Advertisement

21

“தண்டபாணியோட குழந்தை” என்றான் இன்னும் தெளிவாக.

“எப்படி, யாரோட, ஏன் எங்ககிட்ட சொல்லலை” என்ற அவள் அதிர்ச்சியிலேயே வரிசையாக கேள்விகளை அடுக்க…

அம்முவைப் பார்த்தான் அரவிந்த்… அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க… லண்டன்ல நடந்ததையெல்லாம் சொல்ல ஆரம்பித்தான்.

தண்டபாணியும், லிசாவும் ஒருவரை ஒருவர் விரும்பி, திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்தது. லிசா கருவுற்றது. அவளை திருமணத்திற்கு தண்டபாணி கட்டாயப்படுத்தியது. திடீரென்று நடந்த கலவரத்தில் ஒரு பைத்தியக்காரன் தண்டபாணியை சுட்டது. நிமிஷ நேரத்தில் தண்டபாணி உயிரிழந்தது. கருவை அழிக்க லிசாவின் அம்மா நினைத்தது. முடியாது குழந்தை வளர்ந்து விட்டது என்று டாக்டர் மறுக்க… தன் நண்பனின் குழந்தையை அவர்கள் குடும்பத்திடம் சேர்க்கும் பொருட்டு, தண்டபாணியின் பெயரை உபயோகித்து தான் கேட்டது, முதலில் மறுத்த லிசா பிறகு சம்மதித்தது. அதற்கு லிசாவின் அம்மாவும், ஹரிஷ{ம் துணை புரிந்தது என் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

கேட்ட கீர்த்தி அப்படியே அமர்ந்துவிட்டாள். தன் அண்ணனா திருமணம் செய்யாமல் ஒரு பெண்ணோடு சேர்ந்து வாழ்ந்தான். அதனால் ஒரு குழந்தை உருவாகியிருக்கிறது. மேலை நாட்டில் பிறந்த லிசாவிற்கு வேண்டுமானால் இது சாதாரண விஷயமாக இருக்கலாம், ஆனால் என் அண்ணன் அவன் எப்படி இப்படி ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தான். ஆச்சரியம், அதிர்ச்சி என்பதைவிட, இப்படி எப்படி தன் அண்ணன் செய்ய முடியும் என்ற ஆதங்கமே அதிகமாக இருந்தது.

“சரி அதை ஏன் எல்லார்கிட்டயும் சொல்லாம மறைச்சீங்க” என்றாள் கீர்த்தி.

“அவங்க ரெண்டு பேரும் திருமணம் செய்யாம வாழ்ந்திருக்காங்க. அவங்களுக்குப் பொறந்தது இல்லீகல் சைல்ட். அந்த மாதிரி ஒரு நிலமை தண்டபாணியோட குழந்தைக்கு வரக்கூடாதுன்னு நெனச்சேன். என் நண்பனோட குழந்தை தகப்பன் இல்லாத குழந்தையா வளரக்கூடாது;னனு நெனச்சேன். அதனால யார்கிட்டயும் சொல்லலை, உங்கப்பாவைத் தவிர.”

“என்ன எங்கப்பாக்குத் தெரியுமா, அதான் அவ்வளவு சப்போர்ட் பண்ணினாறா” என்றாள் ஆச்சரியமாக.

“ஆமாம்” என்பது போல தலையாட்டியவன், “எங்கப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சா கண்டிப்பா என்னை வளர்க்க விட மாட்டாங்க, ஒண்ணு உங்கப்பா கிட்ட குடுக்கச் சொல்வாங்க இல்லை அவங்கம்மாவையே வளர்க்கச் சொல்லி குடுன்னு சொல்வாங்க. ரெண்டுமே என்னால முடியாது. ஏன்னா அவ என் நண்பனோட குழந்தை. என் குழந்தை” என்றான் உருக்கமாக.

“என்கிட்ட என்கிட்ட ஏன் சொல்லலை” என்றாள் ஆவேசமாக அரவிந்தைப் பார்த்து…

“எனக்கு யார் மூலமாவது விஷயம் எங்கப்பா, எங்கம்மாக்குத் தெரிஞ்சிட்டா என்னன்ற பயம், அதைவிட அம்முக்கு அவ அப்பாவும், அவ அம்மாவும் இல்லைன்ற விவரம் பெரியவளானாலும் தெரியக்கூடாதுன்னு நினைச்சேன்.”

“எப்படி என்னை உங்களால வேத்து மனுஷியா நினைச்சு எல்லார்கிட்டயும் மறைச்ச மாதிரி மறைக்க முடிஞ்சது. அதுவும் என் தண்டுவோட குழந்தையை, நீங்க என்னை நம்பலை, அதை விட நீ என்னை ஒரு பொருட்டாவே நினைக்கலை.”

“யாரோ ஒரு குழந்தையைக் கொண்டு வந்து என் குழந்தைன்னு சொன்னா எனக்கு வளர்க்கணும்னு என்ன, அதுக்காக கூட நீங்க என்னை மதிக்கலை.”

“நான் உங்க மனைவின்றதுக்கு ஒரு அர்த்தமேயில்லை. அர்த்தமேயில்லாம செஞ்சிட்டீங்க. எனக்கு இப்போ தான் இன்னும் வலிக்குது. உங்க வாழ்க்கைல ஒரு பொண்ணு இருக்கான்னு சொல்லி, பொண்ணேயில்லாம, என்னை பிரிஞ்சு ஒரு வருஷம் இருந்திருக்கீங்க.”

“நான் உங்களுக்குத் தேவைன்னு நினைச்சிருந்தா, உண்மைய சொல்லியிருக்க மாட்டீங்க. அந்த அளவுக்கு நான் தேவையில்லாதவளா போயிட்டேன். ஒரு சின்ன குழந்தையால இந்த அளவுக்கு அசைக்க முடிஞ்ச மனச ஒரு மனைவியா என்னால தொடக்கூட முடியலை” என்றாள் ஆக்ரோஷமாக.

இது என் குழந்தை என்று அரவிந்த் குழந்தையைத் தூக்கி வந்தபோதுகூட இவ்வளவு கோபத்தைக் கீர்த்தி காட்டவில்லை.

இப்போதும் அரவிந்த் செய்த தவறு. அவளை சமாதானப்படுத்துவதை விட்டு, “யார்கிட்டயும் இதைச் சொல்லிடாத கீர்த்தி” என்றதுதான்.

“இப்பவும் நீங்க என்னை நம்பலைல்ல” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

அதற்குள் அம்மு சிணுங்க, “ச்சீ போடா” என்று அவனை அப்படியே தள்ளி குழந்தையிடம் சென்றாள்.

அந்தக் குரலில் அப்படி ஒரு கோபம். ஒரு நிமிடம் பயந்துவிட்டான் அரவிந்த். இவ்வளவு வெறுப்பாகக் கூட கீர்த்தி நடந்து கொள்வாளா என்றிருந்தது.

குழந்தையைத் தூக்கிய கீர்த்தி, ஒரு நிமிடம் கண் மூடி கட்டுக்குள் கொண்டு வந்தவள், “என் செல்லமில்ல அம்முகுட்டி, எதுக்கு அழறீங்க, அம்மாவைத் தேடினீங்களா, அம்மா இங்க இருக்கன்டா செல்லம்” என்றவுடன் அது சிணுங்களை நிறுத்தி அவளைப் பார்த்துச் சிரித்தது.

அந்தச் சிரிப்பில் தன்னைத் தொலைத்தவள், அதில் தண்டபாணியின் சாயலைத் தேடினாள். அரவிந்தின் குழந்தையாக பார்க்கத் தொடங்கிய அம்மு, சிறிது நாட்களில் தன்னுடைய குழந்தையாக மாறிய விந்தை, தன் அண்ணனின் உயிர் குருத்து என்பதால் தானோ என்றிருந்தது.

தன் அண்ணனின் வித்து என்றறிந்தவுடன், மறுபடியும் ஆசையாக அம்முவை உச்சி முகர்ந்தவள், அரவிந்தைப் பார்க்க, அவன் இவர்களையே பார்த்திருந்தான். சுற்றும் உணர்ச்சிகள் இல்லாத பார்வை.

‘செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு எப்படி கல்லு மாதிரி நிக்கிறான் பாரு’ என்று அரவிந்தை முறைத்துப் பார்க்க… அவன் அதே உணர்ச்சிகளற்ற பார்வை பார்த்தான்.

அப்படியே வேகமாக அவனருகில் வந்தவள், “எப்படி இப்படி அம்முவை அவங்கம்மா கொடுக்க ஒத்துகிட்டா, யாராவது குழந்தைய கொடுக்க ஒத்துப்பாங்களா. எப்படி அவ சம்மதிச்சா. ஒண்ணு அவ சரியில்லாத பொண்ணா இருக்கணும். குழந்தையப் பார்க்க முடியாம உன்கிட்ட கொடுத்திருக்கணும், இல்லை நீ ஒரு குழந்தைய அவ அம்மாகிட்ட இருந்த பிரிக்கிற அளவுக்கு திறமைசாலியா இருக்கணும். அவ்வளவு திறமைசாலியா நீ அம்மாகிட்ட இருந்து குழந்தைய பிரிச்சிட்ட” என்றாள்.

இவ்வளவு நாட்களாக உண்மையைச் சொல்லாததால் ஒரு பாரம் எப்போதும் அரவிந்தின் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. இப்போது கீர்த்தியிடம் உண்மையைச் சொல்லி விட்டதால், பெரும் ஆசுவாசமாக உணர்ந்தான்.

அவன் அந்த மனநிலைமையை அனுபவித்துக் கொண்டு இருக்கும்போதே… கீர்த்தி அவன் மீது தாயிடமிருந்து குழந்தையைப் பிரித்து விட்டான் என்ற குற்றச்சாட்டை வைக்க… அவனுள் லேசாக கோபம் கிளம்ப ஆரம்பித்தது.

அதற்கேற்றாற் போல அவள் மறுபடியும், “என்ன உண்மையச் சொன்னவுடனே பதில் பேச முடியலையோ” என்று அவள் அலட்சியமாக கேட்க… அந்த அலட்சியம் அவனுள் கிளம்ப ஆரம்பித்த கோபத்தை முடுக்கிவிட…

“தோ பார், என்னை என்ன வேணா சொல்லிக்கோ, திட்டிக்கோ, எனக்கு பிரச்சனை கிடையாது. ஆனா அம்மு என் குழந்தை அதுல எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. யார்கிட்டயும் நீ அம்மு தண்டபாணியோட குழந்தைன்னு சொல்லக்கூடாது. உங்கப்பா கிட்ட கூட உனக்கு விஷயம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம் புரிஞ்சதா” என்றான் மிரட்டும் தொனியில்.

என்னடா இவன் இந்த எகிறு எகிறான் என்பது போல கீர்த்தி பார்த்தாள்.

அவள் பார்வையை சற்றும் லட்சியம் செய்யவில்லை அரவிந்த். “என்ன சொன்னது புரிஞ்சதா” என்றான்.

“ஓ புரிஞ்சதோ, அம்மு உங்க குழந்தை… உங்க குழந்தை” என்றாள் வேண்டுமென்றே, “உங்க குழந்தையில் அழுத்தம் கொடுத்து.

ஆனால் அரவிந்திற்குப் புரியவில்லை, அவள் தன்னை குத்திக் காட்டுகிறாள். தன் குழந்தை என்று சொன்னதற்கு என்று.

“ஆமாம், ஆமாம் என் குழந்தைதான்” என்றான் மறுபடியும் சண்டை போடுவது போல்.

“அப்போ இவ எனக்கு யாரு” என்றாள் கைகளைக் கட்டியபடி நக்கலாக கீர்த்தி.

“உனக்கு… உனக்கு…” என்று தடுமாறியவன், அப்போது தான் தன் தவறை உணர்ந்து, “உனக்கும் குழந்தைதான்” என்றான்.

“தெரிஞ்சா சரி” என்று நொடித்தவள்… கோபம் மாறாதவளாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அரவிந்திற்கு அவன் கோபத்தில் வித்தியாசம் தெரிந்தது. முன்பிருந்த கோபத்தில் ஒரு வார்த்தை கூட அவனை நோக்கி வராது. அரவிந்தாகப் பேசினாலும் பதில் பேச மாட்டாள். இப்போது இருப்பது வேறு மாதிரியான கோபம்.

சலசலவென்று பேசி, திட்டிக் கொண்டு இருந்தாள். சமாதானப் படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை சிறிது முளைத்தது அரவிந்திற்கு.

பழைய தைரியமான கீர்த்தி சற்று எட்டிப் பார்ப்பது போலத் தோன்றியது. என்னை என்ன செய்யப் போகிறாள் தெரியவில்லையே என்று சற்று பயமாகவும் இருந்தது.

சிறிது நேரம் அப்படியே இருவரும் அமர்ந்திருக்க, மறுபடியும் அவனிடம் “எப்படி அவங்கம்மா குழந்தையைக் கொடுத்தா எப்படி” என்று ஆரம்பிக்க…

“சும்மா நொய் நொய்ங்காத, அத அவ அம்மாகிட்டதான் கேட்கணும்.”

“அவ அம்மா எங்க இருக்கா, சொல்லு நான் கேட்கறேன்” என்றாள்.

“நீ ஒண்ணும் கேட்காத கொஞ்சம் வாயை மூடிட்டு இரு” என்று எரிந்து விழுந்தான்.

“ஏன்… ஏன்… கேட்டா என்ன…”

“கேட்டா என்னவா, அவ பாட்டுக்கு வந்து குழந்தையைக் குடுன்னு கேட்டா என்ன செய்வ… சும்மா இரு… நம்ம பேசுனத இத்தோட மறந்துரு… அம்மு நம்ம குழந்தை அதை மட்டும் ஞாபகம் வச்சிக்கோ” என்றான் இந்த முறை தெளிவாக.

“பெரிய இவன், இவன் சொல்லலைன்னா எனக்கு தெரியாதா” என்று மறுபடியும் நொடித்தாள். ஒரு கலவையான உணர்ச்சியில் இருந்தாள் கீர்த்தி… அம்மு தன் அண்ணன் குழந்தை என்று தெரிந்த சந்தோஷம் ஒருபுறம்… அரவிந்தின் குழந்தை இல்லை என்று தெரிந்த சந்தோஷமும் ஒருபுறம்… இவ்வளவு நாட்களாக பொய் சொல்லி தன்னை பொம்மையாக அரவிந்த் ஆட்டி வைத்திருக்கிறானே என்ற துக்கம் ஒருபுறம், தான் அரவிந்தை பாதித்ததை விட அந்தக் குழந்தை அவனை அதிகமாகப் பாதித்ததால் தான் தன்னிடம் பொய் சொன்னான் என்ற துக்கம் ஒருபுறம்… கலவையோ கலவை அவளை கலக்கிக் கொண்டிருந்தது.

இத்தனை நாட்களாக பேசாத கீர்த்தி, இப்போது தொணதொணவென்று பேசினாள். அரவிந்திற்கு பயமாக இருந்தது. இவள் பேசிப் பேசியே எல்லோருக்கும் காட்டிக் கொடுத்து விடுவாளோ என்ற கவலை எழுந்தது. இதில் லிசாவை பற்றி அவள் கேட்டது அதிகம்.

“ஒரு போட்டோவாவது காட்டுங்களேன்” என்று கடைசியாக அரவிந்திடம் வந்தாள்.

“இதுக்கு தான் நான் உன்கிட்ட எதுவுமே சொல்லலை. இந்த விஷயத்தை மறந்துரு. எத்தனை தடவை உன்கிட்ட சொல்றது. அம்மு உன் குழந்தை நீதான் அவளுக்கு அம்மா. இதுக்கு மேல கேட்காதே” என்று வள்ளென்று எரிந்து விழுந்தான்.

அது சற்று வேலை செய்தது. கீர்த்தி முகத்தைத் தூக்கி வைத்து அமைதியாக அமர்ந்து விட்டாள். அம்முவிற்கு இப்போது சற்று உடம்பு நன்றாக ஆகி விட்டதால், அவள் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருக்க, அவளை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது.

ஒரு வழியாக ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தனர். தன்னைவிட அவனுக்கு குழந்தை தான் முக்கியமோ என்ற கோபம் மட்டும் கீர்த்திக்கு ஆறாமல் இருந்தது.

அதற்காக குழந்தையிடமெல்லாம் எந்த வித்தியாசமும் காட்டவில்லை. முன்பைவிட இப்போது பாசம் அதிகரித்தது, என்றே லெ;ல வேண்டும். முன்பெல்லாம் இவன் குழந்தையை நான் ஏன் வளர்க்க வேண்டும் என்று அரவிந்தைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பாள். இப்போது தண்டபாணியின் குழந்தை என்றவுடன் பாசம் மிகவும் அதிகரித்தது. இன்னும் உயிராக குழந்தையை பார்த்துக் கொண்டாள்.

ஆனால் அவளுக்குள்ளும் அரவிந்திற்குள்ளும் இருந்த பிரிவு அப்படியே இருந்தது. உடலளவிலும், மனதளவிலும் மனைவி என்ற முறையில் அவன் தன்னை சிறப்பு செய்யாதது போலவே உணர்ந்தாள்.

ஊரிலிருந்து வந்து ஒரு மாதம் கழித்தே தன்னை திருமணம் செய்திருக்கிறான். அப்போதே குழந்தையை வளர்ப்பது பற்றி முடிவு செய்து தான் வந்திருக்கிறான்.

ஆனால் தன்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. தண்டபாணியின் குழந்தையை அவன் குழந்தை என்ற பொய் வேறு. வேறு ஒரு பெண்ணுடன் இவனுக்கு தொடர்பு இருந்தால் என் மனம் என்ன பாடுபடும் என்று எண்ணாமல் போனானே என்ற கோபம் கீர்த்தியின் மனதில் அப்படியே தான் இருந்தது.

அவனுடன் ஒன்றாமல் அந்தக் கோபத்தை வெளிப்படுத்தினாள். அவளாகப் பேசினாள் பேசுவாள் அரவிந்திடம். அவன் பேசினால் பதிலே பேசமாட்டாள். அவன் யாரென்றே தெரியாதது போல ஒரு பார்வை பார்த்து வைப்பாள்.

இதனிடையில் குழந்தைக்கு பதினோரு மாதம் ஆக, குழந்தைக்கு முடியெடுத்து காது குத்துவது பற்றி ராணி, வீட்டில் பேசினார். தன் மாமியார் கூறியதையே ஆமோதித்த கீர்த்தியும், மொட்டையடித்து காது குத்தி விடலாம் என்று சொல்ல, அரவிந்த் ஆட்சேபித்தான்.

“சின்னக் குழந்தைம்மா வேண்டாம்மா” என்றான் அன்னையிடம்.

“எல்லாரும் இந்த வயசுல செய்யறதுதான்டா, அதுக்கு ஏன்டா தடை போடற” என்று அவர் கடிய… லேசில் அரவிந்த் சமாதானமாகவில்லை.

“உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் அவ குழந்தை தான். என் குழந்தைக்கு நான் இப்போதான் மொட்டையடிச்சு காது குத்துவேன்” என்று கீர்த்தி அவனிடம் சண்டையிட்டாள்.

“அவ நம்ம குழந்தைன்னு நீங்க நினைச்சீங்கன்னா நான் சொல்றதுக்கு சரின்னு சொல்லுங்க. இல்லை என் குழந்தைன்னு நீங்க நினைக்கறதுன்னா என்னவோ பண்ணுங்க” என்று குழந்தையைக் கொண்டு வந்து அவன் கையில் திணித்துவிட்டு கீர்த்தி போக… அரவிந்த் பரிதாபமாக அவன் அன்னையைப் பார்த்தான்.

“ஏன்டா அவ தான் அவ்வளவு நல்லா அவ குழந்தை மாதிரி தான் பார்த்துக்கறா. அவ என்ன சொல்றாளோ செய்ய வேண்டியது தானேடா” என்றார் ராணி.

“அம்மா, சின்ன குழந்தைம்மா…”

“டேய், ஒண்ணும் ஆகாதுடா, நளினியோட குழந்தைகளுக்கு உன் மடியில் உட்கார வெச்சு தானேடா அடிச்சோம்” என்று ராணி அரவிந்திற்கு ஞாபகப்படுத்த, சற்று சமாதானமானான்.

அவன் அன்னை சென்றவுடன், கீர்த்தியை தேடி அரவிந்த் வந்தான்.

“என்ன கீர்த்தி, பேசிட்டு இருக்கும்போதே குழந்தையை என் கைல குடுத்துட்டு வந்துட்ட, என்னவோ, ஏதோன்னு பயந்து அம்மு எப்படி என்கிட்ட உட்கார்ந்திருக்கா பாரு.”

கீர்த்தி திரும்பிப் பார்க்க… அம்மு பயந்து தன் தந்தையின் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டிருந்தாள்.

பார்த்த கீர்த்திக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. கையை நீட்டியது தான் தாமதம், தாவி அவளிடம் வந்தாள் அம்மு.

“அம்மும்மா பயந்துட்டீங்களா, சாரிடா செல்லம்…” என்று கீர்த்தி குழந்தையை முத்தமிட்டு கொஞ்ச, அதையே ஏக்கமாக பார்த்திருந்தான் அரவிந்த்.

இவன் என்னடா நம்மை இப்படி பார்க்கிறான் என்று கீர்த்தி பதிலுக்கு அரவிந்தை பார்க்க… அரவிந்த் பார்வையை அவசரமாகத் திருப்பி வேகமாக வெளியே சென்று விட்டான்.

கீர்த்திக்கு அரவிந்தைப் பார்க்க பாவமாக இருந்தது. “உன் அண்ணனின் குழந்தைக்காக அவன் இவ்வளவு பாடுபட்டிருக்கிறான். நீ ஏன் அவனிடம் இப்படி நடந்து கொள்கிறாய். விஷயத்தை உன்னிடம் இருந்து மறைத்ததைத் தவிர அவன் செய்த தவறு என்ன?” என்று அவள் மனசாட்சி அவளை இடித்துரைக்க ஆரம்பித்தது.

வெளியே எட்டிப் பார்க்க அரவிந்த் சோபாவில் அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்த கோலம் அவள் மனதை அசைத்தது. தலைக்குப் பின்புறம் கைகளைக் கொடுத்து, கண்களை மூடி அமர்ந்திருந்தான்.

தன் அண்ணனுக்காக என்னென்ன செய்திருக்கிறான் என்று அவனையே பார்த்திருந்தாள். தன் அண்ணன் இவன் நட்பைப் பெற நிச்சயம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றே தோன்றியது.

சிறிது நேரம் அவனையே பார்த்திருந்தவள், அம்முவை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்… வந்தவள் அவனிடம் போய், “இவளைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என்று அவனிடம் பேச்சுக் கொடுப்பதற்காக வேண்டி சொல்லிச் சென்றாள்.

Advertisement