Advertisement

மலர் 25:

 

ஏனோ கவியை பார்த்தால் மட்டும் மலரால் இயல்பாக இருக்க முடிவதில்லை எப்பொழுதும்.

“தன்னைக் கண்டவுடன் மலரின் முகத்தில் தோன்றிய பாவனைகளை கவி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.தன்னைக் கண்டால் ஏன் இவளுக்கு இவ்வளவு பயம்..? என்ற கேள்வி கவியின் மனதை அரிக்காமல் இல்லை.இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் தீர்மானமாய் பிறந்தது.

சாரதியோ….வெற்றியின் முகம் பார்க்க வெட்கியவனாய்…நேர்பார்வை பார்க்காது வந்தான்.

“வாடா சாரதி..! என்று அவனின் தவிப்பை தீர்த்து வைத்தான் வெற்றி.

நண்பனின் அழைப்பில்..அவன் தன்னை வெறுக்கவில்லை என்பதை சாரதி உணர்ந்து கொண்டான்.உணர்ந்த நிமிடம் அவன் அடைந்த நிம்மதிக்கு அளவில்லை என்றே சொல்லலாம்.

“வாங்க கவி…! என்றான் அவளையும் மரியாதை நிமித்தமாக.கவிக்கும் வெற்றியை நேர் பார்வை பார்க்க…கொஞ்சம் தயக்கமாக இருக்க..இருந்தும் சமாளித்தாள்.

சம்பந்த பட்டவர்களே சமாதானம் போல் பேசியதைக் கண்டு மற்ற அனைவரும் அவர்களை இயல்பாய் வரவேற்றனர்.

“என்ன சாரதி..?இவ்வளவு காலையில்…ஏதும் பிரச்சனையா..? என்றான் வெற்றி..நண்பனின் நலனை கருத்தில் கொண்டு.

வெற்றியின் கேள்வியில் தன்னை மறந்த சாரதி..அவனை பாய்ந்து அனைத்துக் கொண்டான்.கலங்கிய கண்களை சமன் செய்ய..அந்த அணைப்பு அவனுக்கு தேவையாய் இருந்தது.

“சாரி..வெற்றி..! என்றான் ஆழ் மனதிலிருந்து.

அவனின் உணர்வுகளைப் படித்த வெற்றி…இப்ப எதுக்கு இந்த சாரி எல்லாம்…நான் செஞ்சதும் தப்புதான்..நீதான் என்னை மன்னிக்கணும்..! என்றான் வெற்றி.

“இல்லை வெற்றி..நீ ஏன் இதையெல்லாம் பண்ணேன்னு இப்ப தான் எனக்கு தெரிய வந்தது….உன் பக்கத்தில் நிக்குற தகுதி கூட எனக்கு இல்லை.. என்றான்.

“நட்புக்குள்ள எங்க இருந்து வந்தது இந்த தகுதி…? என்றான் வெற்றி.

“அந்த நட்பையே நான் சந்தேகப்பட்டேனே வெற்றி..? என்றான் சாரதி.

“உன் இடத்தில் வேற யார் இருந்தாலும் இப்படி தான் செய்திருப்பாங்க…அதனால் நீ எந்த தப்பையும் செய்யலை…என்னோட காதலை அடைய…நான்தான் உன்னை பயன் படுத்திகிட்டேன்.. என்றான் வெற்றி.

“என்னோட காதலை அடைய… என்ற வார்த்தைகள் மலரின் செவிப்பறையை தீண்ட….மனதில் மொய்த்துக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தெளிவாகியது மலருக்கு.

தன்னையறியாமல் மலரிடம் காதலை சொன்ன வெற்றியோ…அதைப் பற்றி உணராது..நண்பனைத் தேற்றுவதிலேயே குறியாய் இருந்தான்.

எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்த கவியோ….வெற்றியின் முன்னால் வந்து கைகளை மட்டும் கூப்பினாள்.

“இப்ப எதுக்கு ரெண்டு பெரும் மாறி மாறி பீல் பண்றிங்க..? என்றான்.

“என்னால தான் உங்க உயிர் நண்பன் உயிரை விட்டார்…என்னால தான் உங்க வாழ்க்கையில் இவ்வளவு நாளா நல்லது ஏதும் நடக்கலை..என்னால் தான் மலரின் வாழ்க்கை இப்படி ஆனது….இப்படி எல்லாமே என்னால் தான் என்னும் போது..மன்னிப்பு கேட்கிறதில் தப்பில்லைன்னு தான் தோணுது… என்றாள் நிமிர்வாய்.

மன்னிப்பைக் கூட இப்படி நிமிர்வாய் கேட்க முடியுமா..? என்று ஒரு நிமிடம் வியந்து தான் போனான் வெற்றி.வாழ்க்கை அவளுக்கு பல மாற்றங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை அவள் செயல் மூலம் அறிந்து கொண்டான்.

“மலர் நீயும் என்னை மன்னிக்கணும்…என்னால் உன் வாழ்க்கையில் நடந்த எல்லா குளறுபடிக்கும்…. என்றாள்.

“ஐயோ..கவி அக்கா..பரவாயில்லை… என்றாள் மலர் கலங்கிய கண்களுடன்.அவளுக்கும் செல்வாவின் நியாபகம் வந்திருக்க வேண்டும்.

“ஆமாம் மலர்…உண்மையிலேயே உங்களுக்கு பெரிய மனசு…இறந்தவர் இதயத்தை தானம் செய்ய ஒரு மனசு வேணும்…அது உங்களுக்கு இருந்திருக்கு…அந்த வகையில் நீங்க ரொம்ப பெரிய ஆளா உயர்ந்து நிற்குறிங்க..!ஒரு நண்பனின் இதயத்தை இன்னொரு நண்பனுக்கு கொடுக்க…பெரிய மனசு வேணும்…அது வெற்றிகிட்ட இருக்கு…ஆனா இது ஏதும் தெரியாமல்..கண்மூடித்தனமான கோபத்தால்…நான் தான் எங்க நட்பை கலங்கடிச்சுட்டேன்… என்று சாரதி சொல்லிக் கொண்டிருக்க…

மலருக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது.வெற்றிக்கோ “ஐயோ என்று இருந்தது.

“நீங்க என்ன சொல்றிங்க..? என்றாள் மலர் திணறிக் கொண்டு.

மலரின் கேள்வியில் சந்தேகம் கொண்ட சாரதி வெற்றியைப் பார்க்க…அவனோ அவஸ்தையுடன் நெளிந்தான்.

“செல்வாவின் இதயம் பொருத்தப்பட்டது உங்களுக்கா..? என்றாள் கண்களில் நீரைத் தேக்கி.

சாரதியோ புரியாத பாவனையுடன்…ஆம்.. என்று தலையை ஆட்ட…

கலங்கி நின்ற கண்ணீர்..கரகரவென கன்னத்தில் இறங்கத் தொடங்கியது.

அவளின் அழுகையைப் பார்த்த அனைவரும் அதிர…வெற்றிக்கோ…. உயிரோடு கொல்வதைப் போல் இருந்தது.

“மலர்.. என்று கவி அருகில் வர….ஆனால் அவளோ…சாரதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இறந்த பின்னும்…கவியை அடைந்த செல்வாவின் இதயத்தை எண்ணி…அவனின் காதலை எண்ணி..அதை நிறைவேற்றி வைத்தவன் வெற்றி என்பதை எண்ணி அழுது கொண்டிருந்தாள்.

மெல்ல சாரதியின் அருகில் வந்த மலரை அனைவரும் புரியாமல் பார்க்க..வெற்றியோ திகில் பார்வை பார்த்தான்.அவனின் பயம் அவனுக்கு.

“செல்வாவோட இதயத்தை…பத்திரமா பார்த்துக்கோங்க…! என்றாள் கவியையும் பார்த்துக் கொண்டு இரு பொருள் பட.

அவள் அவ்வாறு சொல்லவும் தான் வெற்றிக்கு உயிரே வந்தது.அவளின் கூற்றில்..சாரதிக்கும்,கவிக்கும் கண்கல கலங்க…

“நீங்களும் பத்திரமா பார்த்துக்கோங்க கவி அக்கா… என்றவள்…வெடித்துக் கிளம்பிய அழுகையுடன் அறைக்குள் ஓடினாள்.

“மலர்.. என்று கவி பின்னால் செல்ல பார்க்க…

“வேண்டாம் கவி..நான் பார்த்துக்குறேன்..! என்றான் வெற்றி.

“இந்த விஷயம் மலருக்கு தெரியாதா வெற்றி..!என்றான் சாரதி.

“தெரியாது.. என்பதைப் போல் தலையை ஆட்டினான் வெற்றி.

“அப்பறம் எப்படி..எனக்கு..? என்று சந்தேகமாய் கேட்க…

“இதயம் கொடுத்தது தெரியும்…ஆனால் அது நீதான் என்பது அவளுக்கு தெரியாது..! என்றான்.

“அப்ப நான் தான் உளறிட்டேனா…! சாரி வெற்றி…! என்றான் சாரதி.

“பரவாயில்லை சாரதி..எப்படியும் நானே அவகிட்ட சொல்றதா தான் இருந்தேன்….! என்றவன் மலர் சென்ற அறையை நோக்கி சென்றான்.

சுற்றி இருந்த அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.நடந்த விஷயங்களில் அவர்களின் தலையீடு இல்லாத போது..அவர்களால் வேடிக்கை மட்டும் தானே பார்க்க முடியும்.

உள்ளே சென்ற மலரின் நிலைதான் அதோ பரிதாபம்…செல்வாவின் நியாபகங்கள் மனதை முள்ளாய் குத்திக் கொண்டிருக்க…இன்று கேட்ட செய்தியோ அதை விட அதிர்வாய்.

“இப்ப தான் கொஞ்சம் நல்லா இருந்தா…மறுபடியும் முதல்ல இருந்தா..! என்றே தோன்றியது வெற்றிக்கு.

கதவைத் திறந்தவன்…அங்கே மலரைக் கண்டு அதிர்ந்தான்.மலரோ செல்வாவின் புகைப் படத்தை வைத்து கதறிக் கதறி அழுது கொண்டிருந்தாள்.

“என்னாச்சு..?ஒரு வேளை இவளுக்கு செல்வாவை பிடித்திருந்ததோ…! என்ற கோணத்தில் வெற்றின் மனம் செல்ல..அதிர்ந்தான்.இல்லை அப்படி இருக்காது…என் மலரின் மனசில் யாரும் இல்லை.. என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.

“மலர்..! என்று மெதுவாய் அவளின் தோளைத் தொட…வெடுக்கென்று திரும்பிய மலர் அவனின் கைகளை தட்டி விட்டாள்.

“தயவு செய்து இங்க இருந்து போய்டுங்க…!இல்லை நான் கொலைகாரி ஆகிடுவேன்.. என்றாள்.

“இப்ப எதுக்கு இவ்வளவு கோபம்..! என்றான் தன்மையாய்.

“உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி என்பதே கிடையாதா…? எதுக்கு இப்ப என்னை தொந்தரவு பண்றிங்க…போங்க முதல்ல இங்க இருந்து…! என்று கத்தினாள்.

“மலரா இது…அதிர்ந்து பேசத் தெரியாதவள்…இன்று கத்துகிறாள்…கோபப் பட தெரியாதவள்…இன்று பத்திரகாளியாய் நிற்கிறாள்.. என்று வெற்றி யோசிக்க….

“உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா..? எதுக்காக இவ்வளவு பெரிய விஷயத்தை மறச்சிங்க..? என்றாள் அழுகையுடன்.

“லூசு மாதிரி பேசாத…நான் எங்க மறைச்சேன்…? நீங்க கேட்கலை நான் சொல்லலை..அவ்வளவு தான்.. என்றான்..எங்கோ பார்த்துக் கொண்டு.

“புத்திசாலித் தனமா பேசுறதா நினைப்பு.. என்றாள்.

கோபமாய் வந்தது வெற்றிக்கு….

“ஆமாடி…அப்படித்தான் பேசுவேன்…இப்ப என்ன செய்யணும்கிற… என்று ஒரு அதட்டல் போட..அப்படியே அடங்கினாள் மலர்.

“புள்ள பூச்சி..உன்கிட்ட அமைதியா பேசுனா வேலைக்கு ஆகாதுடி.. என்று மனதில் நினைத்தவன்….

“சொல்லுடி என்ன செய்யணும்கிற…? என்றான்.

“செத்தும் செல்வா வாழ்வது உனக்கு பிடிக்கலையா..? என்றான் வெற்றி.

“இல்லையில்லை.. என்றாள் வேகமாய்.

“அப்பறம் ஏண்டி..கேள்வி கேட்டே..என் உசுர வாங்குற..? என்றான்.

“நான் உங்க உசுர வாங்குறேனா…? நீங்க எல்லாரும் சேர்ந்து தான் என் வாழ்க்கையில் விளையாடிட்டிங்க…! என்று அவள் அழுக…

“இப்ப இந்த அழுகையை நிப்பாட்ட போறியா இல்லையா….உன்னை லவ் பண்ணித் தொலைச்சதுக்கு நான் தான் அழுகனும்… என்றான் கோபத்தில்.

“என்ன சொன்னிங்க..? என்ன சொன்னிங்க..? என்றாள்.

“ம்ம்ம்…ஒன்னும் சொல்லலை.. என்று மழுப்பினான்.

“இல்லை நான் கேட்டேன்.. என்றாள்.

“என்ன கேட்ட..?

“லவ் பண்ணேன் அப்படின்னு.. என்றாள்.

“கேட்டுச்சு இல்ல…அப்ப விடு.. என்றான் சாவகாசமாய்.

“டேய்..!என்ன நினச்சுகிட்டு இருக்க…உன் மனசுல.. என்று அவனின் காலர் சட்டையை கொத்தாக பற்ற…

“என்னது டேயா… என்று மனதில் நினைத்தவன்…

தன் மேல் வந்து விழுந்தவளை இமைக்காமல் பார்த்தவன்..உன்னத்தான்…. . என்றான்.

“எப்ப இருந்து…! என்றாள் அவஸ்தையாய்.

“உன்னைப் பார்த்தப்ப இருந்து…! என்றான் உல்லாசமாய்.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க…அவனை  பார்க்க முடியாமல் அவள் தான் திண்டாட வேண்டியிருந்தது.சட்டென்று அவனில் இருந்து விலகினாள் மலர்.

என்னாச்சு…? என்று அவன் கேள்வியாய் பார்க்க…

“இதை நீங்க முன்னாடியே சொல்லி இருந்தா..இவ்வளவு பிரச்சனை நடந்திருக்காதுல.. என்றாள் கோபமாய்.

“நான் சொல்லலைன்னு நீ பார்த்தியா..? என்றான்.

“எப்ப சொன்னிங்க…? என்கிட்டே சொல்லவே இல்லையே..? என்றான்.

“உன் விவரம் அவ்வளவு தான்..உன்னைத் தவிர எல்லாருக்கும் தெரியும்…நான் உன்னைத் தான் லவ் பண்ணேன்னு..! என்றான் இடக்காய்.

“செல்வாவுக்கு… என்றாள் உயிரை கண்ணில் தேக்கி..

“தெரியும்… என்றான்.

அவ்வளவுதான்…இன்னும் என்னென்ன எனக்கு தெரியாது…அதையும் சொல்லித் தொலைங்க…மொத்தமா தெரிஞ்சுக்குறேன்… என்று அவள் ஆவேசமாய் கத்த…

“அமைதியாய் இரு மலர்.. என்று அவளை அணைத்து சமாதானப் படுத்த முயன்றான் வெற்றி.ஆனால் முடியவில்லை.

“இல்லை மாட்டேன்…என்ன சுத்தி என்னென்ன நடந்திருக்கு..ஆனா ஒண்ணுமே தெரியாம லூசு மாதிரி சுத்திட்டு இருந்திருக்கேன்…இந்த லட்சணத்துல..எல்லாமே என்னால் தான் நடந்ததுன்னு..எத்தனை நாள் குற்ற உணர்வில் தவிச்சிருக்கேன் தெரியுமா…? செல்வா கூட என்கிட்டே சொல்லலை.. என்றாள் மீண்டும் அழுகையுடன்.

அவள் அழுவது பிடிக்காமல்..அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் வெற்றி.

“மலர் பிளீஸ் அழாத…என்னால பார்க்க முடியலை..தப்பு எல்லாமே எங்க பேர்ல தான்..உன்மேல எந்த தப்புமே கிடையாது…உன்கிட்ட சொல்லாம விட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு…நான் வருந்தாத நாளே கிடையாது…பிளீஸ் என்னை நம்பு….என்று அவன் வாய் பேசிக் கொண்டிருக்க…அவனின் அணைப்போ இறுகிக் கொண்டே சென்றது.

“மாட்டேன்…நான் நம்ப மாட்டேன்..! என்று அவள் திமிர…

“நம்பித்தான் ஆகணும்…உனக்கு வேற வழியில்லை…நான் சொல்றது தான் உண்மை… என்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.

கடைசி நேர குழப்பம் மட்டும் தெரிந்திருந்த மலருக்கு..வெற்றி சொல்ல சொல்ல..தலையை சுற்றிக் கொண்டு வந்தது.

“என்ன சொல்றிங்க…?

“ஆமாம் மலர்…தன்னோட கல்யாணம் முடுஞ்ச உடனே…வீட்ல பேசி..உன்னை எனக்கு கல்யாணம் செய்து வைப்பதாய் இருந்தான் செல்வா…!கடைசியில் நடந்த குழப்பத்தில்..எல்லாமே தலைகீழ மாறிடுச்சு… என்றான் விரக்தியாய்.

“என்கிட்டே சொல்ல வேண்டியதை செல்வாகிட்ட சொன்னா அப்படித்தான் இருக்கும்.. என்றாள்.

“எப்படி சொல்ல சொல்ற…? நான் உனக்கு பாடம் சொல்லி தர ஆசிரியர் இடத்துல இருந்துகிட்டு …உன்கிட்ட காதலை சொன்னா…அது எப்படி சரியா வரும்..அது மத்தவங்களுக்கு ஒரு தப்பான முன்னுதாரணமாய் போயிடாது…அது மட்டுமில்லாம…படிக்கிற உன்னோட மனசை கலைக்க வேண்டாம்ன்னு தான் சொல்லலை…செல்வாவையும் சொல்ல வேண்டாம்ன்னு நான் தான் சொன்னேன்.. என்றான்.

“இப்ப வரைக்குமே நீங்க சொல்லலையே..? என்றாள்.

“அடிப்பாவி..இப்ப இது தான் உன் பஞ்சாயத்தா…? என்று மனதில் நினைத்தபடி…

“அப்ப லவ் பண்ணேன்..பட் சொல்லலை…இப்போ லவ் பண்ணலை…அதான் சொல்லலை…. என்று கூலாக சொல்ல…

“என்னது..? இப்ப லவ் பண்ணலையா…? உங்களை…! என்று பல்லைக் கடித்துக் கொண்டு வந்தவளை…இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன்….

“என்னை… என்று எடுத்துக் கொடுத்தான்.

“அது..வந்து…உங்களை… என்று அவள் அவஸ்தையில் நெளிய….அவனின் அருகாமை..அவளுக்குள்ளும் ஏதோ மாற்றங்களை செய்ய..விடுங்க..! என்று அவஸ்தையில் விலக முறபட….முடியாமல் போனது.

“இனி எப்பவும் என்னை விட்டு உன்னால் விலக முடியாது… என்றான் உல்லாசமாய்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… என்றாள் அவனைப் பார்க்காமல்.

“வேற எதுக்கு குறைச்சல் கண்டிங்க மேடம்..சொன்னா தெரிய வச்சிடுவோம்..! என்றான்.

“ஒன்னும் தேவையில்ல… என்றாள்.

“எனக்கு தேவையாயிருக்கே…. என்றான் இரு பொருள் பட.

“இந்த டபுள் மீனிங்கள பேசுற வேலை எல்லாம் வேண்டாம்… என்றாள் போய் கோபத்துடன்.

“பார்றா….உனக்கும் லைட் எரியுது…நான் கூட உன்னை வச்சுகிட்டு என்ன பண்ண போறேனோன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்…ஆனா இப்ப தெளிவாகிடுச்சு…என்ன என்னவோவெல்லாம் பண்ணலாம்ன்னு… என்று அவள் முகத்தருகில் தன் முகத்தை வைத்து சொல்ல…அவளுக்கு தான் குறுகுறுப்பாய் இருந்தது.

“தேங்க்ஸ்..! என்றாள் ஆத்மார்த்தமாய்.

“இது எதுக்கு…? என்றான் காரியத்திலேயே கண்ணாய் இருந்தவன்..

“எல்லாத்துக்கும்…. என்றாள்.

“ம்ம் பரவாயில்லை..பரவாயில்லை… என்றான் பெரிய மனிதனாய்.

“என்னை எப்ப இருந்து லவ் பண்ணிங்க…? ஏன் லவ் பண்ணிங்க..? என்றாள்.

“அடியேய்..மறுபடியும் முதல்ல  இருந்தா…என்னால முடியாதுடா சாமி…இங்க பார் மலர்…நான் உன்னை காதலிக்கிறேன்…உயிருக்கு உயிரா நேசிக்கிறேன்….இந்த ஜென்மத்துக்கு நீதான் என் பொண்டாட்டி….போதுமா..? என்றான்.

“அடுத்த ஜென்மத்துக்கு.. என்றாள் சந்தேகமாய்.

“அடியேய்…ஒருத்தனுக்கு உட்காரவே முடியலையாம்..அவனுக்கு ஒன்பது பொண்டாட்டியாம்….அந்த கதையா இருக்கு என் கதை…இந்த ஜென்மத்துலையே நான் இன்னும் வாழலை…நீ அடுத்த ஜென்மத்துக்கு போயிட்ட…. என்று அவன் குறை பட…

அவனைப் பார்த்து கலகலவென சிரித்தாள் மலர்.

“ஆனா நான் உங்களைக் காதலிக்கலையே..? என்றாள்.

“பரவாயில்லை…உனக்கும் சேர்த்து தான் நான் காதலிக்கிறேன்ல….கணக்கு சரியா போய்டுச்சு…! என்றான் உல்லாசமாய்.

“எனக்கு கொஞ்சம் பேசணும்..?

“இன்னும் என்னடி பேசணும்…? என்று வெற்றி எரிச்சல் பட…

“இல்லை…எனக்கு இதெல்லாம் சட்டுன்னு ஏத்துக்க கஷ்ட்டமா இருக்கு..எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. என்றாள்.

“அப்படின்ற…!சரி டைம் எடுத்துக்க…அது வரைக்கும் நான் காத்திருக்கேன்…என்று அமைதியாய் அவன் சொல்ல…அவள் நிம்மதியாய் அவனைப் பார்க்க…

அவனோ ஒரு மார்க்கமான சிரிப்புடன்…இன்னைக்கு நைட் வரைக்கும் டைம் எடுத்துக்கோ…சரியா..? என்றான்.

“இதெல்லாம் மோசம்… என்றாள்.

“நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலைடி… என்றான்.

“கருமம்..கருமம்…ஒரு வாத்தியார் பேசுற பேச்சா…? என்றாள்.

“வாத்தியார் தான்…வகுப்பறைக்கு இல்ல..பள்ளியறைக்கு…. என்றான் உல்லாசமாய்.

“உங்களுக்கு திவாகர் அப்பா மேலயும்,சத்யா அம்மா மேலயும் கோபம் இல்லையே..? என்றாள் அவன் முகம் பார்த்தவளாய்.

“எனக்கு யார் மேலயும் கோபம் இல்லமா….! என்று பேசிக் கொண்டிருக்கும் போதே..கதவு தட்டும் சத்தம் கேட்டது.

வெற்றி வந்து கதவைத் திறக்க….தாரணி தான் நின்றிருந்தாள்.

“சொல்லுங்க அண்ணி…! என்றான்.

“இல்லை.. மலர் கோபமா வந்தா..நீங்களும் கோபமா வந்திங்க…அதான் மனசு கேட்கலை…. என்று தாரணி இழுக்க….

அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த வெற்றி…அவளுக்கு விலகி வழி விட்டான்.

உள்ளே வந்த தாரணிக்கு…மலரின் சிவந்த முகத்தைப் பார்த்து அனைத்தும் விளங்கியது.நல்ல வேளை வேற எதுவும் இல்லை…என்று நிம்மதி அடைந்தவளாய்…பெரு மூச்சு விட்டாள் தாரணி.

“கொழுந்தனாரே..இது பகல்… என்றாள் தாரணி நக்கலாய்.

“அட ஆமா அண்ணி….சூரியன் சுள்ளுன்னு தான் அடிக்கிறான்… என்றான் அவனும் விடாமல்.

“பார்த்து நடந்துகிட்டா சரி… என்று சொல்ல…

“குருவே.. என்று புன்னகையுடன் தாரணியைக் கும்பிட்டான் வெற்றி.

அவனின் ஒவ்வொரு பரிமாணத்திலும் வியந்து நின்றாள் மலர்.வைத்த கண் வாங்காமல் அவனையே பார்க்க…

“மலர் போதும் உன் புருஷனை சைட் அடிச்சது….உனக்கு கொஞ்சம் பாடம் எடுக்கணும்….கொழுந்தனாரே நீங்க போகலாம்.. என்றாள் கெத்தாய்.

“அண்ணி இதெல்லாம் சரியில்லை… என்று இழுக்க…

“எது சரியில்லை… என்று தாரணி சண்டைக்கு வர…

“இல்லையே எல்லாமே நல்லாத்தானே இருக்கு…அப்படித்தானே மலர்…! என்று கண் அடித்தவன்…

“எனக்கு வெளிய கொஞ்சம் வேலையிருக்கு…போயிட்டு சீக்கிரமா வந்திடுறேன்… என்று அந்த சீக்கிரத்தில் ஒரு அழுத்தம் கொடுத்து செல்ல…தலையில் அடித்துக் கொண்டனர் பெண்கள் இருவரும்.

“வெற்றியை இப்படி பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா மலர்..! இதெல்லாம் உன்னால் மட்டும் தான்.இன்னைக்கு சாரதி வந்த உடனே ..எங்க மறுபடியும் பிரச்சனை வருமோன்னு பயந்தோம்..நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கலை…தேங்க்ஸ் மலர்.. என்றாள் தாரணி மனதார.

“என்னக்கா நீங்க..? எனக்கு போய் தேங்க்ஸ் சொல்லிட்டு…நீங்க எங்க வாழ்க்கைகாகத்தானே இவ்வளவு செய்றிங்க…அதை எல்லாம் புருஞ்சுக்காம இருந்தா என்னை போல் ஒரு முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்கக்கா… என்றாள் ஆத்மார்த்தமாய்.

“விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லைன்னு.. உன்னைப் பார்த்து தெரிஞ்சுகிட்டேன் மலர்… என்றாள் தாரணி.

“வாழ்ற கொஞ்ச நாளில்…கோபம் ,பொறாமை,சண்டை,போட்டி… இதையெல்லாம் வச்சுகிட்டு என்ன பண்ண போறோம்..வாழ்க்கையின் எதார்த்தம் தெரிஞ்சாலே எந்த பிரச்சனையும் வராதில்லைக்கா… இல்லாதவங்களுக்கு தான் ஒரு பொருளோட அருமை தெரியும் என்று சொல்வாங்க…அந்த வகையில் எனக்கு குடும்பம்,உறவுகள் அருமை தெரியும்க்கா…அது வெற்றி மூலமா கிடைச்சிருக்கு…அப்போ அதை ஏத்துக்கிட்டு வாழ்வதில் தானே நிதர்சனம் இருக்கிறது… என்றாள்.

“நடைமுறை வாழ்வை பேசுற மலர்..கண்டிப்பா உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும்..அதுக்கு நாங்க எல்லாரும் கியாரண்டி… என்று தாரணி சொல்ல..மலர்ந்து சிரித்தாள் மலர்.

 

மாலை மங்கிய வேளை….

பால்கனியில் நின்று  நிலவினை ரசித்துக் கொண்டிருந்தான் வெற்றி..கையணைப்பில் மலர்.

“இப்படி ஒரு நாள் வராதா என்று நான் ஏங்காத நாளில்லை மலர்…! என்றான்.

“ம்ம்ம்..

“நிலா ரொம்ப அழகு இல்லையா..? என்றான்.

“ம்ம்ம்..

ஐ லவ் யு டி..

“ம்ம்ம்…

“ஒரு இரவு முழுவதும்…அந்த நிலவை பார்த்து ரசிக்கணும்…நீ என் கையணைப்பில் இருக்கணும்…. என்றான்.

“ம்ம்ம்.. என்றாள் அழுத்தமாய் பல்லைக் கடித்தபடி.

“என்ன எல்லாத்துக்கும்…ம்ம்ம் கொட்டுற… என்று அவள் முகத்தைப் பார்க்க…மலரோ கடுப்புடன் இருந்தாள்.

“என்ன மலர்..? என்றான் அப்பாவியாய்.

“என்ன நொண்ண மலர்…நீங்க பேசாம நிலாவைப் பார்த்துட்டே இருங்க…அருமையா இருக்கும்…எப்படியும் அம்பது வயசாயிடும்.. என்று கடுப்புடன் சொன்னவள்…அங்கிருந்து நகர போக..

நமட்டு சிரிப்பு சிரித்தவன்…பார்த்துட்டே இருக்கதான போறேன்.. என்று விசில் அடித்தவனாய்…அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.

“என்ன பண்றிங்க…!..என்று அவள் கேட்டு முடிக்கும் முன்..அவளை சிறை செய்திருந்தான்.

கணவனின் மஞ்சத்தில் வீழ்ந்த வஞ்சி மகளும்….அவனுள் ஒன்ற…இல்லறத்திற்கான இனிய துவக்கம் ஆரம்பம் ஆகியது.

 

இனி வரும் காலங்கள் அவர்களுக்கு….வசந்த காலமாக அமையும் என்பதில் ஐயமில்லை….

அவர்களை வாழ்த்தி..நாமும் விடை பெறுவோம்…..!

 

முற்றும்.

 

Advertisement