Advertisement

தூரிகை 11 :

தேர்வுகள் முடிந்த நிலையில்…. ஊருக்கு செல்வதற்காக தனது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் தூரிகா.

கடைசி வரையில் அந்த ஓவியன் யார் என்று தெரியாமல் போனதில் அவளுக்கு மிகுந்த வருத்தம்.

“நாம் இத்தனை கடிதம் எழுதியும் ஒரு பதிலும் வரவில்லையே.சரியான திமிர் பிடித்தவராய் இருப்பாரோ….? ஆனால் அவரது ஓவியங்களைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே…? ரசனை மிகுந்தவனால் மட்டுமே அதை ஓவியமாய் புனைய முடியும்…!” என்று மனதிற்குள் பல சிந்தனைகளை ஓட விட்டபடி…துணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

அவளின் பெயரை கூவிக் கூவி அழைத்தபடியும் ….அவளின் சிந்தனைகளை தடுக்கவும் அங்கு வந்து சேர்ந்தாள் ஜெனி.

“என்ன மேடம்…?பெட்டி படுக்கையெல்லாம் மூட்டை கட்டியாச்சா…?” என்றாள் ஜெனி.

அவளைத் திரும்பி முறைத்தாள் தூரிகா…”என்னடி கிண்டலா…? நீ எல்லாத்தையும் பேக் பண்ணலையா…? இப்பவே எடுத்து  வச்சுட்டா நாளைக்கு டென்சன் இல்லாம கிளம்பலாம்…!” என்றாள் அலுப்புடன்.

“நான் நாளைக்கு கிளம்பற ஐடியாவுலையே இல்லப்பா…!” என்றாள் ஜெனி கூலாய்.

“அடிப்பாவி…! நீதானாடி சொன்ன கிளம்பலாம்ன்னு…!இப்ப என்னடான்னா இப்படி சொல்ற…பாதிபேர் ஹாஸ்டலை காலி பண்ணிட்டாங்க…!” என்றாள் தூரிகா.

“இப்ப நான் சொல்லப் போறதைக் கேட்டன்னா…நீயும் கிளம்ப மாட்ட…!” என்றாள் ஜெனி பீடிகையுடன்.

“அப்படி என்ன விஷயம்….? எனக்கு தெரிஞ்சு முக்கியமான விஷயம்…,அதுவும் இங்க இருந்து நாம கிழிக்கிறதுக்கு எதுவுமில்லை…” என்றாள் தூரிகா கடுப்புடன்.

ஜெனி..” “இருக்கே…!”“ என்றாள்.

தூரிகா….” “அப்படி என்ன தான் இருக்கு..! சொல்லித் தொலைடி..!”“ என்று கோபமாய் முறைக்க…

“டோண்டோடைன்…” “ என்றபடி கையில் இருந்த கடிதத்தை இரண்டு புறமாக ஆட்டிக் காண்பித்தாள் ஜெனி.

“இதென்ன லெட்டர் மாதிரி இருக்கு..! யாருக்கு வந்த லெட்டர்..?” என்று தூரிகா கேட்க…

ஜெனி..” “இதுவா…இது ஓவியன் என்பவரிடம் இருந்து தூரிகா என்ற ரசிகைக்கு வந்த கடிதம்….”“ என்றாள் அபிநயம் பிடித்தபடி.

தூரிகாவின் கண்கள்….கோழி முட்டை அளவிற்கு பெரிதாக….ஜெனி சொன்னதை நம்ப முடியாமல் திகைத்து நின்றாள் தூரிகா.

“என்னடி சொல்ற…?” என்று மீண்டும் நம்பாமல் கேட்க…

“மக்கு மக்கு…நிஜம்தாண்டி.இப்பதான் வந்தது.நல்ல வேலை நான் போனேன்.இல்லை இந்த லெட்டரை வாங்க முடிஞ்சுருக்காது..அந்த வார்டன் சிடு மூஞ்சிகிட்ட இருந்து…” என்றாள் ஜெனி சிரிப்புடன்.

வேகமாய் அவள் கையிலிருந்த கடித்தைப் பிடுங்கினாள் தூரிகா.” “தேங்க்ஸ்டி…”“ என்றபடி அவள் முகம் மலர…

“ஏண்டி இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலை ,இன்டர்நெட்… பேஸ்புக்ன்னு  உலகம் எங்கையோ போயிட்டுருக்கு…இங்க என்னடான்னா…லெட்டர்,ரசனை,ஓவியம்ன்னு…ஸ்ஸ்ஸ்பப்பா…என்னால முடியாதுடி தங்கம்.படிச்சுட்டு அப்படி அதுல என்ன தான் இருக்குன்னு எனக்கு சொல்லு…நான் போய் குளிச்சுட்டு வரேன்… “ என்றபடி சென்றாள் ஜெனி.

தூரிகாவால் நம்பவே முடியவில்லை.இத்தனை நாட்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் இப்பொழுது நடந்திருப்பது அவளை ஆச்சர்யப்படுத்தியது.

ஒரு ரசிகையாய் தான் எழுதிய கடிதங்களுக்கு இன்று அங்கீகாரம் கிடைத்ததை நினைத்து மகிழ்ந்தாள் தூரிகா.

தன்னை யாரென்று வெளி உலகத்திற்கு வெளிப்படுத்திக் கொள்ளாத ஒருவர்…இன்று அவளிடம் தன்னை வெளிப்படுத்தியிருப்பது அதிசயம் தான் என்று எண்ணினாள்.

விரல்கள் ஒரு புறம் நடுங்கினாலும்…மனதில் உள்ள சந்தோசம்…வேகமாய் அந்த கடிதத்தை பிரிக்க வைத்தது.

மெதுவாக கடித்ததை பிரித்து…அதைப்  ஆவலுடன் படிக்கத் துவங்கியவளின் கண்கள்….ஒவ்வொரு வரிக்கும் பெரிதான ஆச்சர்யத்தையும்,அதிர்ச்சியையும் கொண்டு செல்ல..,முகம் பலவித பாவனைகளைக் காட்டியது.

அவனின் கடித்ததை முழுதாய் படித்து முடித்தவளால்…அதை ஜீரணிக்க முடியவில்லை.கடித வரிகள் அவள் மனதில் பதிந்து,இதயம் நுழைய….மூளை ஏற்க மறுத்தது.

ஆனால் எல்லாவற்றையும் மீறி அவளது முகத்தில் ஒரு நிம்மதி குடி கொண்டிருந்தது.ஆனால் அதை அவள் அறியவில்லை.

“இவன் என்னைப் பார்த்திருக்கிறானா…?” என்று யோசித்தவள்…அன்று ஆர்ட் கேலரியில் நடந்த விஷயங்களை நியாபகப்படுத்திப் பார்த்தாள்.

தான் விழப் போனதும்,தன்னை ஒருவன் தாங்கிப் பிடித்ததும்,சாரி சொன்னதும் நியாபகம் வந்த அவளுக்கு அவனது முகம் மட்டும் முன் வர மறுத்தது.

மீண்டும் மீண்டும் யோசிக்க….அன்று இருந்த கூட்டத்தில் அவனின் முகம்  அவளுக்கு புலப்படவே இல்லை.

ஊதா வண்ண சுடிதார்ல எப்ப பார்த்தான்.அது நேற்று தான நான் அணிந்திருந்தேன்…எப்படி பார்த்திருக்க முடியும்…?என்று  ஒவ்வொன்றாய் யோசிக்க…எதிலும் அவன் முகம் தெரிய மறுத்தது.

“எடுத்த எடுப்பில் காதலா…?” என்று அவள் சிந்திக்க…”ஏன் உனக்கு அவனைப் பிடிக்கவில்லையா…?” என்று மனசாட்சி இடித்துரைக்க….

“பிடிக்கும்…ஆனா அதுக்காக அதை காதல் என்றெல்லாம் சொல்ல முடியாது..நான் அவருக்கு ரசிகை.அவரோட ஓவியங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்…!அவ்ளோதான்.அதைத் தாண்டி எதுவுமில்லை…” “ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

“இப்பொழுது என்ன செய்வது…? இதற்கு நான் பதில் எழுத வேண்டுமா…? இல்லை நான் அவனை லவ் பண்ணலைன்னு சொல்லனுமா…?” என்று யோசிக்க..

“நீ தான அவனுக்கு விடாம கடிதம் எழுதி….தொல்லை பண்ண…இப்ப அவனும் அவன் மனதில் இருப்பதை சொல்லிட்டான்.இனி நீ தான் முடிவு பண்ணனும்…” “ என்று உள்மனம் சொல்ல…

அது தான் சரி என்ற முடிவுக்கும் வந்தாள்.

 

மாறன் சொன்ன செய்தி கேட்டு பத்மாவிற்கு தலைசுற்றியது.இதெப்படி நடக்கும்…? தேவா நான் சொன்னால் சம்மதம் சொல்வானா…? அவனுக்கு சிந்துவைப் பிடிக்குமா..? என்று குழம்பிக் கொண்டிருந்தார்.

“நீ சொன்னா கண்டிப்பா அவன் கேட்பான் பத்மா.சிந்துவும் உனக்கு அண்ணன் பொண்ணு.நீயே நல்லா யோசி.இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்.நடந்தால் மட்டும் தான் நான் இதே கவுரவுத்தோட இருக்க முடியும்…”! என்றார் மாறன்.

“இல்லைங்க…!எனக்கென்னமோ தேவா இதை ஏத்துக்குவான்னு தோணலை.சிந்துவை அவனுக்கு பிடிக்கும் தான்.ஆனா கல்யாணம் பண்ணிப்பானான்னு தெரியலை…”! என்றார் பத்மா.

“ஹிம்ம்ம்… அம்மா…! அவனுக்கு சிந்துவே ஓவரு…இதுல அவன் சரின்னு சொல்ல மாட்டான்னு பில்டப் வேற..”! என்று கார்த்திகா கிண்டலாய் சிரிக்க..

கீழே இறங்கி வந்தான் தேவா.அவனைப் பார்த்த மாறன்….கண்களால் பத்மாவிடம் ஜாடை காட்ட…

“தேவா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்….” என்று பத்மா…தடுமாற்றத்துடன் இழுக்க…

“சொல்லுங்க…!” என்றான் ஒற்றை சொல்லாய்.

“நம்ம சிந்துவைப் பத்தி நீ என்ன நினைக்கிற…?” என்றார் பத்மா.

“அவளைப் பத்தி நினைக்க என்ன இருக்கு…? உங்க அண்ணன் பொண்ணு.இருந்தாலும் அவங்க அப்பா குணமோ…இல்லை அத்தை,மாமன் குணமோ இல்லாத நல்ல பொண்ணு.எனக்கு நல்ல தோழி..” என்றான் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டே..!

“நீயே சொல்லிட்ட அவ நல்ல பொண்ணுன்னு.ஏன் நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்க கூடாது…?”” என்று ஒரு வழியாய் கேட்டுவிட்டார் பத்மா.

“கூடாது….!”” என்று முகம் சிவக்க கத்தினான் தேவா.

“நான் கேட்டேனா உங்க கிட்ட…? எனக்கு கல்யாணம் செய்து வைங்கன்னு கேட்டேனா…? எனக்கு பொண்ணு பார்க்க்க நீங்க யாரு…?” என்று கத்தினான்.

“இங்க பாருடா…!இப்ப எதுக்கு சும்மா கத்துற..சிந்துவை கல்யாணம் செய்துக்க விருப்பமான்னு கேட்டா…ஒன்னு ஆமான்னு சொல்லு.இல்ல இல்லைன்னு சொல்லு.அதை விட்டுட்டு எதுக்கு இப்படி கத்துற….”” என்றாள் கார்த்திகா.

இதையெல்லாம் மாறன் அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்க…அவரின் அமைதியான முகம் அவனுக்கு சொல்லாமல் பல கதைகளை சொல்லியது.

ஓஹோ..! இதெல்லாம் உங்க வேலை தானா…!அதான பார்த்தேன்…. என்னடா மேகமே கூடாம தூறல் விழுதேன்னு…!நீங்க நினைக்கிறது கனவுல கூட நடக்காது…!” என்று எச்சரித்தவன் வேகமாய் வெளியே சென்று  விட்டான்.

அறையில் அமர்ந்து அந்த வார இதழைப் புரட்டிக் கொண்டிருந்தாள் தூரிகா.

கைகள் பக்கங்களைத் திருப்பிக் கொண்டிருந்தாலும்,மனம் ஏனோ அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

அவனுக்கு என்ன பதில் எழுதுவது…? அவன் முகமும் நினைவிற்கு வரவில்லை.ஆனால் அதையும் மீறி அவனைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே என் மனதில் ஓடுகின்றது.

என்ன பண்ணலாம்…? என்று யோசித்துக் கொண்டே பக்கங்களைத் திருப்பிக் கொண்டிருந்தவள்,புத்தகத்தின் நடுப் பக்கத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.

நடுப்பக்கத்தின் ஓவியத்தில் அந்த வாரம் இடம் பெற்றிருந்தது அவளின் புகைப்படம்.ஆர்ட் கேலரியில் அவள் அணிந்திருந்த ஆடை வண்ணம் முதற்கொண்டு அச்சு அசலாய் வரையப் பட்டிருந்து அந்த ஓவியம்.

தன்னை ஒருவனால் இப்படி தத்ரூபமாக வரைய முடியும் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தன்னை பார்த்த ஒரு சில நிமிடங்களில், இவ்வளவு ஆழமாக அவளை உள்வாங்கியிருப்பது கண்டு அவளால் வியக்காமல் இருக்க  முடியவில்லை.

ஓவியனின் கை வண்ணத்தில் அவள் அழகு தேவதையாய் மிளிர்ந்து கொண்டிருந்தாள்.அவள் இமைக்காமல் அமர்ந்திருப்பது கண்டு அவளின் அருகில் வந்து பார்த்தாள் ஜெனி.

அந்த ஓவியத்தைப் பார்த்த ஜெனிக்கும் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.கடித விவரத்தை ஏற்கனவே தூரிகா சொல்லியிருந்ததால், ஜெனிக்கு ஆச்சர்யம் அதிகமாகவில்லை.

“ஹேய்ய்…சூப்பர்டி..! சான்ஸே இல்லை.பக்காவா இருக்கு.உனக்கும்,இந்த ஓவியத்துக்கும் எந்த வித்யாசமும இல்லை…!” என்று புகழ்ந்து கொண்டிருந்தாள் ஜெனி.

ஆனால் தூரிகாவின்  நிலையோ வேறு மாதிரி இருந்தது.அந்த ஓவியத்தில்,அவனின் கைவண்ணத்தில் தன்னை மறந்தாள்.அவள் அனுமதியின்றி அவள் மனதில் வந்து அமர்ந்தான் தேவா.

காதல் கொண்டவளின் மனதில் நுழையும் வித்தையை அறிந்திருந்தானோ என்னவோ…!

எதனால் அவள் ஈர்க்கப் பட்டாளோ…அந்த ஓவியத்தின் வழியாகவே அவன் காதலை சொல்லிவிட்டான் தேவா.

இதனை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.குழப்பங்களுடன் இருந்த அவளின் மனதை தெளிவாக்கிவிட்டான் தேவா.

அவனை சந்தித்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள் தூரிகா.

என்ன செய்வது என்று யோசித்தவள்….

டியர் ஓவியன்….

உங்கள் கடிதம் என் கைகளில் கிடைக்கப் பெற்ற மணித்துளி முதல் இதுவரை என் மனம் குழம்பிக் கொண்டிருந்தது.

உங்களின் ரசிகையாய் அறிமுகமான எனக்கு,அது வெறும் ரசனையா…அல்லது அதையும் மீறிய ஒன்றா என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் அதற்கெல்லாம் விளக்கம் அளித்தார் போல் உங்களின் கை வண்ணத்தில் என்னை நான் ஓவியமாய் பார்த்த போது…என்னை நான் மறந்தேன்.

இருந்தாலும் கண்டவுடன் காதல் என்பதில் எனக்கு சுத்தமாக உடன்பாடு கிடையாது.

ஒரு ரசிகையாகவே நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.மற்றபடி உங்கள் மீது எனக்கு காதல் மாதிரியான எண்ணங்கள் எதுவும் வரவில்லை.இனி வரப் போவதுமில்லை.

அன்புடன் தூரிகா….                                 

என்று கடிதத்தை முடித்திருந்தாள் தூரிகா.மீண்டும் வாசித்த அவளுக்கு அது திருப்தி தர… சந்திக்க வேண்டிய இடத்தையும்,நேரத்தையும்,நாளையும் குறிப்பிட்டு… தேவாவிற்கு அனுப்பினாள்.

 

மருதமலையில்  நின்றிருந்த தேவா…அங்கிருந்த மலையை வெறித்துக் கொண்டிருந்தான். வீழ்ச்சியில் இருந்து ஒருவன் மீள்வது எளிது.ஆனால் சூழ்ச்சியில் இருந்து ஒருவன் மீள்வது கடினம்….என்ற வரிகள் இப்போது அவனுக்கு சரியாய் இருந்தது.

“விடு மச்சான்..! அதைப் பத்தியே ஏன் யோசிச்சுட்டு இருக்க…?” என்றான் குணா.

“சிந்துவைப் போய் நான் எப்படிடா…?” என்று வேதனையுடன் சொன்னான் தேவா. அவனைப் பொறுத்த மட்டில் சிந்து அவனுக்கு நல்ல  தோழி.அதைத் தாண்டி அவன் வேறு யோசித்ததில்லை.

“தேவா..!” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான் தேவா. சிந்து நின்று கொண்டிருந்தாள்.

“வா சிந்து…!” என்றவன் சுரத்தையே இல்லாமல் திரும்பிக் கொண்டான்.

“சாரி தேவா…! எல்லாம் என்னால் தான்.நான் தான் அப்பாகிட்ட உன்னை லவ் பண்றதா சொன்னேன்.உனக்கும் என்னைப் பிடிச்சுருக்குன்னு தப்பா யோசிச்சுட்டேன்..!” என்றாள் குற்ற உணர்வுடன்.

அவளைப் பரிதாமாய் பார்த்த தேவா…”இப்பவும் சொல்றேன் சிந்து….எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.ஆனா அது வேற…காதல் வேற.என்னையறியாம என் மனசுக்குள் வந்த ஒரு பெண் இருக்கா…! அவளை மட்டும் தான் நான் காதலிக்கிறேன்…!” என்றான்.

தேவா இன்னொரு பெண்ணைக் காதலிக்கிறான் என்ற செய்தியே சிந்துவை சுக்கு நூறாய் உடைத்தது.இருந்தாலும் தன் மனதை வெளிக்காட்டாமல் இருக்க…அவள் கொஞ்சம் மெனக்கெட  வேண்டிருந்தது.

“சாரி தேவா…! என்னால் இனி எந்த குழப்பமும் வராது…! நான் வரேன்..!” என்றபடி திரும்பி நடந்தாள் சிந்து.அவள் கண்கள் கண்ணீரை சுரக்க…அதை தேவாவும்,குணாவும் அறியாதவாறு துடைத்துக் கொண்டு சென்றாள்.

“பாவம்டா….! அவ மனசு அழுகுது,முகம் சிரிக்குது…! இத்தனை நாள் உன்னை லவ் பண்ணியிருக்கா….ஆனா உன்கிட்ட சொல்லவேயில்லையா…?” என்றான் குணா.

“என் வாழ்க்கையில் உனக்கு தெரியாம என்ன நடந்திருக்கு குணா…?” என்றான்  வெறித்தபடி.

“ஹேய் ஜெனி…வாடி…!” என்ற குரல் கேட்டு விக்கித்து திரும்பினான் தேவா.

அவனையடுத்து பத்தடி தூரத்தில் அமர்ந்திருந்தாள் தூரிகா.

இருடி பிரசாதம் வாங்கிட்டு வரேன்…!” என்ற ஜெனி பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தாள்.

அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.எப்படி இது சாத்தியம்…? என் மனம் இவளைத் தேடும் போது…சரியாக என் கண் முன் வந்து விடுகிறாள்…? என்று ஆச்சர்யமாய் நினைத்துக் கொண்டிருந்ததான்.

என்ன பண்ணலாம்ன்னு இருக்கடி….?” என்றாள் ஜெனி.

“நீ எதைப் பத்தி கேட்குற…?” என்றாள் புரியாமல் தூரிகா.

“அதான் அந்த லவ் லெட்டர்க்கு என்ன பதில் எழுத போற…?” நாம ஊருக்கு போக வேண்டாமா..? இன்னும் எத்தனை நாளைக்கு இங்க இருக்குறதா உத்தேசம்…? என்றாள் ஜெனி.

அவர்களுக்கு அருகில் இருந்ததால் அவர்கள் பேசுவது தேவாவிற்கு நன்றாய் கேட்டது.

“பதில் எழுதியாச்சு…!” என்று தூரிகா அசால்ட்டாய் சொல்ல…

”அடிப்பாவி…என்கிட்டே சொல்லாம எப்படி எழுதுன…?” என்று குறைப்பட்டாள் ஜெனி.

“சொல்லிட்டு எழுத இதென்ன கட்டுரையா…கடிதம்…”” என்றாள் தூரிகா.

“சரி என்ன எழுதுன…?” என்று கேட்க…

தான் எழுதியதைப் பற்றிக் கூறினாள் தூரிகா.அந்த கடிதம் கைகளில் வராமலேயே அவள் எழுதிய விஷயங்களை அறிந்த தேவாவிற்கு மனதில் ஒரு சிறு வலி தோன்றியது.

“என்னை சந்திக்க நினைக்கிறாளா…?” என்று எண்ணியவன் …இப்பவே போய் நான் தான்னு சொன்னா என்ன..? என்று யோசித்தான்.

“வேண்டாம்…இங்க கூட்டமா இருக்கு.நான் ஒரு அமைதியான இடத்துல தான் சந்திக்கணும்.அப்பத்தான் மனம் விட்டு பேச முடியும்…”கண்டிப்பாய் அவள் என் காதலை ஏற்றுக் கொள்வாள்..”“ என்று யோசித்துக் கொண்டே திரும்ப…அதற்குள் தூரிகா வெகு தூரம் சென்றிருந்தாள்.

தன் கவலைகளை மறந்து….அவளைக் கண்ட மகிழ்ச்சியில்…உதட்டில் புன்னகை பூக்க…தலைமுடிக்குள் கைகளை விட்டு கோதியவாறு நின்றிருந்தான் தேவா.

மறுநாள் விடியல் இவர்களுக்கு வைத்திருப்பது என்ன…?

Advertisement