Advertisement

16

அவர்கள் இருவரும் ரூமை விட்டு வெளியே வந்ததே, குளித்து முடித்து ப்ரெஷ் ஆக தான். வீடே அமைதியாக இருந்தது. கல்யாண அலுப்பில் இருந்து இன்னும் யாரும் வெளியே வரவில்லை போல.

மணி பார்த்தால் ஏழு என்றது. கீர்த்தியே உள்ளே சென்று இருவருக்கும் வேண்டியதை குடிக்க தயாரித்து எடுத்து வந்தாள்.

“நல்லாதான் இருக்கு உன் டீ கீர்த்தி, ஆனால் எனக்கு இது போதாதே பசிக்குதே கீர்த்தி” என்றான் நிறைய உழைத்தவனாக அவளைப் பார்த்து புன்னகைத்து.

“காலைல அங்க அம்மா வீட்டுக்கு டிபனுக்கு போகணும், இன்னும் டைம் இருக்குதே, என்ன பண்ண, ஏதாவது சிம்பிளா செஞ்சு தரட்டா” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போது தான் ராணி, சிதம்பரம், நளினி என்று ஒருஒருவராக விழித்து எழுந்து வந்து கொண்டிருந்தனர்.

“காலைலயே ரெடியா” என்று கேட்டு அவனை ஆச்சரியமாக பார்த்தாள் நளினி.

“சாயந்தரம் லண்டன் ஃப்ளைட் கொஞ்சம் ரெடி பண்ணனும் அதான்” என்றான்.

அவனருகில் வந்தமர்ந்த அவன் தங்கை நளினி, “என்கிட்ட மட்டும் சொல் அண்ணா… எதுக்கு இவ்வளவு அவசரமா லண்டன் போற என்ன விஷயம்”

“ம், எனக்கு அங்க ஒரு குழந்தை இருக்கு கூட்டிட்டு வரப் போறேன்” என்றான்.

“விளையாடாத அண்ணா, சீரியஸா சொல்லு எதுக்கு போற…”

“நான் முன்ன சொன்னது உனக்கு நிஜமா தெரியலையா.”

“சும்மா என்ன முட்டாளாக்காத போ” என்று சொல்லிச் சென்றாள் நளினி.

‘நிஜமாவே நான் ஒரு குழந்தையோடு வரும்போது இவர்களின் மனநிலை எப்படி இருக்கும்’ என்று தன்குள்ளேயே எண்ணிக் கொண்டான் அரவிந்த்.

ஒரு வழியாக காலையில் அவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர்.

அங்கே சென்றவன் கீர்த்தியின் தந்தையிடம், “மாமா நான் இன்னைக்கு லண்டன் போறேன்” என்றான்.

அவர் அதிர்ச்சியாக பார்த்தார், “என்ன மாப்பிள்ளை சொல்றீங்க.”

“முன்னமே முடிவு பண்ணலை, நேத்து தான் மாமா முடிவு பண்ணினேன்” அவர்கள் தனியாக தான் பேசிக் கொண்டிருந்தனர்.

“என்ன மாப்பிள்ளை திடீர்ன்னு.”

“நான் எல்லார்கிட்டயும் வேற வேற காரணங்கள் தான் மாமா, சொல்லியிருக்கேன். உங்க கிட்ட நிஜத்தை சொல்றேன். தண்டபாணியோட சாமான்கள், சில உடமைகள் அங்க இருக்கு கொண்டு வரபோறேன்” என்றான்.

“அவனே எங்களை விட்டு போயிட்டான், இன்னும் அதை வச்சு நாங்க என்ன பண்ண போறோம்.”

“அப்படி விட முடியாது மாமா. அவனோட உடமைகளை முறையான இடத்துல சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. என் நண்பன் மாமா அவன். அப்படியெல்லாம் நான் விடமாட்டேன்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சாப்பிட அழைக்க கீர்த்தி வர… பேச்சு நின்றது.

சாமான்கள், உடைமைகள் என்றவுடன், கீர்த்தியின் தந்தைக்கு, அவன் ஏதாவது வாங்கியிருப்பான் இந்தியாவிற்கு கொண்டு வர, அவன் பணம் ஏதாவது வந்திருக்கும் என்று இப்படி தான் யோசித்தார்.

சாப்பிட்டு முடித்தவுடன், “நீ இங்கேயே இரு கீர்த்தி நான் போய் டிக்கெட்ஸ் வாங்கிட்டு வரேன்” என்று கிளம்பினான் அரவிந்த்.

அவன் மறுபடியும் லண்டன் போகிறான் என்பதே கீர்த்திக்கு மிகுந்த சஞ்சலத்தை கொடுத்தது. ஒரே நாளில் அவனை பிரிவது இவ்வளவு கஷ்டத்தை கொடுக்குமா என்றிருந்தது. அவனை விட்டு இருக்க முடியாது என்பது போலவே தோற்றமளித்தது.

இந்த முறை அவனை விமானம் ஏற்ற வீட்டில் எல்லோருமே கிளம்பிக் கொண்டிருந்தனர். அரவிந்தின் வீட்டிலும், கீர்த்தியின் வீட்டிலும்.

அதனால் தனிமை என்பது அதற்கு பிறகு இருவருக்குமே கிடைக்கவில்லை. முயன்று தனிமையை ஏற்படுத்திக் கொண்டு அவளை ஒரு ஐந்து நிமிடம் ரூமிற்குள் தள்ளிச் சென்றவன், “நான் எப்படி வந்தாலும் என்னை ஏத்துப்பதானே” என்றான்.

புரியாமல் பார்த்த கீர்த்தியிடம், “என்ன பிரச்சனைன்னாலும் என் கூட நிற்ப தானே கீர்த்தி” என்றான்.

“ஏன் பிஸினஸ் பண்ணி நமக்கு ஏதாவது ஹெவி லாஸ் வரவச்சிட்டீங்களா” என்றான்.

ஒன்றும் பேசாமல் அவளை அணைத்து ஒரு நீண்ட முத்தத்தை அவள் இதழில் பதித்தான். பிறகு ஒன்றும் பேசாமலேயே அவளை அழைத்து வெளியில் வந்தவன், ஏர்போர்ட் கிளம்பிவிட்டான்.

கீர்த்தி அவன் முத்தத்தை கூட அனுபவிக்க முடியாமல், அவன் ஊருக்கு செல்லும் ஏக்கத்திலேயே இருந்தாள்.

பிறகு எல்லோருமாக சென்று அவனை லண்டனுக்கு வழியனுப்பி வைத்தனர். எல்லோர் மனதிலும் ஒரே கேள்வி எதற்கு இவ்வளவு அவசரமாக அவன் லண்டன் செல்கிறான்.

அவன் மனைவி பத்திரமாக அவன் திரும்பி வரவேண்டும் என்று நினைத்திருக்க, என்ன தண்டபாணியின் உடமையை எடுத்து வரப்போகிறான் என்று அவன் மாமனார் நினைத்திருக்க, நினைத்திருக்க… “ஜாக்கிரதை அரவிந்த், பத்திரமா போயிட்டு வா” என்று அவன் அன்னை ராணி சொல்ல, ஒரு வழியாக கிளம்பினான், கனத்த மனதோடு. திரும்பி வரும் போது என்ன வரப்போகிறதோ என்று…

விமானம் ஏறியதும் எல்லோரும் அரவிந்திற்கு மறந்து விட்டனர். அவனுக்கு ஞாபகம் இருந்ததெல்லாம் குழந்தை எப்படி இருக்கும், லிசா அவளை தன்னிடம் கொடுப்பாளா, இல்லை மறுத்துவிடுவாளா. என்ன இருந்தாலும் அவள் குழந்தையின் தாய், அதனை அவளிடம் இருந்து பிரிப்பது சரியா… இந்த மாதிரியான எண்ணங்களும் சிந்தனைகளும் அரவிந்தனுள் ஓடிக் கொண்டிருந்தது.

லண்டனில் கால் வைக்கும் போதே இவனை அழைக்க ஆளை அனுப்பியிருந்தான் ஹரிஷ். நேரே ஹாஸ்பிடல் போக அரவிந்த் ஆர்வம் காட்ட… “வீட்டுக்கு போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு கூட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றான் வந்தவன்.

பிறகு ப்ளாட்டிற்கு போய் அவசரமாக குளித்து முடித்து அரவிந்த் ஹாஸ்பிடல் போனான். அங்கே லிசா ஒரு ரூமிலும் குழந்தை ஒரு ரூமிலும் இருந்தார்கள். குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. பெண் மகவு.

சிறிது மூச்சு திணறல் இருந்ததால் குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருந்தனர்.

குழந்தையை தூரத்தில் இருந்து கண்ணாடி வழியாக பார்த்த பிறகு தான் லிசாவையே பார்க்கப் போனான்.

“கன்க்ராட்ஸ் லிசா ஃபார் த கேர்ள் பேபி” என்றான்.

“தேங்க்யூ” என்ற லிசா, “ஹவ் அபௌட் யுவர் மேரேஜ்” என்றாள்.

“பைன், வென்ட் வெல்.”

“ஸோ, தண்டுவோட தங்கை உன் மனைவியா” என்றாள் லிசா. அந்தப பேச்சு ஹரிஷிற்கு ரசிக்கவில்லை. எப்படியாவது அவளை தண்டபாணியின் நினைவுகளில் இருந்து வெளியே வரவைக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினான்.

ஆனால் லிசாவிடம் குழந்தை இருக்கும் வரை அது எள்ளளவும் சாத்தியமில்லை என்று அவனுக்கு நன்கு புரிந்தது. அதனால் குழந்தையை எப்படியாவது அரவிந்திடம் கொடுத்தனுப்பி விட வேண்டும் என்று அவனும் மிகுந்த ப்ரயத்தனப்பட்டு கொண்டிருந்தான்.

இத்தனை நாட்களாக லிசாவின் அம்மாவும், ஹரிஷ{ம் சேர்ந்து அவளை சிறிது சிறிதாக மூளைச்சலவை செய்து கொண்டிருந்தனர்.

ஒரு சமயம், “தண்டபாணியின் பெற்றோரிடத்தில் குழந்தையை கொடுத்துவிடலாம்” என்றாள் லிசா.

மறு சமயம், “என் குழந்தை, நான் வளர்த்துக் கொள்வேன், யாருக்கும் கொடுக்க மாட்டேன்” என்றாள். என்ன செய்யப் போகிறாள் என்று இன்னும் சரிவர யாருக்கும் தெரியவில்லை.

ஹரிஷிடம் நட்பை மட்டும் பாராட்டினாள். அதை மீறி ஒரு சிறு நெருக்கம் கூட தென்படவில்லை. இப்போதைக்கு நட்பு மட்டுமே போதும் என்று ஹரிஷ{ம் மனம் தளராமல் லிசாவின் பின் சுற்றினான். மனம் மாற நாளாகும் என்று தெரியும், ஆனால் மாறுவாளா என்றும் சந்தேகமாக இருந்தது. என்ன எண்ணத்தில் இருக்கிறாள் என்று ஹரிஷால் அனுமானிக்கவே முடியவில்லை.

அரவிந்த் லிசாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க… ஹரிஷ் தன் எண்ணத்திலேயே உளன்று கொண்டிருந்தான்.

“உன் ப்யூச்சர் ப்ளான் என்ன லிசா” என்றான் அரவிந்த்.

“மாடலிங் பண்ணலாம்னு இருக்கேன் அர்வி.”

“என்ன” என்று ஆச்சரியமாக அரவிந்த் உரக்க குரல் கொடுக்க…

அப்போது தான் ஹரிஷ் நனவிற்கு வந்தான்.

“என்ன லிசா சொல்ற” என்று அரவிந்த் கேட்க…

“யெஸ் அர்வி, மாடலிங் பண்ணலாம்னு இருக்கேன். முன்ன எனக்கு நிறைய ஆஃபர்ஸ் வந்தது. ஆனா எனக்கு விருப்பம் இல்லை. அப்புறம் தண்டுவோட என் லைஃப் கமிட் ஆகிடிச்சு. சுத்தமாவே அதை மறந்துட்டேன்.”

“இப்போ இந்த ஹாஸ்பிடல், அட்மிட் ஆகறதுக்கு இரண்டு நாள் முன்னாடி தான், எனக்கு முன்னாடி மாடலிங் ஆஃபர் பண்ணின ப்ரெண்ட்ஸ் பார்த்தேன். கொஞ்சம் பழைய மாதிரி ஆனதும் வர சொன்னாங்க… போகலாம்னு இருக்கேன்” என்றாள்.

குரல் தீர்மானமாக ஒலித்தது மாதிரி தான் அரவிந்திற்கும், ஹரிஷிற்கும் தோன்றியது.

லிசா, இந்திய தகப்பனுக்கும், இங்கிலாந்து தாய்க்கும் பிறந்த கலவை. மிக அழகானவள் என்பது நாம் சாதாரணமாக அழகான பெண்களை வர்ணிக்கும் வார்த்தை…

அதையும் மீறி மிக, மிக, மிக அழகானவள் லிசா. அதிரூபசுந்தரி என்று கூட சொல்லலாம். அதனால் மாடலிங் உலகில் கட்டாயம் அவளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் தான். ஆனால் குழந்தை பிறகு எந்த அளவிற்கு அது சரிவரும் என்று அரவிந்த் யோசனையோடு பார்க்க…

என்ன இவள் அடுத்ததை ஆரம்பித்து விட்டாளா என்று அதிர்ச்சியோடு ஹரிஷ் பார்த்தான். அவனுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சிதான்.

தண்டாபாணியோடான, லிசாவின் சந்திப்பிற்கு முன், அவளை மாடலிங் செய்ய நிறைய பேர் கேட்டு இருந்தது, ஹரிஷிற்கே தெரியும். ஆனால் லிசா ஒத்துக்கொள்ளவில்லை என்றும் தெரியும்.

இப்போது எதற்கு திடீரென்று இதை ஆரம்பிக்கிறாள், அதுவும் குழந்தை பிறந்துள்ள இந்த நிலையில்.

“சாரி ஹரிஷ்” என்று அவனிடம் கூறியவள், “மாடலிங் பண்றேன். சரி வரலான்னா இருக்கவே இருக்கு எனக்கு ஸ்டோர்ல வேலை வந்துடறேன்” என்றாள்.

அரவிந்த் இருப்பதையும் ஹரிஷ் பொருட்படுத்தாமல் “ஸ்டோர்ல மட்டும் தானா வேலையிருக்கு உனக்கு… நான் இல்லையா… என்னை தெரியலையா இல்லை என்னை புரியலையா” என்றான் சற்று கோபமாக…

லிசா என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருக்க…

“டு மி ப்ராங்க், ஒரு தடவை உன்னை மிஸ் பண்ணிட்டேன் லிசா, இனிமே மிஸ் பண்ண மாட்டேன். அட் எனி காஸ்ட்” என்றான் கடுமையாக.

“அப்போ நீ என்னை மாடலிங் பண்ணக்கூடாது சொல்றியா” என்றாள் லிசா.

“நீ மாடலிங் பண்ணு, எதுவேணா பண்ண, எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லை. உன்னோட வாழ்க்கை மட்டும் என்னோட தான் லிசா. இது இன்னைக்கு நேத்து வந்த ப்ரியமோ, காதலோ இல்லை. பல வருஷமா எனக்குள்ள இருக்கிறது. நானே நினைச்சும் என்னால மாத்தவே முடியலை” என்றான் உணர்ச்சி வசப்பட்டு.

அரவிந்த் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்திருந்தான் பேசவில்லை. அவனுக்கு லிசா மாடலிங் துறையில் நுழைய இருப்பதால் எப்படியும் குழந்தையை தன்னிடம் கொடுத்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருந்தது.

ஏதாவது செய்து ஹரிஷ் அதை கெடுத்துவிடக் கூடாதே என்று கடவுளை வணங்கியபடியே இருந்தான்.

ஹரிஷ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருப்பதை லிசா உணர்ந்து கொண்டாள். என்ன இருந்தாலும் தனக்கு சிறுவயது முதலே நல்ல நண்பன். அவன் அப்படி இருப்பது பொறாமல், “கிவ் மி சம் டைம் ஹரிஷ், பட் எனி ஹவ் அட்லீஸ்ட் ஃபார் சம் டைம் ஐ வாண்ட் டுபி இன் மாடலிங் ஃபீள்ட்” என்றாள் அவனை நோக்கி பெருமூச்சொன்றை விடுத்து.

ஹரிஷ{ம் அவள் குழந்தை பெற்று மூன்று நாட்களே ஆகியிருப்பதால், இந்த நிலைமையில் அவளை அதிகம் குழப்ப விரும்பாமல் அமைதியாக விடுத்தான்.

பிறகு எல்லோருடைய பேச்சும் குழந்தையை பற்றி திரும்ப… லிசாவின் முகம் மிகவும் சோபை இழந்தது.

நேரடியாகவே அரவிந்தை கேட்டாள். “எப்போ நீ இந்துவை கூட்டிட்டு போகப் போற” என்றாள்.

“இந்துவா யாரது” என்பது போல பார்க்க… “அது தானே தண்டுவோட அம்மா பேரு. அதனால அதை தான் சர்ட்டிபிகேட்டுக்கு கொடுத்திருக்கேன். அதோ என் மனசாட்சியையும் மீறி இன்னொரு வேலை செஞ்சிருக்கேன்” என்றாள்.

என்னவோ ஏதோவென்று பயந்து அரவிந்த் பார்க்க…

“குழந்தையோட அப்பா ப்ளேஸ்ல உன்னோட நேம் குடுத்திருக்கேன் அர்வி” என்றாள்…

அரவிந்த் வியப்போடு சந்தோஷமாய் லிசாவை பார்க்க… “உனக்கு அப்போதான் அவளை இங்கிலாண்ட் விட்டு கூட்டிட்டு போக ஈஸியா இருக்கும். இல்லைன்னா கூட்டிட்டு போறது கஷ்டம். ஏன் முடியாதுன்னே சொல்லலாம். நிறைய ஃபார்மாலிட்டீஸ்” என்றாள்.

அவள் எந்த மாதிரி மனநிலையில் இதை சொல்கிறாள் என்று அரவிந்த் அவளை பார்த்து அறிய முற்பட, அவள் முகத்தில் இருந்து எதையும் அறிய முடியவில்லை.

“தேங்க்ஸ் லிசா, தேங்க்யூ வெரி மச்” என்றான்.

“நீ என் குழந்தையை நல்லா பார்த்துப்பே இல்லை” என்று லிசா கேட்க…

“அது என் குழந்தை நீ தாராளமா நம்பலாம். எப்போவும் எந்த ப்ரச்சனையும் வராது. யு கேன் ட்ரஸ்ட் மீ.”

இவள் எடுத்திருந்த முடிவு அவள் ஹரிஷிடம் கூட பகிரவில்லை. அரவிந்திடம் எல்லா விஷயத்தையும் சொன்ன பிறகு, “நான் செய்தது சரியா” என்றாள் லிசா ஹரிஷை பார்த்து…

“சரியோ, தப்போ… நீ என்ன பண்ணினாலும் நான் உன் கூட இருக்கேன்” என்றான் ஹரிஷ், லிசா பக்கத்தில் வந்து மெதுவாக அவளை அணைத்து பிடித்தபடி…

அவன் சொன்னதை கேட்டவள், “அப்போ குழந்தையை நம்மளே வளர்க்கலாமா” என்றாள் ஹரிஷை பார்த்து…

அரவிந்த் அதிர்ந்தான். இதுவரை வேறு மாதிரி பேசியவள் இப்போது ஏன் மாற்றிப் பேசுகிறாள் என்று. அவனுக்கு புரிந்தது. ஒரு பக்கம் குழந்தையை கொடுத்து விடலாம் என்றாலும் மறுபக்கம் தாய் மனது தடுக்கிறது” என்று.

“நீ எப்படி சொல்றியோ அப்படி” என்றான் ஹரிஷ் லிசாவை பார்த்து…

“ஆனா தண்டபாணியோட பேரண்ட்ஸ், அவங்க கிட்ட குழந்தையை சேர்க்கணுமே, அவங்க குடும்ப வாரிசு அப்படி இப்படின்னு அர்வி சொல்றானே” என்றாள்.

“அவங்களுக்கும் குழந்தை முக்கியம், உனக்கும் முக்கியம், உனக்கு எது தோணுதோ செய்” என்றான் ஹரிஷ்.

“ஒரு சமயம் கொடுக்கலாம்ன்னு இருக்கு… குடுத்துடு மாடலிங் போ, உன் எதிர்காலத்தை பாருன்னு மனசு சொல்லுது, இன்னொரு சமயம், இது உன் குழந்தை இதை வளர்க்க நீதான் கடமைப்பட்டிருக்கன்னு சொல்லுது ஒரே குழப்பமா இருக்கு, நான் ஏதாவது தப்பு பண்றனோன்னு” என்றாள் கண்களில் தேங்கிய கண்ணீருடன் லிசா.

அவள் தாய் மனதின் அலைபுருதல், அங்கே இரு;நத ஹரிஷிற்கும், அரவிந்திற்கும் நன்கு புரிந்தது.

தாய் எங்கிருந்தாலும் தாய்தான். இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் ஒரு தாயிடம் இந்த மாதிரி ஒரு குழந்தையை கொடு என்று கேட்க முடியாது. அப்படியே கேட்டாலும் அவள் கொடுக்க மாட்டாள்.

லிசாவின் தந்தை இந்தியராக இருந்தாலும், அவள் வளர்ப்பு எல்லாம் இங்கிலாந்தை கொண்டே இருந்தது. அவள் இங்கிலாந்தை விட்டு வேறு இடம் செல்ல பிரியப்படவில்லை.

அவள் தண்டபாணியிடம் போட்ட இரண்டு கண்டிஷனே, ஒன்று திருமணம் செய்து கொள்ள மாட்டேன். இன்னொன்று இந்தியாவிற்கு வரமாட்டேன். அந்தளவு அவள் இங்கிலாந்தில் கலாச்சாரத்தில் ஊறிப் போயிருந்தாள்.

அந்த இங்கிலாந்து கலாச்சாரமே அவளை குழந்தையை அரவிந்திடம் கொடுத்துவிடு என்று சொல்லியது, இன்னொரு பக்கம் அவள் தாய் மனது கொடுக்க வேண்டாம் என்றது.

அவள் மனம் இந்த மாதிரி அலைபுருதலில் இருக்க… ஹரிஷ{ம், அரவிந்தும் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினர்.

லிசாவை ஹரிஷிடம் விட்டு, அரவிந்த் வெளியே வந்து மறுபடியும் குழந்தை இருந்த இடத்திற்கு வந்து, கண்ணாடி வழியாக பார்த்தான். குழந்தை படுத்திருப்பது மட்டுமே தெரிந்தது. வேறு எதுவும் தெரியவில்லை.

வெண்பஞ்சு பொதிகையாய் வெள்ளை வெளேர் என்று இருந்தது. அருகில் பார்க்க வேண்டும் என்று துடித்த மனதை முயன்று கட்டுப்படுத்தினான்.

“இது என் நண்பனின் குழந்தை, இனி இது என் குழந்தை” யாரை நம்பியும் இதை நான் விடமாட்டேன். நானே இதை வளர்ப்பேன். என் குழந்தை இது, என் குழந்தை இது, இது என் தண்டபாணியின் குழந்தை, என் குழந்தை, நானே வளர்ப்பேன்” என்று மனதில் உருபோட்டுக் கொண்டான்.

கீர்த்தியிடம் இதை தண்டபாணியின் குழந்தை என்று சொல்லிவிடுவோமா, சொல்லும்போது என் அப்பா, அம்மாவுக்கு தெரிந்துவிட்டால், என்னை வளர்க்க விடமாட்டார்கள், இல்லை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், கீர்த்தியோ, என் பெற்றோர்களோ, அவள் பெற்றோர்களோ, குழந்தையிடத்தில் உண்மையை சொல்ல வாய்ப்புண்டு.

யாரும் உண்மையை சொல்ல வேண்டியதில்லை. நானே யாரிடத்திலும் சொல்லப்போவதில்லை, சொன்னால் தானே அவர்களுக்கு தெரியும். அவர்களுக்கு தெரியவே விடப்போவதில்லை. இது என் குழந்தை, என் குழந்தை மட்டுமே, என் தண்டபாணியின் குழந்தை, தகப்பன் இல்லாத குழந்தையாக வளரக்கூடாது, நானே அவள் தகப்பன், நானே அவள் தகப்பன் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

புது உற்சாகத்தோடு மறுபடியும் லிசாவின் ரூம் வர… அதற்குள் ஹரிஷ் லிசாவை சற்று சமாதானப்படுத்தி இருந்தான், அதற்குள் லிசாவின் தாயும் வர, அவர் அரவிந்தை வரவேற்றார்.

குழந்தையின் பாஸ்போர்ட்டை பற்றி அவரிடம் பேசினான். அதற்கு குழந்தையின் பர்த் சர்ட்டிபிகேட் வேண்டும் என்றார். மேரேஜ் சர்ட்டிபிகேட், அது, இது, என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து, பர்த் சர்ட்டிபிகேட்டை வைத்து மட்டுமே வாங்க முடிவு செய்தனர்.

“முடியும்” என்றான் அரவிந்த். இன்னும் முகம்கூட பார்க்காத அந்த குழந்தையின் மேல் இனம் புரியாத பாசம் அரவிந்திற்கு, அந்த பாசமே, ஒரு பதிமூன்று மணிநேர பயணத்தை, லண்டனில் இருந்து சென்னைக்கு குழந்தையுடன் தனியாக கழித்து விடுவேன் என்று அரவிந்தை சற்றும் பயமில்லாமல் சொல்ல வைத்தது.

“முடியும்” என்று சொன்ன நிமிடத்தில் அவனே தாயுமாகி, தந்தையுமாகி நின்றான் அரவிந்த்.

இன்குபேட்டரில் இருந்த குழந்தையை, அதன் அன்னையான லிசாவிடம் கொடுத்தனர்.

Advertisement