நேற்றுப்போலவே மனைவி சமைக்காமல் அமர்ந்திருந்தது ஆத்திரம் கொடுக்க, வந்ததும் வராததுமாக சண்டை வேண்டாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அமைதியாக அவள் அருகில் அமர்ந்தான்.

“என்ன பிரியா.  உடம்பு முடியலையா.” என்று நிதானம் தவறாமல் தான் வினவினான் அவன்.

ஆனால், பிரியா அவனை விட வேண்டுமே. “உடம்பு முடியலைன்னா, என்ன பண்ண போற.” என்றாள் சவாலாக.

“ஏய்.. இன்னா வந்த ஒடனே சண்டைக்கு இழுக்கணுமா உனக்கு?” என்று கதிர் கத்த,

“யார் சண்டை போடறா நானா. நீதான்டா என்கிட்ட சண்டை போடற. உன்னை நம்பி உன்கூட வந்தேன் பாரு. அதுக்குதான் அனுபவிக்கிறேன் நானு.” என்றவள் கண்ணீர்விட,

“என்கூட ஓடி வந்ததுல என்னடி  குறைஞ்சு போச்சு. ஏன்.. உனக்காக விஜயும், அஜித்தும் லைன்ல நின்னாங்களா.?”

“கண்டிப்பா உன்னைவிட நல்லவனா எவனாவது கெடைச்சிருப்பான்.”

“ஓஹ். அதான் என்கூட தியேட்டர்ல படம் ஓட்டிட்டு கழட்டி விட பார்த்தியா.. உன் புத்தி தெரியாம நான் தான் மாட்டிட்டேன்.”

“ஏய். நல்லவன் மாறி சீன் காட்டாத. நீதான் நல்லவனாச்சே. என்னை ஏன்டா சினிமாக்கு கூட்டிட்டு போன. இருட்டுல அங்கியும், இங்கையும் கையை வச்சுட்டு இப்போ என்னை குறை சொல்றியா.?”

“நான் கைய வச்சா உனக்கு எங்கடி போச்சு புத்தி. தட்டி உட்டுட்டு போவ வேண்டியது தான. நல்ல குடும்பத்துல பொறந்த எவளாவது உன்னை மாறி இருப்பாளா.”

“ஆமா… நல்ல குடும்பத்துல பொறந்தவ என்னை மாறி இருக்கமாட்டா. ஆனா, உன் தங்கச்சி மாறி கமுக்கமா இருந்துட்டு எவனையாவது இழுத்துன்னு போவா.” என்ற நிமிடம் அவள் கன்னம் பழுக்கும் அளவுக்கு அடித்துவிட்டான் கதிர்.

ஆனால், அப்போதும் அடங்காமல் “ஏன் உண்மையை சொன்னா குத்துதா. உன் குடும்ப லட்சணத்துக்கு நீ என்னை குறை சொல்ல வந்துட்டியா. ரெண்டு நாள் முன்னாடி உன் அப்பன் கேட்டான் பாரு… எவன்கூடடி போனன்னு. அதுதான் உன் குடும்ப லட்சணம்.”

“உன் ஆத்தா நல்லவளா இருந்தா, அவன் ஏன் பேசப்போறான். எந்த ஊர்லயாவது கட்டின பொண்டாட்டியைப் பத்தி புருஷன் இப்படி சொல்லுவானா. இதுல என்னை கணக்கெடுக்க வந்துட்டான்..” என்று ப்ரியா தன் சுயரூபத்தைக் காட்டிக் கொண்டிருக்க, இவர்களின் சத்தத்தில் வாசலில் இருந்த அக்கம்பக்கத்து வீட்டினர் மகாலட்சுமியை அழைத்து வந்திருந்தனர்.

கதவைத் தட்டப்போன மகாவின் காதுகளில் பிரியாவின் வார்த்தைகள் விழுந்துவிட, கண்ணீர் சிந்திவிடத் துடித்த கண்களை இறுக மூடித் திறந்தவர் வேகமாக கதவைத் தட்டினார்.

ஆனால், கணவனும் மனைவியும் கதவைத் திறக்கும் நிலையில் இல்லையே. பிரியாவின் பேச்சில் ஆத்திரம் கொண்ட கதிர்வேல் அவள் கழுத்தைப் பிடித்து நெறிக்க தொடங்கியிருக்க, அவனை பிடித்து பின்னே தள்ளியிருந்தாள் பிரியா.

அதில் இன்னும் ஆத்திரம் கொண்டவன் அவளை கண்மண் தெரியாமல் வெளுக்கத் தொடங்கியிருந்தான். அவன் அடிப்பதைத் தாங்க முடியாமல் அவன் பிடியிலிருந்து போராடி விடுபட்டவள் ஓடிச்சென்று கதவு திறக்க, அவள் முகத்தைப் பார்த்து பயந்து போனார் மகாலட்சுமி.

கதிர்வேல் அடித்ததில் கன்னம் இரண்டும் வீங்கி சிவந்திருக்க, இடது கண் முழுதாக கருமை படர்ந்து வீக்கம் கண்டிருந்தது. தலையெல்லாம் கலைந்து, கிழிந்த உடையுடன் நின்றவளைக் கண்டவருக்கு நெஞ்சு கொதித்துப் போனது.

அவரும் பெண்பிள்ளையைப் பெற்றவர் தானே. “பிரியா…” என்றவர் மருமகளை அணைத்துக்கொள்ள பார்க்கையில் அவர் கையை நிர்த்தாட்சண்யமாக தட்டிவிட்டாள் பிரியா.

“ச்சீ… விடு என்னை. என்ன உன் லட்சணத்தை உன் புருஷன்கிட்ட சொல்லிட்டேன்னு உன் பிள்ளையை ஏத்திவிட்டு என்னை அடிவாங்க வைக்கிறியா. நீயெல்லாம் ஒரு பொம்பளை.” என்றவளை கதிர்வேல் மீண்டும் அடிக்கப் பாய, மகனைத் தடுத்து பிடித்துக் கொண்டார் மகாலட்சுமி.

பிரியா “என்னடா.. கேட்க யாருமில்லங்கிற தைரியத்துல உன் ஆம்பளைத் தனத்தைக் காட்டுறியா. உன்னை என்ன பண்றேன் பாருடா.” என்று கதிரை எடுத்தெறிந்து பேச,

“விடும்மா என்னை.” என்று மீண்டும் அவளை நெருங்க  முயன்றான் கதிர்.

“வேலு சொல்றதை கேளுடா.” என்று அவனை மீண்டும் வீட்டிற்குள் தள்ளிய மகா, அவன் வெளியே வருவதற்குள் கதவையும் வெளிப்பக்கமாக தாழிட்டுவிட, கதவை உடைத்துவிடுபவன் போல் தட்ட தொடங்கினான் கதிர்.

“ம்மா கதவைத் திறம்மா.” என்று அவன் கத்திக் கொண்டிருக்க, இங்கு மருமகளை சரிசெய்ய முயன்று கொண்டிருந்தார் மகாலட்சுமி.

“நான் சொல்றத நீயாவது கேளு ப்ரியா.. ரெண்டு பேருமே ரொம்ப கோவத்துல இருக்கீங்க. நீ நம்ம வீட்டுக்கு வா. பொறுமையா நாளைக்கு பேசுவோம். நான் அவனை விசாரிக்கிறேன்.” என்று அவர் பேசியதை எல்லாம் காதில்கூட வாங்கவில்லை மருமகள்.

“நீ என்ன எனக்கு பஞ்சாயத்து பண்ணி வைக்கிறது. எல்லாமே உன்னால வந்தது தான் மூதேவி. கேட்க ஆளில்லன்னு தான ஆடறீங்க ஆத்தாளும், மவனும். என் அம்மாவையும், அண்ணனையும் கூட்டிட்டு வரேன். உங்களை ஒருவழி பண்ணல, நான் ராணி பொண்ணு இல்லடி.” என்று சூளுரைத்து படிகளில் இறங்கினாள் அவள்.

மகாவுக்கு அந்த நிமிடம் மகனின் வாழ்வு மட்டுமே பெரிதாக தெரிய, “நில்லும்மா…” என்றபடியே அவரும் பின்னால் ஓட, அவரைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் கிழிந்த உடையுடனே தன் வீட்டை நோக்கி நடந்துவிட்டாள் பிரியா.

———————–

குமரனின் வீட்டிலோ கணவன் புதிதாக வாங்கி கொடுத்திருந்த நவீன ரக அலைபேசியை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள் கார்த்திகா.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவளை அழைப்பதற்காக அவன் கல்லூரிக்கு வந்தபோது, வெகுவாக தயங்கிக் கொண்டே நின்றவளிடம், “என்ன.” என்று குமரன் கேட்க,

“நீங்க ஒரு ரெண்டுமணி நேரம் கழிச்சு வர்றிங்களா? எனக்கு கொஞ்சம் எழுதுற வேலை இருக்கு. பூரணியோட போன்ல பார்த்து எழுதிட்டு வந்திடறேனே… ப்ளீஸ்.” என்று சிறுபிள்ளையாய் அனுமதி கேட்டு நின்றாள் மனைவி.

அவள் இப்படி கேட்டபின்பு குமரன் எங்கே மறுப்பது? தலையசைத்து சம்மதம் கொடுத்தவன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். ஆனால், மனைவியிடம் கைப்பேசி இல்லையென்பது அப்போதுதான் பெரிய குறையாக தெரிந்தது அவனுக்கு.

‘அன்னைக்கு அவ கையில ஒரு போன் இருந்திருந்தா, அவ அம்மாக்கு போன் பண்ணி கேட்டுட்டு வீட்டுக்கு போயிருப்பா. தேவையில்லாம உன்கிட்ட வந்து மாட்டியிருக்க மாட்டா.’ என்று அவன் மனசாட்சி கேலி செய்த போதும், ‘ஏன்… என்னோட வந்ததால இப்போ என்ன குறைஞ்சு போச்சு’ என்று அதன் தலையில் தட்டியவன் மனைவிக்கு அலைபேசி வாங்கி கொடுப்பதாக முடிவெடுத்துவிட்டான்.

அடுத்தநாள் காலையில், அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்றவன் “போன் காட்டுங்க.” என்று நிற்க,

அவன் உடையும், அவன் கையில் இருந்த பட்டன் போனையும் பார்த்த கடைக்காரன் அதே மாடலில் ஒரு நோக்கியா போனை எடுத்து நீட்ட,

“தல. இது என்கிட்டேயே இருக்கு. நல்ல போனா காட்டு. என் பொண்டாட்டி காலேஜ் படிக்கிறா. அவளுக்கு தான் போன். அவ படிக்கிறதுக்கு யூஸ் பண்றாமாரி இருக்கணும்.” என்று தன் தேவையை கூற, அவன் கேட்டபடியே அலைபேசிகளை எடுத்து கடைபரப்பினான் அவன்.

அதில் எதை தேர்ந்தெடுப்பது என்று புரியாமல் முழித்தவன் பூச்சியைப் பார்க்க, “ஆமா, எங்களுக்கு மட்டும் ரொம்ப தெரியும்.” என்று தன்னையே கலாய்த்து சிரித்துக் கொண்டான் பூச்சி.

குமரன் அந்த கடைக்காரனிடம் “ண்ணா.. இதுல எது நல்லாருக்குமோ அதை கொடுண்ணா.. உனக்குன்னா என்ன போன் வாங்குவ. அது மாறி எடுத்து குடு.” என்றான்.

அவன் பேச்சு அந்த கடைக்காரனை கவர்ந்துவிட, “இது நல்லாயிருக்கும் தம்பி. அட்வான்ஸ் மாடல் தான். இதைக் கொடு.” என்று இருபதாயிரத்தில் ஒரு அலைபேசியை எடுத்து நீட்டினார் அவர்.

அவனது இன்றைய நிலைக்கு அது மிகப்பெரிய தொகையாக இருந்தாலும், யோசிக்காமல் வாங்கிவிட்டான் குமரன். அந்த பணத்தை அவன் மீன்வெட்டும் வேலை செய்து கொண்டிருந்த ஓட்டல் முதலாளியிடம் கடனாகப் பெற்று வந்திருந்தான்.

அன்று இரவே அதை மனைவியிடம் கொடுக்க, அத்தனை சுலபத்தில் அதைக் கையில் வாங்கவில்லை கார்த்திகா.

முதல் வார்த்தையே “எனக்கு வேண்டாம்.” என்பதாகத் தான் இருந்தது.

“நீ படிக்க யூஸ் ஆகும் இல்ல. அதுக்குதான் வாங்குனேன். வச்சிக்க.”

“எனக்கு இதை யூஸ் பண்ணவே தெரியாது. எனக்கு வேண்டாம்.” என்று மீண்டும் மறுப்புதான்.

“படிச்ச பொண்ணு தான நீ. படிச்சு பார்த்தா என்ன பண்ணனும்னு தெரியப் போவுது. சும்மா காரணம் சொல்லாத புடி.” என்று குமரன் அதட்டிவிட,

“எனக்கு வேண்டாம். நீங்களே வச்சிக்கோங்க.” என்றாள் மீண்டும்.

“எனக்கு இதை பத்தி தெரிஞ்சா, நான் ஏன் இதை வச்சிக்க போறேன்.” என்று தன் சட்டைப்பையிலிருந்த பட்டன் போனை எடுத்து அவள் முகத்திற்கு நேராக காட்டினான் குமரன்.

“இல்ல… எனக்கு வேண்டாம். இது ரொம்ப விலையா இருக்கும் போல. என்னால பத்திரமா பார்த்துக்க முடியாது.” என்று மீண்டும் அவள் மறுக்க,

“ஏய் பிடிடி.” என்று கத்திவிட்டான் குமரன்.

அவன் சத்தத்தில் அவள் உடல் தூக்கிப்போட, “சும்மா சொல்லணும்னு காரணம் சொல்லிட்டு இருக்காத. படிக்கதான வாங்கி குடுக்கறேன். இதை நீ வாங்கிக்கிட்டா ஒடனே உன்னை பொண்டாட்டியா நினைச்சுக்க மாட்டேன். எங்களுக்கும் அறிவு இருக்குது. புடி.” என்றான் கோபமாக

“இல்ல.. நான் அப்படி சொல்…” என்றவளை முடிக்க விடாமல் “இதை வாங்குன்னு சொன்னேன்.” என்றான் அதே கோபத்துடன்.

கார்த்திகா அவன் கோபத்தில் முகம் சுருங்கியவளாக வாங்கிக் கொள்ள, அப்போதுதான் சற்று சாந்தமானான் குமரன். தன் பாக்கெட்டில் இருந்த சிம்கார்டையும் எடுத்து அவளிடம் கொடுத்தவன் “இத அதுல போட்டுக்கோ. நெட் கார்ட் தான்.” என்றுவிட்டு குளிக்கச் சென்றுவிட, அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு அவனுக்கு உணவை எடுத்து வைத்தாள் கார்த்திகா.

இந்த நான்கு நாட்களின் பழக்கமாக, அவன் அருகில் அமர்ந்து அவள் பரிமாற வயிறு நிறைய உண்டு விட்டு எழுந்தான் குமரன். அதன்பின் அவளுமே உறங்கிவிட, அலைபேசியைப் பார்க்க எல்லாம் நேரமில்லை. இன்று கல்லூரி விடுமுறை எனவும் காலையிலேயே எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டிருந்தாள்.

அவளுக்கும் முதல்முறையாக அலைபேசியை உபயோகிப்பது மகிழ்ச்சியாக இருக்க, ஆர்வமாக ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டிருந்தாள் அவள். படிக்கும் வேலைகளும் குறைவே என்பதால் மதியம் சமையலை முடித்தபின்னும் அவள் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருக்க, மதிய உணவுக்கு வீடு வந்திருந்த குமரனும் அவளைப்பார்த்து சிரித்தபடி தான் கிளம்பியிருந்தான்.

இதோ இப்போதும் அவள் முகத்தில் உறைந்த புன்னகையுடன் அலைபேசியைப் பார்த்து அமர்ந்திருக்க, மீண்டுமொரு முறை அவளை மையமாக வைத்து தன் விளையாட்டை தொடங்கியிருந்தது விதி.