Advertisement

தூரிகை 15 :

மொபைலில் அவளுடைய போட்டோவை அவன் ரசித்துக் கொண்டிருப்பதை அறியாத கீர்த்தனா…பத்ரகாளியாய் அவன் முன் ஆஜரானாள்.அவள் வந்தது தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு,தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான் தேவா.

அதைப் பார்த்த பின் அவளது கோபம் பன்மடங்கு பெருக…அவனின் செல்லைப் பிடுங்கி தூர எரிந்தாள்.எறிந்த வேகத்தில் அங்கிருந்த சோபாவில் விழுந்ததால் செல் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் தப்பித்தது.

கீர்த்தனாவின் செயலில் கடுப்பான தேவா..”இப்ப உனக்கு என்ன பிரச்சனை…?” என்றான் எரிச்சலாய்.

“என்ன பிரச்சனையா…? உங்க அக்கா அவ்வளவு பேச்சு பேசுறாங்க…நீங்க பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..?” என்று பொரிந்து தள்ளினாள்.

“அதுக்கு என்னை என்ன செய்ய சொல்ற…?” என்றான் சாவகாசமாய்.

“என்ன செய்யனுமா..? உங்களுக்கு கொஞ்சம் கூட கோபம் வரலை…எனக்கு சப்போர்ட் பண்ணனும்ன்னு தோணலை…?” என்றாள் கேள்வியாய்.

“எதுக்கு….அப்படியே நான் சப்போர்ட் பண்ணி பேசியிருந்தாலும்,அதுக்கும் வந்து சண்டை போடுவ….நான் என்ன உங்க காதல் மனைவியா…?போதும் நடிக்காதிங்க…அப்படி இப்படின்னு பேசுவ…இது எனக்கு தேவையா…?அதான் அமைதியா வந்துட்டேன்..” என்றான் உல்லாசமாய்.

அவனது பதிலில் அசந்து போனாள் கீர்த்தனா.இவன் சொல்வதும் உண்மை தானே…! கண்டிப்பாக அவன் சொன்னது போல் தான் பேசியிருப்போம்…பிறகு எதற்காக இவனிடம் நான் சண்டையிட வேண்டும்….என்று குழம்ப…

அவளது குழப்பத்தைப் பார்த்த அவனின் கண்களில் கனிவு தோன்றியது. அவளையே ஆழ்ந்து ரசித்தவன்…அவள் அவனைப் பார்க்கவும் தன் பார்வையை மாற்றினான்.

“இருந்தாலும் ஒரு பிரண்டா நினைச்சு கூட சப்போர்ட் பண்ணி பேசியிருக்கலாம்ல…” என்று மனம் தாங்கலாய் சொல்ல…

வாய்விட்டு சிரித்தான் தேவா.அவனது சிரிப்பில் திகைத்தவள்…வைத்த விழி எடுக்காது அவனையே பார்க்க…”என்ன..?” என்பதைப் போல் புருவத்தை வெட்டினான் .

அவசரமாக முகத்தை மாற்றியவள்…நான் கேட்டதுக்கு பதில் சொல்லவில்லை…பிறகு எதுக்கு சிரிக்கிறிங்க..? என்றாள்.

இல்லை…! இங்க பொண்டாட்டியை முதலில் பொண்டாட்டியாவே நினைக்க முடியலை.இதுல எங்க பிரண்டா நினைக்கிறது…! என்றான் அலுப்பாய்.

“இருந்தாலும் அவங்க பேசினது தப்புதானே..!” என்றாள் கண்கள் சிறிது லேசாய் கலங்க.

அவளின் கலங்கிய கண்களைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ…உடனே தன் முக பாவனையை மாற்றிக் கொண்டான்.

“கார்த்திகா பேசியது தப்புன்னு எனக்கும் தெரியும் கீர்த்தனா..! ஆனா அதைத் தட்டிக் கேட்பதற்கான உரிமையை நீ எனக்கு குடுக்கலை.நமக்குள்ள ஆயிரம் மன வேறுபாடுகள் இருந்தாலும் நீ அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.நீ அதையும் செய்யலை…இப்ப வந்து என்னை குற்றம் சொல்ற…?” என்றான் நிதானமாய்.

தேவாவின் கேள்விகள் ஒவ்வொன்றாய் அவளைத் தாக்க…பொத்தென்று அமர்ந்தாள் கீர்த்தனா.”இவன் சொல்வதும் சரிதானே..?” என்று ஒரு மனம் சொல்ல…

“என்ன சரி..?” என்று மற்றொரு மனம் கேட்டது.

“அவனை நான் கணவனாக ஏற்றுக் கொள்ளாத போது…என்னிடமான உரிமையை அவனுக்கு எவ்வாறு தர முடியும்…!”என்று கேள்வி கேட்டு கொண்டாள்.

பத்மா சொன்னது வேறு அவளைக் குழப்ப…இனி என்ன செய்ய வேண்டும்…எப்படி செய்ய வேண்டும் என்று எதுவும் தோணாமல் வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

அவள் விழிகள் நாட்டியம் ஆடுவதையும்,தனக்குத் தானே பேசிக் கொள்வதையும் பார்த்தவன்…அவளை தொந்தரவு செய்யாமல் அப்படியே உறங்கிவிட்டான்.

சிறிது நேரத்தில் தன் நினைவுகளில் இருந்து மீண்டவள்…தேவா அந்த அறையிலேயே உறங்குவது கண்டு அதிர்ந்தாள்.

“என்ன இவன் இங்கயே தூங்கிட்டான்…? எப்பவும் இங்க தூங்க மாட்டானே…!” என்று நொந்தவள்…”கீர்த்தனா உனக்கு வந்த சத்ய சோதனையா இது…” என்று புலம்பியபடி அந்த சோபாவிலேயே உறங்கினாள்.

இரவு இரண்டு மணி அளவில்…ஏதோ ஒரு உந்துதலில்…கண்விழித்தாள் கீர்த்தனா.அறை முழுவதும் இரவின் இருள் சூழ்ந்திருக்க…இரவு விளக்கின் ஒளியில்…ஜன்னல் ஓரத்தில்..இருளை வெறித்தபடி நின்றிருந்தான் தேவா.

கனவோ என்று நினைத்தவள் கண்ணைக்  கசக்கிக் கொண்டு மீண்டும் பார்க்க..அவனோ அசையாமல் நின்றிருந்தான்.அந்த இரவு விளக்கின் கொஞ்ச வெளிச்சத்திலும்…  இறுக்கம் குறையாத முகமும்,பல்லைக் கடித்தபடி நின்றிருந்த அவன் தோற்றமும்….அவள் மனதில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.

“எதுக்காக இப்படி பேய் மாதிரி நிற்குறான்…? தூங்கிட்டு தான இருந்தான்..எப்ப எழுந்தான்…இந்த அர்த்த ராத்திரியில் எதைப் பத்தி யோசிச்சுகிட்டு இருக்கான்…”என்று யோசித்துக் கொண்டிருக்க…தேவா திரும்புவது போல் தோன்ற…வேகமாய் கண்ணை மூடிக் கொண்டாள்.

இவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த தேவா…மெதுவாய் அவள் அருகில் வந்தான்.அவளின் அருகில் அமர்ந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க….வெறுமனே கண்ணை மூடியிருந்த கீர்த்தனாவிற்கு…தடக் தடக்கென்று இதயம் ஒலிப்பது அவளுக்கே கேட்டது.

“எதுக்கு இப்ப இப்படி வந்து என்னையவே பார்த்துட்டு இருக்கான்…? என்ன பண்ண போறான்…?கடவுளே நீ தான் காப்பாத்தணும்…!” என்று ஊரில் இல்லாத சாமியெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

அவள் சோபாவில் கால்களை குறுக்கிக் கொண்டு படுத்திருப்பதைப் பார்த்த அவன்…”என்னை உனக்கு உண்மையாகவே பிடிக்கவில்லையா கீர்த்தி…ஆனா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டி…ஐ லவ் யு..” என்று உதடு பிரியாமல் சொன்னவன்…அவளின் நெற்றியில் இதழ் ஒற்றினான்.

ஏற்கனவே கண்ணை இருக்க மூடி தூங்குவதைப் போல் நடித்துக் கொண்டிருந்தவளுக்கு….அவனின் திடீர் செயல் மயக்கமே வர செய்தது. உடலில் ஒரு வித பயம் கலந்த நடுக்கம் தோன்ற…

“கண்ணைத் திறந்தோம்….செத்தோம்…” என்கிற ரீதியில் படுத்திருந்தாள். அவளது செய்கைகளை பார்த்தவனின் முகத்தில் கள்ள சிரிப்பு தோன்ற…படக்கென்று அவளைத் தூக்கினான்.

“யம்மாடி என்ன இந்த கணம் கணக்குறா…!கொஞ்சம் சிரமம் தானோ…!” என்றபடி அங்கிருந்த மெத்தையில் கிடத்தினான்.அவன் கிடத்திய வேகத்தில் சுருண்டு படுத்துக் கொண்டாள் கீர்த்தனா.

மென்னகையுடன்…அவளைப் பார்த்தபடியே உறங்கிப் போனான் தேவா.அவன் நன்றாக தூங்கிவிட்டான் என்பதை அறிந்து… மெதுவாக கண்ணைத் திறந்தவளுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.

அவனின் ஸ்பரிசம் பட்டதால் ஏற்பட்ட குறுகுறுப்பையும் மீறி….அவளின் உடல் வியர்வையில் குளிக்கத் துவங்கியது.கண்களில் கண்ணீர் அவள் அனுமதியின்றி வர….அதைத் துடைக்கவும் முடியாமல்..அவனையே பார்த்தாள்.

“இவனிடம் குறை சொல்லும் அளவிற்கு எதுவுமில்லை…ஆனால் என்னிடம்…?” என்று நினைத்தவளால்…அதற்கு மேல் அதைப் பற்றி யோசனை கூட செய்ய முடியவில்லை.

மீதி இரவு அவளுக்கு உறக்கமில்லாமல் கழிய…. இல்லாத மூளையைக் கொண்டு யோசித்தவள்…புதிய சிந்தனைகள்,தெளிவுகள் நிறைந்த மனதுடன் விடியலை எதிர்கொண்டாள்.

காலையில் கண்விழித்த தேவா…எதிர்புறம் கீர்த்தனாவை தேட…அவள் உறங்கிய இடம் காலியாய் இருந்தது.என்ன அதிசயம்…?இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டாளே…! என்று நினைத்தபடி எழுந்தவன்…ஜாக்கிங் செல்ல தயாராகி கீழே வந்தான்.

அங்கே சமையலறையில்,குளித்து முடித்து….இளம் பச்சை வண்ண நிறத்தில் காட்டன் புடவையை அணிந்து…காலை நேர தேவதையாய்…. காபி போட்டுக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.பூஜையறையில் மகாலட்சுமி சுப்ரபாதம் ஒழித்துக் கொண்டிருந்தது.மும்முரமாய் காபி கலக்கிக் கொண்டிருந்தவளை இமைக்காது பார்த்து நின்றான் தேவா.

“என்ன இது…? நான் கனவு ஏதும் காண்கிறேனா…?கீர்த்தியா இது…? என்னாச்சு..?என்ன திடீர்ன்னு இப்படி ஒரு மாற்றம்…”? என்று யோசித்துக் கொண்டிருக்க…

காபியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள் கீர்த்தனா.வாயிலில் அவனைப் பார்க்காமல் அவன் மீது மோதப் போக…சுதாரித்து அவளைப் பிடித்து நிறுத்தினான் தேவா.

“சாரி…சாரி…”“ என்றபடி அவள் விலக…”” “ஹேய் ரிலாக்ஸ்….ரிலாக்ஸ்… “ என்றபடி அவளை விடுவித்தான்.

“ஆமா என்ன அதிசயம்….மேடம் இவ்வளவு சீக்கிரம் எழுந்து… குளிச்சு…ம்ம்ம்..என்ன நடக்குது…? “ என்றான் கண்களில் ரசனையுடன்.

“ஒன்னும் நடக்கலை…நீங்க தான சொன்னிங்க….நமக்குள்ள இருக்கிற பிரச்னையை நான் வெளிய காட்டிக் கொள்கிறேன்னு.அதான்… “ என்றபடி இழுக்க…

அவளது பதிலைக் கேட்ட தேவாவால் சிரிப்பை  அடக்க முடியவில்லை. அவன் வாய்விட்டு சத்தமாய் சிரிக்க…”

“இப்ப எதுக்கு சிரிக்கிறிங்க…? சிரிக்கிற அளவுக்கு நான் என்ன சொன்னேன்…? என்றாள் எரிச்சலுடன்.

“இல்லை நீ இப்படியெல்லாம்  சீக்கிரம் எழுந்து, வேலையெல்லாம் செய்தா….நீயும் நானும் சந்தோஷமா இருக்கோம்ன்னு நினைச்சுக்குவாங்களா…? நெவர்…கார்த்திகா உன் நடிப்பை ஒரே நாளில் கண்டு பிடுச்சுடுவா… எதுக்கு இந்த தேவையில்லாத வேலை உனக்கு… “ என்று சிரிக்க…

“பிளீஸ் தேவா…சிரிக்காதிங்க…நீங்க நினைக்கிற மாதிரி உடனே எல்லாம் என்னால மாற முடியாது….புரிஞ்சுப்பிங்கன்னு நினைக்கிறேன்..” “ என்றாள் அமைதியாக.

“நான் சும்மாதான் உன்னைக் கிண்டல் பண்ணினேன் கீர்த்தி.மத்தபடி நீ மாறலைன்னாலும் எனக்கு உன் மேல் வெறுப்பு வராது.

இப்ப என்ன…? என்மேல் உனக்கு தான் லவ் வராது.ஆனா உன் மேல் எனக்கு ரெண்டு பங்கா லவ் வருது…அப்ப கணக்கு சரிதானே…! “ என்று கண்சிமிட்டி சிரித்தான் தேவா.

“இல்லை தேவா..அது வந்து நான் என்ன சொல்ல வரேன்னா…? “ என்று அவள் இழுக்க…

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்…! எனக்கும் காபி வேணும்…சோ..இதை நான் குடிக்கிறேன்..உனக்கு நீ போய் இன்னொரு கப் போட்டுக்கோ…” “ என்றவன்…அவள் கைகளில் இருந்து காபி கப்பை வாங்கி அதை பருக ஆரம்பித்தான்.

“நீங்க ஜாக்கிங் போகலையா..? இப்பவே காபி குடிக்கிறிங்க…?” “ என்றாள் கேள்வியாய்.

“பரவாயில்லை கீரு..இன்னைக்கு ஒரு நாள் காபி குடிச்சுட்டு ஜாக்கிங் போறேன்…” “ என்றான் உல்லாசமாய்.

“கீரு,மோருன்னு சொன்னிங்க எனக்கு கெட்ட கோபம் வரும்… “ என்று அவள் எச்சரிக்க…

“கெட்ட கோபமெல்லாம்  கெட்ட புள்ளைங்களுக்கு தான் வரும்……..உனக்கு ஏன் வருது..”..“ என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன்…ஜாக்கிங் புறப்பட்டு சென்றான்.

அவனின் செயல்களையும்,நடவடிக்கைகளையும் மனது ரசித்தாலும் மூளை ரசிக்கவும்…,ஏற்கவும் மறுத்தது.அவனின் நினைவுகளை புறந்தள்ளியவள்… சமையலை கவனிக்க சென்றாள்.

இதையெல்லாம் கண்டும் காணாததும் போல் எழுந்து வந்தார் பத்மா.கீர்த்தனாவின் நடவடிக்கைகளைப் பார்த்தவருக்கு மனம் குளிர்ந்து.

எங்கே தான் சொன்னதை தவறாக எடுத்துக் கொள்வாளோ…? என்ற எண்ணம் மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்தது பத்மாவிற்கு.ஆனால் அதற்கு அவசியமில்லை என்பதைப் போல் கீர்த்தனா நடந்து கொண்டாள்.

ஒரு படி மேலே போய்…” “காபி கொண்டு வரவா அத்தை..? “ என்று அவள் கேட்க..பத்மாவிற்கு மயக்கம் வராத குறைதான்.

“குடும்மா…!“ என்று உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் சொன்னார். கீர்த்தனாவும் மலர்ந்த முகத்துடனே காபியை எடுத்து வரவும் மகிழ்ந்து போனார் பத்மா.காபியின் சுவை அருமையாய் தெரிந்தது அவருக்கு.

“காபி ரொம்ப நல்லா இருக்குமா கீர்த்தனா…”“ என்று சொல்ல…பெண்களுக்கே உரிய மகிழ்ச்சி வந்தது கீர்த்தனாவிடம்.

“தேங்க்ஸ் அத்தை…! நான் போய் சமைக்கிறேன்…!“ என்றபடி போக…நிறைவுடன் பார்த்தார் பத்மா.

தன கணவனால்,தேவாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளை முடிந்த அளவு சரி செய்ய வேண்டுமென்று விரும்பினார் பத்மா.அதற்கான வழியைத் தேடுகையில்…அவருக்கு முதலில் தோன்றியது கீர்த்தனா தான்.கீர்த்தனாவை வைத்தே அவன் வாழ்க்கையை சரி செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

அதற்கான முதல் அடியையும் வெற்றிகரமாய் எடுத்து வைத்து விட்டார். இனி நடப்பது அனைத்தும் நன்மையாகவே நடக்கும் என்று நினைத்தார்.ஆனால் கடவுள் போடும் கணக்கை அவர் அறிந்திருக்கவில்லை.

வேகமாய் சமையலை முடித்தாள் கீர்த்தனா.அனைத்தையும் எடுத்து ஹாட் பாக்ஸில் வைத்தவள்…கல்லூரிக்கு நேரமாகிவிடும் என்ற முனைப்புடன்…அறையை நோக்கி சென்றாள்.

கூந்தலை துவட்டி..ஈரம் போக காயவைத்தவள்…தளர்வாய் பின்னலிட்டுக் கொண்டாள்.கீர்த்தனாவின் மிகப் பெரிய பிரச்சனையே அவள் முடிதான்.தன் அம்மாவின் கண்டிப்புதான் இவ்வளவு நீள முடியாய் வளர்ந்து…இம்சை பண்ணுகிறதோ என்று அடிக்கடி எண்ணிக் கொள்வாள்.

தனது ஒப்பனையை முடித்தவள்…கடிகாரத்தைப் பார்க்க…அது அவளுக்கான நேரத்தைக் காட்டியது.”டைம் ஆச்சு…சாப்பிட்டு போக லேட் ஆகிடுமே…!” “ என்று புலம்பிய படி வெளியே செல்ல எத்தனிக்க…அறைவாயிலை அடைத்தபடி வந்து நின்றான் தேவா.

அவளை மேலும் கீழும் ரசனையுடன் அவன் பார்க்க…அந்த பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல்…” “காலேஜ்க்கு டைம் ஆச்சு தேவா..சாப்பிட வாங்க…இப்ப நகருங்க…” “ என்றாள் அவஸ்தையாய்.

“ஒன்னும் அவசரமில்லை…இப்ப எதுக்கு இவ்வளவு பதட்டப் படுற…இதைக் கொடுக்கத் தான் வந்தேன்… “ என்று வெள்ளை நிற ரோஜாவை அவள் முன் நீட்டினான்.

“என்ன இது..? “ என்பதைப் போல் கீர்த்தனா கேள்வியாய் பார்க்க…

“தோட்டத்தில் பூத்திருந்தது.அழகாய் இருந்தது.அதான்… “ என்றான் மந்தகாசமாய்.

அவனின் கையிலிருந்த ரோஜாவை வெடுக்கென்று பிடுங்கியவள்… வேகமாய் தலையில் வைத்துக் கொண்டு…கீழே சென்று விட்டாள்.

“ஸ்ஸ்சப்பா..எப்படித்தான் இவளை சமாளிக்க போறேனோ…! எப்ப எப்படி ரியாக்ட் பன்னுவான்னே தெரியலை…” “ என்று பெருமூச்சு விட்டவன்… அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

பூரியும்,உருளைக்கிழங்கு மசாலாவும்…இடியாப்பமும் தேங்காய் பாலும் ,சொதியும் செய்திருந்தாள்.

டைனிங் டேபிளில் அமர்ந்த தேவாவிற்கு ஆச்சர்யம்…” “இவளுக்கு சமைக்கத் தெரியுமா…? “ என்று ஆச்சர்யபட்டவன்…எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்தான்.

தேவாவிற்கு பரிமாறிய கீர்த்தனா…வெகு இயல்பாய் அவன் அருகில் அமர்ந்து தானும் சாப்பிடத் தொடங்கினாள்.

“எப்படி இருக்குமோ,….?“ என்ற சந்தேகத்தில்…அனைத்து தெய்வங்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தவனின் முகம்…போகப் போக பிரகாசமாய் மாறியது.

கீர்த்தனாவிடம் இப்படி ஒரு ருசியான சமையலை அவன் எதிர்பார்க்கவில்லை.அவளின் கைப் பக்குவத்தில் வழக்கத்திற்கு அதிகமாகவே சாப்பிட்டான்.அவன் ஆசையாய் சாப்பிடுவதைப் பார்த்தாலும்..பார்க்காதது போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.அவனுக்கு பார்த்து பரிமாறவும் தவறவில்லை.

வேகமாய் சாப்பிட்டு முடித்தவள்….தனது ஹேன்ட் பேக்கையும்,சில புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“ஐயோ…பஸ் கூட்டமா இருக்குமே…!“ என்று நொந்தபடி வந்தவள்… தேவாவைப் பார்த்ததும் தயங்கினாள்.

“அப்பா வண்டி வாங்கித் தரேன்னு சொன்னதைக் கெடுத்தவனே இவன் தான்…இப்ப இவன் மட்டும் சொகுசா காரில் போக..நான் மட்டும் பஸ்ஸில் போகனுமா…? “ என்று ஏடாகூடமாய் நினைத்தவள்…

“தேவா என்னை டிராப் பண்ணுங்க..! “ என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

அவள் பார்த்த திசையைப் பார்த்தவன்…” “அங்க தேவான்னு யாருமில்லையே..! “ என்றான் சிரிப்புடன்.

“என்ன கிண்டலா…? உங்ககிட்ட தான் சொன்னேன்….!நீங்க தான அப்பாகிட்ட வண்டி வேணாம்ன்னு சொல்ல சொன்னிங்க…என்னால பஸ்ல எல்லாம் போக முடியாது.இந்த டைம்ல ரொம்ப கூட்டமா வரும்..”” என்றாள் உர்ரென்ற முகத்துடன்.

“உன்னை நானா பஸ்ல போக சொன்னேன்..? “ என்றான்.

“ஆமாம்ல..அவன் எப்ப என்னை பஸ்ல போக சொன்னான்…நானாகத் தான் போனேன்.. “ என்று உதட்டைக் கடித்தவள்…அவனைப் பார்க்க…

“போகலாமா..? “ என்றான் கனிவாய்.

“ம்ம்ம்ம்… “ என்று வேகமாய் தலையாட்டிவள்…அவன் இவளுக்காக கார் கதவைத் திறந்து விட…ஏறிக்கொண்டாள்.

தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை இனி மறக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் அவள் சகஜமாய் இருப்பது போல் நடிக்க…அதை அவளின் உண்மையான மாற்றம் என்று நம்பினான் தேவா.

அவள் மீதான காதலும்,அன்பும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது அவன் மனதில்.இதையறியாத கீர்த்தனா தன்னுடைய மாய பிம்பத்தை வெளிகாட்டிக் கொண்டிருந்தாள்.

அவளின் நிழலாய்… அவளுடன் வாழ ஆசைப் பட்டான் அவன்.தன்னுடைய நிழலையே வெறுத்தாள் அவள்.

இதையறியாத இருவரும்..இருவேறு உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினர்.

 

உறவை மனது வளர்க்குதே…

உயிரை அறுத்து எடுக்குதே…

கண்ணில் காதல் விதைக்குதே…

கடைசியில் உயிரைக் கொல்லுதே…

உள்ளத்தில் காதலை சுமந்து கொண்டு…

உதட்டில் மறைத்தால் மறையாதே…!

உறவின் நிழலில் நின்று கொண்டு…

வெயிலில் காதலை வீசாதே..!

என்னை மறக்க நினைத்து விட்டு…

உன்னை நீயே இழக்காதே..!

 

 

 

 

Advertisement