“இப்போவும் அதேதான்.. தாலி கட்டதான் தூக்கினு வந்தேன்.. நாளைக்கு தாலி கட்ற வரிக்கும் இது உசுரோட இருக்கணும் இல்ல.. அதுக்குதான் இந்த செட்டப்.. இப்படியே கிடக்கட்டும்..” என்றவன் படகின் ஒரு ஓரம் சாவகாசமாக அமர்ந்து கொள்ள, அவன் பேச்சை கேட்டதில் மூர்ச்சையாகாத நிலைதான் கார்த்திகாவுக்கு.

               “தாலி கட்டப் போறானா.. யார் இவன்.? பைத்தியமா.. எரும.. பைத்தியமா இருந்தா உன்னை ஏன் தூக்கிட்டு போறான். தாலி கட்ட போறதா வேற சொல்றானே.. பாவி.. நான் உன்னை பார்த்தது கூட இல்லையடா… ஏன்டா இப்படி என் வாழ்க்கையை நாசம் பண்ண பார்க்குற..” என்று மனதிற்குள்ளாக அவனை வசைபாடிக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

           இதில் அவள் குடும்பமே காவல் நிலையத்தில் இருப்பதாக விஜயா சொன்னாளே என்று அதை நினைத்து வேறு கவலை. விஜயா இவனை தம்பி என்றது அப்போதுதான் உரைக்க, “அச்சோ.. அவருமா..” என்று நெஞ்சம் உலர்ந்து போனது அவளுக்கு.

            அம்மா உண்மையிலேயே காவல் நிலையத்தில் இருப்பாரா.. இல்லை அதுவும் பொய்யா என்று குழம்பிப் போனவளாக கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தாள் கார்த்திகா. குமரன் அவளை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல்   கடலை வெறித்து அமர்ந்திருக்க, பூச்சிக்குத்தான் கார்த்தியைப் பார்த்து பாவமாக இருந்தது.

             அந்த படகு ஏதோ ஒரு திசையில் அதன் போக்கிற்கு சென்று கொண்டிருக்க, தன் வாழ்வும் இப்படித்தான் ஆகிப் போகுமோ என்று அவள் பதறிக் கொண்டிருக்கையில் அவள் அருகில் அமர்ந்தான் பூச்சி.

              படுத்திருந்தவள் பயத்துடன் பின்னால் நகர, “இரும்மா.. இரு..” என்றபடியே அவள் கால்கட்டை அவிழ்த்துவிட்டான் அவன். குமரன் “ஏய் பூச்சி..” என்று அதட்டும்போதே,

              “ஏன்டா இப்படி பண்ண.” என்று அவன் சட்டையை கொத்தாக பற்றிவிட்டாள் கார்த்திகா.

              அவள் செயலில் கோபம் கொண்டவனாக குமரன் அவளை நெருங்க, “டேய்.. டேய் இருடா..” என்று அவனை தடுத்தான் பூச்சி.

              தன் சட்டையை பிடித்திருந்த கார்த்திகாவின் கையையும் அவன் எடுத்துவிட, அவன் கைகள் தன்மீது படவும், ஒரு ஒவ்வாமையுடன் விலகி அமர்ந்தாள் அவள்.

             கண்ணீருடன் பூச்சியைப் பார்த்து “ஏன் இப்படி பண்றிங்க.. யாருண்ணா நீங்க.. எனக்கு சத்தியமா உங்க யாரையும் பார்த்த நியாபகம் கூட இல்லையே.. பிறகு ஏன் இப்படி.. அப்படியே நான் தெரியாம எதுவும் செஞ்சு இருந்தாலும் ப்ளீஸ் மன்னிச்சிடுங்க.. என் அம்மா பாவம்.. பயந்துடுவாங்கண்ணா.. என்னை விட்டுட சொல்லுங்க.. ப்ளீஸ்..”  கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழ, பூச்சிக்கும் கண்கள் கலங்கியது.

             ஆனால், குமரனோ “ஏய் இன்னா படம் காட்றிங்களா.. எழுந்து போடா..” என்று எட்டி மிதித்தான் பூச்சியை.

              அவன் உதையில் பூச்சி சற்று தள்ளி விழ, இப்போது கார்த்திகாவின் எதிரில் அமர்ந்தான் குமரன். கார்த்திகா கால்களை குறுக்கிக்கொண்டு படகுடன் ஒட்டிக்கொள்ள “ஏய்.. இந்த சீனெல்லாம் வேணாம்.. கதிர்வேல் உன் அண்ணன் தானே..” என்றான் கடினத்துடன்.

               கார்த்தி அவனைக்கண்டு பயம்கொள்ள “பதில் சொல்லுடி..” என்றான் காட்டுக்கத்தலாக.

             கார்த்திகா மெல்ல தலையசைக்க, “அந்த நாதாரி நாயால தான் நீ இங்க இருக்க.. குமரன் தங்கச்சியை தூக்குனா, என்ன நடக்கும்ன்னு காட்ட வேணாம்..அதுக்குதான் உன்னை தூக்குனது.. மூடிக்கிட்டு இருக்கணும்..” என்றவனிடம், ” இருக்காது..” என்று மறுக்க முடியவில்லை அவளால்.

             நேற்று முன்தினம் நடந்த உரையாடல்கள் மொத்தமாக காதில் விழுந்திருந்ததே. “கடவுளே…” என்று அவள் கண்களை மூடி கண்ணீர்விட, கதிர்வேல் மீதும் கோபமாக வந்தது.

              “என்ன காரியம் செய்திருக்கிறான்.. ஏன் இந்த வேலை.?” என்று மனதிற்குள் புழுங்கியவளுக்கு, மேற்கொண்டு என்ன செய்ய காத்திருக்கிறானோ என்று யோசிக்கக்கூட அச்சமாக இருந்தது.

             இதற்குமேல் தன்னை யாராலும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை முற்றிலுமாக அற்றுப்போக, ஓய்ந்தவளாக கண்களை மூடிப் படுத்துவிட்டாள்.

              காலையில் உண்டது… இப்போது மணி ஐந்தை நெருங்கி கொண்டிருக்க, பசி மயக்கத்திலும், உளைச்சலிலும் அரைமயக்கத்தில் கிடந்தாள் அவள். அந்த படகு இதற்குள் நடுக்கடலை அடைந்திருக்க, மாலை நேரம் ஆறைத் தாண்டவுமே முழுதாக இருள் சூழ்ந்து கொண்டது அவர்களை.

               குமரன், பூச்சி, மற்றும் படகை எடுத்து வந்த வௌவால் என்று மூன்று ஆண்மக்களுடன் தனித்து இருக்கும் தனது நிலை கலங்கச் செய்தது கார்த்திகாவை.

               இதில் இருளும் சேர்ந்து கொள்ள, எழுந்து கொள்ளக்கூட முடியாத தனது நிலையைக் கண்டு அவள் உள்ளம் நொந்து கொண்ட நேரம், லாந்தர் விளக்கு ஒன்றை படகின் மத்தியில் ஏற்றி வைத்தான் பூச்சி. அதன் ஒளியிலேயே அந்த சிறிய படகின் மறுபுறம் வௌவால் எதையோ சமைத்துக் கொண்டிருக்க, சமைத்து முடிக்கவும் கார்த்திகாவுக்கும் கொண்டு வந்து கொடுத்தான் பூச்சி.

              ஆனால், உணவைத் தொட மறுத்து அவள் படுத்தே கிடக்க, குமரனின் பார்வையில் அதற்குமேல் அவளை நெருங்காமல் இருந்துகொண்டான் பூச்சி. அந்த உணவு இரவு முழுவதும் அங்கேயே கிடக்க, கண்டுகொள்ளவே இல்லை குமரன்.

            அந்த இரவு கார்த்திகாவுக்கு மிக நீண்ட இரவாக அமைந்துவிட, அதன் முடிவில் வெளிச்சம் தென்படும் என்ற நம்பிக்கையே இல்லை அவளுக்கு. இவர்களிடம் இருந்து தப்பிப்பது நடக்காத காரியம் என்பதும் இதற்குள் புரிந்து போக, போராடாமலே தன் தோல்வியை ஒப்புக்கொள்ள தயாராகிவிட்டாள் கார்த்திகா.

             காலைச் சூரியன் மெல்ல கடலிலிருந்து மேலெழும்ப, அந்த படகு மீண்டும் கரையை நோக்கி நகரத் தொடங்கியது.

கார்த்திகா படகு செல்லும் திசை புரியாமல் எழுந்து அமர்ந்திருக்க, பழவேற்காடு கடற்கரையில் சென்று நின்றது அந்த படகு.

           குமரன் முதலில் இறங்கியவன் அடுத்து கார்த்திகாவை இறங்கச் செய்ய, பூச்சியும், வௌவாலும் அவர்களுடன் இருக்க, அந்த ஊரில் இருந்த ஒரு பழமையான சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றான் பூச்சி.

             அங்கே குமரனின் நண்பர்கள் இருவர் ஏற்கனவே திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து காத்திருக்க, அந்த கோவிலில் இருந்த ஒரே ஐயர் இவர்கள் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுக்க, தாலி அணிவிக்கும் அந்த நொடியில்கூட குமரனைப் பரிதாபமாகத் தான் பார்த்து நின்றாள் கார்த்திகா.

           ஆனால், அவள் பார்வையைச் சந்தித்தால் மனம் மாறிவிடுவோமோ என்று அச்சம் கொண்டவன் அவள் பார்வையைச் சந்திக்காமல் அவள் கழுத்தில் தாலி அணிவித்து விலகினான்.

             உடன் வந்திருந்த நண்பர்கள் “அடுத்து என்னடா..” என்று குமரனைக் கேட்க,

             “வரேன் இரு..” என்றவன் கார்த்திகாவை அழைத்துக்கொண்டு கோவிலின் பின்புறம் வந்தான் தனியாக.

              கார்த்திகா “இன்னும் நீ செய்ய என்ன இருக்கிறது.?” என்று கேவலமாக அவனைப் பார்வையிட, “நீ இந்த லுக் விட்ற அளவுக்கு ஒரு சீனும் இல்ல. நான் சொல்றாமாரி கேட்டா ஒழுங்கா வீடு போய் சேருவ. மாட்டேன் முடியாதுன்னு அடம் பண்ணா, காலத்துக்கும் என்கூடதான்.. எனக்கு ஒன்னும் கவலை இல்ல.. ஒரு லட்டு கூட, ரெண்டாவது லட்டுன்னு உன்னை தூக்கினு போயிட்டே இருப்பேன்..” என்றான் அலட்சியமாக

           கார்த்திகா அவன் பேச்சு புரியாமல் விழிக்க, “எப்படியும் உன்னை காணும்ன்னு இந்நேரம்  போலீசுக்கு போயிருப்பான் உன் அப்பன். அங்க வந்து என்னை கடத்துனான்.. கல்யாணம் பண்ணான்னுலாம் சொல்லக்கூடாது.”

           “நான் இன்னா சொல்றனோ அதுக்குதான் ஒத்து பேசணும் நீ.. என்னை மாட்டி உட நினச்ச, உன் குடும்பத்தையே ஒன்னுமில்லாம பண்ணிடுவேன்..புரியுதா.” என்றான் அதட்டலுடன்.

            கார்த்திகா அரண்டு போனவளாக விழித்து நிற்க, “எனக்கு உன்கூட குடும்பம் பண்ற ஐடியாவே இல்ல.. நான் சொல்றபடி கேட்டா, உன் அம்மா கூடவே உன்னை அனுப்பி வச்சிருவேன்.. என்னை முழுசா நம்பலாம் நீ..” என்றவனை எப்படி நம்ப முடியும் அவளால்.

             விக்கித்துப் போனவளாக அவள் நின்றிருக்க, யோசிக்கவே நேரம் கொடுக்காமல் அவளை அழைத்துக்கொண்டு மீண்டும் தங்கள் ஏரியாவுக்கு அவன் வர, அவன் எதிர்பார்த்தபடியே கார்த்திகாவைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

             அவளை நேராக காவல் நிலையத்திற்கே அழைத்துச் சென்றவன் வாசலிலேயே “சொன்னதுலாம் மண்டையில இருக்குதா..” என்றான் மிரட்டலாக.

             கார்த்திகா வெறித்த பார்வையுடன் காவல் நிலையத்திற்குள் நுழைய, காவலர்களிடம் அழுத்தமாக பேசினான் குமரன். இருவரும் காதலித்ததாகவும், திருமணம் செய்ய முடிவெடுத்து சென்றதாகவும் கூறியவன், திருமணம் முடிந்த விஷயத்தையும் கூறிவிட, அந்த காவலரின் பார்வை எள்ளலாக படிந்தது கார்த்திகாவின் மீது.

            அவரின் பார்வையில் அவள் குறுகி நின்ற நொடியில் அவள் அம்மாவும், அப்பாவும் அந்த காவல் நிலையத்திற்குள் நுழைய, மகளைக் காணவும் “கார்த்தி..” என்று வேகமாக நெருங்கிய மகா, மகளின் கழுத்தில் இருந்த தாலியைப் பார்க்கவும், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்துவிட்டார்.

             “அம்மா..” என்று கார்த்திகா நெருங்க,

             “ச்சீ.. ஒத்திப்போடி.. நாயே..” என்று அவளைப் பிடித்து தள்ளிவிட்டார் மகாலட்சுமி.

            அவர் செயலில் மொத்தமாக ஒடிந்து போனவளாக கார்த்திகா நின்றுவிட, “ஓடுகாலி மு… ஒன்னும்தெரியாத பாப்பா மாறி ஷோ காமிச்சுட்டு, இவனை இழுத்துனு ஓடுனியாடி..” என்றபடியே அவள் தலைமுடியை பிடித்து தூக்கி அவள் கன்னத்தில் அறைந்தார் தங்கராஜ்.

            தனது மொத்த பலத்தையும் திரட்டி அவர் அறைந்ததில் தலைசுற்றியவளாக கீழே விழப் போனவளை, குமரன் தாங்கிப் பிடிக்க அவர்கள் காதலர்கள் தான் என்று முடியவே செய்துவிட்டார் அந்த ஆய்வாளர்