“விடுங்கடி. இவன்தான் அன்னைக்கு கார்த்தியைக் கூட்டிட்டுப் போனது. இப்போ அவ என்னடான்னா கார்த்தி ஓடிபோய்ட்டான்னு சொல்றா. ஏய்… எங்கேடா கார்த்தி, என்ன செஞ்ச அவளை. சொல்றியா இல்ல போலீசுக்கு போன் பண்ணவா.” என்று எகிறியவள் “ஏய்.. போலீசுக்கு போன் பண்ணுடி..” என்று அதட்டினாள் காவ்யாவை.
“ஏய்.. சட்டையை விடுடி பஜாரி.” என்று மதன் கத்த,
“என் பிரெண்ட் எங்கடா.?” என்று பிடியை இறுக்கினாள் அவள்.
இதற்குள் அவனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த குமரகுரு, பூச்சியைப் பார்த்து ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகில் ஓடிவர, “கார்த்தி எங்கடா.” என்று பூச்சியை மீண்டும் ஒரு உலுக்கு உலுக்கினாள் பூர்ணி.
குமரகுருவின் காதில் இந்த வார்த்தைகள் விழுந்துவிட, “நீ யாரும்மா.” என்று பூர்ணியிடம் கேள்வி எழுப்பினான் அவன்.
பூர்ணி பூச்சியின் சட்டையை விடாமல் “பர்ஸ்ட் நீ யாரு. இவன் என் பிரெண்டை கடத்திட்டு வந்துட்டான். இவனை போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்க போறேன். நீயும் போறியா.” என்றாள் மரியாதையில்லாமல்.
“உன் பிரெண்டை அவன் கடத்திட்டு வரல, நாந்தான் கடத்தினேன். இப்போ அவ என் பொண்டாட்டி.” என்று அலுங்காமல் குலுங்காமல் அமைதியாக கூறி நின்றான் குமரன்.
பூர்ணி, தர்ஷனா, காவ்யா மூவரும் அதிர்ச்சியுடன் எதிரில் நின்றவனைப் பார்க்க, “என் வீடு இங்கேதான் இருக்கு. உன் ஃபிரெண்டும் அங்கேதான் இருக்கா. வீட்டுக்கு போய் பேசுவோம் வாங்க.” என்று அழைக்க, தர்ஷனா அவன் பேச்சை நம்பி ஒரு அடி எடுத்து வைக்க,
“உங்க வீடு இங்கேதான. நாங்க நடந்தே வர்றோம், கூட்டிட்டுப் போங்க.” என்றுவிட்டாள் பூர்ணி.
குமரன் அவளின் பேச்சில் புன்னகைத்து “வண்டியை எடுத்துட்டு வாடா.” என்று சாவியை பூச்சியிடம் வீசியவன் அந்தப் பெண்களுடன் நடந்தான்.
வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு அமர்ந்திருந்த கார்த்திகா, கதவு தட்டும் சத்தத்தில் வேகமாக எழுந்து கதவைத் திறந்தாள். குமரனைக் கண்டவள் பார்வை எதேச்சையாக அவன் பின்னே செல்ல, அங்கு நின்றிருந்தவர்களைக் காணவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காத குறைதான்.
“தர்ஷி.” என்றவள் குமரனை தாண்டி அவர்களை நெருங்கி அணைத்துக் கொண்டாள். நால்வரும் அந்த குட்டி வாசலில் நின்று கட்டியணைத்திருக்க, “உள்ளே வாங்கம்மா.. உள்ளே வந்து பேசுங்க வாங்க.” என்று அவர்களை உள்ளே அழைத்து வந்தான் குமரன்.
கார்த்தி தோழிகளுடன் அமர்ந்துவிட, “பேசிட்டு இருங்க வந்துடறேன்.” என்று வெளியேச் சென்றுவிட்டான் குமரன்.
பூர்ணி “என்னடி நடக்குது இங்கே.” என்று கார்த்தியை முறைக்க,
“என்னை எதுவும் கேட்காத பூர்ணி ப்ளீஸ்.” என்று மெல்லிய குரலில் கூறினாள் கார்த்திகா.
“ஹேய். அதெப்படி கேட்காம விட முடியும்? நீ அவ அண்ணனை இழுத்துட்டு போய்ட்டேன்னு சொல்றா உன் அண்ணிக்காரி. இங்கே வந்து பார்த்தா, இவர் உன் புருஷன்னு சொல்றார். என்னடி இதெல்லாம்.” என்று அவள் மீண்டும் அதட்ட, கார்த்திகா அழுதுவிட்டாள்.
“என்னை கொலைகாரி ஆக்காத கார்த்தி.” என்று பூர்ணி கழுத்தை நெறிக்க, “விடுடி அவளை.” பட்டென அவள் கையில் ஒன்று வைத்தாள் தர்ஷனா.
தர்ஷனா “வாயை மூடிட்டு இரு கொஞ்சநேரம்.” என்று பூர்ணியை அதட்டியவள் “கார்த்தி என்னடா.. ஏன் அழற.” என்று பரிவுடன் தர்ஷினியின் கண்களைத் துடைத்தபடியே கேட்டாள் .
கார்த்திகா அவளை அணைத்து கொண்டவள் அழுகையுடன் “என்னை எதுவும் கேட்காத தர்ஷி. எப்படியோ எங்க கல்யாணம் நடந்துடுச்சு. அவ்வளவு தான். எதுவும் பண்ண முடியாது.” என்றாள் கார்த்தி.
“அதெப்படி எப்படியோ நடக்கும்.?” என்று பூர்ணி வாயைத் திறக்க,
“அவ கேட்டுட்டு இருக்கால்ல பூரி. அமைதியா இரு.” என்று அதட்டினாள் காவ்யா.
தர்ஷனா “அப்போ இந்த அண்ணா சொல்றது உண்மைதானா. அவர்தான் உன் வீட்டுக்காரரா.?” என்க, மௌனமாக தலையசைத்தாள் எதிரில் இருந்தவள்.
“அவரும் பார்க்க கெட்டவர் மாதிரி எல்லாம் தெரியலையே கார்த்தி. அப்புறம் ஏன் இப்படி. அங்கே உன் அண்ணி ரொம்ப மோசமா பேசுறாடி.” என்று காவ்யாவும் பேச,
“இந்த கல்யாணத்தால வீட்ல கொஞ்சம் பிரச்சனை காவ்யா. அந்த கோபத்துல ஏதாவது பேசி இருப்பாங்க விடு.”
“கல்யாணத்தால என்ன பிரச்சனை. உன்னை யாரும் மிரட்டினாங்களா. கட்டாயப்படுத்தி எதுவும் பண்ணாங்களா.” என்று பூர்ணி கேட்க,
“இல்ல. அதெல்லாம் எதுவுமில்ல.” என்று தயங்கியவளாக கார்த்தி உரைக்க,
“பின்ன என்ன.. உன் அண்ணிக்காரி சொல்றபடி இவரை லவ் பண்றியா நீ.?” என பட்டென கேட்டுவிட்டாள் பூர்ணி.
கார்த்திகா அவளை பாவமாக பார்க்க, “பூர்ணி.” என்று மீண்டும் அதட்டினாள் தர்ஷனா.
“யாராவது கேட்கணும்ல. நீ சொல்லு, என்ன நடந்தது. நீ இங்கே எப்படி இருக்க? உன்னை நல்ல பார்த்துக்கறாரா அவர்.?” என்று கேள்விகளைத் தொடுக்கத் தொடங்கினாள் பூர்ணி.
அவள் பேச்சில் “எதுவும் பிரச்சினையில்ல பூர்ணி. சும்மா கேள்வியா கேட்காத ப்ளீஸ்.” என்று கெஞ்சலாக கார்த்திகா கூறிவிட,
“காலேஜ்க்கு எப்படி.. வருவீங்களா, இல்ல… அதையும் ஊத்தி மூடியாச்சா.” என்று பூர்ணி மீண்டும் கேட்க,
“நாளைக்கு என்ன நடக்கும்னே தெரியாத நிலைமைல இருக்கேன் பூர்ணி. காலேஜ் எல்லாம் யோசிக்கவே முடியல. என் தலைவிதிப்படி நடக்கட்டும். நீங்க நல்லா படிங்க.” என்று கார்த்தி பேசும்போதே, ‘இவளை என்ன செய்யலாம்.’ என்று தர்ஷனாவைப் பார்த்தாள் பூர்ணி.
“ஏன் கார்த்தி இப்படி பேசற? எவ்ளோ பேர் கல்யாணம் பண்ணிட்டு படிக்கிறாங்க. நீ படிக்க என்ன? காலேஜ்க்கு கிளம்பி வா.” என்றாள் உத்தரவாக.
“என்னால எதையும் இப்போ சொல்லமுடியாது தர்ஷி. விடு பார்க்கலாம்.” என்று அப்போதும் கார்த்தி முடித்துவிட, இதற்குள் அவர்களுக்கு டீ வாங்கி வந்திருந்தான் குமரன்.
அதற்குமேல் எதுவும் பேசிக்கொள்ள முடியாமல் போக, டீயைக் குடித்து முடித்து கார்த்தியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் அதன்பிறகே கிளம்ப, “இப்போ என்கூட வருவிங்களா. வீட்ல விட்டுடறேன்.” என்று பாசமாகத் தான் கேட்டான் குமரன்.
ஆனால், “முதல்ல உங்க பொண்டாட்டியை காலேஜ்க்கு அனுப்பி வைங்க. அடுத்தவாரம் மாடல் எக்ஸாம் இருக்கு.” என்று பட்டென முகத்திலடித்ததுப் போல் பேசிவிட்டாள் பூர்ணி.
தர்ஷனா “சாரிண்ணா. அவ கோபத்துல பேசுறா. ப்ளீஸ் முடிஞ்சா கார்த்தியை காலேஜ்க்கு அனுப்பி வைங்க. எங்களுக்கு எக்ஸாம் வருதுண்ணா. அவ நல்லா படிப்பா. இப்போ என்ன பிரச்சனை எதுவும் தெரியல. ஆனா, அவ படிப்பை நிறுத்திடாதீங்க ப்ளீஸ்.” என்று வேண்டுதலாகக் கேட்டுக்கொண்டாள் தர்ஷனா.
குமரன் அவர்கள் சென்றபிறகும் வெகுநேரம் வாசலிலேயே நின்றுவிட, கார்த்தி இவர்கள் பேசியது எதுவும் தெரியாமல் மேலே பால்கனியில் நின்று பார்த்திருந்தாள்.
தோழிகள் கிளம்பவும், கையசைத்து அவள் வீட்டிற்குள் வந்துவிட, குமரன் உள்ளே வருகையில் அவனுக்கு உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். வழக்கம்போல் அத்தனையும் எடுத்து வைத்தவள் தூரமாகச் சென்று அமர்ந்துவிட, குளித்து முடித்து வந்து அமர்ந்தவன், “நீ காலேஜ் போறியா?” என்றான் கார்த்தியிடம்.
“காலேஜ் போய் என்ன பண்ண போறேன்? அப்படியே போனாலும், என்னோட புக்ஸ், நோட்ஸ் எதுவும் என்கிட்டே இல்ல.” என்றவள் சுவற்றில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள,
“புக் இருந்தா காலேஜிக்கு போவியா.” என்றான் அவன்.
“என்னால என் வீட்டுக்கு போக முடியாது. என் அம்மா என்னை நினைச்சு ஏற்கனவே நொந்து போயிருக்காங்க. நிச்சயமா நான் அவங்க முன்னாடி போய் அவங்க வேதனையை அதிகமாக்க மாட்டேன்.” என்றாள் உறுதியுடன்.
குமரன் அவள் பேச்சுக்கு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக உண்டு முடித்து கிளம்பிவிட, அவனை நினைத்து ஏளனமாக சிரித்துக் கொண்டாள் கார்த்திகா.
“இவன் நினைக்கிறதெல்லாம் நடந்திடும்.” என்று சத்தமாக கூறிக்கொண்டவள் அதன்பின் அதை மறந்துவிட, அடுத்தநாள் மாலை வேலை முடிந்து வரும் நேரம் அவளின் புத்தகங்கள், உடைகள் என்று அத்தனையும் வாரிக் கொண்டு வந்திருந்தான் குமரன்.
ஆனால், அதற்குமுன்பே அடுத்த பஞ்சாயத்தை வைத்துக்கொண்டு குமரனுக்காக காத்திருந்தார் அவன் அன்னை.