Advertisement

தூரிகை 16 :

 

அதி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் மாறனும்,சண்முகமும். கல்லூரியில் தன்னுடைய பொறுப்பு கைவிட்டுப் போனதை நினைத்து மறுகிக் கொண்டிருந்தார் மாறன்.தேவா கோபக்காரன் என்று அவருக்கு தெரியும்.. ஆனால் இந்த அளவு கோபம் அவர் எதிர்பாராதது.

“இப்ப என்ன நடந்து போய்டுச்சுன்னு இப்படி இருக்கீங்க…! இத்தனை வருஷம் இந்த எல்லா சொத்தையும் கட்டிக் காத்தவர் நீங்க…? இதெல்லாம் பெரிய விஷயமா…? இளம் ரத்தம் கொஞ்சம் சூடாதான் இருப்பான்… மத்தபடி நம்மை மீறி அவனால் ஒன்னும் செய்ய முடியாது..!” என்றார் சண்முகம்.

“அப்படி எல்லாம் தேவாவை சாதரணமா எடை போட்டுட முடியாது சண்முகம்.அவன் ரொம்ப புத்திசாலி.இந்த மூணு வருஷம் மடையனா இருந்தது தான்  என் தப்பு.பையன் நம்மை மீற மாட்டான்னு நினைத்தது என் முட்டாள்த்தனம்..” என்றார் மாறன்.

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடலை..நாம நினைச்சா கண்டிப்பா அவனை நம்ம வழிக்கு கொண்டு வரமுடியும்…” என்றார் சண்முகம் பீடிகையாய்.

“அதற்கு வழியே இல்லாமல்..எல்லா பக்கத்தையும் அவன் அடைத்து விட்டான்..” என்றார் மாறன் எரிச்சலுடன்.

“ஏன் இல்லை….? அதற்கான வழி உன் மருமகள் ரூபத்தில் தான் இருக்கிறது…” என்று சண்முகம் கூற…

“மருமகள் ரூபத்திலா..?” என்று அதிர்ந்தார் மாறன்.

மாறனின் அதிர்ச்சியை சாதகமாக்கிக் கொண்ட சண்முகம்….”இப்ப இருக்குற கதை வேறன்னாலும்…இதுக்கு முன்னாடி இருந்த கதை வேற தானே…! எதுவும் எதிர்த்துப் பேசாத….நம்ம சொல்லுக்கு கட்டுப்படுற கும்பமும்,அந்த குடும்பத்துப் பெண்ணையும் தான நாம இவனுக்கு கட்டி வச்சோம்…

இப்ப அந்த பெண்ணை வச்சே இவனை வழிக்குக் கொண்டு வந்துடலாம். ஆனா அதுக்கு அந்த பெண் நமக்கு ஒத்துழைப்புக் குடுக்கணும்…” என்றார் பிழைப்புக்கு அச்சாரமாய் சண்முகம்.

கீர்த்தனா….வீட்டில் கார்த்திகாவைப் போட்ட போட்டை நினைத்துப் பார்த்த மாறனுக்கு…இந்த யோசனை சரியாய் வரும் என்று தோணவில்லை.

“இது சரியா வராது சண்முகம்…முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன்…பெண்ணு ரொம்ப அமைதி.கிராமத்து பொண்ணு…நாம எது சொன்னாலும் கேட்பான்னு…ஆனா போடுற போட்டைப் பார்த்தா கண்டிப்பா அந்த பொண்ணு சைடு இருந்து நமக்கு ஒத்துழைப்பு கிடைக்காது…” என்றார் மாறன்.

“எல்லாம் இந்த பத்மாவினால் வந்தது…!” என்று சண்முகம் எரிச்சலுடன் கூற…

“அது என்னவோ உண்மைதான்…அதுவும் இப்பவெல்லாம் உன் தங்கச்சி சப்போர்ட் முழுக்க முழுக்க தேவாவுக்குத் தான்…செஞ்ச தப்பெல்லாம் உணர்ந்து அவன் கிட்ட மன்னிப்பு கேளுங்கன்னு சொல்லுறா…உன் அருமை தங்கச்சி…” என்று மாறன் எகத்தாளமாய் கூற….

“அவளை விட்டுத் தள்ளுங்க..பிழைக்கத் தெரியாதவள்.என் சொல்படி கேட்டிருந்தால் இந்நேரம் எல்லாமே சுபமாய் முடிந்திருக்கும்…” என்று பெருமூச்செறிந்தார் சண்முகம்.

“ஆமா சிந்து எப்படி இருக்கா சண்முகம்..?” என்றார் மாறன்.

“அவளுக்கென்ன..? நல்லா இருக்கா…? ஆனா அவளைப் பத்தி என்கிட்டே பேசாதிங்க.எனக்கு இப்படியொரு பொண்ணு..எல்லாம் என் தலைஎழுத்து..” என்று அலுத்துக் கொண்டார்.

மாறன் ஐம்பது சதவிகிதம் சுயநலம் பிடித்தவர் என்றால்…சண்முகம் நூறு சதவிகிதம் சுயநலம் பிடித்தவர்.சேர்க்கை சரியில்லாத மனிதன் எந்த அளவிற்கு சீரழிந்து போவான் என்பதற்கு மாறன் ஒரு உதாரணம்.

கிரானைட் கம்பெனியில் தனது அறையில் அமர்ந்து முழுமூச்சுடன்…. அனைத்து அக்கவுன்ட்ஸ் பைல்களையும் பார்த்து…கையெழுத்திட்டுக் கொண்டிருந்தான் தேவா.

“மே ஐ கமின்…!” என்ற கம்பீரக் குரலில் நிமிர்ந்தான்.

அங்கே நின்றிருந்தவரை பார்த்தவனின் கண்களில் மகிழ்ச்சியும்,மனதில் உற்சாகமும் கரைபுரண்டு ஓடியது.வேகமாய் எழுந்து சென்றவன்…”அப்பா..” என்று அவரைக் கட்டிக் கொண்டான்.

“எப்படிப்பா இருக்கீங்க…? உங்களைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது…?” என்று உணர்வு பொங்க பேசிக் கொண்டு போனவனை..தடுத்து நிறுத்தினார் தயாளன்…குணாவின் தந்தை..”

“நான் நல்லா இருக்கேன் தேவா..நீதான் ஆளே மாறிப் போயிட்ட… அடையாளமே தெரியாத அளவுக்கு…ஆள் வாட்ட சாட்டமா….கம்பீரம் கூடி…என் பையன் மீசையெல்லாம் வச்சிருக்கான்…” என்று அவன் தோளைத் தட்டி சிரித்தார் தயாளன்.

“அப்பா..அது வந்து…” என்று தேவா வெட்கப்பட..”சகிக்க முடியலை…ரொம்ப கேவலமா இருக்கு…” என்று குணாவின் குரல் பின்னிருந்து கேட்டது.

“அதானே…! உனக்கு பொறுக்காதே…மூக்கு வேர்த்துடும் இவனுக்கு…” என்று அலுத்துக் கொண்டான் தேவா.

“யார் எனக்கு…? அதுவும் உன்னைப் பார்த்து…!ஐயோ..!ஐயோ..!” என்று தலையிலடித்த குணா…”போதும்டா…..! உங்க பாச பின்னலை  அப்பறம் பின்னுங்க…! இப்ப கொஞ்சம் நகருங்க..!” என்று அவர்களைத் தள்ளிக் கொண்டு சென்று அமர்ந்தான்.

முகத்தில் சிரிப்புடன்…”வாங்கப்பா…வந்து உட்காருங்க..!” என்று அவரை அழைத்து சென்று அமர வைத்தான் தேவா.

“அம்மா எப்படி இருக்காங்க…? ரூபா எப்படி இருக்கா…? குழந்தை எப்படி இருக்கு…?” என்று கேள்வியாய் கேட்டான்.

“அம்மா நல்லா இருக்கா…! ரூபா,குழந்தை எல்லாம் சவுக்கியமா இருக்காங்க தேவா…! நேத்து தான்  வந்தோம்..!” என்று தயாளன் கூற….

அப்பொழுது தான் நியாபகம் வந்தவனாய்…குணாவைப் பார்த்தான்.தேவாவின் கேள்வி புரிந்தவனாய்…”நேத்து நான் சொல்லி, அவங்க உடனே புறப்புட்டு வர ரெண்டு பேரும் ஸ்பைடர் மேன் எல்லாம் இல்லை மச்சி…

நீ சொன்னதும் நான் அப்பாவுக்கு போன் பண்ணினேன்.அப்பறம் தான் தெரிஞ்சது அவங்க ஏற்கனவே கிளம்பிட்டாங்கன்னு….நேற்று இரவு தான் வந்தாங்க..! சோ….காலையில் நேரா இங்க ஆஜர்..” என்றான் குணா.

“என்னாச்சு தேவா…? எதுக்காக என்னை உடனே பார்க்கனும்ன்னு சொன்ன..?” என்றார் தயாளன்.

“அப்பா நடந்த எதுவும் உங்களுக்கு முழுசா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.ஏன் எனக்கே தெரியலை…என்றவன்…மாறனின் ஒவ்வொரு பித்தலாட்டத்தையும் எடுத்து சொல்ல…கவனமாய் கேட்டுக் கொண்டார் தயாளன்.முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டவில்லை. நடந்தவற்றை தனக்கு தெரிந்த வரையில் சொல்லி முடித்தான் தேவா..”.

“நடந்திருப்பது மிகப் பெரிய மோசடி தான்…ஆனா இந்த விஷயத்தில் நான் என்ன செய்ய முடியும்..? உனக்கு எந்த வகையில் நான் உதவ முடியும்…?” என்றார்.

“இப்போ இருக்குற சூழ்நிலையில் எல்லா இடத்துலையும் என்னால் கவனம் செலுத்த முடியாதுப்பா…ஒரு கல்லூரியை நிர்வாகம் பண்ண வேண்டுமென்றால் அதற்கு முதலில் அனுபவம் தேவை.அது என்னிடம் இல்லை.மற்ற தொழில்களைப் போல் அல்ல அது.அதனால் நீங்கள் தான் கல்லூரியை நிர்வாகம் பண்ண வேண்டும்…!” என்றான் கோரிக்கையாய்.

சிறிது யோசனையுடன் தேவாவைப் பார்த்தார் தயாளன்…”நீ சொல்வது எந்த அளவிற்கு நடைமுறைக்கு சாத்தியப்பட்டு வரும்ன்னு தெரியலை தேவா.இதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கு.நான் என்னோட ஆபீஸையும் பார்க்கணும்.எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்…” என்றார் தீர்க்கமாய்.

“ஷ்யர் ப்பா….நீங்க யோசிச்சு சொல்லுங்க…!” என்று தேவா சொல்ல…

“நீங்க யோசிச்சு சொல்லுங்க..! ஆனா எனக்கு இப்ப காபி சொல்லுங்க… நீங்க பேசுறதைக் கேட்டுக் கேட்டு தலைவலி வந்ததுதான் மிச்சம்…” என்று குணா கடுப்புடன் சொல்ல…

“போக்கிரி..” என்று அவனின் தோளில் தட்டி தயாளன் சிரிக்க…அதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.

“ஆமா உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதாமே…!எங்கே என் மருமகள்..! எப்படி இருப்பா..? நல்ல பொண்ணா..?” என்று தயாளன் கேட்க…அவரை ஒரு மார்க்கமாய் பார்த்தவன் …உல்லாசமாய் வாய்விட்டு சிரித்தான் தேவா.

அவன் கண்களில் காதல் கரை புரண்டு ஓட….அதை மன திருப்தியுடன் பார்த்தனர்..தயாளனும்,குணாவும்.

“ரொம்ப நல்லாருக்காப்பா……! ஷீ ஸ் மை லைப் ….என் வாழ்க்கையே அவளால் தான் அழகாய் மாறியிருக்கு…” என்று அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு சொல்ல…குணா அவனை ஆச்சர்யமாய் பார்த்தான்.

திருமணம் ஒருவனை இந்த அளவுக்கு மாற்றுமா…? வெறுமை தெரிந்தவனின் கண்களில் காதல் தெரிகிறது.கடுமை தெரிந்த முகத்தில் கனிவு தெரிகிறது.அதிகாரமாய் ஒலித்த குரல் ஆசையாய் ஒலிக்கிறது…! என்று அவனின் ஆறு வித்தியாசங்களை அடையாளம் கண்டு கொண்டிருந்தான் குணா.

“என்ன குணா அப்படிப் பார்த்துட்டு இருக்க…?” என்று தயா கேட்க..

“ஒண்ணுமில்லைப்பா…மாறன் அங்கிள் என்ன தான் சுயநலவாதியா இருந்தாலும்,தேவா என்னதான் அவருக்கு பிடிக்காதவனா இருந்தாலும்..காலாகாலத்துல அவனுக்கு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டார்ர்ர்ர்…

ஆனா நீங்க…! நமக்கொரு பிள்ளை இருக்கானே..!அதுவும் அழகா வேற இருக்கானே…!அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணனுமே…!அதுக்கு ஒரு அழகான பெண்ணைத் தேடனுமே…! இப்படி எதுவுமே நினைக்காம….நீங்க மட்டும் காலம் போன கடைசில அம்மா கூட ஊர் சுத்திட்டு இருக்கீங்க…!” என்றான் அலுப்பாய்.

குணா சொன்ன தொனியில் தேவா சிரிக்க…,” அடக் கடவுளே…!..” என்ற தயா… “எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு நேரா கேட்க வேண்டியது தாண்டா…? அதுக்கு எதுக்கு இந்த சுத்து சுத்துற…?” என்று சிரிப்புடன் கண்டிக்க…

“அப்பா..! என் தெய்வமே..!இதை விட நேரா வேற எந்த பிள்ளையும் சொல்ல மாட்டான்..!” என்று கையெடுத்துக் கும்பிட்டான் குணா.

“ஏண்டா சொல்ல மாட்ட…?காட்டிய பொண்ணுங்களை  எல்லாம்…அது சொத்தை,இது சொத்தைன்னு சொல்லி…கடைசாய் ஒரு பெண்ணைப் பார்த்து பிடிச்சுருக்குன்னு சொன்ன…!சரி பேசி முடிசுடலாம்ன்னு பார்த்தா…நீ போட்ட கண்டிஷன்ல அந்த பொண்ணு உன்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போய்டுச்சு…” என்று தயாளன் சொல்ல…

“அப்படி என்னப்பா கண்டிஷன் போட்டான்..?” என்றான் தேவா அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.

“அதுவா…! இவன் என் நண்பனுக்கு உடம்பு சரியில்லை.அவன் ஊரிலும் இல்லை.அவன் எப்ப சரியாகி என்னைத் தேடி வருகிறானோ…அப்ப தான் எனக்கு கல்யாணம்…அவன் இல்லாம நான் கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டான் தேவா…” என்றார்.

தயா சொன்னதைக் கேட்ட தேவா…கண்கள் கலங்க குணாவை அனைத்துக் கொண்டான்.

“ஒருவேளை நான் சரி ஆகாம இருந்திருந்தா….? என்னடா பண்ணியிருப்பே…?” என்று தேவா கேட்க…

“நீ வரும் வரை காத்திட்டு இருந்திருப்பேன்…!” என்று சொல்ல..தேவா அவனை பெருமையாய் பார்க்க…

“அப்படி சொல்வேன்னு கனவுல கூட நினைக்காத..! உன்னைத் தேடி வந்து……உன் முன்னால் கல்யாணம் பண்ணியிருப்பேன்.எது எப்படியோ…வாழ்க்கையில் திருமணம் முக்கியம் அமைச்சரே..!” என்று குணா சொல்ல…வாய்விட்டு நகைத்தான் தேவா. 

இவர்களின் சந்தோஷத்தில் தானும் பங்கெடுத்துக் கொண்டார் தயா.தேவாவிற்கு தெரிந்திருக்கவில்லை…அது தான் அவனின் கடைசி சிரிப்பாக இருக்குமென்று…!

ஒரு வாரம் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாய் போக…..தேவா  பிஸ்னஸ் விஷயமாக வெளியூர் சென்றிருந்தான்.

ஒரு நாள் மதிய வேளையில்…

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.அனைத்து மாணவர்களின் கவனத்தையும் சிதற விடாமல்….பாடம் எடுப்பதில் கீர்த்தனாவிற்கு இணை அவள் மட்டும் தான்.

விளையாட்டு பிள்ளை போல் தோன்றும் அவள்..பாடம் எடுக்க ஆரம்பித்தால்…வகுப்பே அமைதியாகி விடும்.சாதரணமாகவே அவளுக்கு கணீர் குரல்.அவளின் குரல் வகுப்பறையில் எதிரொலிக்க….தன்னை மறந்து முழு ஈடுபாட்டுடன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.

தேவா வந்ததையோ…அவள் வகுப்பு எடுப்பதை அவன் ரசித்ததையோ அவள் அறியவில்லை.வகுப்பு முடிந்தவுடன்…”நெக்ஸ்ட் கிளாஸ்ல பார்க்கலாம்…” என்று முடித்துவிட்டு வெளியேறினாள்.

ஒரு வாரமாக அவளைப் பார்க்காததால்….அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.பிறர் அறியாது பார்வையாலேயே அவளை அள்ளிப் பருகுவது போல் பார்த்துக் கொண்டிருக்க…

திடுமென தன் முன்னே நின்றிருந்தவனை பார்த்தவளது முகம்…வியப்பைக் காட்டியது.ஆனால் அதை அவன் அறியாது மறைத்துக் கொண்டாள்.  

“எப்ப வந்திங்க…?” என்று கடமையாய் கேட்க…

“இப்பதான் வந்தேன்…நேரா இங்க தான் வரேன்…!” என்றான் மையலுடன்.

அவன் பார்வையின் பொருள் புரிந்தாலும்…புரியாதது போல் காட்டிக் கொண்டாள் கீர்த்தனா.

“போன பிஸ்னஸ் டீல் எல்லாம் நல்லபடியா முடிந்ததா…?” என்று கேட்டுக் கொண்டே நடக்க…அவனும் அவளுடன் இணைந்து நடந்தான். அவளுக்குத்தான் பெரும் அவஸ்தையாய் இருந்தது.

“கீர்த்தி எங்கயாவது வெளிய போகலாமா…?” என்றவன் அவள் முகத்தைப் பார்க்க….எங்கே வரமாட்டேன் என்று சொல்லிவிடுவாளோ..? என்று பயந்தவன்…”வெளிய போறோம்…! கார்ல வெயிட் பண்றேன் வா…!”

என்று அதிகாரமாய் சொன்னபடி சென்றுவிட்டான்.ஆனால் கீர்த்தனா தான் பொரிந்து தள்ளிவிட்டாள்.

“என்ன நினைச்சுட்டு இருக்கான் இவன் மனசுல…? இவன் கூப்பிட்டா நான் உடனே போகனுமா…? நெவர் நான் போக மாட்டேன்…!” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு இருக்க…

“வரலைன்னா…கலேஜ்ன்னு கூட பார்க்க மாட்டேன்…தூக்கிட்டு போய்டுவேன்..!” என்று தேவாவின் குரல் காதருகில் கேட்க…சடனாக நிமிர்ந்தாள் கீர்த்தி.

மாய சிரிப்புடன்….”உன்னை நானறிவேன்..!” என்றபடி நின்றிருந்தான் தேவா.

“விடா கொண்டான்…! என்னை இம்சை படுத்தனும் என்கிற முடிவோட வந்திருப்பான் போல…”என்று மனதினுள் கறுவியவள்….மறு பேச்சு பேசாமல் அவனுடன் சென்றாள்.

காரில் பலத்த அமைதியுடன் கீர்த்தனா வர…”என்ன கீர்த்தி ஏதாவது பேசு..!” என்று ஆரம்பித்தான் தேவா.

“என்ன பேச…?” என்றாள்.

அப்பறம் நான் இல்லாத இந்த பத்து நாள் உனக்கு எப்படி போனது..? என்று என்றான்.

“ரொம்ப நிம்மதியா போனது..!” என்று கீர்த்தனா வாய்க்குள் முனுமுனுக்க… ”என்ன..? என்ன சொன்ன..?” என்றான் தேவா.

“ஒண்ணுமில்லை…கொஞ்சம் கஷ்ட்டமாகத்தான் இருந்தது…!” என்றாள் சமாளிப்பாய்.

“உனக்கு பொய் சொல்ல வரலை கீர்த்தி…!” என்றான் பூடகமாய்.

“என்ன….என்ன பொய்….?நான் என்ன பொய் சொன்னேன்..!” என்றாள் திணறலாய்.

அவளை தீர்க்கமாய் பார்த்தவன்…”இப்ப எதுக்கு எமோஷ்னல் ஆகுற…நான் சும்மா விளையாட்டு தான் சொன்னேன்…” என்றான்.

அவனை முறைத்தவள்,அவனைப் பாராது வெளியே வேடிக்கை பார்க்கத் துவங்கினாள். நடிப்பிற்காக மாறினாலும்…அதையும் அவளால் இயல்பாய் செய்ய முடியவில்லை.

“இப்ப எங்க கூட்டிட்டு போறான்…அவன் பேசாம வந்தான்…வெளிய போகணும்ன்னு சொன்னான்….எதுவும் சொல்லாம கூட்டிட்டு போறான்…அவனிடம் கேட்கலாமா..?” என்ற யோசனையுடன் அவனைப் பார்க்க…

“உன்னை கடத்திட்டு போறேன்..!” என்றான் பூடகமாய்.

அவள் ஆச்சர்யமாய் அவனைப் பார்க்க..”அதைத் தானே யோசிச்சுட்டு வந்த…?” என்று புருவத்தை ஏற்றி இறக்க…

“ஆமாம்…” என்று பிகு பண்ணாமல் ஒத்துக் கொண்டாள் கீர்த்தனா.

“சர்ப்ரைஸ்…” என்றபடி காரை செலுத்த….அது கோவைக் குற்றால அருவி செல்லும் வழியில் பயணித்தது.அங்கிருந்த பெயர் பலகையைப் பார்த்தவள்…”கோவைக் குற்றாலமா..?” என்றாள்.

“ஆமாம்..” என்றான் சாவகாசமாய்.

“ஆனா அங்க போகணும்ன்னா….வனத்துறையிடம் சிறப்பு அனுமதி வாங்க வேண்டுமே…!” என்றாள்.

அவளை ஆச்சர்யமாய் பார்த்தான்.”இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கியா…?” என்றான்.

“இல்லை..அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.ஆனா பிரண்ட்ஸ் சொல்லியிருக்காங்க…!” என்றாள்.

“ம்ம்ம்..உண்மை தான்…ஸ்பெசல் பர்மிஷன் வாங்கிட்டேன்…பட் ஐந்து மணிக்கு மேல் அனுமதியில்லை…” என்றான்.

ஆனால் அதெல்லாம் அவள் காதில் விழவேயில்லை.வெளியில் தெரிந்த, பசுமையை ஆடையாய் அணிந்த மரங்களை ரசித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

அவளைப் பார்த்து மென்மையாய் சிரித்தவன்…சிறிது தூரம் சென்ற பின் காரை நிறுத்தினான்.”இறங்கு கீர்த்தி…!” என்றான்.

அவள் புரியாமல் பார்க்க…”இதற்கு மேல் நடந்து தான் போகணும்…. அதான்..” என்றான்.

அவ்விடத்தின் அழகை ரசித்தபடியே இறங்கினாள் கீர்த்தனா.அவளுக்கு அருவியை பார்ப்பது புதிதில்லை.இருந்தாலும் அதை சுற்றியுள்ள பரப்பளவே இவ்வளவு ரம்யமாய் இருக்கும் போது…அருவி எப்படி இருக்கும்…? என்ற ஆவலுடன் அவனுடன் இணைந்து நடக்கத் தொடங்கினாள்.

நீர்வரத்து இருந்ததால்….ஆங்காங்கே மக்கள் தென்பட்டனர்.இருபுறமும் ரசித்தபடி….அவனை ஒட்டியே நடந்தாள் கீர்த்தனா.

“இங்க… அருவி இன்னும் அழகா இருக்கும் கீர்த்தி.அடுக்கடுக்காய் இருக்கும்…அருவி விழும் போது அவ்வளவு அழகாய் இருக்கும்….சிறுவாணி ஆற்றில் இருந்து தான் இந்த அருவி வருது.சிறுவாணி அணை இந்த அருவிக்கு மேல தான் கட்டியிருக்காங்க..!” என்றான் ரசித்தபடி

அவன் சொல்வதைக் கேட்ட அவளுக்கு..திருமணம் ஆன மறுநாள் நியாபகம் வந்தது.அவளுடைய கிராமத்தில்..தலையூத்து அருவியின் அருமை பெருமைகளை இவள் சொல்ல..அவன் கேட்டுக் கொண்டே வந்தான். ஆனால் இன்று….என்று நினைத்தவளுக்கு சிரிப்பு வர…அடக்கிக் கொண்டாள்.

“சிரிப்பு வந்தா சிரிச்சுடு கீர்த்தி….ஆனா என்னன்னு சொல்லிட்டு சிரி..!” என்றான்.

இல்லை நான் எங்க ஊரு பெருமையை அளந்துவிட்டா…பதிலுக்கு நீங்க உங்க ஊரு பெருமையை அளந்து விடுறிங்கலோன்னு தோணுச்சு…” என்றாள் சிரிப்புடன்.

“இது எனக்கு தேவை தான் ….நான் என்ன செஞ்சாலும் உனக்கு சந்தேகமாவே இருக்கு…ம்ம்”என்று அவள் தலையில் குட்ட… ”ஸ்ஸ்ஸ்ஸாஆ…வலிக்குது தேவா…” என்றாள் தலையை தேய்த்து விட்டுக் கொண்டே.

அதற்குள் அருவியும் வந்து விட…நீர்வரத்து அதிகமாய் இருந்ததால்…. நுரையென பொங்கிக் கொண்டிருந்தது அருவி.

“வாவ்…எவ்வளவு அழகாயிருக்கு…!..” என்று இயல்பாய் தேவாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். நீர் அடர்ந்து விழும் பகுதிக்கு அவளை பாதுகாப்பாய் அழைத்து சென்றான் தேவா.

அங்குள்ள ஒரு பாறையின் மீது ஏறியவன் அவளையும் கைகொடுத்து ஏற்றிவிட்டான்.நீரின் பேரிரைச்சல் காதுகளை அதிர செய்தது.உடம்பில் தெறித்த நீர்த்துளிகள்….அதிக குளுமையுடன் இருக்க…. ஊசி தீண்டியது போல்…. உடல் சில்லிட்டுப் போனது.

அனைத்து பிரச்சனைகளையும் மறந்து அந்த தருணத்தை ரசித்தாள் கீர்த்தனா. அவள் அருவியை ரசித்துக் கொண்டிருக்க…தேவா அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.

கல்லூரியில் இருந்து வந்ததால்…அவள் காட்டன் புடவை நலுங்கியிருக்க… தலை முடிகள் களைந்து காற்றில் நர்த்தனம் ஆட…குளிர் காற்று உடலையும்,மனதையும் தீண்ட….செவ்வானமாய் மலர்ந்து போயிருந்தது கீர்த்தனாவின் முகம்.

தன்னையும் மீறிய ஒரு குறுகுறுப்பில் தேவாவை திரும்பிப் பார்த்தாள்.அவள் தன்னைப் பார்ப்பதை அறிந்தவன்…சடக்கென்று தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

அப்பொழுது தான் கவனித்தாள்…தன்னுடைய கை அவனுடைய கையுடன் பிணைந்திருப்பதை.வெடுக்கென்று கைகளை உருவிக் கொண்டாள்.

அவளின் இந்த செயலால் தேவாவின் முகம் இறுகியது.இவள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்…? என்று அவன் முகம் கடுமை கொள்ள..

“சிறிது நேரம் பொறுத்தவள்….எனக்கு தலைவலிக்கிற மாதிரி இருக்கு…!கிளம்பலாமா…?” என்றாள் பட்டும் படாமல்.

“ஏன்…? இவ்வளவு நேரம் நல்லாத்தான இருந்த..? இப்ப என்ன திடீர்ன்னு..?” என்றான் கேள்வியாய்.

அவனது கேள்வியில் எரிச்சல் அடைந்தவள்…”அப்ப வலிக்கலை..இப்ப வலிக்குது…” என்றாள் வெடுக்கென்று.

“நான் கேட்டா எனக்கு பதில் சொல்லியாகனும் கீர்த்தனா…!” என்றான் கடுமையாய்.

“இதோ பாருங்க…உங்களுக்கு பதில் சொல்லனும்ன்னு எனக்கு அவசியமில்லை.இப்படியெல்லாம் கூட்டிட்டு வந்தா நான் உங்களைப் பார்த்து மயங்கிடுவேன்னு நினைச்சு தான கூட்டிட்டு வந்திங்க…!” என்றாள் குதர்க்கமாய்.

“ஏய்..!” என்று விரலை நீட்டி எச்சரித்தவன்…”நீ பெரிய ரதி….உன்னை மயக்குறாங்க…எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் உனக்கு…ச்சீ போடி..!” என்றவன்…வேகமாய் இறங்க….அங்கிருந்த பாறையில் பேலன்ஸ் பண்ண முடியாமல் விழப் போனான்.

“தேவா…பார்த்து…!” என்று கீர்த்தனா பதற…அவளை முறைத்தவன்… வேகமாய் நடக்கத் துவங்கினான்.

“ச்ச…என்னால் தான்…நான் ஏன் அப்படி பேசினேன்…!” என்று கண்கள் கலங்க..அவனைப் பின் தொடர்ந்தாள் கீர்த்தனா.

“தேவாவின் மனதிற்குள் பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.இவளுக்கு கொஞ்சம் கூட என் மேல் மதிப்பே இல்லையா…?என்னைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது இவளுக்கு..?என்னவெல்லாம் பேசுகிறாள்..? நான் வாங்கி வந்த வரமோ…இல்லை சாபமோ…எனக்கு மட்டும் எதுவும் சரியாக நடப்பதில்லை….” என்று மருகியவன்….நிதானமான நடையுடன் காரை அடைந்தான்.

வேகமாய் சென்று காரை ஸ்டார்ட் செய்தவன்..அவள் வந்து ஏறும் வரை காரை உறும விட்டுக் கொண்டு நின்றான்.அவனைப் பார்த்து ஒரு நிமிடம் தயங்கி காரினுள் ஏறினாள் கீர்த்தனா.

தேவாவோ…அவள் முகத்தையும் பாராது விருட்டென்று எடுத்தான் காரை.வரும் போது அவன் மனதில் இருந்த ரசனை,உல்லாசம் எல்லாம் மறைந்து வெறுமை மட்டுமே இருந்தது.

கீர்த்தனாவிற்கோ…அதை விட மோசம்.தன் மனம் எதை எதிர்பார்க்கிறது என்று அவளுக்கே தெரியவில்லை.பேதைப் பெண்ணாகிய அவளின் மனதை அவளால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

 

தவமிருந்து பெற்ற என்னை

தவிக்க விட்டு போனது போல்….!

துணையாக வந்த கிளி…

தனியாக போய்விடுமோ…!

ஆடாத ஊஞ்சல்களை…

ஆடை வைத்த வண்ண மயில்…!

பாடாத சொந்தங்களை….

பாட வைத்த சின்ன குயில்…!

என்னை விட்டு தன்னந்தனி வாழ்ந்திடுமோ…

என்னுயிரும் என்னை விட்டு போய்விடுமோ…!

Advertisement