Advertisement

தூரிகை 17:

 

அன்று இரவு தேவா… கீர்த்தனா இருந்த அறை பக்கம் வரவேயில்லை.அவன் வரவில்லை என்பது ஒரு புறம் மகிழ்வைக் கொடுத்தாலும்,மறுபுறம் சற்று வேதனையையும் கொடுத்தது அவளுக்கு.

கீர்த்தனாவிற்கு யாரையும் எடுத்தெறிந்து பேசும் பழக்கம் சிறுவயது முதலே இருந்ததில்லை.ஆனால் இன்று ஏன் அவனை அவ்வாறு பேசினாள் என்பது அவளுக்கு விளங்கவில்லை.

“யாரு…. நீ….? அவன் உன்னைப் பொண்ணுப் பார்க்க வந்தப்ப இருந்து….அவனை எடுத்தெறிந்து தான் பேசுற…? இப்ப மட்டும் என்ன புதுசா அவன் மேல் அக்கறை,கரிசனம் எல்லாம்…” என்று மனசாட்சி கிண்டலடிக்க…

“நான் தான் அப்பவே சொன்னேனே…அவன் தானே வந்து மாட்டிக் கிட்டான்…” என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

சரியாக அவளது அலைபேசி ஒழிக்க…தனது சிந்தனைகளில் இருந்து மீண்டவள்..செல்லை எடுத்து பார்க்க…அவள் தந்தை செழியன் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.

“அப்பா…..” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.கண்கள் கலங்க..குரல் தளுதளுத்தது.

“கீர்த்தனா…! என்னடாம்மா…? குரல் ஒரு மாதிரியிருக்கு….? என்னாச்சும்மா…?” என்றார் பதறிப் போனவராய்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா…..!உங்க குரல் கேட்ட உடனே ஒரு மாதிரி ஆகிட்டது….அதான்…” என்றாள்.

“எப்படிம்மா இருக்க..?” என்றார் பாசமாய்.

“ம்ம்…நான் நல்லா இருக்கேன்ப்பா…!” என்று அவள் முடிப்பதற்குள் அவள் அன்னையின் குரல் கேட்டது.

“கீர்த்தி….எப்படி தங்கம் இருக்க…? மாப்பிள்ளை நல்லா இருக்காரா…? வீட்ல எல்லாரும் சவுக்கியமா…?” என்றார் அடுக்கடுக்காய்.

“இங்க எல்லாரும் நல்லா இருக்கோம்ம்மா….!” என்றாள் பொதுப்படையாய்.

“மாப்பிள்ளை எங்கம்மா…?இருந்தா அவர்கிட்ட போனைக் கொடு…!” என்று கலையரசி சொல்ல…

“அவர் எங்க இங்க இருக்கார்..அவரோட அறையில்….” என்று சொல்லப் போனவள்….அப்பொழுது தான் தன் தவறை உணர்ந்தவளாய்…

”அவர்..அவர்…ஆபீஸ் அறையில்…ஏதோ வேலையாயிருக்கார்…” என்று உளறிக்கொட்டி முடிக்க…

“தாய் அறியாத சூழா…” என்பதை உறுதிப் படுத்தும் விதமாக…”மாப்பிள்ளை கூட சந்தோஷமாத்தான இருக்க…” என்றார் சந்தேகமாய்.

அவரது கேள்வியில் கடுப்பானவள்….”எப்பப்பாரு உங்களுக்கு சந்தேகம் தானா…?என் மேல உங்களுக்கு நம்பிக்கையில்லையா…?” என்று குரலை உயர்த்திப் பேச…

“அப்படியெல்லாம் இல்ல கண்ணு…என் புள்ளைய நம்பாம யார நம்ப போறேன்…!பெத்த மனசு….கண்டதையும் யோசிக்குது…” என்றார் கலை சமாதானமாய்.

“எனக்கு உங்களையும்,அப்பாவையும் பார்க்கணும் போல இருக்கும்மா…” என்றாள் கண்களில் கண்ணீர் கரகரவென வழிய….

கீர்த்தனாவின் நிலை சரியாக இல்லை என்பதை…அவளது பேச்சில் இருந்தே கண்டு கொண்டார் கலையரசி.”நெல்லு அடிச்சு,களத்துல இருக்குது,நம்ம செவல மாடு வயிறு இறங்கி.. இன்னைக்கோ…நாளைக்கோன்னு இருக்கு…சீக்கிரம் கண்ணு குட்டி போட்டுடும்… இப்போதைக்கு எங்களால் வர முடியாது கீர்த்தனா…நீ வேணும்ன்னா மாப்பிள்ளையைக் கூட்டிட்டு வந்து ரெண்டு நாள் தங்கிட்டு போம்மா..” என்றார் கலை.

“இல்லம்மா…பரவாயில்லை.அவருக்கு வேலை அதிகம்….உங்களுக்கு எப்ப முடியுமோ…அப்ப வாங்க…!” என்றபடி வைத்துவிட்டாள்.

கலையரசி உறுதியே செய்து விட்டார்…அங்கு ஏதோ பிரச்சனை என்று.அடுத்து அவர் செய்த முதல் காரியம் என்னவாக இருக்கும்…?

”ஏங்க..! நம்ம மாப்பிள்ளை நம்பருக்கு போடுங்க…” என்று செழியனிடம் போனை நீட்ட…என்னவென்று புரியாமல் தேவாவின் நம்பருக்கு டயல் செய்தார்.

கைகளை தலைமேல் வைத்து…விட்டத்தை வெறித்தபடி படித்திருந்தான் தேவா.அவனின் செல்போன் ஒழி எழுப்ப….அவனிடம் எந்த அசைவுமில்லை.மீண்டும் மீண்டும் ஒலிக்க…..ஒரு கட்டத்தில் நிஜத்திற்கு வந்தவன்….அதில் செழியனின் நம்பரைப் பார்க்கவும் குழம்பினான்.

“இந்த நேரத்துல எதுக்காக கூப்பிடுறாங்க…அதுவும் விடாம…!” என்று யோசித்தபடி எடுத்தவன்..”சொல்லுங்க மாமா…” என்றான்.

“நான் கலையரசி பேசுறேன் மாப்பிள்ளை…….நல்லாயிருக்கிங்களா….?” என்றார் மகிழ்ச்சியாய்.

“எனக்கென்ன அத்தை …நான் நல்ல இருக்கேன்.நீங்க..மாமா எல்லாம் எப்படி இருக்கீங்க…?ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா..?” என்றான்…ஏதோ அங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி.

“நாங்க எல்லாரும் நல்லாயிருக்கோம் மாப்பிள்ளை…”என்று சொல்ல…

“கீர்த்தனா…!” என்று அவர் ஆரம்பிக்கும் முன்…”கீர்த்தனா…கீர்த்தனா அவ குளிச்சுட்டு இருக்கா அத்தை…” என்றான் தானாய் வலையில் சிக்கியவனாய்.

கலையரசி முடிவே செய்துவிட்டார்….அங்கு ஏதோ சரியில்லை என்று.

“ஒண்ணுமில்லை மாப்பிள்ளை…கீர்த்தனாவையும்,உங்களையும் பார்க்கணும் போல இருக்கு…ஒரு எட்டு வந்துட்டு வரலாம்ன்னா…இங்க மாடு கண்ணு போடுற மாதிரி இருக்கு….நீங்க தப்ப எடுத்துக்கலைன்னா…கீர்த்தனாவை கூட்டிட்டு வந்து ஒரு இரண்டு நாள் இருந்துட்டு போங்க மாப்பிள்ளை…” என்றார் தயக்கமாய்.

ஒரு நிமிடம் தயங்கினான் தேவா.”நான் சரின்னு சொன்னாலும் அவள் சரின்னு சொல்லுவாளா…?” என்ற தயக்கம் தான் அது.

அதற்குள் கலையரசி…எதிர்புறம் அவனைக் கூவிக் கூவி அழைக்க…”கண்டிப்பா அத்தை…இந்த வாரத்துல கூட்டிட்டு வரேன்..!” என்று உறுதியளித்து போனை வைத்தான்.

“இப்ப எப்படி இவகிட்ட சொல்றது…?’என்று யோசிக்க…”அவள் வருவாளா…?” என்ற எண்ணமும் உதித்தது.

“எந்த பெண்ணும் அவங்க அம்மா,அப்பாவைப் பார்க்க வரமாட்டேன்னு சொல்ல மாட்டங்க…!” என்று மனம் எடுத்து சொல்ல…”சரி போய் கேட்டுப் பார்ப்போம்..” என்று எண்ணியபடி அவளைத் தேடி சென்றான்.

கீர்த்தனாவிடம் சென்றவன்…”உங்க வீட்ல இருந்து போன் பண்ணியிருந்தாங்க…!”என்றான்.

“ம்ம்ம்ம்….எனக்கும் இப்பதான் பேசுனாங்க..!”என்றாள் அமைதியாக.அவளின் பதிலி அதிர்ந்தவன்….

“இவகிட்ட பேசிட்டா அப்பறம் ஏன் நமக்கு கூப்பிடனும்….நாம வேற இவ குளிக்கிறான்னு பொய்யை அள்ளி விட்டுட்டோமே..!” என்று யோசித்தவனுக்கு…ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெளிவாய் புரிந்தது.

“சரி…அப்ப நான் மறுபடியும் சொல்ல அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்…!நாளைக்கு ஈவ்னிங் கிளம்பலாம்..!” என்று அவள் முகம் பார்க்காமல் கூறியவன்…அங்கிருந்து நகன்றான்.

“தேவா…நான் வேணும்ன்னு அப்படி பேச….”என்றபடி நிமிர்ந்தவள்…அவன் இருந்த இடம் வெறுமையாய் இருக்க….நொந்து போனாள்.

அங்கு நின்று அவள் முகத்தைப் பார்த்தால்….தன்னையே தன்னால் கட்டுப் படுத்தத முடியாத சூழ்நிலை வந்து விடும் என்று அஞ்சிய  தேவா அங்கிருந்து நகன்றான்.

ஆனால் அதுவே கீர்த்தனாவிற்கு அவன் வெறுப்பாய் போவது போல் தோன்றியது.எப்பொழுது உறங்கினோம்….என்று அறியாமல் உறங்கிவிட்டாள்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததினால் கல்லூரிக்கு செல்லும் அவசியம் ஏற்படவில்லை கீர்த்தனாவிற்கு.எப்பொழுதும் சீக்கிரமாக எழுந்து கொள்பவளுக்கு…அன்றும் அதே நேரத்தில் முழிப்பு வர…தன்னிலை உணர்ந்து எழுந்தாள்.

“அப்படியே தூங்கிட்டோமா…?” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவள்…வேகமாய் குளித்து விட்டு கீழே சென்றாள்.காலைப் பொழுது ரம்யமாய் இருக்க….யாரும் எழுந்ததற்கான அறிகுறி தெரியவில்லை.

தேவா அவளுக்கு முன்பே எழுந்து ஜாக்கிங் சென்று விட்டான் என்பதை அவள் அறியவில்லை.

தனக்கு மட்டும் காபியை எடுத்துக் கொண்டு…வீட்டின் முன்புறம் உள்ள…அந்த அழகான தோட்டத்தில் சென்று அமர்ந்தாள்.

எவ்வளவு மன பாரத்தையும் குறைக்கும் வல்லமை அன்றலர்ந்த பூக்களுக்கு உண்டு என்பதை மெய்பிக்கும் விதமாக….அவளின் மன சஞ்சலங்கள் எல்லாம் மறைந்து….மலர்களை ரசித்தபடி காபியை குடித்துக் கொண்டிருந்தாள்.

ஜாக்கிங் முடித்துக் கொண்டு வந்த தேவாவிற்கு இந்த அற்புத காட்சி பட…ஒரே ஒரு நிமிடம் என்றாலும்…அவளை ரசனையுடன் பார்த்தவன்…. அடுத்த நிமிடம் அங்கு நில்லாது வீட்டினுள் சென்று விட்டான்.

உள்ளுணர்வு உணர்த்த திரும்பியவளுக்கு கண்களில் பட்டது…அவனின் முதுகுப் பகுதி மட்டுமே…!சட்டென்று வாடியது கீர்த்தனாவின் முகம்.

தன்னிடம் நின்று பேசக் கூட அவனுக்கு பிடிக்கவில்லையா…?எப்பொழுதும் தன்னைப் பார்த்தால்… ஆசையுடன் வந்து பேசும் தேவா அவள் கண் முன் வந்து போனான்.தவளை தன் வாயால் கெட்ட கதைதான்…. அவளுடைய கதையுமாகிப் போனது.வாழ்க்கை…. இழந்த விஷயங்களை அவ்வளவு சீக்கிரம் திருப்பித் தருவதில்லை.

டிபன் செய்யலாம் என்று சமயலறைக்கு செல்ல…அங்கே பத்மா  நின்று கொண்டிருந்தார்.அவரைப் பார்த்து சிறு புன்னகை பூக்க…பத்மாவோ அமைதியாகவே பார்த்தார்.

“ஏன் அத்தை ஒரு மாதிரியாக இருக்கீங்க…?” என்றாள்.

“இல்லையே நல்லாத்தான் இருக்கேன் கீர்த்தனா…!இன்னைக்கு தேவா பிரண்டும்,அவங்க குடும்பமும் வராங்களாம்…!மதியம் நான்வெஜ் சமைக்க சொன்னான்…!” கடமையே என்று பதில் சொன்னார் பத்மா.

“டிபன் முடுச்சுட்டு நான் சமைக்கிறேன் அத்தை…!” என்றாள்.

“அப்பறம் நானா சமைக்க முடியும்…நீ தான் சமைக்கணும்…!ஆனா தேவாவுக்கு நான்வெஜ்ன்னா ரொம்ப பிடிக்கும்…டேஸ்ட் இல்லன்னா…சுத்தமா தொடக்கூட மாட்டான்..!” என்றார்.

“நான் பார்த்துக்கறேன் அத்தை..!” என்று கீர்த்தி கூற…”இன்னைக்கு சாயந்திரம் ஊருக்கு போறதா சொன்னான் தேவா…!” என்று கேட்க….”ஆமாம்” என்பதைப் போல் தலையாட்டினாள் கீர்த்தி.

“அங்க உங்க ஊருக்கு போயும் ஆளுக்கு ஒரு ரூம்ல இருந்தா…உங்க அம்மா,அப்பா நிம்மதியும் போய்டும்…அங்க போய் அவங்க நிம்மதியையும் கெடுத்துடாதிங்க..!” என்று பத்மா சாடையாய் சொல்ல…கடுப்பானாள் கீர்த்தனா.

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க அத்தை…யாரோட நிம்மதியையும் நாங்க கெடுக்கனும்ன்னு நினைக்கலை…!ஒரே அறையில் இருந்தாத்தான் புருஷன் பொண்டாட்டின்னு உங்களுக்கு யார் சொன்னது.எப்படி இருந்தாலும் உங்க பையன் தான் எனக்கு புருஷன்,நான்தான் அவருக்கு பொண்டாட்டி.இது எங்க வாழ்க்கை.எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்…அதை யாருக்கும் விளக்கி சொல்லனும்ன்னு அவசியம் இல்லை.

நாங்க இன்னைக்கு அடிச்சுப்போம்,நாளைக்கு கூடிப்போம்.அதனால் எங்களை கண்காணிப்பு செய்யாம…இந்த காபியைக் குடிங்க…! என்று அவர் கைகளில் திணித்தவள்…..டிபன் செய்வதில் கவனமானாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திகா….பத்மாவின் அருகில் வந்து..”பாரும்மா..!எப்படி பேசுறான்னு.நீங்கதான் அவளைத் தலையில் தூக்கி வச்சு கொண்டாடுறிங்க….ஆனா அவ கொஞ்சம் கூட உங்களை மதிக்கிறது இல்லை…” என்று ஏத்தி விட…

“எனக்கும்,என் மருமகளுக்கும் இடையில் ஆயிரம் இருக்கும் கார்த்தி…நாங்க இன்னைக்கு அடிச்சுப்போம்,நாளைக்கு கூடிப்போம்…எங்க பிரச்சனையில் நீ தலையிடாத…” என்று பத்மா பட்டென்று கூற…

காதில் விழுந்த பதிலில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தனா.பத்மா அவரைப் பார்த்து கண்களை அமர்த்தி புன்னகை செய்ய…அவளும் அதிசயித்து சிரித்தாள்.

அங்கு நடந்த சம்பாஷனைகள் அனைத்தையும் கேட்டாலும்…எதுவுமே கேட்காததைப் போல்,குளித்து முடித்து வந்தான் தேவா.ஆனால் ஏதோ ஒரு விதத்தில் கீர்த்தனாவின் பேச்சு அவனுக்கு ஆறுதல் அளித்தது என்றாள் அது மிகையில்லை.

“என்ன…? காலங்காத்தாலேயே இங்க மாநாடு…?எதுக்கு முகத்தை இப்படி உர்ருன்னு வச்சுருக்க கார்த்திகா..!” என்று வினவினார் மாறன்.

“இந்த அம்மா வரவர சரியில்லைப்பா…!எப்ப பார்த்தாலும் தேவாவுக்கும்,கீர்த்தனாவுக்கும் சப்போர்ட் பண்றாங்க…!அவங்க விஷயத்துல நான் தலையிடக் கூடாதாம்..!எனக்கு அந்த உரிமை இல்லையாப்பா…?” என்று தந்தைக்கு மேல் நடிக்க..

“ஏன் இல்லாம..! உங்கம்மாவுக்கு வரவர கிறுக்கு பிடிச்சுருக்கு..!” என்று மாறன் மகளுக்கு ஆதரவாய் பேச…அங்கு வந்த ராஜா நொந்து போனான்.

”அப்பனுக்கேத்த பொண்ணு….” என்று வாய்க்குள் முனுமுனுக்க…“என்ன சொன்னிங்க..?” என்றாள் கார்த்திகா சீற்றமாய்.

“ஒன்றுமில்லை…!” என்றான் வேண்டா வெறுப்பாய்.

ராஜாவுக்கும், கார்த்திகாவின் போக்கும்,மாறனின் போக்கும் சுத்தமாய் பிடிக்கவில்லை.

சிந்துவின் அண்ணன் தான் ராஜா.தேவாவிற்கும்,சிந்துவிற்கும் திருமணத்தை முடித்து விட வேண்டுமென்று சண்முகம் போட்ட கணக்கு தப்பாகி விட…..தளராமல் ராஜாவிற்கும்-கார்த்திகாவிற்கும் திருமணத்தை நடத்தி முடித்தார்.

முதலில் சிறிது தயங்கிய மாறன்….பின்பு ஏற்றுக் கொண்டார்.ஆனால் சண்முகம் எதிர்பார்த்த எந்த காரியமும் ராஜாவால் அவருக்கு நடைபெறவில்லை.சண்முகத்தின் குணமோ…குள்ளனரித்தனமோ அவரின் பிள்ளைக்கு இல்லாமல் போனது தான் அவர் செய்த துர்பாக்கியம்.

ராஜாவும், கார்த்திகாவை பிடித்து தான் கட்டிக் கொண்டான்.ஆனால் அவளின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தன்னுடைய பொறுமையை இழந்து கொண்டிருந்தான்.

அவன்…. மாமனார் வீட்டோடு இருப்பதற்கு காரணமும் சண்முகம் தான்.அவன் எவ்வளவோ மறுத்தும் அவர் தான் கட்டாயப்படுத்தி அவனை அங்கேயே தங்க வைத்தார்.அதுவே நாளடைவில்அவனின் தன்மானத்திற்கு இழுக்கையும் இழுத்து விட்டது.

ஆனால் மனைவி மேல் அவன் கொண்ட காதல்…அவளின் அனைத்து முரண்பாடுகளையும் களைய செய்தது.அவளின் குணம் மாறும் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தான்.

எதிர்பார்த்த நேரத்தில்,குணாவும் தனது பெற்றோருடன் வர…தேவா அவர்களை வாசல் வரை சென்று வரவேற்றான்.

“வாங்கப்பா…வாங்கம்மா….!” என்றவன்…”வாடா..” என்று நண்பனின் தோளில் கையைப் போட்டுக் கொண்டான்.

“வாங்கண்ணா….வா குணா..!” என்றார் பத்மாவும் மரியாதை நிமித்தமாய்.

“என்னப்பா சூர்யா..? எங்களையெல்லாம் மறந்துட்டியா..?” என்று சியாமளா குறைபட…

“உங்களை என்னால் மறக்க முடியுமாம்மா…? எங்க இருந்தாலும் ஓடி வந்திருப்பேன்…!” என்று அவரை தோளோடு அணைத்துக் கொண்டு உரிமையுடன் கொஞ்ச….பத்மாவின் முகம் ஒரு நிமிடம் வேதனையில் சுருங்கியது.இருந்தாலும் சமாளித்துக் கொண்டார்.

இவர்களைப் பார்த்த மாறன்..ஒப்புக்கு…”வாங்க…!” என்று சொன்னவுடன் உள்ளே சென்று விட்டார்.கார்த்திகாவும் தந்தையுடன் சேர்ந்து கொள்ள… ராஜா மட்டும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

மாறனுக்கு எப்பொழுதும் குணாவையும்,அவன் குடும்பத்தையும் பிடிக்காது.அதிலும் தயாளனைக் கண்டால் கொஞ்சம் பயம் வருவதும் உண்மைதான்.அவர் ஒரு பத்திரிக்கை நடத்துபவராக இருந்ததால்…எதையும் ஆழ்ந்து நோக்குவார்.தயாவின் பார்வையே… ஒருவரின் செயல்பாடுகளை கண்காணித்து விடும்.அதனால் ஆரம்ப காலத்திலிருந்தே மாறன் அவருடன் வைத்துக் கொள்வதில்லை.

“எங்கடா என் மருமக….?” என்று தயாளன் கேட்டு முடிப்பதற்கும்…கீர்த்தனா உள்ளிருந்து வருவதற்கும் சரியாய் இருந்தது.

“இதோ வந்துட்டா…உங்க மருமக..!” என்று தேவா அறிமுகப்படுத்த… கீர்த்தனாவைப் பார்த்த குணா பிரம்மித்தான்….தன் முகத்தை சரியாக வைத்துக் கொள்ள அவன் வெகு பிராயத்தனம் பட வேண்டியிருந்தது.

“ஹலோ சிஸ்டர்…! எப்படி இருக்கீங்க…? என் நண்பனைக் கண்கலங்காம வச்சுருக்கிங்கல்ல…?”என்று அவன் கேட்ட தொனியில் கீர்த்தனாவிற்கு சிரிப்பு வர..சிரித்து விட்டாள்.

ஆனால் தயாவின் பார்வையோ ஆராய்ச்சியுடன் அவள் முகத்தில் படிந்தது.

அவளை கண்களால் அழைத்தவன்…”ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா…!”என்று தயாளன்-சியாமளா தம்பதி காலில் விழ… சந்தோஷமா இருங்கப்பா…” என்று வாழ்த்தினர்.

முள் மேல் நிற்பதைப் போல் இருந்தது கீர்த்தனாவிற்கு.தயாவை அவளுக்கு எங்கேயோ பார்த்தத்தைப் போல் இருந்தது.ஆனால் சட்டென்று நியாபகத்திற்கு வர மறுத்தது.

“நான் இதுக்கு முன்னாடி உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் அங்கிள்…!” என்று தன்னை மீறி வாய்விட்டு சொல்லிவிட்டாள்.

“அப்படியாம்மா,….!”என்ற ஆச்சர்யத்துடன்  அவர் முடித்துக் கொள்ள….குணாவின் பார்வை தேவாவை சந்தித்தது.அவன் கண்களில் எதைப் படித்தானோ….குணாவும் அமைதியானான்.

தேவா-குணா நெருக்கத்தைப் பார்த்த கீர்த்திக்கு குழப்பம் தான் மிஞ்சியது. “இவ்வளவு நெருக்கமா இருக்காங்க..அப்பறம் ஏன் கல்யாணத்துக்கு கூட வரலை….என்று யோசிக்க….இப்ப அதுக்கெல்லாம் நேரமில்லை… வந்தவங்களை கவனி..” என்று மூளை அறிவுறுத்த…தன் யோசனையைத் தள்ளி வைத்தாள்.

மதிய உணவை முடித்தவர்கள்…சிறிது நேரத்தில் கிளம்ப…தேவாவை அங்கிருந்த அலுவல் அறைக்குள் இழுத்து சென்ற குணா…அரைமணி நேரம் பேசி முடித்த பிறகு வெளியே வந்தான்.

“நல்லா யோசிச்சேன் தேவா….நீ சொன்ன மாதிரி கல்லூரியில் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்…” என்று தயாளன் சொல்ல…

“தேங்க்ஸ் ப்பா…..” என்று தேவா அவரின் கைகளைப் பிடித்துக் கொள்ள…”உனக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா…? ஒரு நாள் கீர்த்தனாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு வாடா..” என்றபடி கிளம்பினார்.

“பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்காப்பா…அடக்கமான,குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணு…!அவளை நல்லாப் பார்த்துக்கோ…!” என்று  தேவாவிற்கு அறிவுரை வழங்கியபடி கிளம்பினார் சியாமளா.

அதையெல்லாம் தாண்டி….தயாளன் கல்லூரிக்கு வருகிறார் என்ற செய்தி மாறனின் தலையில் இடியாய் இறங்க…. பிரமை பிடித்தவரைப் போல் அமர்ந்திருந்தார்.

Advertisement