குகிறான் என்று புரிந்து கொண்டாள்.

“கடவுளே, எங்கள் வாழ்வில் எல்லாம் சீக்கிரம் சரியாகி விடவேண்டும்” என்று கடவுளிடம் கோரிக்கை வைத்து, தன் வேலையைப் பார்க்கச் சென்றாள். தன் கையில் தான் அது உள்ளது என்று தெரியும். ஆனால் அதற்கான வேளை எப்போது வரும் என்றுதான் தெரியவில்லை.

இதற்குள் அம்முவின் முதல் பிறந்தநாள் வந்தது. அம்முவின் பிறந்த நாளின் அடுத்த தினம் அவர்களது திருமண நாளும் கூட… அரவிந்திற்கு அது நன்கு ஞாபகத்தில் இருந்தது.

கீர்த்தியிடம் சென்றவன்… “இன்னும் பத்து நாள்ல அம்முவோட பிறந்த நாள் வருது கீர்த்தி” என்றான் அரவிந்த்.

“அப்படியா, நான் நோட் பண்ணவேயில்ல… என்ன பண்ணலாம்” என்றாள் ஆர்வமாக.

“என்ன பண்ணலாம், எதுவும் க்ராண்டா பண்றதுக்கு இல்லையே… காலைல கோவிலுக்குப் போகலாம், சாயந்திரம் நம்ம மட்டும் வீட்லயே கேக் கட் பண்ணிடலாம். என்ன சொல்ற” என்றான்.

இப்போதெல்லாம் கீர்த்தி சற்று இன்னும் சகஜமாக அரவிந்திடம் பேச ஆரம்பித்திருந்தாள்.

“நீங்க எப்படிச் சொல்றீங்களோ அப்படி” என்று அவனையே தாங்கிப் பேசினாள்.

அவளுக்கு சற்று தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த அரவிந்த் அவளுக்கு இன்னும் அருகில் வந்தான். எதற்கென்று தெரியாமல் அவனையே பார்த்தபடி கீர்த்தி நிற்க… மிக நெருங்கி வந்தவன்…

“வேற என்ன கீர்த்தி ஸ்பெஷல்” என்றான்.

வேறே என்ன ஸ்பெஷல் என்று கீர்த்திக்கு நிஜமாகவே தெரியவில்லை.

“வேற என்ன? வேற ஒண்ணும் இல்லையே” என்றாள்.

“யோசி கீர்த்தி, வேற ஏதாவது முக்கியமான நாள் வருதா யோசி…”

கீர்த்திக்கு எவ்வளவு யோசித்தாலும், அவர்களுடைய திருமண நாள் அவளது எண்ணத்தில் உதிக்கவேயில்லை. “இல்லை எனக்குத் தெரியலை” என்றாள்.

அவளை ஒட்டி, உரசிக் கொண்டு நின்றவன், அவள் நெற்றியில் மென்மையாக தன் இதழ்களைப் பதித்து… “அம்மு, பிறந்த நாளுக்கு அடுத்த நாள் நம்ம கல்யாண நாள்” என்றான்.

“ச்” என்று உதடு கடித்தவள், “எனக்கு அது ஞாபகமேயில்லை. நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகிடுச்சா, நாள் போனதே தெரியலை” என்றாள் உண்மையாகவே…

கடிபட்ட அவள் உதடுகளையே ரசனையோடு பார்த்திருந்தான் அரவிந்த். அவனது பார்வையின் மாற்றத்தை உணர்ந்தவள்… “நான் போறேன்” என்று நகரப்போக… கைபிடித்து நிறுத்தினான்.

“அம்முவோட பர்த்டேக்கு நான் ப்ளான் பண்ணிட்டேன்… நம்ம வெட்டிங் டேக்கு நீதான் ப்ளான் பண்ணனும்” என்றான்.

“நானா… நான் என்ன ப்ளான் பண்றது. நீங்களே பண்ணுங்க… எனக்கு ஒண்ணும் தோணலை.”

“நமக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகுது. உனக்கு எதுவுமே நினைவில்லையா” என்றான் அவர்களின் திருமண இரவை, உறவை நினைத்துதான் கூறுகிறான் என்று கீர்த்திக்கு நன்கு புரிந்தது.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கீர்த்தி அசையாமல் நிற்க… “நீயே ப்ளான் பண்ணேன் கீர்த்தி. நம்ம வெட்டிங் டேவ” என்றான் கண்களில் எதிர்பார்ப்புடன்.

கீர்த்தி எதற்கும் பதில் பேசாமல் நின்றாள். அவள் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்தான் அரவிந்த், ஏதாவது எதிர்மறையான உணர்வுகள் தோன்றுகிறதா என்று.

அவனால் எதையும் குண்டுபிடிக்கவே முடியவில்லை. “என்ன கீர்த்தி சொல்ற” என்றான் மறுபடியும். அவள் பதில் சொன்னால்தான் கையை விடுவேன் என்பது போல கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்Nடு போக… “வலிக்குது விடுங்க” என்றாள்.

அப்போதுதான் கையை இறுக்கியதை உணர்ந்து அவசரமாக “சாரி” என்றபடியே விடுவித்தான். இதுதான் சாக்கென்று பதில் சொல்லாமல் வேகமாக இடத்தை விட்டு நகர்ந்தாள் கீர்த்தி.

அவளிடம் உண்மையை மறைத்ததைத் தவிர அவன் செய்த தப்பொன்றும் கிடையாது என்ற அறிந்தால்தான். ஆனாலும் தன்னை நம்பாமல் போனானே என்ற வலி நிறைய கீர்த்திக்கு இருந்தது. இருந்தாலும் முயன்று ஒரு சுமுகமான உறவை அவனுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவளே நினைத்தாள்தான். ஏதோ தடுத்தது. அந்த இடத்தைவிட்டு அகன்றவள், அவளுக்கு அவளே திட்டிக் கொண்டாள்.

“நீ பண்றது சரியில்லை கீர்த்தி. அப்பா சொன்னது போல எத்தனை ஆயிரம் தப்புக்கள் இந்த உலகத்தில் நடக்குது. இதுல அவன் மறைச்சு பொய் சொன்னான்றது பெரிய தப்பில்ல. அதுவும் யாருக்காக சொன்னான். உன் அண்ணன் குழந்தைக்காக சொன்னான். அதனால ரொம்ப பண்ணாத” என்று அவளுக்கு அவளே கடிந்து கொண்டாள்.

அதன் பிறகு அரவிந்த் அதிகமாக அவளிடம் பேச விழையவில்லை. கீர்த்தி அவன் முகம் பார்த்து நடந்தாள். புதிதாக அவன் குளித்து வந்தால், உடைகளை எடுத்து வைத்தாள். ஆச்சரியமாக அவள் செய்கையை ஒரு நிமிடம் பார்த்தானே தவிர, ஏன் எதற்கு என்று கேட்க வில்லை. அந்த உடையே அணிந்தான்.

அவளே அவனுக்குப் பார்த்துப் பார்த்து பரிமாறினாள். முன்பும் செய்வாள்தானே. அதில் கடமை உணர்ச்சி தான் இருக்கும்.

இதில் கடமையையும் மீறி ஒரு அக்கறை தெரிந்தது. அவனுக்காகப் பார்த்துப் பார்த்து சமைத்தாள். அரவிந்தும் சாப்பாட்டு பிரியன் என்பதால் அதை ரசித்தே உண்டான். இதையெல்லாம் மீறி கீர்த்திக்கு அரவிந்திடம் பேச நிறைய விஷயங்கள் இருந்தன. அத்தனை விஷயங்களையும் கொடுத்தவள் அம்மு. வளர வளர நிறைய குறும்பு செய்தாள்.

அரவிந்த் சாப்பிட அமரும்போது பரிமாறியபடியே அம்முவின் செய்கைகள் அனைத்தும் சொல்லிக் கொண்டிருப்பாள். எல்லாவற்றிற்கும் “உம்” கொட்டிக் கொண்டிருப்பான் அரவிந்த். அவனுக்குத் தெரியும் அவனாகப் பேசினால், கீர்த்தி பேசுவதை நிறுத்தி விடுவாள் என்று. அவள் பேசுவதை எல்லாம் மௌனமாக ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பான்.

ஒரு நாள் மாலை, அவன் கடையில் இருக்கும்போது கீர்த்தி, அரவிந்திற்கு போன் செய்தாள். கீர்த்தி அவனை அழைத்ததேயில்லை. அவள் போன் என்றதும் என்னவோ ஏதொவென்று பதறி விட்டான்.

போனை எடுத்ததும், “என்ன கீர்த்தி” என்று பதட்டமாக விசாரிக்க… அவன் பதட்டத்தை உணர்ந்தவள் “பதறாதீங்க ஒண்ணுமில்லை” என்றாள்.

“என்ன ஒண்ணுமில்லையா, ஒண்ணுமில்லாம, நீ என்னைக் கூப்பிட மாட்டியே, என்ன விஷயம்” என்றான் சீரியஸாக…

“நிஜமாகவே ஒண்ணுமில்லைங்க” என்றாள். வேறு என்ன சொல்லுவாள், “எனக்கு உங்ககிட்ட பேசணும் போல இருந்தது என்றா” சொல்லுவாள். ஆனால் நிஜம் அதுதான். என்னவோ அவன் ஞாபகம் அதிகமாக இருக்க… அவளாக அழைத்தாள்.

பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல், ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, “அம்மு இன்னைக்கு என்ன பண்ணினா தெரியுமா” என்றாள்.

“என்ன பண்ணினா கீர்த்தி… சொன்னாதானே தெரியும்.”

“அது… அது…” என்று இழுத்தவள்… “இன்னைக்கு கை விட்டுட்டு நிறைய ஸ்டெப்ஸ் எடுத்து வச்சா. எதையும் பிடிக்காம அவளா நடந்தா.”

“கீழ எதுவும் விழலையே” என்றான் அக்கறையாக அரவிந்த்.

“குழந்தைங்கன்னா விழாமயா நடை பழகுவாங்க.”

“அப்போ விழுந்துட்டாளா.”

“அச்சோ! இல்லைங்க, அவ யாரு… உங்க பொண்ணாச்சே… விழுவாளா… விழப்போறோம்னு தெரிஞ்சவுடனே அதெல்லாம் சோபாவை பிடிச்சிட்டு நின்னுட்டா” என்றாள் பெருமையாக கீர்த்தி.

அவள் சொன்ன விதம் அரவிந்திற்கு சிரிப்பு வந்தது. சந்தோஷமாகவும் இருந்தது. பிறகு அவனே… “அடுத்த வாரம் அம்முக்கு பர்த்டே வருது. இன்னும் நம்ம எதுவுமே பர்ச்சேஸ் போகலையே கீர்த்தி” என்றான்.

“போகலாமே” என்றாள் சந்தோஷமாகவே.

“என்ன சொல்லுவாளோ” என்று பயந்து கொண்டே தான் கேட்டான். அவள் போகலாம் என்றதும், “இப்போவே போகலாமா” என்றான் ஆர்வத்தை அடக்க முடியாமல்…

“இப்போவேவா வேண்டாம்… அம்மு தூங்கறா… அவ எழுந்து ரெடி பண்ணி போறதுன்னா நிறைய டைம் ஆகும்… நாளைக்கு அவ முழிச்சிருக்கிற டைமா போகலாம்” என்றாள்.

“அரை மனதாக சரி” என்றான்… ஏதோ இந்த மட்டிலுமாவது ஒத்துக் கொண்டாளே என்று. எப்போதும் அம்முவிற்கு வேண்டியதை… இவள் தனியாக வாங்குவாள்… அவன் தனியாக வாங்குவான். சேர்ந்து வாங்கியதே இல்லை.

“இப்போதுதான் கொஞ்சம் முகம் பார்த்தே பேசுறா… அதுக்குள்ளே நீயேண்டா அலையுற” என்று அவனுக்கு அவனே கடிந்து கொண்டான்.

அடுத்தநாள் அரவிந்தும், கீர்த்தியும், அம்முவோடு பர்சேஸ் கிளம்பினர்.

கீர்த்தி எல்லோர் மாதிரியும் நிறைய நேரம் பண்ணவில்லை. போனாள்… பார்த்தாள். ஐந்து நிமிடத்தில் செலக்ட் செய்து விட்டாள்.

“எப்படி கீர்த்தி, லேடீஸ் எல்லாம் அவ்வளவு நேரம் பண்ணுவாங்க… இவ்வளவு நேரம் பண்ணுவாங்கன்னு எல்லாம் க்ரிடிசைஸ் பண்றாங்க… நீ நிமிஷத்துல செலக்ட் பண்ணிட்ட…”

“உங்களையே அப்படிதான் செலக்ட் பண்ணினேன். இந்த ட்ரஸ் எம்மாத்திரம்” என்றாள்.

“இதை நீ பாராட்டா சொல்றியா, திட்டுற மாதிரி சொல்றியா…”

“நீங்க எப்படி எடுத்துக்கறீங்களோ அப்படி” என்றாள் சின்ன சிரிப்போடு…

“ம்கூம்…” எனக்கு இந்த பதில் எல்லாம் வேண்டாம். உண்மையான பதில் தான் வேணும்.”

“உண்மையான பதில் எனக்கே தெரியாது. இப்பத்திக்கு பாராட்ற மாதிரியே வச்சிக்கோங்க” என்றாள் கிண்டலாக.

“பொண்டாட்டியையே வச்சிக்க காணோம் நான். இன்னும் வேற எதை வச்சிக்கிறது” என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் அரவிந்த்.

“என்ன வாய்க்குள்ளேயே பேசறீங்க” என்று சிறு அதட்டலோடு கீர்த்தி கேட்க…

“ம்! நீ ரொம்ப அழகா இருக்கன்னு சொன்னேன்” என்று பதிலுக்கு அரவிந்த் கிண்டலடிக்க…

“அப்போ நான் அழகா இல்லைன்னு சொல்றீங்களா” என்று கீர்த்தி முறுக்க…

“நீ ரொம்ப அழகுதான் கீர்த்தி” என்று உண்மையான குரலில் அரவிந்த் கீர்த்தியை காதல் பார்வை பார்க்க… முகம் சிவந்தாள் கீர்த்தி.

அதற்குள், “நான் உள்ளேன் அம்மா” என்று கீர்த்தியிடம் அட்டெண்டென்ஸ் போட்டாள் அம்மு. மேஜை மேல் இருந்த அட்டைப் பெட்டியை ஒரே தள்ளாகக் கீழே தள்ளி…

“அம்மும்மா” என்று கீர்த்தி கடிய… மறுபடியும் மறுபடியும் அதை இழுத்து விடுவதிலேயே குறியாக இருந்தாள்.

அம்முவின் தந்தை பொறுமையாக பணியாளர்களுடன் சேர்ந்து எல்லாவற்றையும் மேஜை மேல் எடுத்து வைத்தான்.

அம்முவின் அழகைப் பார்த்து வியந்து அங்கிருந்த எல்லோரும் “பரவாயில்லை சார் நாங்க எடுத்து வைக்கறோம்” என்றவர்கள்… அதில் மட்டும் நில்லாமல்… “இங்கலீஷ்காரங்க குழந்தை மாதிரி என்ன கலரா இருக்கு சார்” என்று வியந்தனர்…

‘போனவுடனே சுத்தி போடணும்’ என்று மனதிற்குள்ளேயே கீர்த்தி நினைத்தாள்.

கடையை விட்டு வெளியே வரும்வரை பார்ப்பவர் எல்லோருக்கும் அம்மு இலவசமாக டாட்டா வேறு வைத்தாள்.

“சும்மாயிரு அம்மு” என்று அவளைப் பார்க்கவே நேரம் சரியாக இருந்தது கீர்த்திக்கு…

பில் பண்ணியவுடன் போகலாமா என்று வேறு கீர்த்தி அவசரப்பட… “உனக்கு எடுக்க வேண்டாமா” என்றான் அரவிந்த்.

“எனக்கா எனக்கெதுக்கு” என்றாள்.

முதன் முறையாக அரவிந்த் அவளபை; பார்த்து முறைத்தான்.

“எதுக்கு நீதான் கண்டு பிடியேன்” என்றான் குத்தலாக…

எதற்கென்று கீர்த்திக்கு நிஜமாகவே ஞாபகத்தில் வரவில்லை. அவள் விழிப்பதைப் பார்த்ததுமே அரவிந்திற்கு தெரிந்து விட்டது. அவளுக்கு ஞாபகம் இல்லை என்று. அது அவனுக்கு வலித்தது.

“அவளுக்கு பர்த்டே மட்டும்தான் வருதா… நமக்கு எதுவும் வரலையா” என்று கேட்ட பிறகே அவளுக்கு அவள் திருமண நாள் ஞாபகத்தில் வந்தது.

அவனைப் பார்த்துப் பரிதாபமாக, “சாரி” என்றாள். “தினமும் இவளை மட்டும் பார்க்கறதால, இவ பர்த்டே மட்டுமே எனக்கு ஞாபகம் இருக்கு” என்றாள் அசட்டுத்தனமாக.

“என்னை நீ பார்க்கறதேயில்லையா” என்றான் அரவிந்த்.

“பார்க்கறேன் தான்… இருந்தாலும் மறந்துட்டேன்… சரி” என்று மறுபடியும் கேட்க… முறைத்துப் பார்த்தான் அரவிந்த்.

“ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா, நீ என்னை ஞாபகம் வைக்கிற மாதிரி நான் எதுவும் செய்யறதே இல்லை. அப்படித்தானே…” என்றான்.

“அப்படித்தான்” என்றா சொல்ல முடியும் என்று கீர்த்திக்கு தோன்றியது. சண்டை வரும் போலத் தோன்ற அமைதியாகி விட்டாள் கீர்த்தி.

திருமண நாளை மறத்து விட்டாளே என்ற ஆற்றாமை தீராமல் அரவிந்த் வாசலை நோக்கி நடக்க…

“வாங்க எடுக்கலாம்” என்று மறுபடியும் உள்ளே நடந்தாள் கீர்த்தி… பிறகு வேறு வழியில்லாமல் பின் தொடர்ந்தான் அரவிந்த்.

அவளுக்கும் அழகான, நிறைய வேலைப்பாடு செய்த புடவையை வேகமாக தேர்ந்தெடுத்து விட்டாள் கீர்த்தி.

பிறகு பில் பண்ணி வெளியே வந்தனர். தன்னை எடுக்கச் சொல்வாளா என்று அரவிந்த் ஆர்வமாகப் பார்க்க… அதை எதையும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை கீர்த்தி…

அவள் எடுக்கச் சொல்லாமல், புதுத் துணி எடுக்க மனம் ஒப்பாமல், அரவிந்த் ஏமாற்றத்தோடு அவளோடு நடந்தான். இன்னும் ஏதேதோ வாங்க வேண்டும் என்று நினைத்தவன் ஒன்றும் வாங்காமல் வீடு வந்து சேர்ந்தான்.

Advertisement