Advertisement

தூரிகை   21 :

 

கீர்த்தனாவின் கைகளில் இருந்த தாலியைப் பார்த்த தேவா அதிர்ந்தான்.அவளோ அவனை உக்கிரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இது…இது…” என்று தேவா தடுமாற…..

“எது..?” என்றாள் கீர்த்தனா எகத்தாளமாய்.

அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனாவின் கண்கள் கலங்க…. தன் தலைமுடிக்குள் கையை விட்ட தேவா அழுந்த கோதினான்.

“இந்த தாலி யாருதுன்னு உங்களுக்குத் தெரியுமா…?” என்றாள் நக்கலாய்.

“ப்ளீஸ்..! கீர்த்தி…நடந்தது என்னன்னா..?” என்று தேவா சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்தாள் கீர்த்தனா.

“போதும் நிறுத்துங்க…! நீங்க எந்த விளக்கமும் எனக்கு சொல்லத் தேவையில்லை.எனக்குத் தெரிய வேண்டியது ஒன்னே ஒன்னு தான்…!” என்றாள் அழுத்தமாய்.

அவளை அவஸ்தையுடன் தேவா பார்க்க…..

“இந்த தாலியை என் கழுத்தில் கட்டியது நீங்களா..?” என்றாள் கோப மூச்சுடன்.

“கீர்த்தி அது வந்து…” என்று தேவா சொல்ல..

“நான் கேட்டதுக்கு பதில்….!ஆமாவா, இல்லையா…?” என்றாள் விடாப்பிடியாய்.

அவன் முகத்தையே அவள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க….”ஆமாம்…!” என்றான் தேவா அமைதியாய்.

அவன் சொல்லி முடிப்பதற்கும் அவள் கைகளில் இருந்த தாலி அவன் முகத்தில் விழுவதற்கும் சரியாய் இருந்தது.

“யு சீட்….எதுக்காக இப்படிப் பண்ணிங்க…!எதுக்காக என் கழுத்தில் தாலியைக் கட்டுனிங்க….அதுவும் நான் சுயநினைவு இல்லாத போது….சொல்லுங்க…எதுக்காக அப்படி செய்திங்க…!”என்று மடங்கி அமர்ந்து அழத் தொடங்கினாள்.

“எத்தனை நாள்….தூக்கமில்லாம…எத்தனை அவமான பேச்சுக்கள்….தாலி கட்டுவன் யார்ன்னு தெரியாம….வேற கல்யாணத்துக்கும் சம்மதிக்க முடியாம….நான் பட்ட வேதனை என்னன்னு உங்களுக்குத் தெரியுமா….?சொல்லுங்க தெரியுமா..?” என்று ஆங்காரமாய் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

“கீர்த்தி…ப்ளீஸ்…! நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாய் கேள்…!”என்று தேவா அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்ய…

“என்ன கேட்கணும்…!இன்னமும் என்ன கேட்கணும்…இன்னும் என்ன பித்தலாட்டம் எல்லாம் பண்ணிருக்க…சொல்லு..சொல்லுடா..” என்று பைத்தியம் பிடித்தவள் போல் கத்த….

“கீர்த்தி..!இங்க பாரு….என்னைப் பாரு…!”என்று அவளை இழுத்து அணைக்க முயல..

“ச்ச்ச்சீ…விடு என்னை…என்னைத் தொடாதே..! அதுக்கு உனக்கு எந்த யோக்கியதையும் கிடையாது…முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுக்கு தாலியைக் கட்டிட்டு…அந்த குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாம….மறுபடியும் என்னையவே கல்யாணம் பண்ணியிருக்க…. நீயெல்லாம் மனுஷனே இல்ல…” என்று கத்த…

“ஏய்…!” என்று உருமியவன்….அவளது கழுத்தைப் பிடித்து தன் ஆறடிக்கும் உயர்ந்து…அவளை முறைத்தான்.

“என்னடி விட்டா பேசிட்டே போற…யாரு நான் மனுஷன் இல்லையா…ஆமாமா நான் மனுஷன் இல்லைதான்.அதனால் தான் கல்யாணம் பண்ண அன்னைக்கு இருந்து நீ பண்ற கூத்தையெல்லாம் பார்த்துகிட்டு பொறுமையா இருக்கேன்..!”என்று உருமியவன்…

“என்னைப் பத்தி என்னடி தெரியும் உனக்கு…!இல்லை என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு..? எல்லாருக்கும் என்னைப் பார்த்தா… இழிச்சவாப்பயல் மாதிரி இருக்கா..? எனக்கென்ன வேண்டுதலாடி….தாலி கட்டிட்டு உன்னை அம்போன்னு விட்டுட்டுப் போக…? என் சூழ்நிலை அப்படி…அதை சொல்ல வந்தா…பெரிய இவ மாதிரி தய்யா தக்கான்னு குதிக்கிற….

எவ்வளவு ஆசையோட வீட்டுக்கு வந்தேன் தெரியுமா…? ச்சி…உனக்கெல்லாம் எங்க தெரிய போகுது என்னோட மனநிலை…!

ஆமா உங்களுக்கெல்லாம் என்ன மனசுல பெரிய ரதின்னு நினைப்பா…?உங்களையே பிடிச்சு தொங்கப் போய் தாண்டி திமிர் தலைக்கு ஏறிடுது உங்களுக்கெல்லாம்…

உனக்கெல்லாம் பொய்யா நடிக்கிறவன் தான் லாயக்கு…நான் இல்லை…! உன்னை இங்க வச்சிருந்தேன்டி…!என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டியவன்….”ஆனா நீ…!” என்று அவளை வெற்றுப் பார்வை பார்த்தவன்…

“இனி நீயே சொன்னாலும்…எனக்கு நீ வேண்டாம்டி…..! என் வாழ்க்கையில புயல் மாதிரி வந்து எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டடி…!” என்று நடை தளர அந்த அறையை விட்டு வெளியேறினான்.

கீர்த்தனாவோ பிரமை பிடித்தவள் போல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“நான் இவன் வாழ்க்கையை நாசம் பண்ணினேனா…! என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம…எல்லாத்துக்கும் நான் தான் காரணம்கிற மாதிரி பேசிட்டுப் போறான்….” என்று தனக்குள் மருகினாலும்…

“நீ எனக்கு வேண்டாம்டி..” என்ற அவனின் வார்த்தைகள் மனதில் சுருகென்று ஒரு வலியை ஏற்படுத்தியது.

காரணமே இல்லாமல் அழுகை அழுகையாய் வந்தது.

“அழு…நல்லா அழு..உனக்கு இது தேவைதான்….நல்ல போய்ட்டு இருந்த உன் வாழ்க்கையை குழப்பிக் கொண்டது நீ தான்….அதற்கான தண்டனையை நீ அனுபவித்து தான் ஆக வேண்டும்….” என்று அவள் மனசாட்சி கை கொட்டி சிரித்தது..”

வெகு நேரம் அதே நிலையில் இருந்ததால் அவளின் கால்கள் மரத்துப் போயிற்று…! மெல்ல தன் சுய நினைவுக்கு வந்தவள்….மெதுவாக எழுந்து வெளியே வந்தாள்.நன்றாக இருட்டியிருந்தது.

வீட்டில் யாருமில்லை என்பதை அந்த வீட்டின் அமைதியே அவளுக்கு உணர்த்தியது.மெல்ல கீழே இறங்கி வந்தவள்….சமையல்கார அம்மாவை அழைத்து…”எங்க யாரையும் காணோம்..!” என்று விசாரிக்க…

“எல்லாரும் கிளம்பி பெங்களூரு போய்ருக்காங்க ம்மா….பத்மா அம்மா வீட்டு வகையில் யாருக்கோ நாளைக்கு திருமணமாம்….உங்களை கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தாங்க….நீங்க கதவைத் திறக்கலை….அதான் நீங்க தூங்கிட்டு இருப்பிங்கன்னு என்கிட்டே சொல்லிட்டு போனாங்கம்மா…!டிபன் எடுத்து வைக்கட்டுமா…?” என்று பணியால் கேட்க…

“இல்லை நீங்க போங்க..! நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன்..!” என்றபடி தொய்வாக அமர்ந்தாள்.

அந்த வீட்டின் அமைதி அவளை அச்சுறுத்தியது.அவ்வளவு பெரிய வீட்டில் அவள் மட்டும் இருப்பது போன்ற பிரம்மை அவளுள்.

“நாளைக்கு இருந்து கண்டிப்பா கல்லூரிக்கு சென்று விட வேண்டும்..! இப்படியே இருந்தால் எனக்கு பைத்தியமே பிடித்து விடும்…!” என்று யோசித்தவள்….சாப்பிடத் தோன்றாமல்,தண்ணீரை மட்டும் குடித்து விட்டு சென்றாள்.

அந்த அறைக்குள் சென்றவளுக்கு ஏதோ பெரிய பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல…மனம் பாரமாய் இருந்தது.காரணமே இல்லாமல் மனம் அடித்துக் கொண்டது.

மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் வலம் வரத் தொடங்கின….எதற்காக தேவா என் கழுத்தில் தாலி கட்ட வேண்டும்…!அன்று என் காதுகளுக்கு மிக அருகில் கேட்ட குரல் இவனுடையதா…? பிறகு ஏன் திரும்பி வரவில்லை…..எதற்காக இப்படி ஒரு காரியத்தை செய்தான்..? என்று மண்டைக்குள் குடைச்சல் ஆரம்பித்தது.

“ஆமா இப்ப வந்து கேளு….! அவனையே கேட்ருக்க வேண்டியது தான…? ஏன் அவனே சொல்லத்தான் வந்தான்…நீதான் உன் முன் கோபத்தால விரட்டி விட்டுட்ட….”””” என்று மனசாட்சி எரிச்சலடைய…

“ஆமா எல்லாரும் என்னையே சொல்லுங்க…! என் நிலைமையில் இருந்து யாராவது யோசிச்சுப் பார்த்தங்களா…”என்று அவள் புலம்ப…

“உனக்குள்ள இருந்துகிட்டு நான் படுற பாடு இருக்கே…!”என்று தலையில் அடித்துக் கொண்டது மனசாட்சி.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்க…..சமையல்கார அம்மாவை எதிர்பார்த்து திறந்தவளுக்கு அதிர்ச்சி.தேவாதான் நின்றிருந்தான்.ஆனால் அவனிடம் ஏதோ வித்யாசம் தென்பட்டது.

கண்கள் கொவ்வைப் பழமாய் சிவந்திருக்க….முகம் கடுமையை சுமந்திருந்தது.

கதவை விலக்கியவள் அவனை பார்த்துக் கொண்டே நிற்க….அவளை விலக்கி…உள்ளே செல்ல முற்படும் போது…..தடுமாறினான்.

கீர்த்தனாவின் கைகள் தன்னிச்சையாக அவனைத் தாங்க போக…வேண்டாம் என்ற தன் செய்கையால் விலக்கி நிறுத்தினான்.

அவனிடம் இருந்து வந்த நெடி…அவன் குடித்திருக்கிறான் என்பதை தெள்ளத் தெளிவாய் உணர்த்தியது அவளுக்கு.

அவளைத் தடுத்து நிறுத்தியவன்….நேராக கட்டிலில் சென்று அமர்ந்து தன தலையை இரண்டு கைகளாலும் தாங்கிக் கொண்டான்.

“இப்படி குடிச்சுட்டு வந்தும் கூட இவ்வளவு தெளிவா இருக்கான்…?” என்று கீர்த்தனா யோசிக்க….அவன் அருந்திய மது அப்பொழுது தான் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.

முன்னால் நின்றிருந்த கீர்த்தனா அவனுக்கு மங்கலாய் தெரிய….தலை ஆட்டி ஆட்டிப் பார்க்க…எதுவும் புலப்படவில்லை.

அப்படியே கட்டிலில் மல்லாந்து படுத்தவன்…..வாந்தி வருவது போல் இருக்க…வேகமாய் எழுந்தான்.ஆனால் காலம் கடந்திருந்தது.

அவனையும் மீறி வாந்தி எடுத்திருந்தான்.அதைப் பார்த்த கீர்த்தனாவிற்கும் குமட்டியது.

“சாரி…”என்றபடி தள்ளாடி பாத்ரூம் நோக்கி செல்ல…. தடுமாறினான். கீர்த்தனாவிற்கோ நடந்த அத்தனை பிரச்சனைகளும் மறந்து இப்பொழுது அவன் மட்டுமே தெரிந்தான்.

வேகமாய் அவனை தோள் தாங்கி பாத்ரூம் அழைத்து சென்றவள்,அவனை அமரவைத்து ஷவரைத் திறந்து விட்டாள்.

பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து அவன் வாமிட் செய்த இடத்தை சுத்தம் செய்தாள்.

அவன் கட்டிலில் படுத்து உருண்டதால்…விரிக்கப்பட்டிருந்த பெட்ஷீட் கலைந்து கிடக்க….  அதை சரி செய்ய முனைந்தாள்.

பெட்ஷீட்டை சரி செய்து கொண்டிருந்தவளின் கண்களில் ஏதோ வித்தியாசமாய்த் தெரிய…..பெட்ஷீட்டை முழுவதும் உருவினாள்.அங்கே அவள் கண்ட காட்சி…..

பனியில் உறைந்த கல்லாய் சமைந்தாள்.

உலகம் தலைக்கு மேல் சுத்துவதைப் போல் உணர்ந்தாள்.அவளும் எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவாள்.

கண்கள் கலங்க வேகமாய் பெட்சீட்டை விரித்து ஒழுங்கு படுத்தியவள்….ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

டவலை எடுத்துக் கொண்டு வேகமாய் பாத்ரூம் நோக்கி செல்ல….ஷவரில் இருந்து விழுந்த நீரின் மகிமையால்….கொஞ்சமே கொஞ்சம் தெளிந்திருந்தான் தேவா.

அவளிடம் இருந்து டவலை வாங்கிக் கொண்டவன்…..தனக்குத் தானே சேவை செய்து கொண்டான்.

அதற்குள் கீழே சென்றவள் மிதமான சூட்டில் பாலை எடுத்து வந்து அவனிடம் குடுக்க…..எதிர்ப்பில்லாமல் அதை வாங்கிக் குடித்தவன் அப்படியே படுத்து உறங்கியும் விட்டான்.

அவன் நன்றாக உறங்கிவிட்டான் என்பதை உறுதி செய்தவள்…..வேகமாய் அந்த அறையை ஆராய ஆரம்பித்தாள்.

அவனின் கபோர்டை மெதுவாக திறக்க..அங்கு அவள் எதிர்பார்த்த எதுவும் அவளுக்கு கிடைக்கவில்லை.ஏமாற்றமே மிஞ்சியது.இறுதியாக அவள் கைகளில் சிக்கியது ஒரு ஆல்பம்.

ஆனால் அதனாலும் எந்த பயனும் இல்லாமல் போனது.குணா,தயாளன் ஆகியோருடன் எடுத்த போட்டோக்களே அதிகம் இருந்தன.

பள்ளி,கல்லூரி நாட்களில் எடுத்த போட்டோக்கள்…. கடைசியாக.. குணாவும்,குணாவின் தங்கை ரூபாவும் நிற்க..இருவருக்கும் நடுவில் நின்றிருந்தான் தேவா.

ஆல்பத்தை மூட போனவளுக்கு…பின் ஏதோ தோன்ற….ரூபாவைப் பார்த்தாள்.”இவளை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே..!” என்று மூளையைக் கசக்க…..அவளுக்கு நியாபகத்தில் பொறி தட்ட…..சந்தோஷமா,துக்கமா எனத் தெரியாமல் கண்ணீர் தார தாரையாய் வழிந்தது.

“குத்திட்டடி….”என்ற தேவாவின் குரலில்…… பட்டென்று திரும்பினாள். ”வார்த்தையாலே என்னை குத்தி கொன்னுட்டடி…..மனசு வலிக்குதுடி…”என்று உளறலாய் புலம்பிக் கொண்டிருந்தான் தூக்கத்தில்.

அவனருகில் சென்றவள்..அவனையே இமைக்காமல் பார்த்தாள்.இன்றுதான் முதன் முதலில் குடித்திருப்பான் போலும்….

“எல்லாம் என்னால்தான்….!” என்று மனதிற்குள் மருகியவள்…..அவன் அருகில் கட்டிலில் தலை வைத்துப் படுத்தவள்….அசதியில் அவளையும் மீறி அமர்ந்த நிலையிலேயே உறங்கி விட்டாள்.

காலையில் தேவாவிற்கு சீக்கிரமே விழிப்புத் தட்ட…தலையெல்லாம் பாரமாக உணர்ந்தான்.கண்களைத் திறக்க முடியாத அளவிற்கு தீயாய் எரிந்தது.

மெதுவாக விழித்தவன் முதலில் பார்த்தது…தலைமுடி கலைந்து….தூங்கும் போது கூட சோகமே உருவாய் தூங்கிய கீர்த்தனாவைத் தான்.இரவு நடந்தது மங்கலாய் நியாபகத்திற்கு வர….அவன் மீது அவனுக்கே எரிச்சல் வந்தது.

அவன் ஒரு நாள் குடிப்பான் என்று அவனே கனவு கூட கண்டிருக்க மாட்டான்.ம்ம்ம் எல்லாம் விதி….என்று நொந்தவன்….மெதுவாக எழுந்து வெளியேறினான்.

கீர்த்தனா கண்விழிக்கும் போது மணி எட்டைக் காட்டியது.அதறிப் பதறி எழுந்தாள்.தேவா இருந்த இடம் காலியாய் இருக்க….வேகமாய் அவனைத் தேடினாள்.

அவனோ அவள் கண்களுக்கு அகப்படவேயில்லை.பிறகு அவன் சீக்கிரமாக கிளம்பி சென்று விட்டான் என்ற செய்தி வேலையாள் மூலம் தெரிய வர நொந்து போனாள் கீர்த்தனா.

வேண்டா வெறுப்பாய் கல்லூரிக்குக் கிளம்பினாள்.எங்கே வீட்டிலேயே இருந்தால் கண்ட நினைவுகளும் வந்து தன்னை தொந்தரவு செய்யுமோ என்று அஞ்சினாள்.

தயாளனின் கட்டுப்பாட்டில் கல்லூரி நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்தது.அங்கு நடந்திருந்த குளறுபடிகள் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தாள் கீர்த்தி.

தயாளனுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.”இவள் எப்படிப்பட்ட பெண்…? இது இவள் கணவனுக்கு சொந்தமான இடம்…அப்படியென்றால் இவளுக்கும் இது சொந்தம் தான்.ஆனால் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் அவள் நடந்து கொண்ட விதம் அவரை யோசிக்க வைத்தது.

குறைந்த பட்சம் தன்னிடம் வந்து விசாரிப்பாள் என்று எண்ணியிருந்தார் தயாளன்.ஆனால் அந்த எதிர்பார்ப்பையும் அவள் பூர்த்தி செய்யவில்லை.

உணவு இடைவேளையின் போது அவரே கீர்த்தியை அழைக்க….உற்சாகம் இல்லாத முகத்தோடு சென்றாள்.

“சொல்லுங்க அங்கிள்…!”என்றாள் சோர்வாய்.

“என்னம்மா கீர்த்தி…ஊர் எல்லாம் விட்டுடுச்சா….இப்பதான் காலேஜ் பக்கம் வரணும்ன்னு தோணுச்சா…!” என்றார் சிரிப்புடன்.

“அப்படியெல்லாம் இல்லை அங்கிள்….! கொஞ்ச நாள் அம்மா கூட இருக்கணும் போல் இருந்தது…அதான்…!” என்று அவள் மென்று முழுங்க…

“சரிம்மா…!அதுவும் நல்லதுக்கு தான்….நீ இருந்திருந்தா தேவா பய தீய வேலை பார்த்திருக்க மாட்டான்…பய பயங்கர வேகம்மா..!” என்றார் அவளை ஆழம் பார்த்தபடி.

“அப்படி என்ன வேலை அங்கிள்…!” என்று அவள் சாவதானமாய் கேட்க…

“என்னம்மா இப்படி சொல்லிட்ட…! அந்த சண்முகம் பேச்சைக் கேட்டு உன் மாமனார் செய்து வச்சிருந்த குளறுபடி ஒண்ணா ரெண்டா….ம்ம்ம்…..அதை எல்லாம் சரி பண்ணவே நாக்கு தள்ளிடுச்சு….

என்னை இங்க பேருக்கு தான் உட்கார வச்சிருக்கான் உன் புருஷன்….ஆனா இதையெல்லாம் செய்து முடிச்சது என்னவோ அவன் தான்…!” என்று பெருமையாய் சொல்ல….கீர்த்தியுமே அவனை நினைத்து வியந்தாள்.

“அங்கிள் நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க…!நான் இதுக்கு முன்னாடி உங்களை எங்கயோ பார்த்திருக்கேன்..உங்களுக்கு அப்படி ஏதும் தோணுதா…?” என்று கேட்க…

அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்வை பார்த்தவர்….”என்னம்மா….உங்க ரெண்டு பேருக்கும் என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது…என்னை உனக்கு நிஜமாவே தெரியலையா….? நீ படிச்சிட்டு இருந்த காலேஜ்க்கு நான் சீப் கெஸ்ட்டா வந்திருந்தப்போ அவ்வளவு பேசின….இப்ப மறந்துட்ட….!” என்று கோபப்படுவது போல் பொய்யாய் நடித்து…அவளை ஆழம் பார்த்தார்.

அவர் என்ன எதிர்பார்த்தாரோ…அதை விட பன்மடங்கு அதிர்வு அவள் முகத்தில் உண்டாக….அதை அப்படியே மறைத்துக் கொண்டாள்.

“ஓஹோ…சாரி அங்கிள்..!” என்று முடித்துக் கொள்ள…..

“அப்ப சரிம்மா….நான் என் ஆபீஸ் வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வரேன்…உனக்கு மதியம் கிளாஸ் இருக்காம்மா..!” என்றார்.

“இல்லை அங்கிள்….ஆப்டர்நூன் நான் வெட்டிதான்….!” என்றாள் சிரித்தபடி.

“அப்ப வாயேன்..! என் ஆபீஸ் வரைக்கும்..!” என்று அவர் எதார்த்தமாய் அழைப்பது போல் அழைக்க…”ஓஹோ…ஷியர் அங்கிள்…!” என்றபடி வேகமாய் எழுந்தாள்.

அவள் எழுந்த வேகத்தைப் பார்த்த தயாளன் மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டார்.

விதி அவளை அன்போடு அழைத்தது.அதற்கு பின்னால் எத்தனை நிகழ்வுகளை வைத்திருக்கிறதோ..! யார் அறிவார்.

 

Advertisement