Advertisement

தூரிகை 12 :

 

மறுநாள் விடியல் எந்த வித ஆரவாரமும் இல்லாமல் விடிய….தேவாவின் விடியல் மட்டும் அவஸ்தை நிறைந்த ஒன்றாக அமைந்தது.

தூரிகாவை சந்திக்கப் போகிறோம் என்ற ஆவலும்,படபடப்பும் ஒரு புறம் இருந்தாலும்….அவளின் பதில் என்னவாக இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பும் தேவாவிடம் மேலோங்கி இருந்தது.அனைத்தையும் ஓரங்கட்டியவன் கிளம்புவதில் ஆயத்தமானான்.

கிளம்பி வேகமாய் கீழே வந்தவன்….அங்கு பத்மா அமர்ந்திருப்பதைப் பார்த்ததும்…..ஒரு நிமிடம் யோசித்தவன்…”எனக்கு வெளிய கொஞ்சம் வேலையிருக்கு.நான் போயிட்டு வரேன்…”! என்று சொன்னபடி சட்டென்று வெளியேறினான்.

அவனை நினைத்தால் பத்மாவிற்கு ஆயாசமாய் இருந்தது.”எப்படி இருக்க வேண்டிய பிள்ளை…?.ஆனால் இப்படி யாருடனும் அதிகம் ஒட்டாமல் விலகி விலகி போறானே…!” என்று மனதிற்குள் கவலைப் பட்டார்.

காரில் அமர்ந்த தேவாவிற்கும் அப்படித்தான் தோன்றியது.”நான் ஏன் இப்படி இருக்கிறேன்.எதனால் என்னால் யாருடனும் ஒட்டி உறவாட முடியவில்லை.எனக்காக யோசிக்க….எனக்கென்று யாரும் இல்லாமல் போனது ஏன்…?” என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டான்.

“ஏன் இல்லை…! அதான் இப்ப தூரிகா வரப் போறாளே…! இனி உனக்கு எல்லாமே அவள் தான்…!” ஆனா அதுக்கு அவ முதல்ல சம்மதம் சொல்லணுமே..!என்று தன் மனசாட்சியின்  அரைக் கூவலை அப்படியே ஏற்றுக் கொண்டான் தேவா.

வேகமாய் காரை  செலுத்தியவனுக்கு….ஏனோ அன்று உலகம் அழகாய் தெரிந்தது.அனைத்தும் ரம்யமாய் தெரிய…அவனின் செல்போன் ஒலித்தது.

அதில் குணாவின் நம்பரைப் பார்த்தவன்…”சொல்லு குணா…!” என்றான்.

“தேவா..! எங்க இருக்க…?” என்றான் குணா.

“தூரிகாவை மீட் பண்றதுக்காக போயிட்டு இருக்கேன்…மச்சி…” ! என்றான் கூலாக.

“அடப்பாவி நான் இல்லாம நீ இதுவரைக்கும் எங்கேயும் போனதில்லை.இப்ப மட்டும்  என்ன விட்டுட்டு போற…”“ என்று குணா குறை பட…

“டேய் நான் என்ன சினிமாவுக்கா போறேன்..!உன்னை கூட்டிட்டுப் போக..,லவ் ப்ரொபோஸ் பண்ண போறேண்டா…!” என்று தேவா அழாத குறையாய் சொல்ல..

“சரி சரி…போய்த் தொலை.அப்பறம் தேவா… நான் அப்பா கூட ஒரு மீட்டிங்க்காக இரண்டு நான் சென்னை போறேன்.அதை சொல்லத்தான் உனக்கு போன் பண்ணேன்…”“ என்றான் குணா.

“ஹோ….ஓகே குணா…பார்த்து போயிட்டு வா…” “என்றபடி போனை அணைத்தான் தேவா.

தேவா கடைசியாக கூறிய “பார்த்து போய்ட்டு வா குணா…”! என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் குணாவின் காதுகளில் ஒலிக்க ….பழைய நினைவுகளில் இருந்து மீண்டான் குணா.

அன்று தான் அவன் தேவாவிடம் கடைசியாக பேசியது.அதற்கு பிறகு இன்று தான் நண்பனிடம் பேசியிருக்கிறான்.

இடைப்பட்ட நிகழ்வுகள் தெளிவாக குணாவிற்கு தெரியாவிட்டாலும் ,நடந்தவற்றை ஊகிக்கும் அளவிற்கு குணாவுக்கு மதியிருந்தது.

இனி நடப்பதாவது நண்பனுக்கு நல்லதாக அமையவேண்டும் என்று மனதில் கடவுளை வேண்டிக் கொண்டான்.

 

காலையில் எழுந்திருக்கும் போதே…கீர்த்தனாவிற்கு தலை அதிகமாய் வலிப்பதைப் போல் இருந்தது.உடல் அசதியில் தள்ள…மீண்டும் படுத்துக் கொண்டாள்.

அந்த அறையை அவள் மட்டுமே உபயோகித்தாள்.ஏனோ தேவா அந்த அறைக்கு வரவேயில்லை.அதை கீர்த்தனாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“பேசாமல்  இன்றைக்கு விடுப்பு எடுத்துக்கலாமா…?” என்று அவளின் மனம் யோசிக்க….”காலேஜ் போக ஆரம்பிச்சே ஒரு நாள்  தான் ஆகுது…! அதுக்குள்ளே விடுப்பா…?” என்று ஒரு மனம் கேட்க…

இன்னைக்கு ஸ்டாப் மீட்டிங் வேற இருக்கு…! எழுந்து கிளம்புறது தான் உத்தமம்..” என்று நினைத்தவள்….சோம்பலுடன் எழுந்து மெதுவாக கிளம்ப ஆரம்பித்தாள்.

அந்த வீடே அமைதியாய் இருப்பது போல் ஒரு மாயை கீர்த்தனாவின் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது.திருமணத்தின் போது நடந்து கொண்ட கார்த்திகாவின் நடவடிக்கைகளுக்கும்….இப்பொழுது இருக்கும் கார்த்திகாவின் நடவடிக்கைகளுக்கும் நிறைய வித்யாசம் இருப்பதாக பட்டது கீர்த்தனாவிற்கு.

பல சிந்தனைகளில் மூழ்கியவாறு கிளம்பியவள்….சாப்பிடுவதற்காக கீழே சென்றாள்.

ஆனால் கீழே யாரும் இல்லாமல் அமைதியாக இருக்க…தோளைக் குலுக்கியவாறு சமயலைறைக்குள் சென்றாள்.அங்கு சமைத்த உணவுகள் கேட்பாரற்று கிடக்க…அவற்றை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள்.

சாப்பிடுவதற்காக ஒரு வாய் எடுத்து வைத்தவள்….அதன் ருசியில் மெல்லவும் முடியாமல்,சொல்லவும் முடியாமல் அதை கஷ்ட்டப்பட்டு விழுங்கினாள்.

இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த கார்த்திகாவிற்கு திருப்தியாய் இருந்தது.பத்மா சமைத்த உணவுகளின் ருசியை மாற்றிய பெருமை கார்த்திகாவையே சாரும் என்பதால் வந்த மகிழ்ச்சி தான் அது.

அறையில் நிழலாட….திரும்பிப் பார்த்தவளின் கண்களுக்கு கார்த்திகா பட….கீர்த்தனாவுக்கு தெளிவாய் அனைத்தும் புரிந்தது.

“இப்ப என்ன பண்றது…?” என்று யோசித்தவள்….அதை அப்படியே எடுத்து குப்பைக் கூடையில் கொட்டினாள்.வேகமாய் சமையலறை சென்றவள் கொஞ்ச  நேரத்தில் திரும்பி வர…அவளது கைகளில் கமகமக்கும் காய்கறி ரவை உப்புமா ரெடியாகியிருந்தது.

ஆவி பறக்கும் உப்புமாவை எடுத்து வாயருகே அவள் கொண்டு செல்ல…”

“எனக்கும் பசிக்குது…!” “ என்ற குரல் கேட்டு விக்கித்து நிமிர்ந்தாள்.

காலையிலேயே குளித்து,கோட் சூட்டுடன் நின்றிருந்த தேவாவை எத்தனை நிமிடங்கள் இமைக்காமல் பார்த்தாள் என்பது அவள் அறியாள்.இன்றுதான் அவனை அந்த உடையில் முதன் முதலாய் பார்க்கிறாள்.

“ஹலோ..! எனக்கும் பசிக்குது…!” என்று அவள் முன் அவனின் கைகள் சொடக்கு போட நினைவுக்கு வந்தாள்.

“ஆங்…!பசிக்குதா…?” என்று கேட்டவள் மனதில் ஒரு நிமிடம் வன்மம் தலை தூக்க….”உட்காருங்க….!” என்று அக்கறையாக சொன்னவள்…அவனுக்கு பரிமாற போக..

“வேண்டாம்..!” என்று தடுத்தான் தேவா.”எனக்கும் உப்புமா தான் வேணும்…!” என்றான் தாயிடம் கேட்கும் குழந்தை போல்.பத்து நாட்களாய் சரியாய் பேசாதவன் இன்று உரிமையாய் வந்து அவள் அருகில் அமர்ந்தது அவள் மனதிற்கு லேசாய் இருந்தது.

அவனின் முக பாவனைகளில்….தன்னைத் தொலைத்தவள்…செய்ய நினைத்ததை மறந்து….வேகமாக அவனது தட்டில் உப்புமாவை நிறைத்தாள்.

அதை அவன் வேக வேகமாய் சாப்பிட….அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவளுக்கு பாவமாகிப் போனது.வயிறு முட்ட சாப்பிட்டவன்…” “தேங்க்ஸ் கீர்த்தனா…” “ என்று நிமிர…அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அனைத்தையும் அவனே சாப்பிட்டு முடித்திருக்க….அவளின் வயிறு நானும் இருக்கிறேன் என்று அவளுக்கு நினைவூட்ட…கடமுட கடமுடா என்று கத்தியது.

ஆனால் அவன் அதையெல்லாம் கண்டு கொண்டானில்லை.மீண்டும் சமைத்து சாப்பிட நேரம் இல்லாததால் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு கிளம்பினாள் கீர்த்தனா.

இவர்களின் நாடகத்தைப் பார்த்த கார்த்திகாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.”நான் நினைச்சது என்ன…?இங்க நடந்தது என்ன…? எப்படியோ அவ இன்னைக்கு பட்டினி…அந்த மட்டும் சந்தோசம்…” என்று நிம்மதியடைந்தாள்.

கீர்த்தனா கைப் பையை எடுத்துக் கொண்டு வெளியே வர…அவளுக்காக காத்திருந்தான் தேவா.

“நான் உன்னை டிராப் பண்றேன்…” என்று தேவா கூற…மறுக்காமல் காரில் எறிக் கொண்டாள் கீர்த்தனா.அவளுக்கும் தன்னால் பேருந்தில் சென்று வர முடியும் என்று தோணவில்லை.அவள் உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

மாறாக தேவாவின் முகம் நிறைவாய் காணப்பட்டது.விசில் அடித்தபடியே வண்டியை ஓட்ட…”” “பாவி பாவி…கொஞ்சமாவது வச்சானா…? எல்லாத்தையும் சாப்பிட்டுட்டான்.இப்ப பசி வயித்த கொல்லுது…!” என்று மனதிற்குள் பொரும…

அவனா சாப்பிட்டான்…? நீதான அவனுக்கு எல்லாத்தையும் வச்ச…!என்று அவள் மனசாட்சி இடித்துரைக்க….”அதுக்காக நான் சாப்பிட்டேனா இல்லையான்னு கூட கேட்க மாட்டானா…?” என்று மனசாட்சியிடம் சண்டை பிடித்தாள் கீர்த்தனா.

தலை அதிகமாய் வலிப்பதைப் போல் தோன்ற…எதுவும் பேசாமல் அமைதியாக வேடிக்கைப் பார்க்க தொடங்கினாள்.”கீர்த்தனா இறங்கு…!””என்று தேவா சொல்லும் வரைக்கும்.

ஒரு பெரிய ஹோட்டலின் முன்னால் கார் நின்று கொண்டிருந்தது. அதை பார்த்த கீர்த்தனாவிற்கு ஒன்றும் புரியவில்லை.”இப்பதான முட்ட முட்ட சாப்பிட்டான்…!அப்பறம் எதுக்கு ஹோட்டலுக்கு…?” என்று யோசித்தவள்…,”

”எனக்கு காலேஜ்க்கு நேரமாச்சு…”!”என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“உன்னை சரியான நேரத்துக்கு கொண்டு போய் சேர்த்துடுவேன்…இப்ப கொஞ்சம் இறங்கி வரியா…?” என்றான் தன்மையாகவே.

“என்ன அதிசயம்..? இவனெல்லாம் அமைதியாய் பேசுறான்…ம்ம்ம்“ என்று சலித்துக் கொண்டவள்…இறங்கி அவனுடன் உள்ளே சென்றாள்.

“கோயம்பத்தூர்ல இவ்ளோ பெரிய ஹோட்டலா…?” என்று வியந்தவள்…எதுவும் பேசாமல் சென்றாள்.அவளின் பசியை அவள் மறந்திருக்க…அங்கே புக் செய்யப்பட்ட பேமிலி அறையில்  சென்று அமர்ந்தான் தேவா.

“கீர்த்தனா…என்ன சாப்பிடுற…?” என்றான்.

“நீ என்ன லூசா…?” என்பதைப் போல் பார்த்தாள்.இந்த ஹோட்டல்ல என்ன மீன் குழம்பும் சாதமுமா கிடைக்கும்…நூடுல்ஸ்,பிரைட் ரைஸ்ன்னு தான் தருவாங்க,…”ஐயோ…! அதெல்லாம் சாப்பிட்ட சாப்பிட்ட மாதிரியே இருக்காதே..! என்று மனதில் நினைத்தவள் ,அதை வெளியில் சொல்லவில்லை.

அவள் நினைத்த அளவிற்கு இல்லாமல், சூடாக இட்லியும்,அதற்கான சட்னி வகைகளும் அவளுக்கு முன் வைக்கப் பட்டது.அதைப் பார்த்த  அவள் முகத்தில் டன் கணக்கில் அசடு வழிந்தது.ஆனால் எதுவும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டாள்.அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்த தேவா….”

“நான் இன்னைக்கு தான் திருப்தியாய் சாப்பிட்டு இருக்கேன்..” !”“ என்று கூற அவளுக்கு புரை ஏறியது.”

வேகமாய் அவள் தலையை தட்டியவன்,தண்ணீரை எடுத்துக் கொடுக்க…அதை வேகமாய் குடிக்க…”

“உப்புமால என்ன இருக்கு..திருப்தியாய் சாப்பிட…?””என்று தனக்குள் கேட்க…அவளின் எண்ணம் புரிந்தது போல்…

“நமக்குன்னு இருக்குறவங்க செஞ்சா….அதுக்கு தனி ருசி தான் இல்லையா…?” என்றான் கள்ளப் பார்வையுடன்.

அவனின் பதில் ஏதோ ஒரு வகையில் அவள் மனதைத்  தாக்கியது என்றால் அது மிகையில்லை. அவனின் அந்த பார்வையும் அவளை சொல்ல முடியாத ஒரு உணர்விற்கு ஆட்படுத்தியது.

 

Advertisement