“இந்த கதைக்கும் அவளுக்கும் இன்னா லிங்க் இருக்கு. அவளை இழுக்காத” என்று குமரன் கூறும்போதே,
“அதெப்படி இல்லாம போவும். அவ ஆத்தாக்காரி மேல தான கேஸ் கொடுத்து இருக்கேன். இந்நேரம் பொண்ணுக்கு போனை போட்டு சொல்லி இருப்பா. உன் பொண்டாட்டி உன்கிட்ட நீலிக்கண்ணீர் வடிச்சிருப்பா. அதுக்காக தான வந்திருக்க.” என்று தானாகவே எதையோ ஊகித்து பிரியா பேசிவைக்க,
“நீ தேவ இல்லாதத எல்லாம் யோசிச்சு உன் தலையில நீயே மண்ணள்ளி கொட்டிக்கிற. இந்த கேஸ் எல்லாம் ஒன்னும் வேணாம். ஒழுங்கா வூட்டுக்கு வா. நான் உன் புருஷன் வீட்ல பேசறேன்.” என்று மிகவும் பொறுமையாக அவன் எடுத்துக்கூற, கேட்கும் மனநிலையில் இல்லை தங்கை.
“எவ்ளோ நைசா பேசுறான் பாத்தியா? எல்லாம் பொண்டாட்டி மந்திரம். நீ கேஸ் கொடுத்தா மகாராணி தாங்கமாட்டா இல்ல. அதான் வந்து நிக்கிறான், இவனை நம்பாத.” என்று வேகமாக மகளிடம் கூறிய ராணி அருகில் வந்து நிற்க,
“தெரியாம எதையும் பேசாதம்மா. ஒழுங்கா அவளுக்கு புத்தி சொல்லாம..”
“எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம். என்ன… எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா. அன்னிக்கு உன் மாமியார் வீட்டுக்கு போய் உன் பொண்டாட்டி பொருளெல்லாம் வாங்கிட்டு வரல நீ. அவளும் பெரிய ரோஷக்காரி மாறி சீன போட்டுட்டு, உங்கிட்ட உறவாடிட்டு தான இருக்கா?” என்றாள் பிரியா.
“உன்கிட்ட எல்லாம் பேசி புரியவைக்க முடியாது. நீ எக்கேடோ கெட்டு போ.” என்ற குமரன் கோபத்துடன் காவல் நிலையத்தை விட்டு வெளியேற, அந்த நேரம் தான் காவல் நிலையத்திற்குள் நுழைந்தான் கதிர்வேல்.
அவன் நண்பன் ஒருவனை அழைத்துக்கொண்டு அவன் மட்டும் வந்திருக்க, குமரனுக்கே அவனைப் பார்க்கையில் கொஞ்சம் பாவமாக இருந்தது. அவன் அன்னைக்கு முடியாத நேரத்தில் இவளும் புரிந்து கொள்ளாமல் இப்படி அலைக்கழிக்கிறாளே என்று தங்கை மீதும் வருத்தம் தான்.
ஆனால், அவன் எதுவும் செய்ய முடியாதே. கதிர் இவனைக் கண்டதும் ஓர் நொடி தேங்கி நிற்க, “நான் சொல்ற எதையும் கேட்கற நிலைமைல இல்ல அவ. நீ பேசிக்கோ.” என்று குமரன் நகர,
“நானும் ரொம்ப பொறுமையா இருந்துட்டேன். இதுக்குமேல முடியாது. உன் தங்கச்சி ரொம்ப ஏறின்னு இருக்கா. எங்களுக்குள்ள இன்னா நடந்தாலும் நீயும், உன் பொண்டாட்டியும் நடுவுல வராதீங்க.” என்று எங்கோ பார்த்துக்கொண்டே கதிரும் கூறிவிட்டான்.
“உங்க சண்டைக்கும் என் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம். என் பொண்டாட்டியை பத்தி நீ கவலைப்படாத.” என்று முறைப்பாக கூறிச் சென்றான் குமரன்.
அவன் முறைப்புடன் பேசிச் சென்றாலும், மனம் சற்று நிம்மதியாக இருந்தது கதிர்வேலுக்கு. பிரியாவால் கார்த்திகாவின் வாழ்க்கைக்கு எதுவும் சந்தம் வருமோ என்று லேசான அச்சம் இருந்துகொண்டே தான் இருந்தது அவனுக்குள்.
ஆனால், இந்த நொடி குமரன் பேச்சைக் கேட்டபின் தங்கையைப் பற்றிய பயம் விலகியவனாக ஒரு முடிவுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்தான் கதிர்வேல்.
காலையிலிருந்து ஒரு சவாரியும் பார்க்காமல் சுற்றிக் கொண்டிருந்த குமரன் நேரத்தைப் பார்க்க, மணி இரண்டை நெருங்கி கொண்டிருந்தது. கார்த்திகாவின் கல்லூரி முடிந்திருக்குமே என்று வேகமாக அவள் கல்லூரிக்கு விரைந்தான் அவன்.
வழக்கமாக வரும் நேரத்தை விட பத்து நிமிடங்கள் தாமதமாகிவிட, அவன் மனைவி அந்த கல்லூரியில் இருந்த பிள்ளையார் கோவிலின் அருகே கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டிருந்தாள். குமரனைக் காணவும், சட்டென மலர்ந்துவிட்ட முகத்துடன் அவள் எழுந்து கொள்ள, அவளைக் கிண்டலாக பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் பூர்ணி.
அவள் சிரிப்பில் கார்த்திகா நெளிய, “ஏன் அண்ணா லேட்டு? நீங்க வர கொஞ்சம் லேட்டாகவும் மேடம் முகம் அப்படியே பியூஸ் போய்டுச்சு.” என்று குமரனிடமே அவள் கேட்டு வைக்க,
விட்டால் அழுதுவிடுவாள் போல் நின்றிருந்தாள் கார்த்தி. “பூர்ணி…” என்று கெஞ்சலாக அவள் அழைக்க, அவளைக் கண்டுகொள்ளாமல் குமரனிடம் பேசிக் கொண்டிருந்தாள் பூர்ணி.
ஆனால், குமரன் மனைவியின் பார்வையை கவனித்துவிட, மெல்ல சிரித்தபடியே பூர்ணியிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தவன் அதன்பின்பே மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
தோழிகளிடம் சொல்லிக்கொண்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தவள் மௌனமாக வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வர, கண்ணாடி வழியே அவளைத் தான் பார்த்திருந்தான் குமரன்.
நடந்திருந்த கலவரங்களை மனைவியிடம் சொல்வதா வேண்டாமா என்று ஏகப்பட்ட யோசனைகள் அவனுக்குள். அதுவும் கார்த்திகாவுக்கு தேர்வுகள் வேறு நடந்து கொண்டிருக்க, இன்னும் நாளையும் ஒரு தேர்வு இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தாள்.
ஆம்… இப்போதெல்லாம் குமரனின் சொற்படியே அவனிடம் ஓரிரு வார்த்தைகள் வரத் தொடங்கியிருந்தது. அவளாக எதுவும் கேட்கமாட்டாள் என்றாலும், குமரன் கேட்கும் கேள்விகளுக்கு திக்காமல் பதில் கொடுக்கும் அளவு முன்னேறி இருந்தாள்.
அவள் இந்தளவு பேசுவதே பெரிதென்பதால் அவளை அதற்குமேல் வற்புறுத்தாமல், அவளிடம் கேள்விகேட்டு பதில் வாங்க தொடங்கியிருந்தான் குமரன். அவள் முகத்தையே பார்த்தபடி வந்தவனுக்கு கார்த்தி தன்னைப் பார்ப்பது புரிய, எதற்கென்று புரிந்தாலும் அமைதியாகவே வந்தான் குமரன்.
வண்டி உழைப்பாளர் சிலையைத் தாண்டியிருக்க, அதற்கு எதிரே இருந்த கடையில் தினமும் அவளுக்கு கரும்புச்சாறு வாங்கித் தருவதை அவன் பழக்கமாக்கிக் கொண்டிருக்க, இன்று ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தவன் அதை மறந்தவனாக உழைப்பாளர் சிலையைத் தாண்டி வந்துவிட்டான்.
அதற்குத்தான் அவளின் அந்த பார்வையும். ஆனால், அவளாக ஏதாவது கேட்கிறாளா பார்ப்போம்… என்று அவன் அமைதியாக வாகனத்தை செலுத்த, லேசாக முகம் சுருக்கி வாயை இடதுபக்கம் லேசாக சுழித்து ஏதோ செய்தவள் மீண்டும் வெளிப்புறம் வேடிக்கையைத் தொடங்கிவிட்டாள்.
இத்தனைக்கும் அவன் பாப்பா அவன் கவனித்துக் கொண்டிருப்பதை கவனிக்கவே இல்லை. குமரன் அவள் செயலில் சிரித்தபடி காசிமேட்டை அடைந்தவன் கடற்கரைக்கு எதிரில் இருந்த தெருவுக்குள் நுழைய, ‘வீட்டுக்கு போகலையா.’ என்று இப்போது மீண்டும் பார்வை அவனிடம் திரும்பியது.
அவள் பார்வையைக் கண்டுகொள்ளாமல் அந்த தெருவின் கடைசியில் இருந்த ஒரு உணவகத்தின் முன் வண்டியை நிறுத்தி அவன் இறங்க, வண்டிக்குள் அமர்ந்தபடியே அவனைப் பார்த்திருந்தாள் கார்த்திகா.
குமரன், “இறங்கு வா…” என்று அழைக்க, ஆட்டோவில் இருந்து இறங்கி அவன் அருகில் நின்றாலும், “வீட்டுக்கு போலாமே. எதுக்கு இங்க?” என்று அவள் உணவகத்தை காண்பிக்க,
“ஒருநாள்தான… வா…” என்றவன் இயல்பாக அவளை அழைத்துக்கொண்டு அந்த உணவகத்திற்குள் நுழைய, மிகவும் குறுகலான வழி அது. உள்ளே இருந்து வருபவர்கள் எல்லாம் ஆண்களாக இருக்க, கார்த்திகா தயங்கி நிற்கவும் அவள் கைபிடித்துக் கொண்ட குமரன் லேசாக அவளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு உள்ளே சென்று ஓரிடம் பார்த்து அமர்ந்து கொள்ள, அவனை பேவென பார்த்திருந்தாள் கார்த்தி.
குமரன் அவள் அதிர்ச்சியைக் கண்டுகொள்ளாமல் தலையசைத்து என்ன என்று கேட்க, பழக்கதோஷத்தில் மறுப்பாக தலையசைத்தவள் உடனே, “ஒன்னுமில்ல.” என்று வாய்திறந்து பதில் கூற, அது என்பது போல, அமர்த்தலாக சிரித்துக் கொண்டான் குமரன்.
கூடவே, “என்ன சாப்பிடற?” என்றும் கேட்க, என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் பெண்.
“என்ன சாப்பிட புடிக்கும் உனக்கு?” என்றவன் சிரிப்புடன் பார்த்திருக்க, அந்த அளவுக்கெல்லாம் ரசித்து ருசித்து உண்டவள் இல்லையே. அதோடு உரிமையாக கேட்கும் நெருக்கமும் இல்லாததால், “ஏதாச்சும் சொல்லுங்க.” என்றாள் அவனிடம்.
அவனுக்கு கோபம் என்று புரிய, “நான் இப்படி எல்லாம் வந்ததே இல்ல. இங்க என்ன இருக்கும்னு கூட தெரியாதே.” என்று சின்னதாக ஒரு விளக்கம் கார்த்திகாவிடம்.
குமரன் அவள் பேச்சில், “போடி உன்னோட…” என்று அலுத்து கொண்டாலும், அந்த உணவகத்தில் இருந்த சுவை மிகுந்த உணவுகளான வறுத்த மீன் குழம்பு, நண்டு ஆம்லெட், சுறாபுட்டு, நெத்திலி வறுவல் என்று அத்தனையும் வாங்கி மனைவியின் முன் அடுக்கி விட்டான்.
அதைப் பார்த்ததற்கே வயிறு நிறைந்துவிட்டது கார்த்திகைக்கு. ‘இத்தனையும் எப்படி சாப்பிட முடியும்?’ என்று அவள் பயத்துடன் விழிக்க, “எது பிடிக்குதோ, அதை சாப்பிடு. அடுத்தவாட்டி என்னோட வரும்போது அதை சொல்லணும்?” என்று மிரட்டியவன் அவன் போக்கில் உண்ண தொடங்க, உண்மையில் அவனின் இந்த செயல் சற்றே நெகிழ்த்தியது கார்த்திகாவை.
அவள் அன்னை முதற்கொண்டு யாரும் இதுவரை என்ன பிடிக்கும் என்று அவளிடம் கேட்டதே இல்லையே. மகா அவளுக்கு நல்லது எது என்று பார்த்து செய்வாரே தவிர, அது அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று எங்கே யோசித்திருக்கிறார்.
அத்தனையும் அடுத்தவர் பிடித்தம் தான் என்று பழகியிருந்தவளுக்கு ‘என்ன பிடிக்கும்?’ என்று கேட்டவனைக் கொஞ்சமாக பிடித்தது.