Advertisement

11

காச் மூச் என்று சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. எதையும் சட்டை செய்யாமல் படியில் அமர்ந்து கொண்டான் அரவிந்த். ஆயாசமாக இருந்தது. தண்டபாணி தன்னுடைய வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டது போலத் தோன்றியது. இந்த விஷயமெல்லாம் தனக்குத் தெரிந்தும் கீர்த்தியிடம் மறைப்பது… அது மிகவும் குற்றவுணர்ச்சியைக் கொடுத்தது.

சிறிது நேரம் கழித்து இவன் அருகில் வந்தமர்ந்தான் தண்டபாணி. அரவிந்த் என்ன என்பது போலத் திரும்பிப் பார்க்க… “கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிறேன்னு சொல்லியிருக்காடா” என்றான்.

அரவிந்த் அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.

“வாழ்க்கையை நிறைய சிக்கலாக்கிக்காத, அவளை ஸ்மூத்தாவே சம்மதிக்க வை, சண்டை போடாதே” என்றான்.

“சரி” என்பது போல தலையாட்டினான்.

அவர்களின் சண்டையால் வீடு நிசப்தமாக இருந்தது.

லிசா மிகவம் சோர்வாகத் தெரிந்தாள்.

“ஆர் யூ ஆல்ரைட்” என்று அரவிந்த் கூட கேட்கச் செய்தான்.

“யெஸ். ஐ அம் ஓகே” என்றாள் லிசா.

அன்று காலையில் எழும்போதே வீடு ஏனோ இன்னும் அமைதியாக இருப்பதாகப் பட்டது அரவிந்திற்கு. ரூமை விட்டு வந்து பார்த்தாள்… ஹாலில் சோபாவில் லிசா உறங்குவது தெரிந்தது.

இவள் வெளியில் ஏன் படுத்துக் கொண்டிருக்கிறாள்… இன்னும் இவர்களுக்குள் எல்லாம் சரியாகவில்லையா என்று இருந்தது. அங்கேயே அமர்வதா, திரும்ப உள்ளே போவதா என்று அறியாத அரவிந்த், கிச்சன் உள் நுழைந்து மூவருக்கும் காபி போட ஆரம்பித்தான்.

அவன் காபி போட்டு வரவும், தண்டபாணி எழுந்து வரவும் சரியாக இருந்தது. அவனிடம் அவனுக்கும் லிசாவிற்கும் கொடுத்துவிட்டு இவன் காபியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு நகர்ந்தான்.

தண்டபாணி லிசாவை எழுப்பினான். “இட்ஸ் டைம் ஹனி, வேலைக்கு நேரமாச்சு” என்று அவளை எழுப்பினான்.

“நான் இன்னைக்குப் போகலை” என்றபடியே எழுந்தாள்.

“ஏன், என்னாச்சு” என்றான்.

“உனக்கும் இன்னைக்கு லீவ் போட முடியுமா” என்றாள் லிசா.

“ஏன், என்னாச்சு” என்றான் மறுபடியும் தண்டபாணி.

“நான் இன்னைக்கு ஹாஸ்பிடல் போகணும், தனியா போக கஷ்டமா இருக்கு… நீ கூட இருந்தா பரவாயில்லை.”

“ஏன் உடம்பு சரியில்லையா” என்றுதான் பதட்டமாக… அமைதியாகவே அமர்ந்திருந்தாள் லிசா…

எழுந்து அவளருகில் அமர்ந்தவன், அவள் தோளைச் சுற்றி கைகளைப் போட்டு, அவளை அணைவாகப் பிடித்தபடி…

“என்ன ஹனி, என்னாச்சு, சொன்னாதானேடா தெரியும்” என்றான் கனிவாக…

அவனுள் புதைந்து கொண்டாள்… இருவரும் ஒருவர் அருகாமையை மற்றொருவர் விரும்பியபடி அணைப்பில் கட்டுண்டு அப்படியே அமர்ந்திருந்தனர்.

உள்ளே வர வந்த அரவிந்த் கூட அவர்களின் நிலைமையைப் பார்த்து அப்படியே திரும்பி பால்கனிக்கே போய் விட்டான்.

வெகுநேரம் லிசாவும், தண்டபாணியும் அப்படியே அமர்ந்திருக்க பின், “தண்டு எனக்கு பயமாயிருக்கு” என்றாள் லிசா.

“எதுக்கு” என்றான்.

“நீ என்னை விடமாட்டியே” என்றாள் லிசா.

“அதுக்கு தான் ஹனி கல்யாணம் பண்ணிக்கோ சொல்றேன். நானே நினைச்சா கூட அப்புறம் உன்னை விட முடியாது.”

“அது நான் யோசிக்கிறேன்” என்றவள்… “தண்டு நான்… நான்…” என்று தடுமாறினாள்.

“என்னம்மா, என்ன பண்ணுது, ஹாஸ்பிடல் வேற போகணுங்கற” என்றான் வாஞ்சையாக.

அவன் அணைத்த நிலையிலேயே முகம் தூக்கி… அவன் முகம் பார்த்தவள், “நான் ப்ரெக்னன்ட்டா இருக்கறனோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு” என்றாள் லிசா.

“என்ன” என்றான் ஆனந்த அதிர்ச்சியாக தண்டபாணி.

“இதையேன் இவ்வளவு மெதுவா சொல்ற.” அணைப்பை இறுக்கினான் தண்டபாணி.

“தெரியலை, என்னவோ பயமாயிருக்கு” என்றாள் லிசா…

“இதுல பயப்பட ஒண்ணுமேயில்லை ஹனி… ஆனா நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கறது நல்லது.”

எதுவும் பேசாமல் மறுபடியும் அவனுள்ளே புதைந்து கொண்டாள் லிசா.

தண்டபாணி மிகுந்த உற்சாகத்தில் இருந்தான். ஆனால் அதே சமயம் திருமணம் செய்யாமல் தன் தாய், தந்தையை, தங்கையைப் பார்க்க முடியர்து என்று நினைத்தான். லிசாவையும் விட முடியாது. எப்படியாவது அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்ற நினைப்பு மிகவும் உறுதி பெற்றது.

சிறிது நேரம் கழித்து லிசா எழுந்து போக… அரவிந்திடம் வந்தவன் எதுவும் பேசாமல் அவனை அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்த…

“என்னடா… கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாளா லிசா” என… “இல்லை” என்று மறுத்துத் தலையசைத்தவன்,

“இது வேற கண்டுபிடி” என்றான்.

“டேய் கொஞ்ச நாளாவே எனக்கு மூளை சரியா வேலை செய்யறது இல்லை. நீயே சொல்லுடா” என்றான் பரிதாபமாக…

“நான் அப்பாவாகப் போறேன்டா, இன்னும் கன்பர்ம் ஆகலை… இனிமே தான் பண்ணனும்” என்றான்.

“என்ன” என்றாள் அதிர்ச்சியாக… அரவிந்த்.

திருமணமாகாமல் குழந்தை… அவனால் செய்தியை ஜீரணிக்கவே முடியவில்லை.

அவன் மனதை அறிந்தவனாக தண்டபாணி, “சீக்கிரம் கல்யாணத்துக்கு சம்மதிச்சிடுவா, கவலைப்படாதே” என்றான்.

இருவரும் செக்கப்பிற்கு ஹாஸ்பிடல் கிளம்ப… தான் மட்டும் தனியாக உட்கார்ந்து என்ன செய்வோம் என்று தெரியாதவனாக அரவிந்தும் அவர்களுடன் கிளம்பினான். நேரப் போகும் நிகழ்வுகளை அப்போது அவர்கள் மூவருக்குமே தெரியவில்லை.

ஹாஸ்பிடலில் டாக்டரை பார்க்க லிசாவும், தண்டபாணியும் காத்திருக்க… பக்கத்தில் அரவிந்தும் அமர்ந்திருந்த போதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது.

யாரோ ஒருவன் துப்பாக்கியை எடுத்து கண்மண் தெரியாமல் எதிர்பட்டவர்களை எல்லாம் சுட்டான். சுட்டு விட்டு ஓட… காவலாளிகள் அவனை மடக்கிப் பிடித்தனர்.

அந்த இடமே மரண ஓலங்களில் அதிர்ந்தது. அப்படி ஓலமிட்டதில் தண்டபாணியும், லிசாவும் அடங்குவர். சட்டென்று அரவிந்த் குனிந்திருந்ததால், அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

அரக்கப் பரக்க எழுந்து பார்த்தால், லிசாவின் தோலில் காயம் இருந்தது. தண்டபாணியைப் பார்த்தால், அவன் நெஞ்சில் சரியாக இதயப் பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது. பேச்சு மூச்சுயில்லை… இறந்திருந்தான்… ஆம்… ஷண நேரத்தில் தண்டபாணி இறந்திருந்தான்.

அடி வயிற்றில் இருந்து அரவிந்த் கத்தினான். “டேய் தண்டபாணி எழுந்திருடா” என்று. அதற்குள் தண்டபாணியைப் பார்த்த லிசா மயங்கிச் சரிய ஆரம்பித்திருந்தாள்.

அவசரமாக அரவிந்த் அவளைப் பிடிக்கப் பிடிக்க, அவன் மேலேயே சரிந்தாள்.

அதற்குள் ஆட்கள் அவசர சிகிச்சைக்காக குழும, லிசாவை அவர்கள் வசம் ஒப்படைத்தவன்… மறுபடியும் தண்டபாணியை உலுக்க… அவன் தான் இற்நதிருந்தானே.

ஆண்மகன் என்பதையும் மீறி அரவிந்த் தண்டபாணியை அணைத்துக் கொண்டு கதற ஆரம்பித்தான்.

நான்கைந்து பேருக்கு குண்டடி பட்டிருந்தாலும், அந்த இடத்திலேயே இறந்தது தண்டபாணி ஒருவனே…

அரவிந்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அவனை பிடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தவனிடம் இருந்து யாரோ தண்டபாணியை பிரித்து பல்ஸ் செக் செய்தனர்.

“ஹி இஸ் டெட்” என்றனர். அவனை அப்படியே அங்கேயே விட்டு லிசாவின் நிலைமையைப் பார்க்க ஓடினான்.

யாரைக் கேட்பது, எங்கே தேடுவது என்று தெரியவில்லை. ஒரே கூச்சலாக இருந்தது. பின்பு கேட்டு இருக்குமிடம் போக… அங்கே ஐ.சி.யூவில் இருந்தாள். வெளியே வந்த டாக்டரிடம் விவரம் கேட்க… அவர் குண்டு தோலை உரசிக் கொண்டுதான் சென்றிருக்கிறது.

“வேறு தோளில் பிரச்சனையில்லை. வெறும் காயம்தான். மயக்கமாக இருக்கிறாள்” என்றார்.

“டாக்டர், ஷி இஸ் பிரெக்னன்ட்” என்றார்.

அவர் உடனே ட்ரீட்மெண்ட் மருந்துகளை மாற்ற உள்ளே ஓடினார்.

மறுபடியும் அவன் தண்டபாணியிடம் வந்தபோது, அவனை தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து இருந்தனர். இங்கே அரவிந்த் வந்த பிறகு தண்டபாணி தன் அலுவலக நண்பர்கள் சிலரை அறிமுகப்படுத்தியிருந்தான் தண்டபாணி.

தண்டபாணியின் செல் எடுத்து அவர்களை அழைத்தான். அதே மாதிரி லிசாவுடைய தாயார் நம்பரை தேடி அவரையும் அழைத்தான்.

துக்கப்பட்டு உட்காரவும் நேரமில்லை… அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க வேண்டி இருந்தது. துப்பாக்கி சூடு நடத்தியவன் அங்கே இருந்த மனநிலை சரியில்லாத ஒருவன். அவனை கைது செய்திருந்தனர்.

ஆனால் பிரயோஜனம்… போன உயர் திரும்ப வருமா… இனி தண்டபாணி இந்த உலகில் இல்லை. எல்லாவற்றையும் விட அவர்களே வீட்டிற்கு எப்படி தகவல் சொல்வது என்பது பெரிய விஷயமாக இருந்தது.

தன் தந்தையை அழைத்து விஷயத்தைச் சொல்லி அவர்கள் வீட்டிற்கு பக்குவமாக எடுத்துச் சொல்லச் சொன்னான்.

அதற்குள் தண்டபாணியின் லண்டன் நண்பர்கள் வந்திருக்க… அவர்கள் சூழ்நிலையை கையில் எடுத்தனர்.

லிசாவின் அம்மாவும் வந்திருந்தார். அவர் லிசாவை பார்த்துக் கொள்ள… தனித்து விடப்பட்ட அரவிந்திற்கு பயமாக இருந்தது. அவனையும் மீறி அழுகை வந்தது.

முகத்தை மூடிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.

தண்டபாணியின் பாடியை வாங்குவதில் நிறைய ப்ரொசீஜர்ஸ்… அவன் உடலை இந்தியாவிற்குக் கொண்டு போவதிலும் நிறைய ப்ரொசீஜர்ஸ் இருந்தது.

கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது அரவிந்திற்கு. லிசாவிற்கு அதற்குள் நினைப்பு வந்திருந்தது. “நான் தண்டுவை பார்க்கணும்” என்று லிசா வேறு பயங்கரமாக ஆர்ப்பாட்டம் செய்ய,

டாக்டரிடம் பெர்மிஷன் வாங்கி அவளை அவன் உடல் வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்துப் போயினர் அரவிந்தும், லிசாவின் அம்மாவும்.

அவனைப் பார்த்து லிசா கதறிய கதறல் பார்த்தோர் கண்களில் எல்லாம் கண்ணீர் வரவழைத்தது. தண்டபாணியின் உடலைப் பார்த்து லிசா கதறிய கதறலைப் பார்த்து அவள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று அரவிந்த் பயந்து போனான்.

லிசாவின் அம்மாவிடம் மெதுவாக அவள் நிலைமையை எடுத்துச் சொல்ல, அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. தன் மகள் ஒரு இந்திய வாலிபனோடு சேர்ந்து வாழ்கிறாள் என்று அவள் அன்னைக்குத் தெரியும்தான். ஆனால் மணம் புரியாமலேயே குழந்தை வரை எல்லாம் போவர் என்று எதிர்பார்க்கவில்லை.

என்ன இனி செய்வது. தன் பெண்ணின் வாழ்க்கை என்னவாகும் என்று அவரிலும் பதட்டம் ஏறிக் கொண்டது.

தண்டபாணியின் உடலை மற்ற நண்பர்கள் பார்த்துக் கொள்ள… அரவிந்த் லிசாவின் உடல் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினான். அவளுள் வளர்வது தண்டபாணியின் வாரிசு அல்லவா. இப்போது அவன் உடலை பார்ப்பதைவிட லிசாவின் உள் வளரும் அவன் உயிரை பார்ப்பது முக்கியம் என்று தோன்றியது.

லிசாவின் அம்மாவும், அரவிந்தும் டாக்டரிடம் பேச… அவர், “அவளுள் வளரும் குழந்தைக்கு முழுதாக மூன்று மாதம் முடிந்துவிட்டது” என்றார்கள்.

“அந்த பையனே இறந்து விட்டான். இனி அவன் குழந்தையை வைத்து என்ன செய்வது, அதை அழித்து விடலாமா” என்று லிசாவின் அம்மா டாக்டரிடம் கேட்க…

அரவிந்திற்கு உயிர் வரை கொதித்தது. அவன் நண்பன் இறந்து இரண்டு மணி நேரமே ஆகியிருந்த நிலையில்… அதற்குள் அவன் குழந்தை அழிவதைப் பற்றி பேசுவதா… ஆத்திரமாக வந்தது.

ஆனால் டாக்டர் வேறு சொன்னார். மூன்று மாதம் முடிந்து விட்டது. அவள் கர்ப்பப்பை வேறு வீக்காக இருக்கிறது. அழிப்பது என்பது சாத்தியமல்ல என்று விட்டார்.

இப்போதுதான் அரவிந்திற்கு மூச்சு வந்தது.

அப்போது பார்த்து கீர்த்தி போனில் அழைத்தாள்… எடுப்பதா வேண்டாமா என்று இருந்தது அரவிந்திற்கு… மிகுந்த யோசனைக்கிடையில் எடுத்தான்… எடுத்தவுடனேயே

“என்னங்க சொல்றாங்க… சும்மா பொய் சொன்னேன், விளையாடினேன்னு சொல்லிடுங்களேன். ப்ளீஸ் பொய் தானே சொன்னீங்க” என்றாள் அழுகுரலில் கீர்த்தி…

அவள் குரலைக் கேட்டதும் இன்னும் துக்கம் நெஞ்சை பந்தாக அடைத்தது. என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. “நம்மளை விட்டுட்டு அவன் போய்ட்டான் கீர்த்தி” என்றான் தழுதழுத்த குரலில்.

“இல்லை, நீங்க பொய் சொல்றீங்க, நான் நம்ப மாட்டேன்” என்று ஒரு சத்தம் மட்டும் கேட்டது. அனேகமாக போனை தூக்கி எறிந்திருப்பாள் என்று தோன்றியது.

அரவிந்த் கண்களில் கண்ணீர் வழிந்தது. லண்டன் தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்… தண்டபாணியின் உடலை இந்தியாவிற்கு அனுப்பும் பொறுப்பை ஏற்றனர்.

அரவிந்திற்கு என்ன செய்வது புரியவில்லை… தண்டபாணியின் உடலோடு இந்தியாவிற்கு போவதா… அப்படிப் போய் விட்டால் லிசா குழந்தையை என்ன செய்கிறாள் என்று தெரியாமல் போய்விடுமே… என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது.

லிசாவிற்கு கையில் கட்டுப் போட்டு… அவளை அன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். அழுது அழுது பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.

“நான் இன்னைக்கு அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வரலைன்னா அவன் உயிரோட இருந்திருப்பான்” என்று வேறு கதறிக் கொண்டிருந்தாள்.

தண்டபாணியின் உடலை எல்லா ப்ரொஸீஜரும் முடித்து எடுத்துப் போக இரண்டு நாள் ஆகும் போல இருந்தது.

அங்கேயே ஹாஸ்பிடலிலேயே அவன் உடல் வைத்திருந்த இடத்திற்கு வெளியேயே அரவிந்தும், லிசாவும் அமர்ந்திருந்தனர். லிசாவை, வீட்டிற்குப் போகச் சொல்லியும் அவள் கேட்கவில்லை. அவள் மறுத்து விட்டாள்.

அரவிந்திற்கும், அவள் அன்னைக்கும், லிசாவை கவனிப்பதே வேலையாக இருந்தது. சாப்பிட மறுத்தாள். சாப்பிட மறுத்தால் மறுபடியும் அட்மிட் செய்து ட்ரிப்ஸ் போட்டுவிடுவார்கள் என்று சொன்ன பிறகே சற்று உண்டாள்.

அங்கேயே உறங்கியும் உறங்காமலும் லிசாவும், அரவிந்தும் வெளியே அமர்ந்திருந்தனர். அவளின் அம்மா அப்போதுதான் சற்று வீடு வரை போய் வருகிறேன் என்று சென்றிருந்தார்.

இரவு நிசப்தமாக இருந்தது. காரிடரில் அரவிந்தும், லிசாவும் மட்டும் அமர்ந்திருந்தனர்.

“லிசா” என்றழைத்தான். அந்த இரவின் நிசப்தத்தைக் கிழித்து… “என்ன” என்பது போல் அவள் மெதுவாக திரும்பிப் பார்க்க…

“இது சமயமல்ல தான் இதைப் பற்றி பேசுவதற்கு, ஆனா பேசியே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கேன். இந்தக் குழந்தையைப் பற்றி என்ன நீ முடிவு பண்ணியிருக்க…”

அவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். பதில் எதுவும் பேசவில்லை. “உன்னால் இதை பெத்து வளர்க்க முடியும்னு தோணிச்சுன்னா, வெல் அண்ட் குட், அதை விட இதை என்கிட்ட குடுத்துட்டீன்னா இன்னும் நல்லது.”

“உங்கம்மா இதை அழிக்கணும்னு சொல்றாங்க. நாளைக்கே வேற யாராவது ஸ்பெஷலிஸ்ட் பார்த்து அதை செஞ்சிட்டா” என்றான்.

மிகவும் சென்சிடிவான கேள்வி இது. ஆனா லிசாவிற்கு கோபமோ ஆத்திரமோ வந்த மாதிரி தெரியவில்லை. வெறித்துப் பார்த்தாள்.

மெலிதாக அவள் தோளைப் பற்றி உலுக்கினான்… “பதில் சொல்லு லிசா…”

அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது. மெதுவாக வாய் திறந்து, “நான் தப்பு பண்ணிட்டேன். நான் தண்டுவைக் கல்யாணம் பண்ணியிருக்கணும். இப்போ இந்த குழந்தைக்கு லீகலா அப்பான்னு யாரும் கிடையாது” என்று முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

“நான் இப்படி ஆகும்னெல்லாம் யோசிக்கவேயில்லை. நான் தண்டபாணியைப் பரிய வேண்டி வரும்னு யோசிக்கவேயில்லை. எங்களுக்குக் கல்யாணம் நடந்தாலும் நடக்கா விட்டாலும் தண்டபாணியும் நானும் பிரிய மாட்டோம்னு தான் நினைச்சேன். இப்படி ஆகும்னு யோசிக்கவேயில்லை” என்று முகத்தை மூடிக் கொண்டு கதறினாள்.

அவளை தேற்றும் வகை தெரியாது அமர்ந்திருந்தான். அவனே தேற்றப்பட வேண்டிய நிலையில்தான் இருந்தான். இதில் அரவிந்த், அவன் எப்படி லிசாவைத் தேற்றுவான்.

அவள் அழுது ஓயட்டும் என்று விட்டுவிட்டான். லிசாவும் வெகு நேரம் அழுது கொண்டிருந்தாள். அதற்குள் அவள் அம்மா வந்துவிட்டார்கள்.

லிசாவிடம் பேசுவதை விட அவள் அம்மாவிடம் பேசினால் என்ன என்று அரவிந்திற்கு தோன்ற… “நீங்க லிசா வயத்துல் வளர்ற பேபியை பத்தி கவலைப்பட வேண்டாம்… நீங்க அது பொறந்ததும் என்கிட்ட குடுத்துடுங்க… நான் குழந்தையை இந்தியாக்கு எடுத்துட்டுப் போறேன். என் குழந்தையாவே வளர்ப்பேன். என்ன சொல்றீங்க” என்றான்.

“நீ நிஜமா தான் சொல்றியா” என்றார் லிசாவின் அம்மா.

“நான் ஹன்ட்ரட் பெர்சன்ட் உண்மையைச் சொல்றேன். என் நண்பனோட வாரிசு அது. அதை என்கிட்ட கொடுத்துடுங்க, அதை அழிக்கிறேன்னு… லிசாவோட உயிருக்கு ரிஸ்க் எடுக்க வேண்டாம். என்ன சொல்றீங்க” என்றான் மறுபடியும்.

“இப்போவே எல்லாத்தையும் முடிவு பண்ண வேண்டாம். கொஞ்சம் டைம் கொடு” என்றார்  லிசாவின் அம்மா.

“கொஞ்சம் டைம்ல, நீங்க குழந்தையை ஏதாவது பண்ணிட்டீங்கன்னா” என்றான் சந்தேகத்தோடு…

“ஐ லவ் லிசா வெரி மச், அவ உடம்புக்கு ரிஸ்க் இருக்கிற எந்த வேலையும் நான் செய்ய மாட்டேன். அவளுக்கு இப்போ தான் ட்வென்டி டூ இயர்ஸ். இன்னும் அவ வாழவேண்டியது எவ்வளவோ இருக்கு. நான் அவளை விடமாட்டேன். டோன்ட் ஒர்ரி, இந்தக் குழந்தையை உங்ககிட்ட குடுக்க அவளைச் சம்மதிக்க வைக்கிறேன்.”

“ஐ நோ இண்டியன்ஸ் குழந்தையை நல்லா வளர்ப்பீங்க… அதனால நாங்க குழந்தையைப் பத்தி கவலைப்படத் தேவையில்லைன்னு தெரியும். நான் கண்ணால பார்த்திருக்கேன். லிசாவோட அப்பா அவளை எப்படி வளர்த்தாருன்னு முடிஞ்சதைப் பத்தி இனி பேசி ப்ரயோஜனமில்லை” என்றார் நல்ல தமிழில்.

அந்த நேரத்திலும் அரவிந்திற்குத் தோன்றியது இந்தப் பெண்மணி எப்படி இவ்வளவு நல்ல தமிழ் பேசுகிறார் என்று…

எல்லோரும் அவரவர் யோசனையில் அப்படியே அமர்ந்திருந்தனர்.

Advertisement