Advertisement

 

13

தண்டபாணி இல்லாத தனிமையில் அரவிந்திற்கு ஹரிஷின் நட்பு, ஒரு சிறு மருந்தாய் அமைந்தது. ஹரிஷ{ம் நன்றாகப் பழகினான் தான். ஆனால் அதில் நிறைய அவனுடைய பேச்சுகள் லிசாவையே குறிக்கும். இந்த அவனுடைய செயல்களே ஹரிஷ் லிசா மீது கொண்ட காதலை உணர்த்தின.

அன்றிரவே லிசாவின் அன்னையுடன் பேசினான். குழந்தையைப் பற்றி… குழந்தை பிறக்கும் முன்பே தன் விசா பீரியட் முடிந்துவிடும். அதனால் தான் இந்தியா செல்ல வேண்டி இருப்பதால், குழந்தையை தான் எப்படி எடுத்துச் செல்வது, பிறகு திரும்ப வரவேண்டுமா, வந்தாலும் இந்த நாட்டு சட்ட திட்டங்கள் குழந்தையை எடுத்துச் செல்ல அனுமதிக்குமா… அதனால் லிசாவை தான் ஏன் இந்தியா அழைத்துச் செல்லக் கூடாது… குழந்தை பிறந்ததும் தான் லிசாவை திரும்ப லண்டன் அனுப்பி விடுகிறேன் என்றான்.

ஓரிரண்டு முறை அரவிந்த் லிசாவிடம் குழந்தையை தன்னிடம் கொடுத்து விடுமாறு பேசினான் தான். ஆனால் தண்டபாணி இறந்த துக்கத்தில் இருந்ததால் லிசா அந்தப் பேச்சை அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இப்போது அரவிந்த் அவள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பது தெளிவாக லிசாவிற்குக் கேட்டது. இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. தண்டபாணியின் மேல் அவ்வளவு நட்பா. என் குழந்தையை நான் ஏன் கொடுக்க வேண்டும். முதலில் நான் கொடுப்பேன் என்று எப்படி இவன் நம்புகிறான் என்று புரியவில்லை லிசாவிற்கு.

அவன் உள்ளே வந்ததுமே லிசா ஆரம்பித்தாள்… “என்ன அர்வி பண்ணிட்டு இருக்க நீ… நான் குழந்தையை வளர்த்துப்பேன். உன்கிட்ட குடுக்கமாட்டேன்.”

“ஏன் குடுக்கமாட்ட… இந்த குழந்தையை, நான்… நான் நல்லா வளர்ப்பேன். அதில் உனக்கு சந்தேகமே வேண்டாம்.”

“அம்மா நான் இருக்கேன் அர்வி… நான் வளர்த்துப்பேன்.”

“நீ உனக்கொரு வாழ்க்கையை அமைச்சுக்கோ லிசா, அதுக்கு இந்தக் குழந்தை ஒரு தடையா இருக்க வேண்டாம்.”

“இப்பத்திக்கு எனக்கு எந்த எண்ணமும் கிடையாது அர்வி, காலப் போக்குல எனக்கொரு வாழ்க்கை அமைஞ்சாலும் அமையலாம். ஆனா அதுக்குக் குழந்தை எப்படி தடையா இருக்கும்.”

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவனுக்கு இந்தக் குழந்தையைப் பிடிக்காமல் கூட போகலாம்.”

“நான் தண்டபாணியையே கல்யாணம் பண்ணிக்கலை இன்னும் வேற யாரை பண்ணிப்பேன். என் குழந்தையை நான் பார்த்துக்கறேன்.”

“சும்மா அதையே பேசாதே லிசா. தண்டபாணியோட அப்பா அம்மா நினைச்சுப்பாரு, தண்டபாணி இஸ் நோ மோர். அவங்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வேண்டாமா… அவங்க குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேண்டாமா. நீ நினைச்சா ஒரு குழந்தையைப் பெத்துக்கலாம். யூ அர் யங். ஆனா அவங்க தண்டபாணியை இழந்துட்டு நிக்கறாங்க. அவங்களுக்கு இந்தக் குழந்தை அவசியம்.”

“நீ இப்போ இந்தக் குழந்தையை அவங்கிட்ட கொண்டுபோய் சேர்க்கப் போறியா.”

“உடனே கிடையாது… ஆனா காலப் போக்கில் சேர்ப்பேன். இப்போ அவங்க பையனோட குழந்தைன்னு சொன்னா… சந்தேகமாதான் பார்ப்பாங்க. ஏன்னா கண்ணால பார்த்த என்னாலயே, கல்யாணம் பண்ணாம தண்டபாணி, ஒரு பெண்ணோட குடும்பம் நடத்துவான். அவளை கர்ப்பமாக்குவான்னு ஜீரணிக்க முடியலை… இதுல அவங்க அப்பா அம்மா தன் பையனைப் பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டை நம்பாம கூட போகலாம்.”

“என்னோட தண்டபாணி வாழ்ந்த வாழ்க்கை ஒரு குற்றச்சாட்டா.”

“கல்யாணம் பண்ணாம வாழற வாழ்க்கை இந்தியாவில மிகப்பெரிய குற்றம்தான். உனக்கு அது எப்படிப்பட்ட விஷயம்ன்னு தெரியலை. ஆனா இதை நான் வெளில சொன்னா, இறந்த பிறகும் தண்டபாணிக்கு ஒரு கெட்ட பேரை கொடுக்கும். இந்தக் குழந்தையை மெதுவாதான் அவன் குடும்பத்தோட சேர்க்க முடியும்.”

“அவன் உயிரோட இருந்தா பிரச்சனையின் தீவிரமே வேற… அவன் உன்னை கல்யாணம் பண்ணிட்டுப் போய் நின்னா… எல்லாமே அடிபட்டுப் போகும். இப்போ தான் அவன் உயிரோட இல்லையே.”

“அதுவுமில்லாம இது ஒரு அப்பா பேர் தெரியாத குழந்தையா வளரக்கூடாது. என் குழந்தையா நான் இதை வளர்ப்பேன்” என்றான் குரலில் மிகவும் தீவிரத்தோடு.

பிறகு அவனே முயன்று குரலை மாற்றி… “புரிஞ்சுக்கோ லிசா இந்த குழந்தையோட உன் வாழ்க்கை முடிஞ்சிடக் கூடாது உன்னைச் சுற்றி உன்னை விரும்புறவங்க இருக்காங்க… ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கோ… என்னைக் கேட்டா கல்யாணம் பண்ணி வாழ்றதுதான் செக்யூர்டு ஃலைப். தண்டபாணியோட ஆத்மா கூட கட்டாயம் நீ ஒரு கல்யாணம் பண்ணி வாழ்றதைதான் விரும்பும். அவன் பேரைச் சொல்லி நீ தனியா இருந்தன்னா அவன் ஆத்மாகூட சாந்தியடையாது.”

“இந்தியா ஒரு புனித பூமின்னு தான் சொல்வாங்க… வா இந்தியா வா, வந்து இந்த குழந்தையைப் பெத்துக் கொடுத்துட்டு வந்துடு, இல்ல இங்கேயே பெத்துட்டாளும், லீகலா இந்தக் குழந்தையை எனக்கு தத்துக் குடுத்துடு ப்ளீஸ் லிசா” என்று வாழ்க்கையில் அவன் செய்யாத விஷயமான கெஞ்சலை அவன் பேச்சில் செய்தான்.

“இது தண்டபாணியோட வாரிசு அவங்க குடும்பத்துக்கு கட்டாயம் சேரணும்” என்று மீண்டும் வலியுறுத்தினான். அவள் முகம் யோசனையில் ஆழ்ந்தது… பேசிப் பேசிப் பேசிப்… அவளை கரைக்க ஆரம்பித்தான்.

“தண்டபாணியோட அப்பா அம்மாவை நினைச்சுப் பாரு” என்று அவனின் பெற்றோர்களை முன்னிருத்தியே பேசினான்.

“அப்பா இல்லாத குழந்தையா தண்டபாணியோட குழந்தை வளர வேண்டாம்” என்று பேசிப் பேசி அவனை கரைக்கப் பார்த்தவன், பின்பு லிசாவின் அம்மாவிடத்திலும் பேசச் சொல்ல… அவரும் பேசினார்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல லிசாவின் அம்மாவும், அரவிந்தும் லிசாவிடம் மாற்றி மாற்றி குழந்தையைப் பற்றிப் பேசினர்.

“ஏற்கனவே தண்டபாணியை இழந்து நிற்கற அவங்கப்பா – அம்மாவுக்கு இந்தக் குழந்தை பெரிய ஆறுதலையும், சந்தோஷத்தையும் கொடுக்கும்” என்று மாற்றி மாற்றிப் பேசினான்.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. லிசாவை ஸ்டோர் வரை கொண்டு வந்து விட்டு, கூட்டிச் செல்லும் பொறுப்பை ஹரிஷ் எடுத்துக் கொண்டான். அவனுக்கு பழக சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்ற நினைத்த அரவிந்தும், ஏதோ ஒரு காரணம் சொல்லி, அவள் போன பிறகே ஸ்டோர் போனான். அவள் கிளம்பிய பிறகே அவன் கிளம்பினான்.

ஹரிஷ{ம் ஓரளவு லிசாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்திருந்தான். முயன்று தண்டபாணியைப் பற்றி பேசாதிருந்ததால் லிசாவும் அவனோடு சுமுகமாகப் பழகினாள். குழந்தை ஒன்று அவள் வயிற்றில் இல்லாதிருந்தால் எல்லாம் முன்பு போலவே தோன்றும். லிசா ஓரளவு தண்டபாணியின் இழப்பில் இருந்து வெளியே வந்திருந்தாள்.

அரவிந்த் அடுத்த வாரம் ஊருக்குப் போக வேண்டும் என்ற நிலையில் மீண்டும் லிசாவுடன் பேசினான்.

“நீ இந்தியா வர்றியா லிசா” என்று…

“இல்லை நான் வரலை.”

“அப்போ இந்த குழந்தை, நான் தண்டபாணியோட குடும்பத்தோட இதைச் சேர்க்கணும். இது அவங்க குடும்ப வாரிசு. இனி நினைச்சா கூட அவங்களுக்கு வாரிசு வராது. எங்ககிட்ட குடுத்துடுறியா.”

“நீ இந்தியா போயிட்டு டெலிவரி அப்போ வா… அப்போ பேசலாம்” என்றாள்.

அரவிந்திற்கு மலைப்பாக இருந்தது. ஒரு தடைவ அவனை லண்டன் அனுப்புவதற்குள்ளேயே அவன் தந்தை அவனை ஒரு வழி செய்து விட்டார். மறுபடியும் எப்படிக் கேட்பது என்று யோசனையாக இருந்தது. எதுவாகினும் செய்து தான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு இந்தியா கிளம்ப ஆயத்தமானான்.

கிளம்புவதற்கு முன் ஹரிஷிடம் பேசினான். “எப்படியாவது தண்டபாணியோட குழந்தையை நான் இந்தியா கொண்டு போய் விடுவேன். அதுக்கப்புறம் லிசாவை நீங்க பார்த்துக்குவீங்களா, அந்தக் குழந்தையோட ஞாபகம் வராத அளவுக்கு.”

“அவ எனக்கு அந்த வாய்ப்பை குடுப்பான்னு நீங்க நினைக்கறீங்களா…”

“உங்களுக்கே குடுக்கலன்னா வேற யாருக்குக் குடுப்பா அவ சொல்லுங்க” என்றான் பதிலுக்கு அரவிந்த்.

அரவிந்தை அணைத்து தன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஹரிஷ். “லெட் மீ ஹோப் தட் யுவர் வொர்ட்ஸ் கம் ட்ரூ” என்றான் உணர்ச்சி வசப்பட்டு.

லிசாவிடம் பிறகும் பலமுறை பேசி, வாக்குறுதியைப் பெற்று, பிறகு தான் இந்தியா கிளம்பினான் அரவிந்த்…

அவன் வரும் தகவலை அவன் யாரிடமும் சொல்லவில்லை. திடீரென்று தான் தன் தாய் தந்தையர் முன் சென்று நின்றான் அரவிந்த்.

இருவருக்கும் திடீரென்று மகனைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி. “டேய் அரவிந்த், வரப்போறான்னு சொல்லவேயில்லை. நீயில்லாம வீடு வீடாவேயில்லைடா. இனிமே எங்கயும் போகக்கூடாது” என்றார் அவன் அன்னை. அரவிந்தின் முகம் உடனே சுருங்கி விட்டது. எப்படி மறுபடியும் லண்டன் போய் குழந்தையை எடுத்து வருவது என்று அப்படியே எடுத்து வந்தாலும் அவன் அம்மா அதை ஒத்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் உதிக்க…

“நீ உன் குழந்தைன்னு தானே அரவிந்த் சொல்லப் போற அப்புறம் என்ன” என்று மனசாட்சி கேள்வி கேட்க… சற்று தேறிக் கொண்டான்.

ஆனால் இந்தக் குற்றவுணர்ச்சி இருந்ததனால் சரியாக அவன் அம்மாவுடனும் அப்பாவுடனும் பேச முடியவில்லை. சீக்கிரம் தூங்கப் போகிறேன் என்று சொல்லிச் சென்று விட்டான். மறுநாள் ஷோரூமில் கீர்த்தியைப் பார்த்தான்.

கீர்த்திக்கு இவன் வருவதே தெரியாது. திடீரென்று அவனைப் பார்த்ததுமே, ஒரு புன்னகை அவளையறியாமல் தோன்றியது. ஆனால் அந்தப் புன்னகை அரவிந்தின் முகத்தில் தோன்றவில்லை. கீர்த்தி நிறைய இளைத்திருந்தர்ள். அவள் பொலிவு அவளின் நிமிர்வு எல்லாமே இல்லாமல் தெரிந்தது அரவிந்தின் பார்வைக்கு.

தண்டபாணியின் இழப்பு அவளை நிறைய பாதித்திருப்பது புரிந்தது. அவளைப் பார்த்து புன்னகைக்க முயன்றாலும், தண்டபாணியின் இழப்பு அவளைப் பார்த்தவுடனே தாக்க, புன்னகைக்க முயன்று தோற்றான்.

தன்னைப் பார்த்து ஒரு புன்னகைக்கு கூடவா பஞ்சமாகிப் போயிற்று என்று கீர்த்தி அவளுக்குள்ளே கேட்டுக் கொண்டு, எதுவும் பேசாமல் அவள் வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள்.

அப்போது தான் அவள் புன்னகைத்து தான் புன்னகைக்காததை உணர்ந்த அரவிந்த்… அவள் பின்னோடு சென்று… “எப்படி இருக்க கீர்த்தி” என்றான்.

“இருக்கோம்” என்றாள் பதிலுக்கு கீர்த்தி. அந்தக் குரலில் மிகுந்த விரக்தி தெரிந்தது.

“நீங்க அந்த ஸ்பாட்ல இருந்தீங்களா” என்றாள் திடீரென்று.

அவள் எதைக் கேட்கிறாள் என்று அரவிந்திற்கு புரிந்தது.

“அதைத் தெரிஞ்சு ஏன் கீர்த்தி கஷ்டப்படுத்திக்கப் போற.”

“எனக்குத் தெரியணும்” என்றாள் குரலில் பிடிவாதத்தைத் தேக்கி…

“இருந்தேன், நானும் அங்கதான் இருந்தேன்” என்றான் கனமான குரலில்…

“என்ன ஆச்சு, ஏன் ஆச்சு.”

“என்ன ஆச்சுன்னும் தெரியாது. ஏன் ஆச்சுன்னும் தெரியாது.”

“ப்ளீஸ் சொல்லுங்க.”

“நிஜம் கீர்த்தி… என் பக்கத்துல தான் உட்கார்ந்திருந்தான். திடீர்னு அவன் சாஞ்சதுக்கு அப்புறம் தான் அவன் மேல குண்டடி பட்டதே தெரிஞ்சது. எவனோ பைத்தியக்காரன், நிறைய பேருக்கு காயம். ஆனா இறந்தது நம்ம தண்டபாணி மட்டும்தான்.”

“கடைசி நிமிஷத்துல தண்டு ஏதாவது பேசினானா.”

“இல்லை. உடனே உயிர் போயிடுச்சு. அசைவேயில்லை.”

“ஒண்ணும் பேசக்கூட இல்லையா” என்று கண்ணில் மளமளவென்று நீர் இறங்கியது கீர்த்திக்கு.

ஒன்றும் செய்ய இயலாதவனாக அவள் கண்களில் கண்ணீர் வருவதைப் பார்த்திருந்தான். கண்களை துடைக்க துடைக்க கீர்த்திக்கு கண்ணீர் பெருகியது. ஒன்றும் பேச இல்லாதவர்களாக அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர்.

சற்று நேரம் கழித்து அங்கு வந்த கீர்த்தி, “எதுக்கு அங்கே போனீங்க, எந்த இடம் அது, ஹாஸ்பிடல்னு சொன்னாங்க. எதுக்கு ஹாஸ்பிடல் போனீங்க” என்று சரமாரியாகக் கேள்வி கேட்க…

உண்மையைச் சொல்ல முடியாமல் தவித்தான் அரவிந்த். உண்மையை எப்படிச் சொல்ல முடியும். தன் அண்ணனைப் பற்றி நம்புவாளா… குழந்தையை தன் குழந்தையாக அடையாளம் காட்டப் போகும் பட்சத்தில், உண்மையைச் சொல்வதா வேண்டாமா, என்று குழம்பினான் அரவிந்த்.

“அது தண்டபாணிக்கு உடம்பு சரியில்லை. அதனால டாக்டர்கிட்ட காட்ட ஹாஸ்பிடல் போயிருந்தோம்.”

“அவனுக்கு உடம்பு வேற சரியில்லாம இருந்ததா” என்று அதற்கும் கண்ணீர் விட்டாள் கீர்த்தி.

ஆறு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் துக்கத்தில் இருந்த வெளிவர முடியாதவளாக இருந்தாள் கீர்த்தி. முயன்று கட்டுப்படுத்தி அந்த இடத்தைவிட்டு அகன்றாள் கீர்த்தி… அரவிந்தும் நில் என்றும் சொல்லவில்லை, பேச்சையும் வளர்க்கவில்லை. அவள் அங்கே இருந்தால் மேலும் மேலும் கேள்வி கேட்பாளோ என்று அரவிந்திற்கு பயம்.

அதன் பிறகு ஒரு ஆழ்ந்த அமைதி இருவருக்குள்ளும் இருந்தது. அரவிந்தும் எந்தக் காரணத்தை வைத்தும் பேச முயலவில்லை. அவளும் பேச வரவில்லை.

இரண்டு மூன்று தினங்கள் இப்படியே கழிந்தன. அரவிந்த் ஏதாவது பேசுவான் என்று கீர்த்தி எதிர்பார்க்க… அரவிந்த் எதுவும் பேசின வழியாகக் காணோம்.

அவளே வலிய வந்து பேசினாள். “அப்பா உங்களைப் பார்க்க இங்கே வரேன்னு சொன்னாங்க கூட்டிட்டு வரட்டுமா.”

“எதுக்கு?”

“அவர் மகனைப் பத்திக் கேட்கத்தான். என்ன ஆச்சு ஏதாச்சுன்னு மறுபடியும் கேட்டுட்டு வருத்தப்படுவார் அதுக்குத்தான்.”

“இங்க வேணாம். நானே ஒரு நாள் வீட்டுக்கு வரேன்” என்று முடித்து, வேறு வேலை இருப்பது போல் போய்விட்டான். அவனுக்கு கீர்த்தியிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

இப்போதைக்கு குழந்தையை லிசா அவனிடம் கொடுத்தால் அதை தன் குழந்தையாகத் தான் சொல்லப் போறான். அதை கீர்த்தி எப்படி எடுத்துக் கொள்வாளோ. தன் குழந்தையாகத் தான் சொல்லியாக வேண்டும். அப்போது தான் அவன் பெற்றோர்கள் அதை வளர்க்கவிடுவார்கள். தண்டபாணியின் குழந்தை என்று தெரிந்தால் நிச்சயம் அதை வளர்க்க விடமாட்டார்கள். அதன் பொருட்டும் யாரிடமும் உண்மையைச் சொல்ல பயமாக இருந்தது.

Advertisement