Advertisement

தூரிகை 20:

நான் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்க மாட்டேன் என்பதைப் போல நேரமும் காலமும் பிடிவாதமாய் செல்ல…நாட்களும் அதன் போக்கில் விரைந்தன.

ஆயிற்று இன்றோடு பத்து நாட்கள் ஆகிவிட்டது கீர்த்தனா ஊருக்கு சென்று.அங்கிருந்து கிளம்பி வந்ததில் இருந்து தேவாவும் அவளை தொடர்பு கொள்ளவில்லை.

இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை என்ற மட்டும் தெரிந்த பத்மாவிற்கு அதற்கான காரணம் புரியவில்லை.தேவாவிடம் கேட்கவும் அவருக்கு தயக்கமாய் இருந்தது.

இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்ட ஜீவன்களும் அந்த வீட்டில் இருக்கவே செய்தன.கார்த்திகாவிற்கு மகிழ்ச்சி என்றால் மாறனோ கொஞ்சம் ரிலாக்சாக இருந்தார்.தம்மை மீறி எதுவும் நடவாது என்ற இறுமாப்பு அவருக்கு.

விருத்தாச்சலத்தில்…..

தன் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த  கீர்த்தனாவிற்கு ஒன்றும் புரியவில்லை.ஊருக்கு சென்ற பிறகு தேவா அழைப்பான் என்ற அவளது எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டான் தேவா.

முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட அவளுக்கு…நாட்கள் செல்ல செல்ல…ஏதோ ஒன்று மனதில் உறுத்தித் தள்ளியது.

“என்ன இது…? அவன் தான் விட்டுட்டுப் போனான்…அவன் தான் வந்து கூப்பிடலை…இதுக்காக அவன் தான் வருத்தப்படனும்….இங்க என்னடான்னா…எல்லாமே தலைகீழா இருக்கு…இப்ப எதுக்காக நான் இவ்ளோ கவலைப் படனும்…?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்ள மட்டுமே அவளால் முடிந்தது.

இந்த பத்து நாட்களில் தங்கள் மன நிம்மதியை முழுவதும் தொலைத்தவர்கள் செழியனும்,கலையரசியும் மட்டுமே…!

திடீரென்று ஊருக்கு கிளம்பி சென்ற தன் வீட்டு மாப்பிள்ளை அதற்கு பிறகு எந்த தகவலும் இல்லாமல் இருந்தால் யாருக்குத்தான் கவலை இருக்காது.

கீர்த்தனாவின் மனமும் ஏதோ ஒரு வகையில் ஏங்கத்தான் செய்தது. ஏற்றுக் கொள்ள மனம் மறுத்தாலும்…ஒவ்வொரு நிமிடமும் மனம் தேவாவின் வருகையை எதிர் நோக்கியிருந்தது.

ஆனால் அவனோ கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தான்.

இதற்கு இடையில் ஊருக்கு வந்த ரவி…நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு வருந்தினான்.தன் அம்மாவின் குணம் அறிந்தவனால் அவரை ஒன்றும் சொல்ல முடியவில்லை.

கிராமம் என்பதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அரசால் புரசலாய் பேச….கலையரசி கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

“இப்ப உனக்கு சந்தோஷமா…? உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப் போட்டுகிட்டாயே..?” என்று அழுக…எரிச்சல் பொங்கியது கீர்த்தனாவிற்கு.

“இப்ப என்ன நடந்துச்சுன்னு எல்லாரும் இப்படி ஒப்பாரி வைக்காத குறையா கத்துறிங்க…! இங்க வந்து ஒரு பத்து நாள் இருந்தது குத்தமா…! இங்க இருக்க எனக்கு உரிமை இல்லையா..?” என்று பதிலுக்கு கீர்த்தனாவும் எகிறினாள்.

“கீர்த்தனா நாளைக்கு காலையில் கிளம்பி ரெடியா இரு…!நானே கொண்டு வந்து விட்டுட்டு வரேன்…அப்படியே மாப்பிள்ளை கிட்டயும்..”” என்று செழியன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“தேவையில்லை…! நானே போய்க்கிறேன்..!” என்று கடுப்புடன் மொழிந்தவள்…வேகமாய் அவ்விடத்தைவிட்டு நகர….கண்களில் கண்ணீர் குளம் கட்டியது பெற்றோர்க்கு.

காரணமே இல்லாம தேவாவின் மீது கோபம் கோபமாய் வந்தது.”எல்லாம் இவனால வந்தது…!இவரு பெரிய துரை…!” என்று மனதால்… கோபத்திற்காக மட்டுமே அவன் மேல் கோபப்பட முடிந்தது அவளால்.

அதையும் மீறிய ஒரு உணர்வை அவன் அருகில் இருக்கும் போது அவள் உணர்கிறாள் என்பதைக் கூட அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஏதோ ஒரு வேகத்தில் தன் செல்போனை எடுத்தாள்.என்ன நினைச்சுட்டு இருக்கான்..? என்றபடி அவன் நம்பரை டயல் செய்ய….உள்ளுக்குள் சற்று உதர ஆரம்பித்தது.

படபடக்கும் இதயத்துடன் போனைக் காதில் வைக்க…..சில வினாடிகளோ..சில யுகங்களோ கழித்து….””ஹலோ..!”” என்ற தேவாவின் கம்பீரக் குரலில் தன்னை மறந்தாள்.

“ஹலோ…ஹலோ…!”” என்று அவன் மீண்டும் மீண்டும் கத்த…கீர்த்தனாவின் வாயில் இருந்து காற்றைத் தவிர வேற ஒன்றும் வரவில்லை.

பொறுமையிழந்து போனை கட் செய்தான் தேவா.ஆனால் அவன் முகத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும் சோகம் போய்…ஒரு ரகசிய முறுவல் தோன்றியது.

தனக்குத் தானே சிரித்துக் கொண்ட படி…செல்போனைப் பார்த்துக் கொண்டிருக்க….”என்னடா…!பைத்தியம் முத்திடுச்சா…?” என்று கிண்டல் அடித்தான் குணா.

“வெகு சீக்கிரமே….!” என்று பதில் அளித்த தேவா வாய்விட்டு சிரிக்க…அவனை நெகிழ்ச்சியுடன் பார்த்தான் குணா.

அவன் சந்தோசம்,மகிழ்ச்சி,துக்கம் எல்லாமே கீர்த்தனாவை சுற்றி பிணைந்திருப்பதை தேவா உணர்ந்தானோ என்னவோ….குணா நன்கு உணர்ந்திருந்தான்.

“இப்படி எல்லாத்தையும் உனக்குள்ளே வச்சுக்கனும்ன்னு எந்த அவசியமும் இல்ல தேவா….நீ மனம் விட்டு பேசினாலே எல்லா பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்துடும்ன்னு நினைக்கிறேன்…”” என்றான் குணா.

“உண்மைதான் குணா…! நானும் சில சமயம் அப்படித்தான் நினைப்பேன்..!ஆனா சூழ்நிலைகள் தடுக்குது…அது மட்டுமில்லாம… என்னை…நானாவே இருந்து புரிய வைக்கணும்ன்னு நினைக்கிறேன்….!” என்றான் யோசனையுடன். 

“எது எப்படியோ…ஏதாவது நல்லது நடந்தா சரி…..நானும் ஒரு கல்யாணத்தை பண்ணிடலாம்ன்னு பார்க்குறேன்..ம்ம்ம்..”” என்று குணா பெருமூச்சு விட….

“ஏண்டா…? என்னாச்சு..! பண்ணிட வேண்டியது தானே…! “என்றான் தேவா.

அவனை மேலும் கீழும் பார்த்த குணா…””இன்னும் கொஞ்ச நாள் மட்டும் உன் கூடவே இருந்தேன்…நான் சாமியாராப் போனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை…”” என்றான்.

“இப்பல்லாம் சாமியாருங்க தான் படு ஜோரா இருக்காங்க மச்சி..!”” என்று தேவா காலை வார….””ஹிஹி….ஆமா மச்சி..”!” என்று ஒப்புக் கொண்டான் குணா.

தேவா இங்கு உல்லாசமாய் உரையாடிக் கொண்டிருக்க….அங்கே ஒருத்தி புகைந்து கொண்டிருந்தாள்.

“இவனுக்கு  மனசுல பெரிய மன்மதன்னு நினைப்பு…!ஹலோ வாம் ஹலோ..! நான் தான் கால் பண்ணிருக்கேன்னு தெரிஞ்சே… நடிக்கிறான்..!” என்று பொரிந்து தள்ளினாள்….அங்கே தேவாவிற்கு புரையேறும் வரை.

இப்படி எல்லா உணர்வுகளையும் அவன் மீது செலுத்த தெரிந்த அவளுக்கு காதல் என்ற உணர்வை மட்டும் செலுத்த முடியவில்லை.

மறுநாள் கிளம்பி தானே சென்று விட வேண்டும் என்ற முடிவை எடுத்தவள்….அதை தன் அம்மா,அப்பாவிற்காக என்று ஒப்புக்கு ஒரு காரணம் கற்பித்தாள்.

தனது பொருட்களை பேக்கில் அடுக்கிக் கொண்டிருந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள் அவனின் டிரஸ் இருந்த மற்றொரு பேக்கை.

அன்று கோபமா போனதால மறந்துட்டு போய்ட்டான் போல….!என்று நினைத்தவள் அதைத் திறக்க முயல….பின் ஏதோ தோன்றியவளாய் அப்படியே வைத்து விட்டாள்.அந்த பையோ இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

மறு நாள் பொழுது அழகாய் புலர….

அதிகாலையிலேயே அவளின் வீட்டு முன் வந்து நின்றது தேவாவின் கார்.

தேவா தான் வந்திருக்கிறான் என்று ஆசையாக அவள் ஓடிவர….காரில் இருந்து டிரைவர் மட்டும் இறங்கியதைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தாள்.

“நீங்க கிளம்பிட்டிங்கன்னா….சார் உங்களை கூட்டிட்டு வர சொன்னார் மேடம்..!”” என்று அந்த டிரைவர் உரைக்க…

நான் ஊருக்கு கிளம்புறேன்னு இவனுக்கு எப்படி தெரியும்..? என்று தன் அப்பாவைப் பார்க்க….அவரும் புரியாமல் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

எதுவும் புரியாமல் குழப்பத்துடனே சென்றாள் கீர்த்தனா.

சில மணி நேர பயணத்தில் தன் புகுந்த வீட்டை அடைந்தாள்.தேவா இருப்பான் என்று அவள் எதிர்பார்க்க….அவன் இருப்பதற்கான அறிகுறியே அங்கு இல்லை.

“ம்ம்ம் மகாராணி வந்துட்டாங்க..! வர வர இந்த வீடு சத்திரம் மாதிரி ஆகிவிட்டது…”! என்று கார்த்திகா சிலுப்பிக் கொள்ள…

“வாம்மா…!” என்ற வார்த்தையுடன் பத்மா தனது உரையாடலை முடித்துக் கொண்டார்.

கீர்த்தனாவும் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது அறையை நோக்கி நடையைக் கட்டினாள்.

மேலே தனது அறைக்கு சென்றவள் அதிர்ந்தாள்.அந்த அறையில் இருந்த அவளது பொருள் ஒன்று கூட அங்கு இல்லை.அவள் மலைத்து நிற்க…அங்கு வந்த பத்மா…

“உன்னோட பொருள் எல்லாமே தேவா ரூம்க்கு மாத்தியாச்சு கீர்த்தனா.இனி அது தான் உன் ரூம்….டயர்டா இருக்கும்….இந்த காபிய கொஞ்சம் குடிம்மா…சூடா இருக்கு…” என்று அவள் கைகளில் திணித்து விட்டு செல்ல…

“ஐயோ..!இது வேறையா…?” என்பது போல் இருந்தது கீர்த்தனாவிற்கு.

தயக்கத்துடன் தேவாவின் அறையை நோக்கி நடை பயில….மெதுவாக அறையினுள் சென்றாள்.உள்ளே சென்றவளுக்கு அந்த அறையின் ஒவ்வொரு அமைப்பும் திகைக்க வைத்தது.

இதற்கு முன் அவள் அந்த அறைக்கு வந்ததில்லை.எப்பொழுதும் பூட்டியே இருக்கும் அந்த அறை இன்று திறந்திருந்தது அவளுக்கு பெரிய ஆச்சர்யம்.

அனைத்து பொருட்களும் நேர்த்தியாக அதனதன் இடத்தில் இருக்க….அதன் அழகில் மயங்கினாள் கீர்த்தி.

மெதுவாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவள்…காபியை குடித்துக் கொண்டே…அறையை கண்களால் சுழல விட்டாள்.ஒவ்வொன்றாய் ரசனையுடன் பார்த்துக் கொண்டே வர…ஒரு இடத்தில் அவளின் பார்வை நிலைத்தது…திகைத்தது.

கைகள் நடுங்க ஆரம்பிக்க…..பட்டென்று எழுந்தவள்…நிற்க முடியாமல் நிலை தடுமாறி மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தாள்.

“இது உண்மைதானா..?” என்று பல முறை அவள் யோசிக்க… ”உண்மைதான்..” என்று அவள் மூளை தெளிவுபடுத்தியது.இருந்தாலும் மனம் ஏற்கவில்லை.

மற்றொரு புறம் இவர்களின் திருமண புகைப்படமும் பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தது.

யாரோ உள்ளே வருவது போல் இருக்கவும் நிமிர்ந்தாள்.தேவா தான் வந்து கொண்டிருந்தான்.

“கருப்பு பேண்ட்டும்…வெள்ளை நிற முழுக்கை சட்டையுமாய்…. பார்க்கவே அம்சமாக…கம்பீரமாக தோற்றமளித்தான்.எப்பொழுதும் காணப்படும் ஒரு இறுக்கம் அவன் முகத்தில் இல்லை.முகத்தில் இருந்த குறுந்தாடி…. சுத்தமாக சவரம் செய்யப்பட்டிருந்தது.இவ்வளவு மிடுக்காய் தேவாவை பார்ப்பது இது தான் முதல் முறை கீர்த்தனாவுக்கு..”

“ஆளு செம்ம ஸ்மார்ட்டா மாறிட்டான்….ம்ம்ம்…நான் இல்லைன்ற சந்தோஷத்துலையே இருந்திருப்பான் போல….அதான் இப்ப வந்துட்டேன்ல…..இருக்குடா உனக்கு…” என்று சின்ன பிள்ளைத்தனமாக மனதிற்குள் கறுவினாள்.

அவளையே பார்த்துக் கொண்டு வந்தவன்…..அவள் அருகில் வந்து…ஒரு நிமிடம் அவளையே பார்த்தவன்…  திடிரென்று அவளை இறுக்கி அணைத்தான். அந்த அணைப்பின் இறுக்கம் பிரிவின் வலி என்று அவள் உணர்ந்தாலும்….வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

கீர்த்தனாவிற்கும் அந்த அணைப்பு தேவையாயிருந்தது.எதுவும் பேசாமல் அவள் அமைதியாக நிற்க….அவன் அணைப்பின் வேகம் இறுகிக் கொண்டே போனது.ஒரு கட்டத்தில் கீர்த்தனாவின் உடல் இறுக்கம் தாங்க முடியாமல் நெளிய…..

சூழ்நிலையும்,தன்னிலையும் உணர்ந்து அவளை விடுவித்தான் தேவா.ஆனால் கீர்த்தனாவிடம் எந்த விதமான மாற்றமும் இல்லை.

அவளை மேலும் கீழும் பார்த்து…தன் கண்களில் நிரப்பிக் கொண்டவன்..”எப்படி இருக்க கீர்த்தி…?” என்று ஆருடமாய் கேட்க…

அந்த குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை அசத்திப் பார்த்தது.”நல்லாருக்கேன்..!” என்றபடி அவள் தலை ஆட…

“பட்..நான் நல்லா இல்லை….நீ இல்லாம எதுவுமே எனக்கு இங்க பிடிக்கலை…எப்படா உன்னை பார்ப்போம்ன்னு இருந்தது…!”என்று ஏக்கமாய் சொல்ல…கீர்த்தனாவிற்கு எதுவும் புரியவில்லை.

“என்ன இது..?இவன் என்ன என்னமோ பேசுறான்….பத்து நாள் முன்னாடி வரை நல்லாத்தான இருந்தான்…ம்ம்ம்…மறுபடியும் பைத்தியம் பிடிச்சிருக்குமோ…!” என்ற ஆராய்ச்சியில் கீர்த்தனாவின் கண்கள் ஈடுபட…

“சத்தியமா…!எனக்கு பைத்தியம் எல்லாம் இல்லை…!”என்று சொல்லிய தேவா வாய் விட்டு சிரிக்க….வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் அவனை.

“இங்க வா..!”என்று அவள் கையைப் பிடித்து அழைத்து சென்றவன்…. அங்கே இருந்த போட்டோவைக் காண்பித்து…”இவங்க தான் என் அம்மா,அப்பா..கீர்த்தி..” என்றான் அமைதியாய்.

மறுபடியும் அந்த போட்டோவைப் பார்த்த கீர்த்தனாவின் கண்கள் நிலை குத்தி நின்றது.”இதெப்படி இருக்க முடியும்…?” என்று யோசிக்க…”ஏன் இருக்க முடியாதா,…?” என்று மற்றொரு மனம் கேள்விகேட்டது.

அதற்குள் தேவாவிற்கு செல்லில் அழைப்பு வர..அதை எடுத்து பேசிக்கொண்டு நகர்ந்தான் தேவா.

தேவாவின் அம்மாவையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.மங்களகரமாக அழகான,சாந்தமான முகத்துடன் இருந்தார்.கண்களில் அப்படி ஒரு தீர்க்கம்.

தேவாவின் அழகும் கம்பீரமும்…அவன் அன்னையிடம் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என்பதை பார்ப்பவர்கள் அப்படியே சொல்லி விடுவர்.அப்படி ஒரு உருவ ஒற்றுமை.தாயைப் போல் பிள்ளையாக இருந்தான்.

ஆனால் அதையெல்லாம் விடுத்து அவரின் கழுத்தில் இருந்து மினுமினுத்த அந்த தாலி அவளின் கண்களை உறுத்தியது.

திருமணமான நாளில் இருந்து இன்று தான் தேவாவின் பெற்றோர் முகத்தைப் பார்க்கிறாள்.

“இந்த தாலி…!” என்று அவள் யோசிக்க….”ஒரே மாடலில் வேற தாலியே இருக்காதா…!” என்று மனம் கேள்வி கேட்க….ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளை உறுத்திக் கொண்டு தான் இருந்தது.

அதற்குள்  அங்கு வந்த தேவா…”முக்கியமான மீட்டிங் கீர்த்தி…..நான் போயிட்டு ஈவ்னிங் வந்துடுவேன்.நீ கிளம்பி ரெடியா இரு….இன்னைக்கு நாம வெளிய போறோம்..ஒரு பார்ட்டி இருக்கு..!” என்றபடி சென்றவன்…என்ன நினைத்தானோ திரும்பி வந்தான்.

அவளை மீண்டும் ஒரு முறை இருக்க அணைத்து….அவள் இதழ்களில் தனது முத்திரையைப் பதித்தான்.

கீர்த்தனா திகைக்க….”வரேண்டா..!”என்றபடி அவள் கன்னத்தில் தட்டி விட்டு சென்றான்.

அவன் செல்வதையே இமைக்காமல் பார்த்திருந்தவள்…திடீரென்று நியாபகம் வந்தவளாய்….வேகமாய் சென்று தனது பொருட்கள் இருந்த கபோர்டை ஆராய்ந்தாள்.

தான் கல்லூரிக்கு கொண்டு செல்ல உபயோகிக்கும் கைப்பையை தேட…சில நிமிடங்கள் கடந்து அவளின் கைக்கு சிக்கியது அந்த பேக்.

வேகமாய் அதைத் திறந்தவள்….அவசர அவசரமாக தேட..எதவும் அவள் கைகளுக்கு அகப்படவில்லை.மீண்டும் தேட….பேக்கை தலைகீழாக கொட்டினாள்.

“ங்கே” என்று விழுந்தது அந்த பொருள்.கண்கள் தெறிக்க அதைப் பார்த்தவள்…நீண்ட நாட்களுக்கு பிறகு…கைகள் நடுங்க அதை எடுத்தாள்.

கீர்த்தனாவின் கைகளில் தொங்கிய தாலியும்,போட்டோவில் தேவாவின் அம்மா கழுத்தில் தொங்கிய தாலியும் ஒன்றாய் ஆடுவது போன்ற பிரம்மை அவளுள்.

அவளுக்கு உடல் முழுதும் வியர்க்க ஆரம்பிக்க….இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தபடி,கண்கள் தெறிக்க…. அப்படியே நின்று விட்டாள்.

“கீர்த்தனா..! என்னமா பண்ற…? சப்பிடலையாமா…?” என்றபடி வந்தார் பத்மா.

கீர்த்தனா நின்றிருந்த கோலத்தைப் பார்த்த கீர்த்தனா திகைத்தார். ”என்னம்மா ஆச்சு…?ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்று கேட்க…அப்பொழுது தான் கவனித்தார் அவளின் கைகளில் இருந்த தாலியை.

“இந்த தாலி உன்கிட்ட எப்படி வந்தது கீர்த்தனா…!” என்றார் பத்மா.

கீர்த்தனா புரியாமல் பார்க்க…. 

“ஓஹோ…! தேவா குடுத்தானா…!இது தேவா அம்மாவோட தாலி.உங்க கல்யாண சமயத்துல இதைக் காணோம்ன்னு வீடே தேடி கிடைக்கலை.அதான் வேற தாலி செய்தோம்….!”என்று பத்மா எதார்த்தமாய் அடுக்கிக் கொண்டு போக…

“இது அத்தை தாலி தான்னு உங்களுக்கு உறுதியா தெரியுமா அத்தை..!” என்று கீர்த்தனா வினவ….

“என்ன கீர்த்தனா…!எனக்கெப்படி தெரியாம இருக்கும்…இது நம்ம குடும்பத்தோட பரம்பரை தாலி….இதோ..என்னுடையதும் அப்படித்தான் இருக்கும்..!” என்றபடி தன தாலியையும் எடுத்துக் காட்டினார் பத்மா.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய் தாக்கிக் கொண்டிருந்தது கீர்த்தனாவிற்கு.பத்மாவின் கழுத்தில் இருந்த தாலியும் அப்படியே இருந்தது.இத்தனை நாள் எப்படி இதை கவனிக்காமல் விட்டேன்..! என்றபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.

“சரிம்மா…!அதை வச்சிட்டு சாப்பிட வா..!”  என்றபடி சென்று விட்டார் பத்மா.

ஆனால் கீர்த்தனாவோ இருந்த இடத்தை விட்டு நகரவேயில்லை. கண்களில் கண்ணீர் பெருக…பழைய நினைவுகள் மனதில் பெருக்கெடுக்க….பட்ட அவமானங்கள் கண்முன் வர…அவளின் மனம் இரும்பாய் இறுகியது.

“அத்தை…!”என்ற அழைப்பில் திரும்பினார் பத்மா.”சிந்து…! வாடா…. வாப்பா அஸ்வின்….”என்றபடி சிந்துவின் கைகளில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார் பத்மா.

“உட்காருங்க…!எப்படி இருக்கீங்க…?என்னடா சிந்து இளைச்சுப் போயிட்ட..” என்று குறைபட….

“அம்மா…!நிஜம்மா சொல்லுங்க..இவளைப் பார்த்தா இளைச்சுப் போன மாதிரியா இருக்கு…!” என்று அஸ்வின் கிண்டல் பண்ண…

“பாருங்க அத்தை இவனை….வர வர என்னை ரொம்ப கிண்டல் பண்றான்….”என்று சிணுங்கினாள் சிந்து.

“எங்க அத்தை தேவா…!அவன் கல்யாணத்துக்கு வரலைன்னு கோபமா இருப்பான்…!” என்று விசாரித்தாள் சிந்து.

தேவாவின் திருமணத்தின் போது….சிந்துவுக்கு நிறைமாதம் என்பதால் லண்டனில் இருந்து வர முடியவில்லை.ஆனால் அதற்காக அவள் வருத்தப்படாத நாளே இல்லை எனலாம்.

“அதெல்லாம் கோபப்பட மாட்டான் சிந்து.குட்டிப் பையன் அப்படியே உன்னை மாதிரியே இருக்கான்.குழந்தை பிறந்த பின்னும் வந்து பார்க்க முடியலைடா…எதுவும் நினைச்சுக்காத…” என்று பத்மா வருத்தப்பட…

“ஹாய் சிந்து..!”என்றபடி வந்தாள் கார்த்திகா.

“ஹாய் அண்ணி…!எப்படி இருக்கீங்க…?எங்க அண்ணன் எப்படி இருக்கான்..அவனை கண்கலங்காம வச்சு காப்பாத்துறிங்களா..?” என்று வார…

‘உன் பாச மலர் ஆபீஸ் போயிருக்கார்…!”என்று பேச்சை முடித்துக் கொண்ட கார்த்திகாவிற்கு சிந்துவின் கைகளில் இருந்த குழந்தையை தூக்க வேண்டும் போல் ஆசை எழுந்தது.இருந்தாலும் ஏதோ ஒன்று தடுத்தது.

எப்பேர்பட்ட குணம் உடைய பெண்களுக்கும் தாய்மை என்ற உணர்வு வந்தால் மாறிவிடுவர்.ஆனால் கடவுள் அவளுக்கு அந்த குடுப்பினையை வழங்காமல் இருந்தார்.

“இந்தாங்க அண்ணி..! உங்க மருமகனைப் பாருங்க..!” என்றபடி அவள் கைகளில் திணித்தாள் சிந்து.

கண்கள் கலங்கிய கார்த்திகா….குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவளின் அறைக்கு தூக்கிக் கொண்டு சென்று விட்டாள்.

அவளையேப் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவிற்கு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

“எங்க அத்தை உங்க மருமக..?” என்று வினவ….அதே சமயத்தில் கீர்த்தனாவும் கீழே வந்தாள்.

கீர்த்தனாவைப் பார்த்த சிந்து திகைத்தாள்.இவங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே…! என்று யோசித்தவள்…அதிர்ந்தாள்.அந்த நாளின் தாக்கம் சிந்துவின் முகத்தில் ஒரு நிமிடம் வந்து போக…

“கீர்த்தனா இது என் அண்ணா பொண்ணு சிந்து…இது அவள் கணவன் அஸ்வின்.உங்க கல்யாணத்தப்ப சிந்துவுக்கு டெலிவரி மாதம்….அதான் வர முடியலை…லண்டன்ல இருக்காங்க..!” என்று பத்மா அறிமுகப்படுத்த…

“வாங்க..!” என்றாள் கீர்த்தனா  உயிர்ப்பே இல்லாமல்.

“பேசிட்டு இருங்க…ஜூஸ் எடுத்துட்டு வரேன்..!” என்று பத்மா நகர…

“எப்படி இருக்க கீர்த்தனா…நானும் தேவாவும் கிளாஸ்மேட்…அப்பறம் தேவா என் அத்தை பையன் தான்…”என்று சிந்து உளற..

“என்னாச்சு சிந்து..? உங்க அத்தையும் அதைத்தான சொல்லிட்டுப் போனாங்க…நீ ஏன் மறுபடியும் ட்ரான்ஸ்லேட் பண்ற…?” என்று அஸ்வின் கேட்க…

சிந்துவுக்கு…”ஆமா இல்ல..” என்று தோன்றியது.தன்னை சகஜமாக வைத்துக் கொள்ள முயன்றாள்.ஆனால் அதற்கு பின்னால் அங்கு என்ன நடந்தது என்பதை கீர்த்தனா அறியாள்.அவளின் நினைப்பும்,யோசனையும் ஒன்றை சுத்தியே இருந்தது.

சற்று நேரத்தில் சிந்துவும்,அஸ்வினும் கிளம்பியதைக் கூட அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

விசிலடித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் தேவா.”என்ன மச்சி ரொம்ப ஹேப்பியா இருக்க போல..!” என்றான் குணா.

“ஆமாம்டா….!” என்றவன்…ரசித்தபடி டிரைவ் செய்து கொண்டிருந்தான்.

ரசனையோட காரை ஓட்டுறவன் நீயாத்தாண்டா இருப்ப…! என்று குணா நக்கலடிக்க…

“மனசு லேசா இருந்தா…..எல்லாத்தையும் ரசிக்கத் தான் தோணும் குணா.எனக்கு இப்ப அப்படித்தான் இருக்கு. காலையில் கீர்த்தியைப் பார்த்த உடனே….எல்லா கவலையும் மறந்து விட்டது.ஏதோ புதுசா பிறந்த மாதிரி இருக்கு…! இவ்வளவு சீக்கிரம் மனசு மாறி வருவான்னு நான் எதிர்பார்க்கலை..!” என்றான் தேவா.

“இந்த காதல் தான் உன்னை என்னா பாடு படுத்துது…ம்ம்ம்ம்…எப்படியோ நல்லா இருந்தா சரி தான்..!” என்று குணா சொல்ல…

“இன்னைக்கு கீர்த்திய வெளிய கூட்டிட்டு போறேண்டா…இன்னைக்கு எப்படியாவது மனசு விட்டு பேசிடனும்…!”என்று அவளைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியவன்….கண்களில் காதலுடன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

குணாவை இறக்கி விட்டவன்…அதே கனவுகளுடன்….வீட்டை சென்றடைந்தான்.விசிலடித்தபடி, இரண்டு இரண்டு படிகளாக …..தாவிச் சென்று….ஆசையுடன் அறைக்குள் நுழைந்தான்.

அவன் எதிர்பார்ப்பிற்கு மாறாக…கட்டிலில் இருகிய முகத்துடன் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.

“ஹேய் கீரு..!கிளம்பலை..!” என்று கேட்க…அதற்கு அவள் மவுனமே பதிலாய் கிடைத்தது.

கீர்த்தனா…! என்று அவளை நெருங்க….நிமிர்ந்தாள் கீர்த்தனா.

நிமிர்ந்தவள் விழிகள் நீரை சுமந்திருக்க….

“என்னாச்சு கீர்த்தி…?” என்று தேவா வினவ….ஒரு நிமிடம் அவனி வெறித்தவள்….

தன் கைகளில் இருந்த தாலியை அவன் முன்னால் காண்பித்தாள் கீர்த்தனா.

“கீர்த்தனா…!” என்று அவன் அதிர….அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு…இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் விலகியது.

இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க…..இருவரின் முகத்திற்கும் இடையில் தாலி தடுப்பனையாய் ஆடிக் கொண்டிருந்தது.

 

பூட்டி வைத்த மனக்கதவு திறக்குமா….

கூட்டி வந்து அன்பைக் கண்ணில் காட்டுமா…

 

 

 

Advertisement