தித்திக்கும் முத்தங்கள் 06

          குமரன் தன் கையில் வந்து விழுந்தவளை தாங்கிப் பிடிக்க, அந்த நிலையிலும் அவன் அருகாமையை ஏற்காமல் பட்டென விலகி நின்றுகொண்டாள் கார்த்திகா. தங்கராஜ் கோபத்துடன் மீண்டும் மகளை நெருங்க, அவரை வழிமறிப்பவனாக கார்த்திகாவிற்கு  முன்னே அவளை மறைத்தபடி நின்றுவிட்டான் குமரகுரு.

         தங்கராஜ் “ஏய்.. இன்னா சீனா… யார் ஊட்டு பொண்ணு மேல யாரு கைய வைக்கிறது.. கைய காலை எடுத்துடுவேன்..” என்று மிரட்ட, குமரனின் அலட்சியம் துளிகூட மாறவில்லை. ஏளனமாக அவரைப் பார்த்து நின்றவன் திரும்பி காவலர்களைப் பார்க்க, அந்த ஆய்வாளர் “யோவ்.. தள்ளி நில்லுய்யா..” என்று அதட்டினார் தங்கராஜை.

          “ஏன்யா.. உங்க குடும்ப சண்டையை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வந்து எங்க நேரத்தை ஏன்யா வீணாக்குறிங்க.  நேத்து தான் உன் மகன் ஒருத்தியை இழுத்துட்டு போய்ட்டான்னு வந்து நின்ன.. இப்போ உன் பொண்ணு.. நாந்தான் ராத்திரியே சொன்னேன்ல எவனையாவது கூட்டிட்டு போய்ட்டாளா பாருய்யான்னு..”

          “புள்ளைங்க என்ன பண்ணுது.. எது பண்ணுது.. எதுவும் பார்க்கிறதில்ல.. காணும்ன்னா மட்டும் நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு  வர வேண்டியது.. ஓரமா போய் நில்லுய்யா..” என்று தங்கராஜை  திட்டி முடித்து “ஏய் இங்கே வாம்மா..” என்றார் கார்த்திகாவை.

           அவள் பயந்தவளாக நடுங்கியபடி நின்றிருக்க, “வான்னு சொல்றேன்ல..” என்று மீண்டும் ஒரு அதட்டல்.

           அதில் உடல் தூக்கிப்போட்டது கார்த்திகாவுக்கு. அவள் நிலை  கண்ட குமரன் அவள் கையைப் பிடித்து அவளை நகர்த்த, அந்த ஆய்வாளரின் முன்னே வந்து நின்றாள் கார்த்திகைச்செல்வி.

            ஆய்வாளர் “இவன் சொல்றது எல்லாம் உண்மையா..நீயாதான் இவனோட போனியா..” என்று கேட்க,

             பிடித்திருந்த அவள் கையை ஒருமுறை அழுத்தி விடுவித்தான் குமரன். கார்த்திகா நிமிர்ந்து அவன் முகம் பார்க்க “அங்கே என்ன பார்வை.. கேட்டதுக்கு பதில் சொல்லு..” என்று மிரட்ட

              “உண்மைதான்.. நான்.. நானேதான்.. போனேன்..” என்று அவள் கூறி முடிக்க, மகாலட்சுமி மொத்தமாக வெறுத்துப் போனார் அந்த நிமிடம்.

              தங்கராஜ் “ஏய். இன்னா கொழுப்பு இருந்தா, நான் இருக்கும்போதே ஓடிப் போனேன்ன்னு சொல்லுவ நீ.. உன்னை இங்கியே கொள்ளுதிடறேன்டி..” என்று வேகமாக மகளை நெருங்க, கார்த்திகாவை இழுத்து தனக்கு மறுபுறம் நிறுத்திக் கொண்டான் குமரன்.

             அவன் உஷ்ணப்பார்வை தங்கராஜை முன்னேறவிடாமல் தடுக்க, அந்த ஆய்வாளரும் “தங்கராஜ்.. இதுக்குமேல இங்கே ஒன்னும் பண்ணமுடியாது. உன் பொண்ணே நானேதான் போனன்னு சொல்லிட்டா.. ஒழுங்கா பிரச்சனைப் பண்ணாம வீடு போய் சேரு..” என்று அறிவுரை கூற,

             “அதெப்பிடி சார் உட முடியும்.. கல்யாணம் பண்ணா என்ன.. என் பொண்ணை என்கூட அனுப்பு.. அவன் கட்ன தாலியை அறுத்து கொடுக்கறேன்.. எடுத்துனு போவ சொல்லு..” என்றார் தங்கராஜ்.

             அவருக்கு ஆய்வாளர் பதில் கூறும்முன்னமே, “வேணா..” என்றார் மகாலட்சுமி.

             ஆய்வாளரும், மற்றவர்களும் அவரிடம் பார்வையைத் திருப்ப “எனக்கு இவ வேணா சார்.. என் பொண்ணு செத்துட்டான்னு தலைல தண்ணீ ஊத்திக்கிறேன். இவளுக்கும், எங்களுக்கும் இனி எதுவும் இல்ல.” என்று ஒரே முடிவாக கூறிவிட்டார் மகாலட்சுமி.

             “அம்மா..” என்று கார்த்திகைச்செல்வி தேம்பி நிற்க, அவளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் திரும்பி நடந்துவிட்டார் மகாலட்சுமி.

             தங்கராஜ் “ஏய் மகா.. நில்லுடி..” என்று அவர் பின்னால் ஓட,

             “ரெண்டு பேரும் விரும்பித்தான் கல்யாணம் பண்ணோம்.. என்னை யாரும் கடத்தலன்னு எழுதிக் கையெழுத்து போடும்மா..” என்று ஒரு வெள்ளைத்தாளை கார்த்திகாவிடம் நீட்டினர் காவல்துறையினர்.

            கார்த்திகா அவர்கள் கூறியபடியே எழுதிக் கையெழுத்திட, அதே தாளில் குமரனிடமும் கையெழுத்து வாங்கி கொண்டபின் இருவரையும்  அனுப்பிவிட, கார்த்திகாவின் கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்தான் குமரன்.

            காவல்நிலையத்தின் வாசலுக்கு வரவும், தன் கையை அவனிடம் இருந்து விடுவிக்கப் பார்த்தாள் கார்த்திகா. குமரன் திரும்பி அவள் முகம் பார்க்க, “கையை விடுங்க..” என்றாள் முடிவாக.

           குமரன் சிறு வியப்புடன் அவளை ஏறிட, “ நீங்க சொன்ன மொத்தமும் செஞ்சிட்டேனே.. இன்னும் என்ன.? நீங்க சொன்னபடி கேட்டா, விட்டுடுவேன்னு சொன்னிங்க இல்ல.. விடுங்க.” என்றாள் தைரியத்தை திரட்டிக் கொண்டவளாக.

          “ஏன் சொன்னா சொன்னத அப்படியே செய்யணுமா என்ன..?” என்றான் குமரன்.

          கார்த்திகாவின் கண்கள் மீண்டும் கலங்க,”நான் விட்டா எங்க போவ..” என்றான் குமரன். நேற்றிலிருந்து அவளை வருத்திய குரல் இல்லை அவனுடையது.

          முதல்முறை அவன் குரலும் கொஞ்சம் வருத்தத்தைக் காண்பிக்க, அதையெல்லாம் பகுத்தறியும் நிலையில் இல்லை கார்த்திகா.

           “எங்கேயோ போறேன். ஆனா, உன்னோட வரமாட்டேன். என் கையை விடு.” என்று மரியாதையை கைவிட்டு சற்றே கோபம் கொண்டவளாக அவள் கத்த,

            “எங்கியோ போறதுக்கு என்கூடவே இரு..” என்று அவள் கையை அழுத்தமாகப் பற்றியவன் கிட்டத்தட்ட இழுத்துச் சென்றான் அவளை.

             கார்த்திகா “ஏய் விடு என்னை..” என்று அவன் கையிலிருந்த கையை விடுவிக்க போராட, அதற்குள் பூச்சி வந்து நின்றான் ஆட்டோவுடன்.

             குமரனுக்கு அது வசதியாகிவிட, கார்த்திகாவை முதலில் ஆட்டோவில் ஏற்றிவிட்டவன் தானும் ஏறி அமர்ந்துவிட்டான். காவல்நிலைய வாசலில் இருந்து விலகி வரவும், ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டான் பூச்சி.

           “இன்னாடா..” என்று குமரன் கோபம் கொள்ள,

           “டேய்.. உன் வீட்டுக்கு தெரிஞ்சி போச்சுடா.. உன் ஆத்தாக்காரி அங்க சாமி ஆடின்னு இருக்கு.. இப்ப மட்டும் நீ கையில கிடச்ச.. உன்னை இன்னா பண்ணுமோ தெரியாது.. இந்த பொண்ணை ஆஞ்சிடும்…” என்றான் பூச்சி.

           “அதுக்குள்ள எப்படிடா..” என்று குமரன் யோசிக்க,

          “வௌவால் அவுங்க அம்மாகிட்ட சொன்னான்போல.. அது ஊரையே கொளுத்திடுச்சு.. இந்நேரம் நம்ம கோட்ரஸுக்கே தெரிஞ்சிருக்கும்..” என்றான் பூச்சி.

           குமரன் தலையில் கையைவைத்துக் கொள்ள, கார்த்திகாவோ “எந்த பிரச்சனையும் வேண்டா.. என்னை இப்படியே இறக்கி விட்டுடுங்க.. நான் என்னவோ பண்ணிட்டு போறேன்..” என

           “ஏய் வாயை மூடுடி..” என்று அவளை அடிக்க கையோங்கி விட்டான் குமரன். பூச்சி அவனைத் தடுத்து அவன் கையைப் பிடித்துக் கொள்ள, அவன் அடிக்கு பயந்து அவன் ஆட்டோவின் கம்பியோடு ஒட்டிக்கொண்டிருந்தாள் கார்த்திகா.

             அவன் அடிக்காமல் போகவும் அவள் கண்களைத் திறந்து பார்க்க, “வாயைத் திறந்த..” என்று ஒருவிரல் நீட்டி மிரட்டினான் குமரன். அவன் கோப முகம் கண்டு பயந்தவள் இரு கைகளாலும் வாயை இறுகப் பொத்திக்கொள்ள, அவளை பார்க்கவே பாவமாக இருந்தது பூச்சிக்கு.

            “டேய்.. உன் அம்மாவை என்ன பண்றது யோசிடா.. இதை அப்புறம் பார்க்கலாம்..” என்று அப்போதைக்கு அவன் குமரனின் கவனத்தை திசை திருப்பிவிட,

             “இன்னா பண்றது.. என்ன பேசுனாலும் வாங்கிதான் ஆவணும்.. போ பார்த்துக்கலாம்.” என்றான் குமரன்.

             பத்து நிமிடங்களில் குமரனின் வீட்டிற்கு கீழே பூச்சி ஆட்டோவை நிறுத்த, அங்கே இருந்த கருப்புநிற குடிநீர் தொட்டியின் அருகில் இன்னும் சில பெண்களுடன் அமர்ந்து கொண்டிருந்தார் ராணி.

               ஆட்டோவில் இருந்து மகன் இறங்கவும், எழுந்து கொண்டவர் மகனை நெருங்க, அவன் பின்னால் இறங்கிய கார்த்திகைச்செல்வியைக் காணவும், அப்படியே நின்றுகொண்டார்.

               குமரன் “அம்மா.” என்று அவர் அருகில் வர,

               “அவளை இப்படியே துரத்தி உடு..” என்றார் உக்கிரமாக.

               “ம்மா.. எல்லாம் அப்பறம் பேசிக்கலாம்.. முதல்ல வீட்டுக்கு வா..” என்றவன் அவர் கையைப் பிடிக்க,

              “விட்றா என் கையை.. என் புள்ளையா இருந்தா, அவளை தொலைச்சு கட்டு.. இவ அண்ணங்காரன் என் ஊட்டு பொண்ணை இழுத்துனு போவான்.. இவ என் மவனை  கைக்குள்ள போட்டுட்டு என் வூட்ல குடும்பம் பண்ணுவாளா..”

               “என் வூட்ல தரம் கெட்டதுக்கெல்லாம் இடமில்ல..” என்று குதித்தவரிடம்,

               “அவளை கல்யாணம் பண்ணி கூட்டினு வந்திருக்கேன்மா..” என்று மகன் எடுத்துக்கூற,

               “ஆமா.. பத்து செருப்பு தேய படியேறி பொண்ணு கேட்டு அவளை கட்டிக்கிட்ட.. கல்யாணாம் பண்ணானான்.. நீ உம்ன்னு சொல்லு.. துடைப்பக்கட்டையாலயே அடிச்சு துரத்தி விட்றேன்.” என்றவர் குமரனைத் தாண்டி  கார்த்திகாவை நெருங்க, அவர் பேச்சில் அரண்டு போயிருந்தாள் கார்த்திகைச்செல்வி.

                “ம்மோவ்.. என்னமா ரோதனையா போச்சு உன்னோட.. நீ வீட்டுக்கு வா.. பேசிக்குவோம்..” என்ற குமரகுரு அன்னையின் கையைப் பிடித்து இழுக்க,

           “என் கையை விடுடா..” என்று அவனை உதறித் தள்ளினார் ராணி.

            அதுவரை அவர்களை அமைதியாக வேடிக்கைப் பார்த்திருந்த ராஜம்மா “ஏய் ராணி.. அதான் புள்ள சொல்லுது இல்ல.. ஆம்பளை புள்ளையை ரோட்ல நிக்க வச்சு அசிங்கபடுத்தினு  இருக்க. வூட்டுக்கு கூட்டிட்டு போய் ஆற அமர பொறுமையா கேளு.. நீ ரெண்டு அடி அடிச்சா கூட வாங்கிக்க போறான். உன் பிள்ளை தானே..” என்று அதட்ட,

            “இந்தா.. நீ கம்மினு இரு.. உனக்கு என்ன தெரியும் புள்ளை வளர்க்கறதை பத்தி.. நீயே ரெண்டும்கெட்டான்.. நீ எனக்கு ரோசனை சொல்ல வந்துட்டியா.. இது என் குடும்ப விஷயம்.. நான் பேசுக்கிறேன்..” என்று அவரையும் வலிக்கும்படி பேசிவிட்டார் ராணி.

            “ம்மோவ்.. இன்னாமா சும்மா  எகிறின்னு இருக்க.. வா..” என்று குமரன் அவரை அடக்க முற்பட,

          “டேய் நான் கேட்டதுக்கு ஒரு முடிவை சொல்லுடா.. இவளை விரட்டி விடுவியா.. மாட்டியா..” என்று கார்த்திகாவை கைகாட்டி நின்றார் ராணி.

            “அவள எப்பிடிமா விட முடியும்..?”

            “ஏன் அந்த அளவுக்கு மயக்கிட்டாளா உன்ன..? எதைக்காட்டி என் மவனை மயக்கினடி மேனாமினுக்கி..” என்றவர் எட்டி கார்த்திகாவை பிடிக்க முயல, அவர் கைகளில் அவளின் நீண்ட கூந்தல் சிக்கிக்கொண்டது.

           “ம்மோவ் விடும்மா..” என்று குமரன் அதட்டியதை கண்டுகொள்ளாமல் அவர் பிடியை இறுக்க, கார்த்தி விஷயத்தில் ஏற்கனவே குற்றவுணர்வில் இருந்தவன் அன்னையைப் பிடித்து லேசாக தள்ளிவிட, அவன் தள்ளியதில் கீழே விழுந்துவிட்டார் ராணி.

            குமரன் பதறி அவரை நெருங்க, “ச்சீ.. போடா.. நன்றிகெட்ட நாயே. இன்னிக்கு வந்த இந்த மூதேவிக்காக பெத்த ஆத்தாளை பிடிச்சு தள்ளி விடறியா.. நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டடா… ரெண்டு பேரும் நாசமா தான் போவீங்க…” என்று சாபம் கொடுத்தவர்

            “இனி உனக்கும் எனக்கும் ஒன்னுமே இல்ல.. நீ யாரோ, நான் யாரோ.. என் புள்ளை செத்துப்போச்சுன்னு நினைச்சுக்கிறேன்.. போடா..” என்றதோடு நிற்காமல், வேகமாக எழுந்தவர் அந்த குடிநீர் தொட்டிக்கு அருகில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த குடங்களில் ஒன்றை கையில் எடுத்து, தலைவழியே மொத்த நீரையும் தன்மீது கவிழ்த்துக் கொண்டார் அவர்.

             குமரன் அவர் செயலில் திகைத்து நிற்க, அவனைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவனைத் தாண்டி நடந்துவிட்டார் ராணி. அவர் இத்தனை பேசியபின், குமரனுக்கும் அவர் பின்னால் செல்லும் எண்ணம் வரவில்லை.

         இப்படி ஒரே நாளில் தனது நிலை தலைகீழாக மாறிப்போகும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை அவன். பெற்றவர்கள் துணையில்லாமல் கார்த்திகாவை தனித்து அனுப்ப மனமில்லாமல் தான் அவளை உடன் அழைத்து வந்திருந்தான்.

        ஆனால், இந்த நிமிடம் அவனுக்கே இருக்க இடமில்லாத நிலை. இதில் இவளை வேறு உடன் வைத்துக்கொண்டு என்ன செய்வேன் என்று குமரகுரு குழம்பி நிற்க, அவன் பின்னிருந்து அவன் தோளைப் பிடித்தார் ராஜம்மா.

       குமரனின் முகம் கண்டவர் “உன் ஆத்தா பேசுனதுக்கா கஷ்டப்படற.. அவ நல்லதா எதாவது பேசுனா தான் அதிசயம். வா ராஜா..” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டார் ராஜம்மா.

         குமரன் தயங்கியவனாக நிற்க, “ரோட்ல நிக்க வேணாம் சாமி. இன்னா இப்போ உன் அக்கா வூடு தான் வா.” என்றவர் “நீயும் வாம்மா.. வா..” என்று கர்திகைசெல்வியை மறுகையில் பிடித்துகொண்டு இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

        அவர் வீட்டில் இருந்த சாமி படத்திற்கு முன்னே இருந்த விபூதி குங்குமத்தை இருவருக்கும் பூசி விட்டவர் “என்ன பண்றதா இருக்க ராஜா.. நீ தனியா இருந்தா கவலை இல்ல.. இப்போ இவளும் இருக்காளே.” என்று கேட்க

        “ஒன்னும் புரியலக்கா.” என்று கையை விரித்தான் அவன்.

      ராஜம்மா  “நான் சொல்றதைக் கேட்கறியா..” என, குமரன் அவர் முகம் பார்த்தான்.

         “ஏதோ புடிச்சு போச்சு, கல்யாணம் பண்ணிடிங்க.. முடிஞ்சு போச்சு. அதைபத்தி இனிமே யோசிச்சு கஷ்டபட்டுலாம் புண்ணியம் இல்ல. அடுத்து இன்னான்னு பார்க்கணும்.”

           “பக்கத்து பில்டிங்ல என் வூடு ஒன்னு இருக்கில்ல.. காலியாதானே போட்டு வச்சிருக்கேன்.. நீங்க ரெண்டு பேரும் அதுல இருங்க.. சாமான், மத்த பொருள் எல்லாம் கொஞ்சம் வாங்கிக்கலாம்.. மீதி இங்கே அக்கா வீட்ல இருந்து எடுத்துக்க..”

            “வாழத்தானே கல்யாணம் பண்ணது. தனியா குடும்பம் பண்ணுங்க ரெண்டு பேரும்.. அப்பதான் உன் ஆத்தாகாரிக்கும் புத்தி வரும்.” என்ற ராஜம் குமரனுக்கு தெய்வமாகத் தான் தெரிந்தார் அந்த நிமிடம்.

         கார்த்திகா அவரின் தோற்றத்தைக் கண்டு பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள் அவர் பேசி முடிக்கவும், “நல்லவங்க தானோ..” என்று யோசிக்கத் தொடங்க, “குடும்பம் பண்ணுங்க..” என்ற அவரின் வார்த்தையில் சுணங்கிப் போனாள்.

           “இவனோடவா… அதுக்கு என்னை கொன்னுடலாம்..” என்று வேதனையுடன் நினைத்துக் கொண்டாலும், அந்த அரக்கனை மீறும் தைரியம் இல்லை அவளுக்கு. பேசினால் அடித்து விடுவானோ என்று பயமாக இருக்க, ஒருவார்த்தைக் கூட வாயைத் திறக்கவில்லை அவள்.