Advertisement

20

அரவிந்தும், கீர்த்தியும் பேசிக் கொள்வது மிகவும் குறைவு. அரவிந்த் ஏதாவது கேட்டாலும் கீர்த்தி பதில் பேச மாட்டாள். ஏதாவது அவசியமாக குழந்தையின் பொருட்டு பேச வேண்டும் என்றாள் மட்டும் பேசுவாள்.

இப்படியே ஆறு மாதந்கள் ஒடிவிட்டன. இப்போது குழந்தைக்கு எல்லோர் முகமும் நன்றாக அடையாளம் தெரிவதால் அம்மு கீர்த்தியை விட்டுப் பிரிவதேயில்லை.

அம்மு உறங்கும் நேரமே. கீர்;த்தி ஏதவாது வேலை செய்ய முடியும். அவள் விழித்திருக்கும் நேரமெல்லாம், கீர்த்தியிடமே இருப்பாள். ராணியிடம், சிதம்பரத்திடம் போனாலும் கீர்த்தி பக்கத்தில் இருந்தால் மட்டுமே அமைதியாக இருப்பாள், இல்லையென்றால் அழ ஆரம்பித்து விடுவாள்.

அரவிந்த் வீட்டிலிருக்கும் நேரமே, கீர்த்திக்கு சற்று ரெஸ்ட், அரவிந்திடம் சமத்தாக இருந்து கொள்வாள். தனது பேத்தியைப் பார்க்கப் பார்க்க ராஜேந்திரனுக்கு பெருமை. அவ்வளவு அழகாக இருந்தாள். லிசாவைத் தெரிந்தவர்கள் அவளை வைத்துப் பார்த்தால், லிசாவின் ஜாடை குழந்தையிடத்தில் நான்றாகத் தெரிந்தது. தண்டபாணியின் ஜாடையும் சிறிது சிறிது இருப்பதாக ராஜேந்திரன் கண்களுக்குத் தோன்றியது. அரவிந்திற்கும் தண்டபாணியின் ஜாடை, அம்முவிடத்தில் இருப்பதாகவே தோன்றியது. கீர்த்தி ஒரு வேளை தண்டபாணியை மனதில் வைத்து பார்த்திருந்தால் தெரிந்திருக்குமோ என்னவோ… ஆனால் அவள் தான் அரவிந்தின் ஜாடையை அல்லவா குழந்தையிடத்தில் தேடிக் கொண்டிருந்தாள்.

இன்னும் அரவிந்த் ஒரு குழந்தையின் தகப்பானாக, அவளாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனை மன்னித்து அவனோடு சுமுகமாக வாழ்ந்தால் என்ன? இந்தப் பிரச்சனைகளை இழுத்துப் பிடித்து வைத்திருப்பதில் என்ன பயன் என்று நிறைய முறை தோன்றும் தான். ஆனால் என்னவோ தடுத்தது. எதற்காகக் காத்திருக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. பேச நினைக்கும்போது ஏதோ ஒன்று தடுத்துவிடும்.

இதில் அரவிந்திற்கு தண்டனை கொடுப்பதாக நினைத்து, அவளும் தண்டனையை அனுபவித்தாள். தவறே செய்யாமல் நல்லது நினைத்தே இருவரும் தண்டனையை அனுபவித்தனர்.

அதுவும் திருமணமாகி அவளோடு வாழ்ந்துவிட்ட அரவிந்திற்குக் கேட்கவே வேண்டாம். அவள் கொடுப்பது மிகப் பெரிய தண்டனையே. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, மனதை வென்று, அதை அலைபாயாமல் வைத்திருந்தான்.

கீர்த்தி அவனிடம் எப்படி மிகவும் அவசியம் என்றால் பேசுகிறாளோ, அது போலவே அரவிந்தும் பழக்கப்படுத்திக் கொண்டான். கீர்த்தியின் அண்மைக்காக மனது ஏங்கியது தான் இருந்தாலும் அம்முவிற்காக எல்லாம் பொறுத்துக் கொண்டான். எப்போது அவளாக தன்னோடு இசைந்து வாழ வருகிறாளோ வரட்டும், அதுவரை காத்திருப்போம் என்ற விட்டு விட்டான். வராமல் எங்கே போய் விடுவாள் என்ற தைரியம் தான் அவனுக்கு ஏனென்றால் கீர்த்தி தன்னைப் பார்க்கும் பார்வையில் காதல் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் வெறுப்பு இல்லை என்று அவன் அறிவான். அதனால் பொறுமையாக கீர்த்திக்காகக் காத்திருந்தான்.

நாட்கள் வேகமாக ஓடின. இந்த இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு கீர்த்தியும் பழக்கப்பட்டு விட்டாள், அரவிந்தும் பழக்கப்பட்டு விட்டான்.

சிதம்பரத்திற்கு, ராணிக்கும் தன் தங்கள் மகன், மருமகளின் வாழ்க்கையை நினைத்து கவலையாக இருந்தது. அவர்கள் அனைவருக்கும் இருந்த ஒரே ஆறுதல் அம்முதான். இவ்வளவு நாட்களாக தன் பொக்கை வாய் சிரிப்பால் கொள்ளை கொண்ட அம்முவிற்கு இப்போது லேசாக பல் வர துவங்கியிருந்ததால் எதை எடுத்தாலும் வாயில் வைத்தாள்.

இப்படி கண்டதையும் வாயில் வைக்க… அம்முவிற்கு வயிற்றுப் போக்கு ஆரம்பித்தது. ராத்திரி ஆரம்பித்தது. இரண்டு, மூன்று முறை தொடர்ந்து போகவும் பயந்துவிட்டாள் கீர்த்தி.

அரவிந்திற்கு இது எதுவும் தெரியவில்லை, நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனை எழுப்புவதற்காக “என்னங்க, என்னங்க” என்று அழைத்தும் அன்று பார்த்து அரவிந்த் அசையவேயில்லை.

அவனைத் தொட்டு உலுக்கி எழுப்பினாள், அவளே வந்து எழுப்பவும் பயந்து விட்டான் அரவிந்த்.

“என்ன கீர்த்தி…”

“அவளுக்கு லூஸ் மோஷன் போல போகுது, நாலஞ்சு தடவை போயிட்டா, அழறா வேற” என்றாள்.

குழந்தையின் அழுகைக்குக் கூட விழிக்காத தன்னை நொந்து கொண்டே, “சாரி” என்றபடியே எழுந்தான். “அம்மும்மா” என்று கைகளில் அவளை தூக்கவும், காய்ச்சல் வேற அடித்தது.

“டாக்டர் காலைல பத்து மணிக்கு தானே க்ளினிக் வருவாறு, சமாளிக்க முடியாதா” என்றான். “தெரியலை” என்றாள் பதட்டமாக. விட்டால் அழுது விடுவாள் போல இருந்தாள் கீர்த்தி.

“இதுக்கு எதுக்கு கீர்த்தி இவ்வளவு பயப்படற. சரியாகிடும். இப்போதைக்கு கைல பேரசிடமால் மட்டும் இருந்தா காய்ச்சலுக்கு குடு, காலைல பார்த்துக்கலாம் ஒண்ணும் ஆகாது” என்றான். காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கவும், உறங்கினாள் அம்மு.

அப்போதும் தலை சாய்த்தாள் இல்லை கீர்த்தி… கீர்த்தி உறங்காத போது, தான் மட்டும் எப்படி உறங்குவது என்று அவனும் எழுந்து அமர்ந்து கொண்டே இருந்தான்.

“நீங்க தூங்குங்க நான் பாத்துக்கறேன்” என்றாள் கீர்த்தி.

“இல்லை, நீ ரொம்ப பயப்படற, நானும் முழிச்சிட்டு இருக்கேன்” என்று அவனும் அமர்ந்தே இருந்தான்.

விடியும் வரை கிட்டத்தட்ட நான்கைந்து மணி நேரம் இருவரும் அமர்ந்தே இருந்தனர். பேச்சென்பது இல்லை. அந்த இரவின் நிசப்தத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பாராதபோது பார்த்துக் கொண்டு அமர்ந்தே இருந்தனர்.

அம்முவிற்கு காய்ச்சல் சற்று விட்டிருந்தாலும், வயிற்றுப்போக்கு மட்டும், நிற்கவில்லை. குழந்தை மிகவும் துவண்டு விட்டாள். கையில் தூக்கினால் துவளையாக தோள் மேல் சரிந்தாள்.

கீர்த்தி, நம்ம இப்பவே ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகலாம்” என்று சொல்ல, பக்கத்தில் இருந்த சற்று பெரிய ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போக… அவர்கள் குழந்தைக்கு ட்ரிப்ஸ் போட வேண்டும் என்றனர்.

அம்முவை அட்மிட் செய்யவேண்டும் என்றதும், கீர்த்தியை இன்னும் பதட்டம் தொற்றிக் கொண்டது. அப்போது ரௌண்ட்ஸ் வந்த குழந்தைகள் டாக்டரும் கூறினார். “ரொம்ப பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லை. இருந்தாலும் குழந்தை ரொம்ப சோர்வா தெரியறா. நிறைய டீஹைட்ரேட் ஆகியிருப்பா போல இருக்கு. அதுக்கு தான் ட்ரிப்ஸ் போடச் சொல்றேன்.” என்றார்.

இருந்தாலும் அட்மிஷன் என்றதும் கீர்த்தி பயந்து விட்டாள். வீட்டிற்கு போன் செய்ய உடனே சிதம்பரமும், ராணியும் வந்து விட்டனர். இங்கே ராஜேந்திரனும், இந்துமதியும் வந்து விட்டனர். தனது தாத்தாக்கள், பாட்டிகள் புடைசூழ அம்மு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனாள்.

குழந்தைக்கு ட்ரிப்ஸ் போட, கையில் வெயின் தேடினால், அது கிடைக்கவில்லை. அம்மு வேறு பயங்கரமாக அழுதாள். கீர்த்தி அம்முவை கையில் வைத்திருக்க… அப்படியே தான் வெயின் தேடினர் சிஸ்டர்கள். அரவிந்த் அம்மு கையை அசையாமல் பிடித்து கொள்ள, பின்பே சிஸ்டர்களால் வெயின் கண்டுபிடித்து ட்ரிப்ஸ் போட முடிந்தது.

அம்முவை விட அதிகமாக கீர்த்தி துடித்தாள். அம்மாவும் பொண்ணும் துடிப்பதைப் பார்த்த அந்த சிஸ்டர் கூட கிண்டல் செய்துவிட்டுப் போனார். “இப்படி ஒரு நாலு பேஷண்ட் வந்தா போதும், நாங்க ஒரு வழி ஆகிடுவோம்” என்ற சிஸ்டர் சும்மா இராமல், கீர்த்தியிடம், “ஏன்மா நீயெல்லாம் எப்படி பிரசவ வலி தாங்கின” என்று கிண்டலடித்துப் போக…

கீர்த்தி அரவிந்தை பார்த்து முறைத்து விட்டு அந்தப்புறம் நகர, அரவிந்த் சத்தமாகவே கீர்த்திக்கு கேட்கும் படியே “இங்கு குழந்தைக்கே வழியக் காணோம், இதுல எங்க பிரசவ வலி” என்று குறைபட்டு திரும்ப…

படுக்கையில் குழந்தையைக் கிடத்தி விட்டு வந்த கீர்த்தி அவனுக்கு நேருக்கு நேர் நின்று முறைத்தாள். நிறைய பேர் ரூமில் இருக்கக் கூடாது என்றதால் பாட்டிகள், தாத்தாக்கள் எல்லாம் வெளியில் நின்றனர்.

“எதுக்கு இப்போ முறைக்கிற, உண்மையைத் தானே சொன்னேன்.” என்றான் அரவிந்த்.

அப்போதும் கீர்த்தி விடாமல் முறைக்க… “ஆ, ஊன்னா, ஒரே முறைப்ஸ். இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என்று மறுபடியும் கூறினான் அரவிந்த்.

“என்னவாயிற்று இவனுக்கு இன்று என்னிடம் இவ்வளவு வம்பு வேண்டுமென்றே வளர்க்கிறான்” என்று எண்ணிய கீர்த்தி, இன்னும் நின்றால் அதுதான் சாக்கு என்று பேச்சை வளர்ப்பான் என்று அறிந்தவள், அமைதியாக குழந்தையின் புறம் சென்று அமர்ந்து கொண்டாள்.

“இவ்வளவு பேசறேன், சண்டை போடறதுக்காகவாவது வாயைத் தொறக்கிறாளான்னு பாரேன்” என்று முணுமுணுத்தான் அரவிந்த்.

ஆனால் எதற்கும் கீர்த்தி, அசையவில்லை.

குழந்தைக்காக அவள் அப்படி துடிப்பதைப் பார்த்த அரவிந்திற்கு அவளோடு பேச வேண்டும் என்று மிகுந்த ஆர்வமாக இருந்தது. அதுவும் அந்த சிஸ்டர், “நீ எல்லாம் எப்படித்தான் பிரசவ வலி தாங்குனியோ” என்று சொல்லவும், அவனையறியாமல் பேசத் துவங்கி விட்டான்.

அதற்குள், அரவிந்தின் பெற்றோர்களும், கீர்த்தியின் பெற்றோர்களும் ரூமிற்குள் வர, பேச்சு நின்றது. கீர்த்தியோட அவள் அம்மா இந்துவும், ஹாஸ்பிடலிலேயே இருந்து கொள்ள, ஒரு வழியாக மற்றவர்கள் எல்லாம் கிளம்பினர்.

கீர்த்தியின் பாராமுகம் அரவிந்திற்கு பழகியிருந்தாலும், இன்று ஏனோ வலித்தது. அவனுக்கு அம்முவோடே இருக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் இருவருக்கு மேல் இருக்கக் கூடாது என்றதால் வேறு வழியில்லாமல் கிளம்பினான் சலித்தபடியே.

அரவிந்தின் முகம் சரியில்லை என்று கீர்த்தி உணர்ந்தாள் தான். இருந்தாலும் அவனைச் சமாதானப்படுத்த ஏதும் செய்ய விழையவில்லை.

இரண்டு நாட்கள் அம்மு கீர்த்தியைப் படுத்தி எடுத்து விட்டாள். கீர்த்தியால் ஒன்றும் முடியவில்லை. அவளை விட்டு இம்மியும் அம்மு நகரவில்லை. வேறு வழியில்லாமல் அம்முவைப் பார்க்க வந்த அரவிந்தை, “நீங்க இன்னிக்கு ஹாஸ்பிடலிலேயே இருக்கீங்களா” என்றாள் திருவாய் மலர்ந்து…

அரவிந்த் ஆச்சரியமாகப் பார்க்க… “கொஞ்ச நேரம் கூட என்னை விட்டு நகர மாட்டேங்கறா, நீங்க இருந்தா இன்னும் கொஞ்சம் சுலபமா அவளை சமாளிக்கலாம்” என்று கேட்டாள்.

அரவிந்த் மனதிற்குள்ளேயே, ‘அம்மும்மா நீதான் என் செல்லம். அப்படியே உங்கம்மாவை என்னோட சேர்த்து வச்சிரும்மா” என்று மனதிற்குள் அவளிடம் வேண்டுதல் வேறு வைத்தான்.

அம்முவும் அதை உணர்ந்தாளோ என்னவோ, கீர்த்தியின் கைகளில் இருந்து அரவிந்தின் கைகளுக்கு தாவியதுமே சமர்த்தாக கைகளில் அமர்ந்து, அவன் மேல் சாய்ந்து கொண்டு கீர்த்தியைப் பார்த்து சிரித்தாள்.

“என்னை அவ்வளவு பாடுபடுத்திட்டு, உங்கப்பா மேல ஏறின உடனே சிரிக்கறியா, நீ உன்னை…” என்று கீர்த்தி அவளை அதட்டினாள்.

அம்முவிற்கு என்ன புரிந்ததோ என்னவோ, மறுபடியும் கைதட்டிச் சிரித்தாள். அவள் அம்மா சொல்லிக் கொடுத்த புதுப் பழக்கம். அம்மாவை நோக்கியே செய்யவும்… பதறினாள் கீர்த்தி.

“அம்மும்மா” கைகளைப் பிடித்தவள், அரவிந்தை திட்டினால், “அவ கையை அந்த ஆட்டு ஆட்டறா, அதைப் பிடிக்காம சும்மா வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கீங்க.” என்று அதட்டினாள்.

அந்த அதட்டல் கூட அரவிந்திற்குப் பிடித்திருந்தது. அவள் உரிமை எடுத்துக் கொள்வது அவனுக்கு சுகமானதொரு வலியைக் கொடுத்தது.

கீர்த்தி குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டிருக்க… அரவிந்த் அவளையே பாhத்துக் கொண்டிருந்தான்.

‘பண்றதையெல்லாம் பண்ணிட்டு இந்தப் பார்வைக்கு ஒண்ணும் கொறைச்சலில்லை’ என்று மனதிற்குள்ளேயே அவனை மறுபடியும் திட்டினாள் கீர்த்தி.

‘எதற்கு இவ்வளவு பிரச்சனை பேசாமல் இது தண்டபாணியின் குழந்தை’ என்று கீர்த்தியிடம் சொல்லி விடுவோமா என்று தோன்றியது. ஆனால் உடனே என் குழந்தை தான் அம்மு, என் குழந்தையாகவே வளரட்டும் என்று மனதை மாற்றிக் கொண்டான்.

அவன் முகம் யோசனையில் இருப்பதை உணர்ந்த கீர்த்தி, வேறு ஒன்றும் பேசவில்லை. ரௌண்ட்ஸ் வந்த டாக்டரிடம், “எப்போ டிஸ்சார்ஜ் டாக்டர்” என்று அரவிந்த் கேட்டான். “நாளை செய்து விடலாம்” என்றார் அவர்.

“அப்போ இன்னும் ஒரு நாள் இருக்கணுமா” என்று கீர்த்திக்கு தோன்ற இன்னும் ஒரு நாள் தானா இருக்கணும்” என்ற அரவிந்திற்கு தோன்றியது. இருவர் முகங்களும் வௌ;வேறு உணர்ச்சியை வெளிப்படுத்தியது.

சிறிது நேரத்தில் அம்மு உறங்கிவிட, “ஏதாவது பேசேன் கீர்த்தி. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருக்கிறது” என்று அரவிந்தே கீர்த்தியிடம் பேச்சை ஆரம்பித்தான்.

அவனை ஒரு பார்வை பார்த்த கீர்த்தி, அவன் பேசியது கண்டு கொள்ளாதது போல திரும்பிக் கொள்ள…

அவள் அம்முவிற்கு பக்கத்தில் உட்கார்ந்திருக்க… அவளுக்கு அருகில் வந்தமர்ந்தவன், கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகுது எனக்கு மன்னிப்பே கிடையாதா” என்றான் உருக்கமாக.

“நீ மன்னிக்கிற மாதிரி என்ன தப்பு செஞ்சீங்கன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே” என்றாள் கீர்த்தி.

அரவிந்த் புரியாமல் பார்க்க…

“ஊருக்குப் போன, ஒரு குழந்தைய தூக்கிட்டு வந்த, அவ அம்;மாவும் நானும் பிரிஞ்சிட்டோம்ன, இந்தக் குழந்தைய வளர்க்கறது என் கடமைன்றது மாதிரி தூக்கிக் குடுத்துட்ட… வேறென்ன செஞ்ச இல்ல சொன்ன. இதுல எங்கப்பா வேற ப்ளாக்மெயில் பண்ணி என்னை உன்னோட இருக்க வெச்சிட்டார். வேற என்ன நீங்க செஞ்சீங்க” என்று மரியாதையில்லாமலும் கொடுத்தும் பேசினாள்.

“என்னை சமாதானப்படுத்த தான் முயற்சி பண்றீங்களே தவிர என்ன நடந்ததுன்னு சொல்லவே இல்லையே.”

“நீ சொன்னதே தான் கீர்த்தி, நானும் அவளுமே பிரிஞ்சிட்டோம், இனி அதைப் பத்தி பேசி என்ன பிரயோஜனம்.”

“ப்ரயோஜனம் இருக்கா இல்லையான்னு நான் முடிவு பண்றேன், நீங்க சொல்லுங்க.”

“எனக்கு இப்போ அந்த நினைவகள் கூட இல்லை கீர்த்தி.” என்றான் பாவமாக.

“ஒரு குழந்தை, உங்களோடு வாழ்ந்து பெத்த பொண்ணையே மறந்துட்டீங்கன்னா… என்னையெல்லாம் எப்படி ஞாபகம் வச்சிருப்பீங்க” என்றாள் பட்டென்று.

“எல்லாரும் நீயும் எனக்கு எப்பவுமே ஒண்ணில்லை கீர்த்தி. நீ எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்.”

“உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா தெரியலை, இது சொல்ற விஷயமில்லைங்க, புரிய வைக்கிற விஷயம்.”

“எனக்கு எப்படிப் புரிய வைக்கிறதுன்னு தெரியலையே.”

“இனி எப்படி புரிய வைக்க முடியும். உங்க வாழ்க்கைல இன்னொரு பொண்ணுக்கு இடம் கொடுத்திருக்கீங்க, அதுவும் என்கிட்ட காதல் சொல்லிட்டு போய் குடுத்திருக்கீங்க, எப்படி உங்களால முடிஞ்சது” என்றாள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, கண்களில் கண்ணீரைத் தேக்கி…

இதற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை அரவிந்திற்கு.

அரவிந்தை பார்த்த கீர்த்தி, மிகவும் உணர்ச்சி வசப்பட்டு. பட்டென்று உடைந்தவள் குமுறிக் குமுறி முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளே அழுகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்தாள், முடியவில்லை. நெடுநாளைய மனதில் போராட்டம் பெரும் துக்கப் பந்தாகத் தொண்டைக் குழியில் இருந்து கிளம்பியது.

அரவிந்த் அவளருகில் அமர்ந்து, “அழாதே கீர்த்தி” என்ற சமாதானப்படுத்து விழைய ஆரம்பித்தது தான் தாமதம். அவன் மார்பிலேயே முகம் புதைத்தவள், ஏன் இப்படி பண்ணுனீங்க” என்று கதறித் தீர்த்தாள்.

அரவிந்தால் சமாதானப்படுத்த முடியவில்லை. அமைதியாக அவளை அணைத்தபடியே இருந்தான். அவளின் கதறல் அவன் மனதை வெகுவாக அசைத்திருக்க… அப்படியே அமர்ந்திருந்தான்.

அழுது கொண்டிருந்தவள் திடீரென்று நிமிர்ந்து, “நீங்க என்னவோ என்கிட்ட பொய் சொல்றீங்கன்னு என் உள்மனசு சொல்லுது. அம்மு ப்ரிமெச்சூர்ட் பேபி எல்லாம் இல்லை, நல்ல ஆரோக்யமான பேபின்னு டாக்டர் சொன்னாங்க.”

“நீங்க லண்டன் போன பீரியட் வைச்சு பார்த்தா, இவ உங்களுக்கு பொறந்தா குழந்தையா இருக்க வாய்ப்பேயில்லை. நீங்க என்கிட்ட பொய் சொல்றீங்க தானே” என்றாள் ஆக்ரோஷமாக…

மெல்ல அதிர்ந்தான் அரவிந்த். அந்த உடல் அதிர்வு கீர்த்திக்கு எதையோ உணர்த்த… “என்மேல ப்ராமிஸ் பண்ணி சொல்லுங்க இது உங்க குழந்தைன்னு” என்றாள் ஆவேசமாக அவன் கையை எடுத்து தன் தலையில் வைத்து.

அரவிந்த் இப்படி அவள் தன்னைக் கார்னர் பண்ணுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. அவள் பூ முகத்தைப் பார்த்தபடி, தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான்.

“நீங்க இன்னைக்கு உண்மையைச் சொல்ற வரைக்கும் நான் விடப் போறதில்லை” என்றாள் தீர்மானமாக.

உண்மையைச் சொல்லும் முடிவை நிமிஷ நேரத்தில் எடுத்த அரவிந்த், “என்ன உண்மை உனக்குத் தெரியணும்” என்றான்.

“அம்மு என் பொண்ணுன்ற வார்த்தை தான் என் வாயிலயிருந்து வரும். அவ பிறப்பால என் பொண்ணா இல்லைன்னாலும், என் பொண்ணுதான்” என்றான் பெருமூச்சை வெளிப்படுத்தி.

கீர்த்தி இதை சேட்டு சமாதானமாவாள் என்று அவன் எண்ணியிருக்க… அவள் முகம் கோபத்திலும், ஆக்ரோஷத்திலும் இன்னும் சிவந்தது.

“அப்போ என்கிட்ட பொய் சொல்லியிருக்கீங்க, என்னை நம்பலை நீங்க அப்படிதானே. அப்படி பொய் சொல்லி உங்க குழந்தையா வளர்க்க வேண்டிய அவசியம் என்ன, யார் குழந்தை அது” என்றவள், இந்த முறை அவன் கையைப் பிடித்து அம்முமேல் வைத்து, “இவ மேல நீங்க உண்மையைச் சொல்லணும்” என்று சொன்னாள்.

“நீ எப்பவும் யார்கிட்டயும் எதுக்காகவும் நீ சொல்லமாட்டேன்னு சொன்னா சொல்றேன். இதைப் பத்தி நம்ம கூட மறுபடியும் பேசக்கூடாது, அப்படின்னா சொல்றேன்” என்றான் அவளையே தீர்க்கமாகப் பார்த்தபடி.

“அப்படி யாருக்கும் தெரியக்கூடாத அளவுக்கு அவ யார் குழந்தை” என்றாள் கண்களில் சந்தேகத்தை தேக்கி…

“தண்டபாணியோட குழந்தை” என்றான்.

கேட்ட கீர்த்தி, பயங்கர அதிர்ச்சியடைந்தாள். அவள் இதை எதிர்பார்;க்கவில்லை. “என்ன… என்ன சொன்னீங்க” என்றாள் மறுபடியும்.

Advertisement