Advertisement

 

மலர் 22:

மலர் வந்தபோது… வெளியே சென்ற வெற்றி தான்…..இன்னும் வீடு வந்து சேர்ந்தபாடில்லை….

மலருக்கோ…புது இடம்..புது மனிதர்கள் என்பதை எல்லாம் தாண்டி…ஏதோ ஒன்று அங்கே அவளை ஒன்ற விடாமல் செய்தது.தாரணியின் புண்ணியத்தில்..ஒருவாறாக சமாளித்து இருந்தாள்.துர்கா கூட அவளிடம் வந்து பேசிவிட்டு சென்றார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ரத்தினமும்….மலர் வந்ததை எண்ணி,மகிழ்ச்சியுடன் தான் அவளிடம் பேசினார்.ஆனால் பாராமுகம் காட்டிச்சென்ற வெற்றியின் பின்னால் தன் மனம் சென்று ஒளிந்ததை பாவம் அவள் அறியாள்.

“என்னாச்சு மலர்..? ஏன் இவ்வளவு சோகமா உட்கார்ந்திருக்க…?” என்று அவளின் கையில் காபி டம்ளரை நீட்டியபடி தாரணி கேட்க…

“அதெல்லாம் ஒண்ணுமில்லைக்கா….” என்று அவள் ஒப்புக்கு சமாளிக்க…

“புரியுது மலர்..வெற்றி அப்படி போனது தப்புதான்…ஆனால் அதே சமயம் வெற்றி இடத்தில் இருந்தும் நீ கொஞ்சம் யோசிக்கணும்..அதுக்காக அவர் செய்தது சரின்னு நான் சொல்ல வரலை…ஆனா..வெற்றி கெட்டவர் எல்லாம் இல்லை மலர்..நீ இதை ஒன்னை மட்டும் புருஞ்சுக்கணும்…அன்னைக்கு நீ அப்படி…அவர் முகம் கூட பார்க்காமல்…கிளம்பிப் போனதில் அவருக்கு வருத்தம்..மத்தபடி வேற எந்த காரணமும் இருக்க முடியும்ன்னு எனக்கு தோணலை…!” என்று தாரணி பதமாய் கூற..

“எப்பவும் யார் மேலயும் கோபப்படவோ…இல்லை உரிமை கொள்ளவோ…எனக்கு வாய்ப்புகள் இருந்ததில்லை…அதனால் என் மனசில் நான் எதையும் பெரிசா நினைக்கிறது இல்லைக்கா…” என்றாள் மேம்போக்காய்.

“எப்படி பேசினாலும் பிடி கொடுக்காமல் பேசும் மலரை பார்த்து வியந்தாள் தாரணி.இதை.. மலரின் பக்குவம் என்று எடுத்துக் கொள்வதா..? இல்லை அவள் பட்ட காயங்களின் வடுக்கள் என்று எடுத்துக் கொள்வதா..?” என்று தெரியாமல்…தாரணிதான் திணறிப் போனாள்.

“சரி மலர்…மேல இருக்குற முதல் அறை வெற்றியோடது.நீ ரெஸ்ட் எடுக்கணும்ன்னா…போய் ரெஸ்ட் எடு..” என்றாள்.

“சார்..ரூம்க்கு எப்படி…அவர் அனுமதி இல்லாம…” என்று மலருக்கு வார்த்தைகள் தந்தியடிக்க…

“என்னது சாரா..?” என்று தாரணி முறைக்க…

தன் தலையில் தனக்குத் தானே தட்டியவள்…”ஹி..ஹி..பழக்க தோஷத்தில் வந்திருச்சுக்கா…!” என்று அசடு வழிய…

மலரின் முகத்தைப் பார்த்த தாரணி வாய் விட்டு சிரிக்க…மலருக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.

“சிரிக்காதிங்கக்கா..” என்று சொல்ல…

“சரி..சரி..சிரிக்கலை…இனி ஒரு தடவை இப்படி சொல்லாத..அப்பறம் வெற்றி தலையில் ஏறி உட்கார்ந்துக்குவார்…அதுமட்டுமில்லாம உங்க சாரு….இப்ப வெறும் மோரு மட்டும் தான்…” என்றாள்.

“என்ன சொல்றிங்க..?” என்றாள் மலர்.

“ஆமா மலர் வெற்றி வேலையை விட்டு பல வருஷம் ஆச்சு..சார்..இப்போ விவசாயம் பண்றார்…!” என்று தாரணி சொல்ல…

“ஏன்..?” என்ற மலருக்கு நடந்த சம்பவங்கள் அணி வகுக்க…மனம் மீண்டும் கூட்டுக்குள் சென்று அடங்கியது.

“அது அவரைத்தான் கேட்கணும் மலர்.ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்வேன்…வெற்றிக்கு ஏத்த ஜோடி நீதான்…அவர் உருட்டல் மிரட்டல் எல்லாம் பார்த்து நீ தான் பயப்படுற…சோ..அவருக்கு கிடைத்த சிறந்த அடிமை நீதான்…” என்று சிரிக்க…

ஏனோ மலரால் அதை ரசிக்க முடியவில்லை.வெற்றியை கணவன் ஸ்தானத்தில் வைத்து பார்க்க…அவளால் முடியவில்லை.தனக்கென்று சுய விருப்பு வெறுப்புகள் இருக்கா என்று அவள் யோசிக்க..பதில் என்னமோ பூஜ்யம் தான்….

“அவர் எப்படிப்பட்டவர்ன்னு எனக்கு தெரியாதுக்கா…ஆனா அவர் ஒரு நல்ல ஆசிரியர்…அது மட்டும் எனக்கு தெளிவா தெரியும்…” என்று சொல்ல..

“பாருங்கப்பா…புருஷனுக்கு வக்காலத்து வாங்குறதை…” என்று தாரணி சொல்ல…

“இல்லைக்கா உண்மை இதுதான்…இல்லைன்னா..என்னை மாதிரி ஒரு மக்கு பிள்ளைக்கு எல்லாம் அவர் எப்படி பாடம் எடுக்க முடியும்..?” என்று மலர் கேட்க…

“பாடம் எடுக்குற அளவுக்கு போயாச்சா..?” என்று தாரணி கன்னத்தில் கை வைக்க…

“ம்ம்ம்…அதெல்லாம் அப்பவே எடுத்து முடுச்சாச்சுல…” என்று அப்பாவியாய் பதில் சொல்ல…

அவர் சிறந்த ஆசிரியர்..” என்று அவள் சொல்லும் போதே உள்ளே வந்திருந்த வெற்றி…அதற்கடுத்த தாரணியின் கிண்டல் புரியாமல்..அவள் அப்பாவியாய் பதில் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்து….தலையில் அடித்துக் கொண்டான்.

“லூசு லூசு…”அவங்க எதை கேட்கிறாங்க…இவ எதை சொல்லிட்டு இருக்கா..” என்று அங்கிருக்கும் சுவற்றில் முட்டாத குறையாய் முட்டிக் கொண்டான்.

“ம்க்கும்..” என்று செருமியபடி அவன் உள்ளே வர…

அவனைப் பார்த்த மலர்….டபக்கென்று எழுந்து நின்றாள்.அதைப் பார்த்த தாரணி மீண்டும் சிரிக்க…

மலரைப் பார்த்து முறைத்தான் வெற்றி.அவளோ மிரண்ட விழிகளுடன் அவனைப் பார்க்க…

“சூப்பர் மலர்..இப்படியே வெற்றி வரும் போது எல்லாம் அவருக்கு எழுந்து நின்னு விஷ் பண்ணிகிட்டே இரு…என்னால முடியலைடா சாமி…நான் வரேன்…” என்று சிரித்தபடி செல்ல…

“அண்ணி..” என்று அவளையும் முறைத்தான் வெற்றி.

“ஐயோ மலர்..நீ ஒரு ஆள் போதும்…இவர் கோபத்தைத் தூண்டி விட….இன்னும் நிறைய வளரனும்டி..” என்று மனசாட்சி கத்திக் கொண்டிருக்க…

அவளை சட்டையே செய்யாது..அவன் சென்று கொண்டிருந்தான். நிஜத்திற்கு வந்த மலருக்கு அப்போது தான் வெற்றி அருகில் இல்லாதது உரைத்தது.

அவன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தவள்…”இப்ப என்ன பண்றது..? பின்னாடியே போகனுமா..? இல்லை இங்கேயே இருக்கனுமா..?” என்று யோசித்துக் கொண்டிருக்க…சிறிது தூரம் சென்றவன்…திரும்பிப் பார்த்து முறைக்கத் துவங்கினான்.

“இவர் ஒருத்தர்…எப்ப பார்த்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு முறைச்சு பார்த்து கிட்டு…” என்று சலித்தவள்..கொஞ்சம் பயத்துடனேயே…அவன் பின்னால் சென்றாள்.

பின்னாடியே சென்றவளுக்கு ஏனோ..அந்த அறைக்குள் நுழைய கால்கள் அனுமதி தரவில்லை.கால்கள் பின்னிக் கொண்டு நிற்க…

“இப்ப மறுபடி உனக்கு ஆரத்தி எடுக்கணுமா…?” என்று வெற்றி கோபமாய் உள்ளிருந்து கத்த…

சடாரென உள்ளே நுழைந்தாள் மலர்.அவள் வந்த வேகத்தைப் பார்த்தவனுக்கு….அவளைப் பார்த்து பாவம் போல் தோன்றினாலும்… இவளை இந்த வகையில் தான் கையாள வேண்டும் என்று கணித்து வைத்திருந்தான்.

“என்ன விஷயம்..? திடீர்ன்னு வந்திருக்க..?” என்றான் பட்டும் படாமல்.

“இவர் தெரிந்து தான் பேசுறாரா…இல்லை…” என்று மலர் குழம்ப…

“நல்லா தெளிவா தான் இருக்கேன்..! இல்லை…இவன் உனக்கு வேண்டாம்ன்னு சொல்லி…உங்க அத்தை..சாரி..சாரி…அம்மா கூப்பிட்ட உடனே…ஆட்டுக்குட்டி மாதிரி அவங்க பின்னாடி போனவளுக்கு… திடீர்ன்னு….புருஷன் மேல அக்கறை வர காரணம் என்ன..?” என்றான் கத்தரித்தார் போல்.

“புருஷனா..?” என்று அவள் அதிர…

அவளின் அதிர்ச்சி அவனுக்கு ஏகத்துக்கும் கடுப்பைக் கிளப்ப…

“அதான என்னை ஒரு மனுஷனா கூட மதிக்கலை…அப்பறம் எப்படி புருஷனா நினைப்ப..?” என்று வார்த்தைகளை விட…

“யார் சொன்னது உங்களை மனுஷனா கூட மதிக்கலைன்னு… உங்களைப் பத்தி எவ்வளவு உயர்வா…” என்று பேசிக் கொண்டே நிமிர்ந்தவள்…அவனின் முகத்தைப் பார்த்தவுடன் வார்த்தைகளுடன் தந்தியடிக்கத் தொடங்கினாள்.

“இப்ப என்ன சொல்ல வந்த..?” என்றான் கூர்மையாய்.

“ஒண்ணுமில்லை…” என்றாள் பயந்த பார்வையுடன்.

“சரி சொல்லு…எதுக்கு வந்த…?” என்றான் விடாப்பிடியாய்.

அவனின் கேள்வியில் சற்றே எரிச்சலுற்றவள்….”இப்ப என்ன..? நான் ஏன் வந்தேன்னு தெரியனும்….எனக்கொண்ணும் இங்க வரணும்ன்னு ஆசையில்லை..திவாகர் அப்பா தான்…நான் இங்கதான் இருக்கனும்ன்னு இங்க வந்து விட்டுட்டு போனார்..போதுமா…சும்மா எப்ப பார்த்தாலும் ஒரே கேள்வியை கேட்டுகிட்டு..உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க…நான் இப்பவே கிளம்பிடுறேன்..” என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு.

“கிளம்பு..” என்றான் படக்கென்று.

“என்னது….?” என்றாள் அதிர்ச்சியாய்.மீண்டும் தன் காதுகளை தேய்த்து விட….

“உன்னைத்தான் சொன்னேன் …கிளம்பு…” என்றான் இறுகிய

முகத்துடன்.அவனைப் பார்க்கவே அவ்வளவு பயமாய் இருந்தது அவளுக்கு.

கல்லையும் அவன் முகத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டிற்கும் வித்யாசம் இருக்குமென்று அவளுக்கு தோன்றவில்லை.

இப்படி படாரென்று “கிளம்பு” என்று சொல்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

“நான்..எப்படி…வந்து..” என்று இழுக்க…

“நான் சொன்னது உன் காதில் விழுந்துச்சா இல்லையா…?இப்ப கூட நீயா வரணும்ன்னு நினச்சு வரலை…உங்க திவாகர் அப்பா சொன்னதால் வந்திருக்க….நாளைக்கு அவரே வந்து…இவன் வேண்டாம்..வாம்மா நம்ம வீட்டுக்கு போய்டலாம்ன்னு சொன்னா உடனே நாய்குட்டி மாதிரி அவங்க பின்னாடியே போய்டுவ….அதனால தான் சொல்றேன் இப்பவே கிளம்பிடு…” என்றான்.

“இவன் சொல்வதும் உண்மைதான…நானா இங்க வரலையே…அப்பா சொன்னார் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக தான இங்க வந்தேன்…” என்று மனதில் எண்ணியபடி குழம்பினாள்.

எத்தனை வயது ஆனாலும்..எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும்..தனக்கு எது தேவை என்று பிரித்து அறிய முடியாத நிலையில் தான் இருந்தது மலரின் மனம்.

சிறு வயதிலிருந்தே…தன்ன சார்ந்த தேவைகளுக்கு..பிறரையே நம்பி வாழ்ந்ததால்…தனக்கு எது வேண்டும் என்ற எண்ணங்களை வளர விடாமல் விட்டுவிட்டாள்.

அது அவளின் வாழ்க்கை வரை கொண்டு வந்து விட்டு விட்டது.

வெற்றியின் மனதிலோ…பூகம்பமே வெடித்துக் கொண்டு இருந்தது.ஒரு வகையில் செல்வாவின் பெற்றோர் மனது மாறியது அவனுக்கு மகிழ்ச்சி தான் என்றாலும்….தான் உயிருக்கு உயிராய் விரும்பியவள்….தாலி கட்டிய மனைவி…தானாக தன்னைத் தேடி வரவில்லை..என்ற எண்ணமே அவனை வாள் கொண்டு அறுத்தது.

 அவனின் நேசத்திற்கு மதிப்பில்லாமல் போன்றதொரு பிரம்மை அவனுள்.

அந்த நேசத்தை முதலில் உரியவளிடமே இன்னமும் சொல்லாமல்.. அவளிடம் இருந்து அதை எதிர்பார்ப்பது…முட்டாள்தனம் என்று அந்த வளர்ந்த காதலனுக்கு தெரியவில்லை.

எந்த சூழ்நிலையிலும்…வெற்றி தன்னுடைய காதலை அவளிடம் தெரிவிக்கவில்லை….என்பதை அவன் அறியான்.

சொல்லாத நேசம்…எவ்வளவு வலியைத் தருமோ….அந்த அளவிற்கு கட்டாயத்தினால் வரும் உறவும் வெகு நேரம் நீடிக்காது என்பதை அவனுக்கு யார் உணர்ந்த்துவார்.

காதலை சொல்லாமல் காதலியை கைபிடித்து விட்டான்.அதே வேகத்தில்..அவள் மனதிலும் தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவது…எந்த வகையில் நியாயம்.

இப்படி பல கேள்விகள் அவன் மனசாட்சி அவனிடம் எடுத்து வைக்க…எதையும் வெளிக்காட்டாமல் வீராப்பாய் நின்றிருந்தான்.

மலரோ..அவனைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருந்தாள்.

“முன்னாடி காலேஜ்க்கு வரும்போது…தலை இப்படி சீவி இருப்பார்..இப்ப வேற மாதிரி இருக்கு…அப்ப எல்லாம் பேன்ட் சட்டை…இப்ப என்னடான்னா வேட்டி சட்டை…ஆனா மூஞ்சி மட்டும் எப்பவும் மாறி…கல்லே தான்…” என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பார்வையை வைத்தே ஓரளவு விஷயத்தை ஊகித்தவன்…மெல்ல தனக்குள் சிரித்துக் கொண்டான்.

“என்ன கிளம்பலையா..?” என்றான்.

“ச்சு….இல்ல..கிளம்பலை..போதுமா…இனி இதுதான் என் வீடாம்..இங்க தான் நான் இருக்கனுமாம்….அப்பா சொல்லியிருக்காங்க…அதனால் இந்த மிரட்டுற வேலையெல்லாம் வச்சுக்காதிங்க…!” என்றாள் வேக வேகமாய்.

“பரவாயில்லையே…பிள்ளைப் பூச்சிக்கு வாயெல்லாம் வருது…” என்றான் உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன்.

“நான் பிள்ளைப் பூச்சியாய் இருக்கப் போய் தானே எல்லாரும் என் வாழ்க்கையில் மாத்தி மாத்தி முடிவெடுத்து…என் வாழ்க்கையோட விளையாடுறிங்க..?” என்றவளுக்கு கண்கள் கலங்க..

“மலர் அப்படியில்லை…” என்று அவன் முடிக்கும் முன்..

“போதும் சார் ..! நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.வளர்த்தவங்க சொன்னவரையே கல்யாணம் பண்ணி..பத்தே நாள்ல..அந்த வாழ்க்கையையும் பறிகொடுத்து….வளர்த்தவங்களுக்காக வாழ்ந்து….நீங்க சொல்லாம கொள்ளாம கட்டிய தாலியை ஏத்துகிட்டு…உடனே உங்க பின்னாடி வரணும்ன்னு நீங்க நினைச்சதை பொய்யக்கிட்டு…அப்பாவும் அவங்களுக்காக..அவங்க கூட போயி…மறுபடியும் அவங்களுக்காகவே உங்க கிட்ட வந்திருக்கேனே..இதில் எங்கயாவது என்னுடைய விருப்பம் இருக்கா..இல்லை என்னுடைய சம்மதம் தான் இருக்கா…?” என்றாள் சாட்டையாய்.

“மலர்..!” என்று வெற்றி அதிர…

“ஒரு பெண்ணுக்கு விருப்பமே இல்லாம தாலி கட்டுன நீங்கல்லாம்…என்னைப் பத்தி பேசக் கூடாது.போகுறதுக்கு போக்கிடம் இல்லாமலோ..இல்லை வாழ்க்கைப் பிச்சைக் கேட்டோ…நான் உங்ககிட்ட வரலை…இது உங்களுக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன்..!”

சத்தமே இல்லாமல்…இப்படி ஒரு சண்டை நடக்க முடியுமா என்றால் முடியும்.மலர் செய்து கொண்டிருந்தாள்.அவள் முகம் கோபத்தைக் காட்டவில்லை…எதிர்ப்பைக் காட்டவில்லை.ஆனால் வார்த்தைகள் சரியாக கோர்த்து…சரியான இடத்தில் அடித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் எவ்வவளவு முயன்றும் கண்ணீரை மட்டும் அடக்க முடியவில்லை.

“இது கூட செல்வாவிற்காக தான்..!” என்றாள் அமைதியாய்.

அவளின் வார்த்தைகளைக் கேட்ட வெற்றி நொறுங்கிப் போனான்.தான் என்ற அகந்தை அவனுக்கு எப்போதும் இருந்ததில்லை.அதே சமயம்…யாரிடமும் கீழிறங்கியும் போக மாட்டான். அவனின் நேசம் உண்மை.காதல் உண்மை..காதலியும் உண்மை.

இடையில் விதியின் விளையாடல்களுக்கு யாரும் பொறுப்பாக முடியாது.என்ன முயன்றும்..”செல்வாவிற்காக தான்..” என்ற ஒற்றை வார்த்தையில் நொறுங்கிப் போனான்.

“அதே செல்வாவிற்காக தான்..” என்று தானும் திருப்பி சொன்னால் எப்படி உணர்வாள்.வேண்டாம்..அந்த வலியையும் அவளுக்குத் தர வேண்டாம் என்று தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டான்.

“நான் என் நிலையில் இருந்து யோசிச்சேனே தவிர…உன் நிலையில் இருந்து யோசிக்க தவறிட்டேன்…அதுக்காக…உன்கிட்ட மன்னிப்பு கேட்கணுமா…? சாரி…! நான் செஞ்சது தப்புதான்…என்னை மன்னிச்சுடு…!” என்றவன் அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டான்.

“என்னது வெற்றியா…?மன்னிப்பா…?அடேங்கப்பா…இந்த சிடுமூஞ்சி சார்க்கு மன்னிப்பெல்லாம் கூட கேட்க தெரியுது…” என்று எண்ணியவளின் மனம் காரணமே இல்லாமல் மகிழ்ச்சி கொண்டது.

“நீயும் நல்லா தான் பேசுற மலர்…” என்று தனக்குத் தானே அப்பிரிஷியேட் செய்து கொண்டாள்.

ஆனால் வெளியே சென்ற வெற்றிக்கோ மனது முழுவதும் பாரமாய் இருந்தது.வேதனை அவன் மனதைப் பிசைய…

“கொழுந்தனாரே….இப்ப எதுக்கு இப்படி சோகமான போஸ்…?” என்றபடி மீண்டும் தாரணி வர….

“அண்ணி..!” என்று பல்லைக் கடித்தான்.

“என்ன அண்ணி…! நீதான் என் வாழ்க்கை…நீயில்லாம நான் இல்லை…நான் உன்னை காதலிக்குறேன்னு….சொல்லி…சாஷ்ட்டாங்கமா மலர் காலில் விழுந்திருங்க…எல்லா பிரச்சனையும் ஒரு நிமிஷத்தில் முடுஞ்சுடும்…அதை விட்டுட்டு..எப்ப பார்த்தாலும் யோசுச்சுகிட்டே இருக்க வேண்டியது….?” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போனாள்.

அவள் சென்ற பின் அதை யோசித்தவனுக்கு…சிரிப்புதான் வந்தது…

”அதானே அப்படி பண்ணிட்டா…எந்த பிரச்சனையும் இல்லையே…” என்றே யோசிக்கத் தொடங்கி விட்டான்.

“என்ன நீ.. ஒரு பொண்ணு காலில் விழுவதா..?” என்று மனசாட்சி கேட்க…

“பொண்ணு இல்ல…என் பொண்டாட்டி…” என்று மனசாட்சியிடம் திருத்தினான் வெற்றி.

முகத்தில் சன்னமான புன்னகையுடன் இருந்தவனைப் பார்த்த தாரணிக்கும் மனதிற்குள் நம்பிக்கை பிறந்தது.சீக்கிரம் இருவரும் சரியாகி விடுவார்கள் என்று.

தாரணியின் எண்ணம் பலிக்குமா..?

 

 

 

 

 

 

 

 

Advertisement