குமரகுரு – கார்த்திகாவின் வாழ்க்கை மெல்ல தெளிவடையத் தொடங்கியிருந்த அதே நேரம் தன் வாழ்வை மொத்தமாக குழப்பிக் கொள்ள தேவையான அனைத்தும் செய்து கொண்டிருந்தாள் ப்ரியா. தனது பிடிவாதத்தாலும், முன்கோபத்தினாலும் தன் வாழ்வை தானே கெடுத்து வைத்தது போதாது என்று இப்போது தன் தாயுடன் சேர்ந்து மொத்தமாக முடிக்கும் வேலையிலும் இறங்கிவிட்டாள்.
ஆம்… ராணி கொடுத்த அறிவுரையிலும், அவரின் நட்புகள் கொடுத்த தைரியத்திலும் கதிர்வேல் மீது புகார் கொடுக்க காவல்நிலையத்திற்கு வந்திருந்தாள் அவள். கதிர்வேல் மீதும் அவன் அன்னை மகாலட்சுமியின் மீதும் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியதாக அவள் புகார் கொடுத்துவிட, அவள் புகாரின் பேரில் கதிர்வேலுக்கு அழைப்பு விடுக்க, அலுவலக நேரம் என்பதால் அழைப்பை ஏற்கவில்லை அவன்.
பிரியா அவன் இருப்பிடத்தை தெளிவாக கூறவும், இரண்டு காவலர்கள் அவன் வீட்டுக்கே சென்று நிற்க, அந்த காலை நேரத்தில் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் மகாலட்சுமி. கீழே அவன் வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள் கதிரின் அன்னை என்று மகாவை கைகாட்டி விட, அந்த காவலர்கள் அவரிடம் விவரத்தைக் கூறி அவரை காவல் நிலையத்திற்கு வருமாறு பணித்தனர்.
மேலும், “உன் மகன் வர்ற வரைக்கும் நீ ஸ்டேஷன்ல தான் இருக்கணும். ஒழுங்கா பொண்டாட்டிக்கூட பொழைக்க சொல்லி பிள்ளைக்கு புத்தி சொல்லாம, அவனோட சேர்ந்துட்டு மருமகளை கொடுமைப்படுத்துவியா நீ.” என்று மிரட்டல் தொனியில் அவர்கள் கேட்டுவிட, முகம் செத்துப் போனது மகாலட்சுமிக்கு.
அவர் மறுத்துப் பேசாமல் இருந்தது அந்த காவலர்களின் நினைப்பை உறுதிப்படுத்திட, “நாங்க ஸ்டக்ஷனுக்கு போறதுக்குள்ள நீ அங்கே இருக்கணும். இல்ல… உன் புள்ளையை கையை காலை உடைச்சு உள்ள தள்ளிடுவேன்.” என்று கண்டிப்புடன் கட்டளையிட்டுச் சென்று விட்டனர்.
மகாலட்சுமி என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் நின்றுவிட்டார். மகள் வீட்டை விட்டு சென்ற தினம் தொட்டு அவர் காலை உணவையும் மறந்து போயிருக்க, இப்போது இந்த காவலர்கள் பேச்சும் சேர்ந்து கொண்டதில் படபடப்பாக உணர்ந்தவர் தன்னை சமாளித்துக் கொண்டு மெல்ல நடந்தார்.
எப்படியும் காவல் நிலையத்திற்கு சென்றாக வேண்டுமே. இல்லையென்றால், அதற்கும் என்ன பேச்சு கேட்க வேண்டி வருமோ என்ற பயத்திலேயே அவர் கண்களை அழுத்தி மூடித் திறந்து கொண்டே வேகமாக நடந்து மெயின் ரோடை அடைய, வாட்டி எடுத்த வெயிலின் புண்ணியத்தில் அதற்குமேல் தாள முடியாமல் மூடிக் கொண்டது அவர் கண்கள்.
போக்குவரத்து நிறைந்த அந்த சாலையில் அவர் மயங்கி விழ, அருகில் நின்றவர்கள் அவரை நெருங்கி சூழ்ந்து கொண்டதில் சின்னதாக ஒரு கூட்டம் கூடிவிட்டது அங்கே.
கூட்டத்தில் இருந்த ஒருவர் அருகில் இருந்த பெட்டிக்கடையில் ஒரு தண்ணீர்பாட்டிலை வாங்கி மகாவின் முகத்தில் தெளித்து அவரை எழுப்ப முயற்சிக்க, ம்கூம்… அசைவே இல்லை மகாலட்சுமியிடம்.
யாரோ, “ஆஸ்பத்திரிக்கு தூக்குப்பா.” என்றதில் அந்த சாலையில் வந்த ஆட்டோவை அவர்கள் நிறுத்த, தெய்வாதீனமாக ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையில் இருந்தது குமரகுரு.
மகாவைப் பார்த்ததுமே அவனுக்கு அடையாளம் தெரிய, “என்னாச்சு.” என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டே வேகமாக இறங்கியவன் அவரைத் தானே தூக்கி ஆட்டோவில் கிடத்திவிட்டான். அங்கிருந்த ஒரு பெண், “நான் வரேன் ராஜா… வா.” என்று அவரும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள, வேகமாக அருகில் இருந்த மருத்துவமனையை அடைந்தான் குமரன்.
அங்கு இருந்த ஒரு செவிலியர் வேகமாக மகாவை சோதித்து முடிக்க, “என்னாச்சுக்கா…” என்று பதறிக் கொண்டிருந்தான் குமரன்.
“பிபி ரொம்ப லோவா இருக்கு. மயக்கம் வராம என்ன செய்யும்… இங்கே படுக்க வைங்க.” என்றவர் வேகமாக சென்று மருத்துவரை அழைத்து வர, அந்த மருத்துவர் மகாலட்சுமிக்கு வைத்தியம் முடித்து, “மயக்கம் தெளிய கொஞ்ச நேரம் ஆகும். ட்ரிப்ஸ் ஏறி முடியட்டும். வந்து பார்க்கிறேன்.” என்று சென்றுவிட,
அந்த செவிலியர், “பில்லை கட்டிடுங்க.” என்றார் குமரனிடம்.
அருகில் நின்றிருந்த பெண், “என்கிட்டே முன்னூறுபா இருக்குப்பா..” என,
“என்கிட்டயே இருக்கும்மா… என் அத்தை தான் அவங்க, நான் கட்டிடறேன்.” என்று அந்த செவிலியரின் பின்னால் நடந்தான்.
அவன் கையில் இருந்த பணத்தை வைத்து மருத்துவமனைக்கு கட்டியவன் பூச்சிக்கு அழைத்து விவரம் கூற, “நான் வரவா மச்சான்.” என்றான் பூச்சி.
“இங்கே வந்து இன்னா கழட்ட போற. கார்த்தி வூட்டுக்கு தகவல் சொல்லு. அவ அண்ணன் அந்த ராகாஸ் துணிக்கடையில தான வேலை செய்யுறான். அவனுக்கு சொல்லி கூட்டினு வா. நான் இங்கே இருக்கேன்.” என்ற குமரனின் பேச்சில் வேகமாக கதிர் வேலை பார்க்கும் துணிக்கடைக்கு விரைந்தான் பூச்சி.
ஆனால், அவன் கதிரை அழைத்து வருவதற்குள் எப்படியோ விஷயம் கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு வந்துவிட்டார் தங்கராஜ். வந்ததும் வராததுமாக, “நீ யாருடா.. என் பொண்டாட்டியை நீ எப்படி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வருவ?” என்று குமரனிடம் சண்டையைத் தொடங்கிவிட்டார் அவர்.
உடன் இருந்த அந்த பெண்மணியும் குமரன் உறவு என்றதும் அவனிடம் சொல்லிக்கொண்டு ஏற்கனவே கிளம்பியிருக்க, தங்கராஜ் வந்த நேரம் குமரன் மட்டும்தான் இருந்தான் மகாலட்சுமியின் அருகில். அவருக்கு இன்னமும் மயக்கம் தெளியாமல் இருக்க, தங்கராஜ் பேசியதில் பொறுமை பறந்து கொண்டிருந்தது குமரனுக்கு.
ஏனோ, தங்கராஜை பிடிக்கவில்லை அவனுக்கு. குடிகாரன் என்ற எண்ணம் தான். இப்போதும் அவர் வாய்க்கு வந்தபடி கத்தி வைக்க, “ரோட்ல கீழே உழுந்து கிடந்தாங்க. பாவம்னு தூக்கிட்டு வந்து சேர்த்திருக்கேன். ரொம்ப பேசுன…” என்றவன் வலது கையின் மணிக்கட்டை மறுகையால் திருகிவிட,
“ஏய் இன்னாடா என் மேல கைய வச்சுடுவியா நீ. கையை முறுக்கற. ஒண்டிக்கு ஒண்டி வர்றியா.” என்று நிற்க,
“சாவுகிராக்கி… சீக்கிரம் வரமாட்டா.” என்று பூச்சியிடம் குமரன் கத்த,
“டேய்.. இன்னாடா சீன் காட்றியா..” என்று மீண்டும் தங்கராஜ் வம்பிழுக்க, குமரன் பல்லைக் கடித்துக் கொண்டு அவரிடம் திரும்பினான். ஆனால், அவன் எதுவும் செய்துவிடும் முன் “ப்பா…” என்று கதிர் அதட்டிவிட, அமைதியாக நின்றுகொண்டான்.
தங்கராஜ் மகனிடமும் “டேய் இவனை இன்னான்னு கேளுடா.” என்று நிற்க,
“இன்னா கேட்கணும். உன் வேலையை பாரு, கிளம்பு.” என்று அவரை மகன் துரத்த,
“ஓஒ… எல்லாம் ஒன்னு கூடிட்டிங்களா. மச்சானா…” என்று அவர் மேலும் எரிச்சலூட்ட,
“ஒழுங்கா வெளியே போய்ட்டா உனக்கு நல்லது. இல்ல, அடிச்சு எங்கம்மா பக்கத்துல படுக்க வச்சுடுவேன்.” என்று மகன் மிரட்ட, சொன்னதை செய்பவன் என்பதால் அப்போதைக்கு அமைதியாக வெளியேறினார் தங்கராஜ்.
குமரன் அதுவரை அமைதியாக நின்றவன் கையிலிருந்த மருத்துவமனை ரசீதை கதிரிடம் கொடுத்து “பார்த்துக்க” என்று வெளியேறிவிட்டான்.
அவன் வெளியே வந்து ஆட்டோவில் ஏறவும், “டேய். உன் தங்கச்சி போலீஸ்ல கேஸ் கொடுத்து இருக்காளாம்டா.” என்றான் பூச்சி.
குமரன் கேள்வியாக பூச்சியைப் பார்க்க, “வரும்போது அவன் பிரெண்ட் போன் பண்ணி இருந்தான்டா. நான் இன்னான்னு கேட்கவும் சொன்னான். அவுங்க வூட்டாண்டையும் போலீஸ்காரங்க போயிருப்பாங்க போல. அதுலதான் இந்தம்மாக்கு இப்படி ஆயிடுச்சோ என்னமோ…” என்று தன் ஊகத்தை பூச்சி கூற, தங்கையை நினைத்து எப்போதும் இல்லாத அளவுக்கு எரிச்சல் வந்தது குமரனுக்கு.
பூச்சியை ஸ்டாண்டிற்கு கிளம்பச் சொல்லியவன் தன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு மீண்டும் தன் வீட்டை அடைய, இன்னும் பிரியாவும், அவள் அன்னையும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.
வீட்டில் அவன் தந்தை மட்டுமே படுத்திருக்க, “எங்கப்பா ரெண்டு பேரும்?” என்று குமரன் கேட்கவும்.
“இது குடும்பமா என்னான்னே எனக்கு தெரியலடா. பொண்ணு கோச்சுன்னு வந்துட்டா புத்திமதி சொல்லி திருப்பி அனுப்பாம அவளை கூட்டினு போலீசுக்கு போயிருக்கா உன் அம்மா.” என்று வேதனையுடன் அவர் கூற, அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை குமரனுக்கு.
‘இந்தாள் குடிக்காம ஒழுங்கா குடும்பத்த பார்த்திருந்தா, இந்த நிலைமை வந்திருக்குமா?’ என்ற எண்ணம் எப்போதுமே இருக்கும் அவனுக்கு. அதனால்தானோ என்னவோ, திடீரென அவர் நியாயம் பேசுவதை ஏற்க முடியாமல் நின்றவன் பதில் கூறாமல் வெளியே வந்துவிட்டான்.
மீண்டும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவன் காவல்நிலையத்திற்கே தங்கையை தேடிச் செல்ல, காவல் நிலையத்திற்கு வெளியே இருந்த இடத்தில் அமர்ந்து இருந்தனர் தாயும், தங்கையும்.
பிரியா அண்ணனைக் கண்டதும் எழுந்து நிற்க, ராணி அவனைப் பார்த்தும் பார்க்காதவர் போல் முகத்தை திருப்பிக் கொண்டார். குமரனும் அவரைக் கண்டுகொள்ளாமல் பிரியாவிடமே பேசினான்.
“எதுக்கு இங்கே வந்திருக்க?” என்று அறியாதவன் போல் அவன் கேட்க,
“ஏன் உன் பொண்டாட்டி அதை மட்டும் சொல்லாம விட்டுட்டாளா?” என்று ஏளனமாக சிரித்தாள் பிரியா.