Advertisement

தூரிகை :13

கல்லூரி வாசலில் இறங்கிய கீர்த்தனாவிற்கு என்னவென்று சொல்ல முடியாத அளவிற்கு மனதில் பாரம் கூடிக் கொண்டே போனது.சுற்றம் மறந்து அவள் நடக்க…அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.

“என்ன கீர்த்தி மேம்..? ஏன் என்னமோ மாதிரி இருக்கீங்க…? உடம்பு ஏதும் சரி இல்லையா…?” என்று சக ஆசிரியை ஒருவர் கேட்க…சிறு புன்னகையை மட்டுமே பதிலளித்து விட்டு சென்றாள்.

கீர்த்தனாவின் மனதில் தேவா சொன்ன அந்த வார்த்தைகள்….ஏதோ ஒரு வகையில் தாக்கி….அவளை யோசனையில் ஆழ்த்தியிருந்தது.

“நமக்குன்னு இருக்கவங்க…..” என்ற வார்த்தைகள்….மீண்டும் ஒலிக்க…”ஏன் அப்படி சொன்னான்..? அப்ப வீட்ல இருக்குற அத்தை,மாமா எல்லாம் யாருக்காக இருக்காங்க.அவங்க பையன் இப்படி பேசுற அளவுக்கு என்ன நடந்திருக்கும்….வீட்ல ஆளுக்கு ஒரு தீவா இருக்காங்களே…? “ என்று யோசித்துக் கொண்டே அமர்ந்து விட்டாள்.

“கீர்த்தி மேம்..! வாங்க…இன்னைக்கு ஸ்டாப் மீட்டிங் இருக்குதுல்ல…” என்று அனைவரும் அழைக்க….கால்கள் அவர்களை பின்பற்றி நடக்க…மனம் மட்டும் தேவாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

அங்கு கல்லூரியின் குழுமத் தலைவர்களுள் ஒருவர் பேசிக் கொண்டிருக்க…அது எதுவும் கீர்த்தனாவின் காதுகளில் விழவேயில்லை.

மறைந்த நம் கல்லூரியின்  தலைவர்,இத்தனை நாள் இங்கு தலைமை பொறுப்பு வகித்த மிஸ்டர் மாறன் சார் அவர்களின் சகோதரர்….. திரு.வெற்றிவேல் ஐயா அவர்களின் மகன் மிஸ்டர்.தேவேந்திரன் அவர்கள் இன்று முதல் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்….என்று அவர் அறிவிக்க…  

“அனைவருக்கும் வணக்கம்…” என்ற தேவாவின் குரலில் விருட்டென்று நிமிர்ந்தாள் கீர்த்தனா.

“தேவாவை..”அங்கு பார்த்த கீர்த்தனாவின் இதையம் வேகமாய் துடிக்க தொடங்கியது.”இவன் எப்படி இங்க…?” என்று யோசிக்க….சில நிமிடங்கள் கழித்து உண்மை நிலை அறிய….அதனால் ஏற்பட்ட ஆச்சரியமும், அதிர்ச்சியும் பலமடங்கு எகிறியது.

அப்பொழுது தான் கவனித்தாள்..”அங்கு மாறனும் அமர்ந்திருப்பதை.அவள் இதுவரை அவரை இங்கு பார்த்ததில்லை.அவரின் இடத்தில் இருந்து அனைத்து வேலைகளையும் சண்முகமே செய்ததால் மாறனை அவள் அறிந்திருக்கவில்லை.

அதெல்லாம் விட பெரிய அதிர்ச்சியாக…தேவா…மாறன் மகன் இல்லையென்பது.இது அவள் அறிந்திடாத விஷயம்.புதிதாய் தெரிந்த விஷயங்கள்…இன்னும் அறிந்திடாத பல விஷயங்கள் என அனைத்தும் சேர்ந்து அவளை குழப்ப….மறைந்திருந்த தலைவலி மீண்டும்  தலை தூக்க ஆரம்பித்தது.

அவளின் முக மாறுதல்களை கவனித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான் தேவா.

அங்கிருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவாவை பிடித்துப் போக…அனைவரும் அவன் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தனர்.

பேசி முடித்தவன் இறுதியாக….”என் மனைவியும் இங்குதான் பணிபுரிகிறாள்….!” என்றான் கீர்த்தனாவை பார்த்துக் கொண்டே..!

“என்ன சார் சொல்றிங்க…? உங்க மனைவி இங்க வொர்க் பண்றாங்களா…?” என்று ஆளாளுக்கு கேட்க….”ஆமாம்…” என்று புன்னகையுடன் தலையசைத்தான் தேவா.

“அவங்களுக்கு இங்க எப்பவும் போல வொர்க் பண்றதில் ஆர்வம் இருந்ததால் நானும் மறுப்பு சொல்லவில்லை.அவங்க உங்களோட ஒருத்தரா இருக்கத்தான் ஆசைபடுறாங்க…” என்றான்.

அது யார்..? என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அனைவரும் எதிர்பார்க்க…

அவன் கீர்த்தனாவை கண்ணால் அழைக்க…என்ன செய்வதென்று தெரியாமல் சிறு சங்கடத்துடன் எழுந்தாள் கீர்த்தனா.

“கீர்த்தி மேம்…நீங்களா…? சொல்லவேயில்லை…! அதான் கல்யாணத்துக்கு கூட எங்களுக்கு எல்லாம் சொல்லவில்லையா…?எதுக்காக நீங்க மறைச்சீங்க…?” என்று ஒவ்வொருத்தரும் மாறி மாறி கேள்விகளைக் கேட்க…

“அடப் பாவிங்களா…! எனக்கே இப்பதான் தெரியும்…இதுல இதுக வேற…!” என்று மனதிற்கு கீர்த்தனா பேசிக் கொண்டிருக்க…

“சாரி பிரண்ட்ஸ்….மேரேஜ் திடீர்னு பிக்ஸ் பண்ணி முடிச்சுட்டாங்க… செமஸ்டர் ஹாலிடேஸ் வேற…அதான் உங்க யாரையும் இன்வைட் பண்ண முடியாம போயிட்டது…” என்று கீர்த்தனா சொன்ன அதே காரணத்தை அவன் சொல்லவும்…அனைவரும் புன்னகையித்தபடி, கீர்த்தனாவிற்கு வாழ்த்து சொல்லிவிட்டு  சென்றனர்.

“எப்படி நான் சொன்ன மாதிரியே இவனும் சொல்றான்…!” என்று அதிசயித்தாள் கீர்த்தனா.

மாறன் கடுகடுத்த முகத்துடன் வெளியேற….அனைவரிடமும் பேசிவிட்டு…கீர்த்தனாவிடம் வந்தான் தேவா.

“உனக்கு தலைவலி அதிகமாய் இருந்தா…வீட்டுக்கு போகலாமா…?” என்றான்.

அவனது அக்கரையில் கண்ணைக் கரித்துக் கொண்டு வர…”இல்லை பரவாயில்லை.எனக்கு இன்னைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு…!” என்றபடி நகர்ந்து விட்டாள் கீர்த்தனா.

அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் கைபேசி சிணுங்க…”சொல்லு குணா…!” என்றான்.

“சாரி மச்சான்….இங்க ஆபீஸ்ல கொஞ்சம் வேலையாகிட்டது.ஹெவி ட்ராபிக் வேற..இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்..” என்றான்.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட தேவா…”இருக்கட்டும் குணா…இங்க வேலை முடிந்தது….நீ கிரானைட் கம்பெனிக்கு வந்திடு…நானும் கிளம்பிட்டேன்…” என்றான்.

“ஓகே மச்சான்…!” என்றபடி குணா போனை வைக்க…யோசனையுடன் சென்றான் தேவா.

கிரானைட் கம்பெனிக்குள் வேக வேகமாய் நுழைந்தான்  தேவா.வேகமாய் அறைக்குள் சென்றவன்…அங்கு அமர்ந்திருந்த குணாவை பார்த்தவன்…அவன் கைகளில் இருந்த கோப்புகளை வேகமாய் வாங்கினான்.

“பொறுமை தேவா….இப்ப எதுக்கு இந்த அவசரம்…?” என்றபடி குணா கோப்புகளை நீட்டினான்.

அதில் உள்ள அனைத்து கோப்புகளையும் பார்த்த தேவாவற்கு முகம் இருக…சொல்ல முடியாத அளவிற்கு கோபம் வந்தது.

“இது கோபப்பட வேண்டிய நேரமில்லை தேவா.நிதானம் தவறாம இருந்தாத்தான் நம்மால் எதையும் செய்ய முடியும்.நானே இந்த அளவுக்கு மோசடியை எதிர்பார்க்கலை.இந்த மூணு  வருஷத்துல எவ்வளவு பிராடுத்தனம் செய்ய முடியுமோ அத்தனையும் பண்ணிட்டாங்க…” என்றான் ஆதங்கமாய்.

காலேஜ்ல.. கவர்மென்ட் பிக்ஸ் பண்ண  கட்டணத்தை விட மூன்று மடங்கு கட்டணம் வசூல் பண்ணியிருக்காங்க…  இதில் நன்கொடை…சரியில்லாத நிர்வாகம்…இதனாலேயே புதுசா சேர வரும் மாணவர்களோட எண்ணிக்கை குறைந்திருக்கு.வேலை பார்க்குற லெக்சர்ஸ்க்கு தகுதிக்கு ஏற்ற சம்பளம் இல்லை.அதனாலேயே நிறைய சீனியர் லெக்சர்ஸ் இங்க இருந்து வெளியேறியிருக்காங்க..”“ என்று குணா அடுக்கடுக்காய் காரணங்களை சொல்ல….தலையை பிடித்து அமர்ந்து விட்டான் தேவா.

எவ்வளவு தான் புத்திசாலியாக இருந்தாலும்….அனைத்து குளறுபடிகளையும் ஒரே நேரத்தில் பார்த்து…உடனே சரி செய்யும் அளவிற்கு தன்னால் முடியுமா..? என்ற சந்தேகம்…தேவாவிற்கு தோன்ற…

“அதெல்லாம் முடியும் தேவா…!”””“ என்றான் குணா..அவன் மனநிலை அறிந்தவனாய்.

“காலேஜ் மட்டுமில்லை குணா….இந்த கம்பெனி,டிரஸ்ட்…,எக்ஸ்போர்ட் கம்பெனி இப்படி எல்லா இடத்துலையும் நடந்திருக்க கொள்ளைக்கு அளவேயில்லை.

அங்க எல்லாம் ஒரு அளவுக்கு எல்லாத்தையும் கண்டுபிடிச்சு அதுக்கு முற்றுபுள்ளி வச்சாச்சு.ஆனா இன்னமும் செய்ய வேண்டியது நிறைய இருக்கு.அது ஒரே நாளில் முடியுற விஷயமில்லை.

எல்லா இடத்துலையும் நமக்கு நம்பிக்கையான ஆள் இருக்கணும்.

காலேஜ்ல கீர்த்தி இருப்பா…ஆனா இதெல்லாம் அவளால் முடியுமான்னு தெரியலை. நமக்கு தெரிஞ்ச சீனியர் லெக்சர்ஸ்,ஓய்வுபெற்றவங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்து வச்சிருக்கேன்…அவங்களை எல்லாம் பார்த்து பேசி…சில பொறுப்புகளை ஒப்படைக்கணும்.

அதுக்கு முதல்ல அப்பாவை வரச் சொல் குணா.அவர் வந்தாதான் சரியா இருக்கும். என்று தேவா சொல்ல..

“சொல்றேன் தேவா…ஆனா அப்பா என்ன சொல்லுவார்ன்னு தெரியலை…அதுக்கு ரூபா கிட்ட முதல்ல பெர்மிஷன் வாங்கணும்..””“ என்றான் சிரித்தபடி. 

“ஆமா குணா….ரூபாவை நானும் பார்க்கணும்….என்னைப் பார்த்த உடனே அவ ரியாக்சன் எப்படி இருக்கும்….”“என்றான் யோசனையுடன்.

“ரியாக்சன் எல்லாம் கிடையாது மச்சி…ஒன்லி ஆக்சன் தான்…உனக்கு நிறைய அடி கிடைக்கும் மகனே..!””“ என்றான் குணா.

“ஆமா…! காலேஜல… அது யாரு கீர்த்தி…?” “ என்றான் குணா.

“கீர்த்தி…என்னோட மனைவி….” “ என்றான் ரகசிய சிரிப்புடன்.

குணாவிற்கு இது புது தகவல்.” “ஹேய்…சூப்பர்டா… நான்தான் பார்க்க முடியாம போய்டுச்சு….””“  என்றான் மனம் தாங்களுடன்.

“சரி விடுடா….இதென்ன பெரிய விஷயமா….! இப்ப கூட காலேஜ்ல தான் இருப்பா…வா போய் பார்த்துட்டு வரலாம்…” “ என்றான் தேவா.

“இல்லை தேவா…இப்ப வேண்டாம்….இந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு வரேன்…அப்பதான் மைன்ட் பிரீயா இருக்கும்…” என்றான் குணா.

“நீ சொன்னா சரிதான்…!”“ என்ற தேவா…அதற்கடுத்து செய்ய வேண்டிய வேலைகளில் இறங்கினான்.

அங்கே கல்லூரியில்….

மதியம் வரை தாக்குப் பிடித்த கீர்த்தனாவால் அதற்கு மேலும் முடியும் என்று தோணவில்லை.அரைநாள் விடுப்பு கடிதம் கொடுத்தவள் வீட்டிற்கு கிளம்பினாள்.

அவள் கிளம்பும் நேரம் அவளது அலைபேசிக்கு அழைப்பு வர…எடுத்துப் பார்த்தவளின் கண்களில்…ஒரு அவசரம் தோன்ற…

“சொல்லுங்க மாமா…!” என்றாள்.

எதிர்முனையில் பேச பேச…கீர்த்தனாவின் முகம் நொடிக்கொருமுறை மாறியது.”நான் போய் பார்க்குறேன்…எனக்காக இந்த உதவியை செய்ததற்கு நன்றி மாமா…இனி உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்…என்றபடி போனை வைத்தாள்.

“என்ன செய்யலாம்..?” என்று யோசித்தவள்….அந்த வழியாக வந்த ஆட்டோவை மறைத்து ஏறி சென்றாள்.

அந்த நிமிடம்….அவள் தன்னை மறந்தாள்.தேவா என்று ஒருவன் இருப்பதையே மறந்தாள்.சிந்தனை,செயல் எல்லாம் ஒன்றை நோக்கி மட்டுமே இருந்தது.இன்று எப்படியாவது முடித்தே ஆகவேண்டும் என்று எண்ணி கொண்டாள்.

பிற்பகல் இரண்டு மணிவரை வேலை நெட்டித் தள்ள….ஒரு அளவிற்கு வேலை முடிந்த பின் தான்….பசி என்பதையே உணர்ந்தான் தேவா.குணா வக்கீலை பார்க்க சென்றிருக்க….வெளியே சென்று சாப்பிட எண்ணி கிளம்பினான்.

காரை ஸ்டார்ட் செய்தவனுக்கு….கீர்த்தி நியாபகம் வர….”அவளையும் அழைச்சுட்டு போனால் என்ன…?” என்று எண்ணியவன்..அவளைப் பற்றிய நினைவுகளில்….சந்தோஷ ரேகைகள் முகத்தில் படிய ….கல்லூரியை நோக்கி காரை செலுத்தினான்.

“காலையில் இரண்டு விழிகளும் தெறித்து விழும் அளவிற்கு அவள் திகைத்து நின்ற கோலம்…அவன் மனக்கண்ணில் வந்து இம்சை செய்தது.அதே நினைவில் உள்ளே சென்றவன்….கீர்த்தனாவைத் தேடி போக….அங்கே அவள் இடத்தில் அவளைக் காணாது திகைத்தான்..” “

“ஏதவாது வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பாள் என்று காத்திருந்தவனுக்கு….” “மேடம் தலைவலின்னு விடுப்பு எடுத்துட்டு போய்ட்டாங்க சார்…” “ என்ற பதில் தவிப்பைக் கொடுத்தது.

“உடம்புக்கு முடியலையா…?அதுக்கு தான் நான் காலையிலேயே சொன்னேன்..என் பேச்சை எங்க கேக்குறா..?” “ என்று நேரில் இருப்பவளை திட்டுவது போல் அவன் பேசிக்கொண்டே போக….அவனைப் பார்த்தவர்கள்…புரியாமல் விழித்தனர்.

“காலையிலேயே சோர்ந்து போயிருந்தாலே…ரொம்ப முடியலையோ…!” என்று எண்ணி கவலை கொண்டவன்…வேகமாய் காரை செலுத்த…சாலையில் கவனம் பதித்தபடி சென்ற அவனது கண்களில் விழுந்தாள் கீர்த்தனா.

ஒரு ஹோட்டலில் இருந்து அவள் வெளியே வந்து கொண்டிருக்க…அவளுக்கு முன்னால் ரவி வந்து கொண்டிருந்தான்.ரவி காரை எடுக்க….கீர்த்தனா அமர்ந்ததும் கார் புறப்பட்டு சென்றது.

இதைப் பார்த்த தேவாவின் கண்களில்….தீப்பொறி பறந்தது.உடல் இருக…நரம்புகள் தெறித்து விழும் அளவிற்கு பல்லைக் கடித்தான்.தலையை அழுந்த கோதியவன்….விருட்டென்று வண்டியை எடுத்து….சாலையில் சீறிப் பாய்ந்தான்.

வீட்டின் முன் காரை நிறுத்தியவன்…..வேகமாய் உள்ளே சென்று ..தடதடவென படிகளில் ஏறியவன்..அங்கிருந்த யாரையும் சட்டை செய்யாமல்…அறைக்குள் நுழைந்து பட்டென்று கதவை சாத்தினான்.   

“என்ன நினைச்சுகிட்டு இருக்கா..?அவன் கூட சுத்துறதுக்கு தான் மேடம் விடுப்பு எடுத்திருக்காங்க…நான் ஒரு மடையன்…அவளுக்கு உடம்பு முடியலைன்னு நினைச்சு…ச்ச்ச்ச…” “ என்று சுவற்றில் ஓங்கி குத்தினான்.

நேரம் செல்ல செல்ல ….தேவாவின் கோபம் கூடியதே தவிர குறைந்தபாடில்லை.அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.எவ்வளவு நேரம் நடந்தான் என்று அவன் அறியான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தான் தேவா.கலைத்து போன முகத்துடன் கீர்த்தனா வர…

அங்கே அறையில் இருந்த தேவாவை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் பார்வையில் புரிந்தது.

அமைதியாய் தனது கைப்பையை வைத்தவள்….வாஷ் ரூமிற்கு செல்ல… தேவா இருகிய முகத்துடன் அமர்ந்திருந்தான்.

“என்னாச்சு இவனுக்கு….கலையில் இருந்து நல்லாத்தான இருந்தான்…இப்ப எதுக்கு இப்படி உர்ன்னு இருக்கான்…””“ என்று யோசித்தபடியே முகம் கழுவி வந்தாள்.

வந்தவள் மீண்டும் அமைதியாய் வெளியே போக எத்தனிக்க…” “நில்லு..”.”” என்றான் அதிகாரமாய்.

அவனுடைய இந்த பரிணாமம் அவள் அறியாதது.தயக்கத்துடன் அவனைப் பார்க்க…”என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல..?” என்றான்.

“என்ன நினைக்கணும்…!” “ என்றாள்.

“எங்க போயிருந்த….?” “ என்றான்.

“வெளிய கொஞ்சம் வேலையிருந்தது….அதான் போயிட்டு வரேன்…” “ என்றாள் அவளும் அமைதியாக.

“என்ன வேலை…அதுவும் அந்த ரவி கூட சேர்ந்து சுத்துற அளவுக்கு…?“ என்றான் கோபம் குறையாமல்.

அவனது கேள்வி அவளுக்கு கோபத்தைத் தூண்ட…” “ரவி யாரோ இல்லை..என் மாமா.அவர் கூட போறதுக்கு நான் யாரைக் கேட்கணும்.அதுக்கான உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது…”“

அவளது பதில் அவனின் கோபத்தை அதிகமாய் கிளற…” “யார் கொடுதததா…? நான் உனக்கு புருஷன்…அதாவது நியாபகம் இருக்கா..?“ என்றான் நக்கலாய்.

“அது நீங்களா ஏற்படுத்திகிட்ட உரிமை….நான் இன்னமும் அந்த உரிமையை உங்களுக்கு தரவில்லை.இது எனக்கு விருப்பமில்லாமல் நடந்த திருமணம்.இது உங்களுக்கும் நன்றாகத் தெரியும்..அப்பறம் எதுக்கு இந்த தேவையில்லாத கேள்வி..“என்றாள் எரிச்சலுடன்.

“ஏய்…! என்று அவளது முத்தைப் பற்றியவன்…யார்கிட்ட பேசுறோம்ன்னு தெரிஞ்சு பேசு…பிடிக்காதவ எதுக்குடி கல்யாணம் பண்ணின…உங்க அம்மா-அப்பாகிட்ட சொல்லி நிறுத்தியிருக்க வேண்டியது தான…? உங்க வீட்ல இருக்கவங்க சந்தோஷத்துக்காக….தியாகம்ன்ற பேர்ல கல்யாணம் பண்ண வேண்டியது….அப்பறம் எங்க உசுரை போட்டு வாங்க வேண்டியது…என்னடி உங்க லாஜிக்…”“ என்ற தேவா…கீர்த்தனாவைப் பிடித்து தள்ள…தடுமாறியவள் சமாளித்து நின்றாள்.

கீர்த்தனாவின் கண்களில் இருந்து கண்ணீர் மாலையாய் கொட்டியது. அவனின் கேள்வி அவளை சாட்டையடியாய் தாக்க….உடலில் தெம்பின்றி அப்படியே சாய்ந்து அமர்ந்தாள்.

பேசிக்கொண்டே போனவன்…அவளைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தினான்.உதட்டைக் கடித்து,தலையை கொதியவன்…”

“சாரி…கீர்த்தனா…ஏதோ டென்சன்…ப்ளீஸ் அழாத…” “ என்றான் இருகிய குரலில்.

“இல்லை தப்பு என்மேல்தான்….நான் பிடிவாதமாய் மறுப்பு சொல்லியிருக்கணும்..அதை விட்டுட்டு உங்களை குறை சொல்ல நான் யார்…?” எனக்கு பிடித்தது எதுவும் வாழ்க்கையில் கிடைக்க கூடாதென்று என் விதி இருக்கையில் யாரை சொல்லி என்ன பயன்..?“ என்றாள் விரக்தியாய்.

ஜன்னல் வழியாக வெளியே தோட்டத்தை வெறித்தவன்… “ இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை கீர்த்தனா….நீ பிடிக்காத  இந்த பந்தத்தில் உன்னை வருத்திக் கொண்டு இருக்க வேண்டாம்…நீ ரவியையே திருமணம் செய்து கொள்.நான் உன் அம்மா-அப்பாகிட்ட பேசுறேன்…” “ என்றான் முகத்தை திருப்பாது.

அவனின் வார்த்தைகளில் திகைத்தவள்…..” “ரொம்ப தேங்க்ஸ்… “ என்றாள் கிண்டலான முக பாவனையில்.

ஆனால் அவளின் முகத்தைப் பார்க்காத தேவாவிற்கு, அவளின் அந்த பதில் மரண வேதனையாக இருந்தது.இதைத்தான் விதி என்று சொல்வதோ..!

“என்னம்மா…என்னாச்சு ரெண்டு பேருக்கும்…? இந்த கீர்த்தனா மூஞ்சிய பார்க்க சகிக்கலை…ரெண்டு பேருக்கும் இடையில் ஏதோ ஒன்னு சரியில்லை’”..”“ என்றாள் கார்த்திகா.

“அவங்க விஷயத்தில் நீ தலையிடாத கார்த்திகா…கணவன்,மனைவிக்குள் ஆயிரம் இருக்கும்…. உனக்கு விட்ட வேலையை பார்..“ என்று அதட்டினார் பத்மா.

கீழே வந்த தேவாவின் காதுகளில் அவை அச்சு பிசகாமல் விழ…இருக்க கண்களை மூடியபடி சோபாவில் அமர்ந்தான்.அவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.மனதில் புயல் அடித்தது.

காதல் நிலைக்காமல் போனது போல்…நமக்கு கல்யாணமும் நிலைக்காமல் போகுமோ…? என்று எண்ணி வேதனை கொண்டான்.

 

உயிரே உயிரின் உயிரே …..

ஒரு நாள் உறவாய் இருந்தேன்..

நம் சொந்தங்கள்,பந்தங்கள் …

இன்றா,நேற்றா அன்பே சொல்…

 

Advertisement