Advertisement

18

சிதம்பரம் மெதுவாக, “இந்தக் குழந்தையோட அம்மா” என்றார்.

“அவ வரமாட்டா, நானும் அவளும் பிரிஞ்சிட்டோம், அதனால தான் குழந்தையை என்கிட்ட குடுத்துட்டு அவ விலகிட்டா” என்றான்.

அவளருகில் வந்த கீர்த்தி, “இல்லை, நான் நம்பமாட்டேன் பொய் சொல்றீங்க நீங்க, நீங்க என்னை ஏமாத்தமாட்டீங்க.”

“இல்லை கீர்த்தி. நான் உன்னை ஏமாத்தலை, நீதான் என் மனைவி, அதே மாதிரி இதுவும் என் குழந்தை தான்” என்றான்.

“இந்தக் குழந்தையோட அம்மா எங்க இருக்கா…”

“லண்டன்ல.”

“நீங்க லண்டன் போனதே எய்ட் மந்த்ஸ் முன்னாடி தான் அப்புறம் எப்படி குழந்தை பிறக்கும்” என்று மடக்கி கேள்வி கேட்டாள் கீர்த்தி.

‘அய்யோ இவளை சமாளிப்பது பெரும்பாடாய் இருக்கும் போலிருக்கிறதே’ என்று மனதிற்குள்ளேயே நினைத்த அரவிந்த், “இவ எய்ட் மந்த்ஸ்லயே பொறந்துட்டா, இப்போ ட்வென்டி டேஸ் பேபி இவ, பேர் இந்து, நான் கூப்பிடறது அம்மு” என்றான்.

“லிசான்றது யாரு” என்றாள் பாஸ்போர்ட்டைப் பார்த்து.

“குழந்தையோட அம்மா.”

“இப்போ எங்கே அவ.”

“அதான் சொல்றேனே லண்டன்ல.”

“நீங்க எப்ப அவளைப் பிரிஞ்சீங்க.”

“இங்க வர்றதுக்கு முன்னாடியே பிரிஞ்சிட்டேன், குழந்தை எனக்கு வேணாம் நீயே வளர்த்துக்கோன்னு அவ சொன்னா. அதனால குழந்தையை வாங்க தான் லண்டன் போனேன். இப்போ நாங்க பிரிஞ்சிட்டோம். சட்டப்படி அவ என் மனைவி கிடையாது. அதனால எந்தப் பிரச்சனையும் வராது” என்றான் நீளமாக அரவிந்த்.

“அப்போ, எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” என்றாள் ஆவேசமாக கீர்த்தி…

நடப்பதை எல்லாம் ஒரு பார்வையாளராக சிதம்பரமும் ராணியும் பார்த்திருந்தனர். ஒரு குழந்தை பெற்று இங்கே கொண்டு வரும் அளவுக்கு தன் மகன் யாரோடும் பழகியிருப்பான் என்பதை சிதம்பரத்தால் நம்ப முடியவில்லை. என்ன சொல்வது, என்ன செய்வது என்றே தெரியவில்லை.

“என்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படறேன்னு சொல்லி தானே லண்டன் போனீங்க. அப்புறம் எப்படி இன்னொரு பொண்ணோட பழக முடிஞ்சது. நீங்க பொய் சொல்றீங்க. நீங்க அப்படி எல்லாம் செஞ்சிருக்க மாட்டீங்க… இது பொய் தானே” என்றாள் மறுபடியும் ஆத்திரத்தோடு.

“இல்லை கீர்த்தி, இது பொய் இல்லை. இது என் குழந்தை, அம்மு என் குழந்தை. அதே மாதிரி நீ மட்டும் தான் கீர்த்தி இனிமே என் மனைவி. நம்பு கீர்த்தி. இது என் குழந்தை, இல்லையில்ல நம் குழந்தை” என்றான்.

“எப்படி உங்களால இப்படி எல்லாம் பேசமுடியுது” என்றாள் கண்ணீருடன்…

சிதம்பரத்திற்கும் ராணிக்கும் அதுவரையுமே என்ன பேசுவது என்று தெரியவில்லை. புது இடம், புது சீதோஷ்ண நிலை என்பதாலோ என்னவோ மறுபடியும் அம்மு அழ ஆரம்பித்தாள்.

எல்லோர் பார்வையும் குழந்தையின் மேல் திரும்பியது. அது ‘வீல் வீல்’ என்று அழுதது. பொறுக்க முடியாமல் அரவிந்த், சென்று கையிலெடுக்க, இப்போது அழுகை குறைந்தது.

கீர்த்திக்கு ஒன்றுமே புரியவில்லை, தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கக் கூட அவளால் முடியவில்லை. பிரமை பிடித்த மாதிரி இருந்தது.

அங்கிருந்த சோபாலேயே மடிந்து அமர்ந்து விட்டாள்.

“இந்தக் குழந்தை, இதை என்ன பண்றது” என்றார் அரவிந்தின் அம்மா ராணி.

“இதென்னம்மா கேள்வி என் குழந்தை என்னோடதான் இருக்கும். முடியாதுன்னு சொன்னா, நானும் என் மகளும் போய் வாசல்ல தான் நிற்போம்” என்றான் அரவிந்த்.

“நீயேன்டா போய் வாசல்ல நிக்கற, நீ பண்ணியிருக்கிற காரியத்துக்கு, நாங்க தான்டா எல்லோர் முன்னாடியும் தலைகுனிஞ்சு நிக்கணும். ஊர்ல இருக்கிறவங்களுக்கு என்னடா பதில் சொல்வ. அத விட, உன் பொண்டாட்டி அவ கிட்ட என்ன பதில்டா சொல்லப் போற.”

“இனிமே இப்படி பண்ண மாட்டேன். இந்த ஒரு தடைவ மன்னிச்சிடச் சொல்லு.”

“என்னடா நீ என்ன சாதாரண காரியமா பண்ணியிருக்க, அசால்டா மன்னிக்கச் சொல்ற. இதுகூட ஒரு கொலைக் குற்றத்திற்கு சமம்தான்டா, ஒரு பொண்ணோட உணர்ச்சியை நீ கொன்னு இருக்க” என்றார் சிதம்பரம்.

கீர்த்தி சும்மா இருந்தாகூட இவங்க பேசிப் பேசியே அவளை உசுப்பேத்தி விடறாங்களே என்று இருந்தது அரவிந்திற்கு.

கீர்த்தி எல்லாவற்றையும் பார்த்து சோர்ந்து அமர்ந்திருக்க, சம்மந்தி வீட்டில் தெரிவிப்பது தான் உத்தமம் என்று நினைத்த சிதம்பரம், ராஜேந்திரனுக்கு… போன் செய்து அவரையும் அவரது மனைவியையும் வீட்டிற்கு வரமாறு அழைத்தார்.

ராஜேந்திரன் இதை ஒரு மாதிரி எதிர்பார்த்திருந்தார். அதனால் போன் செய்ததுமே மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பி வந்தார்.

அவருக்கு எந்த விஷயமும் தெரியும் என்பது போல் காட்டவில்லை. வீட்டில் மனைவியிடம் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. தண்டபாணியின் உடமைகளைப் பார்த்து அப்போதான் இந்துமதி ஒரு பாட்டம் அழுது முடித்திருந்தார்.

சம்மந்தி வீட்டில் இருந்து போன் வரவும், என்னவோ என்று கிளம்பி வந்தால், குழந்தையைப் பார்த்து இந்துமதி அதிர்ந்தார். ராஜேந்திரன் அதிர்ந்த மாதிரி காட்டிக் கொண்டார். அவர்கள் இருவரையும் பார்த்த அரவிந்தும் ஒன்றும் தெரியாதவன் மாதிரி “என்னை மன்னிச்சிடுங்க” என்றான் பொதுவாக.

“மன்னிப்புன்னு ஒரு வார்த்தை கேட்டா எல்லாம் சரியாயிடுமா” என்று இந்துமதி கேட்க…

“அதைத் தவிர வேற வார்த்தை என்கிட்ட இல்லை, இனி மேல இப்படி ஆகாம பாத்துக்கறேன்” என்றான் அரவிந்த்.

“செய்யறது எல்லாம் செஞ்சிட்டு இப்படி இனிமே ஆகாம பாத்துக்கறேன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்றார் ஆவேசமாக.

“இந்து உணர்ச்சி வசப்படாத” என்றார் ராஜேந்திரன்.

“எப்படி? எப்படி? உணர்ச்சி வசப்படாம இருக்க முடியும், என் பொண்ணோட வாழ்க்கை” என்றார் ராஜேந்திரனைப் பார்த்து இந்துமதி.

“மாப்பிள்ளை செஞ்சது தப்பாவே இருக்கட்டும், ஆனா அந்த தப்பை எத்தனை பேர் ஒத்துக்கறாங்க… அதுக்காகவாவது நாம மாப்பிள்ளைய பாராட்டணும்” என்றார்.

“ஏன் நீங்களும் ஆண் வர்க்கம் அப்படின்றதால அவருக்கு சப்போர்ட் பண்றீங்களா” என்று அவரிடமும் சண்டைக்கு வந்தார் இந்துமதி.

“என்ன இந்து இப்படி பேசற, ஊர்ல எத்தனையோ நடக்குது, அதுல இது ஒண்ணுமேயில்ல, கல்யாணத்துக்கு முன்னாடி ஏதோ தப்பு பண்ணிட்டார். இப்போ தான் இனிமே அந்த மாதிரி நடக்காதுன்னு உத்திரவாதம் கொடுக்கறாரே.”

“இந்த குழந்தை, அதை என்ன பண்ண.”

“அவங்க அவங்க பண்ணதுக்கு குழந்தை என்ன பண்ணும், அது மேல எல்லாம் நாம் எதையும் காட்டக் கூடாது” என்றார் ராஜேந்திரன்.

அந்த நேரம் பார்த்து சரியாக அம்மு அழ, மறுபடியும், பால் கலக்கி அரவிந்தே குடிக்க வைத்தான்.

பார்த்த அரவிந்தின் அம்மா, “ஏன்டா குழந்தை அழுதா உடனே பாலைக் கலக்கி, பாலைக் கலக்கி குடிக்க வச்சிடுவியா, அதுக்கு ஜீரணமாக வேண்டாம். என்னடா பண்ற” என்று அரவிந்திடம் சலித்தார். ஆனாலும் வந்து குழந்தையை கையில் வாங்கவில்லை. தூர இருந்தே தான் சொன்னார்.

வேறு என்ன செய்வது என்று தெரியாமல் அரவிந்த் குழந்தையை வைத்துக் கொண்டு சற்று தடுமாற…

“குழந்தைய வாங்கு கீர்த்தி” என்றார் அவளைப் பார்த்து ராஜேந்திரன்.

என்ன தன் தந்தை இப்படிச் சொல்கிறார் என்று கீர்த்தி அதிர்ந்து பார்க்க…

“நடந்ததை யாராலையும் மாத்த முடியாது, நடக்கப் போறதைப் பேசலாம். முதல்ல குழந்தையைப் பாரு” என்றார் ராஜேந்திரன் திரும்பவும்,

இந்த முறை சிதம்பரமும், ராணியும் கூட அவரை வியந்து பார்த்தனர். “என்னடா இது, வந்து பெரிய பிரச்சனையை கிளப்புவார்கள் என்று பார்த்தால், அரவிந்திற்கு சாதகமாகவே இவர் பேசுகிறாரே. நல்ல மாமனார், நல்ல மருமகன்” என்று மனதில் ஒரே மாதிரி இருவருக்கும் தோன்ற, சிதம்பரமும், ராணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

குழந்தை மறுபடியும் அழ, தன் தந்தை சொல்லை மதித்து, கீர்த்தி குழந்தையை வாங்கினாள். வாங்கி அதைச் சற்று அணைத்த மாதிரி பிடிக்க, குழந்தையின் அழுகை நின்றது.

இப்போது அது லேசாக உதடசைக்க, அது தன்னைப் பார்த்து சிரிக்கிறதோ என்று கீர்த்திக்கு தோன்றியது. அதன் அழகில் மறுபடியும் லயித்தாள்.

பிறகு தன் தந்தையைப் பார்த்து, “எப்படிப்பா இவ்வளவு சாதாரணமா பேசறீங்க… நீங்க இப்படி பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலைப்பா” என்றாள் அழுகையோடு.

“இப்போ இந்த விஷயத்தையே மறைச்சு, மாப்பிள்ளை தன்னை உத்தமனா காட்டிக்கிட்டு உன்னோட வாழ்ந்திருந்தா நீ என்னம்மா பண்ணியிருப்ப, குழந்தைய எங்கயாவது ஆசிரமத்துல விட்டுட்டு உன்னோட வாழ்ந்திருக்கலாமே மா, எதுக்காக அதைத் தூக்கிட்டு வந்து இத்தனை பிரச்சனையை சந்திக்கணும்” என்றார்.

அவர் சொல்வது அரவிந்தை நூறு சதவிகிதம் நல்லவனாகவே காட்டியது. என்ன இதற்கு பதில் சொல்வது என்று கீர்த்திக்கு தெரியவில்லை.

“அப்போ என்னை என்னப்பா செய்யச் சொல்றீங்க… இவரோட துரோகத்தை மறந்து, இவர் என்னை ஏமாத்தினதை மறந்து இவரோட வாழச் சொல்றீங்களா.”

“வாழ்ந்தா தப்பொண்ணுமில்லைன்றது என்னோட எண்ணம். இல்லை வாழமுடியாது, நான் உங்களோட வந்துடறேன்னு சொன்னாலும் எனக்கு சம்மதம்.”

இப்போது அதிர்வது அரவிந்தின் முறையாயிற்று, என்ன இவர் இப்படிப் பேசுகிறார் என்று அவரை அரவிந்த் பரிதாபமாகப் பார்க்க, அவர் மேலும் தொடர்ந்தார்.

“ஆனா, நீ என்னோட வந்தா, இவரை முழுமையா விட்டுடணும், விவாகரத்து வாங்கிடணும், இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு சம்மதம்னா வா” என்றார்.

இப்போது அதிர்வது கீர்த்தியின் முறையாயிற்று. என்ன விவாகரத்து, இன்னொரு கல்யாணமா, தன்னால முடியுமா என்று அதிர்ச்சிக்குள்ளானாள்.

 அவர் பேச்சிலேயே தன்னுடைய மகளை மடக்கி விட்டது. அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது. அரவிந்திற்கு இப்போது தான் மூச்சே சரியாக வந்தது. எங்கே கீர்த்தி தன்னைப் பிரிந்து சென்று விடுவாளோ என்று அச்சப்பட்டுக் கொண்டே இருந்தான். ஆனால் அவள் அதிர்ந்த முகம், அவள் அப்படி எல்லாம் செய்ய மாட்டாள் என்று அரவிந்திற்கு உணர்த்தியது.

அரவிந்திற்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. இருந்தாலும் அம்முவிற்காக இதை தான் செய்துதான் ஆக வேண்டும் என்று அமைதியாக இருந்தான்.

எல்லோரும் முடிவு கீர்த்தியின் கையில் என்பதுபோல, கீர்த்தியையே பார்ப்பது புரிந்தது.

“என்னால இவரோட வாழ முடியாதுப்பா, என்னை ஏமாத்தினவரோட எப்படிப்பா நான் வாழ்வேன். அதுக்காக இன்னொரு கல்யாணம் எல்லாம் நினைச்சுக்கூட பார்க்க முடியாதுப்பா” என்றாள் அழுகையுடன்.

“இருந்தா இங்கேயே இரும்மா, எங்களோட வரதுன்னா, கண்டிப்பா நீ மொத்தமா இவங்களை விட்டு வந்துடணும், இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கணும்” என்றார் மிகவும் கண்டிப்புடன் ராஜேந்திரன்.

என்ன செய்வது என்று அறியாமல், கீர்த்தி மௌனமாக கண்ணீர் விட, அதைப் பார்த்தும் பொறுக்க முடியாத தந்தை மனது, “ஒரு ரெண்டு நாள் நம்ம வீட்ல வந்து இரும்மா, பிறகு எதுன்னாலும் பேசிக்கலாம்.” என்றார் கீர்த்தியை சமாதானப்படுத்தும் பொருட்டு.

தன் சம்மந்தியிடமும் அதே சொன்னார். “ஒரு ரெண்டு நாள் கீர்த்தியை கூட்டிட்டுப் போறோம் சம்மந்தி. பொண்ணு மனசு கொஞ்சம் ஆறட்டும்” என்றார்.

“தாராளமா கூட்டிட்டுப் போங்க சம்மந்தி, என் பையன் பண்ணியிருக்கிற வேலைக்கு, நான் தலை நிமிர்ந்து நடக்க முடியுமான்னு தெரியலை.”

“என் பொண்ணுக்கு சொன்னதே தான் உங்களுக்கும், அவர் இதை மறைச்சிருந்தார்னா, நமக்குத் தெரியப்போகுதா இல்லை நான் காரணமேயில்லைன்னு சொன்னாலும் நம்பியிருக்கத்தான் போறோம். அவரே மன்னிச்சுடுங்க சொல்றாரு, இனிமே நடக்காதுன்னும் சொல்றாரு, ஒரு சந்தர்ப்பம் குடுங்க சம்மந்தி” என்று சொன்னார்.

ராஜேந்திரனுக்கு சற்று பயமாகக் கூட இருந்தது. நாளை என்றாவது இது தண்டபாணியின் பிள்ளை என்று தெரிய வரும்போது, சிதம்பரம் தன்னை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று.

எதுவாகினும் வரும்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது குழந்தை முக்கியம் என்று விட்டு விட்டார்.

எதுவும் எடுக்கவில்லை ஒன்றுமில்லை, “வாங்கப்பா போகலாம்” என்று அப்படியே கிளம்பினாள் கீர்த்தி;.

“குழந்தையை எடுக்காம கிளம்புறியேம்மா” என்றார் ராஜேந்திரன்.

கீர்த்தியும், இந்துமதியும் அவரை அதிர்ந்து பார்க்க… அரவிந்தும் அதிர்ந்து பார்த்தான்.

“என்னை விட்டுட்டு அம்மு இருக்க மாட்டா, மாமா…” என்றான் பதட்டத்தோடு.

“அதெல்லாம் இருப்பா விடுடா, அவ தூக்கிட்டு போனா போகட்டும், அவளோட துணையில்லாம நீ வளர்த்துருவியா” என்று ராணி ஒரு அதட்டல் போட… அனுப்புவதா, வேண்டாமா என்று தடுமாறினான் அரவிந்த்.

“தூக்கிக்கோ கீர்த்தி குழந்தையை” என்று மறுபடியும் ராஜேந்திரன் சொல்ல, கீழே வைத்த குழந்தையை மறுபடியும் தூக்கிக் கொண்டாள் கீர்த்தி.

“இருங்க அவளோட திங்க்ஸ், பால் பவுடர் எல்லாம்” என்று அதையெல்லாம் எடுத்துக் கொடுத்த அரவிந்த், அவளுக்கு பால் எப்படி கலக்க வேண்டும் என்று சொல்ல, வேண்டா வெறுப்பாக கேட்டாள் கீர்த்தி.

பின்பு குழந்தையைத் தூக்கிக் கொண்டு செல்ல, புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது ராணிக்கும், சிதம்பரத்திற்கும், அப்படியே அமர்ந்து விட்டனர். தூக்கம் வெகுவாகக் கண்களை சுழற்ற, அரவிந்தும் பிறகு தன் தாய் தந்தையிடம் ஒன்றும் பேசாமல், சென்று படுத்துக் கொண்டான்.

கீர்த்தி தன் தந்தை இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நினைக்கவேயில்லை. தன் அண்ணன் இறந்த பிகு அவர் உருக்குலைந்து விட்டார் என்று தெரியும். தண்டபாணி இறந்ததற்கு பிறகு அவர் அதிகமாகப் பேசியதே இன்று தான். அவர் மனம் நோகச் செய்ய அவளுக்கு இஷ்டமில்லை. அவரை எதிர்த்தும் அவளுக்கு எதுவும் செய்ய விருப்பமில்லை. இதனாலேயே அவர் சொல் கேட்டு நடந்தாள்.

திடீரென்று தான் அம்மா ஆகிவிட்டோமோ. அந்த உணர்வு தனக்கு இயற்கையாக வரவேண்டாமா என்றிருந்தது கீர்த்திக்கு. தன்னால் இந்தக் குழந்தையை தன் குழந்தையாக நினைக்க முடியுமா, வளர்க்க முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.

அரவிந்த், அவனைப் பற்றி இன்னும் அவளால் தப்பாக நினைக்க முடியவில்லை. எப்படி தன்னிடம் காதல் சொல்லிவிட்டு லண்டன் ஃப்ளைட் ஏறுகிறான். ஏறி இறங்கி ஒரு வாரத்திற்குள்ளேயேவா ஒரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பான்.

இப்படி கணக்குப் போட்டால் தான் அவன் சொல்லும் எட்டு மாதத்தில் பிறந்த கணக்கு சரி வருகிறது. இது ஃபுல் டெர்ம் பேபி என்றால், அவனுக்கு பிறந்திருக்க வாய்ப்பேயில்லை, இல்லையென்றால் அந்த நேரத்தில் அந்தப் பெண் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். எப்படி இது சாத்தியமாயிற்று என்று கணக்குப் போட்டு, கணக்குப் போட்டு மூளையைக் குழப்பிக் கொண்டாள்.

எது எப்படி இருந்தாலும் எங்கேயோ ஏதோ சரியில்லை என்று அவள் உள்ளுணர்வு கூறியது. தன் தந்தை எப்படி அவன் செய்கையை ஒத்துக் கொண்டு அதற்கு நியாயம் கற்பிக்கிறார் என்று அவளுக்குப் பிடிபடவேயில்லை.

சமர்த்துக் குழந்தையான இந்து (எ) அம்மு, லண்டனில் இருந்து இந்தியா வந்த பிறகு, அதன் சீதோஷ்ண நிலை மாறியதால் சற்று சிணுங்கிக் கொண்டே இருந்தாள்.

சில சமயம் கையில் வைத்திருந்தால் அழாமல் இருந்தாள், சில சமயம் கீழே படுக்க வைத்திருந்தால் அழாமல் இருந்தாள், எந்த நேரம் எப்படி இருப்பாள் என்று அனுமானிக்க முடியவில்லை. குழந்தையை கீர்த்தி பார்த்தே அரை நாள் தான் ஆகி இருந்தது.

கீர்த்தியை விட இந்துமதி தான் முகத்தை அதிகமாகத் தூக்கி வைத்திருந்தார். தன் கணவர் ராஜேந்திரனிடம் சண்டை வேறு போட்டார். “எப்படி நீங்க இந்த குழந்தையைத் தூக்கிட்டு வரச் சொல்றீங்க. எவளோ பெத்ததை என் பொண்ணுக்கு பார்த்துக்கணும்னு என்ன தலையெழுத்தா” என்று அவரிடம் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.

“என்ன பாவம் பண்ணினோமோ, அவ்ளோ பெரிய பையனைத் தூக்கிக் கொடுத்துட்டு நிக்கறோம். மறுபடியும் பாவம் எதுவும் பண்ண வேண்டாம்டி, எது எப்படி இருந்தாலும் சின்னக் குழந்தை அதை பழி சொல்லாதே” என்றவர் குழந்தையைத் தூக்கி கையில் வைத்தார். “பாருடி நம்ம தண்டு மாதிரியே கொஞ்சம் கொஞ்சம் இருக்காடி, பாருடி” என்று அவரை சமாதானப்படுத்த ஆரம்பித்தார்.

தண்டபாணி என்ற வார்த்தை சிறிது இந்துமதியை அசைத்தது. அதே சமயம் ஆக்ரோஷம் கொள்ளவும் வைத்தது. “அப்போ நான் பாவம் பண்ணியிருக்கேன், அதான் பையன் போயிட்டான்னு சொல்றீங்களா.”

“நான் அப்படிச் சொல்லுவனாடி, அப்படிச் சொல்லலடி, இப்போல்லாம், நோயும், சாவும் எதைக் கொண்டு வருதுன்னு யாராலயும் கணிக்க முடியாது. முன்னதான் பாவம் செஞ்சா அதாகும் இதாகும்னு சொல்வாங்க. இப்போல்லாம் என்ன பாவம் செஞ்சாலும் சரி, நல்லது செஞ்சாலும் சரி, வர்றதை யாராலையும் தடுக்க முடியாது. விதின்னு சொல்றதைத் தவிர வேற வார்த்தை என்கிட்ட கிடையாது” என்றார் உணர்ச்சி மயமாக.

“சின்னக் குழந்தை அதுகிட்ட நீ வேற்றுமை பாராட்டக் கூடாதுன்னு ஏதோ உணர்ச்சி வசப்பட்டு சொல்லிட்டேன். மனசுல வச்சுக்காதம்மா.”

அதற்குள் கீர்த்தி வந்தவள், “அம்மா அவ உடம்பு ஃபுல்லா கொசு கடிச்சி தடிப்பு தடிப்பா ஆகிடிச்சும்மா, அது வேற அழறா” என்று குழந்தையைத் தூக்கி வந்தாள்.

ராஜேந்திரனும், ராணியும் பார்க்க, உடம்பு தடிப்பு தடிப்பாக இருந்தது. குழந்தையின் வெண்மையான உடம்பில், சிகப்பு சிகப்பு புள்ளிகளாய் தெரிந்தது.

“அம்மா, டாக்டர் கிட்ட போவோமா” என்றாள் கீர்த்தி.

“இதுக்கெல்லாமா டாக்டர்கிட்ட போவாங்க, கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவிப் பார்க்கலாம்” என்று சொன்னார்.

சிறிது தேங்காய் எண்ணெய் தடவினர். நேரம் ஆக ஆக தடிப்பு அதிகம் தான் ஆகியது கம்மியாகவில்லை.

அவள் டாக்டரிடம் போகலாமா வேண்டாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது அரவிந்த் வந்தான்.

அவனைப் பார்த்தவுடனே முகத்தைத் திருப்பிக் கொண்டாள் கீர்த்தி. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டவனாக தெரியவில்லை அரவிந்த்.

அவன், “அம்மும்மா” என்று கூப்பிட்டுக் கொண்டே விரைந்து குழந்தை அருகில் வர… அப்படியே அவன் கையில் குழந்தையைக் கொடுத்து விட்டு இடத்தை விட்டு நகர்ந்தாள்.

குழந்தையைப் பார்த்தவன், “கீர்த்தி” என்று ஒரு கத்து கத்த, எல்லோரும் ஓடி வந்தனர். “என்ன இது” என்றான் குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியாக.

அவன் முகம் அவ்வளவு கோபத்தைக் காட்டியது. “அது கொசு கடிச்சதால ரேடிஸ்” என்றாள் திக்கி திணறி அவன் கோபத்தை பார்த்து பயந்து போனவளாக.

“என்ன கொசு கடிச்சதா, ஏன் எனக்கு உடனே போன் பண்ணலை” என்று கத்தினான்.

ராஜேந்திரன் தான் சமாதானப்படுத்தினார். “இல்லை மாப்பிள்ளை, டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகலாம்னு கீர்த்தி சொல்லிட்டு தான் இருந்தா, நாங்க தான் தேங்காய் எண்ணெய் தடவிப் பார்க்கலாம்னு பார்த்தோம்” என்றார்.

“என்ன மாமா நீங்க, சின்ன விஷயம்னாலும் கவனிக்கணும் பெருசா ஏதாவது வந்துட்டா, நான் வேற டூவீலர்ல வந்தேன். நீங்க ஒரு கால் டாக்ஸிய வரச் சொல்லுங்க, குழந்தைய ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகலாம்” என்றவன் உடனே நளினிக்கு அழைத்தான்.

“நளினி இங்கே நல்ல சில்ட்ரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் சொல்லு” என்றான். அவளுக்கு அதற்குள் விஷயம் தெரிந்துள்ளது போலும்…

“என்ன, ஏது” என்று கேட்காமல் விவரம் சொன்னாள்.

“நான் காலைல குடுத்த பேபி பேக்ல, அவ லண்டன் ஹாஸ்பிடல் கார்ட் இருக்கும் கீர்த்தி, எடுத்துக்கோ” என்றான் அரவிந்த்.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு, என்ன அதிகாரம் தூள் பறக்குது என்று கீர்த்திக்கு கத்த வேண்டும் போல ஆத்திரமாக வந்தாலும், குழந்தை அந்த ரேஷஸ்ஸால் சிரமப்படுவதை உணர்ந்து பதில் பேசாமல், அவன் சொன்னதை செய்து அவனுடன் ஹாஸ்பிடல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.

அங்கே ஹாஸ்பிடலில் பயங்கர கூட்டம், “இருக்கிற அப்பாயிண்மெண்ட்ஸ் எல்லாம் பார்த்த பிறகுதான் பார்ப்பார் டாக்டர்” என்று சொல்ல…

குழந்தையோ சிணுங்கிக் கொண்Nடு இருந்தாள். அவளை எப்படி அவ்வளவு நேரம் வைத்திருப்பது என்று தெரியாமல்,

“வேற டாக்டர்கிட்ட போகலாமா” என்றான் அரவிந்த் கீர்த்தியைப் பார்த்து…

“எல்லா “ஃபேமஸ் டாக்டர்ஸ்கிட்டயும் இவ்வளவு கூட்டம்தான் இருக்கும், பேசாம இருங்க… கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினா இவர் கிட்டயே பார்த்துக்கலாம்” என்றாள்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர காத்திருப்புக்குப் பிறகு, டாக்டரை பார்க்க முடிந்தது. டாக்டர் குழந்தை பற்றி கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அரவிந்தே பதில் சொன்னான்.

டாக்டர் அவனை அதிசயமாகப் பார்த்தார். “பொதுவா எல்லா கேள்விகளுக்கும் பெண்கள் தான் பதில் சொல்லுவாங்க. இங்கே நீங்க சொல்றீங்க பரவாயில்லை” என்றார்.

“இவ லண்டன்ல பொறந்தா டாக்டர். இப்போ தான் இந்தியா வந்தா, இங்க அவளுக்கு நாங்க என்னென்ன ப்ரிகாஷன் எடுக்கணும். என்ன மில்க் இங்கே குடுக்கலாம்” என்று விவரமாக எல்லாவற்றையும் டாக்டரிடம் கேட்டாள் கீர்த்தி.

டாக்டர், “அந்த ரேஷஸ் தானாக செட்டில் ஆகிடும்மா பயப்படத் தேவையில்லை” என்றார்.

பிறகு, எப்போது? என்ன வாக்சின் போட வேண்டும்” என்று கீர்த்தி கேட்க… “உங்களுக்குக் குடுத்த கார்ட்லயே இருக்குமே” என்றார் டாக்டர்.

Advertisement