தித்திக்கும் முத்தங்கள் 13

தன் வீட்டு ஜன்னல் அருகில் நின்று கீழே தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரியா. மனம் இரண்டு நாட்களாக நடந்த நிகழ்வுகளை மெல்ல அசைபோட்டுக் கொண்டிருக்க, சோக சித்திரமாக நின்று கொண்டிருந்தாள் அவள்.

திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில், அவள் கணவன் நேற்று அவளைக் கைநீட்டி அடித்திருந்தான். ஆம். தனி சமையல் என்று தொடங்கிய தினத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் அவ்வபோது உரசல்கள் இருந்துகொண்டே தான் இருந்தது.

கதிர்வேல் அவள் சமையலை வைத்து குறை படித்துக் கொண்டேதான் உண்ணுவான் எப்போதும். இதில் ‘எங்க கார்த்தி எப்படி சமைப்பா தெரியுமா? ஒரு தக்காளி தொக்கு வச்சா கூட அப்பிடி இருக்கும்.’ என்று கார்த்திகாவை வேறு அவன் இடையில் இழுத்துவிட, காரணமே இல்லாமல் அவள்மீதும் வெறுப்பு வரத் தொடங்கியது பிரியாவுக்கு.

அந்தநேரம் தான் குமரன் அவள் பொருட்களை எடுத்துச் சென்றது. ‘இவன் பொண்டாட்டிக்காக இதெல்லாம் வேற செய்யுறானா.’ என்று அதுவும் சேர்ந்துகொள்ள, காரணமேயின்றி கார்த்திகைச்செல்வி குற்றவாளியானாள்.

அவளை எதுவும் செய்ய முடியாத ஆத்திரத்தில்தான் குமரன் வந்த விஷயத்தை தங்கராஜிடம் போட்டுக் கொடுத்தது. அவரும் அவள் நினைத்தபடியே மகாலட்சுமியை தெருவுக்கு இழுத்துவிட்டார். அதுவரை அத்தனையும் அவள் திட்டமிட்டபடி தான் நடந்தது.

ஆனால், அவளே எதிர்பாராதது… மகாலட்சுமியின் தற்கொலை முடிவு. அதைவிட பெரிய அடி, கதிர்வேலின் பிடி அவள் கையை விட்டு நழுவியது. ஆம். அப்படிதான் நடந்து கொள்கிறான் கதிர்வேல். மொத்தமாக மகாவின் மகனாக மாறிப் போயிருந்தான்.

அவர் தற்கொலைக்கு முயன்ற தினம் முழுவதும் அவருடனே அமர்ந்திருந்தவன் அடுத்த நாளும் அதையே தொடர, மகாலட்சுமிதான் அவனை வற்புறுத்தி அவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. தன் வீடு வந்தபின்னும் கதிர்வேல் பிரியாவை நெருங்காமல் தனியே படுத்துவிட, அதற்குமேல் பொறுக்கமுடியாமல் தானாகவே கணவனை நெருங்கினாள் பிரியா.

“என்ன மாமா. ரொம்ப சோகமா இருக்க. உன் அம்மா போடற ட்ராமாவ எல்லாம் நம்புறியா?” என்று கிண்டலாக அவள் கேட்டுவிட, பட்டென அவளை உதறித் தள்ளியிருந்தான் கதிர்வேல்.

“டிராமா போடுறதுக்கு அவுங்க என்ன பிரியாவா.” என்றான் சுருக்கென.

ப்ரியா அதிர்ந்தவள் கோபமாக “நான் என்ன டிராமா பண்ணேன்?” என்று கேள்வி கேட்க,

“ஏன் கோவம் வருதா? அப்புறம் என் அம்மாவை மட்டும் எப்படிடி டிராமா பண்ணாங்கன்னு சொல்லுவ. சின்னப் பொண்ணாச்சேன்னு பாவம் பார்த்தா, எங்கம்மாவையே பேசுவியா? வாய் வெத்தலைப்பாக்கு போட்டுக்கும். அதை பத்தி இன்னா தெரியும் உனக்கு. நீயெல்லாம் ஒரு ஆளு. நீ அதைப்பத்தி பேச வந்துட்ட.” என்றான் ஏளனமாக.

“ஏன் அப்படியென்ன கேவலமா போய்ட்டேன் நான். உன் அம்மாவுக்காக என்னை வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவியா. உன் அம்மா அவ்வளவு ஒஸ்தியா போய்ட்டாங்களா?” என்று பிரியாவும் பேச,

“ஓடிவந்த உன்னைவிட ஒஸ்திதான்டி. நீ ஓடி வந்தவளா இருந்தாலும், உனக்கும் வீடு வாசல்ன்னு ஒன்னு ரெடி பண்ணி குடுத்து இருக்கு பாரு. அது ஒஸ்திதான்.”

“ஹ்ம்ம்… கல்யாணம் பண்ணி வீட்டுக்கு வந்த ரெண்டாவது நாளே உன்னை வீட்டை விட்டு துரத்திவிட்ட அம்மாக்கு நீ இத்தனை பேசுவியா?”

“எங்கம்மா வீட்டைவிட்டு துரத்தி விட்டுடுச்சு. உன் அம்மா… ஆரத்தி சுத்தி வூட்டுக்கு கூப்ட்டுச்சா. துரத்தி உட்டாலும் எங்கம்மா தான வீடு பார்த்து வச்சுது. மூடிட்டு பட்றி.” என்றான் கதிர்.

“நீ ரொம்ப பேசற மாமா.” என்று பிரியா கண்ணைக் கசக்க,

“இருக்கறததான சொன்னேன். இதைவிட்டாலும் வேற எதுக்கும் வக்கில்ல உனக்கு. படு.” என்றான் அப்போதும்.

பிரியாவுக்கு அவன் வார்த்தைகளில் கண்ணீர் வர, அவனிடம் அதற்குமேல் வாதிடாமல் மறுபக்கம் திரும்பி படுத்துவிட்டாள்.

கதிர்வேலுக்கு என்ன தோன்றியதோ… அவள் திரும்பி படுத்த பத்து நிமிடத்திற்கெல்லாம் அவளை மீண்டும் அணைத்து தன்னோடு இழுத்துக் கொண்டான் அவன். ப்ரியா அப்போதும் வாயைக் குறைக்காமல் ” இதுக்கு மட்டும் நான் வேணுமா உனக்கு?” என்று வாய்விட,

“ஏன் இதுக்கு வேற எவளாச்சும் வருவாளா?” என்றான் கதிர்.

பிரியா பதில்கூற தெரியாமல் மௌனிக்க, “என்னை கடுப்பாக்காம வாடி.” என்று அவளை வளைத்து கொண்டவன் அதன்பின் அவள் விருப்பு, வெறுப்புகளை குறித்துக் கவலை கொண்டானில்லை.

பிரியாவுக்கு அந்த நொடிகள் சிறிது வலித்தாலும், ‘கணவன் நிச்சயம் தன் வழிக்கு வந்துவிடுவான்’ என்று ஒரு நம்பிக்கை பிறந்தது அவன் செயலில். அவனை வளைப்பது ஒன்றே குறியாக இருக்க, சுலபமாகவே அவனுக்கு வளைந்து கொடுத்தாள் ப்ரியா.

ஆனால், அடுத்தநாள் காலையில் அவள் எதிர்பார்த்தபடி இணக்கம் காட்டவில்லை கணவன். முகத்தை உர்ரென்றே வைத்துக் கொண்டிருந்தவன் அதே மனநிலையிலேயே வேலைக்கும் கிளம்பியிருந்தான். அவன் வெளியேறவும் ‘அப்பாடா.’ என்று பெருமூச்சு விட்டவள் படுத்து நன்றாக உறங்கி எழ, உடல் சற்று புத்துணர்ச்சியாக உணரவும், குளித்து ஈரத்தலையுடன் வந்து பால்கனியில் நின்றுகொண்டாள்.

அவள் குளித்து முடித்தபோதே நேரம் ஆறு மணியை நெருங்கியிருக்க, சரியாக அப்போதுதான் வேலை முடிந்து வந்து கொண்டிருந்தார் மகாலட்சுமி. பிரியாவும் அவர் கீழே வரும்போதே பார்த்துவிட, நேற்று நினைவில் ஏளனமாக ஒரு புன்னகை குடி கொண்டது அவள் முகத்தில்.

அதே புன்னகையுடன் அவள்  வீதியைப் பார்த்து நின்றிருக்க, படியேறிக் கொண்டிருந்த மகாலட்சுமிக்கு ஈரம் படிந்திருந்த அவளின் பின்புறம் தான் முதலில் காட்சியானது.

தலைமுடியின் ஈரம் அவள் அணிந்திருந்த நைட்டியிலும் இறங்கியிருக்க, முதுகுப்புறமும், அதற்கு கீழ்ப்பகுதியும் மொத்தமாக நனைந்து இருந்தது. ‘நான்குபேர் நடந்து செல்லும் பொது இடத்தில் இதென்ன இப்படி நிற்பது.’ என்று அந்த நிமிடம் கொதித்துக் கொண்டு வந்தது மகாவுக்கு.

இதே இடத்தில் கார்த்திகா இருந்திருந்தால் இந்நேரம் அவள் தோலை உரித்திருப்பார் மகாலட்சுமி. ஆனால், எதிரில் இருப்பது மருமகள் ஆகிற்றே, அப்படி பட்டென கையை நீட்டிவிட முயுமா..

“எதுக்கும்மா இங்க நின்னுட்டு இருக்க.?” என்றார் அதட்டல்தொனியில்.

பிரியா ‘இவர் தன்னிடமா பேசினார்.’ என்று வியப்புடன் அவரைத் திரும்பி பார்க்க, “இங்க என்ன பண்ற” என்று மீண்டும் கேட்டார் மகாலட்சுமி.

அவர் தொனி கோபம் கொடுக்க, “உங்க மகன் வர்றாரான்னு தான் பார்த்துட்டு இருக்கேன்.” என்றாள் கடுப்புடன்.

“வந்தா வீட்டுக்கு தான வரப் போறான். நீ ஏன் கால்கடுக்க இங்க நிற்கணும்? உள்ள போ.” என்றார் கடுமையாக.

ப்ரியா அப்போதும் “ஏன் இங்கே நின்னா என்ன?” என்று கேள்வி கேட்க, அவளை கண்டிப்புடன் பார்த்தார் மகாலட்சுமி.

“இது நாலுபேர் போற வர்ற வழி. நீ விளக்கு வச்ச நேரத்துல தலைக்கு ஊத்திட்டு இங்கே வந்து நின்னுட்டு இருப்பியா, அதுவும் ஈரத்துணியோட… போடி உள்ள.” என்று கடுமையாக அதட்டிவிட்டார் மகாலட்சுமி.

பிரியா அதற்கே அழுதுவிட, கண்களை துடைத்துக்கொண்டே வேகமாக வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். மகாலட்சுமி அவளை கண்டுகொள்ளாமல் தன்பாட்டிற்கு  சென்றுவிட்டார்.

அவர் அந்த விஷயத்தை அதோடு மறந்துவிட, மருமகள் மறக்காமல் கணவன் வந்த நிமிடம் மாமியாரைப் பற்றி புகார் வாசித்தாள். ஆனால், கதிர் வழக்கம்போல் அவளுக்கு ஆதரவு கொடுக்காமல் “நீ ஏன் பால்கனில போய் நின்ன? எங்க அம்மாவுக்கு அதெல்லாம் புடிக்காது. அதான் கத்தியிருக்கும்.” என்றான் அலட்சியமாக.

“உங்க அம்மாவுக்கு புடிச்சது, புடிக்காததெல்லாம் நான் ஏன் செய்யணும். பால்கனில நின்னது ஒரு குத்தமா? அப்படியே தப்பா இருந்தாலும், அதை கேட்க இந்த பொம்பளை யாரு?” என்று அவள் முடித்த நிமிடம் அவளை வேகமாக அறைந்திருந்தான் கதிர்வேல்.

“எங்கம்மா அது. யாருன்னு கேட்கற? குளிர் உட்டுப்போச்சா?” என்று அவன் கர்ஜிக்க, கன்னத்தைப் பிடித்துக்கொண்டு ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டாள் ப்ரியா.

கிடைத்தது சாக்கென்று ஒருவேலையும் செய்யாமல் அவள் அமர்ந்துவிட, கதிர் இரவு உணவை மகாலட்சுமியின் வீட்டில் பார்த்துக்கொண்டான். மகா மனது கேட்காமல், பிரியாவுக்கும் அவனிடமே உணவு கொடுத்துவிட, அதைக் கையால் கூட தொடாமல் அமர்ந்துகொண்டாள் ப்ரியா.

கதிருக்கும் அவளிடம் தழைந்து போக விருப்பமில்லாததால் பெரிதாக அவனும் அவளை சமாதானமெல்லாம் செய்யவில்லை. ‘சாப்பிடலையா கிட.’ என்று விட்டுவிட்டான்.

இப்போது நினைத்துப் பார்க்கையில், கதிர்வேலின் செயல்கள் மிகவும் பெரியதாக தோன்றியது பிரியாவுக்கு. ‘அவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறியதே தவறோ’ என்று ஞானோதயம் வேறு வந்து குதிக்க, ‘மொத்தமாக முட்டாள்த்தனம் செய்துவிட்டோமோ’ என்று அவளுக்கு சாதகமாகவே சிந்தித்தது  மனது.

அதுவும் இந்த இரண்டு நாட்களாக கதிர்வேல் பேசிய பேச்சுகளும், அவன் நடவடிக்கைகளும், தன்மீது அவன் கைநீட்டியதும் என்று ஒவ்வொன்றாக கண்முன் காட்சிப்படுத்தியவளால் என்ன முயன்றும் வேறு முடிவு எடுக்க முடியவில்லை.

மனம், தான் எது செய்தாலும் தன்னை கடிந்து ஒரு வார்த்தைக்கூட பேசாத தாயின் அருகாமைக்கு ஏங்க தொடங்கியது. அன்னையின் நினைவில் அவள் கண்ணீர் வடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்திருந்தான் கதிர்.