Advertisement

பிறை 2:

“முன்னால் நீதிபதியின் மகன் சேகர் திடீர் மரணம்… என்ற செய்தி அன்றைய எல்லா நாளிதழ்களிலும் பிரசுரிக்கப்பட்டு….அவர்கள் குடியிருந்த ஏரியா முழுவதும் ஒரே கூட்டமாக இருந்தது.

நீதித்துறையில் பலவருடங்களாக பழம் தின்று கொட்டை போட்டவராக பாண்டியராஜன் இருந்ததால்..ஆளும் கட்சி,எதிர்க்கட்சி…என பலதரப்பட்ட ஆட்களும் வந்து போய் கொண்டிருந்தனர்.

அனைத்து செய்தி சேனல்களிலும்…இந்த செய்தியே பெரிய விவாதமாய் ஓடிக் கொண்டிருக்க….

சேனலின் டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காக..அனைத்து சேனல் கேமரா மேன்கள்..செய்தியாளர்கள்..என அனைவரும் பாண்டியராஜன் வீட்டின் முன் குவிந்து இருந்தனர்.

“சுட சுட செய்தியை யார் முதலில் எடுப்பது…, யார் முதலில் அனுப்புவது.. என்ற போட்டி அவர்களிடையே நிலவிக் கொண்டிருந்தது.

பல் தேய்க்காத முகங்கள்,டீ கூட அருந்தாமல் அமர்ந்திருந்த முகங்கள்…பெரிய மாலைகள்…தெருவே ஒலிக்கும் ஒப்பாரி சத்தம்… என்று அந்த இடமே …..ஒரு வித அலைபுறுதலுடன் காட்சி அளித்தது.

மிகப் பிரம்மாண்டமாய் காட்சி அளித்த அந்த வீட்டின் உள்ளே ….

நடுக் கூடத்தில்….

கண்ணாடிப் பெட்டியினுள் சடலமாக வைக்கப்பட்டிருந்தான் சேகர்.உயிருடன் இருந்தவரை அவன் அறிந்திராத பல முகங்கள் இப்பொழுது அவனைச் சுற்றி.ஆனால் அறிந்து கொள்ள அவன் இல்லை.

அவன் நண்பர்கள் ஒரு புறம் குழுமி இருக்க…சொந்தங்கள் ஒரு புறம் ஒப்பாரி வைக்க…

வந்தவர்களை தலையசைப்பில் ஏற்று..கலங்கிய விழிகளுடன் ஒரு ஓரமாய் நின்றிருந்தார் பாண்டியராஜன்.

அவரின் துணைவி மின்னல் கொடி..மகனின் கால்மேட்டில் அமர்ந்து காதைக் கிழிக்கும் சத்தத்துடன் அழுது கொண்டிருக்க…. ஏற்றப்பட்டிருந்த ஊது பத்திகளின் வாசனை அந்த இடத்தை நிரப்பியிருக்க….

சேகர் உடலின் மேல் வைக்கப்பட்ட மாலைகள்…ஒரு புறம் மலை போல் குவிந்திருக்க……அவனின் தலை மேட்டில் அமர்ந்திருந்தாள் அவள்.

செக்க சிவந்த விழிகளும்…அழுது வீங்கிய முகமும்…நலுங்கிய புடவையும்,இலக்கற்ற பார்வையும்….ரவி வர்மாவின் சோக சித்திர பாவையாய் அமர்ந்திருந்தாள்.

“இப்படி இத்தனை அழகான பொண்டாட்டியை விட்டுவிட்டு போயிட்டியே… என பல குரல்கள் ஒப்பாரி வைக்க…பெட்டியினுள் இருந்த தன் கணவனின் உடலையே வெறித்துக் கொண்டிருந்தாள் அவள்..அவள் தான் சர்வா.

“சர்வா…அழுதுடு…இப்படியே இருக்காத.. என அனைவரும் அவளுக்கு ஆறுதல் சொல்ல…

அவர்களின் ஆறுதல் வார்த்தைகள் அவள் செவிகளைத் தீண்டவே இல்லை.நான் இந்த இடத்தில் வெறும் ஜடம்..என்னை மனிதர்களோடு ஒப்பிட வேண்டாம்..என்பதைப் போல் இருந்தது அவள் செய்கை.

தன்னை காதல் கொண்டு மணந்த கணவன்…எந்த குறையும் இல்லாத பிறந்த வீடு,வாழ்க்கை பட்ட வீடும் வசதியான வீடு..இப்படி வாழ்க்கை அவளுக்கு கொடுத்தது எல்லாம் சிறப்பே.

ஆனால் ஒரு பெண்ணிற்கு வாழ்நாளின் இறுதிவரை கொடுக்க பட வேண்டிய மஞ்சள் குங்குமத்தை எடுத்துக் கொண்டது தான்…வாழ்க்கை அவளுக்கு கொடுத்த மிகப் பெரிய கல்யாண பரிசு.

ஆயிரம் கனவுகளை சுமந்து கொண்டுதான்..அவனை மணம் முடித்தாள்.ஆனால் அவளின் கனவுகள்..கனவுகளாகவே கலைந்து விட்டது யார் குற்றம்…விதியின் குற்றமா..? இல்லை அவளின் குற்றமா…?

இந்த சாபக் கேட்டிற்கு யார் காரணம்..

அங்கிருந்த நந்தினி…சேகரின் அக்கா…

தனது தம்பியின் உடலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளின் மூன்று வயது குழந்தை பிரகதியும் தன் மாமன் உடலையே பார்த்துக் கொண்டிருந்தது.

“சி எம் வரார்.. என்ற செய்தி அங்கு தீயாய் பரவ..உடனே அங்கு ஒரு வித மயான அமைதி…

துக்க வீட்டிற்கு…படையோடு வந்த முதலமைச்சரைக் கண்டு..அங்கிருந்த சிலர் முகம் சுழிக்க…அதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்.. தான் கொண்டு வந்திருந்த அந்த பெரிய மாலையை சேகரின் உடலுக்கு மேல் வைத்து விட்டு… பாண்டியராஜனின் கையை ஒரு நிமிடம்…பிடித்துக் கொண்டார்.

“கொஞ்சம் வேதனையான விஷயம் தான்…நீங்க இதில் இருந்து மீண்டு வரணும்.. என்று பேருக்காக இரண்டு ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு…சம்பிரதாயமாக இரண்டு நிமிடம் அங்கே நின்று விட்டு…பின்..விட்டால் போதும் என்பதை போல் அங்கிருந்து கிளம்பி சென்றார் சி எம்.

உடன் பணியாற்றியவர்கள்…சொந்த பந்தம்..இப்படி யார் வந்ததும் தெரியாது..போனதும் தெரியாது சர்வாவிற்கு.விழிகள் இம்மியும் அசையாமல் அவனை நோக்கிக் கொண்டிருந்தது.

தன் அத்தையின் அருகில் வந்த பிரகதி…அவளின் மடியில் அமர்ந்து அவள் முகம் பார்க்க…அந்த பச்சிளம் பிஞ்சை பார்த்தவளின் முகத்தில் கொஞ்சம் இளக்கம்.

ஆனால் அதைப் பார்த்த நந்தினியோ..வெடுக்கென்று குழந்தையை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.

“அம்மா..விடுங்கம்மா… நான் அத்தைகிட்ட  போறேன்.. என்று அவள் அழ..

“பேசாம இரு..இல்லை கொன்னே போடுவேன்…என் தம்பியை முழுசா முழுங்கியவளுக்கு உன்னை முழுங்க எவ்வளவு நேரம் ஆகும்..? என்று வார்த்தைகளை தடிக்க விட்டாள் நந்தினி.

அவள் பேசிய பேச்சுக்கள் காதில் விழுந்தாலும்…சர்வாவால் ஒன்றும் செய்ய முடியாதே…அவள் வாழ்க்கைதான் முடிந்து விட்டதே..இனி யாரோடு பேசி என்ன பயன்…அதனால் எனக்கு இது புதிது இல்லை..என்பதைப் போல் அமர்ந்திருந்தாள்.

“நேத்து வரைக்கும் நல்லா இருந்த பையன்..நைட்டு சாப்பிட்டு நல்லாத்தான் தூங்க போனான்…விடுஞ்சு பார்த்த பிணமா இருக்கானே..! அட்டாக் வரக் கூடிய வயசா என் பையனுக்கு…கல்யாணம் முடுஞ்சு ரெண்டு மாசம் கூட ஆகலை…அவனை நம்பி வந்தவளை இப்படி தவிக்க விட்டுட்டு போய்ட்டானே.. என்று அவனின் தாய் மின்னல் கொடி சொல்லி சொல்லி அழுது கொண்டிருந்தார்.

அங்கு நடந்த,நடந்து கொண்டிருந்த அனைத்தையும்..மீடியாகாரர்கள்.. ஒன்று விடாமல் ஒளிபரப்பிக் கொண்டிருக்க….

“என் தம்பியின் மரணத்தில் எனக்கு சந்தேகம் இருக்கு.. என்று திடீரென்று குண்டைத் தூக்கிப் போட்டாள் நந்தினி.

ஒரு நிமிடம் அனைவரும் புரியாமல்..பின் புரிந்து திகைக்க…அங்கிருந்த செய்தியாளர்களுக்கு…ஒரு புதுத் தீனி கிடைக்க..அவ்வளவு தான் அந்த இடம் தீ பற்றியதைப் போன்று ஆகிக் கொண்டிருந்தது.

“நந்தினி…என்ன உளர்றே..? என்று பாண்டியராஜன் சீறலாய் கேட்க..

“உளறல் இல்லைப்பா…அவனுக்கு உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை..அட்டாக் வர அளவுக்கு அவனுக்கு பிரஷர் எதுவும் கிடையாது…உங்களுக்கு…எதிரிகள் ஏராளமாய் இருக்காங்க.. எனக்கென்னமோ இது கொலையோன்னு தோணுது… என்றாள்.

“தோணுதுன்னா வாயை மூடிகிட்டு..என்கிட்டே தனியா சொல்லி இருக்கணும்..இப்படியா மீடியா முன்னாடியா உளறி வைப்ப.. என்று அவளை கடிந்து கொண்டவர்…மீடியாவிற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் நின்றார்.

ஆனால் இதுவே எங்களுக்கு அதிகப்படி என்ற நினைத்த மீடியாகாரர்கள் …

“ஓய்வு பெற்ற முன்னால் நீதிபதி பாண்டியராஜனின் மகன் சேகர் மரணத்தில் திடீர் திருப்பம்…தன் தம்பியின் மரணம் இயற்கையானது அல்ல…கொலை…நீதிபதியின் மகள் நந்தினி குற்றச்சாட்டு.. என்று அனைத்து சேனல்களிலும் செய்தி வெளியாகி ஓடிக் கொண்டிருந்தது.

பிரபலமான ஒரு சேனலோ..கொஞ்சம் ஒரு படி மேலே போய்…பாண்டியராஜனுக்கு பணியின் போது இருந்த எதிரிகள்.. என ஒரு பட்டியலையே வெளியிட்டுக் கொண்டிருந்தது.அதில் ஆளும் கட்சி முதல் அமைச்சரின் பெயரும் வர…

மீடியா முழுவதும்….சி எம் அலுவலகத்தை சூழ்ந்து கொண்டனர்.

ஒருவன் ஒரு படி மேலே போய்…

“சார்…பாண்டியராஜன் அவர்களின் மகனை நீங்க தான் ஆள்விட்டு கொலை செய்ததா சொல்றாங்களே உண்மையா..? என்றான் தைரியமாய்.

அவனின் முகத்தை கடுப்பாய் பார்த்த அவர்…உனக்கு இருக்குடி மகனே.. என்று மனதில் நினைத்துக் கொண்டு…

“இது முற்றிலும் உண்மைக்கு புரம்பானது…இதுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது..இது எதிர்கட்சிகளின் சதி…அதை நான் முறியடிப்பேன்…..இதை உடனடியாக விசாரித்து உண்மையை கண்டறியுமாறு….காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கிறேன்… என்று பேட்டி கொடுக்க…

அதைப் பார்த்த எதிர்க்கட்சி தலைவனுக்கு…கிடைத்த நெருப்பை பற்ற வைக்க இதுவே தக்க சமயமென கருதி..தன் பங்குக்கு தேவையில்லாத பேட்டியைக் கொடுக்க….

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்க….இறுதி முடிவு பாண்டியராஜனிடம் விடப்பட்டது.

நடந்த களேபரத்தில் அவரும்….உறுதியாக நம்பத் தொடங்கிவிட்டார்… மகனின் இறப்பு இயற்கை இல்லை என்று.

“எனக்கும் சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது…இதில் ஆளும் கட்சி சம்பந்தப்படிருப்பதால்…காவல் துறை விசாரித்தால்..சாட்சிகள் அளிக்கப்பட்டு விடும் என்பதால்….இந்த வழக்கை சிபியை இடம் ஒப்படைக்க வேண்டும்… என்று வேண்டுகோள் விடுத்தார் அவர்.

பணம் பத்தென்ன.. பதினொன்றும் செய்யும் என்பதற்கு இணங்க…கேஸ் உடனே புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

“கேஸ்ன்னு வந்துட்டா…நீங்க பாடியை போஸ்ட்மார்டம் பண்ணித்தான் ஆகணும்…அப்பத்தான் உண்மையை வெளிக் கொண்டு வர முடியும்… என்று அதிகாரிகள் அங்கு வாதாடிக் கொண்டிருக்க..

உண்மை நிலை புரிந்தாலும்…பெற்ற மகனின் உடலை கூறு போடுவதை அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இருந்தாலும் சட்டத்தின் விதி முறைகளை மீற முடியாது என்பதால் ஒப்புக் கொண்டார் பாண்டிய ராஜன்.

சர்வாவிற்கு நடப்பது கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை… அனைவரும் மார்ச்சுவரியின் முன் நிற்க..அவளோ…அதே வெறித்த பார்வையுடன் தான் அங்கும் நின்றிருந்தாள்.

அவளின் முகத்தைப் பார்த்த அனைவருக்கும்..துக்கம் பொங்கி வழிய…

“எப்படி இருந்த பொண்ணு..இப்படி நடை பிணம் மாதிரி ஆகிட்டாளே..! என்று அனுதாபப் படாத குரல்களே இல்லை.

நின்றிருந்தவர்களின் மத்தியில் சலசலப்பு…

“சிபியை ஆபீசர் குமரன் வரார்… என்று பல குரல்கள் முனுமுனுக்க…உள்ளே நுழைய கூட விடாமல் மீடியா சூழ்ந்து கொண்டது.

“இந்த கேசை நீங்கதான் விசாரிக்க போறிங்களா சார்..?

“கொலையாளியை கண்டுபிடிச்சிட்டிங்களா…? என்று கேட்க…

நின்று நிதனாமாய் திரும்பினான் அவன்.

அனைவரும் ஒரு நிமிடம் அவனையே பார்க்க…

“எஸ்…ஐ ஆம் தீ ஆபீசர் டு ஹேண்டில் திஸ் கேஸ்…நோ மோர் கொஸ்டின்ஸ்.. என்றவன்..அங்கிருந்து அகன்றான்.

வேறு எந்த பேச்சுகளும் அவன் காதில் விழுந்ததாக தெரியவில்லை.

நேராக பாண்டியராஜனின் அருகில் சென்றவன்…அவருக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு…

“சார்…நான் சிபியை ஆபீசர் குமரன்…உங்க பையன் கேசை நான் தான் விசாரிக்க போறேன்…நீங்க முழு ஒத்துழைப்பு குடுப்பிங்கன்னு நம்புறேன்.. என்றான் நேர் பார்வையாய்.

“கண்டிப்பாய்… என்றார் பாண்டியராஜன்.

அதற்குள் போஸ்மார்ட்டம் செய்து பாடி வர…அது அவர்களிடம் ஒப்படைக்கப்பது.

குமரன்…முப்பது வயதை முழுங்கிய முழு ஆண்மகன்.கண்களில் தெரியும் தீட்சண்யம்…முகத்தில் தெரியும் அறிவு…நடையில் தெரியும் மிடுக்கு…துளைக்கும் பார்வை…என மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்தவன்.

அங்கிருந்து அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.பார்வை சுற்றி வர….ஒருவரயாய் ஆராய…. அவர்களின் முகத்தில் தெரிந்த வேதனை அவனையும் சற்று இளக வைத்தது.

ஒரு இறப்பினை…ஜீரணித்துக் கொள்ள முடியாத உண்மை அவனை சுட்டது.

ஆனால் இது போல் பல அனுபவங்கள் அவனுக்கு இருந்ததால்..இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அவனின் பார்வை வட்டத்தில் விழுந்தாள் சர்வா…

அவளைப் பார்த்தவன் இமைக்க மறந்தான்.சோகத்திலும் சுடர் விடும் அழகு என்பதை போல் இருந்த அவளைக் கண்டு திகைத்தான்.

அவளிடம் இருந்து அவனால் பார்வையை பிரிக்க முடியவில்லை.

“அடுத்தவனின் மனைவியை பார்ப்பது குற்றம்.. என்று மனது சொன்னாலும்

மூளை அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவளின் முகத்தில் இருந்த சோகத்தினை துடைத்தெறிய கைகள் பரபரத்தது.

தன் மனம் போகும் போக்கைக் கண்டு திகைத்தவன்….சட்டென்று பார்வையை மாற்றினான்.

“குமரன்..கண்ட்ரோல் யுவர் செல்ப்….நீ எப்பவும் இப்படி தடுமாறினது இல்லை..ஸ்டெடி..ஸ்டெடி.. என்று தனக்குத் தானே உறுப் போட்டுக் கொண்டவன்.. பின்பு நிமிர்ந்தவனாய் அவளை நேர் பார்வை பார்த்தான்.இப்பொழுது அவன் பார்வையில் தெளிவிருந்தது.

“ரிப்போர்ட் எப்ப கிடைக்கும்…? என்று விசாரித்தவனாய் அங்கிருந்து நகன்றான்.

ஆனால் அவன் மனம் மட்டும் நகராமல் அங்கேயே நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

சேகரின் இறுதி தகனத்துக்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

குமரனும் அங்கு தான் இருந்தான்.ஒவ்வொருத்தரின் பாவனைகளையும் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

“வளையல் உடைக்கணும்…கை நியைற வளையலைப் போட்டு விடுங்க…தலை நிறைய பூவை வச்சு விடுங்க..நெற்றியில் குங்குமத்தை வைத்து,கன்னங்களில் மஞ்சள் பூசி விடுங்க.. என்று  அங்கிருந்த கிழவிகள் ஆளுக்கு ஒன்றாய் சொல்லிக் கொண்டிருக்க…

சர்வாவிற்கு கை நிறைய வளையல்கள் அடுக்கப்பட்டது..தலை நிறைய பூச்சூடப்பட்டது.நெற்றியில் குங்கும திலகம் இடப்பட்டது.

ஆனால் சிறிது நேரத்தில்…

முன்னால் அழைத்து வரப்பட்ட சர்வாவின் கைகளில் இருந்த வளையல்கள் உடைக்கப்பட்டது.உடைக்கப்பட்ட வளையல்களை..சேகரின் கைப்பகுதில் வைத்துக் கட்டினர்.

தலை நிறைய சூடிய பூச்சரம் பறிக்கப்பட்டது.நெற்றித் திலகம் அழிக்கப்பட்டது.

பாரப்பரியமும்,சம்பிரதாயமும் ஊறிப்போன குடும்பத்தில் வைக்கப்பட்டதால்…அனைத்து சம்பிரதாயங்களும்..பழமையுடன் கையாளப்பட்டது.

இதை காண சகிக்காத சர்வாவின் பெற்றோர் அவளைக் கட்டிக் கொண்டு அழ…

அவள் விழிகளில் திரண்டிருந்த கண்ணீர் ஒற்றைக் கோடாய் இரண்டு கண்களில் இருந்தும் வலிந்து கொண்டிருக்க….

அவளின் பூ முகத்தைப் பார்த்த குமரனின் நெஞ்சில் ஈட்டியைக் குத்தியதைப் போன்ற உணர்வு.

இந்த பெண் என்ன தப்பு செய்தாள்..? இவளுக்கு இப்படி ஒரு தண்டனை தேவையா..? என்று மனதிற்குள் மருகினான்.

“எல்லா பெண்களுக்கும் நீ இப்படி தான் உருகுவியா..? என்று மனசாட்சி கேட்க…

“இல்லை..அப்படி இல்லை..ஆனால் இவளைப் பார்த்தால் எனக்கு அப்படி தோணுது….இதையெல்லாம் தடுக்க கை பரபரன்னு இருக்கு.. என்று அவன் பதில் சொல்ல…

எதுவும் செய்ய முடியாதவனாய்….அவளின் நிலை பார்க்க முடியாமல்…பார்வையை திருப்பிக் கொண்டான்.

“அப்படியே ஒரு வெள்ளைப் புடவையும் குடுத்து கட்டிக்க சொல்லுங்க..ரொம்ப பிரமாதமா இருக்கும்..! என்று அவளின் நிலை பார்த்து பொங்கினாள் அவள் தோழி  கயல்விழி.

“எந்த காலத்தில் இருக்கீங்க..? நீங்க எல்லாம் மனுஷங்க தானா..? என்று அவள் கத்த….

“ஷ்..அமைதியா இரு கயல்..இதெல்லாம் சம்பிரதாயம்..! என்று சிலர் அவளை அடக்க முயன்றனர்.

“உங்க சம்பிரதாயத்தில் தீயை வைக்க…! பெரிய நீதிபதி வீடுன்னு பேரு..நடக்கிற கூத்தையெல்லாம் பார்த்தா…நீங்க எல்லாம் காட்டு மிராண்டிகளோன்னு தோணுது… என்று கயல் அழுது கொண்டே சொல்ல..

அவளைத் திரும்பிப் பார்த்த சர்வாவின் முகத்தில் என்ன இருந்தது…என்று யாருக்கும் தெரியாது..ஆனால் கயல்விழி அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அவளின் பார்வை தீட்சன்யத்தைக் கண்டு கொஞ்சம் அசந்து தான் போனான் குமரன்.

“என்ன பெண் இவள்…? இந்த சூழ்நிலையிலும் இப்படி ஒரு மன திடமா…? என்று அவன் நினைக்க…

“ரெண்டு மாசத்தில் என் தம்பியை முழுங்கினவளுக்கு இது ஒன்னு தான் கேடு.. என்று நந்தனி வாய் வார்த்தைகளை விட…

அவளைத் திரும்பி சர்வா முறைத்த முறைப்பில்…..தான் நெருப்பாய் இருந்தால் பொசுக்கியிருப்பாள்.

ஆனால் தன் நிலை அறிந்தவள் அப்படியே நிறுத்திக் கொண்டாள்..!

ஆனால் குமரனின் கண்களில் அவளைப் பார்த்த நொடி முதல் அப்பட்டமான காதல் வழிந்தோடியது.

“உன் சோகங்களை….நான் மறக்கடிப்பேன்….

என் தோள் உன்னை சாய்ப்பேன்…உன்னை மீண்டும் உயிர் பெற செய்வேன்.. என்று மனதிற்குள் சொல்லியபடி விழிகளால் அவளை வருடிக் கொண்டிருந்தான்.

 

 

 

 

 

 

 

 

Advertisement