அத்தியாயம் 6
குளித்து முடித்து தன்னை தயார்செய்து கொண்டு யாழிசையின் வீட்டுக்குள் நுழைய மங்கம்மா அவனை வித்தியாசமாக பார்க்க
“என்ன இவங்க இப்படி பாக்குறாங்க” என்று ரிஷி யோசிக்க 
“மாப்புள நீங்க எப்போ வெளிய போனீங்க?” யோகராஜ் 
“நான் அப்போ போனதுதான் மாமா இப்போ தான் வரேன்” 
“அப்போ ரூம்ல யாரு இருந்தா” அவன் யோசிக்க ரிஷி கலவரமடைந்தான். 
“என்னங்க நீங்க நிக்கவச்சி பேசிகிட்டு இருக்கீங்க. மாப்புள நீங்க உள்ள இருக்கிறதா நினைச்சி யாழ உள்ள அனுப்பிட்டேன். நீங்க போங்க” மங்கம்மா நெளிந்தவாறு சொல்ல 
“இந்தம்மாக்கு அவங்க பஸ்ட் நைட் நியாபகம் வந்திருக்கும் போல, என்னங்கடா இது இத்துனூண்டு மஞ்சக்கயிறு அத கட்டிட்டதும் மரியாதை என்ன, அம்மாவே பொண்ண கூட்டிக்கொடுக்குது” கேவலமாக நினைத்தவாறு அறையினுள் நுழைந்து தாப்பாள் இட்டான். 
சத்தமாக விசிலடிக்கவும் முடியாமல் அவனின் சந்தோசத்தை கொண்டாட வழி தெரியாமல் அறையை அளவிட 
“டேய் ரிஷி அலங்காரம் தூள் தான் இப்படியொரு சிட்டுவேஷன்ல எந்த பொண்ணையையுமே தொட்டு இருக்க மாட்டல்ல. என்ஜோய் டா” தன்னுடைய தோள்களையே தட்டிக் கொண்டவன் யாழிசை அமர்ந்திருப்பது தெரிய அவளை நெருங்கினான். 
உள்ளத்தால் நேசித்திருந்தால் அவள் சோர்வை உணர்ந்திருப்பானோ! உடல் தேவையை தீர்த்துக் கொள்ள தவிப்பவனுக்கு அவள் தூங்குவது எரிச்சலை தர 
“ரெண்டு வருஷம் பாடாய் படுத்தி தேடி வந்தவனை அடிச்சி போட்டு, ஆசையா நெருங்க பாத்தா தூங்கிட்டியா? இதுக்கெல்லாம் அசர முடியாதுடி” என்றவன் அவள் கால்களை தூக்கி கட்டிலில் வைத்து மறுபுறமாக வந்து அவள் புறம் சாய்ந்தவன் அவளை முத்தமிட முயல யாழிசை அவளின் இடது கையை அவன் மேல் போட அவள் கைகளில் இருந்த வளையல்கள் அவன் கன்னத்தை பதம் பார்த்தன. 
“ஆ.” என்று கத்தியவன், வாயை பொத்தி அவளை முறைத்தவாறே கன்னத்தை தடவிக் கொள்ள அவளோ அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொள்ள சுர்ரென்று கோபம் தலைக்கு ஏற அவளை எழுப்பும் முயற்சியில் இறங்கினான் ரிஷி.
“இவ பேரென்னா” என்று யோசித்தவன் பெயர் நியாபகத்தில் வரவே இல்லை. யோசிப்பதை கைவிட்டவன் அவளின் தோளை பிடித்து உலுக்க “இயல் தூங்க விடு டி” என்று அவன் கையில் ஒரு அடி கொடுத்தவள் தூக்கத்தை தொடர பல்லைக் கடித்தான் ரிஷி. 
சத்தம் போட்டு பேசவே முடியாது. வீடு முழுக்க எதிரொலிக்கும். “சே பேசாம என் வீட்டுல பஸ்ட் நைட்க்குக்கான ஏற்பாட செய்ய சொல்லி இருக்கணும். சடங்கு, சாத்திர சம்பிரதாயம்னு உசுர வாங்குதுங்க”  என்ன செய்வதென்று தவித்தவன் அறையினுள் நடை போட “தண்ணீர் தெளிச்சா எந்திரிப்பா” என்று யோசனை தோன்ற மேசையில் இருந்த தண்ணீர் கூஜாவும். கிளாசும் கண்ணில் பட கிளாசில் நீரை ஊற்றியவன் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ள அதை அருந்தலானான். 
அந்தோ பரிதாபம். யாழிசைக்கு அவளின் உறவில் இருந்த இளசுகள் செய்து வைத்திருந்த சேட்டையில் சிக்கினான் ரிஷி. 
அவர்களின் திட்டமோ யாழிசை அவதியுறும் போது ரிஷி முத்தமிடட்டும் என்று குடைமிளகாயை கிளாஸின் வாயில் உள்புறமும் வெளிப்புறமும் தேய்த்து வைத்திருக்க அதில் நீரை அருந்தியவன் எரிச்சலில் துடிக்கலானான். 
உருளை வடிவம் கொண்ட அந்த கிளாஸின் வட்டம் மிக குறுகியதாக இருக்க, வாயை வைத்தால் மூக்கும் உள்ளே சென்று  முட்டும் அளவில் இருந்த படியால் ரிஷி சுவாசிக்கும் போது காரம் மூக்கின் வழியாகவும் சென்று  கண்களும் எரிய ஆரம்பித்தது.
வெண்ணையும், பாலும் மட்டும் சாப்பிட்டு வளர்ந்தானோ!  காரம் கண்ணை எட்ட கண்கள் சிவந்து, உதடுகளும் சிவந்து, தொண்டையெறிய செய்வதறியாது அல்லாடியவன் கூஜாவில் உள்ள நீரை அருந்தவும் பயந்தான். 
வாழ்க்கையில் இப்படியொரு அனுபவத்தை அவன் அடைந்திருக்கவே மாட்டான் போலும், யாழிசை அருகில் இருந்தும் அவளை தொட முடியாமல் கோபம், எரிச்சல் என்று எல்லா உணர்வுகளும் தாக்க, கத்த கூட முடியாமல் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும் யாழிசையை வெறித்தவன், தலையை இரு கைகளிலாலும் தாங்கிப் பிடித்து அமர்ந்து விட்டான்.  
விடியவே கூடாதென்று ரிஷி திட்டமிட்ட இரவு அவனை  படுத்தி விட்டு ஒருவாறு விடிந்திருக்க, யாழிசையின் வாழ்நாளில் இப்படியொரு நிம்மதியான உறக்கத்தை அடைந்திருப்பாளா என்றால் சந்தேகம் தான். நினைவு தெரிஞ்ச நாள் முதல் விடிகாலை பொழுதில் எழுந்து வீட்டு வேலைகளை செய்து பள்ளிக்கும் சென்று மீண்டும் வீடு வந்து வேலைகளை முடித்து இரவு தூங்க மணி பத்தாகிடும். 
எந்த தொந்தரவும் இல்லாத, பூக்களின் இனிமையான மணத்தோடு,  நிம்மதியான தூக்கம். யாழிசை மெதுவாக கண்விழித்தாள். சூரியனின் வரவால் அறை நன்றாகவே வெளிச்சத்தில் இருக்க, அறை முழுவதும் பூக்களால் அலங்காரம்  வாசம் வீச ஆழ மூச்செடுத்தவள் சோம்பல் முறிக்க, அலங்காரத்தை கண்டு நெற்றிசுருக்கி யோசிக்கலானாள். கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு நேற்று கல்யாணம் ஆனது நியாபகத்தில் வர அவளுக்கு தாலி கட்டியவனை அறையினுள்  தேட 
“ஐயோ எங்க போனார் னு தெரியலையே! இப்படி தூங்கிட்டது தெரிஞ்சா அம்மா அடி பின்னி எடுப்பங்களே! அவங்க எங்க போனாங்க? ஒரு வேல கோவிச்சு கிட்டு போய்ட்டாங்களோ! ஏன் யாரும் நம்மள எழுப்பல” குழம்பியவாறே ஏதேதோ சிந்தித்தவள் 
“இப்போ நாம வெளிய போகணுமா? அவர் வரும் வரை இங்கயே! இருக்கணுமா? ஒன்னும் புரியலையே! அம்மா வேற ஒண்ணும் சொல்லலையே!” மீண்டும் குழம்பியவளின் பார்வை பீரோவில் உள்ள கண்ணாடியின் பக்கம் செல்ல 
“ஐயோ.. இப்படியே வா தூங்கினேன்” அணிகலன்கள் தாறுமாறாக கிடக்க கண்மையும் கன்னம் வரை வழிந்திருக்க
 “பாக்க சந்த்திரமுகி ஜோதிகா மாதிரியே இருக்க, உன்ன இப்படி பாத்ததும் அவரு ஓடியே! போய்ட்டாரு” மனசாட்ச்சி ஏகத்துக்கும் குரல் கொடுக்க 
“ஒரு வேல அப்படியும் இருக்குமோ!” மனதோடு போராட கதவும் மெதுவாக தட்டப்பட்டது. 
“ஐயையோ யாருன்னு தெரியலையே!!” மனம் அடித்துக் கொள்ள 
வெளியே மங்கம்மா மெதுவாக “யாழ், யாழ்” என்று அழைப்பது தெரிய 
“இதோ வரேன் மா” என்றவள் அடித்துபிடித்து கட்டிலில் இருந்து இறங்க மீண்டும் கண்ணாடியில் அவள் விம்பம் விழ
“இப்படியே! போனா நீ செத்த” என்றவாறே தலையலங்காரத்தை உருவி மேசையில் வைத்தவள், கலைந்திருந்த முடியை கையாலையே! நீவி விட்டு கன்னத்தில் இருந்த மையையும் துடைத்துக் கொண்டு மெதுவாக கதவை திறக்க மங்கம்மா கண்ணில் எதிர்பார்ப்போடு மகளை பார்த்தாள். 
அன்னையிடம் என்ன சொல்வதென்று யாழிசை முழிக்க 
“கதவை சாத்திக்கிட்டு வந்து குளி. சுடு தண்ணி போட்டு வச்சிருக்கேன்” என்றவள் அகல 
“அப்பாடா” என்றிருந்தது யாழிசைக்கு. 
கதவடைத்தவள் அலங்காரங்களை கலைத்து, சாதாரண சுடிக்கு மாறி புடவையும் மடித்து வைத்து மாற்று துணியோடு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். 
சமையலறையை கடக்கும் போது சீதாவும், மங்கம்மாவும் ஆராய்ச்சியோடு பார்ப்பது தெரிய அதை கவனிக்கும் மனநிலையில் யாழிசை இல்லை. அவள் எண்ணமெல்லாம் அவளுக்கு தாலி கட்டியவன் எங்கு சென்றான். என்னவானான் என்ற யோசனையிலையே! இருந்தது. 
குளித்து விட்டு வெளியே வந்தவளிடம் சீதா தட்டில் இரண்டு டம்ளர்களை நீட்டி 
“மாப்புள காபி சாப்பிடுவாரோ! டி சாப்பிடுவாரோ! தெரியல அவருக்கு பிடிச்சதை கொடுத்துட்டு மத்தத நீ எடுத்துக்க” இன்முகமாகவே யாழிசையின் கன்னத்தை தடவியவள் சொல்ல 
என்ன பதில் சொல்வதென்று முழித்தவள் வழக்கம் போல் மண்டையை ஆட்டியவாறே அறைக்குள் சென்று கதவை சாத்த அவள் மணாளன் அறையில் புதிதாய் வீற்றிருந்த கதிரையில் அமர்ந்து அலைபேசியில் மூழ்கி இருக்க, அவனை கண்டு ஆசுவாசமடைந்தவள் அவனை எவ்வாறு அழைப்பதென்று யோசித்தாள்.
கதவை மூடும் சத்தத்தில் வந்தது யாழிசை என்று அறிந்தாலும் இரவு நடந்தது கண்முன் வரவே கோபம் சுள்ளென்று ஏற தலையை தூக்காது விறைத்து கொண்டு நின்றான் ரிஷி. 
காரம் தாங்காமல் கண்களில் கண்ணீர் பெறுக தொண்டையும் எரிய செய்வதறியாது தடுமாறியவன் அறையை விட்டு வெளியே வர குளிர் காற்று தீண்ட சற்று இதமாக தோன்ற வீட்டையடைந்தவன் குளிர் நீரை பருக பருக சற்று எரிச்சல் குறையவும் குளியலறைக்குள் புகுந்து குழாயை திருகி விட்டவன் தலையை நனைக்க யாழிசையால் எரிய ஆரம்பித்திருந்த உடல் தனியா ஆரம்பித்தது. மீண்டும் சென்று தூங்குபவளை எழுப்ப அவன் மனம் இடமளிக்க வில்லை. அவன் எண்ணமெல்லாம் யாருமில்லாத தனிமை அவளோடு வேண்டும். அவள் விஷயத்தில் பொறுமை ரொம்ப முக்கியம் என்று மனம் கூவ ஒரு முடிவோடு தனது அறையிலையே! தூங்கலானான். 
விடிந்ததும் குளித்து சாதாரண உடையில் தயாராகி யாழிசையின் வீட்டையடைய யோகராஜ் அவனை கேள்வியாக பார்க்க 
“கொஞ்சம் வேல இருந்துச்சி அதான் வீட்டுக்கு போனேன். அப்படியே குளிச்சிட்டு வந்தேன்” என்றவன் அறைக்குள் நுழைந்து மனையாளை தேட அவளோ அறையில் இல்லை. அவள் பெயர் சொல்லி கத்தி அழைக்க வேண்டும் போல் இருக்க, அவள் பெயரும் தெரியாமல் “பொறுமை. பொறுமை” தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் ப்ரதீபனுக்கு அழைத்து இன்னும் ஒருவாரத்தில் வருவதாக கூறிவிட்டு அலைபேசியை அணைக்க கதவு திறக்கவும் மீண்டும் அலைபேசியில் மூழ்கியது போல் தலை கவிழ்ந்தான். 
“இவரை எப்படி கூப்பிடறது? மாமான்னு கூப்பிடலாமா?  வேணா, வேணா. அத்தான்… வேணா, வேணா” மனதோடு பட்டிமன்றம் நடத்தியவாறே ரிஷியை பாத்திருந்தவள்
“என்னங்க….” ஒருவாறு அழைத்து விட அவள் குரல் அவளையே! எட்டவில்லை. 
அவன் அருகில் சென்றவள் “என்னங்க” மீண்டும் மெதுவாக அழைக்க அவளின் இனிமையான குரல் ரிஷியின் செவிகளில் விழ கோபமும் சற்று மட்டுப்பட 
“என்ன” என்றவாறு புருவம் உயர்த்தியவாறே அவளை ஏறிட்டவன், மூச்சு விடவும் மறந்தவனாக அவளையே! பாத்திருந்தான். 
ரோஜா வண்ண சுடியில் அன்று பூத்த ரோஜா போல் குளித்து விட்டு வந்தவளின் கூந்தலிலிருந்து நீர் சொட்ட எந்த அலங்காரமோ! அபரணங்களோ இல்லாமல் கழுத்தில் மஞ்சல் தாலி  மட்டும் மினுங்க கண்ணில் குழந்தை போல் கொஞ்சம் பயப்பார்வையோடு, உதடுகள் நடுங்க, அவள் மூக்கில் வீற்றிருந்த மூக்குத்தயும் ஜொலிக்க, இமை விரித்து அவனையே பாத்திருந்தவளின் அழகு ஆணவனின் மனதை கொள்ளை கொள்ள கோபம் மொத்தமும் பறந்து போக கதிரையில் இருந்து சட்டென்று எழுந்து கொண்டான். 
அவளின் இயற்கை அழகில் தன்னை மறந்து அவளை முத்தமிட நெருங்க யாழிசையோ கையில் இருந்த தட்டை அவன் முன் நீட்டி 
“காப்பியா? டீயா”  கொஞ்சும் மொழி பேசி மேலும் அவனை மயக்க கோபம் வருவதற்கு பதில் சிரிப்பே வந்தது. புன்னகைத்தவன் டீயை எடுத்துக் கொள்ள யாழிசை காபியை எடுத்துக் கொண்டாள். 
ரிஷியின் ஆழ் மனதில் தூங்கிக் கொண்டிருக்கும் காதலன் விழித்துக் கொள்ள டீயை பருகியவாரே! அவளை ரசிக்க, அவனின் பார்வையை எதிர் நோக்க முடியாமல் உதடு  கடித்தவாறே தலை கவிழ்ந்தாள் யாழிசை. 
“என்ன இந்த பார்வை பாக்குறாரு? என்ன பார்வைடா சாமி” யாழிசையின் மனதுக்குள் காதல் பூக்கள் மொட்டு விரிக்க தனக்குள் நிகழும் மாற்றத்தால் நிலையில்லாது தவிக்கலானாள். 
இதுவரை எந்த பெண்ணிடமும் காணாத மாற்றங்களளை யாழிசையின் முகத்தில் வந்து போக அவளை சைட் அடிக்கும் வேலையில் இறங்கினான் ரிஷி வரதன்.
காலை சாப்பாட்டை சாப்பிட்டவாறே “இன்னும் ஒருவாரத்தில் இந்தியா திரும்ப வேண்டு. நிறைய வேலைகள் இருக்கு, அதற்க்காக யாழுடன் தனியாக இருக்க வேண்டும்” இன்னும் ஏதேதோ யாழிசையின் வீட்டாரிடம் பேசியவன் அவர்களின் சம்மதத்தோடு  அவளை அழைத்துக் கொண்டு தேனிலவுக்காக நுவரெலியாவை நோக்கி  பயணித்தான். 
இலங்கையின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் நுவர எலிய  வெளிநாட்டவரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தலமாகவும், அழகிய மலர் தோட்டங்களும், தாவரவியல் பூங்காவும், ஹோட்டல்களும், அழகான தேயிலை தோட்டங்களும், நீர்வீழ்ச்சிகளும் என்று கண்ணுக்கு குளிராகவே எல்லாம் அமைத்திருக்கும் குளிரான நகரமாக இருக்க ஏப்ரல் மாதத்தில் கூட்டம் அலைமோதும். 
யாழிசை அவன் பார்த்த, பழகிய பெண்களை விட வித்தியாசமானவள், அவன் நெருங்கினாள் கத்தி விடுவாளோ என்ற பயம் கொஞ்சமாக ரிஷியின் மனதில் எட்டிப்பார்க்க இரண்டு வருடங்களுக்கு பிறகு கண்ட ஆவலில் அன்று கோவில் வாசலில் நடந்து கொண்டது போல் இல்லாமல் தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டவன் அவளை அதிகம் நெருங்காமல் பார்வையாலையே! வருடிக்கொண்டிருந்தான். வீட்டாருடன் பேசி அவளை அழைத்துக் கொண்டு காரில் பயணிக்க அவன் வண்டியை ஓட்ட யாழிசை சுற்றுப்புற சூழலை ரசித்துக் கொண்டிருந்தாள். 
அவளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனையிலேயே வண்டியை ஒட்டியவன், அவளிடம் ஏதாவது பேசி அவளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்தான். யாழிசையும் அதிகம் பேசாதவள் அவனிடம் என்ன கேட்க போகிறாள்? அமைதியாகவே அவளும் வர வண்டியில் மௌனமே நிலவியது. 
சிந்தனையிலிருந்து வெளியே வந்த ரிஷி யாழிசையை பார்க்க அவளோ! தூங்கி இருந்தாள். கதவின் பக்கம் தலையை சாய்ந்து அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டா நழுவி மடியில் இருக்க, வாய் பிளந்து அவள் தூங்கும் அழகை வண்டியை நிறுத்தி ரசித்தவன், சீட்டை பின்னோக்கி இழுத்து, சாய்த்து அவள் தூங்குவதும் ஏதுவாய் வைத்து, வண்டியை மலைப்பாதையில் செலுத்தலானான். 
காதலால் கசிந்துருக்கும் சினமாவை பாத்திருந்தாலாவது தனக்குள் பூத்திருக்கும் காதலை உணர்ந்திருப்பானோ! படம் பார்ப்பது, பாட்டு கேப்பது போன்ற பழக்கங்கள் ரிஷியிடம் இல்லை. ப்ரதீபனுடன் டென்னிஸ் விளையாடுவான் அல்லது பேட்மின்டன் விளையாடுவான். வண்டியில் அசாத்திய அமைதியே! நிலவியது. ஏற்கனவே! அறையோதிக்கி இருந்த ஹோட்டலுக்கு வர மாலையாக தூங்கிக் கொண்டிருந்த யாழிசையை மெதுவாக எழுப்பினான். 
கண்களை திறந்தவளுக்கோ காணக்கிடைத்தது தனது முகத்துக்கு அருகே ரிஷியின் புன்னகை முகம். அவள் மனமோ அதை பதிவு செய்து கொள்ள சாய்ந்திருந்தவள் அடித்து பிடித்து எழுந்து கொள்ள அவனது நெற்றியில் பலமாக மோதி விட்டாள்.  
“இல்லை இல்லை” ரிஷியின் பார்வையில் தலையால் அடித்து விட்டாள். அவளை முறைக்கவும் முடியாமல் தலையை தடவியவன் அவள் முழிப்பதை பார்த்து பக்கென்று சிரித்து விட யாழிசைக்கு தான் சங்கடமாகி போனது. 
அவனின் முகமாற்றமே சொன்னது நன்றாக வலித்திருக்கும் என்று. ஏன் யாழிசைக்கும் தான் தலை பாறாங்கல்லில் மோதியது போல் வலித்தது. நெற்றியை மெதுவாக தடவிக் கொண்டவள் ரிஷியை ஏறிட 
“நல்லா பட்டிருச்சா? வலிக்குதா?” அவன் முயற்சி செய்தாலும் கடுமையான குரல் வரவே இல்லை. கரிசனமாகவே கேட்டான். 
பாவமாக முகத்தை வைத்து தலையை மேலும், கீழும் ஆட்டியவள் திக்கித்திணறி “உங்களுக்கு” என்று அவனின் நெற்றியை காட்ட 
அவளின் முகபாவங்களை ரசித்தவனின் வலி பறந்தோட “இல்லை” என்று சொன்னவன் “உள்ள போகலாமா?” என்றவாறே வண்டியை விட்டு கீழே இறங்க தலையை ஆட்டியவாறே யாழிசையும் இறங்கினாள். 
“பாவம் நல்லா பட்டிருக்கும் திட்ட கூட வேணா, வலிக்குதுன்னு சொல்லி இருக்கலாம்” யாழிசையின் மனம் ரிஷிக்காக இறங்கி வர ஹோட்டலின் உள்ளே சென்றவன் தங்கள் அறைக்கான சாவியை பெற்றுக் கொண்டு அவளின் இடுப்போடு இறுக அணைத்துக் கொண்டே மின்தூக்கியை நோக்கி நடந்தான். 
அவன் தொடுகையில் யாழிசை வெக்கிச் சிவக்க, மேலும் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் ரிஷி. 
தன் கணவன், தனக்கானவன் என்ற உரிமை எண்ணம் தோன்ற யாழிசையும் அவனை ஒட்டியே நின்றாள். 
ஹோட்டல் ஊழியர்கள் இருவர் அவர்களின் பயணப்பைகளை கொண்டு வந்து அறையில் வைக்க ரிஷியோ அவர்களுக்கு கொஞ்சம் காசு கொடுத்து “தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று அனுப்பி வைத்தான்.
அறையை பார்த்து வியந்து, வாய் பிளந்து நின்று விட்டாள் யாழிசை. 
ரிஷி தனது மனதில் உதித்த காதலை உணராமல், யாழிசைக்கு காதலை உணர்த்தாமல் அவளை அடைந்தால்? யாழிசையை விட்டு செல்வதில் குறியாக இருப்பவன் அவளை விட்டு செல்வானா? சென்றால் யாழிசையின்  நிலை தான் என்ன?