Advertisement

17

அழகு தேவதையாக இருந்தால் குழந்தை, சற்று லிசாவை கொண்டு, சற்று தண்டபாணியை கொண்டு, அவள் அன்னையின் கலரோடு, தண்டபாணியை போல் கருகருவென்ற முடியோடு, ஒரு ஆங்கிலோ-இந்திய கலவையாக இருந்தாள் குழந்தை இந்து.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பாளோ லிசா என்று பயந்து கொண்டே இருந்தான். ஆனால் அவள் அங்கே இருந்த சிஸ்டர் சொன்ன விதத்தில் பவுடர் பாலே கலந்து கொடுத்தாள்.

எல்லாவற்றையும் கவனமாக பார்த்துக் கொண்டான் அரவிந்த். குழந்தையின் தந்தையாக அவன் அடையாளம் காட்டப்பட்டதால், அவனையும் வைத்து குழந்தையை எப்படி தூக்குவது, பிடிப்பது, எப்படி அதற்கு பால் கலந்து கொடுப்பது என்று செய்முறை விளக்கமாக சொல்லினர்.

தன் கவனத்தை அதிகம் குழந்தை மேல் வைக்காமல், எல்லாவற்றையும் லிசா அரவிந்திடமே விட விழைந்தாள், அது அவளுக்கு மிகவும் சிரமமாக இருந்தபோதிலும், கண்ணீரை வரவழைத்த போதும், தான் மிகவும் குழந்தையிடம் ஒட்டிக் கொண்டால், பிறகு பிரிவது சிரமமாக போய்விடும் என்றுணர்ந்து சற்று தள்ளியே நின்றாள்.

அதற்கு தகுந்த மாதிரி அரவிந்தும் குழந்தையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். குழந்தையை கையில் வைத்திருப்பது அவனுக்கு உலகத்தையே கையில் வைத்திருப்பது போன்ற சந்தோஷத்தை கொடுத்தது. ஹாஸ்பிடலில் இருந்து அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்தனர். குழந்தைக்கு பாஸ்போர்ட், விசா வாங்கும் பொறுப்பை ஹரிஷ{ம், லிசாவின் தாயாரும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

அரவிந்த் முழு நேரத்தையும் குழந்தையுடனே கழித்தான். அவனே அதற்கு மெதுவாக பால் புகட்டினான். அவனே அதற்கு டையபர் மாற்றினான். குழந்தையும் சமத்தாக அவன் கைகளுக்கு பழகிக் கொண்டது. அதிகம் அழுது சிரமப்படுத்தவில்லை சமத்தாக இருந்தது.

லிசா ஒரு நாளைக்கெல்லாம் சிறிது நேரமே குழந்தையை வைத்திருந்தாள். ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போல் மனதை குழந்தையிடம் அலைபாய விட வில்லை. குழந்தை அழுதால் அரவிந்திற்கு குரல் கொடுத்தாள்… “ அர்வி, பேபி அழுகுது பாரு” என்று… அவள் ஓடிச்சென்று தூக்க முயலவில்லை. அரவிந்த் தான் ஓடினான்.

லிசாவிற்கு மனது துடித்தாலும், அதிகம் வெளிக்காட்டவில்லை. எல்லாம் என் தண்டபாணிக்காக, அவன் பெற்றோருக்காக என்று நினைத்துக் கொண்டாள். அதிகமாக குழந்தை உறங்கும் போது அதை வந்து பார்த்துக் கொண்டிருப்பாள்.

லிசாவின் நிலைமை அரவிந்திற்கு புரிந்தாலும், எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான். அவள் இப்படி ஒரு சித்திரவதையை அனுபவிப்பதை விட, சீக்கிரம் குழந்தையை அவளிடம் இருந்து கொண்டு போவதே மேல் போலத் தோன்ற… பாஸ்போட்டிற்கு ஹரிஷிடம் அவசரப்படுத்தினான்.

ஹரிஷ{ம் அவனை புரிந்து கொண்ட மாதிரி, சீக்கிரம் வேலைகளை பார்த்தான்.

இதனிடையில் கீர்த்தியிடம் தொலைபேசியில் பேசினாலும் அதிகமாக பேசவில்லை. குழந்தையை அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்றே இருந்தது. கீர்த்தியும் அவன் வெகுதொலைவில் இருந்து பேசுவதால் இப்படி ஒன்றிரண்டு வார்த்தை மட்டும் பேசுகிறான் என்று நினைத்துக் கொள்வாள். அவளுக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை.

அவளுக்கு அரவிந்திடம் நிறைய பேசவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அரவிந்த் சீக்கிரம் வைத்துவிடுவான்.

புது இடம், பழக சற்று சிரமமாக இருந்தது கீர்த்திக்கு. வழக்கம் போல் ஷோ-ரூம் செல்வதே அவளுக்கு பெரிய ரிலீஃப். அரவிந்த் இருந்தால் அதிகம் தெரிவிக்காது. இப்போது அவனும் இல்லாததால் நிறைய தனிமையாய் உணர்ந்தாள்.

ஓரளவிற்கு மேல் என்ன பேசுவது என்று அவளது மாமியாருக்கும் தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை நன்றாக பார்த்துக் கொண்டனர் அவளை. அவளும் கலகலப்பாக இருக்க முயற்சித்தாள் தான். அரவிந்தின் ஞாபகம் அதிகமாக இருந்தது. தான் அவனை இந்தளவிற்கு விரும்புகிறோமா என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் மீதான காதலை சந்தோஷமாக அனுபவித்தாள். இங்கே அவள் அரவிந்தை பற்றியே நினைத்துக் கொண்டிருக்க…

அரவிந்திற்கு யாரைப் பற்றியும் நினைக்க நேரமேயில்லை… அவன் அவளின் மகளோடு அவ்வளவு பிஸியாக இருந்தான். அவனுக்கு சரியான தூக்கம் என்பதே இல்லை. அவனின் மகள் சீக்கிரம் சீக்கிரம் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொள்வாள்.

அப்போது தான் உறங்கியிருப்பான் எழுந்து சிணுங்குவாள், எப்படி இந்தப் பெண்கள் எல்லாம் குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்கிறார்களோ என்று வியப்பதே அரவிந்தின் வேலையாய் போயிற்று.

யாரிடமும் உதவி கேட்கவும் மனம் ஒப்பவில்லை. அவனுக்கு பயம். ஒரு சமயம் லிசா குழந்தையை கவனிக்க ஆரம்பித்த பிறகு, குழந்தையை கொடுக்க மறுத்துவிட்டால்… அந்த பயத்திலேயே, குழந்தைக்கான எல்லா வேலையையும் அவனே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான்.

குழந்தை பிறந்த பதினான்காவது நாள், குழந்தைக்கு பாஸ்போர்ட் கிடைத்தது. பின்பு விசாவிற்கு அப்ளை செய்ய… அதுவும் அதிர்ஷ்டவசமாக நான்கைந்து நாட்களிலேயே கிடைத்தது.

பிறந்து இருபதே நாட்களான குழந்தையை தூக்கிக் கொண்டு பறந்து இந்தியாவிற்கு செல்ல ஆயத்தமானான் அரவிந்த். இவ்வளவு நாட்கள் இல்லாமல் மனது லிசாவிற்கு மிகவும் இறுக்கிப் பிடித்தது. தான் எதுவும் தவறு செய்கிறோமோ.

தன் குழந்தையை அடுத்தவரிடம் கொடுத்து என்ற எண்ணம் வேறு அவளை ஆட்டுவிக்க… அழுகையிலேயே கரைந்தாள்.

அரவிந்திற்கு வேறு இன்னும் பயமாகிப் போயிற்று… ஒரு வேளை குழந்தையை கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டால்… அப்படி எல்லாம் எதுவும் சொல்லவில்லை லிசா…

லிசாவும், ஹரிஷ{ம். லிசாவின் அம்மாவும் ஏர்போர்ட்டிற்கே வந்து விடை கொடுத்தனர். ஹரிஷிடம் வந்த அரவிந்த் “டேக் கேர் ஆஃப் லிசா” என்றான்.

“அவ தப்பு பண்ணிட்டேன்னு என்னைக்கும் ஃபீல் பண்ணாத அளவுக்கு குழந்தையை பார்த்துக்கோ அரவிந்த்” என்றான் ஹரிஷ்.

தோளில் ஒரு பேகை மாட்டிக்கொண்டு, குழந்தையை தூக்கிக்கொண்டு கிளம்பிட்டான் அரவிந்த். அவனோடு தண்டபாணியின் பொருட்கள் அனைத்தும் பார்சல் செய்யப்பட்டு இருந்தது. ஹரிஷ் லிசாவிற்கு தண்டபாணியை ஞாபகப்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் பேக் செய்து அரவிந்துடன் இந்தியாவிற்கு அனுப்பி கொண்டிருந்தான். லிசாவும் பெரிதாக தடை எதுவும் சொல்லவில்லை.

உயிருள்ள குழந்தையையே பிரிகிறாள், இன்னும் உயிரில்லாத பொருட்கள் எம்மாத்திரம் என்று விட்டு விட்டாள்.

ஃப்ளைட் ஏறும் வரை லிசா எந்தப் பிரச்சனையும் செய்து விடக் கூடாதே என்ற கவலையில் இருந்த அரவிந்த், ஃப்ளைட் ஏறிய பிறகு வீட்டினரை எப்படி சமாளிக்கப் போகிறோம், கீர்த்தியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று இருந்தது.

தண்டபாணியின் குழந்தை என்று சொன்னால் சற்று பிரச்சனைகள் மட்டுப்படும் தான். ஆனால் சொன்னால் அவன் பெற்றோர் குழந்தையை அவனிடம் வைத்திருக்க விடமாட்டார்கள், அவனை வளர்க்க விடமாட்டார்கள். அது அவன் குழந்தை என்ற பட்சத்தில் தான் அவனை வளர்க்க விடுவார்கள்.

இனி அம்முவை எக்காரணம் கொண்டும் பிரிய முடியாது என்றே அரவிந்திற்கு தோன்றியது. குழந்தை இந்துவை அவன் அம்மு என்றே அழைத்தான். ஏனோ அவன் பெற்றோரை பார்த்த அரவிந்த், குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற நினைத்த அரவிந்த், கீர்த்தியை – அவள் எப்படி நினைப்பாள், உணருவாள் என்பதை பற்றி அதிகம் யோசிக்க மறந்து விட்டான். அது தண்டபாணியின் குழந்தை என்பதால் அதிக சலசலப்பு இராது என்பதே அவன் எண்ணம். ஆனால் அவன் தான் அதை சொல்ல விழையப் போவது இல்லையே, பிறகெப்படி அவள் சமாதானமாவாள் என்பதை மறந்தான்.

அம்முவும் சமர்த்தாக ஃப்ளைட்டில் அதிகமாக அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் உறங்கிக் கொண்டே வந்தாள். இரண்டு முறை பாலை கலக்கி குடிக்க வைத்தான், ஏர்ஹேஸ்டஸ்ஸின் உதவியோடு.

அவன் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பாங்கை, ஃப்ளைட்டில் இருந்த முக்கால்வாசி பேர் வியந்து பார்த்தனர். சிறு குழந்தையை அவன் வைத்திருப்பதை பார்த்து உதவிக்கு கூட இரண்டு மூன்று ஃப்ளைட்டில் இருந்த இந்தியப் பெண்கள் வர, மறுத்துவிட்டான்.

தனியாளாகவே அந்த பதிமூன்று மணிநேர பிரயாணத்தையும் சமாளித்தான். அவன் வரப்போவதை தண்டபாணியின் தந்தையிடம் தெரிவித்து யாரிடமும் சொல்லாமல் வருமாறு மிகவும் வேண்டியும் கூறியிருந்தான், கண்டிப்புடனும் கூறியிருந்தான்.

ராஜேந்திரனுக்கு என்ன ஏது என்று தெரியாவிட்டாலும், புரியாவிட்டாலும், இனி தனக்கு மகன் ஸ்தானத்தில் இருக்க போகிற மருமகனின் சொல் தட்டாமல், மனைவியிடம் கூட கூறாமல் வ்நதிருந்தார்.

ஃப்ளைட் வந்து நின்று கடைசி ஆளாக வந்தான் அரவிந்த், ராஜேந்திரன் என்னவோ ஏதோவென்று காத்திருக்க… கைகளில் பூக்குவியலாய் குழந்தையுடன் வரும் அரவிந்தை பார்த்து அதிர்ந்தார்.

அவன் வந்ததும் அனிச்சை செயலாய் கை நீண்டது. கையில் வாங்கிய பிறகே, “யார் குழந்தை மாப்பிள்ளை இது” என்றார்.

“என் குழந்தை மாமா.”

“என்ன” என்று அதிர்ந்தார், அவனை நம்பாத பார்வை பார்த்தார்.

“என் குழந்தைன்ற வார்த்தையை தவிர என் வாயில இருந்து, நான் சாகற வரைக்கும் வேற வார்த்தை வராது மாமா” என்றான்.

அவன் சொன்ன விதமே, இது என் குழந்தை இல்லை, ஆனால் என் குழந்தை என்று தான் சொல்வேன் என்று சொல்லாமல் சொல்லியது.

தண்டபாணியின் உடமைகளை எடுத்து வரப் போகிறேன் என்று அவரிடம் மட்டும் ஏற்கனவே அரவிந்த் சொல்லியிருந்ததால், அவருக்கு இது தண்டபாணியின் குழந்தையாக இருக்குமோ, என்று மெதுவாக தோன்றியது.

மெதுவாக அவர் கைகள் நடுங்க ஆரம்பிக்க… குழந்தையை அரவிந்திடமே கொடுத்தவர், அங்கே இருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்துவிட்டார்.

அமர்ந்தவர் மறுபடியும், “கொடுப்பா, கொடு” என்று உணர்ச்சி வசப்பட்டு கேட்டு, அக்குழந்தையை வாங்கி அதன் ஜாடையை ஆராய, அவருக்கு அவ்வளவாக ஜாடை எல்லாம் பார்க்க தெரியவில்லை. அதுவுமில்லாமல் தண்டபாணியின் ஜாடை சிறிது இருந்தாலும், லிசாவின் பதிப்பே அதிகமாக இருந்தது. அதனால் லிசாவையும் பார்த்திருந்தால் ஒரு வேளை கண்டு பிடித்திருக்கலாம். இப்போது லிசாவை பார்க்காததால் எதுவும் சரிவர அவருக்கு தெரியவில்லை.

முயன்று அரவிந்திடம், “மாப்பிள்ளை! இது தண்டபாணியோட குழந்தையா” என்றார்.

மாமனார் புத்திசாலிதான் கண்டுபிடித்து விட்டாரே என்று இருந்தது. “ஆமாம்” என்பது போல தலையை மட்டும் ஆட்டினான். வேறு எதுவும் பேசவில்லை.

அவர்கள் பேசுவதற்கு எந்த தடையுமில்லாமல், அம்மு நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

அரவிந்த் தலையசைத்தும், ராஜேந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. “நம்ம தண்டபாணியோட குழந்தையா” என்றார் மறுபடியும்.

“ஒரு தடைவ உங்க வாயால சொன்னது போதும் மாமா, இனி எப்பவும் சொல்லாதீங்க” என்றான் அரவிந்த்.

“ஏன்னா இந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்லப்போறது இல்லை. உங்ககிட்ட மட்டும் ஏன் சொல்றேன்னா… நீங்க தண்டபாணியோட இழப்புல இடிஞ்சு போயிருக்கீங்க… நீங்களும் தண்டபாணியும் ரொம்ப நெருக்கம்னு தெரியும், அதனால தான் அதுமட்டும் இல்லாம… நான் இந்தக் குழந்தையோட அம்மாகிட்ட உங்ககிட்ட சேர்ப்பிக்கறேன்னு சொல்லிதான் வாங்கிட்டு வந்திருக்கேன். இது உங்க குடும்ப வாரிசு, உங்க கிட்ட கட்டாயம் குடுக்கணும் அது இதுன்னு சொல்லி குழந்தையை கொண்டு வந்துட்டேன். அதனால நீங்க நான் இப்போ அவளுக்கு பேசப்போறேன், அவகிட்ட குழந்தையை பார்த்துட்டேன்னு சொல்லணும்” என்றான்.

அவன் பேகில் இருந்த லேப்பை எடுத்து, அங்கேயே ஸ்கைப்பில், லிசாவுடன் பேசினான். தண்டபாணியின் தந்தையை லிசாவிற்கு தெரியும். முன்பும் தண்டபாணி ஸ்கைப்பில் பேசும்போது மறைந்திருந்து பார்த்திருக்கிறாள்.

குழந்தையுடன் அவர் கேமரா முன் வந்த போது, லிசா அவரைப் பார்த்து அதிர்ந்தாள். கம்பீரமாக சிரித்த முகத்தோடு அவரைப் பார்த்திருக்கிறாள். இப்போது இளைத்து, கருத்து, பொலிவில்லாத முகத்தோடு பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.

லிசாவை ராஜேந்திரன் மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தார். இவ்வளவு அழகான பெண், இவனோடு வாழ நம் தண்டபாணிக்கு கொடுத்து வைக்கவில்லையே என்றிருந்தது.

இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சிறிது நேரம் பார்த்தவர்கள், பின்பு, “ரொம்ப நன்றிம்மா, எங்க குடும்ப வாரிசை எங்ககிட்ட கொடுத்ததுக்கு” என்றார் கண்களில் நீர் தழும்ப…

அமைதியாக லிசாவும் கண்ணீரோடு அவரையே பார்த்திருந்தாள், பின்பு “தண்டுவோட குழந்தை அங்கிள் அது, தண்டுவோட ஃபேமிலிகிட்டயே சேர்ந்துடுச்சு.”

“இருந்தாலும் என்னைவிட உனக்கு தான்மா இவள்மேல உரிமை அதிகம், இருந்தாலும் இவளை விட்டுக்கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றிம்மா” என்றார் மறுபடியும்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே குழந்தை சிணுங்க, “ஓ.கே. லிசா, நாம அப்புறம் பேசலாம்” என்று காலை கட் செய்தவன், குழந்தையை அவசரமாக கவனித்தான்.

மளமளவென்று பாலை கலக்கி அவன் பால் பாட்டில் மூலம், குழந்தைக்கு கொடுக்கும் பாங்கை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன். கடவுள் தனக்கு அரவிந்தை மருமகனாக கொடுக்கவில்லை, இன்னொரு மகனாகத்தான் கொடுத்திருக்கிறார் என்று உணர்ந்து கொண்டார்.

குழந்தையை லிசாவிடம் இருந்து தங்களுக்காக கேட்டு வாங்கி வருவது என்பது சாதாரண விஷயமில்லை என்று உணர்ந்தே இருந்தார். தாய் தன் குழந்தையை கொடுப்பது, அதுவும் மனமறிந்து கொடுப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அதை தங்களுக்காக நடத்திக் காட்டியிருக்கிறான் அரவிந்த்.

கண்கள் பனிக்க தன்னை பார்த்துக் கொண்டிருந்தவரிடம், சீரியஸாக பேச ஆரம்பித்தான் அரவிந்த்.

“இந்த விஷயம் நம்ம குடும்பத்தையோ, இல்லை இங்க இந்தியாவிலோ, நம்மளைத் தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது மாமா. கண்டிப்பா தெரியக்கூடாது. அத்தைக்கோ கீர்த்திக்கோ கூட கண்டிப்பா தெரியக்கூடாது” என்றான் மறுபடியும்.

“ஏன் மாப்பிள்ள, அவங்களுக்கு தெரிஞ்சா என்ன?”

“அவங்களுக்கு தெரிஞ்சா ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில என்னை பெத்தவங்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கு. அவங்க அது தண்டபாணியோட குழந்தையா இருந்தாலும் நான் வளர்க்கறத விரும்பமாட்டாங்க. அம்மு என் குழந்தையா தான் வளரணும் மாமா. அப்பா இல்லாத குழந்தையா அது வளர்றத நான் விரும்பலை. அது என் தண்டுவோட குழந்தை. எனக்கும் தண்டபாணிக்கும் நிறைய வருஷ பழக்கம் இல்லைன்னாலும் இருந்த கொஞ்ச வருஷத்துல நாங்க ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் இன்றியமையாதவங்க.”

“அம்மு என் குழந்தை மாமா, அதை கீர்த்திக்காக கூட நான் மாத்த விரும்பலை.”

“ஆனா கீர்த்தியை எப்படி சமாளிப்பீங்க மாப்பிள்ள.”

“கொஞ்சம் கஷ்டம் தான். அவ அந்த வீட்லயே இருந்தா கூட போதும், சமாதானப்படுத்திடுவேன். ஆனா என்னை விட்டு பிரிஞ்சு போய்டுவாளோ என்ற பயம்தான் எனக்கு.”

“உண்மைய சொல்லி எங்க அப்பா அதெல்லாம் முடியாது, நீ குழந்தைய வளர்க்கக்கூடாது போன்னு சொல்லிட்டா அதுவும் பிரச்சனை. இனி நான் புதுசா வேலைக்கு போய் எண்ணி எண்ணி செலவு பண்ணல்லாம் முடியாது. எனக்கு எங்கப்பாவோட தொழிலும் வேணும்” என்றான் தீர்மானமாக.

அவன் பலதையும் எண்ணிப் பார்த்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறான் என்று ராஜேந்திரன் புரிந்து கொண்டார். இப்போதைக்கு அவன் போக்கிலேயே போவோம் என்று முடிவு செய்தவர், தண்டபாணியின் வாரிசாக ஒன்று வந்ததே என்று சந்தோஷமாக இருந்தார்.

பின்பு தண்டபாணியின் பொருட்களை எல்லாம், அவரிடம் கொடுத்து விட்டவன், குழந்தையை தூக்கிக் கொண்டு தன் வீட்டிற்கு சென்றான்.

காலை ஒன்பது மணி எப்படியும் இன்னும் அப்பாவும், கீர்த்தியும் கிளம்பி இருக்க மாட்டார்கள் என்று தெரியும்.

வாட்ச்மேன் கேட்டை திறந்து விட, சிறிது தூரம் அந்தக் குழந்தையை தூக்கிக்கொண்டு நடப்பதே சிரமமாக இருந்தது. கால்கள் பின்னியது. என்ன வந்தாலும் பார்த்து விடலாம் இது என் குழந்தை என்று மனதை திடப்படுத்திக் கொண்டான்.

யாரும் வெளியில் காணவில்லை. உள்ளே நுழைந்து ஹாலில் உள்ள சோபாவில் குழந்தையை படுக்க வைப்பதற்கும், அவன் அம்மா ஹாலிற்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

அரவிந்த் பார்த்தவர், “அரவிந்த் எப்போடா வந்த” என்று ஏறக்குறைய சந்தோஷத்தில் கத்தினார்.

அவர் கத்திய கத்தலில் அம்மு என்னவோ ஏதோவென்று பயந்து அழ ஆரம்பித்தது. குழந்தையின் அழுகையை பார்த்த பிறகுதான், “யாருதுடா குழந்தை” என்று வேகமாக குழந்தையின் அருகில் வந்தார்.

அரவிந்த் ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். “யாருதுடா சொல்லு” என்று மறுபடியும் ஒரு அதட்டல் போட்டார்.

அதற்குள் இந்த அமளி துமளி சத்தத்தை கேட்டு சிதம்பரமும், கீர்த்தியும் வந்தனர். அதற்குள் குழந்தையின் அழுகை இன்னும் அதிகமாகியது.

வெளியில் வந்த கீர்த்தி, ஹாலில் ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதை பார்த்தாள். பக்கத்தில் அரவிந்த் நின்று கொண்டிருப்பதையும் ராணி அவனிடம் கேள்வி கேட்டுக்கொண்டு நிற்பதையும் பார்த்தவள், குழந்தையின் அருகில் சென்றாள்.

அது இரண்டு கைகளையும், கால்களையும் விரித்து, வீரிட்டு அழுது கொண்டிருந்தது. பொறுக்க முடியாமல், குழந்தையை கையில் பக்குவமாக எடுத்து அணைவாக பிடித்தாள், கீர்த்தி. குழந்தையின் அழுகை சற்று மட்டுப் பட்டது.

அழுகை சற்று குறைந்தவுடன், கீர்த்தியும், “யார் குழந்தைங்க இது” என்றாள் அரவிந்தை நோக்கி…

அரவிந்த், “என் குழந்தை இது” என்றான்.

புன்னகைத்தாள் கீர்த்தி, “சும்மா விளையாண்டு அத்தையை டென்ஷன் பண்ணாதீங்க, யார் குழந்தை இது” என்றாள்.

சிதம்பரமும், “டேய் அரவிந்த்! எதுல எதுல விளையாடறதுன்னு உனக்கு விவஸ்தையேயில்லை. யார் குழந்தைடா இது” என்றார்.

எல்லோரும் கேள்வி கேட்க, ராணி அவனை சந்தேகமாக பார்த்தார். அதற்குள் குழந்தையின் அழகில் லயித்திருந்தாள் கீர்த்தி.

“யார் குழந்தைங்க இது ரொம்ப அழகா இருக்கு, இங்கிலிஷ் பேபி மாதிரி இருக்கு…”

“அம்மா இங்கிலிஷ், அப்பா இந்தியன்” என்று சொன்ன அரவிந்த் குழந்தையின் பாஸ்போர்ட்டையும், பெர்த் சர்ட்டிபிகேட்டையும் எடுத்து சிதம்பரத்திடம் கொடுத்தான்.

அதில் தாய் என்ற இடத்தில் லிசா என்றிருந்தது. தந்தை என்ற இடத்தில் அரவிந்த் என்று இருந்தது. அவன் விளையாடவில்லை சீரியஸாகதான் சொல்கிறான் என்று அப்போது தான் சிதம்பரத்திற்கு உரைத்தது. அப்படியே அமர்ந்து விட்டார்.

குழந்தையை மறுபடியும் சோபாவில் கிடத்திய கீர்த்தி வேகமாக வந்து பர்த் சர்ட்டிபிகேட்டையும், பாஸ்போர்ட்டையும் வாங்கிப் பார்க்க… அதிர்ந்தாள்.

அரவிந்தை பார்த்து, “இல்லை நான் இதை நம்ப மாட்டேன்” என்றாள். அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே குழந்தை அழ, அரவிந்த் அதற்கு பாலை பக்குவமாக கலக்கி கொடுக்க ஆரம்பித்தான். அதை அதிர்ச்சியோடு மொத்த குடும்பமும் பார்த்திருந்தது.

Advertisement