“அந்த குடிகார நாய் ஏதாவது சொன்னா, நீ நம்பிட்டு வாழுற பொண்ணு வாழ்க்கையை கெடுக்க கிளம்பிடுவியா? அவனே ஒரு பணத்தாசை பிடிச்சவன். நேத்து உன்கிட்ட பேசுனதே இன்னைக்கு அவனுக்கு ஞாபகம் இருக்காது. அவனை நம்பி… ஏன் வசந்த் இப்படியெல்லாம்? நாங்க உன்னை இப்படி வளர்க்கலையேடா…” என்றவர் இடிந்தவராக சோஃபாவில் அமர்ந்துவிட்டார்.
அதில் பதறியவனாக, “அப்பா.” என்று வசந்த் அவரை நெருங்க,
“தப்பு வசந்த்.” என்று கண்டிப்புடன் வலியுறுத்தினார் அவர்.
“கார்த்திகா பாவம்ப்பா.” என்று அப்போதும் அவன் கூற, அவன் கண்களில் தெரிந்த வேதனையை ஒரு தந்தையாக அவரால் தாங்கவே முடியவில்லை.
அவனுக்காகத்தானே தங்கராஜ் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அதைப்பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் கார்த்திகாவை மருமகளாக்கி கொள்ள அவர் முடிவெடுத்தது. ஆனால், கடவுளின் கணக்கு வேறாக இருக்கையில் யார் என்ன செய்துவிட முடியும்?
மகன் நிதர்சனத்தை புரிந்து கொள்ள மறுக்கிறானே என்று ஆயாசமாக உணர்ந்தார் அவர்.
“அந்த பொண்ணு நிச்சயம் நல்லா இருப்பா வசந்த். நீ கண்ணை மூடிட்டு யோசிக்கிற. கண்ணைத் திறந்து உன் எதிர்ல இருக்கவனை பாரு. என் பொண்டாட்டின்னு நெஞ்சை நிமித்திட்டு வந்து நிற்கிறானே. இவனா அவளை கொடுமைப்படுத்துவான்?”
“யார் என்ன சொன்னாலும் நம்புறதா? இதே அவன் கெட்டவனா இருந்திருந்தா, இந்நேரம் அந்த பொண்ணு வாழ்க்கை என்ன ஆகி இருக்கும்? யோசிச்சு பார்த்தியா.? எவனோ சொன்னதை நம்பி இப்படி செய்யலாமா ?” என்று அடுத்தடுத்து அவனை பேசவே விடாமல் சௌந்தர் கேள்விகளாக அடுக்க, அப்போதுதான் மெல்ல தன் தவறு உரைக்கத் தொடங்கியது அவனுக்கு.
“ப்பா… சாரிப்பா.” என்று அவன் தந்தையை நெருங்க,
“அவன்கிட்ட கேளு. இனி நீ அவங்க விஷயத்துல தலையிடக்கூடாது. என் முன்னாடி சொல்லு அவன்கிட்ட.” என்று சௌந்தர் அதட்ட, தயங்காமல் குமரனிடம் மன்னிப்பு வேண்டினான் வசந்த்.
“உங்க மன்னிப்பு எல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்ல. எனக்கு என் பொண்டாட்டியை பத்தி யாரும் ஒரு வார்த்தை பேசிடக் கூடாது அவ்ளோதான். அதுக்காகத் தான் வந்தேன். இனிமே என் பொண்டாட்டி பேரைக் கூட நீங்க சொல்லாதீங்க.” என்று வசந்திடம் கூறியவன், “தங்கராஜை நான் பார்த்துக்கறேன் ஐயா. ரொம்ப நன்றி.” என்று அவரை கையெடுத்து கும்பிட்டான்.
“அட என்னப்பா நீ. என் பிள்ளை மாறி தான் நீயும். எப்போ என்ன உதவியா இருந்தாலும் என்கிட்டே கேளு. உனக்கு நான் இருக்கேன். நிம்மதியா போ.” என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்து அவனை அனுப்பி வைத்தார் சௌந்தர்.
குமரன் பெருத்த நிம்மதியுடன் அவர் வீட்டில் இருந்து வெளியே வர, பூச்சி ஆட்டோவை எடுக்கவும், அதில் ஏறி அமர்ந்து கொண்டான். இருவரும் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வர, அவர்கள் குடியிருப்புக்கு முன்னே இருந்த குடியிருப்பில், அவர் வீட்டின் கீழ் அமர்ந்திருந்த தங்கராஜைப் பார்த்துவிட்டான் குமரன்.
“டேய் வண்டியை நிறுத்துடா.” என்று வேகமாக அவன் தோளில் அடித்ததில் அரண்டவனாக பூச்சி வண்டியை நிறுத்த, அவன் நிறுத்தும் முன்பே ஆட்டோவில் இருந்து கீழே குதித்துவிட்டான் குமரன்.
அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் அத்தனை வேகமாக தங்கராஜை நெருங்கியவன் அவர் முகத்தை திருப்பி, ஓங்கி ஒரு குத்து வைக்க, மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது தங்கராஜுக்கு. அங்கிருந்தவர்கள் “அய்யோ… அம்மா…” என்று அலற, யாரையும் பொருட்படுத்தாமல் மீண்டும் அவரை அடிக்க ஆரம்பித்துவிட்டான் குமரன். தடுக்க முயன்ற பூச்சியை பிடித்து தள்ளியவன் தங்கராஜை புரட்டியெடுக்க, இதற்குள் மேலே அவர்கள் வீட்டிலிருந்து இறங்கி ஓடிவந்தான் கதிர்வேல்.
“குமரா… குமரா விடு அவரை.” என்று கதிர் அவனைத் தடுக்க முற்பட, யாருக்கும் அடங்குவதாக இல்லை குமரன். மகாலட்சுமி ரத்தம் வடிய நின்றிருந்த கணவரின் முன்னே வந்து நின்றவர், “ஏன் தம்பி வீணா பிரச்சனை பண்ற. உங்க தொடர்பே வேண்டாம்னு தானே ஒதுங்கி இருக்கோம் நாங்க. ஏன் எங்க வீட்டு முன்னாடி வந்து அசிங்கம் பண்ற.” என்று குமரனைப் பார்த்து கேட்க, அவர் பேச்சில் தான் சற்று நிதானம் வந்தது அவனுக்கு.
ஆனாலும், தங்கராஜை விடுவதாக இல்லை அவன். “இவன் ஒதுங்கி இருக்கானா? எங்க வாழ்க்கையை கெடுத்து நாசமாக்க திட்டம் போட்டு இருக்கான். இவனை சும்மா விட சொல்றிங்களா?” என்று கோபத்துடன் அவன் கத்த,
“என்ன செஞ்சாரு?” என்று கணவனைத் தெரிந்தவராக குமரனிடம் கேட்டார் மகாலட்சுமி.
“உங்களை ரோட்ல போட்டு அடிச்சு அசிங்கப்படுத்துற இவரைக்கூட நம்புவீங்க. ஆனா, நீங்க பெத்த பொண்ணை நம்ப மாட்டீங்க இல்ல.” என்று அவர் முகத்தைப் பார்த்து நேருக்கு நேராக கேட்டுவிட்டான் குமரன்.
கதிர், “குமரா.” என்று முன்னே வர, “நான் கொஞ்சம் பேசணும் கதிர். ஒன்னு என் வீட்டுக்கு வாங்க எல்லாரும். இல்ல, உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ.” என்று அவனிடம் மட்டும் தான் நிதானமாக பேசினான் குமரன்.
“நீ வீட்டுக்கு வா.” என்றவன் மச்சான் கையைப் பிடித்துக் கொண்டான். என்னவோ, குமரன் மீது தவ்ரு இருக்கும் என்று நினைக்கவே முடியவில்லை அவனால்.
மகாலட்சுமியைப் பார்த்து, “வாங்கம்மா.” என்றவன் மச்சானுடன் தன் வீட்டை அடைய, வீட்டிற்குள் நுழைந்ததோடு சரி. அவன் வீட்டில் உட்காரகூட இல்லை குமரன்.
கதிர் உட்கார சொன்னதற்கு கூட, “என் வீட்டு விஷயம் வெளியே போக வேண்டாம்ன்னு தான் உன் வீட்டுக்கு வந்தேன் கதிர். வேற எதுக்காகவும் வரல.” என்று தீர்த்து கூறியவன் மகாலட்சுமியை பார்த்து “உங்க பொண்ணு என்னை காதலிச்சு எல்லாம் கல்யாணம் பண்ணிக்கல. இவன் என் தங்கச்சியை தூக்கிட்டு போன ஆத்திரத்துல, இவன் தங்கச்சியை நான் தூக்கினேன்.” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“குமரா.” என்று கதிர் அதிர்ந்து நிற்க, மகாவின் நிலை அதற்குமேலாக இருந்தது.
“இங்கே இருந்த பத்து நாள்ல என் தங்கச்சியைப் பத்தி உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். அவளையே இவன் ஏமாத்தி தான் கூட்டிட்டு போயிருப்பான்ன்னு நம்பினேன் நான். உங்களுக்கு கார்த்தி மேல ஏன் அந்த நம்பிக்கை வரவே இல்ல.”
“அவ்ளோ தப்பான பொண்ணா அவ. சரி வேண்டாம்ன்னு விட்டுட்டு தலை முழுகிட்டிங்க. எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிட்டோம். சொல்ல போனா, உங்களைவிட என் பொண்டாட்டியை நான் நல்லா வச்சிருக்கேன்.”
“இதுல இவனை யாரு நடுவுல வர சொன்னது? என் பொண்டாட்டியை நான் கொடுமைப்படுத்துறதா, சௌந்தர் அண்ணன் பையன் கிட்ட சொல்லி இருக்கான். அவன் கார்த்தியும், அவனும் விரும்புனதா என் காது படவே பேசிட்டு இருக்கான். இப்போ சொல்லுங்க.”
“நான் இவனை என்ன செய்யணும்?” என்று குமரன் மகாவிடம் கேட்க, “த்….. நீ திருந்தவே மாட்டியாய்யா.” என்று தங்கராஜை தன் பங்குக்கு இரண்டு வைத்தான் கதிர்.
ஆனால், அதில் எல்லாம் கவனம் செல்லாமல், மகளைக் குறித்த கவலையிலேயே நின்றுவிட்டார் மகாலட்சுமி.
குமரனின் வார்த்தைகள் செருப்பால் அடித்ததுப் போல் இருந்தது அவருக்கு. என் குழந்தையை நான் நம்பாமல் போனேனே? என்பதே அவரின் பெருத்த வேதனையாக மாறிப்போனது அந்த நிமிடம்.
இதற்குள் பூச்சி குமரனைத் தேடி வந்தவன், “கார்த்தி வந்திருக்குடா.” என்று குமரனை அழைக்க, மகாவிற்கு அப்போதுதான் உயிர் வந்தது. அவர் ஆவலுடன் வாசலைப் பார்க்க, அவரின் பார்வை புரிந்து பூச்சி பதில் கொடுத்தான்.
“தங்கச்சி வராதாம். உன்னை கூட்டினு வர சொல்லுச்சு. வா” என்று நின்றான் அவன்.
கதிர் யாரையும் எதிர்பாராமல் பூச்சியைத் தாண்டி படிகளில் இறங்க, குமரனும், பூச்சியும் அடுத்து இறங்கினர். மகாலட்சுமி அசைய மறுத்த கால்களை முயன்று அசைத்து தானும் கீழே இறங்கி வர, கதிர் தங்கையின் அருகில் நின்று அவள் கையைப் பிடித்திருந்தான்.
“கார்த்தி.” என்று அவன் தயக்கமாக அழைக்க, தன் கையை பிடித்திருந்த அவன் கையை நிதானமாக விலக்கிவிட்டவள் அவனைவிட்டு சட்டென தள்ளி நின்றுகொண்டாள்.
இதற்குள் குமரன் வர, அவன் அருகில் சென்று நின்றுவிட்டாள். குமரன் மனைவியின் கைகளைப் புன்னகையுடன் பிடித்துக்கொண்டவன், “பயந்துட்டியா” என்று கேட்க, அவனை முறைத்தவள், “போலாம்.” என்று அவன் கையைப்பிடித்து இழுக்க, அவள் கையைப்பிடித்து தன்னருகில் நிறுத்திக் கொண்டான் குமரன்.
கார்த்தி கேள்வியுடன் அவன் முகம் பார்க்க, குமரன் கண்களால் மகாலட்சுமியை சுட்டிக் காட்டினான்.
கார்த்திகா அவன் குறிப்பை உணர மறுத்து, “நாம போகலாம்.” என்று மீண்டும் அவனை அழைக்க,
“கார்த்தி…” என்று மீண்டும் அவளிடம் வந்து நின்றான் கதிர்வேல்.
கார்த்தி அவன் முகம் பார்க்க, “என்னை மன்னிச்சுடு கார்த்தி.” என்று அவளிடம் மன்னிப்பை வேண்டிய கதிர்வேலை விசித்திரமாக பார்த்தவள் எதுவுமே பேசவில்லை.
“குமரன் சொல்லித்தான் எல்லாமே தெரியும். எங்களை..” என்றவன் மேலும் பேசிவிடும் முன், “இப்பவும் அவர் சொல்லித்தான் என்னைப்பத்தி தெரிஞ்சிருக்கு.” என்று விரக்தியாக சிரித்தாள் அவள்.
கதிர் வேதனையுடன் தங்கையின் முகம் பார்க்க, “நான் உன்னை தப்பு சொல்லல. எப்பவுமே நமக்குள்ள அண்ணன் தங்கச்சின்னு பாசமான உறவெல்லாம் இருந்தது இல்லையே. இப்போ மட்டும் என்ன? அப்படியே இருக்கட்டும்.” என்றுவிட்டாள்.
“கார்த்தி ப்ளீஸ்மா… அண்ணாவை மன்னிச்சுடு. வீட்டுக்கு வா.” என்றவன் அவள் கையைப் பிடிக்க,
“உங்க வீட்டுக்கு வர எனக்கு தகுதியில்ல. மருமக வீட்டை விட்டு ஓடி வந்தாலும், உங்கம்மா அவளை ஏத்துப்பாங்க. ஆனா, அவங்க பொண்ணு தப்பு பண்ணி இருப்பாளான்னு கூட யோசிக்காம துரத்தி விடுவாங்க. எனக்கு என்னை நம்பாத யாரும் வேண்டாம். எப்பவும் வேண்டாம்.”
“நல்லதோ, கெட்டதோ என்னோட போகட்டும்.” என்று தனது அத்தனை நாள் மனபாரத்தை இறக்கி வைத்தவள் குமரனின் கைப்பிடியில் இருந்த தனது கையைப் பார்த்தாள். அவன் அடுத்தநொடி அவள் கையை விடுவிக்க, அந்த கையால் கதிர்வேலின் கையை விலக்கியவள், யாரையும் எதிர்பாராமல் தனது வீடு இருந்த பகுதியை நோக்கி நடக்க ஆரம்பிக்க, குமரனும், பூச்சியும் அவள் பின்னால் ஓடினர்.