Advertisement

15

கீர்த்தி அவன் பார்வையிலேயே சற்று திருப்தியாகி இருந்ததால், மேலும் எதுவும் கேட்கவில்லை. நடக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் விமரிசையாக நடந்தன.

அரவிந்திற்கு உடனே லண்டன் போக வேண்டும் போல இருந்தது. கல்யாணம் முடிந்தவுடன் அடுத்த நாளே டிக்கெட் இருக்குமா என்று பாருங்கள் என்று ட்ராவல் ஏஜன்சிக்கு போன் செய்தான். அது எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை. உடனே டிக்கெட் வேண்டும் என்றான்.

இரவு விசேஷம் முடிந்து உறங்க போகும் மறுபடியும் ஹரிஷ் போன் செய்தான், லிசாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது, தாயும் சேயும் நலம் என்று.

அரவிந்திற்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ‘டேய் பாணி, நீ அப்பாவாகிட்டடா’ என்று மனதிற்குள்ளேயே நண்பனிடம் பேசினான். வேறு யாரிடமும் பகிர முடியவில்லை என்றாலும் அவன் முகத்தில் இருந்த டென்ஷன் வடிந்து கல்யாணக்களை வந்து விட்டது.

மறுநாள் காலை அதனால் திருமண சடங்குகளில் உற்சாகமாக கலந்து கொண்டான். அவன் முகம் சந்தோஷமாக இருப்பதை பார்த்து கீர்த்தியின் முகமும் மலர்ந்து இருந்தது.

இவ்வளவு நாட்கள் இருந்த இறுக்கம் மறைந்து சந்தோஷமான மணமகனாகவே காட்சியளித்து, கீர்த்தியின் அழகுக் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான்.

பிறகு வந்த விளையாட்டுகளிலும் சந்தோஷமாகவே கலந்து கொண்டான். அவனுடைய உற்சாகம் கீர்த்தியை தொற்றினாலும், அவள் விளையாட்டுகளில் ஜெயிக்க ஆர்வம் காட்டவில்லை. அவனையே ஜெயிக்க வைத்தாள்.

“ஏன்” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவனிடம் பதிலுக்கு சிரிப்பையே உதிர்த்தாள். அதில் ஒரு நிறைவு தெரிந்தது.

வீட்டிற்கு வந்தவுடனேயே டிக்கெட் கன்பர்ம் ஆன நியூஸ் வர… அவன் அப்பாவிடம், “நாளைக்கு லண்டன் போறேன் அப்பா” என்றான்.

அவன் தந்தை அதிர்ச்சியாக அவனை பார்த்தார். “என்னடா சொல்ற இன்னைக்கு தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு, நாளைக்கு லண்டன் போறன்னு சொல்ற, ஒரு வேளை கீர்த்தியை கூட்டிட்டு ஹனிமூன் ஏதாவது போறயா.”

“இல்லைப்பா நான் மட்டும் தான் போறேன்.”

“என்னடா அவசியம் நீ லண்டன் போறதுக்கு.”

“ஒரு பிஸினெஸ் டீலிங் அப்பா, முடிஞ்சபிறகு விவரம் சொல்றேன்.”

“என்னடா, எனக்கு தெரியாம என்ன பிஸினெஸ் டீலிங் உனக்கு விவரம் பத்தாது. என்ன ஏதுன்னு என்கிட்ட சொல்லுடா, எதையாவது இழுத்துவிட்டுக்காத.”

“சொல்ற மாதிரி இருந்தா, சொல்லமாட்டேனா அப்பா, இது முடிஞ்சா தான் சொல்ல முடியும்.”

“நீ என்ன இழுத்து வைக்கப்போறியோ தெரியலை, எனக்கு பயமாயிருக்கு.”

“நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்லை.”

“மருமக கிட்ட சொல்லிட்டியா, அவ சரின்னு சொல்லிட்டாளா.”

“உங்க கிட்ட தான் முதல்ல சொல்றேன்.”

“ஏன்டா, இன்னைக்கு கல்யாணமான பொண்ணை நாளைக்கு விட்டுட்டு போறேன்னு சொல்ற, உனக்கு நல்லாயிருக்கா, அவங்கப்பாம்மா கேட்டா என்னடா சொல்வோம்.”

இவர்களின் பேச்சை எல்லோரும் அதிர்ச்சியோடு பார்த்திருந்தனர். நளினி, அவள் கணவர், கீர்த்தி, அரவந்தின் அம்மா என்று எல்லோரும் பார்த்திருந்தனர்.

“நான் அவங்ககிட்ட சொல்லாமயா லண்டன் போவேன் எல்லாம் நான் சொல்லிக்கறேன்.”

“நீ போன தடைவ லண்டன் போயிட்டு வந்ததுல இருந்து ஒரு மார்க்கமாத்தான் இருக்க. இன்னும் இந்த தடைவ லண்டன் போயிட்டு என்ன கொண்டு வரப்போறியோ.”

எல்லாவற்றையும் கீர்த்தி ஒரு அதிர்ச்சியோடு கேட்டிருந்தாள்.

“என்ன லண்டன் போகிறானா எதற்கு. என்ன பிஸினெஸ் டீலிங். ஒன்றும் புரியவில்லையே. அவன் தந்தை சொன்ன மாதிரி இவன் லண்டன் சென்று வந்ததில் இருந்து சரியாக ஒன்றும் இல்லையே.”

மனம் எதை எதையோ நினைத்தது கீர்த்திக்கு. ஒரு தடைவ லண்டனில் நாங்கள் தண்டபாணியை இழந்தது பத்தாதா. மீண்டும் மீண்டும் இவன் வேறு ஏன் போக வேண்டும் என்று சொல்கிறான். அதுவும் திருமணம் முடிந்த அடுத்த நாளே பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்.

இவர்கள் பேசுவதையே, மனதில் இருந்த இந்த எண்ண ஓட்டங்களோடு பார்த்திருக்க… அரவிந்திடம் பேசிக் கொண்டிருந்த சிதம்பரம் திரும்பி கீர்த்தியை பார்த்தார். அவள் முகம் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.

அரவிந்திடம், “அவ முகமே சரியில்லை, நீ முதல்ல கீர்த்தியை சமாதானப்படுத்து போ” என்று அனுப்பினார். பின்னர் வீட்டில் இருந்தவர்களிடம் எல்லாம், “இந்தப் பையன் ஏன்தான் இப்படி பண்றானோ தெரியலையே. என்னவோ பண்ணிட்டு வந்திருக்கான்டி லண்டன்ல. அதுதான் இவ்வளவு அவசரமா போறான். என்ன பண்ணி வச்சிருக்கானோ தெரியலையே” என்று புலம்பினார்.

எல்லோரையும் பதட்டம் தொற்றியது. “இன்று கல்யாணமாகி, நாளையே தனியாக லண்டன் போகிறானா” என்று இருந்தது.

அரவிந்த் அவனின் அறைக்கு கீர்த்தியை அழைத்து உள்ளே வந்தவன், “சாரி கீர்த்தி, முன்னமே சொல்ல முடியலைன்னு இல்லை. திடீர்னு நேத்துதான் முடிவு பண்ணினேன். அதான் சொல்ல முடியலை.”

“எதுக்கு திடீர்னு இப்போ லண்டன் போறீங்க… நாங்க லண்டன்ல ஒருத்தனை இழந்தது பத்தாதா, நீங்க வேற ஏன் அங்கேயே போறீங்க.”

“நான் திரும்ப வரும்போது நீயே தெரிஞ்சுக்கவ கீர்த்தி.”

“என்ன ஏதாவது பிரச்சனையா. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க, பார்த்துக்கலாம்.”

“ஒண்ணுமில்லை கீர்த்தி, எதுவா இருந்தாலும் உனக்கே தெரிஞ்சிடும். நான் உன்கிட்ட சொல்லாம, வேற யார்கிட்ட சொல்லப்போறேன், சொல்லு” என்றான் சமாதானமாக…

“நீங்க எதுவும் என்கிட்ட மறைக்கலையே…”

“நான் தான் எதுவா இருந்தாலும் உனக்கு தெரிஞ்சிடும்ன்னு சொல்றேன் இல்லையா” என்றான் மறுபடியும்.

அவன் பதில் புரியாதவளாக அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள்.

“தெரிஞ்சிடும் தெரிஞ்சிடும்னா அப்போ தெரியற மாதிரி ஏதாவது இருக்கா.”

“இந்த மாதிரி வார்த்தை விளையாட்டெல்லாம் எனக்கு வராது கீர்த்தி, விட்டுடு. இப்போதான் நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு. வாழ்க்கை பூராவும் நாம பேசத்தான் போறோம். இப்போ வேற ஏதாவது பேசுவோமே.”

“என்ன” என்பது போல அவள் பார்க்க… “ஏதாவது பேசு கீர்த்தி.”

“எனக்கு ஒரு மாதிரி இருக்கு. ஐ திங்க் ஐ அம் டையர்ட். நான் கொஞ்சம் தூங்கட்டா” என்று பேச்சை ஒத்திப் போட்டாள்.

“ஓ.கே. நீ தூங்கு” என்று அவள் தூங்குவதற்கு வசதி செய்து கொடுத்து வெளியே வந்து, அவன் அப்பாவின் அருகில் அமர்ந்து டி.வி பார்க்க துவங்கினான்.

“என்னடா சொல்றா கீர்த்தி நீ ஊருக்கு போறதுக்கு.”

“யார் என்ன சொன்னாலும் நான் போயே ஆகணும்பா எதுக்குன்னு கூடிய சீக்கிரமே தெரிஞ்சுக்குவீங்க.” என்றான் பீடிகையோடு.

“என்னவோ போடா, என்னை டென்ஷன் பண்ற நீ, பார்க்கலாம், என்ன செய்யறன்னு” என்று அந்த இடத்தை விட்டு அவர் அகன்றார்.

அவர் போவதையே அரவிந்த் பார்த்திருந்தான்.

பின்பு குளித்து முடித்து, கோவிலுக்கு சென்று வந்து, இருவரும் தனிமையில் விடப்பட… இருவருக்குமே பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.

கீர்த்தி என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம் என்று அரவிந்த் காத்திருக்க… அரவிந்த் என்ன சொல்கிறான் பார்ப்போம் என்று கீர்த்தி காத்திருந்தாள். இருவரும் சற்று நேரம் மௌனத்தில் கழிக்க… “பால் குடுக்க சொன்னாங்க” என்று ஞாபகம் வந்தவளாக பாலை எடுத்து நீட்டினாள்.

கையில் வாங்கியவன், “உனக்கு” என்றான்.

“இது தான் குடுத்து விட்டாங்க” என்று அவன் கையில் இருந்த சொம்பை காட்ட…

“நான் குடிச்சிட்டு குடுத்தா குடிப்பியா” என்றான் அரவிந்த்.

இது என்ன அசட்டுத்தனமாக கேள்வி என்பது போல அவள் அவனை பார்க்க…

அவன் ஒருவேளை அவள் குடிக்க மாட்டாளோ அதுதான் அப்படி பார்க்கிறாளோ என்று நினைத்தவன்… “நீ குடிச்சிட்டு குடேன் நான் குடிக்கிறேன்” என்றான் புத்திசாலித்தனமாக கூறுவதாக நினைத்து…

“நான் நீங்க குடிச்சா குடிக்க மாட்டேன்னு சொன்னனா இல்லை சொன்னனா, குடிச்சிட்டு குடுங்க” என்றாள் உரிமையோடு.

“அப்புறம் நீ குடிச்சதை நான் எப்படி குடிக்கறது” என்றான் லேசாக கண்ணடித்து.

அவனை பார்த்து வெட்கியவள், “அதெல்லாம் குடுப்போம், நீங்க குடிங்க” என்றாள்.

பாதி குடித்து கொடுத்தான், அவன் கொடுத்ததில் பாதி குடித்து, மறுபடியும் அவன் புறமே நீட்டினாள்.

“ஓ இதுதான் டெக்னிக்கா, எனக்கு தெரியாம போச்சே” என்று அவன் குரல் பரிதாபப்பட, முகம் சிரித்தது.

அவளுக்கும் முகம் புன்னகையை பூசியது.

“என்னை பிடிச்சிருக்கா கீர்த்தி உனக்கு” என்றான்.

என்ன மறுபடியும் ஒரு அசட்டுத்தனமான கேள்வி என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.

அவள் பார்வை புரியாதவன், என்ன, என்பது போல் பார்க்க…

“நமக்கு பேரன் பேத்தி பொறந்ததுக்கு அப்புறம் இந்தக் கேள்வி கேட்காம போனீங்களே.”

“ஓ. ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டனா.”

“ஆமா ரொம்ப… சீக்கிரம் கேட்டுட்டீங்க” என்றாள் கிண்டலாக…

அவள் கிண்டலை பார்த்து அரவிந்திற்கு சிரிப்பு வந்தது. வாய்விட்டு சிரித்தான். பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வந்த இருவருக்கும், இப்போது மனநிலை சந்தோஷமாக இருந்தது.

சந்தோஷமாக இருக்கும்போதே பேசிவிட வேண்டும் என்று நினைத்தவன், “உங்க அப்பா, அம்மாகிட்ட நாளைக்கு காலையில போய் நான் லண்டன் போறதை சொல்லிட்டு வந்துடலாம் கீர்த்தி, ஏன்னா நாளைக்கு சாயந்தரம் எனக்கு ஃப்ளைட்.”

அவன் நாளை ஊருக்கு போகிறான் என்று கேட்டதும், அவளின் சந்தோஷமான நிலைமை சற்று மட்டுப்பட… “போகாம தவிர்க்க முடியாதா” என்றாள் ஏக்கத்தோடு.

“கட்டாயம் போகணும் கீர்த்தி தள்ளிப் போடக் கூட முடியாது. எப்போ திரும்ப வருவேன்னு தெரியலை. பத்து நாள்லயும் வருவேன், ஒரு மாசம், ரெண்டு மாசம் கூட ஆகலாம், நீ இருந்துப்பல்ல.”

“இருந்துப்பேன்” என்பது போல் அவள் தலையாட்ட, அவள் அருகில் வந்தவன் அவளை மென்மையாக அணைத்து, அவளை சமாதானப்படுத்தும் விதமாக நின்றிருந்தான்.

கீர்த்தியும் விலக முற்படவில்லை. அப்படியே நின்றிருந்தாள்.

“முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வந்துடுவேன் கீர்த்தி.”

“இப்பத்தான் உங்க காதலை சொல்லி நாலு நாள்லயே போனீங்க. போனதுக்கு அப்புறம் ஒரு தடைவ போன் பண்ணுனீங்க. அவ்வளவு தான். அதுக்குள்ள அண்ணா என்னை விட்டுட்டு போய்ட்டான்” என்று கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

தண்டபாணியை நினைத்த அரவிந்தின் அணைப்பு இறுகியது.

“அது எதிர்பாராம நடந்த ஒரு ஆக்ஸிடென்ட் அதை மறக்க முயற்சி செய்.”

அவனுக்குள்ளேயே புதைந்து கொண்டவள்… கதற ஆரம்பித்தாள். “என்னால முடியலை. இன்னும் திடீர்ன்னு ஒரு நாள் அண்ணா வந்து நிக்கமாட்டானான்னு தோணுது. ஐ மிஸ் ஹிம் ய லாட்.”

“அத்தனை பேர் இருக்கும்போது, என் அண்ணா ஒருத்தன் மட்டும் ஏன் இறக்கணும், நாங்க என்ன தப்பு செஞ்சோம், அண்ணா என்ன தப்பு செஞ்சான், கடவுள் ஏன் அவனை தண்டிச்சிட்டார்” என்றாள் அழுகையோட…

அவளை சமாதானப்படுத்தும் வகை அறியாமல் அணைத்தவாறே அரவிந்த் நின்றிருந்தான்.

“ஏன் அண்ணா எங்களை விட்டு போகணும்? அதுவும் அந்த சமயத்துல நீங்க வரக்கூட இல்லை. எனக்கு சொல்லி அழ கூட யாருமில்லை. அப்பாவும் அம்மாவுமே ரொம்ப மனசொடிஞ்சு இருந்தாங்க. அவங்களை தேத்தறதுல என்னால அழக்கூட முடியலை. நீங்க ஏன் அப்ப வரலை, நான் உங்களை தேடுனேன். அப்போ தான் நீங்க எனக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சது” என்றாள் மனசை திறந்து…

“உங்களுக்கு தெரியுமா அண்ணா ரொம் ஸ்வீட், ஆனா நான் அவனை தண்டம் சொல்லி எப்பவுமே டீஸ் பண்ணிட்டே இருப்பேன். கோபமே படமாட்டான். ரொம்ப ரேரா தான் கோபப்படுவான்.”

“அதுவும் நீங்க அவனுக்கு ப்ரண்ட் ஆகிறவரைக்கும் நானும் அவனும் ரொம்ப க்ளோஸ். நீங்க அவன் ப்ரெண்ட் ஆனதுக்கு அப்புறம் தான் என்னை விட்டு விலகினான். அப்போ எல்லாம் உங்க மேல ரொம்ப பொறாமையா கூட இருக்கும்” என்றாள்.

“அண்ணாகிட்ட நீங்க ஏன் சொல்லலை. நீங்க நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண இஷ்டப்படறோம்னு சொல்லியிருந்தா அவன் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பான்.”

“என்னது நாம ரெண்டு பேரும் இஷ்டப்பட்டோமா, நான் மட்டும் தான் இஷ்டப்பட்டேன் மேடம், நீ எங்க உன் விருப்பத்தை சொன்ன…”

“அதெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க, தானா தெரிஞ்சிக்கணும்.”

“ஏன் நீ பேசமாட்ட, போறதுக்கு முன்னாடி ஒரு ஐ லவ் யூக்கு உன்கிட்ட எவ்வளவு கெஞ்சியிருப்பேன், சொன்னியா நீ. இப்போ இந்த பேச்சு பேசற.”

“உங்க மேல விருப்பமில்லாமையா, உங்களை பார்க்க ஏர்போர்ட் ஓடி வந்தேன். நீங்க போனவுடனே எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு. ஆனா அண்ணாகிட்ட தானே போறீங்கன்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன். ஆனா இன்னும் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதது ஏதேதோ நடந்துடுச்சு” என்றாள் துக்கத்துடன்.

அவள் நாலு வார்த்தை பேசினால், அதில் ஒரு வார்த்தை தண்டபாணியைப் பற்றி இருந்தது. அரவிந்த் லண்டனில் இருந்து வந்ததற்கு பிறகு அதிகம் கீர்த்தியிடம் பேசாததால் அவளின் மனவுணர்வுகள் அவனுக்கு புரியவில்லை. ஆனால் பேச்சிலிருந்தே அவள் அரவிந்தை மிஸ் செய்தது, அரவிந்திற்கு நன்கு புரிந்தது.

தான் நினைத்ததை விட அவள் அதிகம் தன்னை நினைத்திருப்பாள் என்று உணர்ந்து கொண்டான். கீர்த்தி தன் மேல் இவ்வளவு காதலை வைத்திருப்பாள் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அதுவும் தண்டபாணி இறந்தபோது தன்னை அவள் மிகவும் தேடியிருக்கிறாள் என்பதை நன்கு உணர்ந்து கொண்டான்.

“தேங்க்ஸ் கீர்த்தி, தேங்க்யூ வெரி மச், நீயும் என்னை இந்தளவு விரும்பியிருக்க, என்னை மிஸ் பண்ணியிருக்கன்னு எனக்கு தெரியாது கீர்த்தி, நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றான் உணர்ந்து அரவிந்த்.

நன்றாக பேசிக்கொண்டிருந்தவர்கள் இடத்தில் திடீரென்று ஒரு மௌனம் வந்து சூழ்ந்தது. இன்னும் தான் அரவிந்தின் அணைப்பிலேயே இருப்பதை உணர்ந்த கீர்த்தி, மெதுவாக தன்னை விடுவித்துக் கொண்டு அருகில் இருந்த கட்டிலில் அமர, அரவிந்தும் அமர்ந்தான்.

நேரம் வெகுவாக கடந்து விட்டிருந்ததை உணர்ந்த கீர்த்திக்கு தூக்கம் வந்தது. ஆனால் அரவிந்த் அமர்ந்திருப்பதை பார்த்து முயன்று அவளும் அமர்ந்திருந்தாள். அரவிந்திற்கு உறக்கம் வரவில்லை. முதன் முறையாக ஒரு பெண்ணை அணைத்தது அவனை தடுமாற செய்திருந்தது. அவள் அருகாமையை மனம் விரும்பியது.

இந்த அறைக்குள் அவன் வரும்போது கூட எந்த வகையான எண்ணமும் இல்லாமல் தான வந்தான். ஆனால் அவளை அணைத்த பிறகு, மனமும் அவள் தனக்கு வேண்டும் என்றது, உடலும் அவள் தனக்கு வேண்டும் என்றது.

இந்த மாதிரி எந்த உணர்வுக்கும் ஆட்படாமல் கீர்த்தி இருந்தாள். அரவிந்திடம் தன் எண்ணங்களை சொல்வதிலேயே இருந்ததினால், அவனுடைய அணைப்பை, அது தரும் உணர்ச்சிகளின் தூண்டுதலை அவள் உணரவேயில்லை.

தூக்கம் கண்ணை சொக்க அமர்ந்திருந்தாள். அவளை எப்படி அணுகுவது என்ற தெரியாமல், அவளை பார்ப்பதும், வேறு இடம் பார்ப்பதுமாக இருந்தான்.

இவன் இப்போதைக்கு தூங்கப்போவதில்லை என்று உணர்ந்த கீர்த்தி, நான் தூங்கட்டுமா” என்று கேட்டு அவன் பதிலை எதிர்பாராமல் உறங்க ஆயத்தமாக…

“உறங்கப் போகிறாளா இவள்” என்பது போல அரவிந்த் பரிதாபமாக அவளை பார்த்தான்.

“என்ன” என்றாள் வாய்விட்டே கீர்த்தி, அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன், “இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் கீர்த்தி” என்றான் தடுமாறிய குரலில்…

“அதுக்கு” என்றாள் தயங்கிய குரலில்…

“அதுக்குன்னா என்னன்னு உனக்கு புரியலையா.”

“நாளைக்கு நீங்க ஊருக்கு போறீங்க.”

“நாளைக்கு தானே போறேன், இப்ப ஒண்ணும் போகலையே…” என்று அவள் முகம் பார்த்தவன்…

“நான் கூட இன்னைக்கே நம்ம வாழ்க்கையை தொடங்க வேண்டாம்ன்னு நினைச்சு தான் வந்தேன். ஆனா இப்போவே தொடங்கினா என்னன்னு தோணுது.” என்றான் அவளையே பார்த்தபடி…

“உங்க விருப்பம்” என்றாள் அவனைப் பார்த்து பயந்தபடியே, வந்த தூக்கம் எல்லாம் அரவிந்தின் வார்த்தைகளால் கீர்த்திக்கு பறந்து போனது.

தன்னையே பயத்தோடு பார்த்து கொண்டிருந்த கீர்த்தியை பார்த்து முன்னேறியவன், “ஃபர்ஸ்ட் நைட்ல என்ன நடக்கும்னு தெரியாமயா வந்த, இவ்வளவு பயத்தோட பார்க்குற, இதுல பயப்படறதுக்கு ஒண்ணுமேயில்லை” என்று மெதுவாக இன்னும் அவளை நெருங்கி அமர்ந்தான்.

அவனுடைய அருகாமை கீர்த்திக்கு இனம் புரியாத அவஸ்தையை கொடுக்க… அவனுள் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது. அது கொடுத்த மயக்கம் அவனுடைய தயக்கத்தை உடைக்க, கீர்த்தியை தன் வசமாக்கினான். கீர்த்தியும் மெதுவாக அவளை இழந்து அவன் வசமானாள்.

இரவு கடந்து விடியல் வந்த போது இருவரும் உறங்க முற்பட, அதற்குள் விழத்தெழ வேண்டிய கட்டாயம் அரவிந்திற்கு ஞாபகத்திற்கு வந்தது.

“எழுந்துறேன் கீர்த்தி. நம்ம உங்க வீட்டுக்கு போயிட்டு வந்து பேக் பண்ற வேலையெல்லாம் இருக்கு” என்று அவளை எழுப்ப…

“ப்ளீஸ் ஒரு பத்து நிமிஷம், என்னால எழுந்திரிக்கவே முடியலை” என்று தூங்கி வழிந்தாள் கீர்த்தி.

“சரி பத்து நிமிஷத்துல எழுந்துரு” என்று சொல்லி, அரவிந்த் குளித்து ரெடியாக எடுத்துக் கொண்ட அரைமணி நேரமும் அவள் விழிக்கவில்லை.

ஒருவழியாக அவளை எழுப்பி பாத்ரூமிற்குள் தள்ளுவதற்கள் போதும் போதும் என்றானது. அப்போதும் சிணுங்கிக் கொண்டே தான் சென்றாள் கீர்த்தி.

Advertisement