Advertisement

பிறை  1:

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி…”

சென்னையின் பரபரப்பான அந்த காலை வேளையில்….செழுமைக்கு கொஞ்சமும் குறைவில்லாத அந்த திருமன மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்டபடி…அனைவரும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர்.

பொதுவாக திருமண வீடு என்றாலே..இயல்பாகவே ஒரு பதட்டமும்..அதோடு சேர்ந்த ஒரு சந்தோஷமும் தொற்றிக் கொள்ளும்.

பிரச்சனையில் இருந்த சொந்த பந்தங்கள் எல்லாம்…திருமணத்திற்கு வந்து விட வேண்டும் என்ற வேண்டுதல்…விசேஷம் முடியும் வரை எந்த வித தடங்களும் வந்து விட கூடாது என்ற முன்னெச்சரிக்கை…. எல்லாம் சரியாக இருந்தாலும் …அனைத்தும் சரியாக இருக்குமா..? என்ற யோசனை…

இதற்கு நடுவில்..அலங்காரம்..சேலை…சாப்பாடு…சொந்த பந்தங்கள் கூடி கொண்டாட்டம்…இப்படி பலதரப்பட்ட உணர்வுகளை ஒரே இடத்தில் காண முடியும் என்றால் அது கல்யாண வீடு தான்.

இப்படித்தான் இயங்கிக் கொண்டிருந்தது அந்த கல்யாண மண்டபம்.வாழ்வின் பல ஆயிரம் கனவுகளை தன்னுளே சுமந்தவளாய் மணப்பெண்..அவளைப் பார்க்க சிறு சந்தர்ப்பம் அமைந்து விடாதா என்ற ஏக்ககத்தில் மாப்பிள்ளை…இவர்கள் வம்பிழுத்தே ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்த நட்பு வட்டம் ஒரு பக்கம்.

மாப்பிள்ளையின் அறையில் ஏகத்தும் சத்தம் வர….அவர்களின் அறைக்கதவு தட்டப்பட்டது.

கதவைத் திறந்த நண்பன் ஒருவன் விழித்து நிற்க….என்ன நடக்குது இங்க..? எதுக்கு இவ்வளவு சத்தம்…நாங்க பக்கத்துல இருக்குறதா..இல்லை வேண்டாமா..? என்று சாடிக் கொண்டிருந்தாள் அவள்.

அவள் திட்டியது கூட தேனாய் இனித்தது அங்கிருந்த அனைவருக்கும்.. பின்னே..இப்படி தேவதை போல் ஒருத்தி வந்து திட்டுகிறாள் என்றாள்…அவர்களுக்கு கசக்கவா செய்யும்.

பிறை நெற்றியில் வீற்றிருந்த பொட்டு…அவளின் முகத்திற்கு அழகு சேர்க்க….காதில் தொங்கிய ஜிமிக்கள்…அவள் முக அசைவுகளுக்கு ஏற்ப நடனம் ஆட…ஒப்பனை முடிந்திருந்தாலும்..லேசாய் சிலுப்பிய முடிகள்…உதட்டு காற்றால்…அதை ஒதுக்கிய அவள் செய்கை….இடுப்பில் கை வைத்தபடி அனைவரையும் முறைத்து நின்ற அவள் தோற்றம்…ப்பா…என்ன பொண்ணுடா சாமி.. என்றே சொல்ல வைத்தது…அங்கிருந்த இளம் காளைகளை.

“ஹலோ….!நான் சொல்றது காதில் விழுதா…இல்லையா..? என்று அவள் கையை அசைக்க…..

“சரிங்க…சரிங்க…இனிமே எதுக்குமே வாயைத் திறக்கவே மாட்டோங்க…நீங்க சொன்னா சரிதாங்க….நீங்க இங்க இருந்து குதிக்க சொன்னா கூட நாங்க குதிக்கிறோம்ங்க… என்றான் அவன் அநியாத்துக்கு பவ்யமாய்.

“நீயென்ன லூசா..? என்பதை போல் அவள் ஒரு பார்வை பார்க்க…

அவர்களின் செய்கையில் கடுப்படைந்த சபரி….நான் பார்த்துக்குறேன் நீ போம்மா… என்றான் தன்மையாய்.

“நீங்க இருக்குற லட்சணம் தான் தெரியுதே… என்று சிலுப்பிக் கொண்டு போனாள் பாவையவள்.

“யாரு மச்சான் இது….? என்னா பிகரு…என்னா பேச்சு..? என்று அவன் சிலாகிக்க…

“என்னா அடி… அப்படின்னும் சேர்த்து சொல்லிடு மச்சான்..அவ காதுக்கு மட்டும் இது கேட்டது..நீ தொலஞ்சடி…. என்று நண்பனை வம்பிழுத்தான் சபரி.

ஆம்..! அவன் தான் மாப்பிள்ளை.அவன் கட்டிக் கொள்ள போகும் தேவியின் சித்தி பெண் தான் அவள்…அழகுப் பதுமை.சபரியே பெண் பார்க்க சென்ற போது..அவள் தான் பெண் என நினைத்து…ஜொள் விட்டு…பின் தேவி தான் பெண் என தெரிந்து அசடு வழிந்தது எல்லாம் நியாபகம் வர…சிரித்துக் கொண்டான் சபரி.

அவள் தான் மீனாட்சி….மதுரையை ஆளும் மீனாட்சியை போல்…இவள் ஆளப் போகும் அந்த கள்வனைத் தேடிக் கொண்டிருந்தாள்.ஆம் அவளுக்கும் வீட்டில் வரன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மீனாட்சியின் கோபம் அவள் வீடு அறிந்தது.எதையும் நேருக்கு நேர் பேசும் அவள் குணம்..பல சமயங்களில்….பல சங்கடங்களைத் தந்திருக்கிறது அவளது பெற்றோருக்கு.

ஆனால் எதைப் பற்ற்யும் அவள் கவலைப்பட்டதில்லை.கெமிஸ்ட்ரியில் இளங்கலை இறுதி வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.

தந்தை கோபாலன்…ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி….தாய் தேவகி இல்லத்தரசி.

மகாலட்சுமி…அவளுடன் சண்டையிடவே பிறந்த ஒற்றை தங்கை….பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

சராசரியான நடுத்தர குடும்பம்…பணம் கொழிக்கும் குடும்பமும் இல்லை…அதற்காக பஞ்சப்பட்ட குடும்பமும் இல்லை.பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற தேவையான சேமிப்பும்,பென்சன் பணமும் கிடைத்துக் கொண்டிருந்தது கோபாலனுக்கு.

தேவகியின் அக்கா மகள் தான் தேவி.அவள் திருமணத்திற்கு தான் அனைவரும் அங்கு வந்திருந்தனர்.

“ஏண்டி இப்ப அங்க போய் என்ன சொல்லிட்டு வந்த..? என்றாள் தேவி..மீனாட்சியைப் பார்த்து.

“ம்ம்..ஒன்னும் ஒன்னும் ரெண்டு…உங்களைப் பார்க்காமல் தவிக்குது தேவி பெண்டு.. சொல்லிட்டு வந்தேன் என்றாள் நக்கல் தூக்கலாய்.

“ஏண்டி இப்படி பண்ற…நானும் பார்த்துகிட்டே இருக்கேன்..சும்மா சும்மா அவங்க கூட வம்புக்கு போய்கிட்டே இருக்க நீ.. என்று தேவி குறைபட..

“அப்படித்தான் போவேன்…என்ன தைரியம் இருந்தா..என்னைப் பார்த்து ஜொள்ளு விடுவான் உன்ன கட்டிக்க போறவன்… என்றாள் கடுப்பாய்.

“அடியேய்..! ஏதோ தெரியாம..நீதான் பொண்ணுன்னு நினைச்சு அப்படி பண்ணிட்டார்..அதுக்காக அதையே சொல்லி அவரை ஓட்டணுமா…ப்ளீஸ்டி..இன்னும் கொஞ்ச நேரத்துல எங்களுக்கு கல்யாணம்…அதனால அவரை அத்தான்னு சொல்லுடி…அவன்,இவன்னு சொன்னா யாராவது தப்பா நினைப்பாங்க.. என்று தேவி அழாத குறையாக கெஞ்ச…

“சரி..சரி..உனக்காக பாவம் பார்த்து விடுறேன்…ஆனா ஒன்னு தேவி…உன் புருஷன் தான் ஜொள்ளுன்னா…அங்க இருக்க….அவன் பிரண்டுக எல்லாம் அதை விட ஜொள்ளு…அப்படியே அந்த ரூமே மிதக்குதுன்னா பாரேன்.. என்றாள் வாடிவேல் பாணியில்.

“அடியேய்..உன்னை.. என்று தேவி பல்லைக் கடிக்க…

“தேவிக்கா..விடு…நாளைக்கு இவளுக்கு கல்யாணம் ஒன்னு நடக்கும்ல..அப்போ இவளைக் கட்ட போறவர்..என்னைப் பார்த்து ஜொள்ளு விட போறார் பாரு.. என்று மகா சிரிக்காமல் சொல்ல…

“அப்படி மட்டும் ஏதாவது நடந்தது…அவனை கொன்னே போடுவேன்…எம் புஷன்தான்..எனக்கு மட்டும் தான்… என்று கிளுக்கி சிணுங்க..

அவளின் முக பாவனையில் தெரிந்த அழகில் அனைவரும் மயங்கித்தான் போயினர்.

“இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க…அங்க வரவேற்புக்கு யாரும் நிக்கலையா..போங்க முத அங்க..! என்று அங்கு வந்த தேவகி விரட்ட…

“போங்கம்மா அங்கெல்லாம் போய் நிற்க முடியாது…எல்லாருக்கும் கும்பிடு போட்டு போட்டு கையே வலிக்கும்.. என்று மீனாட்சி நழுவ பார்க்க…

“உன்னைய வச்சுகிட்டு…போ…போய்..பெரியம்மாகிட்ட இன்னொரு ரூம் சாவி வாங்கிட்டு வா…மாலை எல்லாம் அதுக்குள்ள தான் இருக்கு.. என்று ஏவ…

“இதோ செல்கிறேன் தாயே.. என்று தனது லெஹங்கா வகையான ஆடையை தூக்கிக் கொண்டு கொண்டு ஓட…அவளின் வெண் பாதங்களில்..இருந்த வெள்ளிக் கொலுசு சத்தம் போட..அவ்விடத்தை விட்டு சென்றாள் மீனாட்சி.

“படிப்ப முடுச்ச உடனே இவளுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணிடனும்….காலம் கிடக்குற கடைக்கு…வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு… என்று ஒரு தாயாய் யோசனைக்கு தாவினார் தேவகி.

“பெரியம்மா… என்று கூவிக் கொண்டே சென்றவள்….எதன் மீதோ பலமாய் இடித்து நின்றாள்.

“கல்யாண மண்டபத்தை…கல் தூண் வச்சு கட்டியிருப்பாங்களோ… ஏன்னா இடி… என்று நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டே அவள் நிமிர….

“மீனாச்சி…சீக்கிரம்… என்ற தேவகியின் குரல் மீண்டும் கேட்க..இடித்த தூணைப் பற்றி கவலைப் படாமல்….காரியமே கண்ணாய் சென்றாள்.

ஆனால் அவள் இடித்தது..முதற்கொண்டு…கல்தூண் என்று புலம்பியது வரை கேட்டவனுக்கு…முகம் முழுவதும் சிரிப்பாய் இருக்க…அவளையே தொடர்ந்தன அவன் விழிகள்.

“சோ பிரிட்டி கேர்ள்…என்று தனக்குள் முனுமுனுத்தவனாய் நண்பன் சபரியைத் தேடி சென்றான்.

ஏனோ அவள் மோதிய இடம் மட்டும்….சுகமாய் அவனைத் தாக்க…சிறிது நேரம் ஆகியது அவனை அவனே கட்டுப்படுத்த.

“வாடா மச்சான்…எங்க நீ வர மாட்டியோன்னு பயந்துகிட்டே இருந்தேன்… என்றான் சபரி.

“இப்போதைக்கு பொண்ணைப் பார்த்து தான் நீ பயப்படனும் மாப்பிள்ளை..என்னைப் பார்த்து இல்லை.. என்று அவன் நமட்டு சிரிப்பு சிரிக்க…

“டேய் வந்ததும் வராததுமா என்னை வாரனுமா..? என்று சபரி சொல்ல…

“இன்னைக்கு நீதாண்டா பலியாடு…அதனால் தலையை மட்டும் தான் நீ ஆட்டனும்.. என்றான் அவன்.

“அப்பா,அம்மா வரலையாடா..? என்றான் சபரி.

“இல்லடா…இன்னொரு முக்கியமான பங்க்சன் இருக்கு…அதுக்கு போயிருக்காங்க….சீக்கிரம் முடுஞ்சுட்டா..இங்க வந்துடுறேன்னு சொல்லி இருக்காங்க…! என்றான் அவன்.

அவன் தான் செந்தில்.பார்ப்போரை வசீகரிக்கும் முகம்…வெள்ளை நிறமும் இல்லாமல்…மாநிறத்திற்கு கொஞ்சம் கூடுதல்…ஆண்கள் இருக்க வேண்டிய உயரம்…பெண்கள் சைட் அடிக்க தேவையான தகுதிகள் இப்படி அனைத்து அவனிடம் கொட்டிக் கிடந்தது.

கோபம் குறைவாக வந்தாலும்…அழுத்தம் அதிகம்..வேண்டும் என்றால் வேண்டும்..வேண்டாம் என்றால் ஒரேயடியாக வேண்டாம்.பாசத்திற்கு உயிரையும் கொடுப்பான்.வேஷம் என்று வந்தால் உயிரை எடுக்கும் அளவிற்கு இல்லை என்றாலும்..அவர்களை அறவே வெறுத்து விடுவான்.

தனக்கான எல்லையை அவன் வகுத்ததில்லை.ஆனால் அவனிடம் பழகுபவர்கள் அவன் குணம் அறிந்து அவர்கள் எல்லையை வகுத்துக் கொள்வார்கள்.

எட்டி நின்று எச்சரிப்பவனும் அல்ல…ஒட்டி நின்று உறபாடுபவனும் அல்ல.செயலுக்கு செயல்..நன்மைக்கு நன்மை..தீமைக்கு தீமை….இது தான் அவன்.அவன் முகத்தை வைத்து சுத்தமாய் அவனை எடை போட முடியாது.

 

ராஜ் மோகன் –செல்லம்மா தம்பதியின் ஒற்றைப் புதல்வன்…பரம்பரைப் பணக்காரர்கள் என்று சொன்னால் அது அவன் தந்தையின் உழைப்பை கொச்சைப் படுத்துவதைப் போல்.ஆம்…உழைப்பின் மூலம் மட்டுமே முன்னுக்கு வந்தவர்….உழைப்பால் தனது அந்தஸ்தையும்…வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திக் கொண்டவர்.

மனைவி செல்லம்மா…அவருடைய காதல் மனைவி என்று சொல்ல முடியாது..கடமை மனைவி என்றும் சொல்ல முடியாது.பெற்றோரின் சொல் கேட்டு மனம் முடித்த ஒரு சராசரி தமிழ் பெண்.எதிர்பார்ப்புகள் இல்லாமல் அவரை அவருக்காகவே ஏற்றுக் கொண்டவர்.

காதலோ..கடமையோ…அவரில்லாமல் ராஜ்மோகன் இல்லை.ஒரே எண்ணப் போக்குகள் கிடையாது…ஆனாலும் தங்களது திருமண வாழ்வை..இருபத்தி ஏழு வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும்… வெற்றிகரமான தம்பதி.

திருமணத்திற்கு பிறகான புரிதல் சரியாய் அமைந்து விட்டால் எல்லாருடைய வாழ்வும் சொர்க்கம் தான் போல.விதி விளக்கிற்கென ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது.

சிறிய அளவில் பாத்திரங்களை வியாபாரம் செய்து…இன்று அதிக கிளைகளுடன்….நாகரிக வளர்ச்சியுடனும் முன்னேறி நிற்கிறது அவர்களின் தொழில் சாம்ராஜ்யம்.

“என்னாச்சு செந்தில்…ஒரே யோசனையில் இருக்க போல..? என்று சபரி கேட்க…

“ஒன்னுமில்லைடா…ஏதோ யோசனை..! என்றபடி அவனின் தோளில் கை போட்டவன்…

“அப்பறம் ஹனி மூனுக்கு எங்க போறதா பிளான்..! என்றான்.

“அதை பத்தி எல்லாம் இன்னும் யோசிக்கவே இல்ல மச்சி..இப்போதைக்கு கல்யாணம் முடியட்டும் அப்பறம் பார்ப்போம்..! என்றான் சபரி.

“ஏண்டா உனக்கு பொண்ணை பிடிச்சுருக்கு தானே..! என்றான் சந்தேகமாய்.

“எனக்கு தேவியை ரொம்ப பிடிச்சிருக்கு செந்தில்….இதில் சந்தேகம் வேறயா..? என்று குறைபட..

“ஹேய்..சும்மா கேட்டேன் டா… என்று மழுப்பியவன்…தன் மேல் மோதியவளை எப்படி விசாரிப்பது…? என்ற யோசனைக்கு தாவ…

யோசனையுடனே..இயல்பாய்..தன் பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்தவன்..கண்ணாடி முன் நின்று…லேசாய் கலைந்திருந்த தனது முடியினை வாற…

“இந்தாங்க…! மேடைக்கு வரும் போது இந்த மாலையை போட்டுட்டு வாங்க…உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க..அப்படியே உங்க அப்பாவையும் வர சொன்னாங்க..! என்றபடி அறையின் வாசலில் நின்று சொல்லிக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தில்… தன்னைத் தொலைத்தான் செந்தில்….அவள் முகம் பார்த்தவனின் கைகள் அப்படியே அந்தரத்தில் நிற்க…

“அப்பா இங்க இல்லை…வெளிய இருக்காறான்னு பார்க்க சொல்லுமா..! என்றான் சபரி.

அவளோ அவனை முறைத்து விட்டு செல்ல…

“மச்சான்…இன்னும் உனக்கு எவ்வளவு காத்திருக்கோ… என்று அங்கிருந்த மற்ற நண்பர்கள் அவனை வம்பிழுக்க….சன்னமாய் சிரித்துக் கொண்டான்.

செந்தில் எதுவுமே கண்டு கொள்ளாதவனைப் போல்..இயல்பாய் திரும்பி…நேரம் ஆச்சுல…மாலையைப் போட்டுட்டு கிளம்புடா.. என்று சொல்ல…

மேடையை நோக்கி சென்றான் மணமகன்.

“நீயும் வா செந்தில்..! என்று அவனை அழைக்க…

“வேண்டாம்டா…அங்க நிறைய லேடிஸ் இருப்பாங்க…நான் முன்னாடி உட்கார்திருக்கேன்.. என்று மறுத்தவனாய் முதல் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு அவளைக் கவனிக்க தோதுவான ஒரு இடம் தேவை.அதைப் பார்த்து அப்படியே அமர்ந்துவிட்டான்.

மீனாட்சியோ பம்பரமாய் சுற்றி வேலை செய்து கொண்டிருந்தாள்.அவள் தனக்காய் பார்த்து பார்த்து செய்வதைப் பார்த்த தேவியின் கண் கூட கலங்கிவிட்டது.

விளையாட்டு பெண் என்று நினைத்தாலும் பொறுப்பாக அனைத்தையும் செய்கிறாளே..! என்று அங்கிருந்த சொந்த பந்தங்கள்..அவளைப் புகழ்ந்து தள்ள..அதையெல்லாம் காதில் வாங்கியவனாய்..அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் செந்தில்.

ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த சட்டென்று முன்னே பார்த்தாள் மீனாட்சி…ஆனால் அவனோ…மொபைலைப் பார்ப்பது போல் குனிந்து கொள்ள…சுற்றி பார்வையை விட்டவள்..யாரும் அகப்படாததால்….அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“கெட்டி மேளம்..கெட்டி மேளம்.. என்ற சொல்லில் நிமிர்ந்தவன்…கையில் இருந்த அட்சதையை அவளை நோக்கி வீச…சரியாய் அது அவளை சென்றடைந்தது.

திருமணத்திற்கு பிறகான சடங்குகள் நடந்து கொண்டிருக்க…அவசர வேலையிருப்பதாய் சொல்லி..தன் பரிசுடன் மேலே சென்றான் செந்தில்.

“இந்த தட்டை எல்லாம் எடுத்துண்டு போங்கோ..! என்று ஐயர் சொல்ல…தட்ட எடுக்க வந்தவளும்…சபரியின் காதில் ஏதோ சொல்லிவிட்டு நிமிர்ந்த செந்திலின் மேல் பஞ்சுக் குவியலாய் மோதியவள்…

“சாரி..! என்றவள்…வந்த வேலையில் கண்ணாய் இருந்தாள்.ஆனால் செந்திலின் நிலை சொல்லவே வேண்டாம்…

ஏதோ மாய உலகில் அவன் சிக்கித் தவிப்பதைப் போல உணர்ந்தான்.தனக்குள் தோன்றும் உணர்விற்கு பெயர் கூட அவனுக்குத் தெரியவில்லை.ஆனால் ஏதோ ஒரு வகையில்…வலையில் சிக்கிக் கொண்டான்.

“ஹேய் மீனாட்சி…என்ன அவசரம்..! பார்த்து மெதுவா..! என்று தேவகி அதட்ட..

“மீனாட்சி… என்று மனதிற்குள் உறுப் போட்டுக் கொண்டான் அவள் பெயரை.

“மீனாட்சியே தான்… என்று மனதிற்குள் சொல்லி சிரித்துக் கொண்டான்.

தன்னால் ஒருவன் சிக்கி சின்னா பின்னம் ஆகிக் கொண்டிருப்பதை அறியாத அவளோ..அவள் போக்கில் சுற்றிக் கொண்டிருந்தாள்.

 

 

அடி எதுக்கு உன்ன பாத்தேனு……..

நெனைக்க வைக்கிறியே….
என் மனசுக்குள்ள நிக்காம ….

நீ மழை அடிக்கிறியே….!

 

Advertisement