நேற்று இரவு பிரியா வீட்டிற்குள் வந்தபின்னும் கூட ராணி தன் வசைமாரியை நிறுத்தவே இல்லை. அவளைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தவர் மகன் தனது பேச்சைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய கோபத்தையும் பிரியாவின் மீதே காண்பித்தார்.
இரவு முழுவதும் அவரின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அசையாமல் படுத்திருந்தவள் காலையில் எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டுவிட்டாள். என்னவோ ஒரு வெற்றிடம். ‘இவரிடம் பேசி என்ன ஆகப் போகிறது.?’ என்று ஒரு விரக்தி நிலை.
அந்த வீட்டில் இருப்பதே மூச்சடைப்பதைப் போல் இருக்க, எப்போதும் கிளம்பும் நேரத்திற்கு முன்பாகவே கிளம்பி பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள் அவள். அவள் பேருந்து வரும் திசையைப் பார்த்து நின்ற நேரம், அவள் முன்னே வந்து நின்றான் கதிர்.
பிரியா அவனை சந்திக்கக்கூடும் என்று நினைக்கவே இல்லை. எதிர்பாராத இந்த சந்திப்பில் லேசாக தடுமாறியவள் தன் தடுமாற்றத்தைக் காண்பித்துக் கொள்ளாமல், நிச்சலனமாக நின்றாள். ஆனால், கதிர்வேல் அவளது தடுமாற்றத்தை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
“கதிர்…” என்று அவனைத் தடுக்க முயன்றவள் திரும்பி பார்த்த அவன் பார்வையில் அப்படியே மௌனியாகிப் போனாள். அவனைத் தடுக்கவும் முடியாமல், அவனுடன் செல்லவும் முடியாமல் அவள் போராடிக் கொண்டிருக்க, அவளின் போராட்டத்தை உணராதவனாக அவளை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தன் வீட்டிற்கு வந்துவிட்டான் கதிர்.
வீட்டில் வேலையாக இருந்த மகாலட்சுமி மகனையும், மருமகளையும் பார்த்து அதிர்ந்து நிற்க, அவர் அதிர்ச்சியைக் கண்டுகொள்ளாமல் பிரியாவை வீட்டிற்குள் இழுத்து வந்தவன், “இவளைப் பார்த்துக்கோம்மா… எனக்கு வேலையிருக்கு. நான் கிளம்புறேன்” என்றவன் திரும்பி நடக்க,
“எனக்கும் நேரமாச்சு… நான் கண்டிப்பா வேலைக்கு போகணும்.” என்று பிரியா கூறி முடிக்கும்முன்பே, அவளை பளாரென்று அறைந்திருந்தான் கதிர்.
அவன் அடித்ததில் அவள் சுவற்றில் மோதி கீழே விழுந்துவிட, சமையல்கட்டில் நின்றிருந்த மகா, “வேலு…” என்று பதறிக்கொண்டு ஓடிவந்தார்.
கதிர் கீழே விழுந்தவளைப் பார்த்து, “கொன்னுடுவேன் உன்ன. வேலைக்கு போறாளாம்… ஏன் உன் ஆத்தாக்காரி அந்த ஆட்டம் ஆடினா… உனக்கு சோறு போடா முடியாதா அவளால? யாரைக் கேட்டுடி நீ வேலைக்கு போன.” என்று மீண்டும் அவளை நெருங்க,
“டேய்… தூரப்போடா.” என்று அவனைப் பிடித்து தள்ளிய மகா, பிரியாவை எழுப்பி தன்னுடன் நிறுத்திக் கொண்டார்.
பிரியா கதிர் அடித்ததில் அழுதபடியே நிற்க, “ம்மா… இவகிட்ட சொல்லி வை. இவ இந்த வீட்டை விட்டு எங்கேயும் போகக்கூடாது.” என்றவன் கோபத்துடன் வெளியேச் சென்றுவிட்டான்.
பிரியா மகாவின் முகம் பார்க்க கூசியவளாக அழுது கொண்டிருக்க, “பிரியா.” என்று மகா கையைப் பிடிக்கவும், அவரின் மீது சாய்ந்துவிட்டாள். மனதில் இருந்த கசடுகள் எல்லாம் வெளி வருகிறதோ என்று என்னும்படி அழுது தீர்த்தவள் மகாவிடம் மன்னிப்பு வேண்ட, இன்னும் தன் மகளிடம் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்பது முள்ளாக குத்தியது மகாலட்சுமியை.
ஆனால், இப்போது பிரியாவை சமாதானம் செய்வது முக்கியமாகிப் போக, தன் கவலையை ஒதுக்கி வைத்து, மருமகளைத் தேற்றினார் அவர். பிரியாவின் அழுகை ஓரளவு குறையவும், “வேலைக்கு போற அளவுக்கு என்ன நடந்தது பிரியா? இங்கே வந்து இருக்கலாம்ல. உன் புருஷன் வீடு தானே இது.” என்று மகா கடிந்து கொள்ள,
“எப்படி வர முடியும்? அத்தனை செஞ்சிருக்கேனே… அவரை போலீஸ் வரைக்கும் கூட்டிட்டு போயிருக்கேன். இப்போ திரும்பி அவர்கிட்டேயே எப்படி வரமுடிடியும்?” என்றாள் பிரியா.
“அவனுக்கு கோபம் கொஞ்சம் அதிகமா வரும். ஆனா, கெட்டவன் கிடையாது. எனக்கு உடம்பு முடியாம போனதுல இருந்து என்னையே வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிட்டான். அவன் உன்னை வேலைக்கு அனுப்புவானா? நடந்ததெல்லாம் போகட்டும். இனியாவது ஒழுங்கா குடித்தனம் பண்ண பாருங்க.” என்றவரை அதிசயத்திலும் அதிசயமாகப் பார்த்தார் மகா.
அவளின் பார்வையில், “என்ன.” என்று மகா கேட்க,
“என்மேல கோவமே வரலையா உங்களுக்கு? உங்க இடத்துல என் அம்மா இருந்திருந்தா, பேசியே ஒருவழியாக்கியிருப்பாங்க.” என, அவள் குரல் முழுதும் பயம் மட்டுமே.
“நானும் உன் அம்மாவுக்கு கொஞ்சமும் குறைஞ்சவ இல்ல. ஏற்கனவே ஒருத்தியை புரிஞ்சுக்காம அவளை உயிரோட கொன்னுட்டேன். இப்போ உன்னையும் கஷ்டப்படுத்தி என்னத்த சாதிக்க போறேன்?” என்றவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“கார்த்திகாவை நினைச்சு கவலைப்படறீங்களா?” என, மெல்லிய தலையசைப்பு மட்டுமே பதில்.
“அவ நல்லாயிருக்கா.”
“நல்லா இருக்கா… ஆனா, என் மக எனக்கு இல்லாம போயிட்டா…” என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் மகாலட்சுமி.
பிரியா அவரைப் புரியாமல் பார்த்திருக்க, “டீ குடிக்கறியா.” என்றவர் எழுந்து கையோடு டீ போட்டுக் கொடுத்தார்.
“நான் அம்மாகிட்ட சொல்லாம வந்துட்டேன். திட்டுவாங்க.” என்று பிரியா அப்போதுதான் ஞாபகம் வந்தவளாக கவலை கொள்ள,
“அதெல்லாம் கதிர் பார்த்துக்கட்டும். நீ நிம்மதியா இரு. ஆளே சோர்ந்து தெரியுற.” என்றவர் அன்று முழுவதும் அவளை வேறேதும் கேட்காமல், அவள் போக்கிற்கு பேசிக் கொண்டிருந்தார்.
இங்கு குமரன் மதியம் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தவன் உணவை முடித்ததும், “கிளம்பு. கொஞ்சம் வெளியே போகணும்.” என.
“எங்கே கூப்பிடறீங்க?”
“எல்லாம் சொன்னாதான் கூட வருவியா?”
“ம்ச்.. சும்மா கேட்டேன். அது ஒரு குத்தமா?”
“கிளம்புடி.” என்று எதுவும் சொல்லாமல் அவளை அழைத்து சென்றவன் ஒரு துணிக்கடைக்கு செல்ல,
“யாருக்கு டிரஸ் எடுக்க போறீங்க?” என்றாள் மனைவி.
“யாரைக் கூட்டிட்டு வந்திருக்கேன்.?”
“எனக்கெதுக்கு இப்போ டிரஸ். பிறந்தநாள் கூட இல்லையே…” என்று கார்த்தி யோசிக்க, “வாடி…” என்று அவளை இழுத்துச் சென்றவன் “காலேஜுக்கு போற.. போட்ட டிரெஸையே மாத்தி மாத்தி போட்டுட்டு போவியா.? ஒழுங்கா காலேஜ்க்கு போட்டுட்டு போற மாறி ஒரு பத்து பதினஞ்சு டிரஸ் எடு.” என்றான் குமரன்.
“பத்தா…” என்றவள் கண்கள் அகலமாக விரிய,
“பதினஞ்சு.” என்று அவளைத் நிறுத்தியவன், “ஷாக்கை குறைச்சுட்டு ட்ரெஸ் எடுக்கற வேலையைப் பாரு.” என்று அவளை அங்கிருந்த உடைகளின் பக்கம் திருப்பினான்.
கார்த்திக்கு அத்தனையும் நன்றாக இருப்பதைப் போல் தான் தோன்றியது. மகா என்ன வாங்கி கொடுக்கிறாரோ அதுதான் அவளின் உடை. மகா அவரின் கையிருப்புக்கு ஏற்ப எப்போதும் சற்று மலிவான விலையில் இருப்பதைத் தான் வாங்கி கொடுப்பார்.
ஆனால், கார்த்திக்கு அதெல்லாம் தெரியாதே. பெரிதாக கடைக்கெல்லாம் சென்றதும் இல்லை என்பதால், தேர்ந்தெடுக்க முடியாமல் அவள் தடுமாற, குமரன் அவளை பார்த்தபடி நின்றிருந்தவன், “என்னடி பண்ற?” என்று அவள் கையை பிடித்து அழுத்த, அருகில் அமர்ந்திருந்தவனை திரும்பி பார்த்தவள், “எனக்கு எதை எடுக்கன்னே தெரியலையே… என்ன பண்ணட்டும்?” என்று கிசுகிசுப்பாக கேட்க, அவளைக் கண்டனத்துடன் பார்த்தான் குமரன்.
கார்த்திகா, “ப்ளீஸ்.. நீங்களே எடுங்க.” என்று அழகாக அவனை மாட்டிவிட, அவளை முறைத்தபடியே அடுத்த அரைமணி நேரத்தில் அவளுக்கு பொருந்தும் என்று தோன்றிய உடைகளை வேகமாகத் தேர்ந்தெடுத்து முடித்துவிட்டான் குமரன்.
கார்த்தியின் பிடித்தம் அவள் கண்களில் தெரிய, அவற்றை பில் போட சொல்லியவன், அவளை அழைத்துக்கொண்டு புடவைப்பிரிவுக்குள் நுழைய, “எடுத்ததே போதும் வாங்க.” என்று கார்த்தி அவனைப் பிடித்து இழுக்க, “அமைதியா வாடி.” என்றவன் தனக்கு பிடித்ததாக ஒரு சேலையைத் தேர்ந்தெடுத்து அவள் கையில் கொடுத்தான்.
கார்த்தி சேலையையும், அவனையும் மாறி மாறி பார்க்க, “இப்போ என்ன?” என்ற குமரனிடம், “எனக்கு புடவை கட்டவே தெரியாது.” என்று முகத்தை சுளித்துக்கொண்டு அவள் கூற, அவள் பேச்சில் சிரிப்பு பீறிட்டது குமரனுக்கு.
“கத்துக்கலாம் வா.” என்றவன் அவள் தோளில் கைவைத்து இழுத்துவர, கவுண்டரில் உடைகளுக்கான பணத்தை செலுத்தி வெளியே வந்தனர் இருவரும்.
“எனக்கு மட்டும் நீ எடுத்துடுவியா.?” என்று நக்கலடித்தான் குமரன்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா, டிரஸ் வாங்கணும். இருக்கறது எதுவும் நல்லா இல்ல. உள்பனியன் எல்லாம் பொத்தல் விழுந்து கிடக்கு. இன்னும் மத்ததும்..” என்று அவள் வாயைத் திறப்பதற்குள் “மானத்தை வாங்காதடி.” என்று அவள் வாயைப் பொத்தினான் குமரன்.
அவள் சொல்படி அவனுக்கான உள்ளாடைகள், கைலி, டீசர்ட் என்று அத்தனையையும் வாங்கிக்கொண்டு அவர்கள் வீடுவந்து சேரும்போது நேரம் வழக்கம்போலவே பத்தை கடந்து இருந்தது.
குமரன் வீட்டிற்குள் நுழைந்ததுமே, கால்களை நீட்டி படுத்துவிட, கார்த்தி குளித்து முடித்து நைட்டியை மாற்றிக்கொண்டு வந்தவள், குமரனின் அருகில் கால்களை நீட்டி அமர்ந்துவிட்டாள்.
குமரன் வெகு இலகுவாக அவள் கால் விரல்களை பிடித்து இழுத்து கார்த்திகாவை தன்னருகில் கொண்டுவந்து விட, அவள் அருகில் வரவும் அவள் மடியில் தலை வைத்துக்கொண்டான்.
“என்ன பண்ணீங்க இப்போ.” என்று அவள் அதிர்ச்சியாக,
அவள் அதிர்ச்சியைக் கண்டு வாய்விட்டு சிரித்தான் குமரன்.
“ம்ச்… இப்போ அந்த புடவையை என்ன பண்றது?” என்று கார்த்திகா கவலைகொள்ள,
“புடவையை என்ன பண்ணுவாங்க. கட்டிக்கோ.”
“எனக்கு கட்ட தெரியாதுங்க.”
“பொம்பளைப்பொண்ணு புடவ கட்டத் தெரியாதுன்னு சொல்ற.. வெட்கமாவே இல்லையாடி.” என்று குமரன் சிரிக்க,
“நான் ஏன் வெட்கப்படணும். போய் உங்க மாமியார்கிட்ட கேளுங்க. பெரிய பொண்ணு ஆனப்போ, ஒரே ஒரு முறை புடவை கட்டி இருக்கேன் அவ்ளோதான். அதுவும் யாரோ கட்டிவிட்டாங்க… அப்போ எனக்கெப்படி தெரியும்?” என்று கோபம் கொண்டாள் அவள்.