Advertisement

பிறை 3:

கல்யாண வேலைகள் ஒரு வழியாக ஓய்ந்து முடிந்திருக்க...வீட்டில் இருந்த ஆரவாரம் கொஞ்சம் குறைந்திருந்தது.

அன்று திங்கட்கிழமை …..

விடிந்து எட்டு மணியாகியும் எழுந்து கொள்ளாமல் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் மீனாட்சியைப் பார்த்து அவள் அம்மா தேவகிக்கு ஆத்திரம் வரவில்லையென்றால்..அவர் எப்படி சிறந்த அம்மாவாக இருக்க முடியும்.

“ஏய் எருமை..எந்திருடி.…அங்க அம்மா கத்திட்டு இருக்காங்க...இங்க நீ என்னடான்னா இப்படித் தூங்கிட்டு இருக்க...?” என்று மகாவும் அவள் பங்குக்கு கத்த...

“ச்ச்ச..இந்த வீட்ல கொஞ்சம் நிம்மதியா தூங்க முடியுதா..எப்ப பாரு கத்திகிட்டு..இப்ப என்னடி வேணும் உனக்கு..?” என்று மகாவிடம் எகிறினாள் மீனாட்சி.

“அடியேய்..! மணி எட்டு...இன்னைக்கு உனக்கு செமஸ்ட்டர் எக்ஸாம் இருக்கு மறந்துட்டியா...?” என்று மகா நக்கல் அடிக்க...

“ஓ மை காட்.…” என்று வேகமாய் எழுந்தவள்...

“அடியேய் மகா உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது.. இப்படியா தூங்குவ...ஐயோ..இன்னும் பிட்டு பேப்பர் கூட ரெடி பண்ணலையே...?” என்று புலம்ப.

அவள் புலம்புவதைக் கேட்ட மகாவிற்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி.

“அடிப்பாவி..அப்ப எல்லா செமஸ்டர்லயும் நீ பிட் அடிச்சு தான் பாஸ் பண்ணுனியா..?” என்று அதிர்ச்சியாய் கேட்க...

“பிட் அடிக்க தெரியாதவங்க எல்லாம்...காலேஜ் போறதுக்கு லாயக்கே இல்லாதவங்கடி.…உனக்கு இதெல்லாம் இப்ப புரியாது...எப்படியும் அடுத்த வருஷம் காலேஜ் போய்த்தான ஆகணும்..அப்ப உனக்கே தன்னால் புரியும்..” என்று மீனாட்சி சொல்ல...

“ம்க்கும்...நான் ஒன்னும் உன்ன மாதிரி கிடையாது...எனக்கு இருக்குற அறிவுக்கு பிட் அடிச்சு பாஸ் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை..எப்படியும் நான் தான் ஸ்கூல் பர்ஸ்ட் வருவேன்...”என்றாள் வீராப்பாய்.

தங்கையின் படிப்புத் திறன்தான் மீனாட்சிக்கும் தெரியுமே..!தன்னை விட அவள் நன்றாக படிப்பது அவளுக்கு தெரிந்திருந்தாலும்.. அவளை வம்பிழுப்பதில் ஒரு அலாதி சுகம் காண்பாள் மீனாட்சி.

“இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்..?” என்று கத்தியபடி தேவகி உள்ளே வர.

“மீ எஸ்கேப்..” என்றபடி பாத்ரூமிற்குள் நுழைந்தாள் மீனாட்சி.

“தேவகி டிபன் ரெடியா..?” என்று கோபாலன் குரல் கொடுக்க...

“இதோ அஞ்சு நிமிஷங்க..” என்றவர்...

“இந்த வீட்ல எல்லாமே பார்த்து பார்த்து நான் தான் பண்ணனும்...ம் ரெண்டு பொட்ட புள்ளைங்கள பெத்து வச்சிருக்கேன்..ஆனா ஒன்னு கூட உப்புக்கும் உதவுறது இல்லை.புளிக்கும் உதவுறது இல்லை.போறவன் வீட்ல இப்படி இருந்தா..எல்லாரும் என்னைத்தான பேசுவாங்க...இவ பிள்ளை வளர்த்து வச்சிருக்க லட்சணத்தைப் பாருன்னு...”என்று புலம்பிக் கொண்டிருக்க...

“தேவகி...” என்று மீண்டும் குரல் கொடுத்தார் கோபாலன்.

“இருங்க வரேன்..எனக்கென்ன பத்து கையா இருக்கு ஒத்தக் கை தானே இருக்கு...” என்று அவர் வாய் புலம்பிக் கொண்டிருந்தாலும்... மீனாட்சிக்கும்,மகாவிற்கும் மதிய உணவைக் கட்டி முடித்திருந்தார்.

வேகமாய் கணவருக்கும் டிபனை எடுத்துக் கொண்டு போக.

“அம்மா எனக்கு பர்ஸ்ட் டிபன் வைங்க..எக்ஸாம்க்கு லேட் ஆகிடுச்சு..” என்றபடி டைனிங் டேபிளில் அமர்ந்தாள் மீனாட்சி.

அவளை முறைத்தபடி..ஒன்றும் சொல்லாமல் டிபனை வைத்தார் தேவகி.

போகும் போது ஒன்றும் சொல்லக் கூடாது என்று அவர் வாயை அடக்குவது கோபாலனுக்கு நன்றாகத் தெரிந்தது.மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

அவளைத் தொடர்ந்து மகாவும் வர...அவளும் சாப்பிட்டு விட்டு …அக்காவும் தங்கையும் ஒன்றாய் வெளியேறினர்.மகாவின் ஸ்கூல் பஸ் முதலில் வர...”பாய் க்கா...” என்றபடி அவள் விடைபெற்று செல்ல...அடுத்ததாக மீனாட்சியின் காலேஜ் பஸ் வர..அவளும் ஏறிக் கொண்டாள்.

“ஸ்ஸ்ஸ்  அப்பாடி...இதுக ரெண்டையும் அனுப்புறதுக்குள்ள.. நாக்குத் தள்ளிடுது...” என்ற தேவகி சற்று ஓய்வாக அமர...

“நம்ம மீனாட்சிக்கும் கல்யாண வயசு வந்துட்டது இல்லையா தேவகி...” என்றார் கோபாலன்.

“ஆமாங்க...தேவி கல்யாணத்துல வச்சே ரெண்டு மூணு பேர் பொண்ணுக் கேட்டாங்க..!” என்றார் அவரும் கவலையுடன்.

“பார்ப்போம் தேவகி...இந்த வருஷம் படிப்பை முடிக்கட்டும்...நல்ல இடமா வந்தா பார்த்து முடுச்சுடனும்..” என்றார் அவரும். பெண்ணைப் பெற்ற கவலை அவருக்கு.

செந்திலின் வீட்டில்.

ஆடிட்டர் கொடுத்த பைலை படித்துக் கொண்டிருந்தார் ராஜ்மோகன்.

அவரை ஒரு பார்வை பார்ப்பதும்...மாடியைப் பார்ப்பதுமாக அவஸ்தையுடன் நின்றிருந்தார் செல்லம்மா.

செல்லம்மாவை நிமிர்ந்து பார்த்தவர்..மீண்டும் ஒன்றும் சொல்லாமல் பைலைப் பார்க்க ஆரம்பித்தார்.

அங்கே செந்திலோ.…ஆலிவ் கிரீன் நிற சட்டையும்...அதற்கு மேட்சாக பேண்ட்டும் அணிந்து ….தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்தவன்...அவனுக்கே திருப்தியாய் இருக்க...கிளம்பி கீழே வந்தான்.

“ம்மா...எனக்கு டிபன் வேண்டாம்..ஒரு முககியமான வேலையிருக்கு.. நான் வெளியில சாப்பிட்டுகிறேன்..” என்றபடி நகரப் போக...

“ஒரு நிமிஷம்..” என்றார் ராஜ் மோகன்.

“அவன் அப்படியே நிற்க...”

“நான் சொன்னதுக்கு இன்னமும் பதில் சொல்லலை...இப்படியே இருந்தா நான் என்ன பண்றது..?” என்றார் ராஜ் மோகன்.

“ஒன்னும் பண்ண வேண்டாம் ப்பா.…இப்ப என்ன பண்ணிட்டு இருக்கிங்களோ..அதையே பண்ணுங்க..” என்றான் அவனும் விடாமல்.

“செந்தில்..” என்று செல்லம்மா ஏதோ சொல்ல வர..

“பிளீஸ்மா விருப்பம் இல்லைன்னு சொன்னா விட்டுடனும்..நான் என்ன சின்ன குழந்தையா..என்னோட வாழ்க்கையை எப்படி வாழணும்ன்னு யாரும் சொல்ல தேவையில்லை.…” என்றான்.

“அப்ப..நாங்க உன் கெட்டதுக்கா சொல்லுவோம்..!” என்றார்.

“நான் அப்படி சொல்ல வரலை.அதே சமயம்...நானும் கெட்ட வழியில் போகலை..நீங்க நல்லது சொல்றதுக்கு..” என்றான் விடாப்பிடியாய்.

“அடக்கடவுளே…காலைலயே ஆரம்பிச்சுட்டிங்களா..?” என்றபடி வந்தாள் பிரியா...செந்திலின் தங்கை.

“ஹேய்..நீ இன்னும் ஸ்கூல்க்கு கிளம்பலையா..?” என்றான் செந்தில்.அவன் பிறந்து..ஒன்பது வருடங்கள் கழித்து பிறந்த அவன் செல்ல தங்கை.

“இல்லன்னா...இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆக்கிடுச்சு..என்னை ஸ்கூல்ல விட்ருங்க அண்ணா பிளீஸ்..” என்று கெஞ்ச..

“எனக்கு முக்கியமான வேலை இருக்கு பிரி..” என்று அவன் இழுக்க..

“அண்ணா..பிளீஸ்...” என்று அவள் மீண்டும் கெஞ்ச..

“சரி சீக்கிரம் வா..” என்றபடி முன்னால் சென்றான்.

“இருக்கிற பிரச்னையை எப்படி முடிக்கிறதுன்னே  தெரியலை..இதுல இவங்க வேற…இதை செய்..அதை செய்னு...” என்று மனதில் நினைத்தவன்...

“பிரியா சீக்கிரம்...” என்றான்.

“இதோ வந்துட்டேன்...” என்றவள் வேகமாய் வந்து அண்ணனின் புல்லட்டில் ஏறி அமர்ந்தாள்.சற்று தூரம் வரை அமைதியாக வந்தவன்...

“இந்த வருஷம் மார்க் எப்படிடா வரும் பிரி..” என்றான்.

“ம்ம் வரும்ன்னா...” என்றாள் பிரியா.

“பாஸ் பண்ணா போதும்..ரொம்ப ஓவரா எல்லாம் படிக்க வேண்டாம்.நூத்துக்கு நூறு எடுத்தவன் எல்லாம்...இங்க என்ன பண்ணிட்டு இருக்கான்..பாதிப் பேர் வெட்டியா தான் இருக்காங்க...சோ..மார்க்குக்காக படிக்காம…உன் வாழ்க்கைக்காக படி..” என்றான்.

“இந்த உலகத்துலேயே..இப்படி அட்வைஸ் பண்ண அண்ணன்..நீங்க ஒரு ஆளாத்தான் இருப்பிங்க..!” என்றவள்.

“அண்ணா.…நான் இறங்கிக்கிறேன்...” என்று சொல்லி அவள் பள்ளி முன்பு இறங்க.

“ஏய் பிரியா எருமை சீக்கிரம் வாடி..” என்று உள்ளே இருந்து கத்தினாள் மகா.

அவளின் கத்தலில் நிமிர்ந்து பார்த்தவன்.…”இந்த பொண்ணை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..” என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே..அவள் அவர்கள் அருகில் வர...

“ஹாய் அண்ணா..” என்றாள்.

அவளை அதிசயமாய் பார்த்தவன்...”என்னைத் தெரியுமாமா..?” என்றான்.

“உங்களைத் தெரியாம இருக்குமாண்ணா..அதெல்லாம் இந்த எருமை நிறைய சொல்லியிருக்கா..” என்றாள்.

“உன்னை இதுக்கு முன்ன எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேமா...?” என்றான்.

“ஆமாம்ண்ணா….சபரி மாமா கல்யாணத்துல பார்த்திருப்பிங்க.… தேவி அக்கா..எங்க பெரியம்மா பொண்ணு தான்...நானும் உங்களைப் பார்த்தேன்..ஆனா பேச முடியலைன்னா...” என்றாள்.

“ஓஹோ...சரிமா..நீங்க கிளம்புங்க..” என்றபடி அவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய...

அப்பொழுது தான் அவனுக்கு நியாபகம் வந்தது...ஒருவேளை மீனாட்சியின் தங்கையாய் இருப்பாளோ...? என்று எண்ணியவன்...

“மகா.…உனக்கு  கூட பிறந்த அக்கா இருக்காங்களா...?” என்றான் போனவர்களை நிறுத்தி.

“ஆமாம்ண்ணா...அவ பேரு மீனாட்சி...ஏண்ணா ஏதும் பிரச்சனையா..?” என்றாள்.

“இல்லமா...முக ஜாடை ஒண்ணா இருக்கேன்னு கேட்டேன்...” என்றான்.

“சரிண்ணா..” என்றபடி அவர்கள் இருவரும் கிளம்ப...

“அப்படியே சரி கட்டி வைத்திருந்த அவள் நினைவு..மீண்டும் மனதிற்குள் பேயாட்டம் ஆடத் தொடங்கியது.என்னடா இது...அவளை நினைச்ச உடனே..என்னைய என்னாலேயே கண்ட்ரோல் பண்ண முடியலையே.…” என்று எண்ணியவன்...அவள் நினைவு தந்த சுகத்துடன் வண்டியைக் கிளப்பினான்.

காதல் என்ற வார்த்தையில் அவனுக்கு எப்போதும் சுத்தமாக நம்பிக்கை இருந்தது கிடையாது.காதல் வந்தாலே சுயநலமும் சேர்ந்து வந்து விடும் என்ற தார்மீகக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவன் தான் அவனும்…மீனாட்சியை காண்பதற்கு முன்பு வரை.

ஆனால் இப்போது…காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே அவனுக்குள் இனிக்கிறது.மனம் லேசாகிறது.கவலைகளை மறக்க முடிகிறது.அதை விட..மனதிற்குள் எப்பொழுதும் மின்னி மறையும் அவள் முகம்…அந்த முகத்தில் தெரியும் குறும்புத் தனம்…இப்படி எல்லாமே அவனைப் போட்டு இம்சைப் படுத்த….

மீனாட்சியை அதற்கு பிறகு அவன் பார்க்கவேயில்லை.இருந்தாலும் அவன் மனதை விட்டு நகர மறுத்தாள்.ஒருவேளை..இது தான் காதலோ…? என்று எண்ணியபடி சென்றவன்…அங்கே ரோட்டில் கூட்டத்தைப் பார்த்து வண்டியை நிறுத்தினான்.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு பார்க்க…அங்கே..

கல்லூரி மாணவிகள் அனைவரும் கீழே நிற்க….அந்த பேருந்தை ஒட்டியவனின் சட்டைக் காலரைக் கொத்தாகப் பற்றியிருந்தாள் மீனாட்சி.அவளுடன் சேர்ந்து…அவள் தோழிகள் சிலரும் நிற்க…

அவளை அந்த கோலத்தில் பார்த்தவன் அரண்டுவிட்டான் என்பதே உண்மை.

அதற்குள் போலிஸ் அங்கே வர…அவர்கள் வசம் அவனை ஒப்படைத்தனர்.

“சார்..கொஞ்ச நேரத்துல எங்க எல்லார் உயிரும் போயிருக்கும்..குடிச்சுட்டு வண்டியை ஓட்டக் கூடாதுன்னு தெரிஞ்சும்….இவர் இன்னைக்கு புல்லா குடுச்சுட்டு வண்டியை எடுத்திருக்கார்.நல்ல வேலை….இல்லைன்னா நாங்க எல்லாரும் பரலோகம் போயிருப்போம்.. என்றாள் மீனாட்சி.

“ஏய்.. என்று அவன் குழறலாய் ஏதோ சொல்ல வர…அவனை ஓங்கி அறைந்தாள் மீனாட்சி.

“அடிப் பிச்சுடுவேன்….ஜாக்கிரதை… என்றவள்….இவனை முதல்ல கூட்டிட்டு போங்க சார்… என்றாள்.

அங்கு நடந்து கொண்டிருந்ததை அதிர்ச்சியுடன் பாத்துக் கொண்டிருந்தான் செந்தில்.

அதிலும் அவள் அறையும் போது…சப்பா..ஏன்னா அறை…? என்றே எண்ணத் தோன்றியது அவனுக்கு.

பிறகுதான் கவனித்தான்…அந்த பேருந்து முன்னால் மரத்தில் மோதி நின்றிருந்ததை.

ஐந்து மாணவிகள்..லேசான காயங்களுடன் நின்றிருக்க….ஒரு ஷேர் ஆட்டோவைப் பிடித்தவள்…அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவர்களை அனுப்ப….கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கலையத் தொடங்கியது.

“இப்ப இருக்குற பிள்ளைங்களுக்கு தைரியம் அதிகம் தான்.. என்று அங்கிருந்த சில பெருசுகள் பேசிக் கொண்டு போக…

“பரவாயில்லை..பொண்ணுங்கன்னா இப்படித்தான் இருக்கணும்… என்று பலர் பேசிக் கொண்டு போக…

அதற்குள் அவர்களுக்கான மாற்றுப் பேருந்து வர…அனைவரும் அதில் ஏறி சென்றனர்.

ஆனால் செந்தில் அசையாமல் நின்றான்.

அவன் பார்க்கும் ஒவ்வொரு இடங்களிலும்..ஒவ்வொரு பரிணாமத்தில் ஜொலித்தாள் மீனாட்சி.

அந்த நொடியில் காதலை உறுதி செய்வதற்கு அவன் ஒன்னும் விடலைப் பையன் இல்லை.

இந்த விஷயத்தைப் பார்த்தா… உடனே காதல் வந்துடனுமா…? செந்தில் நீ எந்த காலத்தில் இருக்க..இப்ப இருக்குற முக்கால்வாசி பொண்ணுங்களுக்கு பயம்ன்னா என்னன்னே தெரியாது..இதில் எல்லாம் நீ சறுக்கி விழுந்திடக் கூடாது…. என்று மனம் அவனுக்கு இலவச அறிவுரை வழங்க…

அப்பொழுது தான் அவன் செல்ல வேண்டிய வேலையின் முக்கியத்துவம் அவனுக்கு நியாபம் வர..ஷிட்.. என்று தனக்குத் தானே உதறியவன்… வேகமாய் வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனான்.

சாலையில் நடந்த விஷயம்…தீயாய் பரவ…அன்றைய செய்தியில் மீனாட்சி கதாநாயகி ஆகிப் போனாள்.

அனைத்து சேனல்களும் அவளைஎக் காட்ட…

அதைப் பார்த்த தேவகி…வீட்டில் விலக்கமாருடன் அமர்ந்திருந்தார். வரட்டும் இன்னைக்கு அவ…என்ன நினச்சுகிட்டு இருக்கா…? என்று மனதில் எண்ணியவர்…உக்கிர காளியாய் அமர்ந்திருக்க…

இதையறியாத மீனாட்சியோ..அங்கு வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement