Advertisement

12

தண்டபாணியின் உடலோடு சென்னை செல்வதா இல்லையா என்று அரவிந்திற்கு பெருங்குழப்பமாக இருந்தது. இங்கே லிசாவின் அம்மா, குழந்தையை எதுவும் செய்யமாட்டோம் என்று சொன்னாலும் நம்ப மனம் மறுத்தது. அதனால் உடலை மட்டும் அனுப்பிவிட்டு தன் விசா காலாவதி ஆகும் வரை அங்கேயே இருக்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.

தங்குவது பிரச்சனையில்லை, தண்டபாணியின் வீடு இருக்கிறது. இன்னும் ஆறு மாதத்திற்கு அங்கே அவன் தங்கிக்கொள்ளலாம் என்ற ஒப்பந்தமும் இருக்கிறது. அதனால் தங்குவது பெரிய பிரச்சனையாகாது என்ற பட்சத்தில் அவன் அங்கேயே இருப்பது என்று முடிவு செய்தான்.

தண்டபாணியின் வாரிசை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியே அவனுள் உருவாகிக் கொண்டிருந்தது. அவர்களுள் இருந்த நட்பின் காலம் கொஞ்சம் என்றாலும் ஆழம் அதிகம். எப்படியாவது அவன் குழந்தையைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணமே மிகுந்திருந்தது.

லிசாவை அவளின் அன்னை அதன் பிறகு தனியாக விடவில்லை. அவளோட இருந்தார். ஒரு வழியாக இரண்டு நாள் போராட்டங்களுக்குப் பிறகு தண்டபாணியின் உடலை இந்தியாவிற்கு அனுப்பினர். எவனோ ஒரு பைத்தியக்காரன் செய்த வேலை அநியாயமாக ஒரு உயிரை பலி வாங்கிவிட்டது.

“யார் மீது கோபப்படுவது… கடவுளைத் தவிர” என்றே அரவிந்திற்குத் தோன்றியது. பரவாயில்லை தன் குழந்தை ஒன்று இந்த உலகத்திற்கு வரப் போகிறது என்ற செய்தியோடயாவது அவன் உயிர் பிரிந்ததே என்றிருந்தது. மிகவும் சோர்வாக உணர்ந்தான். தனிமை அவனைத் தாக்கியது. ஒரு புறம் மனது ஊருக்கு செல் என்று கூறியது. இன்னொரு புறம் மனது நீ சென்றவுடன் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்று தோன்றியது. குழப்பமாக இருந்தது.

இந்தியாவில் இரண்டு நாட்களாக மகனின் உடலை எதிர்பார்த்துக் காத்திருக்க… நான்காவது நாள் அதிகாலையில் தான் உடல் வந்து சேர்ந்தது. அரவிந்த் தன் தந்தையிடம் சொல்லியிருந்தான் அவர்களுக்கு என்ன தேவையோ கூட இருந்து செய்யுமாறு.

அவ்வளவு பெரிய மகனைத் தூக்கிக் கொடுப்பது என்றால் சாதாரணமா என்ன? மிகவும் மனதொடிந்து இருந்தனர். தண்டபாணியின் பெற்றோரும் அவன் தங்கையும்,

அரவிந்தின் தந்தை முன் நிற்க… தண்டபாணியி;ன உறவினர்களே எல்லா காரியங்களையும் செய்தனர். ஒரே நாளில் மிகுந்த மூப்பாகிப் போனார் தண்டபாணியின் தந்தை ராஜேந்திரன்.

“எனக்கு அவன் கொள்ளி வைப்பது போய் நான் அவனுக்கு கொள்ளி வைப்பதா” என்று கதறினார். யாராலும் அவரைத் தேற்ற முடியவில்லை. கீர்த்திதான் ஓரளவு சமாளித்து அன்னையையும் தந்தையையும் தேற்றிக் கொண்டிருந்தாள்.

மனதின் ஓரம் கீர்த்திக்கு சிறு கேள்வி எழுந்தது. எப்படி அரவிந்த் லண்டனிலேயே இருந்து கொண்டான். ஏன் அண்ணனின் உடலுடன் வரவில்லை. அவ்வளவுதானா அவன் நட்பு. நட்பை விட வெளிநாட்டு மோகம் அவனைப் பிடித்தாட்டுகிறதோ என்றிருந்தது.

“இறந்து போய்ட்டதா ஏன்பா நினைக்கறீங்க… அண்ணா ஊருலயே இருக்கறதா நினைச்சிக்கோங்கப்பா” என்று கீர்த்தி தன் பெற்றோர்களிடத்தில் சமாதானமாகக் கூறி… தனக்கும் சேர்த்துக் கூறிக் கொண்டாள். அரவிந்த் வராதது இன்னும் அவளுக்கு வருத்தமாக இருந்தது.

அவன் வராத வருத்தம் சிறிது சிறிதாகக் கோபமாக உருமாற ஆரம்பித்தது. ஆனால் அதை யார் மேலும் காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.

அரவிந்திற்கு லிசாவைப் பற்றி கீர்த்தியின் வீட்டில் சொல்வதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. அவனுடைய வெளித் தோற்றம், மிகவும் நல்ல பையன். திடீரென்று அதை உடைத்து, தண்டபாணி ஒரு பெண்ணோடு தாலி கட்டாமல் குடும்பம் நடத்தினான் என்று சொன்னால் நம்புவார்களா.

அவன் உயிரோடு இருந்து சொன்னாலே நம்புவது கடினம். அவன் இறந்த பிறகு சொன்னால் நம்புவார்களா என்று இருந்தது. தண்டபாணியின் தந்தை…

நம்புவதும் நம்பாததும் இரண்டாம் பட்சம், அதை வெளியில் சொன்னால், தண்டபாணியின் குழந்தை தந்தையில்லாத குழந்தையாக வளர நேரிடும். எப்படியும் அவருக்குத் தெரிந்தால் அவருடைய குடும்பத்துக்குத் தெரியும். எப்படியும் தன்னுடைய குழந்தையாக தான் அதை வளர்த்தாலும்… ஒரு சமயம் இல்லை ஒரு சமயம் சொல்லிக் காட்டுவர். அது குழந்தையின் மனதில் தேவையில்லாத நினைவுகளைக் கொண்டு வரும்.

பிறப்பதற்கு முன்பிருந்தே இது என் குழந்தை தான். என் குழந்தையாக தான் உலகில் இது ஜனிக்க வேண்டும். யாருக்கும் அது தண்டபாணியின் குழந்தை என்று தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்ற ஆரம்பித்தது.

குழந்தை ஒன்றே முழு மூச்சாக இருந்தது. தன்னுடைய தாய் தந்தை என்ன நினைப்பர், கீர்த்தி என்ன நினைப்பாள்… தனக்கு அவள் மனைவியாக வேண்டும். லிசா இதற்கு ஒத்துக் கொள்வாளா, எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. அவன் ஞாபகத்தில் இருந்ததெல்லாம் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும். தன் குழந்தையாக வளர வேண்டும்.

அவன் காதல் அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. கீர்த்தியின் ஞாபகம் இருந்தாலும் எப்படியாவது அவளைச் சமாளித்துதான் ஆக வேண்டும் என்று நினைத்தானே தவிர அவளிடமும் அது தண்டபாணியின் குழந்தை என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை.

லிசாவின் அம்மா அவளைத் தன்னோடு வந்து விடும் படி அழைக்க… “நோ மம், அரவிந்த் எங்களை நம்பி லண்டன் வந்திருக்கான், அவனை அனுப்பிட்டுதான் நான் எதுவும் யோசிக்க முடியும்… திடீர்னு அம்போன்னு அவனை விட முடியாது” என்று ஒருமையிலேயே பேசினாள். தண்டபாணியின் நண்பன் என்ற உரிமை கொடுத்த தைரியம் அது.

அவள் மிகவும் மனநலம் குன்றி இருந்ததால் அவள் அன்னையும் அவள் போக்கிலேயே விட்டார்.

தண்டபாணி இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. சமையலே தெரியாத அரவிந்திற்கு சமையல் பொறுப்பு வந்தது. லிசா எதுவும் சமைப்பதும் இல்லை. சாப்பிடுவதும் இல்லை.

அரவிந்த் தான் இண்டர்நெட்டைப் பார்த்துப் பார்த்து ஏதோ ஒன்று சமைத்து அவளைச் சாப்பிட வற்புறுத்துவான். அவளை வற்புறுத்தி கடிந்து சாப்பிட வைப்பான்.

அவள் அம்மா இரண்டு நாளைக்கொருதரம் வந்து பார்த்து செல்வார். பத்து நாட்களுக்கு மேல் இப்படியே கழிந்தது. வீட்டிலேயே அடைந்து கிடக்க விரும்பாமல் மீண்டும் வேலைக்குப் போகலாம் என்று இருக்கிறேன் என்று அரவிந்திடம் லிசா கூறினாள்.

“ரொம்ப நாள் ஆகிடிச்சு அர்வி, ஐ திங்க் ஐ நீட் டு கோ ஃபார் த ஜாப்” என்றாள் லிசா அரவிந்தை பார்த்து, தண்டபாணியைப் போல் அர்வி என்றே அழைத்தாள்.

“எப்போ இருந்து” என்றான் அரவிந்த்.

“மே பி ஃப்ரம் டுமாரோ” என்றாள்.

அவள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள், தண்டபாணியின் ஞாபகங்கள் அவளை அலைகழிக்கும் என்று உணர்ந்த அரவிந்திற்கும் அவள் முடிவு சரி என்றே பட்டது.

அடுத்த நாள் லிசா வேலைக்குக் கிளம்ப… என்ன செய்வது என்று அறியாத அரவிந்தும், “நான் உன்னை விட வரட்டா” என்றான்.

“நீ எப்படி திரும்ப வருவ…”

“நான் வந்துடுவேன் எனக்கு வழி தெரியும்.”

இருவரும் கிளம்பினர். அவள் வேலை செய்வது, தமிழர் ஒருவர் நடத்தும் பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில். நான்கு மாடிகளைக் கொண்ட பெரிய ஸ்டோர். அதில் லிசா ஒரு இன்சார்ஜ் ஆக பணிபுரிந்தாள். அதன் ஓனர் லிசாவின் தந்தையின் நண்பர். லிசாவின் தந்தையின் உதவியால் இங்கிலாந்து வந்து செட்டில் ஆனார்.

அதனால் லிசாவின் மீது மிகுந்த பிரியம் வைத்திருப்பவர். அவள் எத்தனை நாட்கள் வேலைக்குப் போகாமல் இருந்தாலும் அவளுடைய சம்பளம் வந்துவிடும். அவளுக்கே அங்கே நிறைய சிறப்பு சலுகைகள் இருந்தன. இருந்தாலும் லிசா எதையும் அதிகம் உபயோகப்படுத்த மாட்டாள். மிகவும் கரெக்டாக இருப்பாள் அவள் வேலையில். அதைப் பார்த்தே அவளுக்கு நிறைய சிறப்பு சலுகைகள் கொடுத்திருந்தார் அந்த ஸ்டோரின் ஓனரான ராஜன்.

லிசாவைப் பார்த்ததும், “என்ன லிசா அதுக்குள்ள வந்துட்ட, ரெஸ்ட் எடுத்துட்டு உடம்பு சரியானதும் வாம்மா.”

“ஐ அம் ஓகே அங்கிள். ஐ கேன் வாக்.”

“சரி உன் இஷ்டம்.”

“அங்கிள் இது தண்டுவோட ப்ரண்ட் அர்வி, உங்க கிட்ட சொல்லியிருக்கேன் இல்லை.”

“தெரியும்மா” என்றார். தண்டபாணியின் உடலைப் பார்க்க போன போது பார்த்திருந்தார்.

“இன்னும் விசா முடியலை அங்கிள். இன்னும் பைவ் மந்த்ஸ் இருக்கு. அதுவரைக்கும் என் வீட்லதான் கெஸ்ட்டா இருக்காங்க.”

“ஓ, அப்படியாம்மா” என்றார்.

“ஓகே அர்வி, உனக்கு வழி தெரியுமில்ல, நீ போ.”

“நான் அங்க போயி என்ன பண்ணப் போறேன். உங்களுக்கு இங்கே ஏதாவது ஹெல்ப் பண்ண முடியும்னா பண்ணவா சார்” என்றான்.

“இங்கே வேலைக்கு கம்மியில்லை அரவிந்த். ஆனா நீங்க இங்க என்ன வேலை பண்ண முடியும்.”

“எதுவேணா செய்வேன் சார். எங்களுக்கு ஊர்ல அங்க பர்னிச்சர் ஷோரூம் தான். ஸோ அது ரிலேட்டடா ஏதாவது வேலை இருந்தா குடுங்க.”

சற்று யோசித்தவர், லிசாவின் முகத்தைப் பார்க்க, நம்பி கொடுக்கலாம் என்றே அது இருக்க… “சரி, நான் வேலை கொடுக்கச் சொல்றேன்” என்று அந்த ஃபர்னிச்சர் இருந்த செக்ஷனுக்கு அவனை அழைத்துச் சென்று… சிறிது நாட்களுக்கு மட்டும் இருப்பான் என்று சொல்லி வேலை கொடுத்தார்.

பிறகு நாட்கள் வேகமாக ஓடின… காலையில் இருவரும் சேர்ந்தே வேலைக்கு வந்தனர். மாலையில் இருவரும் சேர்ந்தே வீடு திரும்பினர்.

லிசா தண்டபாணியின் குழந்தையை சுமப்பதினால், அரவிந்த் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டான். இந்தப் பெண்ணை ஏன் இவன் இந்தத் தாங்கு தாங்குகிறான் என்று மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு அவளைத் தாங்கினான்.

மாதங்கள் உருண்டோடின… இன்னும் ஒரு மாதமே இருந்தது அரவிந்த் இந்தியா திரும்புவதற்கு. எப்படி குழந்தையை கையகப்படுத்துவது. ஒருவேளை லிசாவே, நானே வளர்க்கிறேன் என்று சொல்வாளா, அப்படிச் சொன்னால் விட்டு தானே ஆக வேண்டும்… அவள் தானே அன்னை… அவளே வளர்க்கட்டும் என்று விட்டுவிட்டு இந்தியா திரும்பிவிடவா என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் ஒரு நாள் ஹரிஷ் வந்தான்.

ஹரிஸ், அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் உரிமையாளர் ராஜனின் மகன். அரவிந்த் வந்த இந்த நான்கு மாதங்களில் ஒரு நாள் கூட அவனை ஸ்டோரில் பார்த்ததில்லை.

வந்தவன் நேரே வந்தது லிசாவிடம்தான்.

“ஹாய் பேபி இது என்ன கோலம்” என்றான்.

லிசா எதுவும் பேசாமல் அவள் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.

“நீயே ஒரு பேபி, உனக்கொரு பேபியா.”

அவன்புறம் திரும்பக்கூட இல்லை லிசா…

“அப்படி என்ன பேபி என்கிட்ட இல்லாதது அவன் கிட்ட இருக்குன்னு போன… இப்ப பாரு அவன் இந்த உலகத்தை விட்டே போயிட்டான்.”

இவ்வளவு நேரமாக அவன் புறம் திரும்பிக்கூட பார்க்காமல் இருந்த லிசா, இப்போது அவன் புறம் திரும்பி முறைத்தாள்.

“போய்டு ஹரிஷ். நீ தண்டுவ பத்தி ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது போய்டு” என்றாள் கோபமாக…

“அப்படிதான் பேசுவேன். நீ ஏன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டு அவன் பின்னாடி போன. அவன் இறந்ததுக்கு அப்புறமும் அவன் குழந்தையை சுமந்துட்டு இருக்க… அப்படி அவன் என்ன ஸ்பெஷல்.”

லிசா பதில் பேசாமல், அரவிந்த் இருந்த இடத்திற்கு வந்து… “நாம போகலாம் அர்வி. இன்னைக்கு நாம வேலை பார்த்தது போதும் வா. சொல்லிட்டுக் கிளம்பு” என்றாள்.

அதற்குள் அந்த இடத்திற்கும் வந்திருந்தான் ஹரிஷ். “இது யாரு புதுசா. நீ அந்த தண்டபாணியை விட்டு யார் பக்கமும் திரும்ப மாட்டியே இவன் யாரு” என்றான் அரவிந்தையே பார்த்தபடி.

அவர்கள் பேசிக் கொள்வது தமிழில் என்பதால் அருகில் இருந்தவர்களுக்குப் புரியவில்லை.

பதில் சொல்லும்வரை விட மாட்டான் என்றுணர்ந்த லிசா, “அரவிந்த் இது ஹரிஷ், ராஜன் சாரோட பையன்.”

“ஹரிஸ் இது அரவிந்த், தண்டபாணியோட ப்ரெண்ட். இப்போ என்னோட கெஸ்ட்” என்றான்.

“ஓ தண்டபாணியோட ப்ரெண்டா, ஹலோ அரவிந்த் நான் லிசாவோட முன்னால் ப்ரெண்ட்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் ஹரிஷ்.

அரவிந்த் பதிலுக்கு பேசும் முன்பே, “நீ வா அரவிந்த்” என்று லிசா அவனைக் கையைப் பிடித்து இழுத்துப் போனாள். சிறிது தூரம் வந்ததும் தான் அவன் கையை விட்டவள், “குடிகாரப் பையன், விட்டா பேசிட்டே போவான்” என்றாள்.

“உங்களோட முன்னாள் ப்ரெண்டா அவன்.”

“இப்போ கூட அவன் என் ப்ரெண்ட் தான். சின்ன வயசுல இருந்தே நானும் அவனும் ப்ரெண்ட்ஸ். தண்டு என் வாழ்க்கைல வந்ததுக்குப் பிறகு தான் நாங்க பிரிஞ்சுட்டோம்.”

“ஐ வாஸ் மேட்லி இன் லவ் வித் தண்டு. அது இவனுக்குப் பிடிக்கலை. அதனால என்னை தண்டுவை விட்டுடச் சொல்லி ரொம்ப ஃபோர்ஸ் பண்ணினான். நான் போடான்னு அவனை விட்டுட்டேன். அப்போ இருந்து என்னைப் பார்க்கும்போது எல்லாம் சண்டை போடுவான். அது குடிச்சிருந்தா இன்னும் அதிகமா பேசுவான். நான் முடிஞ்சவரை அவனைத் தவிர்த்திடுவேன். இப்போ ஹையர் ஸ்டடீஸ்க்காக நெதர்லாண்ட் போயிருந்தான். நேத்துதான் வந்தான். அங்கிள் சொன்னார்” என்றாள்.

“தண்டபாணியை கூட யாருக்காவது பிடிக்காமப் போகுமா என்ன? இவனுக்கு மட்டும் ஏன் பிடிக்கலை” என்று அரவிந்த் கேட்க…

“ஏன்னா, அவனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்” என்றாள் லிசா… அரவிந்திற்குப் புரிந்தது.

இவ்வளவு அழகான லிசாவை, ஒருவேளை சின்ன வயதில் இருந்து ஹரிஷ் விரும்பியிருந்தால், திடீரென்று ஒருவனுக்கு தூக்கிக் கொடுக்க முடிந்திருக்காது என்று அரவிந்திற்கு புரிந்தது. ஹரிஷின் நிலை ஓரளவு அரவிந்திற்கு நன்கு புரிந்தது. ஏன் இவர்கள் இருவரும் புது வாழ்வு தொடங்கக் கூடாது என்று அரவிந்திற்கு தோன்றியது. குழந்தையைத் தனக்குக் கொடுத்துவிட்டால், அப்புறம் லிசாவின் வாழ்க்கையில் தடை என்ன இருக்கிறது என்றே அரவிந்திற்குப் பட்டது.

இதைப் பற்றி லிசாவிற்கு தெரியாமல் ஹரிஷிடம் பேச வேண்டும் என்று அரவிந்த் நினைத்துக் கொண்டான்.

என்ன இருந்தாலும் இங்கிலாந்து பெண் என்பதால் லிசாவை மனம் நம்ப மறுத்தது. கீர்த்தியின் ஞாபகம் அடிக்கடி வந்தாலும் அவளை அழைத்துப் பேசத் தோன்றவில்லை. குழந்தையை கையகப்படுத்தும் வரை வேறு எந்த நினைவும் மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

அங்கே இந்தியாவில் கீர்த்தியின் நிலையோ சொல்லவே வேண்டாம், தண்டபாணி இறந்தது ஒரு புறம், தன் தாய் தந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு ஒருபுறம், அரவிந்தின் மேல் உதித்த காதல் ஒருபுறம்.

என்ன வேலை இருந்தாலும் ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்ல முடியாமல் போனதா என்று அரவிந்தை நினைத்து கீர்த்திக்கு வேதனையாக இருந்தது. அரவிந்த் லண்டன் போவதற்கு முன் அவளிடம் நடந்து கொண்ட நினைவுகள் சொல்லொணாத் துயரத்தைக் கொடுத்தது. பலமுறை, தாமாக அவனை அழைத்துப் பேசுவோமா என்று நினைத்தாள். ஆனால் இப்படிப்பட்ட சூழலில் கூட தன்னை அழைத்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லாதவனிடத்தில் தான் பேசுவதா என்று விட்டு விட்டான்.

அதுவும் அவர்களிடத்திலேயே வேலை செய்வதால் அவன் ஞாபகங்கள் அதிகம். தண்டபாணி இறந்த சமயத்தில், அரவிந்தின் தந்தை நிறைய உதவிகள் செய்தார். அவர்கள் உறவினர்கள் எடுத்துக்கட்டி செய்தாலும், அரவிந்தின் தந்தையும் யோசியாமல் எல்லா செலவையும் செய்தார்.

யார் இதற்கெல்லாம் செலவு செய்கிறார்கள் என்று யோசிக்க முடியாத சூழலில் கீர்த்தியின் பெற்றோரும், கீர்த்தியும் இருந்தனர். அவர்தான் எல்லா செலவுகளையும் செய்தார்.

பின்னர் கொஞ்சம் தெளிந்த பிறகு அதனை உணர்ந்து கீர்த்தி அவருக்கு பணம் திரும்ப கொடுக்க முற்பட வாங்க மறுத்தார்.

கீர்த்தியின் தந்தையே நேரே வந்து, “இந்தச் செலவு என் பையனுக்கு நான் செய்ததாதான் சார் இருக்கணும்.” என்று சொல்லிய பிறகே வாங்கிக் கொண்டார் சிதம்பரம்.

கீர்த்தியை அரவிந்த் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்ன பிறகு, கீர்த்தி மேல் சிதம்பரத்திற்கு ஒரு தனி பாசமே ஏற்பட்டிருந்தது.

லண்டனில் அரவிந்த், அடுத்த நாள் ஹரிஷிடம் தானாகவே போய் பேச்சுக் கொடுத்தான். ஹரிஷ் முதலில் அவனிடம் பேச ஆர்வம் காட்டவில்லை. ஆனால் லிசாவை பற்றிய பல தகவல்கள் அவன் பேச்சில் அடங்கியிருந்ததால் அவனும் பதிலுக்குப் பேச்சு கொடுத்தான்.

“லிசாவும் நீங்களும் ரொம்ப ப்ரெண்ட்ஸாமே ஹரிஷ் லிசா சொன்னா.”

“அவ என்னைப் பத்திகூடப் பேசறாளா.”

“பேசறாளாவா, நேத்து இங்க உங்களை இங்கே பார்த்த பிறகே உங்களைப் பத்தி தான் நிறைய பேசினா.”

“அப்படியா” என்று நம்பாமல் பார்த்தான் ஹரிஷ்.

அவனின் நம்பாத பார்வையை உணர்ந்த அரவிந்தும், “என்னை நம்பலையா நீங்க… நிஜமாதாங்க சொல்றேன்.”

சிறிது ஸ்நேகப் பார்வை ஹரிஷிடம் இருந்து வெளிப்பட்டது.

“என்ன சொன்னா என்னைப் பத்தி.”

“இன்னும் நீங்க அவங்க நண்பன்னு சொன்னாங்க.”

“நிஜமாவா.”

“நிஜாதாங்க, நீங்க மட்டும் தண்டபாணியை திட்டுறதை விட்டுட்டு வேற பேசுங்க… அவ உங்ககிட்ட நல்லா பேசுவா, வேணா ட்ரை பண்ணிப் பாருங்க” என்றாள்.

உடனேயே லிசா இருக்கும் இடத்திற்கு சென்ற ஹரிஷ், அவளிடம் சாதாரணமாகப் பேச ஆரம்பித்தான்.

“எப்படி இருக்க லிசா, நேத்து கொஞ்சம் கண்ட்ரோல் இல்லாம உளறிட்டேன், ஹவ் ஆர் யூ.”

தண்டபாணியுடன் லிசா பழக ஆரம்பித்ததில் இருந்து, இப்படி சாதாரணமாக ஹரிஷ் லிசாவுடன் பேசியதேயில்லை. அவனையே கண் எடுக்காமல் அதிசயமாகப் பார்த்தாள் லிசா.

ஹரிஷ{ம் அவள் பார்க்கட்டும் என்று அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான்.

ஹரிஷ் அவன் இயல்புக்கு மாறாக தாடி வைத்திருந்தான். சற்று இளைத்திருந்தான். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் அவன் கண்கள், இப்போது அவளையே ஏக்கத்தோடு பார்த்திருந்தது.

“நான் நல்லா இருக்கேன் ஹரிஷ், நீ ஏன் டல்லா இருக்க” என்ற லிசாவின் பதில் கேள்விக்கு.

“உன்னாலதான்னு உனக்குத் தெரியாதா” என்றான் பளிச்சென்று.

“நீ இப்படி பேசறதால தான் நான் உன்னோட பேசறதே இல்லை” என்று லிசா திரும்பி போகப் போக… அவள் கையைப் பற்றி நிறுத்தியவன்…

“நில்லு லிசா இனிமே நான் இப்படிப் பேச மாட்டேன். உடனே போகாத… உன் உடம்பு எப்படியிருக்கு… இப்போ எத்தனை மந்த், டெலிவரி எப்ப சொல்லி இருக்காங்க” என்று சகஜமாகப் பேச…

குழந்தையைப் பற்றிக் கேட்டவுடன், அவளும் நின்று நிதானமாகப் பதிலளித்தாள். “இப்போ எய்ட்த் மந்த்… நெக்ஸ்ட் மந்த் என்ட்ல ஆகும்னு எக்ஸ்பெக்ட் பண்றாங்க.”

குழந்தையைப் பற்றி பேசும்போது ஓர் ஆர்வமெல்லாம், லிசாவிடம் இல்லை… மாறாக ஒரு அமைதிதான் இருந்தது.

தண்டபாணியைப் பற்றி எதுவும் ஹரிஷ் பேசாததாலேயே அவனிடம் பேச்சை வளர்த்தினாள் லிசா… “உன் படிப்பெல்லாம் முடிஞ்சுதா ஹரிஷ்.”

“முடிஞ்சுது. ஆனா என்ன பிரயோஜனம் திரும்ப வந்து பார்த்தா நீ இப்படி இருக்க” என்றான் அவளின் நிலையைச் சுட்டிக்காட்டி… இந்த முறை கோபத்தை அடக்க முடியாமல், லிசா அந்த இடத்தை விட்டு வேகமாக போய்விட்டாள்.

சிறிது நேரம் கழித்து அரவிந்த் இருக்கும் இடத்திற்கு வந்தான் ஹரிஷ்… “என்ன பேசினீங்களா” என்றான் அரவிந்த் ஆர்வமாக…

“ஹேய் யூ, இந்த ங்களா எல்லா விட்டுடு, கால் மீ ஹரிஷ்.”

“ஓ.கே. என்ன ஆச்சு, மறுபடியும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டீங்களா…”

“இல்லை, நான்தான் கொஞ்சம் தேவையில்லாதது எல்லாம் பேசிட்டேன், மறுபடியும் கோபிச்சிட்டுப் போயிட்டா.”

“நான் சொல்லிதானே அனுப்பினேன்.”

“எனக்கே தெரியும்தானே. இருந்தாலும் அவளைப் பார்க்கும்போது, கண்ட்ரோல் பண்ணாம பேசிடறேன்.”

“எனக்கும் அவளுக்கும் ஆறு வயசு வித்தியாசம். அவ பொறந்ததுல இருந்து எனக்கு அவளைத் தெரியும். அவளும் என்னோட ரொம்ப க்ளோஸ்தான். எல்லாம் இந்த தண்டபாணியைப் பார்க்கிற வரைக்கும் தான். எப்போ அவனைப் பார்த்தாளோ, அவன் மேல பைத்தியமா சுத்தினா, அவனோட கல்யாணம் பண்ணிக்காமயே வாழ்ந்தா… இப்போ இந்த நிலைமையில் நிக்கறா. அவளே ஒரு பேபிதான். அவளுக்கு ஒரு பேபியா” என்றான் வருத்தத்தோடு.

“தண்டபாணி இறந்ததுனால அவ இப்படியே இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே… நீங்க நினைச்சா அவளுக்கு வாழ்க்கை குடுக்கலாமே” என்றான் அரவிந்த்.

“நான் எங்க அவளுக்கு வாழ்க்கை குடுக்கறது. அவ தான் எனக்கு வாழ்க்கை குடுக்கணும்” என்றான் உணர்ச்சி வசப்பட்டு ஹரிஷ். “ஐ லவ் ஹர் லாட்” என்றான்.

“டோன்ட் வொர்ரி ப்ரோ, எவ்ரிதிங்க் வில் பி ஃபைன்” என்றான் அரவிந்த்… அவனை தேற்றும் விதமாக…

Advertisement