இந்த பண விஷயத்தில் அவளாலும் எதுவும் செய்ய முடியாதே. அவளால் முடிந்தவரை அவளது செலவுகளை சுருக்கிக் கொண்டாள். இதுவரை குமரன் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தனது சொந்த செலவுக்கென்று அவள் உபயோகப்படுத்தியதே இல்லை.
அவள் வீட்டை விட்டு வெளியேச் செல்வதும் வருவதும் குமாரனோடு மட்டுமே என்கையில், அவளது அத்தனை செலவுகளையும் அவனே பார்த்துக் கொண்டானே. இதில் தனியே அவள் வேறு என்ன செலவு செய்வாள்? அவன் கொடுத்த பணம் மொத்தமும் அவளின் துணிகளுக்கு அடியில் அப்படியே இருப்பது இப்போது நினைவு வர, அடுப்பை குறைத்து வைத்தவள் வேகமாக அலமாரியை நெருங்கினாள்.
குமரன் அவளை கவனிக்காமல் இருக்க, அவளின் துணிகளுக்கு இடையில் கையை நுழைத்து தனித்தனியாக கிடந்த ஐநூறு, இருநூறு ரூபாய் நோட்டுகளை அவள் தேடியெடுக்க, “என்ன செய்ற?” என்றான் குமரன்.
“இதோ வரேன்.” என்றவள் இன்னும் வீட்டுச்செலவுக்கு கொடுத்த பணத்தையும் சாமிப்படத்தின் பின்னிருந்து எடுத்துப் பார்க்க, அதுவும் கணிசமாகவே இருந்தது. அவள் இந்த வீட்டுக்கு வந்த ஒரு மாதத்தில் அவளின் சேமிப்பு நிச்சயம் அசாத்தியமானது தான்.
ஆனால், அது குமரனின் பலவீனம் என்றும் சொல்லலாம். அவனைச் சொல்லி பிழையில்லையே அவன் வளர்ப்பு அப்படி. உழைக்க மட்டுமே பிறந்த ஜீவன் அது. ஒரு நாளைக்கு இரண்டாயிரத்தில் இருந்து இரண்டாயிரத்து ஐநூறு வரை சம்பாதிக்க தெரியும் அவனுக்கு.
ஆனால், அதை சேர்த்து வைக்கவோ, தனக்கென அதில் ஒரு தொகையை எடுத்து வைத்துக் கொள்ளவோ அவனுக்கு தெரியாது. திருமணத்திற்கு முன்பு மொத்தத்தையும் ராணியிடம் கொடுப்பவன், இந்த ஒரு மாதமாக ராணி பிடுங்கியது போக, மிச்சத்தை மனைவியிடம் கொடுத்திருந்தான். அதுவும் மனைவி கல்லூரிக்கு வேறு செல்வதால் தேவை இருக்கலாம் என்று கணக்கு பாராமல் தான் அவளிடம் கொடுத்திருந்தான் அவன்.
இவன் ஒரு விதம் என்றால், இவன் மனைவி அப்படியே வேறுவிதம். அவளுக்கு பணத்தைப் பற்றியும் தெரியாது . அதை செலவு செய்யவும் தெரியாது. அதுவும் இந்த ஒருமாதத்தில் அவளுக்கு தேவையான மொத்தமும் குமரன் தன் கையால் வாங்கி கொடுத்துவிட, மொத்த பணமும் அப்படியே சேர்ந்திருந்தது.
அது இப்போது கைகொடுக்க, தன் கையில் இருந்த பணத்தை எண்ணிக்கூட பாராமல் கணவனிடம் நீட்டினாள் கார்த்திகா.
குமரன் ‘ஏது’ என்ற பார்வையைக் கொடுக்க, “உங்க பணம் தான்.” என்றவள் அவன் முறைப்பில், “நீங்க எனக்கு கொடுத்தது.” என்று திருத்தினாள்.
“ஏன் என் பணத்தை தொடக்கூடாதுன்னு வச்சிருந்தியா?” என்று கோபம் கொண்டவன் அவள் கையை லேசாகத் தட்டிவிட,
“நீங்க ஏன் எப்பவும் இப்படியே பேசறீங்க? என்னை கஷ்டப்படுத்திட்டே இருக்கணுமா உங்களுக்கு?” என்று கோபம் கொண்டாள் மனைவி.
“நான் உன்னை கேட்கணும்? நான் செலவுக்கு கொடுத்த பணத்தை அப்படியே வச்சு என்கிட்டே திரும்ப கொடுத்தா என்ன அர்த்தம்? நான் வேண்டாதவனா?” என்றான் கணவன்.
“எனக்கு எதுவும் தேவையில்லைன்னு அர்த்தம். அதைவிட தேவை ஏற்படவே இல்லைன்னு அர்த்தம்.” என்ற கார்த்திகாவின் பேச்சில் கொஞ்சமும் பயமோ, தவறு செய்த பாவனையோ இல்லவே இல்லை.
“அதெப்படி இல்லாம போகும்?” என்று குமரன் புரியாமல் கேட்க,
“என்னை கூடவே கூட்டிட்டு போறீங்க, நீங்களே திரும்ப கூட்டிட்டு வர்றிங்க. தேவையான பால், காய்கறி எல்லாமே நீங்கவே வாங்கி தர்றிங்க. வீட்ல மளிகைசாமானும் எல்லாமே இருக்கு. அப்புறம் என்ன தேவையிருக்கும்?” என்று முகத்தை தூக்கினாள் மனைவி.
அவள் பொய்யுரைக்கவில்லை என்பது அவளின் சுருங்கிய முகத்தில் தெரிய, “நிஜமாவே இதெல்லாம் தேவைப்படலையா?” என்றான் அந்த அப்பாவி.
கார்த்திகா அவன் நம்பவில்லையோ என்று கோபம் கொண்டு எழுந்துகொள்ள பார்க்க, “இரு கார்த்தி.” என்று முதல்முறையாக அவள் கைத்தொட்டு அவளை அமர வைத்தான் குமரன்.
கார்த்திகா அவன் மீதிருந்த கோபத்தில் அவன் கையைப் பிடித்து அமர்த்தியதை கவனிக்கவில்லை. ஆனால், குமரன் பிடித்த அவள் கையை விடாமல், “சத்தியமா என்னால நம்ப முடியல கார்த்தி.” என்றான்.
இப்போது கார்த்திகா அவன் முகம் பார்க்க, “என் தங்கச்சிக்கு ஒரு நாளைக்கு இருநூறு ரூபா கொடுப்பேன் செலவுக்கு. ஆனா, அதுவும் பத்தலைன்னு அடிக்கடி ஐநூறு, ஆயிரம் வாங்கிட்டே இருப்பா. காலேஜ்ல கேட்டதாவும் அடிக்கடி காசு கேட்பா. இப்போ நீயும் காலேஜுக்கு போற. நான் வேற என்ன யோசிப்பேன்?” என்றவனை புரிந்தது கார்த்திகாவுக்கு.
“அது மட்டும் இல்ல. உங்கிட்ட கொடுத்தது மாதிரி மூணு மடங்கு இந்த ஒரு மாசத்துல என் அம்மாகிட்ட கொடுத்து இருக்கேன். ஆனா, இன்னும் பத்தல பாட்டுதான். சொல்லப்போனா, அவங்க கேட்கிறத பார்த்துதான் உனக்கும் அதிகமா பணம் கொடுத்தேன்.” என்றான் மீண்டும்.
கார்த்திகாவுக்கு என்ன சொல்வதென புரியவில்லை. முதல் நபர் அவன் தங்கை. அடுத்து அவன் அம்மா. இதில் அவள் என்ன சொல்லிட முடியும்? அவர்களுக்கு என்ன தேவையோ, என்னவோ? அதுவும் அவளுக்கு தெரியாதே.
“எனக்கு உங்க வீட்டைப் பத்தி எதுவும் தெரியாதே. அவங்களுக்கு ஒருவேளை தேவைப்பட்டு இருக்கலாம். ஆனால், நமக்கு இது போதும்.” என்றாள் அமைதியாக.
குமரன் அவள் பேச்சில் தனக்குள் சிரித்துக் கொண்டான். ஆனால், உயிர்ப்பில்லாத கசப்பு நிறைந்த புன்னகை. அவன் வலி அவன் முகத்தில் தெரிய, “இதெல்லாம் இப்போ அவசியமா? கொஞ்ச நேரம் படுங்க. சமைச்சு முடிச்சதும் நான் எழுப்புறேன்.” என்றவள் பாயும், தலையணையும் எடுத்துப்போட,
எப்படியும் கண்டதையும் யோசித்து தன்னை அலட்டிக்கொள்வான் என்பது புரிய,
“படம் பார்க்கிறீங்களா.” என்றாள்.
“ஏன் டிவி வாங்கிட்டு வர்றியா?”
“படம் பார்க்க டிவி எதுக்கு?” என்றவள் அவளது அலைபேசியில் யூட்யூப் செயலியை இயக்கி காண்பிக்க, ஆர்வத்தில் அவன் அருகில் அமர்ந்து இருந்தாள். அவளது இயல்பான நெருக்கத்தில் இங்கே மூச்சடைத்தது குமரனுக்கு.
ஆனால், கார்த்திகா அவனை உணராமல் “என்ன படம் போடட்டும்?” என்று கேட்க, தான் தன்னை வெளிப்படுத்தினால் விலகி விடுவாளோ என்று பயந்தவன் தன்னை இயல்பாக காட்டிக் கொண்டான்.
கவனத்தை அலைபேசியில் திரும்பியவன் “என் தலைவர் கேப்டன் படம் போடு.” என்றான் கார்த்தியிடம்.
சிரித்தபடி விஜயகாந்த் படங்களை அவள் தேட, இறுதியில் கேப்டன் பிரபாகரன் படத்தை வைக்க சொல்லியவன் அவள் அலைபேசியை கையில் வாங்கிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
அவன் படுப்பதற்காக அவள் எடுத்துக் கொடுத்த தலையணை அலைபேசிக்கு ஸ்டாண்டாக மாறியிருக்க, சிரித்துக்கொண்டே சமையல் வேலைகளை கவனித்தாள் கார்த்திகா.
மருத்துவர் வெளியில் இருந்து வாங்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க சொன்னதோடு, நீர்ச்சத்து மிகுந்த பொருட்களை உணவில் சேர்க்கும்படி கூறியிருக்க, அன்றே சமையலில் மாற்றம் செய்திருந்தாள் அவள்.
இரண்டு பொரியல், மிதமான காரத்தில் மிளகு சேர்த்த குழம்பு, செரிமானத்திற்கு உதவியாக தக்காளி சேர்க்காத பருப்பு ரசம் என்று பார்த்து பார்த்து சமைத்திருந்தாள்.
ஆனால், கடைகளில் அதிகம் உண்டு பழகிவிட்டதால், இயல்பான அளவைவிட அதிக காரம் சேர்த்துக் கொள்ளும் குமரனுக்கு சாப்பாட்டில் இருந்த காரம் போதவில்லை. ஆனால், மனைவி அவன் முகம் பார்த்திருக்க எதுவும் சொல்லமுடியாமல் அமைதியாக உண்டுவிட்டான்.
அவனது மாத்திரைகளை கார்த்திகா எடுத்து கொடுக்கவும், அதையும் போட்டுகொண்டு அவன் மீண்டும் படத்தை விட்ட இடத்திலிருந்து தொடர, “காலையில பாருங்க. இப்போ தூங்குங்க.” என்றாள் கார்த்தி.
“இன்னும் கொஞ்சம் தான் கார்த்தி. நீ படு. நான் பார்த்துட்டு படுத்துக்கறேன்.” என்றவன் என்ன நினைத்தானோ, “உனக்கு போன் தேவையா?” என்றான் அவளிடம்.
“சீக்கிரம் தூங்குங்க.” என்றவள் எப்போதும் படுக்கும் இடத்தில் படுத்துவிட்டாள்.
இடையில் இயற்கை உபாதைக்காக கார்த்திகை விழித்தெழ, அப்போதும் உறங்காமல் தான் படுத்திருந்தான் குமரன்.
“இன்னும் தூங்கலையா.” என்ற கார்த்தி “வயிறு வலிக்குதா.” என்று கவலை கொள்ள, மறுப்பாக தலையசைத்து மெலிதாக சிரித்தான் குமரன்.
என்னவோ முதல் நாளிலிருந்தே விளக்கை அணைத்து பழக்கமில்லை என்பதால் எப்போதும் விளக்கு எரிந்துகொண்டே தான் இருக்கும் அவர்கள் வீட்டில். கார்த்திகா வேகமாக எழுந்து அமர்ந்தவள் “என்ன.” என்று மீண்டும் கேட்க,
“நீ என்கிட்டே எவ்ளோ காசு கொடுத்த தெரியுமா உனக்கு?” என்றான் அவளிடம்.
“நான் கவனிக்கலையே.”
“கிட்டத்தட்ட பதினோறாயிரம்…” என்றவன் அவளை கவனிக்காமல் “என்ன சொல்றது தெரியல கார்த்தி. தூக்கம் வரல. படுத்ததும் தூங்கிடுவேன்… இப்போ தூக்கம் பக்கத்துல கூட வர மாட்டுது.” என்றான் விட்டத்தை வெறித்தபடி.
கார்த்தி அமர்ந்த இடத்திலிருந்து எழுந்தவள் தயக்கமில்லாமல் அவன் தலைக்கு அருகில் வந்து அமர்ந்து, அவன் தலையை லேசாக பிடித்துவிட தொடங்கினாள். குமரன் கண்களை பெரிதாக்கி விழிக்க, “கண்ணை மூடுங்க தூக்கம் வரும்.” என்ற அவளது அன்பான அதட்டலில் அமைதியாக கண்களை மூடிக் கொண்டவன் நினைவில் பெற்றவளும், உடன் பிறந்தவளும் தள்ளிப்போக, மனையாள் முழுமையாக நிறைந்திருந்தாள்.