அந்த மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் முன்பு நின்றிருந்தான் கதிர்வேல். எதிரில் அவனை எள்ளலாக பார்த்தபடி அவன் மனைவி நின்றிருக்க, மறந்தும் அவள் பக்கம் திரும்பாமல் தனக்குமுன் அமர்ந்திருந்த அந்த பெண் அதிகாரியைப் பார்த்திருந்தான் அவன்.
தன் கையில் இருந்த புகாரை நிதானமாக படித்துப் பார்த்த அந்த அதிகாரி, “வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவியா? பொம்பளையை கைநீட்டி அடிக்கிறதுக்கு மட்டும்தான் ஆம்பளையா? எங்கேடா உன் அம்மா?” என்று ஏகத்திற்கும் கதிரை மிரட்ட, ‘லேடிஸ் போலீஸ் தான… வேற எப்படி பேசும்…’ என்று அலட்சியமாகத் தான் நினைத்தான் அவனும்.
“எங்க அம்மாக்கு உடம்பு முடியல மேடம். ஏற்கனவே முடியாதவங்க, இவங்க அம்மாவும், பொண்ணும் சேர்ந்து அடிச்ச கூத்துல இப்போ ஹாஸ்பிடல்ல இருக்காங்க.” என்று சற்றுக் கோபமாகவே பதில் கொடுத்தான் அவனும்.
“ஏய் என்ன? அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து நாடகம் ஆடறீங்களா?” என்று அவர் அதட்ட,
“மேடம் நான் சொல்றது உண்மைதான். நீங்க யாரையாவது அனுப்பிக்கூட விசாரிச்சுக்கோங்க. ஆஸ்பத்திரில தான் இருக்காங்க.” என்றவன் தன் சட்டைப்பையில் இருந்த மருத்துவமனை ரசீதை எடுத்து அவரிடம் நீட்டினான்.
“இன்னமும் உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா, இவளோட அண்ணனை கூப்பிட்டு கேளுங்க. அவன்தான் எங்க அம்மாவை ஆஸ்பிடல்ல சேர்த்து இருக்கான்.” என,
“இவ அண்ணன் ஏன் உன் அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும்?” என்று புரியாமல் அவர் கேட்க,
“இவங்க அண்ணனை தான் என் தங்கச்சி கல்யாணம் பண்ணி இருக்கா மேடம். இவங்க சொல்றமாரி வரதட்சணை எல்லாம் கேட்கல. ரெண்டுபேரும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்குள்ள ஒரு சின்ன சண்டை மேடம். இவ எங்க அம்மாவை மரியாதை இல்லாம பேசிட்டா. அதுக்காகத்தான் அடிச்சேன்.” என்று கூறியவனின் பேச்சில் என்ன நினைத்தாரோ, “இதுக்கு என்னம்மா சொல்ற.?” என்றார் பிரியாவிடம்.
“இவர் சொல்றது அத்தனையும் பொய் மேடம். லவ் பண்ணி கல்யாணம் பண்ணாலும், ஒருநாள் கூட ஒழுங்கா குடும்பம் பண்ணதே இல்ல. இவங்க அம்மா டெய்லி ஏதாவது ஒரு சாக்கு வச்சு என்கிட்டே சண்டை வாங்கிட்டே தான் இருக்கும். அன்னைக்கும் அப்படித்தான் நடந்தது.”
“இவர் என்ன எதுன்னு கேட்காமலே என்னை அடிச்சு துரத்திட்டாரு.” என்று பிரியா கண்களைக் கசக்க,
“பொய் சொல்றா மேடம். இவளை அடிச்சு எல்லாம் நான் துரத்தல. இவளா தான் போனா… அதோட எங்க அம்மா எங்க விஷயத்துல எப்பவும் தலையிட மாட்டாங்க. கல்யாணமான ரெண்டாவது நாளே எங்களுக்கு தனியா வீடு வச்சு கொடுத்துட்டாங்க மேடம். அவங்க வேலை செய்யுற வீட்ல கடன் வாங்கி எங்களுக்கு ஆள்றதுக்கு வேண்டிய சாமான் எல்லாம் வாங்கி தந்தாங்க. அவங்களா வரதட்சணை கேட்பாங்க? நீங்களே சொல்லுங்க மேடம்.” என்றான் கதிர்.
அந்த அதிகாரி பிரியாவை சந்தேகமாகப் பார்த்தவர், “என்னம்மா சொல்றான் இவன்? இவன் சொல்றதை எல்லாம் வச்சுப் பார்த்தா, நீதான் பொய் சொல்றியா?” என்று அவர் அதட்ட,
“அய்யயோ அதெல்லாம் இல்லம்மா. இவன் சொல்றதை எல்லாம் நீங்க நம்பாதீங்க. என் பொண்ண ஆத்தாளும், மகனும் சேர்ந்து நாயை அடிக்கிற மாறி அடிச்சுட்டு இப்போ நாடகம் போடறான்மா.” என்றார் ராணி.
“நான் பொய்யெல்லாம் சொல்லல மேடம். நீங்க என் வீட்டுக்கிட்ட கூட வந்து விசாரிச்சுப் பாருங்க. புருஷன் பொண்டாட்டி சண்டைல குறுக்க வந்து பிரச்சனையை பெருசாக்கினதே இவங்கதான். இதுல பேசிட்டு இருக்கும்போதே இவ எங்க அம்மாவை அடிக்கப் போறா மேடம். அதைப் பார்த்துட்டு நான் சும்மா இருக்கணுமா?” என்று கதிர் அவரிடம் கேட்க, அவன் பொய் கூறுவதாக தோன்றவில்லை அந்த அதிகாரிக்கு.
அவர் விசாரித்த வரையில் பிரியாவிடம் தான் தவறென்று புரிய, அவளுக்கு அறிவுரை கூறி கணவனுடன் அனுப்பி வைக்கத்தான் முயன்றார் அவர்.
ஆனால், ராணி விடுவாரா… “இன்னாம்மா நீ… பொம்பளையாச்சே எங்களுக்கு பேசுவன்னு பார்த்தா, அவனுக்கே சப்போர்ட் பண்ற. இன்னா துட்டு எதுவும் குடுக்கறேன்னு சொன்னானா?” எனும்போதே, எதிரில் இருந்த லத்தியை எடுத்து வீசிவிட்டார் அந்த அதிகாரி.
ராணி பதறியவராக இரண்டு அடி தள்ளி நிற்க, “அம்மாவா நீ?” என்றார் அவர்.
“உன் பொண்ணு வாழ்க்கையை சீரழிக்க நீயே போதும். புருஷன் பொண்டாட்டி சண்டையில உனக்கு என்ன வேலை? வெளியே போ. போ…” என்று ராணியை வெளியே துரத்திவிட்டார் அவர்.
அடுத்து பிரியாவிடமும், “என்ன வயசாகுது உனக்கு? இந்த வயசுல லவ் பண்ணி கல்யாணம் பண்ணதே தப்பு. இதுல கல்யாணம் பண்ணி ஒரே மாசத்துல புருஷன் மேல பொய் கேஸ் போட கிளம்பியாச்சு. உன் அம்மா பேச்சைக் கேட்ட… நடுத்தெருல நிறுத்திடுவா உன்னை. அந்த பொம்பளை ஆளே சரியில்ல. ஒழுங்கா புருஷன் கூட சேர்ந்து வாழற வழியைப் பாரு. கிளம்பு.” என்று அதட்டலாக அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.
கதிர் “நன்றி மேடம்.” என்று கையெடுத்துக் கும்பிட, “அறிவில்ல. அவதான் சின்னப்பொண்ணு. நீ மாடு மாதிரி வளர்ந்து இருக்கியே யோசிக்க வேண்டாம். அவளைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டு அடிக்க வேற செய்வியா? இனி ஒருமுறை அவ மேல கையை வச்சதா தெரிஞ்சுது. நானே உன்னை தூக்கி உள்ள வச்சுடுவேன்.” என்று கதிரையும் மிரட்டியே அனுப்பினார் அவர்.
கதிரும், பிரியாவும் அவர் கூறியதற்கெல்லாம் தலையசைத்து வெளியே வர, வாசலில் நின்றிருந்த ராணி ஓடிவந்து மகளை பிடித்துக் கொண்டார்.
“என்னடி சொன்னாங்க? இவனையும், இவன் ஆத்தாளையும் தூக்கி உள்ள வைக்கணும்னு சொன்னியா?” என்றார் அதட்டலாக.
“ஆமா… நீ மினிஸ்டரு… இந்தம்மா மினிஸ்டர் பொண்ணு. நீங்க சொன்னதும் உடனே தூக்கி உள்ள வச்சுடுவாங்க. அடச்சீ… வழியை விடுங்க.” என்று அவர்களைத் தாண்டி நடந்தான் கதிர். பிரியாவை திரும்பியும் பார்க்காமல் அவன் நடக்க, பிரியா சற்று பதட்டமாக அவனைப் பார்க்கும்போதே, “பார்த்தியாடி. அவ முன்னாடி நாடகம் போட்டுட்டு, இப்போ எப்படி பேசிட்டு போறான் பார்த்தியா? இவன மட்டும் நம்பவே நம்பாத. ஆத்தா பேச்சை கேட்டுட்டு உன்ன கொலை பண்ண கூட தயங்கமாட்டான் அவன்.” என்று ராணி ஏற்றிவிட, பிரியா அடுத்து எதையும் யோசிக்காமல் அன்னையின் கைபிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.
ராணி தனது ஓயாத அறிவுரைகளால் அவளை யோசிக்கவிடாமல் செய்ய, கதிர்வேல் மீது மீண்டும் ஆத்திரம் தான் பெருகியது. தான் செய்தது தவறு என்பதை உணரவே விடாமல், விடாது அவளுக்கு வேப்பிலை அடித்துக் கொண்டிருந்தார் ராணி.
இறுதியில் ‘அவனாக வந்து அழைக்காமல் அவனுடன் சென்று வாழ முடியாது’ என்று தீர்மானமாக முடிவெடுத்துக் கொண்டவள் தாய் வீட்டில் மீண்டும் தனது பழைய வாழ்க்கையை வாழ தொடங்கினாள்.
இங்கே மகாலட்சுமி மருத்துவமனையில் இருந்து வீடு வந்தவர் மகனை நச்சரித்து அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ள, பிரியாவை அழைத்து வரும்படி தான் கதிரை வற்புறுத்தினார் அவர். ஆனால், மகன் அவர் பேச்சைக் கேட்பதாக இல்லை.
மகா தனது மகன் வாழ்வை நினைத்து கலங்கிய அதே நேரம், தன் மகளை நினைத்தும் கண்ணீர் வடித்தார். இவன் செய்து வைத்திருக்கும் வேலை கார்த்திகாவின் வாழ்வை எப்படி பாதிக்குமோ என்று பதறிக் கொண்டிருந்தார் அவர்.
அதுவும் பிரியாவும், ராணியும் அவர்கள் குணத்தை முழுதாக வெளிப்படுத்திச் சென்றிருக்க, அவர்களால் நிச்சயம் மகள் வாழ்வுக்கு குந்தகம் வரும் என்று உறுதியாக கூறியது அவர் உள்ளம்.
ஆனால் அப்போதும், “போயும் போயும் இந்த குடும்பம் தானா கிடைச்சுது. இவளுங்களே இப்படி இருக்காளுங்களே. இவ பெத்த புள்ள எப்படிப்பட்ட தறுதலையா இருப்பான். இந்த பொண்ணு அவனை நம்பி போயிருக்கே.” என்று தவறாகத் தான் யோசித்தார் அவர்.
ஏனோ, மகள் தவறு செய்திருக்கமாட்டாள் என்று நினைக்கவே முடியவில்லை அவரால். அவரது வாழ்க்கை முழுவதும் தங்கராஜையும், கதிரையும் பார்த்து நொந்து போனதாலோ என்னவோ, பெற்ற மகளை கூட நம்ப முடியவில்லை அவரால்.
நெடுநேரம் பிள்ளைகளைப் பற்றி யோசித்தபடியே அவர் படுத்திருக்க, கதிர் அதற்குள் கடையிலிருந்து உணவு வாங்கி வந்தவன் அவரை சாப்பிட வைத்து மாத்திரைகளை எடுத்து கையில் கொடுக்க, அமைதியாக மீண்டும் படுத்துக்கொண்டார்.
குமரன் தான் அவரை மருத்துவமனையில் சேர்த்தான் என்று தெரியாமல் அவனைப்பற்றி அவர் தவறாக நினைத்துக் கொண்டிருக்க, குமரனைப் பற்றி சொன்னால் மகா கோபப்படுவாரோ என்று பயந்தே கதிரும் அவரிடம் எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டான்.
இரண்டு நாட்கள் முழு ஓய்வில் இருந்தவர் மூன்றாவது நாள் தனது வழக்கமாக எழுந்து வேலைக்கு கிளம்பிவிட்டார். கதிர் தடுத்தும் கூட, அவன் பேச்சைக் கேட்காமல் கிளம்பி இருந்தார் மகா.
கதிரும் பழையபடி மகாவின் வீட்டிலேயே தங்கிக்கொண்டு வேலைக்குச் சென்றுவர, கீழே வாடகை எடுத்திருந்த வீடு பூட்டிக் கிடந்தது.
நடந்த இத்தனை விஷயங்களில் ஒரு நல்ல விஷயமாக கதிர் தன் தாயைப் புரிந்து கொண்டிருக்க, மகாவிடம் ஓரளவுக்கு நெருங்கி இருந்தான் அவன். மகாவிற்கு பிடிக்காது என்பதால் குடியையும் அவன் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள, அதுவே பெருத்த நிம்மதியாக இருந்தது மகாவுக்கு.
கார்த்திகா அருகில் இல்லாத குறையை மகனைப் பார்த்து ஆற்றிக் கொள்வார் அவர். ஆனாலும் அவ்வபோது மகள் என்ன செய்கிறாளோ, என்று துடிக்கத்தான் செய்யும் பெற்ற மனம். ஆனாலும், அவளின் துரோகத்தை நினைத்தே அவள் நினைப்பை ஒதுக்கி வைத்துவிடுவார் அவர்.
ஆனால், அவரின் கவலைக்கும், பரிதாபத்திற்கும் தேவையே இல்லாமல் நதியின் போக்கில் ஓடும் இலையாக, குமரனின் கையைப் பிடித்துக் கொண்டு நடை பழகத் தொடங்கியிருந்தாள் அவர் மகள்.
குமரனின் அதட்டலான பேச்சும், கண்டிப்பான முறைப்பும் சற்றே பயம் கொடுத்தாலும், அவனை அப்படியே ஏற்றுக் கொள்ள தொடங்கி இருந்தாள் கார்த்திகா.
அன்று உணவு விஷயத்தில் அவள் விருப்பதைக் கேட்ட நிமிடம் அவளையறியாமல் சற்றே அவன்பால் சாய்ந்திருந்தது அவள் மனம். அது முதல்படி என்றால் அடுத்தடுத்த நாட்களில் மெல்ல மெல்ல அவளை சாய்த்துக் கொண்டு இருந்தான் குமரன்.
ராணியும், பிரியாவும் சேர்ந்து செய்து வைத்த காரியத்தால் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவளை தேற்றியதோடு நிற்காமல், அவர்கள் பகுதியில் இருந்த விளையாட்டு மைதானத்தில் சிலம்பம் கற்பிக்கும் ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்று நிறுத்தினான் அவளை.
அவர் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க, அந்த பகுதியில் இருக்கும் சிறுவர்களுக்கு சேவை மனப்பான்மையோடு கற்பித்துக் கொண்டிருக்கிறார் அவர். நான்கு, ஐந்து வயது பிள்ளைகள் தான் அவரின் ஆஸ்தான சீடர்கள்.
அதே பகுதியில் இருப்பதால் குமரனுக்கும் அவரைத் தெரியும். ஆனால், இதுவரை நேரடியாகப் பேசியதில்லை. இப்போது மனைவியின் பயத்தை போக்கி விட நினைத்து, மனைவிக்காக அவரிடம் பேசி இருந்தான் குமரன்.
அவரிடம் தங்கள் நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க, அவரும் பயிற்சியளிக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால், கார்த்திகா அத்தனை சுலபத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. முடியவே முடியாது என்று ஒரே பிடியில் நின்றவளை வழக்கம் போல் அதட்டி மிரட்டி இழுத்துச் சென்று வகுப்பில் சேர்த்துவிட்டான். அதிலும் ஒரு சிக்கலாக அவர்கள் கொடுத்த டிராக் பேண்ட்டையும், டீ ஷர்ட்டையும் அணியவே மாட்டேன் என்று அவள் நிற்க, “ஆட்டோல போயிட்டு ஆட்டோல வரப்போற. இதுல என்ன ட்ரெஸ் போட்டா என்ன?. அங்கே எல்லாம் சின்னபிள்ளைங்க தான். அதுலாம் ஒன்னும் இல்ல. போட்டுட்டு கிளம்பு.” என்று முடித்து வெற்றிகரமாக பிள்ளையை பள்ளியில் சேர்த்துவிட்டான் அவன்.
உண்மையில் அப்படிதான் தோன்றியது அவனுக்கு. நாளை அவனுக்கே ஒரு பிள்ளை பிறந்து அவனை முதல்நாள் பள்ளிக்கு அனுப்பும் நிலை வந்தாலும், இந்த அளவுக்கு போராட வேண்டியிருக்குமா என்று நினைக்க வைத்தாள் அவன் மனைவி.
முதல் இரண்டு நாட்கள் விருப்பமே இல்லாமல் கடனே என்று அவனுக்காக கிளம்பியவளுக்கு, அங்கிருந்த சிறுவர்களின் நட்பு பிடித்துப் போக, ஓரளவுக்கு தன்னை சமாளித்துக் கொண்டு ஆசான் கற்றுக் கொடுப்பதை கற்றுக் கொள்ள தொடங்கி இருந்தாள் கார்த்திகா.
அதிகாலையில் ஐந்து மணிக்கெல்லாம் தொடங்கும் வகுப்பு ஏழு மணிக்கு நிறைவடைய, அதன்பின் வேகமாக வந்து கல்லூரிக்கு கிளம்பவே நேரம் சரியாக இருக்கும் கார்த்திகாவுக்கு. ஆனால், அத்தனை பரபரப்பிலும் அழகாக ஒரு டீயை போட்டுக் கையில் கொடுத்து விடுவாள் குமரனுக்கு.
அவனிடம் கூறினால் அதையும் வெளியே வாங்கித் தருவான் என்றாலும், கடையில் வாங்கும் டீ என்னவோ பிடிக்கவில்லை என்பதைவிட, தான் கொடுக்கும் டீயை கோவில் பிரசாதம் போல் பயபக்தியுடன் கையில் வாங்கிக் கொண்டு ஆழ்ந்து அனுபவித்துப் பருகும் குமரனை லேசாகப் பிடித்தது அவளுக்கு.
அதற்காகவே, என்ன நடந்தாலும் இந்த டீயை விடுவதில்லை கார்த்திகா.
அடித்துப் பிடித்து கிளம்பினாலும், சரியாக அவள் கல்லூரி நேரத்திற்கு இருபது நிமிடங்கள் முன்னதாக, அவள் கல்லூரிக்கு பின்புறம் இருந்த உணவகத்தின் முன் வண்டியை நிறுத்திவிடுவான். பத்து நிமிடங்களில் காலை உணவை முடித்துக்கொண்டு கார்த்திகைச்செல்வி கல்லூரிக்குள் நுழைய, குமரன் தொழிலைப் பார்க்க கிளம்பி விடுவான்.
கதிர், பிரியா, ராணி என்று யாரைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல், மெல்ல மெல்ல தன் கூட்டிலிருந்து வெளியே வந்து சிறகடிக்கத் தொடங்கியிருந்தது அந்த சிட்டுக்குருவி. கழுகாக அவளை தூக்கி வந்தவனே அவளுக்கு இன்று அரணாக நிற்க, அவனை மீறி யாராலும் அவளை நெருங்க முடியாமல் போனது.
அவ்வபோது மனதை அரிக்கும் மகாலட்சுமியின் நினைவைத் தவிர வேறு எந்த கவலையும் இல்லை கார்த்திகாவிற்கு. குமரன் தன்னை தூக்கி வந்தது கூட, எங்கோ சென்று ஒளிந்து கொள்ள, இன்றைய குமரன் மட்டுமே நினைவில் நிறைந்திருந்தான்.
ஆரம்பத்தில் அவன் மீது இருந்த பயம் குறைந்ததா என்றால் பதில் தெரியாது அவளுக்கு. ஆனால், அவனது கோபம் தனக்கு தீங்கு செய்யாது என்று உணர தொடங்கி இருந்தாள் இந்த இடைப்பட்ட நாட்களில்.
இவர்களின் வாழ்வு மெல்ல மெல்ல சீரடைந்து கொண்டிருந்த அதே நேரம், குமரனுக்கு பொருளாதார ரீதியில் கடும் நெருக்கடியை உருவாக்கிக் கொண்டிருந்தார் ராணி. வாரத்திற்கு மூன்றாயிரம், நான்காயிரம் என்று கடன் வசூலிப்பது போல் வசூலித்துக் கொண்டாலும், அவருக்கு நிறையவே இல்லை.
இன்னுமின்னும் குமரனை அவர் உலுக்கத் தொடங்க, அவரிடம் கேள்வி கேட்டு நிம்மதியை இழக்க தயாராக இல்லை அவன். எது கேட்டாலும் சுற்றி வந்து கார்த்திகாவிடம் தான் வந்து நிற்பார்… அதோடு இருவரையும் தெருவுக்கு இழுத்து கத்த ஆரம்பித்து விடுவார் என்று அவரை சரியாக கணித்து வைத்திருந்தான் அவன்.
குமரனை அவர் என்ன பேசினாலும் கண்டுகொள்ளாமல் கடந்து விடுவான். ராணியின் மகன் இதற்கெல்லாம் அஞ்சினால் வேலையாகுமா? ஆனால், அவர் அதோடு நிறுத்தமாட்டாரே..
அந்த ஒரே காரணத்திற்காக அவரின் அனாவசிய செலவுகளுக்கும் சேர்த்து தண்டம் அழ வேண்டிய நிலையில் இருந்தான் அவன். அதன் விளைவாக அவன் உழைக்கும் நேரம் கூடிக்கொண்டே போக, அவனது இரவு வருகை பத்து, பத்தரையிலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து பன்னிரண்டை நெருங்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
கார்த்திகாவுக்கு அவன் வீடு வரும் வரையும் உயிர் இருக்காது. அந்த வீட்டில் தனியாக அமர்ந்து கொண்டு இன்னும் வரவில்லையே என்று மூடிய கதவைத் தான் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அவன் வந்தால் சண்டையிட வேண்டும் என்று பலநாள் திட்டமிட்டாலும், அவன் முகத்தைப் பார்த்துவிட்டால் அதற்குமேல் கேள்வி கேட்கவே தோன்றாது அவளுக்கு.
அப்படி களைத்து போயிருப்பான். அழுக்கான அவன் சட்டையும், ஓய்ந்து கிடக்கும் அவன் முகமும் அவனின் உழைப்பை காட்டிக் கொடுத்துவிட, அவனைக் கேள்வி கேட்காமல் அவனுக்கு தேவையானதை கவனிக்க தொடங்கிவிடுவாள் அவள்.
குமரனுக்கு அவள் செயல்கள் ஆறுதலாக இருக்க, மனைவியிடம் கிடைக்கும் ஆறுதலில் இளைப்பாறிக் கொள்வானே தவிர, அவளிடம் தன் பாரத்தை ஒரு நாளும் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கவில்லை அவன்.
“படிக்கிறவ… அவளை எதுக்கு கஷ்டப்படுத்தனும்.” என்று அன்னையின் செயல்களை அவனே விழுங்கிக் கொள்ள, அவனின் இடைவிடாத உழைப்பால் அயர்ந்து போன உடல் அவனுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க விருப்பம் கொண்டது.