குமரன் தங்கராஜின் வார்த்தைகளில் பெரிதும் குழம்பியிருந்தான். என்ன முயன்றும் அத்தனை எளிதில் அவர் கூறிய விஷயத்தை அவனால் விடமுடியவில்லை. குடிகாரன்… வாய்க்கு வந்ததை பேசியிருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும், முழுதாக அதைப் பொய் என்று எண்ணி ஒதுக்கிவிட முடியவில்லை.
கார்த்தி ஒருவனை காதலித்து இருப்பதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்று உறுதியாக தெரியும் அவனுக்கு. ஆனால், வீட்டில் பார்த்தவனை அவளுக்கும் பிடித்து இருக்குமோ? தான் இடையில் புகுந்து அவள் வாழ்வை குழப்பி விட்டோமோ’ என்று ஒரு குற்றவுணர்வு எழுவதைத் தடுக்க முடியவில்லை.
இன்றைய கார்த்திகைச்செல்வியின் இணக்கம், அவளின் புன்னகை முகம், இயல்பான அவளின் சிறு சிறு செய்கைகள் என்று அத்தனையும் கார்த்திகையின் மனதை எடுத்துக் காட்டினாலும், தன் திருமணம் நடந்த விதத்தை மறக்கவே முடியாமல் போராடிக் கொண்டிருந்தான் அவன்.
இது அவன் தவறும் கிடையாது. தவறுகள் மட்டுமே வாழ்க்கை என்று பழகிப் போயிருந்தால் கார்த்திகையின் மனது தேவைப்பட்டிருக்காது அவனுக்கு. அவளைக் குறித்து இத்தனை சிந்தனைகளும் இருக்காது. பழிதீர்ப்பதற்காக எந்த எல்லைக்கும் இறங்கியிருப்பான்.
ஆனால், அவன் அப்படிப்பட்டவனில்லையே. கார்த்திகைச்செல்வியை தூக்கி வந்த பின்னும் கூட, அவனது நல்ல மனம் அவனை விடாமல் வதைத்துக் கொண்டு தானே இருந்தது. கார்த்திகா கோபம் கொண்டிருந்தாலோ, அவனோடு வாழ மாட்டேன் என்று நின்றிருந்தாலோ கூட ஓரளவுக்கு அவன் மனம் அவனை மன்னித்திருக்கும்.
ஆனால், அவள் அத்தனையும் பொறுத்துக்கொண்டு, அவனையும் ஏற்றுக்கொண்டு, அவனுக்காக பார்த்து பார்த்து அத்தனையும் செய்வது என்று இதெல்லாம் தான் அவன் குற்றவுணர்வை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இன்று காலையில் கார்த்திகா பேசியதைக் கேட்டபின்பே கொஞ்சம் தெளிந்து இருந்தான் அவன். கார்த்தி தன்னை மட்டமாக நினைக்கவில்லை. தன் நிலையை உணர்ந்திருக்கிறாள் என்று அவன் மனம் சற்றே நிம்மதி கொண்ட நேரத்தில், இதோ தங்கராஜ் குட்டையை குழப்பிச் சென்றிருந்தார்.
மனம் மீண்டும் வேதாளமாக அவனை ஆட்டி வைத்துக் கொண்டிருக்க, நெடுநேரமாக அதன்போக்கில் ஆடிக் கொண்டிருந்தவன் மாலை நேரம் வரை கடலோரத்தில் தான் பழியாக கிடந்தான். கார்த்தி மூன்று முறை அழைப்பு விடுத்தும் அவள் அழைப்பை ஏற்கவில்லை. இதற்குள் நான்கு சிகரெட்டுகள் முடிந்திருக்க, என்னவோ மனம் நிம்மதியிழந்து இருந்தது.
இருள் சூழும் நேரம் இதற்குமேல் முடியாது என்று அவன் வீடு திரும்ப, அவன் வீட்டின் எதிரே இருந்த டீக்கடையில் வசந்த் நின்றிருப்பது கண்ணில்பட்டது. இத்தனை நாட்கள் கண்ணில்பட்டாலும் கருத்தில் பதியாத அவன் முகம் இப்போது அழுத்தமாக பதிந்து, அவன் நினைவடுக்குகளை கிளறியது.
கடைசி இரண்டு மூன்று நாட்களாக அவன் அடிக்கடி இங்கே கண்ணில்பட்டது அப்போதுதான் மூளைக்கு உரைத்தது. அதுவும் அவன் அமர்ந்திருந்த இடத்தில இருந்து பார்த்தால் இவன் வீட்டு ஜன்னல் நன்றாகத் தெரியும்.
குமரனின் பார்வை தன்னையறியாமல் தன் வீட்டு ஜன்னலில் பதிய, அவன் மனைவி பொறுப்பாக சாளரத்தை மூடி விட்டிருந்தாள். அந்த நிமிடம் என்னவென்று சொல்ல முடியாமல் அப்படி ஒரு சிரிப்பு. “அதானே. இவளுக்கு எதிர்ல நடந்து வர்றவனே தெரியாது. இதுல இவன் இங்க இருந்து பார்த்து, அது அவளுக்கு தெரிஞ்சிட்டாலும்..” என்று நினைத்தவனுக்கு சட்டென மனம் இலகுவான உணர்வு.
வசந்தைப் பார்த்த நிமிடம் அவன் அறியாமல் எழுந்த பொறாமையுணர்வு கூட அந்த நிமிடம் இல்லை. இலகுவாக ஆட்டோவை வாசலில் நிறுத்தியவன் சிரிப்புடன் வீட்டை அடைய, கார்த்திகா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே கதவைத் திறந்தாள்.
அதன்பின்னும் அவனைக் கண்டுகொள்ளாமல் உணவு பாத்திரங்களை எடுத்து அவள் கீழே அடுக்க, மதியம் சாப்பிடவே இல்லை என்பது அப்போதுதான் ஞாபகம் வந்தது அவனுக்கும். வேகமாக அவன் கையைக் கழுவிக் கொண்டு வர, உணவைப் பரிமாறி முடித்து, தூரமாக சென்று அமர்ந்து கொண்டாள் கார்த்திகா.
இதில் அவன் பேசவே முடியாதபடி கையில் ஒரு புத்தகம் வேறு. மதியம் வீட்டிற்கு வராததற்கு தான் இந்த கோபம் என்று குமரனுக்கும் புரிய, அவளை அப்படியே விட்டு சாப்பிட மனம் வரவில்லை அவனுக்கு.
“கார்த்தி…” என்று அழைக்க, பதிலே இல்லை.
“கார்த்தி.” என்று மீண்டும் அவன் அழைக்க, “சாப்பிடுங்க.” என்றாள் முகம் பார்க்காமல்.
“எனக்கு சாப்பிடவே வேண்டாம்.” என்றவன் உணவில் கையை வைக்காமல் எழுந்துவிட,
“என்னதான் வேணும் உங்களுக்கு? எல்லாமே உங்க இஷ்டத்துக்கு தான் பண்ணுவிங்களா.” என்று வெடித்துவிட்டாள் அவன் மனைவி.
குமரன் இப்போது அமைதியாக, “காலையில அத்தனை சொல்லியும் கிளம்பி போயாச்சு. மதியம் சாப்பிடவும் வரல. போன் பண்ணேன் தானே. அதையாச்சும் எடுத்து பேசலாம்ல.”
“இதுவரைக்கும் தேவையில்லாம ஒருமுறையாச்சும் உங்களை கூப்பிட்டு தொந்தரவு பண்ணி இருக்கேனா?” என்றவள் கண்களைத் துடைக்க, அவளிடம் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் நின்றவன்,
“கார்த்தி.. ஏய் சாரிம்மா. வேணும்னு எல்லாம் செய்யல.” என்று அவளை நெருங்க, அப்போதும் முகம் திருப்பிக்கொண்டு தான் நின்றாள் அவள்.
அவளின் கோபம்கூட ரசிக்கும்படியாக இருக்க, மனைவியின் முகத்திருப்பலில் உணவை மறந்தவன் அவளைப் பார்வையால் பருகத் தொடங்கிவிட்டான்.
இரண்டே அடியில் அவளை நெருங்கியவன் அவளின் இருகைகளையும் பிடித்து சுவற்றில் சாய்த்து, “சாரி சொல்றேன்ல. அப்புறம் ஏன் மூஞ்சியைத் திருப்புற?” என்று மிரட்ட, அதில் பயந்தாலும் மீண்டும் முகம் திருப்பினாள் அவள்.
குமரன் அவள் செயலில் சிலிர்த்து காலையில் செய்தது போலவே, அவள் தாடையை ஒரு கையால் பற்ற, கார்த்தியின் கண்கள் பெரிதாக விரிந்தது. அவள் கண்களைப் பார்த்தவன் சிரிப்புடன் அவள் முகத்தை நெருங்க, “நான் கோவமா இருக்கேன்.” என்றாள் இப்போது.
கண்களை சுருக்கி, இதழ்களை சுளித்து அவள் கூறிய விதம் அவனை மொத்தமாக மயக்க, “கார்த்தி.” என்று மயக்கத்துடன் முணுமுணுத்தவன் அவளை முகம் நோக்கி குனிய, அவனிடம் இருந்து வீசிய சிகரெட் வாசத்தில் முகத்தை சுளித்துவிட்டாள் கார்த்திகா.
அவன் பேசும்போதே லேசாக அதை உணர்ந்து இருந்தாலும், இப்போது இந்த நெருக்கத்தில் இன்னும் அதிகமாக தெரிந்தது. அந்த வாடை குமட்டுவதுபோல் இருக்க, பட்டென முகத்தை சுளித்துக்கொண்டு விலகினாள் அவள்.
குமரன் அவள் செயலில் நிலையிழந்து அவள் கரத்தைப் பற்ற, அவன் சிகரெட் புகைத்து இருக்கிறான் என்று கோபம் கொண்டவள் அவன் கையை உதறிச்செல்ல, அவளது அந்த செயல் வெகுவாக காயப்படுத்தியது குமரனை.
“கார்த்தி.” என்று அவன் அழைத்தபோதும், குடத்தை சுருக்கிக்கொண்டு, “வந்து சாப்பிடுங்க” என்றாளே தவிர, அவனை நெருங்கவில்லை. குமரன் அவள் பேச்சைக்கேட்டு அமைதியாக வந்து அமர்ந்து கொண்டாலும், அவள் தன்னை விட்டு விலகியதும், அவள் முகத்தில் தெரிந்த அருவருப்பும் பெரிதாக பாதித்தது அவனை.
கொஞ்சமும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக உண்டு முடித்தவன் அவளிடம் அதற்குமேல் எதுவும் பேசாமல் படுத்துவிட்டான். ‘பிடிக்கவில்லை என்று முகம் சுளிப்பவளிடம் என்ன பேசுவது’ என்று நினைத்தவன் அவளுக்கு பிடிக்கவில்லை என்று தானே முடிவு செய்துவிட்டான்.
அடுத்தநாள் காலையில் அவள் முகம் பார்க்காமல், “கிளம்புறேன்.” என்றவன் அவள் சுதாரிப்பதற்குள் வேகமாக கிளம்பியிருந்தான். “இவருக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது?” என்று கார்த்திகாவின் மனம் சுருங்க, அவனது இந்த குணத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் நின்றாள்.
எடுத்த எடுப்பில் எல்லா விஷயங்களுக்கும் அவன் கோபம் கொண்டால் அவளும் தான் என்ன செய்ய முடியும். சாலையில் செல்லும்போது யாரும் புகைப்பிடித்தால் கூட, சட்டென விலகிச் சென்றுவிடுபவள் அவள். அப்படி மீறியும் அதை சுவாசித்து விட்டால், அன்று முழுவதும் தலைவலியோடு தான் சுற்றுவாள்.
இதில் இவன் சிகரெட் வாசத்தோடு முத்தமிட நெருங்கினால், எப்படி அவளால் அனுமதிக்க முடியும். தன் நிலையைப் புரிந்து கொள்ளவே மாட்டானா? என்று அவள் மனமும் முறுக்கிக்கொள்ள, எப்படியும் வீட்டுக்கு வர மாட்டான் என்பதால் சமைக்கும் எண்ணமும் இல்லாமல் வீட்டின் ஒரு மூலையில் முடங்கிக் கொண்டாள் அவள்.
இங்கே அவளிடம் கோபம் கொண்டு வெளியில் வந்தவனுக்கு சவாரிக்கு செல்லும் எண்ணமே வரவில்லை. கோபத்தில் கிளம்பி வந்துவிட்டாலும் அவளது வாடிய முகம் மறக்கவே இல்லை. அடுத்தடுத்து வந்த இரு சவாரிகளையும் அடுத்தவர்களுக்கு மாற்றிவிட்டு அவன் அமர்ந்திருக்க, “இன்னாடா உன் கதை?” என்று அவன் அருகில் அமர்ந்தான் பூச்சி.
எதையும் மறைக்காமல் அவனிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தாலும், எதுவோ தடுத்தது குமரனை. பூச்சியிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் “எனக்கென்ன?” என்று எதிர்கேள்வி கேட்டவனை ஏற இறங்க பார்த்தான் பூச்சி.
“இன்னாடா” என்று இப்போது குமரன் முறைக்க, “ஒன்னுமில்லயே” என்றான் பூச்சி.
“அடச்சே. எழுந்து போ.” என்று அவனை விரட்டினான் குமரன்.
பூச்சி விளையாட்டை கைவிட்டு, “இன்னாடா நடந்துச்சு. ஏன் இப்படி இருக்க?” என்று கேட்க,
“நிம்மதியே இல்லாம போச்சுடா. உன் தங்கச்சி சாவடிக்குறா மனுஷனை.” என்று குமரன் முறைப்புடன் கூற,
“கார்த்தி அந்த அளவுக்கு ஆள் இல்லையே. நீதான வழக்கமா அதை டார்ச்சர் பண்ணுவ.” என்ற பூச்சியை,
“மரியாதையா ஓடிடு. இல்ல… இருக்க கடுப்புக்கு தூக்கிப் போட்டு மிதிச்சிடுவேன்.” என்றான் குமரன்.
“விஷயத்தை சொல்லுடா.” என்று பூச்சி விடாமல் கேட்க,
“அவளுக்கு என்னை புடிக்குதா இல்லையா தெரியல. ஏன்டா தூக்கிட்டு வந்தோம்னு இருக்கு சில நேரம். இது அவ அப்பன் வேற, சௌந்தர் பையனுக்கு பேசி வச்சிருந்ததா சொல்றான். அவனும் என் வீட்டு கீழே வந்து நிற்கிறான். என்ன நினைக்க சொல்ற என்ன?”
“இதுல இவளும் சுத்தல்ல விடறா. ஒரு நேரம் நல்லா பேசுனா, ஒரு நேரம் கண்டுக்காம போறா.” என்று குமரன் கூறி முடிக்க,
“கார்த்தியை பத்தி யோசிக்க வேண்டியதே இல்ல. அது முன்னாடி எப்படியோ, இப்போ உன்னை பிடிச்சிருக்கு அந்த பொண்ணுக்கு.” என்று உறுதியாக கூறினான் பூச்சி.
குமரன் நம்பாமல் பார்க்க, “அன்னிக்கு உனக்கு உடம்பு முடியலைன்னு எப்படி அழுதது தெரியுமா? கார்த்தியை பத்தி எல்லாம் கவலையே இல்ல. உன் மேல கொஞ்சம் கோவம் இருக்கலாம். ஆனா, என் தங்கச்சிக்கு உன்னை பிடிக்கும்.”
“இந்த தங்கராஜ், வசந்த் இவனுங்களை தான் விசாரிக்கணும். அதுலேயும் அந்த தங்கராஜ் குடி வேணும்ன்னா, என்ன வேணாலும் செய்வான்… அவனை எல்லாம் நம்ப முடியாது. நாம அந்த வசந்த் கூட சுத்துவானே, அந்த பிரதீப்பை பிடிப்போம். அவனை புடிச்சா விஷயம் தெரியும்.” என்று பூச்சி ஐடியா கொடுக்க,
“ஏன்டா நீ வேற. என் பொண்டாட்டி அந்த வேலைக்கு அவனுங்களை விசாரிச்சு நான் என்ன செய்ய போறேன்? என் தலைவலி எல்லாம் உன் தங்கச்சியை பத்திதான். அவன் என்ன நினைக்கிறான்னு யோசிச்சு யோசிச்சு நான் பைத்தியமா போய்டுவேன் போல.” என்ற குமரனின் நிலை புரிந்தது பூச்சிக்கு.
“இப்படி யோசிக்கிறதுக்கு கார்த்திகிட்டேயே மனசுவிட்டு பேசிடு.” என்று பூச்சி சொல்லிக்கொடுக்க,
“பார்த்துக்கலாம் விடுடா.” என்று அவனிடம் கூறியவன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு கடலோரத்திற்கு கிளம்பிவிட்டான்.
சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு அவன் அங்கிருந்த பாறைக்குவியல்களுக்கு அருகே சென்று அமர்ந்துவிட, முகத்தில் பட்டுத்தெறித்த உப்புநீர் அன்று காலையில் கார்த்திகாவின் கூந்தலில் இருந்து சிதறிய நீர்துளிகளை நினைவுபடுத்தியது.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ தெரியாது. ஆனால், அங்கிருந்து எழுகையில் மனம் சற்று நிம்மதியாக உணர, அவன் எழுந்து அங்கிருந்த நடைபாதையை அடையும் நேரம் அவன் காதில் விழுந்தது கார்த்திகாவின் பெயர்.
அவன் தேங்கியவனாக அதே இடத்தில் நிற்க, “கார்த்தியை எனக்கு தெரியும் மச்சான். அவ எனக்கு துரோகம் பண்ணமாட்டா. இவன்தான் ஏதோ பண்ணி இருக்கணும். அவளும் நானும் எப்படி எல்லாம் காதலிச்சோம் தெரியுமா? அதெப்படிடா ஒரே மாசத்துல என்னை காதலிச்சுட்டு, அடுத்த ஒரு வாரத்துல அவளை கல்யாணம் பண்ணி இருப்பா.” என்று கேட்டுக் கொண்டிருந்தவன் வசந்த் தான். எதிரில் அமர்ந்திருந்தவன் அவன் நண்பன் பிரதீப்.
வசந்த் கையில் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு இன்னும் ஏதேதோ உளறிக்கொண்டிருக்க, அதற்குமேல் அவன் பேச்சைக் கேட்க மனமில்லாமல் அங்கிருந்து வேகமாக நடந்துவிட்டான் குமரன்.
வசந்தின் பேச்சைக்கேட்டு அவனுக்கு பைத்தியம் பிடிக்காதது ஒன்றுதான் குறை. கார்த்தியின் மீது கோபமெல்லாம் வரவில்லை. அவனை மனதில் வைத்துக்கொண்டு தன்னை ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்று தான் நினைத்தான்.