Advertisement

2

அரவிந்தின் குடும்பம் முன்பு மிகவும் பணக்கார வகையைச் சேர்ந்த குடும்பம். ஆனால்… இப்போதும் அவர்கள் வசதியானவர்களே, முன்பு அளவு இல்லை. முப்பாட்டன், பாட்டன் என்று அழித்தது போக எஞ்சியிருந்தது சொற்பமே.

அதில் அரவிந்தின் தந்தை புத்திசாலித்தனமாக பிஸினெஸ் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

சென்னை சிட்டியில் இரண்டு கிளைகள் இருக்க, அதே பர்னிச்சர் ஷோரூம் இப்போது கோவையிலும், மதுரையிலும் ஆரம்பித்திருக்கிறார். நல்ல லாபம் தரும் தொழில்.

ஆனால் ஏனோ அரவிந்திற்கு அதில் நாட்டமில்லை. அவன் பி.ஈ. முடித்து மேலே படிக்கவேண்டும் என்று விரும்பினான். அவன் அப்பா விடவில்லை. அவனது கனவே பாரின் போய் வேலை செய்வதுதான்.

அவனது தந்தையோ மிகவும் தேசப்பற்று மிக்கவர். தான் உயிருடன் இருக்கும்வரை மகன் அன்னிய நாட்டில் போய் வேலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று விட்டார்.

இப்படி தனது அத்துணை ஆசைகளுக்கும் தடை போட்ட தன் தந்தையின் எந்த ஆசையையும் நிறைவேற்றக் கூடாது என்ற ஒரே ஆசைதான் அரவிந்திற்கு.

அதனாலேயே தங்கள் தொழிலில் தனக்கு விருப்பம் உள்ளதா இல்லையா என்றே இதுவரை அரவிந்த் ஆராய முற்பட்டதில்லை. நித்தமும் தன் அன்னையுடனும், தன் தந்தையுடனும் போராட்டம்தான்.

காலையில் போய் சிறிது நேரம் இருப்பான். அதுவே பெரிய விஷயம் அவனிற்கு. பின்பு தன் நண்பர்களுடன் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவான்.

நிறைய நண்பர்கள் அரவிந்திற்கு. அதில் தற்போது அறிமுகமாகி இருப்பவன்தான் தண்டபாணி. அவனை அரவிந்திற்கு மிகவும் பிடித்துவிட்டது. அதே மாதிரி தண்டபாணிக்கும் மிகவும் அரவிந்தைப் பிடித்து விட்டது.

இந்த ஒரு மாத காலப் பழக்கமே, இருவருள்ளும் ஒரு மிகச் சிறந்த நட்பை ஏற்படுத்திக் கொண்டு விட்டது.

அரவிந்தின் தந்தை சிதம்பரம், தாய் ராணி, ஒரே ஒரு தங்கை நளினி. அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது. நளினியின் கணவர் மாதவனுக்கு ஒரு தங்கை உண்டு. அவள் வனஜா, அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அரவிந்த் என்பது தான் அவனது குடும்பத்தார் அனைவரின் விருப்பமும்.

அதை சமீப காலமாக ஜாடை மாடையாக அரவிந்தின் காதுகளில் அவனது குடும்பத்தார் போட ஆரம்பித்திருந்தனர். அது வேறு அரவிந்திற்கு எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருக்க, ஷோரூமிற்கு போவதைத் தவிர்க்க ஆரம்பித்தான்.

இதற்கு வனஜா, அரவிந்திற்கு நல்ல சினேகிதி கூட. ஆனாலும் இந்தப் பேச்சு அரவிந்திற்கு ரசிக்கவில்லை. அரவிந்தின் தங்கை நளினிக்குத் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு பெண் குழந்தை ஆறு வயதில் இருக்கிறாள் பெயர் அகல்யா.

நளினிக்கு திருமணமானபோது வனஜா சிறு பெண், பதிமூன்றோ, பதினான்கோ அந்த வயதில் தான் இருந்தாள். அரவிந்த் அவளிடம் சிறு பெண் என்ற முறையிலேயே பழகி வந்தான். அவள் வளர வளர இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவானது.

அரவிந்திற்கு நன்கு தெரியும். வனஜாவிற்கும் அதை மீறி தன் மேல் எந்த அபிப்பிராயமும் இருக்காது என்று. எப்படி இதை தவிர்ப்பது, இந்தக் கல்யாணத்தில் தனக்குச் சிறிதளவும் உடன்பாடில்லை என்று தன் பெற்றோர் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று அந்தக் கோபாம் வேறு அதிகமாக அவன் பெற்றோரின் மீது அவனுக்கு இருந்தது.

அதனாலேயே ஷோரூமிற்கும் போகாமல் தன் தந்தையை அலைக்கழித்துக் கொண்டிருந்தான். அவன் அன்னையையும் அவனுடன் வழக்காட வைத்தான்.

அவன் பெற்றோர்களுக்குமே அவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று தெரியவில்லை. அதுவும் அவன் அப்பாவிற்கு மிக நிச்சயமே, அவன் வெளிநாடு போய் சம்பாதிக்க நினைப்பதை விட அதிகமாக… பல மடங்கு அதிகமாக அவருடைய ஷோரூம் பிஸினெஸ் ஈட்டிக் கொடுக்கும் என்று.

அதனால் அவன் என்ன சொன்னாலும், செய்தாலும் அவனை வெளிநாடு அனுப்பும் உத்தேசம் அவருக்கு சற்றும் இல்லை. இந்த குழப்பங்களினால் எந்த வேலையிலும் ஈடுபடாமல் நண்பர்களோடு வெட்டியாக சுற்றுவதைத்தான் பல வருடமாக செய்து கொண்டிருந்தான்.

இப்போது புதிதாக கிடைத்துள்ள நண்பன்தான் தண்டபாணி. அவன் மார்க்கெட்டிங் லைனில் இருப்பதால் அவன் செல்லுமிடமெல்லாம் அரவிந்தும் அவனோடு சுற்றிக் கொண்டிருந்தான்.

அவன் அம்மா திட்டிய பிறகு அந்த இரவு நேரத்திலும், தன் நண்பனை அழைத்தான் அரவிந்த்.

“டேய் பாணி, செம திட்டுடா வீட்ல இன்னைக்கு. ஆனா அவங்க திட்டத் திட்டதான் எனக்கு வெளில சுத்தணும்னே ஆசை வருதுடா” என்றான்.

‘எங்க வீட்ல மட்டும் உன் கூட சேர்ந்த பிறகு கம்மியாவா திட்டு வாங்கறேன்’ என்று மனதிற்குள் நினைத்த தண்டபாணி அதை அரவிந்திடம் சொல்லாமல், வேறு பேசி பேச்சை மாற்றினான்.

அதுதான் அரவிந்த் ஒன்றை நினைத்து விட்டால் அதிலேயே நிற்பான்.

கீர்த்திக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு திட்டிய பிறகும் இவன் அந்த அரவிந்திடம் பேசுகிறானே என்று சற்று சுவாரசியம், ஏற்பட… அன்றுதான் பார்த்த அரவிந்தை நினைத்தபடியே உறங்கிப் போனாள்.

மறுநாளும் வாயடித்தபடியே பொழுது நன்றாக விடிந்தது கீர்த்திக்கு. தண்டபாணியை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தாள் காலையிலேயே.

அவளுடைய அம்மா கூட அவளை திட்டினார். “வேலைக்குப் போற பையனை, காலையில் அமைதியா வேலைக்குப் போக விடு கீர்த்தி அவனை வம்பிழுக்காத” என்று அதட்டினார்.

“அப்போ என்னை இன்னிக்கு வெளில கூட்டிட்டுப் போக சொல்லு” என்று டீலிங் பேசினாள்.

“எங்கடி வெளில” என்று தண்டபாணி கேட்க…

“எங்கேயாவது, நான் வெளில போய் ரொம்ப நாள் ஆகுது.”

“அடிப்பாவி டெய்லி காலேஜ் போயிட்டு வர்றது எல்லாம் என்ன?”

“அதெல்லாம். உன் கூட வெளில போன மாதிரி கணக்கா… நம்ம போறோம்” என்று பேச்சை முடித்தாள்.

தண்டபாணியும் அதை அறிந்துதான் இருந்தான். தன் தங்கையை அவன் வெளியே கூட்டிச் சென்று நிறைய நாட்கள் ஆகி விட்டதால்

“சரி” என்றான்.

“நான் வெயிட் பண்ணிட்டே இருப்பேன். அண்ணா சீக்கிரம் வந்துடு” என்று பலமுறை அவனிடம் கீர்த்தி சொல்லி அனுப்பினாள்.

“சரி, சரி” என்று அவளிடம் சொல்லி சென்ற தண்டபாணியை மாலையில் எங்கோ அரவிந்த் கூப்பிட, கீர்த்தியிடம் “வருகிறேன்” என்று சொன்னதையே மறந்து அவனோடு சென்று விட்டான் தண்டபாணி.

இரவு எட்டு மணிக்கு மேல் தண்டபாணி வீடு திரும்ப, அங்கே வாசலிலேயே அமர்ந்திருந்தாள் கீர்த்தி. அப்போதுதான் தண்டபாணிக்கு அவளை வெளியே அழைத்துச் செல்கிறோம் என்று சொன்ன ஞாபகமே வந்தது.

“சாரி, சாரி! கீர்த்தி, மறந்துட்டேன்… ஒரு போன் பண்ணியிருக்கலாம் இல்லை” என்று அவள் அண்ணன் எவ்வளவு சமாதானப்படுத்தியும் இருந்த இடத்தை விட்டு அசையவேயில்லை. அவர்கள் அம்மாகூட சொன்னார், “சாயந்தரம் ஆறு மணி இருந்து இங்கதாண்டா உட்கார்ந்திருக்கா. உனக்கு போன் பண்ணறன்னு சொன்னாலும் விடமாட்டேங்கறா. அப்படி என்னைவிட என்ன ஞாபகம் அவனுக்குங்கறா. உயிரை எடுக்கறீங்கடா ரெண்டு பேரும்” என்று அவனின் அன்னை கோபமாக வருத்தப்பட…

“இப்போ போயிட்டு வரட்டுமா அம்மா” என்று அவன் அம்மாவிடத்தில் அனுமதி கேட்க… அவள் அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்த அவள் அன்னையும், “சரி போயிட்டு வாங்க, ஆனா ரொம்ப தூரம் போகாதீங்க” என்று அனுமதி கொடுத்தார்.

அப்போதும் இருந்த இடத்தை விட்டு கீர்த்தி அசையவில்லை. “வா கீர்த்தி” என்று கட்டாயப்படுத்தி அவளை அழைத்துக் கொண்டு போனான் தண்டபாணி.

அவன் சென்ற இடம் சற்று தூரத்தில் உள்ள ஐஸ்க்ரீம் பார்லர்.

கீர்த்திக்கு ஐஸ்க்ரீம் என்றால் மிகவும் இஷ்டம் அதை அறிந்தே அங்கே அழைத்துச் செல்ல… அவள் முகம் சற்று தெளிந்தது. கோபத்தை விட்டது.

“காலையில் எத்தனை தடைவ சொல்லி அனுப்பினேன், அப்புறமும் ஏன் தண்டு இப்படி பண்ணின” என்று அவள் பொறிய… மறுபடியும் தண்டபாணியின் போன் ஒலித்தது.

அவன் எடுத்துப் பார்க்க மீண்டும் அரவிந்த்… எடுத்து, “என்னடா” என்றவுடனே, “எங்கேடா இருக்க” என்றான்.

“இங்கே தான்” என்று லேண்ட் மார்க் சொல்ல… யாரோடு இருக்கிறான் என்று கேட்காமலேயே போனை வைத்தான் அரவிந்த்.

எதற்கு அழைத்தான் என்று குழப்பத்தோடே இருந்தவனை கீர்த்தியின் குரல் கலைத்தது. “என்னை விட உனக்கு அப்படி என்ன முக்கியமான வேலை… அதுக்குள்ளேயே என்னை மறக்க ஆரம்பிச்சிட்டியா” என்று கத்திக் கொண்டிருந்தாள்.

இவன் அவளை சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கும் போதே அரவிந்த் அங்கே வந்துவிட்டான், “ஹாய் பாணி” என்றழைத்தபடியே.

“என்னது பாணியா” என்று கீர்த்தி பார்க்க, அப்போது தான் தண்டபாணி கீர்த்தியுடன் இருந்ததையே பார்த்தான் அரவிந்த்.

“சாரி நீ உன் தங்கையோட இருக்கியா” என்று சொல்லியபடி அவன் திரும்பி போகப் போக…

“டேய் இருடா, ஒண்ணும் பிரச்சனையில்லை” என்று அவன் கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தான் தண்டபாணி.

“இந்த அண்ணா ஏன் இவனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான்” என்று அரவிந்தையே ஆராயும் பார்வை பார்த்திருந்தாள் கீர்த்தி.

கீர்த்தி தன்னை ஆராயும் பார்வை பார்ப்பது அரவிந்திற்கும் புரிந்தது. அதனால் அவனுக்குப் பேச வாய் வரவில்லை. அமைதியாக அமர்ந்து கொண்டான்.

அங்கே சட்டென்று ஒரு கனமான அமைதி நிலவியது. தண்டபாணி தான் அந்த அமைதியைக் கலைத்தான். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான்.

“கீர்த்தி இது அரவிந்த் என்னோட ப்ரெண்ட், அரவிந்த் இது கீர்த்தி என்னோட தங்கை.”

வேறு வழியில்லாமல் ஒருவருக்கொருவர், “ஹலோ” சொல்லிக் கொண்டனர்.

இருவரும் ஒருவருக்கொருவர் “ஹலோ” சொல்லிக் கொண்டதோடு சரி, அதன் பிறகும் ஒருவரை ஒருவர் பார்வையால் அளவெடுத்தபடி அமர்ந்திருந்தனரே தவிர்;த்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. மீண்டும் கனமான ஒரு அமைதி நிலவியது.

“சொல்லு அரவிந்த், எதுக்கு கூப்பிட்ட” என்றான் தண்டபாணி.

அரவிந்த் அவனை சும்மாதான அழைத்திருந்தான். ஆனால் அதைச் சொல்ல பிரியப்படாமல், “ஒரு வேலை அதான் கூப்பிட்டேன். ஒண்ணும் அவசரமில்லை. அப்புறம் பார்த்துக்கலாம்” என்று பேச்சை முடித்தான்.

“நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணறேனா” என்றான். அரவிந்த் பொதுவாக அண்ணன் தங்கை இருவரையும் பார்த்து.

“ஆமான்னு சொன்னா எழுந்தா போயிடுவான், கேள்வியைப் பாரு” என்று மனதிற்குள்ளேயே கீர்த்தி கரித்துக் கொட்ட,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றான் தண்டபாணி அரவிந்தைப் பார்த்து…

அதற்கு நேர்மாறான ஒரு விஷயத்தை, அதாவது “ஆமாம் நீ எங்களை டிஸ்டர்ப் பண்ணற” என்பது மாதிரியான பார்வையை கீர்த்தி அரவிந்தை நோக்கி பார்க்க, முதலில் அந்தப் பார்வையைப் பார்த்து துணுக்குற்ற அரவிந்த்…

அதன் பிறகு அப்படிதான் நான் டிஸ்டர்ப் பண்ணுவேன் என்பது மாதிரியான ஒரு பதில் பார்வையை கீர்த்தி நோக்கிப் பார்த்தான்.

இருவரும் ஒருவர் பார்வையை ஒருவர் உணர்ந்தனர். அதற்கு சற்றும் அசராமல் பதில் பார்வையும் பார்த்தனர்.

அதன் பிறகு சற்று நேரம் அரவிந்தும், தண்டபாணியும் பேச… அமைதியாக அதை பார்வையிட்டபடி ஒரு அவசரமுமில்லாமல் அந்த ஐஸ்கிரீமை உண்டு முடித்தாள் கீர்த்தி.

பின்பு ஒருவருக்கொருவர் விடைபெற்றுக் கிளம்பினர். அப்போதும் ஒருவரை ஒருவர் அளவிடும் பார்வையோடு தான் விடை பெற்றனர். கீர்த்தியும் அரவிந்தும்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில், “ஏன் கீர்த்தி அவனை முறைச்சு முறைச்சு பார்த்த” என்றான் தண்டபாணி.

“ஓ நீ கண்டுபிடிச்சிட்டியா” என்றாள் கீர்த்தி.

“அதான் அப்படி முறைச்சி முறைச்சி பார்க்கறியே எப்படி தெரியாம இருக்கும்.”

“அப்படி யார் கூட நீ இவ்வளவு ஒரு திக் ப்ரெண்ட் ஷிப் டெவலப் பண்றன்னு அனாலிஸிஸ் பண்ணினேன். ஆமா நான் முறைச்சுப் பார்த்தது மட்டும் சொல்ற, அவனும் அப்படித்தானே பார்த்தான்.”

“அவன் ஒண்ணும் அதிகமா பார்க்கலை நீதான் பார்த்த” என்று தன் நண்பனுக்கு பரிந்து தண்டபாணி” பேசினான்.

‘சரி நான்தான் பார்த்தேன். இப்போ என்ன அதுக்கு” என்று கீர்த்தி சட்டென்று எகிற, “இதுக்கு மேல பேசினா இவ சாமியாடிடுவா’ என்று மனதிற்குள்ளேயே நினைத்த தண்டபாணி அப்படியே அமைதியாகி விட்டான்.

இருவரும் அதை விடுத்து வேறு பேசியபடியே வீடு வந்து சேர்ந்தனர்.

அரவிந்தும் கீர்த்தியை நினைத்தபடியே தான் வீடு போய் சேர்ந்தான். எவ்வளவு தைரியம் அவளுக்கு என்னை முறைத்துப் பார்க்கிறாள். கோபம் வருவதற்கு பதிலாக ஒரு மெச்சுதல் தான் அவனில் தோன்றியது.

அந்த பார்வை அதில் தெரிந்த அலட்சியம், தைரியம் அரவிந்தை வெகுவாக ஈர்த்தது. இருந்தாலும் நண்பனின் தங்கை என்பதை அரவிந்த் ஒரு க்ஷணம் கூட மறக்கவில்லை.

கீர்த்திக்கும் வீடு போய் சேர்ந்த பிறகும் அரவிந்த் ஞாபகம்தான். எப்படி என் பார்வையை எதிர்கொள்கிறான். ஒரு சிறு தயக்கமும் இல்லை. தைரியம் தான் என்று அவளும் அரவிந்த் மாதிரியே நினைத்தாள்.

இருவரும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் ஒரே மாதிரிதான் நினைத்தனர்.

அதன் பிறகு கீர்த்தியும், அரவிந்தும் பார்க்கவேயில்லை. ஆனால் தினமும் தண்டபாணி, அரவிந்த் சந்திப்பு மட்டும் தவறாமல் நிகழ்ந்தது.

கீர்த்திக்கு இரண்டொரு முறை அவனைப் பார்க்கும் ஆவலும் எழுந்தது. எங்கேயாவது வாசலில் தென்படுகிறானா என்று தண்டபாணி கிளம்பும் சமயங்களில் வெளியில் சென்று பார்ப்பாள். ஆனால் அவன் எங்கும் தென்படவேயில்லை. சற்று ஏமாற்றமாகக் கூட உணர்ந்தாள்.

தண்டபாணியிடம் அடிக்கடி வாய் கொடுப்பாள். “எங்கே உன் நண்பன். இப்போ எல்லாம் ஆளையே காணோம்” என்று சீண்டுவாள்.

ஆனால் நண்பன் என்று வந்துவிட்டாள், தண்டபாணி வாய் பேசாமல் அப்படியே கிளம்பிவிடுவான். அவளிடம் வாயே கொடுக்க மாட்டான்.

“ஏதாவது தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சா, அந்த தண்டம் வாயைத் தொறக்குதா பாரு” என்று மனதிற்குள்ளேயே தண்டபாணியைத் திட்டுவாள் கீர்த்தி.

இப்போதெல்லாம் அரவிந்த் தண்டபாணியுடனே சுற்றிக் கொண்டு இருந்ததால், அவன் ஷோரூம் பக்கம் செல்வது கூட இல்லை. அதில் அவன் தந்தைக்கு மிகுந்த வருத்தம்.

அவரும் அரவிந்தை எப்படியாவது கடைக்கு இழுத்து விட வேண்டும் என்று அவனிடம் கெஞ்சிப் பார்த்தார். மிஞ்சிப் பார்த்தார். திட்டிப் பார்த்தார். என்ன செய்தாலும் அரவிந்த் மட்டும் அசையவில்லை. அவர் சொல்லச் சொல்ல சற்று நேரம் சென்று கொண்டு இருந்தவன், ஷோரூம் புறம் செல்வதை அடியோடு தவிர்த்தான்.

இவனுக்கு ஒரு கால் கட்டு போட்டாளாவது அடங்குவானா என்று நினைத்த அவனின் தந்தை, வனஜாவுடனான அவனது திருமணத்தைப் பற்றி அதிகம் பேசத் துவங்கினார்.

அன்று காலையிலும் வீட்டில் ஒரே வாக்குவாதம். அவன் தந்தை சிதம்பரம் அவனிடத்தில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

“டேய், இங்கேயே ரெண்டு ப்ராஞ்ச் இருக்கு. இப்போ கோவைலயும், மதுரைலயும் வேற ஆரம்பிச்சுட்டேன். என்னால ஒரு ஆளா சமாளிக்க முடியலைடா. நீ ஒழுங்கா வந்து சார்ஜ் எடுத்துக்கோ. எதுக்கு நீ இப்படி வெட்டியா சுத்திட்டு இருக்க…”

“உங்களால பார்க்க முடியலைன்னா எதுக்கு நீங்க ஆரம்பிச்சீங்க. நானா உங்களை ஆரம்பிக்கச் சொன்னேன். நீங்களா ஆரம்பிச்சிட்டு இப்போ சும்மா வந்து என்னைப் பார்த்துக்கோ என்னைப் பார்த்துக்கோன்னு உயிரை எடுக்கறீங்க.”

“இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போயிடலை அப்பா. ஒரு அஞ்சு வருஷம் விடுங்க. நான் பாரின் போய் இருந்துட்டு வர்றேன். அதுக்கப்புறமா வந்து தொழிலை நான் சார்ஜ் எடுத்துக்கறேன்” என்றான் வேண்டும் குரலில்.

Advertisement