Advertisement

தூரிகை  22:

 

எப்பொழுதும் அருந்தாத மதுவை அருந்தியதால் தலைவலி தாங்க முடியாத அளவிற்கு இருந்தது தேவாவிற்கு.

கம்பெனியில் தனது இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முகம் அஷ்ட்ட கோணலாய் மாற….தலையை இரு கைகளால் தாங்கியபடி…..எதுவும் செய்ய மனமின்றி அமைதியாய் இருந்தான்.

“என்னாச்சு தேவா…?ஏன் ஒரு மாதிரி இருக்க…?” என்றான் குணா.

“ஒண்ணுமில்லை குணா…! லேசா தலைவலி..!”என்று அவன் முகம் பார்க்காமல் சொல்ல…

“எதனால் வந்த தலைவலின்னு தெரிஞ்சுக்கலாமா…?” என்றான் குணா ஊடுருவிய பார்வையுடன்.

அடிபட்ட பார்வை பார்த்தான் தேவா.”இது என்னால் எனக்கு வந்த தலைவலி.அதை சரி செய்ய வழி தெரியாம தான் வலியால துடுச்சுகிட்டு இருக்கேன்…!” என்றான்.

“உனக்கு நான் சொல்ல வேண்டும் என்பதில்லை தேவா.ஆரம்பித்த நமக்குதான் முடிக்குற வழியும் தெரியும்…. ஆனா நாமதான் தெரியாத மாதிரியே இருந்திடுறோம்…!” என்றான் குணா.

“எந்த பாதையில் போனாலும் எல்லாமே அடச்சு தான் இருக்கு குணா…!” என்றான் இரு பொருள்பட.

“அதெல்லாம் அவங்க அவங்க மனசைப் பொறுத்தது…”என்றான் குணாவும் இரு பொருள்பட.

“பிரச்னையை முடிக்க நான் போனா….கூட ரெண்டு பிரச்சனை சேர்ந்துகிட்டு வருது..!” என்றான் தேவா.

“ஏன் பிரச்னையை முடிக்கணும்ன்னு பார்க்குற….அதை எப்படி வராம தடுப்பதுன்னு யோசி….ஒரு கஷ்ட்டத்தை இழுத்து…அதை எப்படி சரி செய்யன்னு முழிக்கிறதை விட….அந்த கஷ்ட்டம் எப்படி,எதனால் வந்ததுன்னு யோசிச்சு…அந்த பாதையில் போனா…எல்லாமே சுலபமா விலகிடப் போகுது….சேர வேண்டியது தானா வந்து சேர்ந்துட்டு போகுது..!” என்றான் குணா…இரு பொருள்பட.

இதை தேவாவும் யோசித்தான் தான்…..இருந்தாலும் கஷ்ட்டம் தனக்கு வந்தால் தான் தெரியும்….என்கிற மனநிலையில் இருந்தான்.

கண்ணை மூடினால் கீர்த்தியின் நினைவு….எங்கு பார்த்தாலும் அவள் முகம் தோன்றுவது போல் இருந்தது அவனுக்கு.

“சம்சாரம் என்பது வீணை….” என்ற சொல்லுக்கு இணங்க…அதை மீட்டத் தெரியாமல் மீட்டி விட்டோமோ என்ற கவலை அவன் மனதை அரித்தது.

“இன்னும் என்ன யோசனை தேவா..?” என்றான் குணா ஆறுதலாய்.

“ஒரு சின்ன விபத்து…இப்படி என் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டதேன்னு நினைச்சா….முடியலை குணா….மனசெல்லாம் ரணமா இருக்கு…” என்று தேவா புலம்ப..

“அப்படி என்னதாண்டா நடந்தது…? என்கிட்டே கூடவா சொல்லக் கூடாது…!” என்றான் குணா ஆதங்கமாய்.

“உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் ஒண்ணுமில்லை குணா…கடந்த விஷயங்கள்…மறந்த விஷயங்கள் அப்படியே இருக்கட்டுமேன்னு தான் சொல்லலை…!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

மெசின்கள் பகுதியில் ஏதோ கோளாறு என்று அழைப்பு வர….அந்த பகுதிக்கு விரைந்தனர் இருவரும்.

அங்கு சென்று அதை மேற்பார்வை செய்துவிட்டு…மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கும் போது…

“தேவாவாஆஆஆ…..”என்ற குரலைக் கேட்டு அவன் மட்டுமல்லாது.. அங்கிருந்த அனைவரும் திரும்பினர்.

சத்தம் வந்த திசையில் வேகமாய் திரும்பினான் தேவா.நலுங்கிய காட்டன் சேலையும்,கலைந்த கூந்தலுமாய்….கண்களில் கண்ணீருடன் வந்த கீர்த்தனா….பாய்ந்து தேவாவை அணைத்துக் கொண்டாள்.

அவளது இந்த செய்கையை சற்றும் எதிர்பார்க்காத தேவா….முதலில் குழம்பி….பின் தெளிந்து…நடப்பிற்கு வர சில நிமிடங்கள் தேவைப் பட்டது.

“சாரி தேவா….ஐம் சாரி தேவா..” என்ற கதறலுடன் அவனை இருக அணைத்தபடி நின்றிருந்தாள் கீர்த்தனா.

“என்னாச்சு கீர்த்தி…என்ன நடந்தது…?” என்று அவளை விலக்க…..அவளோ பசை போல் விடாமல் அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.

அங்கிருந்த அனைத்து தொழிலாளர்களும்..முதலில் அதிர்ச்சியாய்ப் பார்த்து….பின் வெட்கத்துடன் பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

தேவாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.எல்லாரும் வேடிக்கைப் பார்க்க ….கீர்த்தனாவின் திடீர் அணைப்பும்… அவளின் அருகாமையும் ஏதோ வேதியல் மாற்றங்களை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.

குணாவின் “ம்ம்க்கும்..” என்ற செருமல் சத்தத்தில் நடப்பிற்கு வந்தவன்….”சரி..சரி..எல்லாரும் வேலையைப் பாருங்க…” என்று உரைத்தவன்…கீர்த்தனாவை அணைத்தபடியே தனது அறைக்கு அழைத்து சென்றான்.

ஏதோ ஒரு வேகத்தில் அவனை வந்து அணைத்தாளே தவிர..அவளுக்கும் வெட்கம் பிடுங்கித் தின்றது.

தேவாவை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் கவிழ்ந்தாள்.கண்ணீர் மட்டும் வலிந்து கொண்டிருந்தது.

தேவாவிற்கோ அதற்கும் ஒரு படி மேலே போய்…”என்ன நடக்குது…கனவு ஏதும் காண்கிறேனா…?” என்கிற ரீதியில் இருந்தான்.பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் குடித்த வேகத்தில்….அவனது குழப்பம் தெரிந்தது.

பின் நிதானத்திற்கு வந்தவன்…”என்ன கீர்த்தி..? ஏதும் பிரச்சனையா..? என்ன இந்த நேரத்தில்…அதுவும் இங்க…?” என்று அவன் கேட்க…

“உள்ள வரலாமா…?” என்ற கேள்வியுடன் நுழைந்தார் தயாளன்.

தயாளனை அங்கு தேவா நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. “வாங்கப்பா…! என்ன ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி வந்திருக்கிங்க…!” என்றான் ஆச்சர்யமாய்.

“ஏன் நாங்க இங்க வரக்கூடாதா…..?” என்று தயாளன் கிண்டல் அடிக்க….

“ஐயோ..! தெய்வமே….!யார் சொன்னது அப்படின்னு…நீங்க கண்டிப்பா வரலாம்..!”என்ற பதிலுடன் உள்ளே நுழைந்தான் குணா.

“என் ஆபீஸ் வரைக்கும் போக வேண்டிய வேலை இருந்தது தேவா.சரி கீர்த்தியும் ஆப்டர்நூன் பிரி என்பதால் அழைச்சுட்டு போனேன்..!அவ்ளோ தான்..!”என்றார் அவன் முகத்தை ஆழ்ந்து நோக்கியபடி.

மௌனமாய் அதிர்ந்தான் தேவா.அவன் முகத்தில் ஈயாடவில்லை.மீண்டும் தண்ணீரை எடுத்துக் குடித்தவன்…தனது உள்ள உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர அரும்பாடு பட்டான்.

ஆனால் இதை எதையும் கவனிக்கும் நிலையில் கீர்த்தனா இல்லை.

“கீர்த்தி…நீ வீட்டுக்கு கிளம்பு….!குணா டிரைவர் கிட்ட சொல்லி டிராப் பண்ண சொல்லு..!” என்று இறுகிய குரலில் சொன்னான்.

அவனின் திடீர் இறுக்கத்துக்கான காரணம் புரியாமல் குழம்பினாள் கீர்த்தனா.அவன் முகத்தைப் பார்க்க…”கிளம்பு..!” என்பதைப் போல் சைகையில் தலையை ஆட்டினான்.

மனமில்லாமலும்,அவன் சொல்லைத் தட்டமுடியாமலும் அங்கிருந்து கிளம்பினாள் கீர்த்தி.

அவள் போக மனமில்லாமல் போவதை கண்ட குணா…”இப்ப எதுக்காக கீர்த்தனாவை இங்கிருந்து போக சொன்ன தேவா…?” என்றான் கடுப்புடன்.

“எல்லாம் காரணமாத்தான் குணா…!” என்றவன்….”இதெல்லாம் உங்க வேலை தானாப்பா…!” என்றான் தயாளனைப் பார்த்து.

“இதில் நான் செய்வதற்கு ஒண்ணுமில்லை தேவா….நேரம் காலம் கூடி வந்தா….எல்லாமே தானா நடக்கும்..!” என்றார்.

“நீங்க அவசரப் பட்டுட்டிங்க….!” என்று தேவா சொல்ல…

“இதுவே லேட் மகனே..! நான் அவசரப்படலை.அவசியம் ஏற்பட்டதால் இதில் நான் தலையிட வேண்டிய சூழ்நிலை.நீயா சொல்ற மாதிரியும் தெரியலை.அதான் நானே உடைச்சுட்டேன்…!” என்றார் அமைதியாய்.

“இருந்தாலும்…!” என்று தேவா இழுக்க…

“ஐயோ..!நிறுத்துங்க ரெண்டு பெரும்..!ஒரு மண்ணும் புரியலை எனக்கு…என்னதான் நடக்குது இங்க…! ஏதோ புரியாத பாஷையை கேட்ட மாதிரி இருக்கு..!” என்று தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டான் குணா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை குணா…!” என்று தேவா சொல்ல..”டேய்..! நான் கொலைகாரன் ஆனாலும் பரவாயில்லை…உங்க ரெண்டு பேரையும் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.ஒழுங்கா சொல்லிடுங்க..!” என்று எரிச்சலாய் சொல்ல….வேறு வழியில்லாமல்…அவன் அறியாத அந்த அத்யாயங்களை சொன்னான் தேவா.

அவன் சொல்ல சொல்ல…தயாளன் அப்படியே அமர்ந்திருக்க…குணாவின் மனநிலையை அவனாலேயே வரையறுக்க முடியவில்லை.மனதில் பெரிய பாரத்தை தூக்கி வைத்ததைப் போல் உணர்ந்தான்.

உணர்ச்சிப் பெருக்கில் தேவாவை அப்படியே கட்டிக் கொண்டான் குணா.”இனி உனக்கு நல்லது மட்டும் தாண்டா நடக்கும்…” என்று சொல்ல…”தேங்க்ஸ் மச்சி..” என்றான் தேவா.

“இன்னும் ஒரு விஷயம் பாக்கி இருக்கு..!” என்று குண்டைப் போட்டார் தயாளன்.

“இன்னும் என்னப்பா..!” என்றான் குணா.

“இன்னும் அந்த சண்முகம் விஷயம் அப்படியே தான் இருக்கு.தேவா சரின்னு சொன்னா அதையும் முடிச்சுடலாம்..!” என்று சொல்ல…

“முடுச்சுடுங்கப்பா..!” என்றான் தேவா.

“டேய்..!என்னடா நடக்குது இங்க..?ரெண்டு பெரும் கொலை பண்ண திட்டம் போடுற மாதிரியே பேசுறிங்க…!அதுவும் என்னை பக்கத்தில் வைத்துக் கொண்டு…நான் இன்னும் கல்யாணம் கூட பண்ணலையேடா..ஒரு கன்னிப் பையனோட சாபம் உங்களை சும்மா விடாதுடா.!”என்று அப்பாவியாய் சொல்ல….

தேவாவும்,தயாளனும் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.

இடம் : மாறனின் அலுவலகம்:

அங்கு வந்த காவல்துறையினரை சுத்தமாக எதிர்பார்க்கவில்ல மாறனும்,சண்முகமும்.

என்ன சார்..? என்ன பிரச்சனை..?” என்றார் மாறன்.

அவர்களுடன் தயாளன் இருக்கவும் மிகவும் குழம்பிப் போனார்.”சாரி மிஸ்டர் மாறன்….நாங்க சண்முகத்தை கைது பண்ண வந்திருக்கோம்..!” என்றார்.

“சண்முகத்தையா…? ஏன்..? அவர் என்ன தப்பு செய்தார்..?” என்றார் மாறன்.

“உங்க பையன்…மிஸ்டர் தேவாவை கொலை செய்ய முயற்சி செய்ததாக…ஆதாரத்தோட புகார் கொடுத்திருக்காங்க..!” என்றார்.

“நானா…?யார் புகார் கொடுத்தது..?” என்று சண்முகம் எகிற…

“உங்க பொண்ணு சிந்து தான் சார்..!” என்றார் தயாளன்.

“இல்லை…நான் எதுவும் பண்ணலை…” என்று சண்முகம் சொல்ல…

சொல்லவேண்டியதை கோர்ட்ல சொல்லுங்க…! இப்ப எங்க கூட வாங்க..! என்றபடி கைது செய்ய…நடப்பவை எதுவும் புரியாமல் நின்றார் மாறன்.

“தேவாவை எதுக்காக கொலை செய்ய முயற்சி பண்ணனும்….அப்ப தேவாவுக்கு நடந்தது ஆக்சிடென்ட் இல்லையா…?” என்று நினைத்தவருக்கு அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை.

பெற்ற தந்தையாக இல்லாவிட்டாலும் வளர்ந்த தந்தையாயிற்றே..!

மாறனுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் தேவைதான் என்று நினைத்த தயாளனும்…..எதுவும் பேசாமல் சென்று விட்டார்.

இரவு வெகு நேரமாகியும் தேவா வராததால் தவிப்புடன் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா. என்ன முயற்சி செய்தும் அவள் தவிப்பை அடக்க முடியவில்லை.தேவாவைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தவளுக்கு…இன்று மதியம் நடந்தது நியாபகத்திற்கு வந்தது.

“என்ன அங்கிள்…! உங்க ஆபீஸ்க்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இந்த பத்திரிகை ஆபீஸ்க்கு கூட்டிட்டு வந்திருக்கிங்க..! என்றாள் கீர்த்தி.

அவளைப் பார்த்து மென்மையாய் சிரித்தவர்…”இதுக்கு முதலாளி நான் தான் கீர்த்தனா..!” என்றார்.

அவரது பதிலில் சன்னமாய் அதிர்ந்த கீர்த்தனா..வெளியில் காட்டிக் கொள்ளாமல்…”ஹோ…அப்படியா அங்கிள்..!” என்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

உள்ளே சென்றவளுக்கு..பழைய நியாபகங்கள் படையெடுக்க….கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டு சென்றாள்.

அவரது அறைக்கு அழைத்து செல்ல….அங்கே…தயாளனின் இருபுறம் தேவா மற்றும் குணா நிற்கும்..தத்ரூபமாக வரையப்பட்ட புகைப்படமே அவளை வரவேற்றது.

அவள் அந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க….”என்னம்மா அப்படியே நின்னுட்ட….”என்று எதுவும் தெரியாதது போல் கேட்ட தயாளன்…

”ஹோ..இந்த ஓவியமா…? என்ன சொல்லுமா உன் புருஷன மாதிரி வரைய இன்னொருத்தான் பிறந்து தான் வரணும்…அப்படி ஒரு கலைநயம் அவனுக்கு..ஆனா என்ன..?கொஞ்ச காலம் வரையறதை நிறுத்திட்டான்..!” என்று யதார்த்தமாய் சொல்வதைப் போல் சொன்னார்.

“கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் உறுதியானது கீர்த்தனாவிற்கு.”

“ஆனா சும்மா சொல்லக் கூடாதும்மா…! உன் புருஷன் ரொம்பத் திறமையானவன்.எவ்வளவுக்கு திறமைக்காரனோ…அந்த அளவுக்கு தன்னடக்கமும் ஜாஸ்தி.கடைசி வரைக்கும் தான் யாருங்கிறதை வெளிய காட்டிக்கவேயில்லை..” என்றவர்..

“கொஞ்ச நேரம் இங்க வெயிட் பண்ணுமா…! ஒரு சின்ன வேலை இருக்கு…! முடிச்சுட்டு வந்திடுறேன்..!” என்றபடி நகர…

கீர்த்தனாவோ பதில் ஏதும் பேசாத சிலையாய் அமர்ந்திருந்தாள். கேள்விப்பட்ட,பார்த்த விஷயங்களை உள்வாங்கிக் கொள்ள…அவகாசம் தேவைப் பட்டது.

ஏனோ உடனே தேவாவைப் பார்க்க வேண்டும் போல் எண்ணம் தோன்ற….தயாளனிடம் சொல்லாமல் கூட….புறப்பட்டு விட்டாள்.

கதவு திறக்கும் ஓசையில்…நினைவுகளில் இருந்து மீண்டாள்.களைத்துப் போய் வந்தான் தேவா.

வந்தவன் கீர்த்தனாவை பார்ப்பதைத் தவிர்த்து குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள….ஏமாற்றமே மிஞ்சியது கீர்த்தனாவிற்கு.இன்றைக்கு எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு இருந்தாள்.

ஆனால் தேவாவோ…..எதற்கும் அசைந்து கொடுக்காமல்,அவளையும் பாராமல்….மீண்டும் தனது அலுவல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

நேரம் நடு இரவைத் தொட….கீர்த்தனா தூங்கியிருப்பாள் என்று எண்ணியபடி மீண்டும் அறைக்குள் வர…..அவளோ அமர்ந்த இடத்தில் அப்படியே இருந்தாள்.

“இன்னும் தூங்கல..!”என்றான்.

“தூக்கம் வரலை..!” என்றாள்.

“ஹோ…எனக்கு தூக்கம் வருது..!”என்றபடி அவன் நகர…பாய்ந்து அவனது சட்டையை கொத்தாகப் பிடித்தாள்.

“கீர்த்தி என்ன பண்ற விடு…!”என்று அவள் கைகளை விலக்க முயல..

“உங்களுக்கு நான் யாருன்னு தெரியும் தானே…!அப்பறம் ஏன் என்கிட்டே இருந்து மறைச்சிங்க….!” என்றாள் அழுகையுடன்.

“நான் எதையும் மறைக்கலை.அப்படியே சொல்லியிருந்தா மட்டும் என்ன ஆகப் போகுது…?” என்றான் வெடுக்கென்று.

“தேவா..!” என்று அதிர்ந்தாள் கீர்த்தனா.

“ஆமா..! சொல்லியிருந்தா மட்டும் என்ன ஆகப் போகுது..! புருஷனா இல்லாட்டியும் ஒரு மனுஷனாக் கூட என்னை மதிக்காதவளிடம் எதை சொல்லி என்ன ஆகப் போகுது…!” என்றான் காட்டமாய்.

“ஏன் இப்படி பேசுறிங்க தேவா….! நான் அன்றைக்கு எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா..? ஆனா நீங்கதான் வரவேயில்லை…” என்றாள்.

“யாரு நான் வரலையா…? நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேண்டி…..சும்மா இருந்தவனை உசுப்பேத்திவிட்டு…எல்லாம் பண்ணது நீ.

தூரிகான்ற பார்வையில் உன்னை முதன் முதலா பார்த்தப்போ…நான் எப்படி உணர்ந்தேன்னு..வாய் வார்த்தையால் சொல்லிட முடியாது. எவ்வளவு சந்தோஷப்பட்டேன்னு தெரியுமா…?எவ்வளவு யோசிச்சு அந்த கடிதத்தை உனக்கு எழுதினேன்னு தெரியுமா…?” என்றான் வேதனையுடன்.

“தேவா…!” என்று அவள் வாயிலிருந்து காற்று மட்டுமே வர…

சந்திக்கலாம்ன்னு நீ சொன்ன இடத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடியே வந்து காத்திருந்தேன் தெரியுமா உனக்கு..!உன்னைப் பார்த்து உன்னிடம் பேசப் போகும் நிமிடங்களுக்காக தவம் கிடந்தேன்… தெரியுமா உனக்கு..?நீ என்ன பதில் சொல்வாயோ என்று எவ்வளவு எதிர்பார்ப்பில் இருந்தேன் என்று தெரியுமா உனக்கு…!” என்று கோபமாய் இரைந்தவன்..

“ஆனா மேடம் வந்திங்க..! சும்மாயில்லை.ரவியைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம்ன்னு போன்ல பேசிட்டே…!”

அதைக் கேட்டு நான் துடிச்ச துடிப்பு உனக்குத் தெரியுமா…? ம்ம்ம்ம் பெருசா பேச வந்துட்டா…போடி..!” என்றபடி கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்.

கீர்த்தனாவிற்கு தலை சுற்றுவது போல் இருந்தது.அன்று நடந்தது கண் முன் வந்தது…

“என்னடி போகலாமா..?” என்றாள் ஜெனி.

“இதோ கிளம்பிட்டேண்டி..!” என்றபடி கிளம்பி வந்தாள் கீர்த்தனா.

“இன்னைக்காவது உன் உண்மையான பேரை அவன்கிட்ட சொல்லிடுடி..” என்று ஜெனி  சொல்ல…”கண்டிப்பா சொல்லத்தான் போறேண்டி..” என்றபடி கிளம்பினர் இருவரும்..”

அந்த பூங்காவை அடைந்து…அங்கிருந்த பென்ச்சில் இருவரும் அமரவும்…கீர்த்தனாவின் போன் அடிக்கவும் சரியாக இருந்தது.

“ஹலோ..! சொல்லுங்கப்பா..!” என்றாள்.

“என்ன கண்ணு ஊருக்கு எப்பம்மா வர..” என்று செழியன் கேட்க…

“நாளைக்கு கிளம்புறேன் ப்பா…” என்றாள்.

“கீர்த்தனா உன்னைக் கேட்காமல் ஒரு விஷயத்துக்கு சரின்னு சொல்லிட்டேன்…உங்க அத்தை வந்து நம்ம ரவிக்கு உன்னை பொண்ணு கேட்டாக….நானும் சரின்னு வாக்குக் குடுத்துப் புட்டேன்..! இதுல உனக்கு ஏதும் மறுப்பு இல்லையே..!” என்றார்.

கீர்த்தனாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.ஓவியனின் மீது இருப்பது காதலா இல்லை….வெறும் ரசனையா என்ற குழப்பத்தில் இருந்த அவளுக்கு…அந்த நேரத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“கீர்த்தனா..!கண்ணு…!”என்று எதிர்முனையில் செழியன் அழைக்க…”ம்ம்ம்…சரிப்பா…உங்க விருப்பம்…” என்றபடி போனை வைத்தாள்.

“என்னடி உங்க விருப்பம்..!” என்று ஜெனி கேட்க..

“அப்பா எனக்கும் ரவி மாமாக்கும் கல்யாண ஏற்பாடு செய்திருக்கிறாராம்… அதுக்கு தான் சொன்னேன் உங்க விருப்பம்ன்னு..!” என்றாள்.

ஆத்திரம் பொங்கியது ஜெனிக்கு..”நீ என்ன லூசா..? இங்க ஒருத்தனை வர சொல்லிட்டு….அங்க ஒருத்தனை கல்யாணம் செய்ய சம்மதன்னு சொல்ற..?” என்ற கோபமாய்.

காரணமில்லாமல் கோபம் வந்தது கீர்த்தனாவிற்கு….”புரியாம பேசாத ஜெனி…நான் ஒன்னும் காதலை சொல்ல வர சொல்லலை.உங்க மேல அப்படிப்பட்ட அபிப்ராயம் எனக்கு இல்லை என்பதை சொல்லத்தான் வர சொல்லியிருக்கிறேன்..!” என்றாள் பட்டென்று.

இதைக் கேட்ட ஜெனி ஒருபுறம் அதிர்ந்தாள் என்றாள்….அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருந்த தேவா வெகுவாய் அதிர்ந்தான்.

“நீ என்னடி சொல்ற..?” என்றாள் ஜெனி.

“உண்மையைத் தான் சொல்றேன்..!” என்ற கீர்த்தனா (தூரிகா),சுற்றும் முற்றும் பார்க்க…அவன் வரவில்லை.

“எனக்கென்னமோ அவன் வருவான்னு தோணலை…!கிளம்பலாம் வாடி..!” என்றாள் கீர்த்தி.

இருடி…இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம்…என்று ஜெனி சொல்ல சொல்ல…அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

தான் யார் என்பதை காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்த தேவா இதையெல்லாம் கேட்டு சுக்கு நூறாய் உடைந்தான்.ஆத்திரம் கண்ணை மறைக்க…ஓங்கி தரையை காலால் உதைத்தவன்…..வேகமாய் தனது செல்போனை எடுத்தான்.

தன் முகத்திற்கு முன்னால் கேட்ட சொடக்கு சத்தத்தில் நிஜத்திற்கு வந்தாள்.

“என்ன பழசெல்லாம் படம் படமா ஓடுமே…!” என்றான் நக்கலாய்.

“தேவா….நான் அன்னைக்கு இருந்த சூழ்நிலையில்…” என்று முடிப்பதற்குள்…

”போதும் கீர்த்தி….எது எப்படி போனாலும் விதி உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்தது.இருந்தும் என்ன பயன்….?ஒரு கணவனா இருந்து கூட உன் மனசில் என்னால் இடம் பிடிக்க முடியலை…!” என்று கரகரத்த குரலில் சொல்ல…

“இல்லை தேவா…என் மனசுல நீங்க மட்டும் தான் இருக்கீங்க…!” என்று கீர்த்தனா கதற…

“எப்ப இருந்து…?” என்று நக்கலாய் கேட்டான்.

“எப்ப இருந்து…….எப்ப இருந்துன்னு எல்லாம் என்னால சொல்ல முடியலை…ஆனா அப்பவும்,இப்பவும்,எப்பவும் நீங்கதான் இருக்கீங்க…!” என்று சொல்ல…

“போதும்டி…உன்னை நம்பி நம்பி நான் பட்டதெல்லாம்…!இனியாவது என்னை நிம்மதியா விடு….!நீ என்னை விட்டு எப்ப போறியோ…அப்பத்தான் எனக்கு நிம்மதி…!” என்று கோபத்தில் வார்த்தையை விட….சிலையானாள் கீர்த்தனா.

ஆனால் அதெல்லாம் கண்டு கொள்ளாது உறக்கத்திற்கு சென்றான் தேவா.

ஆனால் கீர்த்தனாவிற்கு அவன் மேல் கோபமே வரவில்லை.”மவனே விடியட்டும்..உனக்கு இருக்கு கச்சேரி..!” என்று சபதம் எடுத்தவள்…அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தாள்.

சூரிய வெளிச்சம் அறைக்குள் பரவ….வெகு நேரம் கழித்து உறங்கியதால்….அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

“தேவா..தேவா…!” என்று எழுப்பினாள் கீர்த்தனா.

காலையிலேயே குளித்து முடித்து…இளம் மஞ்சள் நிற சேலையில்….தன்னை வந்து எழுப்பியவளை…பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு.

இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாது…”என்ன…?எதுக்காக காலங்காத்தால உசுர வாங்குற..!” என்று எரிந்து விழுந்தான்.

ஒரு நிமிடம் கீர்த்தனாவின் முகம் சுருங்கியது.அடுத்த நிமிடமே சரி செய்து கொண்டாள்.

“டேய்..! மரியாதையா எழுந்திடு..! கொஞ்சம் கீழ இறங்கி வந்தா ரொம்பத்தான் அலட்டிக்கிற…!” என்று ஏக வசனத்தில் பேச…

“என்னது டாவா..!” என்று தேவா அதிர..

“ஆமாண்டா..! அப்படித்தாண்டா…!சொல்லுவேண்டா..!” என்று வார்த்தைக்கொரு டா போட்டாள்.

“ஏய்…!உனக்கு கொஞ்சம் கூட வெட்கமேயில்லையா…?” என்று தேவா கத்த…

“வெட்கமா…எந்த கடையில விக்குது…வாங்கித் தரிங்களா….?” என்று இடக்காய் கேட்டாள்.

“எனக்கு உன்னைக் கண்டாலே வெறுப்பா இருக்கு..!” என்று முகத்தை திருப்பினான்.

அவனை வேகமாய் கீழே தள்ளியவள்….அந்த மெத்தையில் இருந்த பெட்ஷீட்டை உருவினாள்.

”இதைப் பார்த்தா வெறுப்பா இருக்கிற மாதிரித் தெரியலையே…! விருப்பமா இருக்குற மாதிரி தான் தெரியுது…என்ன மாமா..!” என்றாள்.

அங்கே அவளை முதன் முதலில் எந்த சுடிதாரில் பார்த்தானோ…அதை அப்படியே உயிரோவியமாய் வரைந்திருந்தான்.கண்ணாடி கூட அவளை இவ்வளவு அழகாய் காட்டியிருக்குமோ என்னவோ..? அவ்வளவு அழகாய் இருந்தாள்.

“இதையெல்லாம் உன்னை யார் பார்க்க சொன்னது…?” எரிந்து விழுந்தவன்…”அதென்ன புதுசா மாமா..?” என்றான்.

“எங்க ஊர்ல புருஷனை… எல்லாரும் அன்பா… மாமான்னு தான் கூப்பிடுவாங்க..!” என்றாள் விரலால் கோலம் போட்டபடி.

அவள் நின்ற கோலத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனுக்கு.”ஐயோ…!நேரம் காலம் தெரியாம மனுஷனை உசுப்பேத்திக் கொல்றாளே..!” என்று மனதிற்குள் உரைத்தவன்….

“இப்ப வழிய விட்டா….நான் போய் என் வேலையைப் பார்ப்பேன்…!” என்றான்.

“விலகி தான் நிக்குறேன்…”என்றபடி அவனை மேலும் அண்டி நிற்க…சட்டென்று அவளை மெத்தையில் தள்ளிவிட்டவன்…அங்கிருந்து சென்றான்.

அங்கிருந்து சென்றவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.”வாலு…ஊமை மாதிரி இருந்துகிட்டு ஏன்னா பேச்சு பேசுறா…?” என்று தனக்குத் தானே மானசீகமாய் பேசிக் கொண்டான்.

குளித்து முடித்து கீழே வர…”சாப்பிட வாங்க..!” என்றாள் அன்பாய்.

“இந்த உலகம் தலைகீழாக சுத்துதோ…”என்ற சந்தேகம் தேவாவிற்கு தோன்றியது.

பத்மாவும் காலையில் இருந்து கீர்த்தனாவை கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.எப்பொழுதும் இல்லாத மலர்ச்சி அவள் முகத்தில் தெரிந்ததைப் பார்த்து உவகை கொண்டார்.

மனைவியின் கைப் பக்குவத்தில்…சமையல் தேனாய் இனித்தது.ஆனால் வெளியில் சொல்லாமல் அமைதியாய் சாப்பிட்டான் தேவா.

அவன் ஏதாவது சொல்லுவான் என்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஹாலில் அமர்ந்தவனை நோக்கி வந்தார் மாறன்.”என்னை மன்னிச்சிடு தேவா…!” என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர் கேட்க…

ஒரு நிமிடம் அனைவரும் அதிர்ந்தனர்.பத்மா செய்வதறியாது திகைக்க…கார்த்திகா பேந்த பேந்த விழிக்க….தேவாவும் இதை எதிர்பார்க்கவில்லை.

“சண்முகம் இப்படி செய்வான்னு எதிர்பார்க்கலை.இந்த சொத்தை என் பேருக்கு மாத்தணும்…எல்லாம் என் கைப்பிடிக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்தேனே தவிர….உன்னைக் கொலை செய்து தான் அடையனும்ன்னு நான் நினைச்சது இல்லை தேவா…!” என்று கலங்க…

“உனக்கு அந்த ஆக்சிடென்ட் நடந்தப்ப கூட…உனக்கு நினைவு வரக் கூடாதுன்னு வேண்டிகிட்டேனே தவிர…நீ சாகனும்ன்னு நினைக்கலை.நினைவு வந்தா எங்க விலகிப் போய்டுவியோன்னு பயந்தேனே தவிர…வேற எந்த எண்ணமும் எனக்கு வந்ததில்லை..”என்றார்.

“இதில் உங்க தப்பு எதுவுமில்லைன்னு எனக்குத் தெரியும்..! நடந்த எல்லாத்துக்கும் சண்முகம் அங்கிள் தான் காரணம்ன்னும் எனக்குத் தெரியும்..!

என்னைக் கொல்லணும்ன்னு நீங்க நினைச்சிருந்தா அதை உங்களால் எப்பவோ செய்திருக்க முடியும்..! நான் சின்ன பையனா இருந்தப்பவே நீங்க செய்திருக்கலாம்…உங்க குறிக்கோள் சொத்து மட்டும் தான்…அதுவும் எனக்கும் நல்லா தெரியும்..!சோ..எதைப் பத்தியும் கவலைப் படாம இருங்க..” என்று சொன்னவன்…

பேயறைந்தது போல் நின்றிருந்த பத்மாவிடம்….”அவரை சமாதனப் படுத்துங்கம்மா..!வயசான காலத்தில் ரொம்ப உணர்ச்சி வசப்படுறது உடம்புக்கு நல்லதில்லை..” என்றான் அக்கறையாய்.

“இனியாவது சொல்வார் பேச்சைக் கேட்டு ஆடாமல் உங்க சொந்த புத்தியில் இருக்கப் பாருங்க..!” என்று மாறனைப் பார்த்து சொன்னவன்….மேலே சென்று விட்டான்.

பத்மாவிற்கோ…நடந்த அனைத்தும் மறந்து…வெகு நாட்களுக்கு அப்பறம்..தேவா “அம்மா” என்று சொன்னதில் சந்தோஷமாய் இருந்தார்.

“பார்த்திங்களா..!இப்பக் கூட அவனுக்கு உங்க மேல கோபம் இல்லை.இனியாவது சொத்து சொத்துன்னு அலையாம…ஒழுங்கா இருக்குற வழிய பாருங்க..!” என்று பத்மா சொல்ல…”உண்மைதான்..” என்று ஒப்புக் கொண்டார் மாறன்.

நடந்த எதுவும் கீர்த்திக்கு தெரியாமல் இருந்தாலும்…ஏதோ புரிவதைப் போல் இருந்தது.இருந்தாலும் தெளிவாகத் தெரியவில்லை.அவன் பின்னாலேயே சென்றவள்..பட்டென்று கதவை அடைத்தாள்.

அந்த சத்தத்தில் திரும்பியவன்..”என்ன..?” என்றான்.

“எங்க கிளம்பிட்டிங்க..?” என்றாள்.

“ம்ம் பார்த்தா எப்படித் தெரியுது…ஆபீஸ்க்கு போக வேண்டாம்…!” என்றான்.

“போக வேண்டாம்..!” என்றாள் பிடிவாதமாய்.

“ஏய்..! என்னடி கொழுப்பா..!உன் இஷ்டத்துக்கு ஆட என்னால முடியாது…போடி..” என்று கடுப்பாக…

“எனக்கு பதில் சொல்லாம..நீங்க இங்க இருந்து ஒரு அடி கூட விலக முடியாது..!” என்றாள்.

“உனக்கு என்னதான் தெரிஞ்சு தொலையனும்..!” என்றான்.

“உங்களை எப்போ கொலை பண்ண டிரைப் பண்ணாங்க…என்ன ஆக்சிடன்ட்..எப்ப நடந்தது…ஒன்னும் புரியலை..மாமா ஏன் இவ்ளோ கவலைப் படுறார்..?” என்றாள்.

“இதென்ன கேள்வி நேரமா..? வரிசையா கேள்வியா கேட்டுக் கொல்ற..?” என்றான் எரிச்சலுடன்.

“ப்ளீஸ் தேவா…இவ்வளவு செய்த உங்க அப்பாவையே ஈசியா மன்னிச்சு ஏத்துக்கிறிங்க..! ஆனா என்னை மட்டும் ஏன் அவாய்ட் பண்றிங்க..! நான் தான் சாரி கேட்டுட்டேன்ல…” என்றாள் வேதனையுடன்.

அவள் வேதனையுருவதைப் பார்க்க முடியாமல் முகத்தை வேறு பக்கமாய் திருப்பிக் கொண்டான்.

கீர்த்தனாவோ…தன்னைப் பார்க்க பிடிக்காமல் தான் முகத்தை திருப்பிக் கொள்கிறான் என்று தவறாய் கணித்தாள்.

“சொல்ல விருப்பம் இல்லைன்னா வேண்டாம்…” என்று அவள் செல்ல எத்தனிக்க….

“உனக்கு விபத்து நடந்த அதே நாள்ல தான் எனக்கும் நடந்தது…” என்றான்.

“அப்போ அன்னைக்கு என்னை காப்பாற்றியது..?” என்று அவள் எதிர்பார்ப்புடன் கேட்க…

“நான் தான்..” என்றான் தேவா.அவன் சொல்லி முடிக்க..அவனை பின்னால் இருந்து அணைத்தாள்.

அவளின் கண்ணீர்..தேவாவின் முதுகுப் பகுதி சட்டையை நனைக்க….தேவாவின் உடல் இரும்பாய் இறுகியது.

“வேண்டாம் தேவா…இதுக்கு மேல நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்…!” என்று அழுக…

“இல்லை முழுசா கேட்டுடு…உன் வாழ்க்கையை கெடுத்த பாவி நான்தான்னு சொன்னல்ல….அதனால் முழுசா சொல்றேன் நல்லா கேட்டுக்கோ…” என்றான்.

“அன்றைக்கு நீ பார்க்குல பேசினதைக் கேட்ட எனக்கு என்ன செய்றதுன்னு புரியலை.உங்களுக்கு பின்னாடி இருந்த மரத்தடியில் தான் நான் உட்கார்ந்திருந்தேன்.

நீ பேசியதை கேட்டதுக்கு அப்பறமும் உன் முன்னால் வர எனக்கு விருப்பமில்லை.என் முகத்துக்கு நேராக நீ சொல்ல வந்த விஷயத்தைக் கேட்கவும் எனக்கு திராணியில்லை..

அமைதியா அங்க இருந்து கிளம்பலாம்ன்னு தான் நினைச்சேன்… இருந்தாலும் எனக்குள்ள ஒரு வேகம்..ஒரு ஆத்திரம்.எப்படியும் உன்னை அடைஞ்சே தீரனும்ன்னு முடிவு பண்ணேன்.

நீ எப்படியும் ஊருக்கு போகும் முன்ன..உன் கழுத்தில் தாலியைக் கட்டி…என் மனைவியாக்கனும்ன்னு நினைச்சேன்..

என்னோட ஆள் ஒருத்தனை உங்களை பாலோ பண்ண சொன்னேன். அவனும் பாலோ செய்தான்.மறுநாள் காலையில் நீ ஊருக்கு கிளம்புவதாக எனக்கு தகவல் வந்தது.

என்ன பண்றதுன்னு புரியாம இருந்த எனக்கு..ஆத்திரம் கண்ணை மறைத்தது.உன்னை எப்படியும் தடுக்கனும்ன்னு கிளம்பினேன்.அப்பத்தான் அம்மாவோட தாலி என் கண்ணில் பட்டது.உன்னைப் பார்க்க புறப்பட்டேன்.

அன்று காலையில் இருந்தே கீர்த்தனாவிற்கு மனசே சரியில்லை.எதையோ தொலைத்த உணர்வு….எதில் இருந்தோ தூரப் போகும் உணர்வு…!

மனதிற்குள் ஏதோ ஒரு உணர்வு பிசைந்தது.யாரையோ பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது.

அவள் புகைப்படம் ஓவியமாய் வெளியான புத்தகம், அவளைப் பார்த்து சிரிப்பதைப் போல் இருந்தது.அவனைப் பார்க்க வேண்டும் என்று உடம்பின் ஒவ்வொரு அணுவும் துடித்தது.

கடைசி வரை அவனைப் பார்க்காமலே செல்வது…ஏதோ வாழ்க்கையை தொலைத்தது போன்ற உணர்வு அவளுள்.

“அப்ப நான் கிளம்புறேன் ஜெனி..! நீயும் பத்திரமா போ..!போயிட்டு எனக்கு கால் பண்ணு..!” என்று கண் கலங்கியவள்….தனது பேக்குடன் கிளம்பினாள்.

“கீர்த்தி…இன்னொருமுறை நல்லா யோசிடி..” என்று ஜெனி சொல்ல…”யோசிக்க ஒன்னுமில்லைடி..” என்றபடி புறப்பட்டாள்.

வாய் தான் ஒன்றுமில்லை என்று சொன்னதே தவிர…மனம் ஆயிரம் சங்கதிகள் சொன்னது.அவளுக்குள் இருந்த காதல்…அவள் அறிந்து கொள்ள அச்சப்பட்ட காதல்….அவள் உத்தரவையும் மீறி வெளி வந்து கொண்டிருந்தது.

கீர்த்தனாவின் ஒவ்வொரு செய்கையும்…தகவலாய் தேவாவிற்கு போய்க் கொண்டிருந்தது.

வேகமாய் கிளம்பி சென்று கொண்டிருந்தவனின்  கார்…திடீரென்று மக்கர்  செய்ய …நகர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது.”ஷிட்…” என்றபடி காரை விட்டு இறங்கியவன்… சிறிது  நேரம் யோசனையுடன் நிற்க…

அவனை உரசியபடி வந்து நின்றது அந்த கார்.

“ஹேய் தேவா இங்க என்ன பண்ற..?” என்றாள் சிந்து.

“கார் ஸ்டார்ட் ஆகலை….கொஞ்சம் அர்ஜென்ட்…என்னை காந்திபுரத்துல டிராப் பண்ண முடியுமா..?” என்றான்.

“இதெல்லாம் கேட்கணுமா…கமான் தேவா..!” என்று சிந்து சொல்ல..வேகமாய் ஏறிக் கொண்டான்.

“கொஞ்சம் ஸ்பீடா போ…” என்றான்.

“அப்படி என்ன அவசரம்..? ரொம்ப முக்கியமான விஷயமா..?” என்றாள்.

“ரொம்ப முக்கியம்…” என்றான்.

“என்னடா லவ்வர பார்க்க போற ரேஞ்சுக்கு பில்டப் தர…” என்றாள்.

“ஆமா…அதுக்குத்தான்..” என்றான்.

காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினாள் சிந்து.”அடப்பாவி…உனக்கு லவ்வரா…அதுவும் எனக்குத் தெரியாமா..அன்னைக்கு நீ போய் சொல்றன்னு இல்ல நினைச்சேன்..?” என்று நேரம் காலம் தெரியாமல் அவள் கேள்வி கேட்க…

“ஐயோ சிந்து..உன் கேள்விக்கெல்லாம் அப்பறம் பதில் சொல்றேன்.. முதல்ல நீ காரை எடு…” என்று அவன் கெஞ்ச…ஒன்றும் புரியாவிட்டாலும் அவனுக்கு உதவி செய்தாள் சிந்து.

ஆனால் மனதின் ஓரத்தில் வலிக்கத்தான் செய்தது.முன்பு ஒரு முறை சொல்லி இருக்கிறான்…ஆனால் தன்னை மறுக்க பொய் சொல்கிறான் என்று நினைத்தாள்.

ஜெனியிடம்…. தன் மனதில் அவன் இல்லை என்று சொல்லிவிட்டாலும்… ஏதோ ஒரு வகையில் கீர்த்தனாவின் மனது பாரமாயிருந்தது.

“ஏன் எனக்கு இப்படி இருக்கு..!ஊருக்கு செல்ல வேண்டிய நேரம் அருகில் வர வர..அவள் மனதின் கணம் கூடிக் கொண்டே போனது.

ஆட்டோவை விட்டு இறங்கியவள்…தன்னிலை மறந்து செல்ல…ஆட்டோ டிரைவர் அழைத்து அவளது பேக்கை எடுத்துக் கொடுத்தார்.

அவள் இறங்கி செல்வதை தூரத்தில் வரும் போதே தேவா கவனித்து விட்டான்.

அதோ..அங்க..அவதான் சிந்து…சீக்கிரம் போ..” என்று சொல்ல…

குழப்பத்துடனும்,தேவாவைப் பற்றிய நினைவுடனும்…சாலையை கிராஸ் செய்தவள்….எதிர்புறத்தில் இருந்து வந்த கார்…ஹாரன் அடித்துக் கொண்டே வர….அவள் காதில் விழவேயில்லை.எவ்வளவு சடன் பிரேக் போட முயன்றும் முடியாமல் அவள் மேல் மோதி விட்டிருந்தது.

அதை நேருக்கு நேர் பார்த்த தேவா….”தூரிகாகாகா….” என்று அந்த இடமே அதிரும்படி கத்தினான்.

சிந்துவுக்கும் நேருக்கு நேர் பார்த்த அந்த விபத்தால் அதிர்ச்சி.ரத்த வெள்ளத்தில் கிடந்தவளை பாய்ந்து சென்று தூக்கினான் தேவா.

“தூரிகா…தூரிகா..இங்க பாரு..கண்ணைத் திற…” என்று கதற…ஆண்மகன் என்பதையும் மீறி அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அவளுக்கு மூச்சு இருப்பதை அறிந்தவன்…”சிந்து காரை எடு…சீக்கிரம்…” என்றவன்…அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

“தூரிகா…கண்ணைத் திற…இங்க பாரு…என்னைப் பாருடி..உனக்கு ஒன்னும் ஆகாது…நான் இருக்கேண்டி..” என்று புலம்ப…சிந்துவுக்கும் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

மருத்துவமனை செல்லும் வரை…தேவாவின் புலம்பல் நிற்கவில்லை.கொஞ்சம் நஞ்சம் இருந்த நினைவில் அவன் நிழல் உருவமாய் அவளுக்குத் தெரிந்தான்.

அவனுடைய வார்த்தைகள்….ஏதோ கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போல் இருந்தது அவளுக்கு.

“பிளட் ரொம்ப லாஸ் ஆகிருக்கு…உடனடியா பிளட் தேவை..” என்று டாக்டர் சொல்ல…அவளது பிளட் குருப்பும் சிந்துவின் குருப்பும் ஒன்றாய் இருக்க…சிந்துவே அவளுக்கு ரத்தம் கொடுத்தாள்.

“தேங்க்ஸ் சிந்து..உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை…” என்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான் தேவா.

அவனது தவிப்பைப் பார்த்தவளுக்கு புரிந்தது….அவள் இல்லாமல் அவன் இல்லையென்று.அந்த நிமிடம் தனது மனதை மாற்றிக் கொண்டாள்.

நான்கு மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த டாக்டர்….”சாரி சார்…அவங்க பிழைக்கிறது ரொம்ப கஷ்ட்டம்..அடி பலமா இல்லைன்னாலும்…அவங்க கண் திறக்கலை…இருபத்திநான்கு மணி நேரம் கழித்து தான் எதையும் சொல்ல முடியும்…” என்று சொல்ல….உலகமே இருண்டதாய் தெரிந்தது அவனுக்கு.

மெல்ல அவளின் அருகில் சென்றவன்…அவள் உருவத்தை கண்களில் நிரப்பிக் கொண்டான்.நினைவு வந்தவனாய் தனது பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்தவன்…அவளது கழுத்தில் அணிவித்தான்.

“இப்ப தாலியை மட்டும் தான் கட்டிருக்கேண்டி…சீக்கிரம்…என் மனைவியா நீ பிழைச்சு வருவ..!” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அவனின் காதலைப் பார்த்து சிந்துவுக்கு பெருமையாக இருந்தது.

“இந்த மருந்தெல்லாம் வாங்கிட்டு வாங்க சார்..!” என்று நர்ஸ் சொல்ல…அதை வாங்கிக் கொண்டான்.

“நான் வாங்கிட்டு வந்திடுறேன்….நீ இரு சிந்து..” என்று சொல்லிவிட்டு சென்றான்.

சிறிது நேரத்தில் சிந்து பாத்ரூம் செல்ல….

கீர்த்தனாவை செக் பண்ண வந்த சீனியர் நர்ஸ்…அவளது கழுத்தில் தாலி இருப்பது பார்த்து….”நர்ஸ்..இங்க வாங்க…ஐசியுஉள்ள இருக்குற பேஷன்ட் பாடில எந்த நகையும் இருக்க கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாது…!” என்று சத்தமிட்டார்.

“இல்லை மேம்…நாங்க எல்லாத்தையும் ரிமூவ் பண்ணிட்டோம்…!” என்று நர்ஸ் சொல்ல…

“தாலியை ஏன் ரிமூவ் பண்ணலை..?” என்று கேட்க…

”இல்லை மேம் அப்ப தாலி இல்லை…” என்று அந்த நர்ஸ் சந்தேகமாய் சொல்ல….

“நீங்க அஜாக்கிரதையாய் இருந்துட்டு….பொய் வேறயா….ம்ம்ம்…இதை ரிமூவ் பண்ணி அவங்க ரிலேஷன்ஸ் கிட்ட குடுங்க..!” என்று உத்தரவிட்டு சென்றார்.

தன் மகளை திருமணம் செய்து கொள்ள தேவா மறுத்த காரணத்தினால்…. தன் அத்தனை கனவிலும் மண் விழுந்ததாக நினைத்தார் சண்முகம்.

பணவெறி அவரது மூளையை செயலிழக்க செய்ய…தேவாவை கொன்று விட்டால்.., தன் அத்தனை ஆசையும் நிறைவேறும் என்று நம்பினார்.அதற்கான ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்திருந்தார்.

மருந்துகளை வாங்கிக் கொண்டு தேவா திரும்பவும்….மருத்துவமனையில் நர்ஸ் கீர்த்தனாவின் கழுத்தில் இருந்து தாலியைக் கழட்டவும்…வேகமாய் வந்த தண்ணீர் லாரி தேவாவின் மீது மோதவும் சரியாய் இருந்தது.

மோதிய வேகத்தில் துண்டாய் தூக்கி எறியப்பட்டான் தேவா.”தூரிகா…..” என்ற அவனது கடைசி வார்த்தை ஒலிக்க….அங்கே கீர்த்தனாவின் உடலில் அதிர்வு தோன்றி மறைந்தது.

தேவாவின் விபத்து காட்டுத் தீயாய் பரவ….அதைக் கேள்விப் பட்ட சிந்துவும் கீர்த்தனாவை மறந்து தேவாவைப் பார்க்க ஓடினாள்.அன்றைய நாள் இருவருக்கும் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

நடந்ததை தேவா சொல்ல சொல்ல…கீர்த்தனாவின் உடல் நடுங்க ஆரம்பித்தது.தன்னைக் கட்டிக் கொண்டிருந்தவளின் உடல் நடுக்கத்தை உணர்ந்த தேவா…

“ஹேய் கீர்த்தனா…! என்னாச்சு..! இங்க பாரு..!” என்று தட்ட….விட்டால் ஓடிவிடுவான் என்பதைப் போல இறுக அணைத்துக் கொண்டாள்.

“எனக்கு ஒன்னும் ஆகலை…ரிலாக்ஸ்…” என்றான்.

“தாலியைக் கட்டிட்டு எங்கடா போனன்னு…அன்னைக்கு என் சட்டையைப் பிடித்து கேட்டல்ல….இது தான் நடந்தது..”

தலையில் அடி பலமா இருந்ததால நான் பிழைச்சு வந்ததே பெரிய விஷயம்.நினைவுகள் தப்பி..கோமாவுக்கு போய்…என்னை யாருன்னு எனக்கே தெரியாம…ஆஸ்திரேலியால போய் எனக்குன்னு ஒரு வட்டத்தை நான் போட்டுகிட்டேன்.

எனக்கு என்னையே தெரியாத ஒரு நிலையில் தான்…உன்னை பெண்பார்க்க கூட்டிட்டு வந்தாங்க..! என்னமோ தெரில..உன்னை பார்த்த உடன் மனசுக்குள் ஒரு வலி…ஒரு ஈர்ப்பு இப்படி எல்லாமே கலந்த ஒரு மனநிலை.

அதான் நீ மறுத்தும்…நான் பிடிவாதமாய் கல்யாணம் பண்ணிகிட்டேன்.

ஆனா எனக்கு பழைய நினைவுகள் திரும்ப கொஞ்சம் கொஞ்சம் வந்ததுக்கு காரணம்….நீ உன் அறையில் மாட்டி வைத்திருந்த என்னோட ஓவியங்கள்…அப்பறம் பார்த்த விஷயங்கள்…பழகிய மனிதர்கள் அப்படின்னு நிறைய…

நினைவு வந்து உன்னை என் மனைவியா  பார்த்தப்போ….விதி மேலயும்,என் காதல் மேலயும் எனக்கு அப்ப நம்பிக்கை வந்தது.

நான் யாருன்னு சொல்லாமலேயே உன் அபிப்பிராயத்தை  பெறனும்ன்னு நினைச்சேன்..ஆனா அது மட்டும் கடைசி வரைக்கும் நடக்கவேயில்லை..” என்றான் விரக்தியாய்.

“தேவா…” என்றாள் கீர்த்தனா.

“ப்ளீஸ் கீர்த்தி…போதும்..!ஏற்கனவே நான் ரொம்ப பட்டுட்டேன்..!இனி எதையும் தாங்குற மனநிலையில் நான் இல்லை.இப்ப எனக்கு எதிர்பார்ப்புகளே இல்லை.அதனால் ஏமாற்றமும் இல்லை…இந்த வாழ்க்கை முறைக்கு நான் பழகிட்டேன்…”

இந்த தாலி அன்னைக்கு உனக்கு ஒரு பிரச்சனையா இல்லாம இருந்திருந்தா…இந்நேரம் நீ ரவியோட மனைவியா இருந்திருப்பா…உன் ஆசையும் நிறைவேறியிருக்கும்…! என்றான்

அவனின் வார்த்தைகளின் வீரியம் தாங்காமல் துடித்தாள் கீர்த்தனா. 

“ப்ளீஸ் தேவா…திரும்ப திரும்ப அப்படி சொல்லாதிங்க…! நான் அன்னைக்கு என்ன மன….” என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்தவள் அங்கு தேவா இல்லாததைக் கண்டு திகைத்தாள்.

தன் மடிக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டவள் ஆற்றுவார்…தேற்றுவார் இன்றி அழ ஆரம்பித்தாள்.  பிறகு ஒரு முடிவு எடுத்தவளாய்….ஒரு பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.

“அன்றைக்கு எனக்கு நடந்த விபத்திற்கு காரணமே நீங்கள் தான்.கடைசி நேர புரிதல்,ஞான உதயம்…இறுதி வினாடியில் உணர்ந்த காதல்….உங்களை நினைத்துக் கொண்டே சென்றதால் தான் விபத்தே ஏற்பட்டது.

இதை சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை.இனி என்னால் உங்கள் வாழ்க்கைக்கு எந்த தொந்தரவும் இருக்காது.விரும்பிய வாழ்வை அமைத்துக் கொள்ளவும்..!” என்று எழுதியவள்…அதை அவன் கண்ணில் படும் விதமாக வைத்தாள்.

கீழே வந்தவளைப் பார்த்து…”எங்கம்மா கிளம்பிட்ட..?” என்றார் பத்மா.

“ஊருக்கு அத்தை..” என்றாள்.

எப்பொழுது நக்கலாய் பேசும் கார்த்திகா கூட…அவளது முகத்தில் தென்பட்ட வேதனை கண்டு அமைதி காத்தாள்.

“சரிம்மா…போய்ட்டு வா..” என்று சொல்ல…கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது கீர்த்தனாவிற்கு.

விருப்பாச்சி கிராமம் …..

திடீரென்று வந்து நிற்கும் மகளை கண்டு அதிர்ச்சியடைவார்கள் என்று நினைக்க…”வாம்மா கீர்த்தனா…” என்று செழியன் எப்போதும் போல் இருந்தார்.

உன்னை அனுப்பிட்டு நாங்களும் யோசனை செய்து பார்த்தோம்… பிடிக்காத வாழ்க்கையை நீ வாழணும்ன்னு எந்த கட்டாயமும் இல்லம்மா…இனி உன் விருப்பம் போல் இருக்கலாம்..!” என்று பேச்சை முடித்துக் கொண்டு சென்று விட்டார்.

“அம்மா..” என்று கலையைப் பார்க்க…”இதில் நான் சொல்ல என்ன இருக்கு..” என்பதைப் போல் சமையலறைக்குள் சென்று விட்டார்.

எல்லோரும் தன்னை விட்டு தூர சென்று விட்டதைப் போல் உணர்ந்தாள்.அழுகையுடன் சென்று தன் அறைக்கதவை திறக்க…ஒய்யாரமாய் படுத்திருந்தான் தேவா.

கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள்.

“ஹாய் பொண்டாட்டி…எத்தனை தடவை பார்த்தாலும் நான் தான் இருப்பேன்..” என்றான் கிண்டலாய்.

“நீங்க எப்படி இங்க…எப்ப…” என்று திணற…..

நீ பஸ்ல வந்த நேரத்துக்கு….நான் கார்ல வந்துட்டேன்..என்றான்.

“ஆனா…கார் இல்லையே வீட்டு முன்னால…!” என்றாள் சந்தேகமாய்.

“கார் அங்கதான் இருக்கு…நீதான் கவனிக்கலை…அது ஒண்ணுமில்லை செல்லக் குட்டி…நீ மாமன் நினப்புலயே வந்தாயா…அதான் வேற எதுவும் உனக்கு கண்ணுக்குத் தெரியலை…”என்றான் உல்லாசமாய்.

அதுவரைத் தேக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம்….வெளியே வரத் துவங்க….கையில் கிடைத்தை எல்லாம் எடுத்து எறியத் துவங்கினாள்.

“நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு…..பீல் பண்ணி வரேன்…ஆனா நீங்க…நல்லா கூலா இங்க வந்து இருக்கிங்க…!” என்று கத்திக் கொண்டே எறிய…

“ஏய்…வேணாம்டி…நிறுத்துடி…” என்று கத்திக் கொண்டே வந்தவன்…அவளைத் தடுக்க…விடாமல் எறிந்து கொண்டே இருந்தாள்.

சட்டென்று அவளை இழுத்து அணைத்தான் தேவா.அவளின் எதிர்ப்பு சில நிமிடங்களில் காணாமல் போக….அவனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“நீ என்னடி எப்பப் பார்த்தாலும் அழுது அழுது என் மூடயே ஸ்பாயில் பண்ற…” என்று அவன் கிண்டலடிக்க….

“நான் எவ்வளவு பயந்து போயிட்டேன்னு தெரியுமா…?” என்றாள் குழந்தையாய்.

“தெரியும்..!இந்த முட்டைக் கண்ணை முழிச்சு முழிச்சுப் பார்க்கும் போதே எனக்குத் தெரியும்..!” என்றான் அவளின் மூக்கை ஆட்டியபடி.

“அப்பறம் ஏன் அப்படி பேசுனிங்க..!” என்று கோபிக்க…

“நீ மட்டும் என்னை என்ன பாடு படுத்துன…? அதன் கொஞ்சம் விளையாடிப் பார்த்தேன்..!” என்றான்.

“இதை நம்ம வீட்லயே சொல்லியிருக்க வேண்டியது தான…” என்றாள்.

“அங்கயே சொல்லியிருந்தா இந்த எபெக்ட் இருந்திருக்குமா…? அதுமட்டுமில்லாம…” என்று நிறுத்தினான்.

“அதுமட்டுமில்லாம..!” என்று எடுத்துக் கொடுத்தாள் கீர்த்தனா.

“அது வந்து செல்லக் குட்டி…ரெண்டு தடவை கல்யாணம் பண்ணியிருக்கேன்…அனா பாரேன் ஒரு தடவைக் கூட பர்ஸ்ட் நைட் நடக்கலை….அதான் எல்லாத்தையும் முறைப்படி ஆரம்பிக்கனும்ன்னு இங்க கிளம்பி வந்துட்டேன்…” என்றான் கண்ணடித்தபடி.

“ஐயோ..ஐயோ..!” என்று அவள் தலையில் அடிக்க…

“அப்படி இல்ல..இப்படி ..” என்று அவளை அணைத்தவன் இதழ்களால் ஊர்வலம் நடத்தத் தொடங்கினான்.

இருவரும் தன்னை மறக்க…தேவாவின் போன் அடித்தது.சட்டென்று விலகினாள் கீர்த்தனா.

“யாரு இது…நேரங்காலம் தெரியாமல்…?” என்று கடுப்புடன் போனை எடுத்தவன்…எதிர்முனையில் குணாவின் குரலைக் கேட்டு….ஏகத்துக்கும் கடுப்பானான்.

“மச்சி…அந்த பைலை சென்ட் பண்ணனுமா…இல்லை டிராப் பண்ணனுமா…?” என்றான்.

“ம்ம்ம்…நீ முதல்ல போனை கட் பண்ணுடா….” என்றவன்…அவனை எதிர்பார்க்காமல் தானே கட் செய்தான்.

“இவன் ஒருத்தன்…நேரம் காலம் தெரியாம..!” என்று முனக…அவனின் எரிச்சலைப் பார்த்து வாய் விட்டு சிரித்தாள் கீர்த்தனா.

அவள் சிரிப்பதை ஆசையுடன் பார்த்தவன்….”ரொம்ப அழகாயிருக்கடி….அதுவும் காலையில அந்த மஞ்சள் நிற சேலையில்… ம்ம்ம் சும்மா சொல்லக் கூடாது…செம்ம பிகரா இருந்த..” என்று கண்ணடிக்க…

“அடப்பாவி….என்னைக் கண்டுக்காத மாதிரி இருந்த..?” என்று கீர்த்தி முறைக்க…

“யார் சொன்னா….காலையில் செம்ம சீன் தெரியுமா..? என்னை எழுப்பும் போது என் கண்ணுக்கு பட்டது இந்த இஞ்சி இடுப்புதான்…” என்று இடுப்பைக் கிள்ளினான்.

“அதுலையும் காற்றுக்கு உன் முந்தானை சேலைப் பறக்க…உன்….” என்று அவன் முடிக்கும் முன்…

“ஐயோ…போதும்..போதும்…நிறுத்துடா…பக்கி…ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்துகிட்டு..எஸ்.ஜே.சூர்யா வேலையெல்லாம் பார்த்திருக்க…” என்று மொத்தத் தொடங்கினாள்.

“ஹேய் விடுடி…வலிக்குதுடி…”என்றவன்…அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான்.

”சாரிடி..” என்றான் அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டு.

அவன் முகம் வாடுவது பொறுக்காமல்…“எதுக்கு சாரி..! நான் தான் சாரி சொல்லணும்…!” என்றாள்.

“இருந்தாலும் நான் உன்னைக் கஷ்ட்டப் படுத்திட்டேன்ல…” என்றான்.

“இல்லை..” என்றாள்.

“நாம ரெண்டு பெரும் தயாளன் அப்பாவுக்கு தான் ரொம்ப கடமைப் பட்டு இருக்கோம்….நினைவு இல்லாம நான் இருந்த நிலையிலும்…உன் போட்டோவை தரகர் மூலமா….குடுத்து….மறைமுகமா இருந்து நம்ம கல்யாணத்தை நடத்துனவரே அவர் தான்…” என்றான்.

கீர்த்தனாவிற்கு இந்த செய்தி புதிது.அவளின் மதிப்பில் தயாளன் உயர்ந்து நின்றார்.

ஒரு பெத்த அப்பா இருந்து என்ன என்ன கடமையை செய்வாங்களோ… அதை எல்லாத்தையுமே தயாளன் அப்பா எனக்கு செய்திருக்கார்…அவர் மகனுடைய நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக….! என்றான்.

“எதிர்பார்ப்பில்லாத உறவுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது இல்லையா தேவா…!” என்றாள் கீர்த்தனா.

தேவா “ஆமாம்..!” என்பதைப் போல் தலையசைத்தான்.

சிந்து கூட அன்னைக்கு நம்ம வீட்டில் உன்னைப் பார்த்துட்டு மிரண்டுட்டா…”எப்படிடா…மறுபடியும் அவளையே தேடி கல்யாணம் பண்ண..?” என்று எனக்கு போன் போட்டு அவ கேட்ட தொனியை நினைச்சா இப்பவும் எனக்கு சிரிப்பு வருது.

“ஹோ…! அதான் அன்னைக்கு என்னை அந்த பார்வை பார்த்தாங்களா…?” என்றாள்.

“சிந்து ரொம்ப நல்ல பொண்ணு…இன்பாக்ட்…உன் மேல் எனக்கிருந்த காதலை வெளிக் கொண்டு வந்ததே அவளால் தான்…அவளைக் திருமணம் செய்து வைக்கணும்ன்னு எல்லாரும் பேச….அப்ப தான் எனக்குள் இருந்த நீ வெளிவந்த…அன்றைக்கு தான் என் மனம் முழுசா எனக்கு தெரிந்தது.

உனக்கு ஆக்சிடன்ட் நடந்த அன்னைக்கு…அவ தான் கூட இருந்து எல்லாமே செய்தா…உனக்கு ரத்தம் கூட அவ தான் குடுத்தா..!

இப்போ…இத்தனை வருஷத்துக்கு அப்பறமும்…தன்னோட அப்பா செய்த அயோக்கியத் தனத்தை போலீசில் சொன்னதும் அவதான்…

“உனக்குத் தெரியுமா கீர்த்தி…! நான் நினைவுகளை இழந்திருந்த போது…மறுபடியும் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசினாங்க…அப்ப உறுதியா நின்னு மறுத்தது சிந்துதான்…ஷீ ஸ் வெரி கிரேட்…” என்றான்.

“உண்மைதான் தேவா…! அவங்களைப் பார்த்தா நன்றி சொல்லணும்..!” என்று வாகாய் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“நீங்க ஏன் இப்ப வரையறதே இல்ல..?” என்றாள்.

“யார் சொன்னது..?” என்றவன்….இங்கே பார்…!என்று அவனுடைய பேக்கில் இருந்ததை எடுத்து கடை பரப்பினான்.

அவள் மாங்காய் பறித்ததை தத்ரூபமாய் வரைந்திருந்தான்….அவளை அவன் ரசித்த ஓவ்வொரு தருணங்களையும் ஓவியமாய் தீட்டியிருந்தான்.

“இதை நானே உன்கிட்ட காட்டி…எல்லாத்தையும் சொல்லனும்ன்னு நினச்சிருந்தேன்…ஆனா மேடம் சிஐடி வேலை பார்த்து எல்லாத்தையும் சொதப்பிட்டிங்க..!” என்றான் காதலுடன்.

அவனது கைவண்ணத்தில் பிரதிபலித்த அனைத்து ஓவியங்களையும் பார்த்த கீர்த்தனா பிரமித்தாள்.இப்படியும் ஒருவனால் காதலிக்க முடியுமா என்று.தன்னையும் மீறி வழிந்த கண்ணீரை….அடக்க முடியாமல் அப்படி இருந்துவிட்டாள்.

“இப்ப எதுக்கு இந்த அழுகை…” என்று கண்ணீரைத் துடைத்தவன்…

“என்ன பிடிச்சிருக்கா…?” என்றான் பின்னால் இருந்து அணைத்தபடி.

“ரொம்ப….” என்றவள்…,

“ஐ லவ் யு தேவா…” என்றபடி அவன் முகம் எங்கும் முத்தமழை பொழிந்தாள். முத்த ஊர்வலம் இறுதியாக இதழ்களை நாட….அவளுள் இருந்த பெண்மை விழித்துக் கொண்டது.

அவள் வெட்கப்பட்டு அவனிடம் இருந்து விலக..அவளின் வார்த்தைகளில் குளிர்ந்தவன்…அவளின் செய்கையில் அதிர்ந்தவன்…அவளை விடாமல் இழுத்து… மீண்டும் அவளுள் கவிதை படிக்கத் தொடங்கினான்.

காத்திருந்த காத்திருப்பிற்கும்….தொலைந்த,தொலைத்த நாட்களையும் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினான்.

ஓவியனின் தூரிகையாய் இருந்த அவள்….தேவாவின் காதலியாய், மனைவியாய் சாமரம் வீசத் துவங்கினாள்.

காதலை மறைத்து…புரிதலின்றி இருந்த இரண்டு மனங்கள்…..இன்று காதாலால் இணைந்து….தங்கள் வாழ்க்கைப் பயணத்தை துவக்கினர்.

தூரிகா….மகிழ்ச்சியுடன் ஓவியனுள் சரணடைந்தாள்….

ஓவியனின் தூரிகையாய்..!

 

மாயவா இரவது இனித்ததே 
கனவு ஜனித்ததே 
இதயமும் குளித்ததே 
முகம் தேடுது முகமே 
மாயமே கனியது கனிந்ததே 
இனிமை பிறந்ததே…!

 

 

Advertisement