நேற்று ப்ரியாவிடம் கூறியதுப் போலவே காலையில் நேரத்திற்கு எழுந்து வேலைக்குச் செல்ல தயாராகி நின்றான் கதிர்வேல். ஆனால், அவன் மனைவி வழக்கம்போல் உறக்கத்தைத் தொடர, அதுவே எரிச்சலாகிப் போனது அவனுக்கு.
தன் வேலைகளை முடித்து அவள் முன்னே வந்து நின்றவன், “பிரியா… ப்ரியா.” என்று அதட்டலாக அழைக்க, அதையும் காதில் வாங்காமல் உறக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் அவள். கதிர்வேல் கோபம் கொண்டவனாக அவள் முதுகில் சற்றே வேகமாகத் தட்டி எழுப்ப, “ஏன் மாமா அடிச்ச.” என்று குறைபேசிக் கொண்டே எழுந்து அமர்ந்தாள் அவள்.
எப்போதும் போல் அரைகுறையாக அமர்ந்திருந்தவளைக் கண்டு தடுமாறியவன், “முதல்ல துணிய ஒளுங்கா போடுடி.” என்று அதட்ட.
“ஏன் நீதான கலைச்ச.” என்றாள் அசராமல்.
“ஒரு மனுசன் வேலைக்கு போறானேன்னு அக்கறை இருக்கா உனக்கு. விட்டா, நாள்பூரா தூங்குவ போல. எழுந்துக்கோ முதல்ல.”என்று மீண்டும் கதிர்வேல் கடுகடுக்க,
“என்னாச்சு உனக்கு… காலையில எழுந்ததும் திட்ற. உன்னாலதான நைட் லேட்டா தூங்குனேன். விட்டியா நீ.” என்ற ப்ரியாவின் முகம் சுருங்கிப்போக, கண்களில் கண்ணீர் தேங்கியது.
அதற்குமேல் கதிர்வேலின் கோபம் தாங்குமா…? பட்டென மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டவன் “அழுவாத ப்ரியா.. சும்மா நொச்சு பண்ணக்கூடாது, காத்தால வேலைக்கு கிளம்பறவனுக்கு ஒரு சோறாக்கி குடுக்கணும் தெரியாதா உனக்கு.? மதியம் சோத்துக்கு இன்னா பண்ணுவேன். இதல்லாம் கேட்டா உடனே ஒரு அழுகாச்சி சீன் வேற.” என்றான் கதிர்வேல்.
பிரியா அவன் கோபம் உணர்ந்தவளாக அப்போதைக்கு தணிந்து போனாள். கண்ணீருடன் அவன் தோளில் சாய்ந்துகொண்டே “சாரி மாமா. நீ சாப்பாடு எடுத்துட்டு போவன்னு எனக்கு எப்படி தெரியும்? நீ நேத்துகூட சொல்லலல்ல.” என்றவள் போலியாக தேம்பியழ,
“சரிசரி, உடு… நாளைல இருந்து சோறாக்கிடு பிரியா. என் அப்பன் இதுக்குமேல காசு தரமாட்டான் நேத்தே அவன் சொத்தை எழுதி தராப்ல பில்டப் கொடுத்தான்.” என்று தந்தையைத் திட்டியவன் மனைவியை கைக்கொண்டு அணைத்துக்கொள்ள, அதுதான் சாக்கென்று அவனோடு இன்னும் நெருக்கமாக பின்னி பிணைந்து கொண்டாள் பிரியா.
கதிர்வேலுக்கும் மற்றதெல்லாம் மறந்து மனைவி மட்டுமே கண்ணுக்குத் தெரிய, “வேலைக்கு போவனும்டி.” என்றவன் குரல் குழைந்திருந்தது.
“வேலைக்கு போய் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ மாமா. நாளைக்கு போ.” என்ற பிரியா அவனையும் இழுத்துக்கொண்டு படுக்கையில் விழ, வேலையை மறந்து போனவனாக மனைவியுடன் இழையத் தொடங்கினான் கதிர்வேல்.
அன்றும் வழக்கம்போல் கூடல் முடிந்து கதிர்வேல் கடையில் உணவு வாங்கிவந்து கொடுக்க, கணவன் மனைவி இருவரும் உண்டு முடிக்கவும், “நீ மளிகைச்சாமான், காய்கறி எல்லாம் வாங்கி குடு மாமா. நான் சமைக்குறேன்.” என்று நல்லபிள்ளையாக கூறிய பிரியாவை நம்பி அவனுக்கு தெரிந்த அளவில் மளிகைப்பொருட்கள் வாங்கி வந்து கொடுத்தான் கதிர்வேல்.
அதை அடுக்கி வைப்பதிலேயே சோர்ந்து போனதாக கூறி சமாளித்துவிட்டவள் இரவு உணவையும் வெளியேயே வாங்கி அந்த நாளை ஒப்பேற்றிவிட, அன்று இரவும் விருப்பப்படி கூடி களித்தனர் இருவரும்.
அடுத்தநாள் காலையிலும் கதிர்வேல் முதலில் எழுந்தவன் குளித்து கிளம்பி முடிக்க, நேற்றுப் போலவே இன்றும் பிரியாவின் அருகில் சென்று நின்றான். ஆனால், நேற்று நடந்தவை எல்லாம் ஒருநிமிடம் நினைவு வர, அவளை எழுப்பும் எண்ணத்தை கைவிட்டவன் வேகமாக வீட்டைவிட்டு வெளியேறி விட்டான்.
கதவை லேசாக தாழிட்டவன் உள்ளிருந்து இழுத்தால் திறந்து கொள்ளும்படி மூடி வைத்துவிட்டு கீழே வாசலுக்கு வந்தான்.
வாசலில் இருந்த பெட்டிக்கடையை கடக்கும்போது, ‘அம்மா சமைச்சு வச்சிருக்குமே.’ என்று தோன்றவும், அந்தக் கடையில் அவன் வீட்டு சாவியைக் கேட்டு கைநீட்ட, “உன் ஆத்தாக்காரி சாவி எல்லாம் குடுத்துட்டு போறதில்ல கதிரு. என்ன நினைச்சாலோ மவராசி கடைக்கு கூட வர்றதில்ல.” என்றார் அந்த மூதாட்டி.
‘சாவிக் குடுத்துட்டு போனா இன்னாவாம். இது ஒரு சாவுகிராக்கி.’ என்று கொஞ்சமும் நியாயமில்லாமல் அன்னை மேல் கோபம் கொண்டவன் தன்னையே நொந்தவனாக வேலைக்கு கிளம்பியிருந்தான்.
பிரியா தன் வழக்கமாக காலைப் பத்துமணிக்கு மேல் கண்விழித்துப் பார்த்தவள் கணவனைக் காணாது தேடினாலும், பெரிதாக பதறவெல்லாம் இல்லை. ‘ஒரு டிபன் வாங்கி குடுத்துட்டு போனா என்னவாம்.’ என்று அப்போதும் கணவனைப் பற்றி குறையாக நினைத்துக்கொண்டே குளித்து முடித்தாள் அவள்.
அவள் செலவுக்கும் கதிர்வேல் கையில் பணம் எதுவும் கொடுக்காமல் சென்றுவிட்டிருக்க, அப்படியொரு ஆத்திரம் கனன்றது அவன்மீது. நேற்று மளிகைப்பொருட்கள் வாங்கி வந்ததால், பெரிதாக எதுவும் செலவில்லையே என்று மனம் இடித்துக் கூற, ‘அதுக்காக அப்படியே விட்டுட்டு போவானா’ என்று ஆங்காரம் கொண்டாள் அவள்.
எப்படியோ ஒருவழியாக புலம்பிக்கொண்டே அரிசியை உலையில் ஏற்றியவள் அவளுக்குத் தெரிந்த அளவில் ஒரு குழம்பை செய்து முடிக்க, அவள் சமைத்த உணவு அவளுக்கே இறங்கவில்லை. ஆனால், வேறு வழியில்லாமல் அதையே உண்டு முடித்தவள் கையில் அலைபேசியை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
இவள் உண்டு முடித்து அமர்ந்த சிறிது நேரத்தில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்க, ‘எவன்டா அது.’ என்று சத்தமாக தனக்குள் பேசிக்கொண்டே கதவைத் திறந்தாள் அவள்.
வாசலில் நின்றிருந்தது கார்த்திகாவின் கல்லூரித்தோழிகளான தர்ஷனா, பூர்ணி, காவ்யா மூவரும்தான். பிரியாவிற்கு அவர்களை அடையாளம் தெரியாமல், “யார் நீங்க.” என்று அலட்சியமாகக் கேட்க,
அவள் பேச்சில் பூர்ணிக்கு கோபம் வந்துவிட,”சும்மா கண்டதை சொல்லாத. நீ அவளோட அண்ணன் பொண்டாட்டி தான. நீ கார்த்தியோட அண்ணனை இழுத்துட்டு போனதா சொல்லிதான் காலேஜ்ல இருந்து ஒருத்தன் அவளை கூட்டிட்டுப் போனான். அதோட அவ காலேஜுக்கே வரல. என்ன பண்ணீங்க அவளை.?” என்று பட்டென கேட்டுவிட்டாள் அவள்.
“ஏய்… என்னா வாய் நீளுது. என் வீட்டுக்கே வந்து நின்னு என்னையே பேசுவியா. வாயைக் கிழிச்சிடுவேன்.” என்று ப்ரியா அலற,
“ஏய்.. நாம தேவையில்லாம பேசிட்டு இருக்கோம் இவகிட்ட. லோக்கல் இவ.. வாங்கடி.” என்று உமாவையும், தர்ஷனாவையும் இழுத்துக் கொண்டு பூர்ணி கிளம்ப,
“ஆமாமா, நான் லோக்கல். உன் ஃபிரெண்ட் எலிசபெத் ராணி. அடச்சீ போய் தொல. இந்த லோக்கலோட அண்ணனை தான் இழுத்து போயிருக்கா உன் பிரெண்டு. பின்னாடி தான் வீடு, போய் கேட்டுக்க போ.” என்று பட்டென கதவை அடித்து சாற்றிக்கொண்டாள் ப்ரியா.
பூர்ணி தலையிலடித்துக்கொண்டே, “தேவையாடி இதெல்லாம். இவல்லாம் ஒரு ஆளுன்னு இவகிட்ட பேச்சு நிக்கிறோம். இந்த எருமை மட்டும் கையில கிடைக்கட்டும்.” என்று பல்லை கடித்துக் கொண்டாள்.
தர்ஷனா, “கொஞ்சநேரம் அமைதியா இரு பூர்ணி. எல்லாம் உன்னாலதான். கொஞ்சம் பொறுமையா கேட்டு இருந்தா, கார்த்தி இருக்க இடம் தெரிஞ்சிருக்கும். இவ வேற ஏதேதோ சொல்றா.” என்று கண்கலங்க,
“ஏய்.. லூசாப்பா நீ. அவளைப்பத்தி நமக்கு தெரியாது. இவ சொல்றதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. லவ் பண்ற ஆளாடி அவ.” என்று தர்ஷனாவிடமும் கோபம் கொண்டாள் பூர்ணி.
“நமக்கு இன்னும் அவளைப்பத்தி எதுவுமே தெரியல பூர்ணி. அவ வீட்டைக்கூட கண்டுபிடிக்க முடியல. இவ வேற கண்டதையும் சொல்றா. சண்டைபோடாம அடுத்து என்னனு யோசிங்கடி.”என்று கெஞ்சினாள் காவ்யா.
“என்ன செய்யுறது? வேற யார்கிட்டயாச்சும் கேட்போம் வா.” என்று பேசிக்கொண்டே மூவரும் கீழிறங்கி வந்தனர்.
அவர்கள் அந்த குடியிருப்பின் பக்கவாட்டில் இருந்த சாலையில் நடந்து வந்து கொண்டிருக்க, ஆட்டோவில் எதிரில் வந்து கொண்டிருந்தான் பூச்சி. எப்போதும் போல, ‘ஹை கலரு’ என்று ஆர்வத்தில் தான் பார்த்தான் முதலில்.
அவனுக்கு மற்ற இருவரையும்விட பூர்ணியை நன்குத் தெரிந்திருந்தது. அன்று கார்த்தியை அழைத்து வந்த நேரம் அவள் கார்த்தியுடன் நின்றது இன்னும் நினைவில் இருந்தது அவனுக்கு. ‘அட. நமக்கு தெரிஞ்ச பொண்ணு.’ என்று ஆட்டோவை ஓரமாக நிறுத்தியவன்,”ஏம்மா..” என்று அழைத்து நிறுத்தினான் பூர்ணியை.
பூர்ணி அவனை அடையாளம் தெரியாமல் விழிக்க, “என்னைத் தெரியலையா. அன்னிக்கு காலேஜ்ல கார்த்திகூட பார்த்தியே.” என்று அவன் அடையாளம் கூறியது தான் தாமதம், அவன் சட்டையைப் பிடித்துவிட்டாள் பூர்ணி.