Advertisement

14

அவன் வந்து ஒரு வாரம் பொறுமையாக இருந்த அவன் தந்தை, அரவிந்திடம் அவன் திருமணப் பேச்சை ஆரம்பித்தார்.

“அரவிந்தா, அந்த தண்டபாணியோட அப்பா ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டார்டா. இப்போ எங்கயும் வேலைக்குக் கூடப் போறதில்லை. வீட்டோட தான் இருக்கார் போல… ஏதோ உங்க கல்யாண விஷயம் பேசுனா, மனுஷன் கொஞ்சம் தேறுவாரோ என்னவோ… ஏற்கனவே அவங்கண்ணன் கிட்ட சொல்லி பேசறேன்னு சொன்னியேடா. ஏதாவது பேசினியா.”

“இல்லைப்பா.”

“ஏன்டா, நீ போய் கொஞ்ச நாள் அவனோட இருந்த தானே.”

“பேச சந்தர்ப்பம் கிடைக்கலைப்பா.”

“பேச சந்தர்ப்பம் கிடைக்காத அளவுக்கு நீ என்னப்பா செஞ்சிட்டு இருந்த.”

அமைதியாக இருந்தான்.

“பதில் சொல்லு அரவிந்த். லண்டன் போய் இத்தனை மாசமா என்னதான்டா செஞ்ச.”

“ஊர் சுத்தி பார்த்தேன்பா.”

“தண்டபாணியே இறந்துட்டாள். அப்புறம் யாரோட தங்கின, எங்க எங்க சுத்திப் பார்த்த, ஒரு போட்டோ இல்லை, ஒண்ணும் இல்லை. அங்க என்ன பண்ண. வந்ததுல இருந்து என்கிட்டயும், அம்மாகிட்டயும் சரியா பேசக்கூட இல்லை. என்னடா பண்ணி வச்ச லண்டன்ல.” என்றார் அவனை சந்தேகமாக பார்த்தபடி.

“ஒண்ணும் பண்ணலைன்னு சொல்ல மாட்டேன். உங்களுக்குத் தெரியும்போது தெரியும்பா.”

“என்னடா பெரிய பீடிகையெல்லாம் போடற.”

“தெரியும்போது தெரியும்பா” என்று மறுபடியும் கூறி அந்த இடத்தை விட்டு அகன்றான்.

“கல்யாணம் என்னடா பண்ணலாம்னு இருக்க.”

“அதுதான் முன்னாலேயே கீர்த்தியை தான் எனக்கு பிடிச்சிருக்குன்னு உங்ககிட்ட சொல்லிட்டேன். நீங்க போய் பேசுங்க. எப்ப கல்யாணம் வக்கிறதுன்னாலும் உங்க சவுகரியம். முடிஞ்சா அடுத்த மாசமே வச்சாக்கூட எனக்கு சம்மதம்தான்.”

“நிஜமாதான் சொல்றியா. உன்னை நம்பி கல்யாணம் பேசலாமா.”

“பேசலாம்பா… பையனை பறி கொடுத்தவங்க, கல்யாணத்தை சிம்பிளாகவே வச்சிக்கலாம்பா. சீக்கிரமே நாள் பாருங்கப்பா” என்றான்.

அவன் அன்னை, தந்தை மகனின் உரையாடலை கேட்டு அப்படியே நின்று கொண்டிருந்தார்.

“ஆமா என்னை எதுவும் கேக்கறது இல்லையா… அப்பாவும் மகனும் நீங்களே பேசி எல்லாத்தையும் முடிவு எடுப்பீங்களா. அப்புறம் நான் எதுக்கு இந்த வீட்ல.”

“இது முதல்லயே பேசி வச்சதுதானே ராணி” என்றார் சிதம்பரம்.

“இருந்தாலும் என்கிட்ட கேக்கறது இல்லையா. அவன் என்னவோ வந்ததுல இருந்து என்கிட்ட சரியாவே பேசமாட்டேங்கறான். முதல்ல அதை என்னன்னு கேட்டு பஞ்சாயத்து பண்ணுங்க. கல்யாண வேலையெல்லாம் அப்புறம் பார்க்கலாம்.”

“அது நீயாச்சு உன் பையனாச்சு. இதுல எல்லாம் என்னை இழுக்காதடி. உனக்கு அவனைத் திட்டணுமா திட்டு, அடிக்கணுமா அடி, என்னை இழுக்காத. இன்னும் நான் நாளை தள்ளிப் போடத் தயாராயில்லை. நாளைக்கு நல்ல நாள், இவன் ஜாதகத்தை எடுத்துக்க. நாமளே நேர்ல போய் பேசறோம். யார் மூலமாகவும் நான் குடுத்து விடலை புரிஞ்சுதா. அதுக்கு மேல பொண்ணைக் குடுக்கறதும், குடுக்காததும் அந்த ராஜேந்திரனோட பிரியம், சொல்லிட்டேன்” என்றார் கறாராக.

குழந்தையைப் பற்றித் தெரிவதற்கு முன்னமே இவ்வளவு கடினமாகப் பேசுகிறார்களே இன்னும் குழந்தையைப் பற்றித் தெரிந்தால் தன்னை வளர்க்க விடுவார்களோ என்ற ஐயம் வந்து விட்டது.

அந்தக் குழந்தையைத் தன் குழந்தையாகச் சொல்வது தான் உத்தமம் என்ற முடிவிற்கு வந்து விட்டான். இவர்களுக்கெல்லாம் தெரிந்தால் ஏதோ ஒரு சமயத்தில் அந்தக குழந்தையிடம் உண்மையை கூறிவிட்டால், அப்புறம் தான் எவ்வளவு தான் தன் குழந்தையாகப் பார்த்துக் கொண்டாலும் ஒரு வித்தியாசம் வந்துவிடும். அதனால் எத்தனை பிரச்சனைகள் யார் மூலமாக வந்தாலும் குழந்தையை தன் குழந்தையாகவே வளர்க்க முடிவு செய்தான். லிசா அதற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே என்றும் இருந்தது.

லிசாவிடமும் ஹரிஷிடமும் தொடர்பில் தான் இருந்தான். இப்பொழுதுதான் அவளுக்கு ஒன்பதாம் மாதம் ஆரம்பித்திருந்தது. அவள் உடல்நலத்தை இரண்டு நாளைக்கொரு முறை விசாரித்துக் கொண்டுதான் இருந்தான்.

மறுநாள் அரவிந்தின் தந்தை சிதம்பரம், கீர்த்தியின் தந்தை ராஜேந்திரனிடம் சம்மந்தம் பேசச் சென்றார்.

சிதம்பரமும் ராணியும் கீர்த்தியின் வீட்டிற்குப் போக… இவர்கள் எதற்கு திடீரென்று வந்திருக்கிறார்கள் என்று தெரியாமல் விழித்தார்கள், ராஜேந்திரனும், இந்துமதியும், “நாங்க எங்க பையனுக்கு உங்க பொண்ணைக் கேட்டு வந்திருக்கோம்” என்றனர் அரவிந்தின் பெற்றோர்.

திடீரென்று அவர்கள் இப்படிக் கேட்டவுடனே என்ன சொல்வது என்று தெரியவில்லை அவர்களுக்கு.

“பையன் இறந்து ஆறேழு மாசம் தான் ஆகுது… இப்போ எப்படிக் கல்யாணம் பேசறது.”

“அதுல ஒண்ணும் தப்பில்லைங்க ஆறு மாசம் ஆகிடுச்சு இல்லை. பொண்ணுக்கும் வயசாகுது இல்லை. அதை பார்க்க வேண்டாமா.”

“ஊர்ல யாராவது ஏதாவது சொன்னா” என்றார் கீர்த்தியின் தந்தை தளர்வாக…

“ஊரு என்ன ஊரு… நம்மதாங்க ஊரு. நம்மளை மீறி யாரும் பேச மாட்டான். அப்படியே ஒண்ணு ரெண்டு பேரு பேசுனா நாம அதைக் கண்டுக்க வேண்டாம். இன்னைக்கு நாளு நல்ல நாளு, ஜாதகம் பாருங்க, பையனை உங்களுக்குத் தெரியுமான்று எனக்குத் தெரியலை, தெரியலைன்னா, அவனையும் பாருங்க… பார்த்துட்டு ஒண்ணுரண்டு நாள்ல நல்ல பதிலா சொல்லுங்க.”

சிதம்பரத்தின் தெளிவாகப் பேசும் குணம், ராஜேந்திரனுக்குப் பிடித்துவிடச் சரியென்றார். போன மகனையே நினைத்துக் கொண்டிருந்தால் இருக்கின்ற மகளைப் பார்க்க வேண்டும் அல்லவா. தங்களின் வசதி வாய்ப்புக்கு இந்த இடம் பெரிதென்றே உணர்ந்தார். அவர்களாக வரும்போது தான் ஏன் வேண்டாமென்று சொல்ல வேண்டும் என்று நினைத்தவர், பையனைப் பற்றி விசாரித்து பிறகு சரியென்று சொல்லலாம் என்று முடிவெடுத்து, இரண்டு மூன்று நாட்களில் நல்ல பதிலாகச் சொல்லுகிறோம் என்று சொன்னார்.

கீர்த்தி வீட்டிற்கு வந்ததுமே, கீர்த்தியிடம் கேட்டார்கள். அவளுக்கு இது ஆச்சரியமே, வந்ததிலிருந்து தன்னிடம் சரியாகக் கூட பேசாதவன், தன்னை பெண் கேட்டு விட்டிருக்கிறானா என்று எண்ணியவள், நீங்க என்ன நினைக்கறீங்கப்பா” என்றாள்.

“ஏம்மா, நீ அங்க தானே வேலை செய்யற உனக்கு தெரியாதா.”

“இல்லையேப்பா, பெண் கேட்டு வர்றது எல்லாம் எனக்குத் தெரியாதுப்பா.”

“பையன் எப்படிம்மா, நீ பார்த்திருப்ப இல்ல, உனக்கு பிடிச்சிருக்கா.”

“நீங்க எப்படிச் சொல்றீங்களோ, அப்படிப்பா” என்று விட்டாள் ஒரே வார்த்;தையாக.

ஜாதகம் பார்த்தாள், ஜாதகம் பொருந்தி வந்தது. ஜோசியர் மூல நட்சத்திரத்தை அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், நீங்களும் கொடுத்து விடுங்கள் என்று விட்டார்.

சிதம்பரம் உழைப்பால் முன்னேறியவர். அவர் இந்த ஜாதகங்களை நம்புவது கிடையாது. இந்த ஒரு வருடத்திற்கும் மேல் அவர் கீர்த்தியைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு கீர்த்தியை மிகவும் பிடித்திருந்தது. தன் மகனுக்குப் பொருத்தமாக இருப்பாள் என்றே தோன்றியது. அதனால் சரியென்று விட்டார்.

கீர்த்தியின் தந்தையும் அரவிந்தைப் பற்றி விசாரித்த வரைக்கும் நல்ல மாதிரியாகத் தோன்ற, திருமணம் வேண்டாம் என்று சொல்ல காரணங்கள் ஏதும் இல்லாததால்  அரவிந்த் – கீர்த்தி திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லி விட்டார்.

இந்தப் பேச்சு வார்த்தை எல்லாம் பெற்றோர் அளவிலேயே நடந்து கொண்டிருந்தது. அரவிந்தும் கீர்த்தியிடம் திருமணத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை, கீர்த்தியும் அரவிந்திடம் என்ன என்று கேட்கவில்லை.

அரவிந்த் கீர்த்தியிடம் பேசவே தயங்கினான். குழந்தையைப் பற்றிய உண்மையைச் சொல்லவும் மனம் வரவில்லை. மறைப்பதும் தவறு போலத் தோன்றியது.

தன்னுடைய குழந்தை என்று தான் சொல்லிய பிறகு, ஒருவேளை கீர்த்தி கல்யாணத்துக்கு மறுத்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்துதான், தன் தந்தையை திருமணத்தையே பேசச் சொன்னான்.

குழப்பத்தின் உச்சியில் இருந்தான். தான் போகும் பாதை சரிதானா என்றும் தெரியவில்லை. தன் பிரச்சனைகளை யாரோடும் பகிரவும் முடியவில்லை. தன்னைச் சுற்றி எல்லாவற்றையும் சிக்கலாக்கிக் கொண்டான்.

இந்நிலையில் திருமணம் சந்தோஷத்தைக் கொடுப்பதற்கு பதில் ஒரு பயத்தையே கொடுத்தது.

தாம்பூலம் மாற்றி சிம்பிளாக நிச்சயம் செய்தனர். அரவிந்தும், கீர்த்தியும் அங்குதான் இருந்தாலும் பெரிதாக சந்தோஷம் இரண்டு பேரிடத்திலும் இல்லை. கடமையே என்று இருந்தனர்.

இருவரின் பெற்றவர்களும் தங்களின் மக்களின் முகத்தையே ஆராய… அவர்கள் பார்ப்பதை உணர்ந்து சிறிது சிரித்தவாறு முகத்தை முயன்று வைத்துக் கொண்டனர். அரவிந்திற்கு குழந்தை டென்ஷன் என்றால், கீர்த்தி இன்னும் தண்டபாணி இழப்பிலிருந்து முழுதாக வெளிவரவில்லை.

நளினி தான் அந்த இடத்தை சற்று கலகலப்பாக்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய  பெண் அகல்யா, “அத்தை” என்று சொல்லிச் சமத்தாக கீர்த்தியின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது.

சாப்பிட்டு முடித்தவுடன் சிறிது நேரம் அமர்ந்து பேச நேரம் கிடைக்க, கீர்த்தி அவளாகவே அரவிந்திடம்,

“எங்கண்ணா கிட்ட நம்ம கல்யாணம் விஷயம் பேசினீங்களா.”

“நான் பேசலாம்னு இருந்தப்போ தான் அப்படி ஆகிடுச்சு” என்றான் மெல்லிய குரலில்.

“போய் அவ்வளவு நாள் கூட தானே இருந்தீங்க என்னைப் பத்திப் பேசவேயில்லையா?”

பேசவேயில்லை என்பது தான நிஜம். ஆனால் எப்படிச் சொல்வது. “உன்னைப் பத்தி நிறைய பேசினோம் கீர்த்தி. ஆனா நம்ம கல்யாணம் பத்திப் பேச சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். அதுக்குள்ள…” என்று நிறுத்தினான்.

‘ஓ’ என்றாள் ஏமாற்றமாக…

அவள் அண்ணன் திருமணம் செய்யாமலேயே ஒரு பெண்ணோடு வாழ்ந்தான் என்பதை இவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்றே எண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தது அரவிந்திற்கு.

வேறு மடியில் அமர்ந்திருக்க அகல்யா தான், “அத்தை நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு அம்மா சொன்னாங்க” என்றாள்.

“பட்டு குட்டி! நீங்க கூட ரொம்ப அழகு” என்று பதிலுக்குச் சொன்னாள் கீர்த்தி… “நீங்க எந்த க்ளாஸ் போறீங்க” என்றாள்.

 “ஃபர்ஸ்ட் ஏ.”

“ஓ! ஃபர்ஸ்ட் ஏவா நீங்க” என்று கீர்த்தி அகல்யாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருக்க… குழந்தை எல்லாவற்றிற்கும் அவளிடம் பதில் கொடுத்துக் கொண்டே வந்தது.

பின்பு எல்லோரும் வீட்டிற்குக் கிளம்ப ஆளுக்கொரு பக்கம் கிளம்பினர். கீர்த்திக்கு அரவிந்த் ஏன் இப்படி இருக்கிறான் என்று  தோன்ற ஆரம்பித்தது. லண்டன் சென்று வந்ததில் இருந்து தன்னிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறான். தண்டபாணியின் இறப்பு காரணமா இல்லை வேறு ஏதாவது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

லிசாவிடமும் ஹரிஷிடமும் தனக்கு திருமணம் நிச்சயமான விஷயத்தைக் கூறினான் அரவிந்த். இருவருமே வாழ்த்துக்கள் கூறினர்.

இவ்வளவு அவசரமாக திருமணம் செய்ய வேண்டிய அவசியம், அரவிந்திற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது நாளை குழந்தையைத் தத்தெடுக்க வேண்டி வந்தால், அதற்கு அவன் திருமணமானவனாக இருக்க வேண்டும். அதன் பொருட்டும் திருமணத்தைத் துரிதப்படுத்தினான்.

சில சமயம் யோசித்தான், கீர்த்தியிடம் மட்டுமாவது அவள் அண்ணன் குழந்தை என்று சொல்லலாமா என்று. பிறகு திருமணத்திற்குப் பிறகு குழந்தை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

நாட்கள் வேகமாக ஓடின, திருமண வேலைகள் இன்னும் வேகமாக நடந்தன. சம்மந்தியும் சம்மந்தியும் நிறைய பேசிக் கொண்டார்கள். ஆனால் மணப்பெண்ணும் மணமகனும் பேசுவது அரிதாக இருந்தது.

ரொம்ப அவசியம் என்றால் ஓரிரு வார்த்தை பேசினர், மற்றபடி இருவரும் பேசுவதே இல்லை. ஏன் இப்படி இருக்கிறான் ஏதாவது பிரச்சனையா என்று கேட்போமா என்று கூட பல சமயம் கீர்த்தி நினைப்பாள். ஆனால் அரவிந்தின் இறுகின முகம் அவளை எதும் கேட்க விடாது. அவன் ஒரு பயத்திலேயே பேசாமல் இருக்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை.

பிறகு திருமண ஷாப்பிங் அது இது என்று அவள் சற்று பிசியானதால், அவள் வேலைக்கும் செல்லவில்லை. லீவு எடுத்துக் கொண்டாள். அதனால் அரவிந்தைப் பார்க்க அதிக வாய்ப்பும் கிட்டவில்லை.

தண்டபாணியும் இல்லாததால் மனம் அரவிந்தை மிகவம் தேடியது. அதன் பிறகு தண்டபாணியைப் பற்றி ஏதாவது கேட்க விழைந்தாலும் அரவிந்;த் சரியாக பதிலளிக்கவில்லை. அரவிந்த் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தை நன்றாக பேசியிருந்தால் கூட கீர்த்தியின் மனம் அமைதியாகியிருக்கும். அதற்கான வாய்ப்மையே அரவிந்த் கொடுக்கவில்லை.

திருமண நாள் நெருங்க நெருங்க, லிசாவின் டெலிவரி நாளும் நெருங்கியது. மறுபடியும் அரவிந்த் விசாவிற்கு அப்ளை செய்திருந்தான். இந்த முறை தொழில் நிமித்தம் என்று அப்ளை செய்திருந்தான். ஹரிஷ{ம் அதற்கான பேப்பர்ஸ் எல்லாம் அனுப்பியிருந்தான்.

அனால் வீட்டில் லண்டன் செல்வதாக மறுபடியும் எப்படிக் கூறுவது என்று பயமாக இருந்தது. அதுவும் டெலிவரி கட்டாயம் திருமண சமயத்திற்கு அருகில் இருப்பதால், திருமணம் முடிந்த் கையோடு லண்டன் செல்வது மாதிரி இருக்கும் என்பது இன்னும் அவனுக்கு டென்ஷனைக் கொடுத்தது.

வீட்டில் மட்டுமல்ல கீர்த்தியிடமும் காரணம் சொல்ல வேண்டுமே என்றிருந்தது. கீர்த்தி தன்னைப் புரிந்து கொள்வாளா. அது தண்டபாணியின் குழந்தை என்று தெரிந்தால் அவள் அந்தக் குழந்தையை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவாள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் அதைதான் அரவிந்த் சொல்லப் போவது இல்லையே. தன் குழந்தை என்று தானே கூறப்போகிறான். ஏனென்றால் தன் தாய் தந்தைக்கு இது தன் குழந்தை இல்லை என்று தெரிந்தால் கட்டாயம் வளர்க்க விட மாட்டார்கள் என்று தெரியும்.

அதற்காகவேணும் இதை தன் குழந்தை என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். எதையும் யோசிக்க வேண்டாம் முதலில் குழந்தை நன்றாக பிறக்க வேண்டும். அதை லிசா தன்னை நம்பி கொடுக்க வேண்டும். பிறகு எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தவன், லிசாவின் அன்னையை தொலைபேசியில் அழைத்து மீண்டும் ஒருமுறை அவர் குழந்தையை தன்னிடம் கொடுக்க செய்வாரா என்று கேட்டு, அவர் கொடுக்கச் செய்வேன் என்று சொல்லிய பிறகே நிம்மதியாக மூச்சு விட்டான்.

முதல் நாள் நிச்சயதார்த்தம் மறுநாள் திருமணம் என்ற நிலையில், நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அழகுப் பதுமையாக அமர்ந்திருந்தால் கீர்த்தி. இவ்வளவு அழகாக கீர்த்தி அலங்காரம் செய்து அமர்ந்திருக்கும்போது அரவிந்த் எப்படி அவளைப் பார்க்காமல் இருப்பான். நெடுநாளைக்குப் பிறகு கீர்த்தியை விழியெடுக்காமல் பார்த்தான்.

அரவிந்தின் பார்வையை உணர்ந்த கீர்த்தியும் முகம் சிவந்தாள். இந்தக் கல்யாணம் முடிவான தினத்தில் இருந்து அரவிந்த் முதல் முறையாக ஒரு காதல் பார்வை பார்க்க… அதை உணர்ந்த கீர்த்தியும் நாணினாள்.

அவர்களின் இல்லறம் நல்லறமாக இனிதே துவங்கும் என்று நினைத்த வேளையில் மறுபடியும் எங்கோ மணியடித்தது.

எங்கு – அரவிந்தின் செல்போனில் அடித்தது. ஹரிஷ் அழைத்திருந்தான். லிசாவிற்கு வலியெடுத்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருப்பதாக.

அரவிந்தின் உற்சாகம் மொத்தமும் வடிந்து டென்ஷன் ஏறிக் கொண்டது. போன் வந்தது, அரவிந்த் பேசியது பின்பு அவன் முகத்தில் டென்ஷன் ஏறியது என்று அனைத்தையும் கீர்த்தி பார்த்துக் கொண்டுதானிருந்தாள். இவ்வளவு நேரம் நன்றாகத் தானே இருந்தான், இப்போது என்னவாயிற்று இவனுக்கு என்று பாராமல் அவனைப் பார்த்து… அவனை தன் கண் பார்வையிலேயே வைத்திருந்தாள்.

அதன் பிறகு ஏறிய டென்ஷன் இறங்கவில்லை அரவிந்திற்கு. நிச்சயம் முடிந்து பெண் அழைப்பிற்கான நிகழ்வுகள் துவங்க… கிடைக்கும் சந்தர்ப்பத்தில் கீர்த்தி அவன் முகம் பார்க்க, அது அவளுக்கு ரெஸ்ட்லெஸ்ஸாகத் தெரிந்தது.

பொறுக்க மாட்டாமல் அவன் தொலைபேசிக்கு அழைத்த கீர்த்தி, “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க, ஏதாவது டென்ஷனா” என்றாள் நேரடியாக.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை கீர்த்தி.”

“இல்லை, நான் பார்த்துட்டு இருந்தேன். ஒரு போன் வந்தது பேசினீங்க, இப்படி ஆயிட்டீங்க.”

“எப்படி ஆயிட்டேன். எப்படியும் ஆகலை, மே பி மேரேஜ் டென்ஷனா கூட இருக்கலாம்.”

“ஏன் நான் உங்களை என்ன பண்ணப்போறேன்னு இவ்வளவு டென்ஷன்.”

“அதுதான் எனக்கும் தெரியலை” என்று சற்று ஜோவியலாகப் பேச முயன்றாலும், குழந்தை பிறந்திருக்குமோ இல்லையோ என்றுதானிருந்தது.

எப்போது கீர்த்தி தொலைபேசியை வைப்பாளோ என்றிருந்தது. கீர்த்தி பேச ஆர்வம் காட்டினாலும், “இங்க நிறைய பேர் இருக்காங்க. நான் அப்புறம் பேசறேன் கீர்த்தி” என்று போனை வைத்தான்.

Advertisement